ஆசிரியர்: முனைவர் ராம. கெளசல்யா

சமுதாயத்தின் சிந்தனைகளும் கொள்கைகளும் காலத்திற்கேற்ப மாறுகின்றன. இலக்கியம் என்பது வாழ்க்கையின் கண்ணாடி என்பர். ஆ க, சமுதாயச் சிந்தனை மாற்றங்களுக்கு ஏற்ப மொழியும் காலந்தோறும் புதிய வடிவங்களை அளிக்கின்றது. அவ்வகையில், அரசர்களை யும் வள்ளல்களையும் மையப்படுத்தி நின்ற தமிழ் இலக்கியம் சாதாரண மக்களையும் மையப்படுத்தி எழத்தொடங்கியது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் குறம், குளுவ நாடகம், குறவஞ்சி, நொண்டி நாடகம், பள்ளு போன்ற இலக்கிய வடிவங்கள் தமிழிலக்கிய உலகில் தோன்றிப் பிரபலமாயின.

தமிழ் மரபில் குறி பார்த்தல் சிறப்பிடம் பெறுகிறது. தலைவியிடம் வேறுபாடு காணப்பட, நற்றாயும், செவிலித்தாயும் கட்டு வைத்தும், கழங்கு வைத்தும் வெறியாட்டின் வாயிலாகக் குறி பார்த்து வேறுபாட்டிற்கான காரணத்தை அறிய முற்படுகின்றனர்.

“கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்” தொல்.கள.நூ.25: 3-4

குறுந்தொகை கட்டுவிச்சியை அகவன் மகள் என்கிறது. குறி பார்ப்பவள் கட்டுவிச்சி எனப்பட்டாள்.

“அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே” குறுந். பா. 23

மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சிநில மகளிர் குற மகளிர் எனப்பட்டனர். பன்னிரு பாட்டியல், குறத்திப் பாட்டு என்றதொரு இலக்கிய வகைக்கு இலக்கணம் தருகிறது.

“இறப்பு நிகழ்வு எதிர் என்னும் முக்காலமும்
திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே”

“குறத்திப் பாட்டும் அதனோடற்றே”

பத்துப் பாக்களால் அமையும் இக்குறத்திப் பாட்டிற்கு ஒரு சான்றுகூட இன்று கிடைக்கவில்லை.

கலம்பகத்து உறுப்பாகக் குறம் என்ற ஒன்று காணப்படுகிறது. குறத்தி குறி கூறுதல் தொடர்பான குறம், குறவஞ்சிகளில் இடம்பெறும் நிகழ்வுகளும் செயல்களும் இதில் உள்ளன.

குறவனை மையப்படுத்திக் குளுவ நாடகம் என்ற ஒன்றும் எழுந்தது. குறத்திப் பாட்டும் கலம்பகத்து உறுப்பாகிய குறமும் சேர்ந்து குறம் என்ற வடிவத்தையும், குறவன் குறித்த செய்திகளைத் தரும் குளுவ நாடகமும் குறமும் சேர்ந்து குறவஞ்சி என்ற வடிவத்தையும் அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். குளுவ நாடகம் காலத்தில் பிற்பட்டது என்று கருதுவாரும் உண்டு. இவ்வகையில் மீனாட்சியம்மை குறம் முதல் குறமாகவும், கும்பேசர் குறவஞ்சி முதல் குறவஞ்சியாகவும் கருதப்படுகிறது.

ஏறத்தாழ பதினெட்டு குறங்களின் பெயர்கள் கிடைக்கின்றன. வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி, குறவஞ்சி என்று குறிக்கப்பட்டாலும் குறமே ஆகும். கிடைக்கும் குறங்களுள் தர்மாம்பாள் குறம் பல்வகைச் சிறப்புகளையும், தனித்த கூறுகளையும் கொண்டதாக உள்ளது.

