சைவ சமயம் அறிவியல் மையம்! (பகுதி 1)
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு
சமயமும் அறிவியலும் :
சமயம் வேறு ; அறிவியல் வேறு! பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து இது. ஆனால்,சமயத்தைச் சார்ந்திருக்கவில்லை அறிவியல் ; அது போலவே சமயமும் அறிவியலைச் சார்ந்திருக்க வேண்டியது இல்லை. என்றாலும், அறிவியலுக்கும் சமயத்துக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி அறிஞர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்திருக்கின்றனர்.
இரண்டும் தம்முள் முரண்பட்டவை என்ற கருத்து 19 -ஆம் நூற்றாண்டில் வலிமை பெற்று இருந்தது. இதனை ‘Conflict thesis’ என்பர். ஒன்றைச் சார்ந்து மற்றது இருக்கவில்லை! சமயம் சொல்வதை எல்லாம் அறிவியல் உறுதிப்படுத்த வேண்டும் என்றோ அறிவியல் கூறுகளைச் சமயம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றோ கட்டாயமில்லை. இவை இரண்டும் இணையாகச் செல்லும் இரு கோடுகள் ; என்றும் எங்குமே இணையாதவை. இது ‘Independance’ என அழைக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறான கருத்தும் உண்டு. அதாவது, இவை இரண்டுக்கும் பொதுப் பண்புகள் உள ; மதத்தில் இருக்கும் கருத்துகள் அறிவியலில் உண்டு ; அறிவியல் கூறும் கருத்துகள் சில, சமயத்தில் உள்ளன. இரண்டின் அடிப்படை நோக்கம் ஒன்றுதான் : உண்மையைத் தேடிக் கண்டறிவது.
“உண்மையா? அது என்ன?” – கேட்டவன் பொந்தியுஸ் பிலாத்து (Pontius Pilatus). இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உரோமைச் சக்கரவர்த்தி சார்பாகப் பாலத்தீன நாட்டை ஆண்டவன். ஏசு பிரானை விசாரிக்கும் பொது இக்கேள்வியை எழுப்புகிறான். (பைபிள் – யோவான் – அருளப்பர்- நற்செய்தி அதிகாரம் 18 : திருவசனம் 38). ஆனால் அவனுக்கு முந்திய காலத்திலும் சரி இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பின்பும் சரி அக்கேள்விக்கு விடைதான் கிடைத்தபாடில்லை! ஏனெனில் உண்மை சார்புடையது. இடம் காலத்தைச் சார்ந்திருப்பது.
காட்டாக, இப்போது இந்தியாவில் மணி காலை 11.30 என வைத்துக்கொள்வோம். இந்தியாவில் இருந்து பிரான்சுக்குத் தொலைபேசியில் உரையாடும் ஒருவர் ‘மணி என்ன?’ என்று கேட்கிறார். பிரான்சில் இருப்பவர், ‘இங்கு, மணி இப்போது காலை 8.00!’ என்கிறார்! இவ்விரண்டு நேரங்களில் எது உண்மை? இரண்டுமே உண்மைதான்- எனவே காலம் இடத்தைப் பொருத்து உண்மை அமைகிறது. சமயங்களுக்கும் அவற்றில் இடம் பெறும் கதைகளுக்கும் இது பொருந்தும்.
முழுமுதல் கடவுள் சிவன் எனச் சைவம் கூறும். ‘அடி, முடி தேடிய படலத்தில் பிரமன், திருமாலை விட உயர்ந்தவன் சிவனே என்று உணர்த்தப்படுகிறது. உண்மை இது எனக் கொள்வோம். வைணவத்தில் வைணவப் புராணக் கதையில் இது பொய்யாகிறது! வரங் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கப் பத்மாசுரன் ஓடி வர, வரங் கொடுத்த சிவனைக் காப்பாற்ற திருமால் மோகினி அவதாரம் எடுத்து வரவேண்டி இருந்தது. இவ்விரண்டு கதைகளில் எது உண்மை? சைவக் களங்களில் முன்னது உண்மையானது ; வைணவச் சமயத்தில் பின்னதுதான் உண்மை! சரி, சமயங்கள் சொல்லும் இறைவன் உருவம் அற்றவனா? (‘ஒரு நாமம் ஓருருவம் இலார்க்கு’) உருவம் பெற்றவனா? (‘ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமா’ !) எது உண்மை? சமயங்களில்தான் இப்படிக் குழப்பங்கள் ; அறிவியலில் எப்படி?
