Featuredஇலக்கியம்கட்டுரைகள்

சிக்கு புக்கு ரயிலு

 

ரமணி பிரபா தேவி

என்னுடைய பயணங்களில் பெரும்பாலானவை, நீண்ட நெடிய ரயில் பயணங்களாகத்தான் இருக்கும். சில சமயங்களில் நிகழும் உள்ளூர் ரயில் பயணங்கள், இரண்டு மூன்று நிறுத்தங்களோடேயே முடிவடைந்திருக்கிறது. அதனுள் மக்கள் வெள்ளம் அலைமோதும். சுவாரசியம் ஏதேனும் நிகழ்ந்திருக்கிறதா எனக்காணும் முன்பே மறைந்து போகும் பயணமது. ஆனால் இந்நீள் பயணத்தில் நான் சந்தித்த‌ மானுடங்கள் ஏராளம். ஒவ்வொருவரும், தத்தம் வலிகளையும், பிணிகளையும், நிராசைகளையும் தாண்டி, ஏதோவொரு நம்பிக்கையினைப் பிடிப்பாய்க் கொண்டு வாழ்கிற‌வர்கள்.

இக்கட்டுரையினைக் கூட, ரயில் தன் தண்டவாளத் தாளங்க‌ளால் தாலாட்ட, கலங்களோடு கலங்கித் தவிக்கும் காவிரித்தாயைக் கடந்த படியே எழுதுகிறேன். அருகிலொரு புதுமணத் தம்பதியைக் காணமுடிகிறது. ஒரு இளைஞன்கூட என்னைக் கவனித்தபடியே இருப்பது புலனாகிறது. மேலே ஒருவர் படுக்கையிலிருந்தபடியே கை பேசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்த நிறுத்தத்தில் இறங்கவேண்டிய ஒருபெண், தன் தலையலங்காரத்தில் மும்முரம் கொண்டிருக்கிறார்.

ஒரு ரெயில்வண்டி, இதுவரை எத்தனை விதமான மனிதர்களைக் கண்டிருக்கும்? எவ்வளவு பேரைத் தன் வசப்படுத்தியிருக்கும்? பிறப்புமுதல் இறப்புவரை அனைத்தையும் தன்னுள் கொண்டிருக்குமல்லவா..!!

தன் நெடும்பயணத்தின் போது, புவி தீண்டாச் சிசுவின் பூவுடலையும், முதிர்ந்து சருகாய்ப் போன பெரியவர்களின் உடலையும் கூட ஏந்தியிருக்கும். தற்கொலை ,கொலை, இறப்பு, பிறப்பு ,கடத்தல், வழிப்பறி எனவொரு பெரும்பட்டியல் கண்டிருக்கும்.

எத்தனையோ ரயில் வண்டிப் பெட்டிகள், கோச்சுகள், கழிவறை, முகம் கழுவ, பணியாட்களின் அறைகள், பயணச்சீட்டுப் பரிசோதகருக்கான அறை, உடனடிச் சமையலறை எனச் சின்னஞ்சிறு உலகத்தையே தன்னுள் அடக்கியுள்ள, ரயில்வண்டி ஓட்டுநரின் மனநிலை எவ்வாறானதாயிருக்கும்? இத்தனை நீளம் பெட்டிகளைப் பொருத்தி, பயணிகளைச் சுமந்துவரும் ரயில்வண்டியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள ஓட்டுனர் ஒரு கணம் நிலைகுலைந்தால் என்னவாகும்?

மனித வாழ்க்கை எப்பொழுதும் சுவாரசியங்களைத் தேடுகிறது. அதற்காகவே நிறையப் பயணிக்கிறது. தவறு,வேண்டாத இடர்வரவு என மண்டைக்கு உறைத்தாலும் புதிதாய் ஒரு விஷயத்தைப் புரிந்து, அதன் போக்கிலே பயணிக்க முயல்கிறது. மனிதன் எப்பொழுதும் கூரவாவுடைய, அடக்கமுடியா ஆர்வத்தால் தூண்டப்பட்ட உயிர்க் கூறினைக் கொண்டவன்.