தர்மாம்பாள் குறம் வி.எஸ்.வாலாம்பாள் என்பவரால் இயற்றப்பட்டிருக்கிறது. இக்குறம் 1915இல் முதல் பதிப்பும், 1938இல் இரண்டாம் பதிப்பும், 1947இல் மூன்றாம் பதிப்புமாக மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. இதிலிருந்தே இக்குறம் பரவலாகப் பாடப்பட்டு வழக்கிலிருந்ததை உணர முடிகிறது.

தர்மாம்பிகையே குறத்தியாக வந்து காவேரி அம்மனுக்குக் கடலரசனை அடைய அருளியதாக இக்குறம் அமைந்துள்ளது. கிளைக் கதையாக பஞ்சநதீசர் – தர்மாம்பிகை இணையும் கதையும் காணப்படுகிறது.

இக்குறம் கண்ணிகளாக அமைந்துள்ளது. நிகழ்வுகள் உட்தலைப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. திருவையாற்றுப் பகுதியில் இக்குறம் பெண்களால் தங்கள் நாள் வழிபாட்டில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களோடு பாடப்படுவதை இக்கட்டுரையாளர் கேட்டிருக்கிறார்.

அக்காலத்தில் இத்தகைய பாடல்கள் மெட்டுக்கள் என்று அழைக்கப்பட்ட இசையமைப்பு முறையாலேயே குறிக்கப்பட்டன. சான்று: ஆண்டிப்பண்டாரம் மெட்டு, பாம்பாட்டி மெட்டு, ஆறுமுக வடிவேலவனே மெட்டு. இவை ஆழ்ந்த இசை ஞானம் இல்லாதவர்களையும் எளிமையாகப் பாடவைத்தன.

இக்குறத்தில், மூன்று மெட்டுக்கள் குறிக்கப்பட்டாலும், அவை எந்த மெட்டு என்று குறிக்கப்படாததால் பாடுபவர்களே மெட்டுக்களைப் பாடல்கலின் அமைப்பிற்கேற்ப உணர்ந்து பாடிக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒருவகையான ஓதும் (RECITATION) முறையிலும் இவை பாடப்பெற்றன. அந்த ஊர் குடும்பத்துப் பேச்சு நடை இக்குறம் முழுவதும் விரவி வருவதைக் காணமுடிகிறது.

கடவுள் வணக்கத்துடன் தர்மாம்பாள் குறம் தொடங்குகிறது. கணபதி, சரசுவதி, ஆறுமுகவேலவன் ஆகியோர் வேண்டப் படுகிறார்கள். லோபாமுத்திரை காவேரி நதியாகி, அகத்தியரைப் பிரிந்து சஹ்யமலையில் பிறந்து சமுத்திரருக்கு மாலையிட வருகிறாள். குடகு மலையிலிருந்து ஐயாறு வரை அவள் வரும் அழகு ஒரு சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. அமராவதி, பவானி, லட்சுமணா, ஹேமவதி, காஞ்சனா என்னும் தோழிகளைத் துணையாகச் சேர்த்துக் கொண்டு வருகிறாள்.

“…………………………………………………………………..
உயர்ந்துவரும் நுரையழகும் உத்ஸாகக் கொந்தளிப்பும்
பெருகியந்தக் காவேரிநதி அலைமோத வந்துவிட்டாள்
குயில்கூவி குதூகலிக்க குளிர்ந்தகாற்று வீசிவர
சோனைதூரத் தென்றல்வீச சிறந்தநதி யாகவந்தாள்
கனத்தசெடி குடிசைகளும் காட்டுமிருகம் பலவகையும்
வாழையுடன் கமுகுதென்னை வாரிக்கொண்டு வந்துவிட்டாள்
………………………………………………………………….
வயல்களெல்லாம் நிரப்பிக் கொண்டு வேகமாக வந்துவிட்டாள்
அறம்வளர்த்தாள் படித்துறைக்கு ஐந்துமுகத்தோடு வந்தாள்.”