17-18 -ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் அறிஞர் சர் ஐசக் நியுட்டன் ஒளியைப் பற்றி ஆராய்ந்தவர். 1704 -இல் இவர் optiks என்றோர் ஆராய்ச்சி நூல் எழுதினார். அதில் அவர் ஒளி, துகள்களாக உள்ளது, அது நேர்க் கோட்டில் பயணம் செய்கிறது என்று நிறுவினார். பெரிய அறிவியல் மேதை அல்லவா, ஆகவே அவர் கூற்றை 18 -ஆம் நூற்றாண்டு உண்மை என ஏற்றுக்கொண்டது. Robert Hooke (1635-1703), Christiaan Huygens (1629-1695) போன்றோர் ஒளிக்கு ‘அலை வடிவக் கொள்கையை’ (wave theory) ஏற்கனவே வகுத்துத் தந்திருந்தனர். அதனால் நியுட்டன் கருத்து உண்மை அல்ல என்று மெல்ல, மெல்ல மறைந்தது; காலக் காற்றில் கரைந்தது. ‘அலை’ கொள்கையே உண்மை என அறிவியல் அறிவித்தது. இவை இரண்டில் எது உண்மை? இருபதாம் நூற்றாண்டு மலர்ந்த போது Max Planck, Albert Einstein, Arthur Holly Compton…போன்றோரின் ஆய்வுகளால் ஒளி சில சமயம் துகளாகவும் சில போழ்து அலையாகவும் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், 19 ஆம் நூற்றாண்டிலேயே James Clerk Maxwell, Heinrich Hertz என்னும் அறிவியல் அறிஞர்கள் ஒளி வெறும் மின்காந்தக் கதிர்களே (elctromagnetic radiation) என நிறுவினர். இப்போது சொல்லுங்கள் ஒளி என்பது என்ன? துகளா? அலையா? துகள் -அலையா? மின்காந்தக் கதிரா? இவற்றுள் எது உண்மை?
இப்படி அலசிப் பார்த்தால், உண்மை என்பது மாய மானாகத் துள்ளி ஓடிகொண்டே இருகிறதே தவிர எட்டிப் பிடிக்கவோ கட்டிப் போடவோ முடியவில்லையே! இருப்பினும் இந்த மாய மானைத்தான் சமயமும் அறிவியலும் துரத்திகொண்டே இருக்கின்றன.
சமயம், உண்மையின் கொடுமுடியான இறைவனை அடையத் தேடுகிறது! அறிவியலோ இயற்கையின் இரகசியங்களைத் தேடி ஓடுகிறது. எனவே சமயத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள ஒற்றுமை ‘தேடல்’தான்.
ஆற்றலுக்கும் பொருளுக்கும் உள்ள பிணைப்பைப் புகழ் பெற்ற தம் சமன்பாட்டால் (E= mC2 )நிறுவிய மாமேதை ஐன்ஸ்டீன்
‘சமயம் இல்லா அறிவியல் முடம்
அறிவியல் இல்லா சமயம் குருடு’ என்கிறார்.
(‘Science without Religion is lame ;
Religion without science is blind’ ).