இப்படித்தான் நான், அடுத்தடுத்து வேறு உலகங்களினுள் பயணிப்பதுண்டு. இது பெரும்பாலும், என் தேர்வு சமயங்களில் ந‌டக்கும். படிப்பின் மீதுள்ள கவனம், வேறெதாவது ஒன்றிற்குத் தாவி, அதிலிருந்து வேறொன்று, மற்றொன்று என முற்றிலும் தொடர்பே இல்லா இடத்தில் கொண்டுபோய்த் தள்ளியிருக்கும். தலை உதறித் தன்னிலை வரும்போது, சமயங்களில் ஐந்து, பத்து நிமிடத்துளிகள் கடந்துவிட்டிருக்கும்.

எனக்கு எதிரிலிருக்கும் இரு யுவதிகள் கூட, இப்போது என்னைப் பார்த்தபடியே குசுகுசுத்துக் கொண்டிருக்கின்றனர், இந்தக் காலை வேளையில், என்ன பதிவு செய்கிறேன் என்பதனை அறியும் ஆவலாகவும் அது இருக்கலாம்.

இன்னும் இரண்டு மூன்று சந்திப்புகளில் ரயில், எனது நிறுத்தத்தை எட்டிவிடுமெனத் தோன்றுகிறது. கட்டுகடங்கா சிந்தனை, என் உள்ளக் குதிரையைக் கட்டவிழ்க்கிறது. நானும் என் மனத்தினில் தோன்றுவதையெல்லாம் பதிவு செய்திட முனைகிறேன். உதிக்கும் எண்ணங்கள் அனைத்தையும் எழுத்தாக்க இயலாமல் கை தேங்குகிறது. உட்தெறிக்கும் சிந்தனைக் கோவைகள், தானாகவே இந்தப் பிரபஞ்சத்தில் கலக்கின்றன.

தோன்றுவதையெல்லாம் எழுதிப் பதிவுசெய்து, ஓர் வடிவங்கொடுத்தாலே,உலகில் எண்ண‌ற்ற படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். இதோ, நான் இறங்கவேண்டிய இடம் வந்தானது. தனக்கே உரிய நாதத்துடன் ரயில் வண்டி, தனது சக்கரங்களின் ஓட்டத்தைச் சற்றே நிறுத்தி, இளைப்பாறுகிறது.

சில துளிகளில் என் போல அனேகப் பயணிகள், தங்களின் நீடுநிகழ் பயணத்தை முடித்து, இல்லம் நோக்கிச் செல்லத் தொடங்குகின்றனர். பலரின் பயணத்தைப் பூர்த்தி செய்து, இறங்குமிடம் அறியாப் பயணி போல, தன் வழி நோக்கி எதிர்பார்த்து, தீராப் பயணப்பசி கொண்டு பயணிக்கத் தொடங்குகிறது ரயில் வண்டி.

படத்துக்கு நன்றி: http://realhdwallpaper.com/wp-content/uploads/2013/05/Train-HD-Wallpaper-Free-Download.jpg

Print Friendly, PDF & Email
Share

Comments (3)

 1. Avatar

  oru neenda payanam senru vantha niraivu, manitha managalaiyum ariya mudikirathu

 2. Avatar

  Wooooooww… amazing writing…

  தோன்றுவதையெல்லாம் எழுதிப் பதிவுசெய்து, ஓர் வடிவங்கொடுத்தாலே,உலகில் எண்ண‌ற்ற படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். //// Beautyful., 🙂

 3. Avatar

  நல்லதொரு கட்டுரை. தங்களது நிறுத்தம் இன்னும் கொஞ்சம் சற்றுத் தள்ளி வந்திருக்கலாமோ?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க