காவேரி திருவையாற்றுக்கு வந்த செய்தியை ஆட்கொண்டார் அம்பிகைக்கு அற்விக்கிறார். அம்பிகை, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்களைத் தட்டினில் வைத்துக் காணிக்கையாக அளித்து, காவேரியை வரவேற்கிறாள். காணிக்கையைப் பெற்றுக் கொண்ட காவேரி, அம்பிகையை வணங்கி, தான் சமுத்திரரை அடைய மகிழ்ச்சியுடன் வழியனுப்பும்படி வேண்டுகிறாள்.

கல்யாணி தேவியோ, “சமுத்திரரை இங்கேயே வரவழைக்கிறேன்; மகிழ்ச்சியுடன் இருப்பாய்” என்று கூறுகிறாள். அதைக் கேட்டுக் கலங்கும் காவேரி, உடலை அங்கு வைத்துவிட்டு, சாட்சியாக ஓர் உருவம் எடுத்துக் கொண்டு கடலை நோக்கிச் செல்கிறாள். சமுத்திரரோ அம்மனின் கட்டளைப்படி, பாதாளத்தில் மறைந்து கொண்டு ஊரின் நடுவே வருகிறார். மகிழ்ச்சியுடன் வந்தால் உலகமெல்லாம் மூழ்கிவிடுமாம். சப்தஸ்தான சுவாமிகளும் வரவேற்று அளித்த மரியாதைகளைப் பெற்றுக் கொண்டு சமுத்திரரும் போய் மறைந்து விடுகிறார்.

சாட்சி என்னும் காவேரி கடலில் போய்த் தேட, அங்கு சமுத்திரர் இல்லை. திரும்பி வந்த காவேரி மனம் தளர்ந்து சமுத்திரரை அடைய வேண்டி, தர்மாம்பிகையை நினைத்து திருவையாற்றில் கன்னிகையாகத் தவம் இருக்கிறாள். அறம்வளர்த்தாள் அவளைப் பரிகசிக்கக் குறத்தி வடிவம் எடுக்கிறாள்.

குறத்தியாகிய தர்மாம்பிகை அணிந்துள்ள நகைகள் பாதாதி கேசம் வரை வருணிக்கப்படுகின்றன. அவள் அழகும் உருவ வருணனையும் சரளமாக வருகின்றன. ஐயாற்று வீதியில் வரும் குறத்தியிடம் ஊர்ப்பெண்கள் குறி கேட்கிறார்கள். மருந்து கேட்கிறார்கள். அவர்களுக்கு இங்கிதமாகக் குறிகள் சொல்லிவிட்டு ஆலயம் சென்று கைலாசநாதரைத் தரிசித்து வந்து பின் குறிகள் சொல்வதாகக் கூறி, ஆலயத்திற்குச் செல்கிறாள். சுவாமி சந்நதித் தூணில் சாய்ந்து அமர்ந்திருக்கும் குறத்தியின் அழகைக் கண்டு பிரமித்த காமனை நீராய் எரித்த சிவன் அவள் மீது மோகம் கொள்கிறார்.

தன்னைச் சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு (இந்த வர்ணனையும் சிறப்பாகத் தரப்பட்டுள்ளது) குறத்தியிடம் வருகிறார்; அவள் யார் என்று வினவுகிறார். அவள் விவரிக்கிறாள்.

“……………………………………………………………………
ஜாடியும் நான் குறச்சாதி தனிவழியும் வருவோம் நாங்கள்
சாம்ப பரமேசருக்கும் சம்பந்தங்களுண்டு
அப்பன் ஆயிஎன்னை அம்பிகையென் றழைப்பார்
என் அண்ணன் பெயர் சக்ரபாணி ஆறுமுகனென் பிள்ளை
குச்சுக்குக் காவலாயென் கிழவனாரும் இருப்பார்
கூடைமுறம் கட்டிநாங்கள் குறிபார்த்துச் சொல்வோம்
………………………………………………..”