அப்படி என்றால் சமயமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று உதவி செய்தால் முது சூரியர் இளஞ்சூரியர் என்ற இரட்டைப் புலவர்களைப் போல நலமாக உலவலாமே! இதனால் அறிவியலுக்கும் சமயத்துக்கும் அல்லது சமயத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு உண்டு பண்ணலாம்! ; ஒன்றில் காணப்படும் கருத்து மற்றதில் இருக்கும், இது கூறும் கருத்தை அது உறுதிப்படுத்தக் கூடும்…என்பதை மட்டும் நம் கருத்தில் கொள்வோம். இக்கால அறிவியல் கூறும் கருத்துகளை அக்காலச் சமயம் ஒன்று தனக்கே உரிய முறையில் கூறுகிறது ; அக்காலச் சமயம் சொல்லும் கருத்துகளை இக்கால அறிவியல் உறுதிப்படுத்துகிறது ! வியப்புதான், இல்லையா! அந்தச் சமயம் எது? அது கூறும் கருத்துகள் எவை? அவற்றை இக்கால அறிவியல் எப்படி உறுதிப்படுத்துகிறது? இவை பற்றித்தான் இங்கே காணப் போகிறோம்!
___________________________________________________________________.
ஆகா.. அருமையானத் தொடக்கம்..
விஞ்ஞானம் (அறிவியல்) என்பது தூலப பொருளைப் பற்றிய ஆய்வு….
மெஞ்ஞானம் தூலப் பொருள்களின் இயக்கத்திற்கு காரணமான சூட்சுமப் பொருளைப் படிய ஆய்வு….
தூலம் இல்லாமல் சூட்சுமம் இருக்கிறது என்பது மெஞ்ஞானம்
(இருக்கிறது என்பது கூட தத்துவப் படி தவறு… இருக்கிறது என்றால் இல்லாத ஒரு நிலை இருந்திருக்கணும் அல்லவா)
தூலத்தில் இருக்கும் சூட்சுமத்தை காணும் தேடலில் தான் சில அற்புதங்களை நமக்குச் சொல்லுகிறது விஞ்ஞானம் (அறிவியல்).
விஞ்ஞானி ஒவ்வொரு அறையாகத் திறந்து பார்க்கிறான்… இன்னமும் தீர்க்கமான முடிவை எட்ட முடியவில்லை…. துகளானது… அலையாகிறது… அலையானது காந்தக் கதிராகிறது
மெஞ்ஞானி அத்தனை அறைகளையும் ஒரே நேரத்தில் பார்ப்பதோடு அது தானே என்றும் உணர்கிறான்…
பகிர்விற்கு நன்றிகள்! தொடருங்கள்!… திருவாளர் பெஞ்சமின் லெபோ அவர்களே.
அன்புடையீர்!
வணக்கம்!
தத்துவ விளக்கத்துக்குத் தக்க பரிசாய் நன்றிகளை அளித்தேன்;
ஏற்றருள்க!
இறையருளால் கட்டுரை தொடரும்.
நனி நன்றியன்
பெஞ்சமின்
எடுத்த எடுப்பிலேயே உச்சபட்ச முடுக்கம் பெற்றுச் செல்கிறது கட்டுரை. பல அரிய உண்மைகளை இக்கட்டுரை நமக்கு விளக்கப் போகிறது என்பது திண்ணம். நன்றி!!
அன்புடையீர்,
வணக்கம்!
பாராட்டுக்கு நன்றி!
வெறுப்பு விருப்பு இன்றிப்
பொறுப்பாகக் கருத்துகளை முன்வைத்துச்
சிறப்பாகக் கட்டுரை தொடரும்.
நனி நன்றியன்
பெஞ்சமின்
சிவன், விஷ்ணு என்பவர்கள் வேறு வேறு தெய்வங்கள் அல்ல எனபது சின்னஞ்சிறிய இந்துக் குழவியும் அறியும். தெய்வ வடிவங்கள் வேறு வேறாயினும் அவை யாவும் சர்க்கரையால் செய்யப்பட்ட பொம்மைகள் போல ஒரே பிரம்மத்தின் மாயத் தோற்றங்களே.
ஆகாசாத் பதிதாத் உதகம் யதா கச்சதி சாகரம்|
சர்வதேவ நமஸ்காரம் கேசவம் ப்ரதிகச்சதி||
ஆகாயத்தில் இருந்து வீழும் நீர் யாவும் எங்ஙனம் சமுத்திரத்தை அடைகின்றனவோ அங்ஙனமே, யாருக்கு வணக்கம் செய்தாலும் அஃது நாராயணனையே சேரும் என்பதில் இது நன்கு கட்புலனாகின்றது.
ஒரு புராணத்தில் ஒரு தெய்வ உருவத்தை உபாசிப்பவருக்கு அதில் பிடிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே, மற்ற தெய்வங்கள் இவருக்கு பூஜை செய்தன, இவர் வென்றார் என்று சொல்லும். இன்னொன்றில் அது அப்படியே மாறி இருக்கும். இதில் குழப்பம் அடைய வேண்டியதில்லை. இதற்கு நிந்தா ஸ்துதி என்று பெயர். ஒருத்தன் ஒரு தெய்வ ஸ்வரூபத்தை விடாமல் பிடித்து உபாசித்தால் அந்த தெய்வ ரூபமே இறுதியில் இவனுக்கு, எல்லாம் ஒன்று என்னும் ஞானத்தை சித்தித்து அனுக்ரஹித்து விடும். அதற்காக அந்த பிடிப்பை ஏற்படுத்தவே இந்த மாதிரி புராணங்கள் சொல்வது. பல தெய்வங்கள் கொள்கை நிரந்தரம் அல்ல.
நிற்க.
சூக்ஷ்மமான சக்தியும் ஸ்தூலமான பொருட்கூறும் வாஸ்தவத்தில் ஒன்றே, சக்தியே பொருளாக பரிணமிக்கிறது என்பதை ஐன்ஸ்டீன் நிரூபித்தார். அதைத்தான் அத்வைதமும் சர்வம் விஷ்ணுமயம் ஜகத், சிவ மயம் என்று பகர்கின்றது.
எல்லாம் இறைவனே என்று இந்துமதம் சொல்லுவதில்லை. இறைவனே எல்லாமாகவும் இருக்கிறான் என்று சொல்லுகிறது.
மேலும் படிக்க காத்திருக்கிறோம்.
புவனேஷ்வர்
நலஞ்சால் நண்பருக்கு
வணக்கம்!
தங்கள் கருத்துக்குத் தலை வணங்குகிறேன்.
தங்கள் கூற்றுக்கு அரணாகக்
கம்பனின் இப் பாடலைக் காட்டலாம் :
கல்லிடைப் பிறந்து. போந்து.
கடலிடைக் கலந்த நீத்தம்.
‘எல்லைஇல் மறைகளாலும் இயம்ப
அரும் பொருள்ஈது’ என்னத்
தொல்லையில் ஒன்றேஆகி.
துறைதொறும். பரந்த சூழ்ச்சிப்
பல்பெரு சமயம் சொல்லும்
பொருளும்போல். பரந்து அன்றே.
(பாலகாண்டம் ஆற்றுப் படலம்)
(நிந்தா ஸ்துதி) பழிப்பது போலப் புகழ்தலுக்கு
இதோ பெரியாழ்வார் திருமொழியில் இருந்து ( 2.7.1)
ஆனிரை மேய்க்கநீ போதி, அருமருந் தாவ தறியாய்
கானகம் எல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட
பானையிற் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே ! செண்பகப் பூச்சூட்ட வாராய்.
என் கட்டுரையின் கருத்து இவை அல்ல என்பதை
மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
நன்றியடன்
பெஞ்சமின்
உலகப் புகழ் பெற்ற அறிவியல் ஆய்வு மையம் CERN க்கு சிவனின் நடனச் சிலையை, அது அண்டம் பற்றிய கருத்துக்களை குறிப்பதால் இந்திய அரசாங்கம் பரிசாக கொடுத்ததாகப் படித்திருக்கிறேன். முற்றிலும் அதன் பொருளை புரிந்து கொள்ள என்னால் இயலவில்லை.
இப்பொழுது உங்களின் கட்டுரைத் தலைப்பிலிருந்து சைவத்துக்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பது தெரிகிறது. ஆவலுடன் தொடருகிறேன், நன்றி ஐயா.
அன்புடன்
….. தேமொழி
(நியாய) வைசேஷிகம் கூறும் அணுப் பொருள் உண்மைகளைப் படிக்கும் போதெல்லாம், நான் தாங்கள் கூறிய பின்வரும் கருத்தினையே உணர்வதுண்டு!.
/////இக்கால அறிவியல் கூறும் கருத்துகளை அக்காலச் சமயம் ஒன்று தனக்கே உரிய முறையில் கூறுகிறது ; அக்காலச் சமயம் சொல்லும் கருத்துகளை இக்கால அறிவியல் உறுதிப்படுத்துகிறது ! //////
நான் பெரிதும் வியப்பது, எவ்விதத் துணைக்கருவிகளும் இல்லாது, பல உண்மைகளைக் கண்டுணர்ந்த நம் மூதாதையரின் அறிவாற்றலைத்தான். ஆவலைத் தூண்டுகிறது தொடர். அரிய பல செய்திகளைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.
அன்புச் சகோதரிக்கு
வணக்கம்!
மடலுக்கு மனமார்ந்த நன்றி.
இணைய தளங்களில் உலாவி
இனிய படைப்புகளைத் துழாவிக்
‘காமஞ் செப்பது
கண்டது மொழியும் அஞ்சிறைத் தும்பி’ தாங்கள் என்பதை அறிவேன்.
மடலில் தாங்கள் குறிப்பிட்ட செய்தி உண்மையே!
அது பற்றிய குறிப்புத் தகவல் என் கட்டுரையில்
பின்னர் இடம் பெரறும்.
பொறுத்தருள்க!
நல் வாழ்த்துகளுடன்
பெஞ்சமின்
அன்புச் சகோதரி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு
வணக்கம்
மடல் கண்டேன் ;
மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன்.
மிக்க நன்றி.
“பல உண்மைகளைக் கண்டுணர்ந்த நம் மூதாதையரின்
அறிவாற்றலைத்தான். வியக்க வேண்டும்”
என நீங்கள் கூறுவது மிக உண்மை .
முட்டாள்கள் அல்லர் நம் முன்னோர்கள் ..
அளவற்ற கல்வி கேள்விச் செல்வங்களை
நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இதனை உணராமல்
அயல்நாட்டு மொழி மோகத்தில் மூழ்கி
கண்டதே காட்சி ; கொண்டதே கோலம் எனச்
சீரழிந்துகொண்டிருக்கிறது செந்தமிழ்க் குமுகாயம்!
“செஞ்ஞாயிற்றுச் செலவும் ,
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் ,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் ,
வளிதிரிதரு திசையும் ,
வறிது நிலைஇய காயமும்
என்றிவைகளைச் சென்றளந்து அறிந்தோர் போல
அவற்றின் இயல்புகளையும் அறுதியிட்டுரைக்கும் பேரறி”வு ( புறம் -30)
பெற்றவர்கள் தாம் நம் பழந்தமிழர் என்று சொன்னால்
பழம் பெருமை பேசுவதாக
எள்ளி நகையாடுபவர்கள் பலர் இங்கு உளர்!
தன் முன்னோர் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல்
அதில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளாமல்
இருப்பவனை வரலாறு அழித்துவிடும் !
கடந்து வந்த பாதையினைத்
திரும்பிப் பார்த்தால் இதற்குக் கிடைக்கும் சான்றுகள் ஏராளம்!
கட்டுரையில் பலப்பல செய்திகள் கட்டாயம் இடம் பெறும்
அன்புடன்
பெஞ்சமின்