“உன் கணவன் கிழவனென்று சொன்னாயே, கந்தருவன் போன்ற நானே உன் அழகுக்கு ஏற்றவன்” என்று கம்பீரமாகச் சொல்கிறார். அவள் சினந்து இதனை மறுக்கிறாள். தன்னுடைய வளமான வாழ்க்கையை விவரித்து,

“இதைக் கேட்டல் என் கணவன் ஈட்டியினாலே குத்தி என்னை இழுத்தெரிவார்,
ஆசைபெரி தென்று சொல்லி உம்மை நானுமடைந்தால்
அறம் வளர்த்த நாயகியும் அக்கினியால் தகிப்பாள்”

என்று கூறுகிறாள். பிறகு குறத்தி தன் பெருமைகளையும், மலை வளத்தையும், நாட்டு வளத்தையும் ஈசருக்கு உரைக்கிறாள். இவற்றைக் கேட்கும் சரசுவதியும் லெட்சுமியும் காவேரியிடம் கூற, அவள் சகியை அனுப்பி, குறத்தியை அழைத்து வரச் செய்கிறாள். அதன்படியே குறத்தி திருக்காவேரிக் கரைக்கு வருகிறாள். காவேரியும் குறத்தியின் அழகைக் கண்டு திகைத்துப் போகிறாள். அவளுக்குக் குறி சொல்கிறாள் குறத்தி. அவள் யார் என்பதைக் கூறிவிட்டு, அவள் சமுத்திரரை அடைவாள் என்றும் கூறுகிறாள். மாதந்தோறும் காவேரியின் நிலை எப்படி மாறுகிறது? இதோ:

“மார்கழி மாதத்தினில் மணல் மேடு இடுவாய்
மடுக்களிலும் ஜலம் வற்றி வெகு நாற்றம் நாறும்
ஆற்றின் ஜலம் வற்றிவிட அனைவர்களுந்தவித்து
ஊற்றின் ஜலந்தனையெடுத்து உலகிலுள்ளோர் உழல்வார்
வைகாசி வஸந்தகாலம் வருவாய் வெள்ளம் பெருகி
வையகத்து மனிதரெல்லாம் முழுகிக் கதிபெறுவார்
ஆடிமாதம் பெருக்கெடுத்து அணைகரையில் போட்டால்
அப்போது நீயும் சமுத்திரரை அடைந்து மனமகிழ்வாய்!”

அவள் குறி சொல்லும் நேர்த்தியையும் அவள் முகத்தையும் கண்ட சங்கரர் தன்னை அடையும்படி கேட்கிறார். குறத்திச் சீறிச் சினக்கிறாள். அவள் துடுக்கான வார்த்தைகளைக் கேட்ட சிவசங்கரர் பார்வதிதான் வந்தாளோ என்று சுற்றுமுற்றும் பார்க்கிறார். அம்பிகையைத் தேடுகிறார்கள். அவளை எங்கும் காணாமல் சங்கரர் புலம்பி அழுகிறார். எல்லோரும் சுந்தரி சுந்தரி என்று அனற்றுகிறார்கள்.

சரசுவதியும் லெட்சுமியும் குறத்தியிடம் ஓடிச் சென்று சங்கரியாளை அழைத்துத் தரும்படி கேட்கிறார்கள். அவையிலுள்ளோர் ஏக்கமும் சங்கரர் வாட்டமும் கண்டு இரங்கி குறத்தி, சங்கரர் கரத்தைப் பிடித்து அவர்தம் அரிய செயல்களைக் கேலியாகக் குறி சொல்கிறாள்.

அவள் பரிகசித்துக் கூறக் கேட்ட மகாதேவர் குறத்தியைக் கண்டு இச்சைப் பட்டது தவறு என்று உணர்ந்து கொள்கிறார். சங்கரரின் வாட்டம் கண்ட சங்கரி தன்னை வெளிப்படுத்தி இறைவன் அடி பணிகிறாள். பலி ஸ்ருதி, மங்களத்துடன் தர்மாம்பிகை குறம் நிறைவு பெறுகிறது.

(ஓம் சக்தி இதழ் 2005ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *