புவனேஷ்வர்

பூரிசிரவஸ் வதம்- நிறைவுப்பகுதி:

முன்கதைச் சுருக்கம்:
சாத்யகியைக் காக்க, எதிர்பாராத விதமாக தனது வலது கை அருச்சுனனால் வெட்டப்பட்டதை கண்ட பூரிசிரவஸ் அதிர்ச்சி உற்றான். அடுத்து சோகமும் இகழ்ச்சியும் ஊறிய மொழிகளை அவன் அருச்சுனனுக்கு சொல்லத் தொடங்கினான். இனி பார்ப்போம்.
+++++

“குந்தி மைந்தனே! இரக்கமற்ற ஒரு காரியத்தை நீ செய்து விட்டாயே! நான் உன்னோடு போர் செய்யாத போது, எனக்கு பின்னாலிருந்து என் கையை வெட்டி விட்டாய். உன்னைக்கேட்கிறேன், இதைப்பற்றி தர்மராஜா யுதிஷ்டிரனிடம் என்ன சொல்வாய்? “வேறு யாருடனோ யுத்தம் செய்து கொண்டிருந்த பூரிசிரவசை நான் பாணத்தால் அடித்தேன்”” என்று சொல்வாயா? எந்த முகத்தை வைத்துக்கொண்டு சொல்லுவாய்? இந்த மாதிரி ஆயுதப்ப்ரயோகத்தை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் அர்ஜுனா? இந்திரன் சொல்லிக்கொடுத்தானா? ருத்ரர் சொல்லிக்கொடுத்தாரா? இல்லை அந்த துரோணரா? அன்றி ஒருவேளை, கிருபரா? யார் சொல்லிக் கொடுத்தது?

இந்த உலகத்தில் மற்ற எல்லாரையும் விட யுத்த நீதி அறிந்தவன் நீ. அப்புறம் ஏன் அர்ஜுனா, உன்னோடு யுத்தம் செய்யாத ஒருத்தான் கையை அவன் அறியாமல் வெட்டினாய்? அஜாக்ரதையாய் உள்ளவன், பயந்து விட்டவன், தேரை இழந்தவன், கருணை காட்டுமாறு இறைஞ்சுபவன், யுத்தத்தில் செயலறு நிலைக்கு தள்ளப்பட்டவன் ஆகியோரை தர்மம் அறிந்த க்ஷத்ரியர்கள் தாக்குவதில்லை. பின் ஏன், அருச்சுனா, இந்த மாதிரி, உன் கீர்த்திக்கும் தகுதிக்கும் நினைத்துக்கூட பார்க்க முடியாத, ஒரு கீழ்மகன் மட்டுமே செய்யும் இழிந்த காரியத்தை செய்தாய்? உலகால் போற்றப்படும் செயற்கரிய செயலை சான்றோர்கள் விளையாட்டுப்போல எளிதில் செய்து முடிப்பர். ஆனால் அப்பேர்ப்பட்ட சான்றோரும் பழிக்கு அஞ்சுவர். உலகம் இகழும் இழி செயல்களை செய்தல் அவர்க்கு இயலாத காரியம். ஒரு மனிதன் யாருடன் ஒட்டி உறவாடுகிரானோ, அவன் குணங்களை தானும் அடைகிறான். இதை நான் உன்னில் காண்கிறேன், பார்த்தா. ராஜ வம்சத்தில், அதுவும் குரு வம்சத்தில் பிறந்து, இது வரை நடத்தையில் களங்கமில்லாமல், உயரிய விரத நியமங்கள் பூண்டு புகழுடன் இருந்த நீ, இன்று க்ஷத்ரிய தர்மத்தில் இருந்து தவறி விழுந்துவிட்டாய். நீயாக இந்த மாதிரி செயலை செய்திருக்கவே மாட்டாய். எனக்கென்னவோ, வருஷ்ணி குலத்து வீரனுக்காக (சாத்யகிக்காக) நீ செய்த இந்த மூர்க்கத்தனம் இந்த வாசுதேவன் சொல்லித்தான் நீ செய்திருக்க வேண்டும் எனப்படுகின்றது. இப்படியாம்மபட்ட வீரச்செயலை செய்ய உனக்கு தானாக எங்கே தோன்றியிருக்கப்போகிறது? இந்த புன்மதியாளன் கிருஷ்ணனுடைய யோசனையைக் கேட்கும் அவன் நண்பர் குழாம் தவிர வேறு யார் தன்னோடு யுத்தம் செய்யாதவனை அடிப்பார்கள்?

வ்ருஷ்ணிகளும் அந்தகர்களும் கெட்டுப்போன க்ஷத்ரியர்கள். சதா தீய செயல்கள் இயற்றும் கெடுமதியாளர்கள். தீயநடத்தை இவர்களுக்கு ஒரு போதை போல ஒட்டிக்கொண்டு விட்டது. நீ ஏன் அர்ஜுனா, போயும் போயும் இந்த துன்மதியாளரை உனக்கு முன்னுதாரணமாக கொள்கிறாய்?”

இவ்வாறு பூரிசிரவஸால் யுத்த அரங்கத்தில் இகழப்பட்ட பார்த்தன் பூரிசிரவசை பார்த்து, “அரசே! முதுமையால் தங்கள் அறிவும் தளர்ச்சி உற்றது போலும். பொருளற்ற தங்கள் பேசினால் இதைத் தான் தெரிந்து கொள்கிறேன். என்னையும் ஹ்ருஷீகேசனையும் நன்கு அறிந்தவரான தாங்கள், எங்களை நன்கு அறிந்தும் எப்படி எங்களை இகழ்கிரீர்கள்? யுத்தநீதிகளையும் தர்ம சாஸ்திரங்களையும் அறிந்த நான் ஒருபோதும் பாபகாரியத்தை செய்யமாட்டேன். இது தங்களுக்கு தெரிந்தாலும் என்னை திட்டுகிறீர்கள். நண்பர்களும், படைகளும், உறவினர்களும் உதவிக்கு பின்தொடர்ந்து புடைசூழ, அவர்கள் பலத்தையும் நம்பியல்லவோ க்ஷத்ரியர்கள் சத்ருவுடன் யுத்தம் செய்கிறார்கள்? பின்தொடரும் வீரர்களும் முன்னே செல்லும் வீரர்களின் வலிமையை நம்பியல்லவோ சண்டை செய்கிறார்கள்? அப்படி இருக்கும் பொழுது, எங்கள் நன்மைக்காக தனது அரிய உயிரையும் கொடுக்க துணிந்து போராடும் எனது சிஷ்யனும், தோழனும், உறவினனுமான சாத்யகியை நான் ஏன் பாதுகாக்கக்கூடாது? யாராலும் ஜெயிக்க முடியாத இந்த சாத்யகி யுத்தத்தில் எனது வலக்கை ஆவான். கோழைகளுக்கு பயம் தரும் யுத்தத்தில், உண்மையான வீரன் சுயநலமாக தன்னை மட்டும் பாதுகாத்துக்கொள்வதில்லை. தன்னைக்காக்கவும், தனக்கு உதவவும் தன் பின்னே வரும் மற்ற வீரர்களையும் அவன் பாதுகாக்க வேண்டும். (யுத்தத்தில் தான் மட்டும் காயப்படாமல் வீடு சேரும் ஆண்மகன் இகழப்படுகிறான்). இப்படி வீரர்கள் ஒருவரை ஒருவர் காப்பதால் அங்கே மொத்தத்தில் அரசன் காக்கப்படுகிறான். ஜயிக்கப்பட்டு நிராயுதபாணியாக்கப்பட்ட சாத்யகி உங்களால் கொல்லப்படுவதை அமைதியாக நான் வேடிக்கை பார்த்திருந்தால் அந்த கொலைபாவம் என் தலையில் தான் விடிந்திருக்கும். அரசே, அப்படி இருக்க, நான் சாத்யகியை காப்பாற்றியது குறித்து தாங்கள் ஏன் கோபிக்கிறீர்கள்? “வேறு ஒருத்தனுடன் போர் செய்யும் பொது உன்னால் நான் அங்கபங்கம் செய்யப்பட்டேன்” என்று குற்றம் சாட்டுகிறீர். அது தவறு. யானைகளும் ரதங்களும் குதிரைகளும் சிம்மநாதங்களும் நிறைந்த இந்த கடல் போன்ற இந்த சத்ரு சேனையின் நடுவில் கவசம் அணிந்து தேரேறி வில் பிடித்து நாணேற்றி நான் யுத்தம் பண்ணுகிறேன்.

அது போல, நண்பர்களும் சத்ருக்களும் கலந்த இந்த கூட்டத்தில் போராடும் சாத்யகியை எப்படி உம் ஒருவனுடன் மட்டும் யுத்தம் செய்வதாக தாங்கள் கருதலாம்? பல வீரர்களுடன் யுத்தம் செய்து ஜெயித்த சாத்யகி களைத்திருந்தான். ஆயுதங்களால் காயங்கள் பல பட்ட அவ்வீரன் மனச்சோர்வும் உற்றிருந்தான். ஆந்த சமயத்தில் தாங்கள் அவனை அறைகூவி அழைத்தீர்கள், வெற்றியும் அடைந்தீர்கள். நிராயுதபாணியாக தங்கள் காலடியில் கிடந்த அந்த வீரனின் தலையை வெட்டி ஏறிய தாங்கள் முயல, அவனை நான் காத்தேன். அதை நான் எப்படி சும்மா வேடிக்கை பார்த்திருக்க முடியும்? யுத்தத்தில் சுற்றும் முற்றும் நடப்பதை கவனிக்காமல் அசட்டையாக இருந்த தாங்கள் இவ்விஷயத்தில் தங்களையே தான் நொந்துகொள்ள வேண்டும்.. எனது இடத்தில் தாங்கள் இருந்தால் தாங்கள் என்ன செய்திருப்பீர்கள் அரசே?” என்றான்.

இதைக்கேட்டதும் யூபஸ்தம்பத்தை தன் கொடியில் உடைய பூரிசிரவஸ் வெட்கினான். சாத்யகியை விட்டு விட்டு, பிரயோபவேசம் (வடக்கிருத்தல்) பண்ணி பிராணத்த்யாகம் செய்ய உத்தேசித்தான். சாத்யகியை விட்டு விட்டு, மகா தர்மவானான பூரிசிரவஸ், தனது இடக்கையால் தரையில் அம்புகளைப் பாயலாகப் பரப்பி, பிரம்மத்தினை த்யானித்து, யோக நிஷ்டனாக அதில் அமர்ந்தான். புலன்களை ஒவ்வொன்றாக உரிய தேவதைகளிடம் நாட்டி மௌனமானான். கண்களை சூரியன் மேல் நாட்டி, ஹ்ருதயத்தை சந்திரனிடம் நாட்டி, உபநிஷத் மகாவாக்யத்தை ஸ்மரித்து, ஓம் எனும் பிரணவத்தை உள்ளுக்குள் நிலை நிறுத்தி, சமாதி நிலையில் உடலை விடும் நோக்கத்தோடு யோக நிஷ்டனாக, மெளனமாக அமர்ந்தான்.

அங்கிருந்த சேனாவீரர்கள் அனைவரும் அவனை புகழ்ந்து துதித்தனர். கிருஷ்ணனையும் அருச்சுனனையும் இகழத் துவங்கினர். எல்லோராலும் இகழப்பட்டாலும் அந்த இரு வீரர்களும் (அருச்சுனனும் கிருஷ்ணனும்) எந்த கடும் சொல்லையும் பேசாமல் இருந்தனர். அதே போல எல்லாராலும் புகழப் பட்டாலும் பூரிசிரவஸ் ஆனந்திக்கவில்லை. இன்ப துன்பத்துக்கு அப்பாற்ப்பட்ட ஒரு மேனிலையை அவன் அடைந்திருந்தான்.

எல்லாரும் தூற்றுவதைக் கேட்ட பல்குணன், மேலும் ஏச்சுக்களை பொறுக்க இயலாதவனாகி (அபிமன்யுவை நினைத்தும், வீரர்களின் ஏச்சுக்களைக் கேட்டும்) அளவில்லா சோகத்துடன் அமைதியாகப் பேசலுற்றான். “பூரிசிரவசே! அரசே! காண்டீபத்தின் பாணங்களின் எல்லைக்குட்பட்ட சமர்க்களத்தில் எங்களைச் சேர்ந்த எந்த வீரனையும் ஒரு எதிரி கொல்ல நான் அனுமதிக்க மாட்டேன் என்ற எனது சபதம் உலகறிந்தது. இங்குள்ள அரசர்கள் அனைவரும் அதை அறிவர். இது அறிந்தும், நீங்கள் என்னை இகழ்வது தகாது. தருமத்தை சரியாகப் புரிந்துணராதோர் பிறரை விமர்சிப்பது தகாது. பூரிசிரவசே, நிராயுதபாணியான சாத்யகியை யுத்த தருமத்துக்குப் புறம்பாக, வாளால் தாங்கள் கொல்ல முயன்ற போது தங்கள் கரத்தை நான் பின்னால் இருந்து வெட்டியது தரும விரோதம் ஆகாது. (இங்கே என்னை இகழும்) தருமம் தெரிந்த எந்த நேர்மையான க்ஷத்ரியன் அபிமன்யு கொல்லப்பட்ட விதத்தை புகழ்வான்? பதினாறு வயது பூர்த்தி ஆகாத சிறுவன், தேர் இழந்து, வில் இழந்து, ஆயுதங்கள் தீர்ந்து, கவசம் உடைந்து, களைத்து இருந்த வேளையில் அபிமன்யு ஆறு மகாரதர்களால் பின்பக்கத்தில் இருந்தும் தாக்கப்பட்டு கொல்லப்பட்டான். என்னை இகழும் தர்மம் அறிந்த வீரர்களில் யார் அதை புகழ்வார்கள் அப்பனே?” என்றான் அருச்சுனன், பூரிசிரவசைப் பார்த்து.

புத்திர சோகத்தோடு அருச்சுனன் பணிவுடன் சொன்ன ஆழ்ந்த பொருள் பொதிந்த அந்த வார்த்தைகளை கேட்ட பூரிசிரவஸ் மறுமொழி எதுவும் சொல்லவில்லை. வெட்கத்தில் தலை குனிந்து தரையைத் தொட்டான். அவ்வளவே. ஒன்றும் பேசவில்லை.

அவனது அந்த நிலையை கண்ட பார்த்தன் “பூரிசிரவசே, தருமராஜர் மேலும், பீமன் மேலும், நகுல சகாதேவர்கள் மீதும் நான் வைத்துள்ள அளவு பாசம் உங்கள்மீதும் வைத்துள்ளேன். நானும் கிருஷ்ணனும் சொல்கிறோம், ஐயனே, தருமவான்களுக்குரிய உலகங்களுக்கு நீர் ஏகுவீராக. அடைக்கலம் என்று வந்த புறாவுக்காக தன் தசையையே அரிந்தளித்த வள்ளல் சிபிச் சக்ரவர்த்தி வாழும் உலகங்களுக்கு நீரும் ஏகுவீர்” என்றான்.

வாசுதேவனும் “பூரிசிரவசே, இடையறாது யாகங்களும் அக்னிஹோத்திரமும் நியமம் காத்து செய்து வந்த தருமவானே, நீர் தாமதம் இன்றி பிரம்மா முதலிய தேவரும் விரும்பும் எனது ஒளிபடைத்த வைகுண்டத்துக்கு செல்வீராக. எனக்கு சமானமாக, கருடனால் சுமக்கப் பட்டு, நீர் வைகுண்டம் சேர்வீராக” என்றான்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் சாத்யகி களைத்துப் போய் கிடந்தான். கண்ணன் பேசி முடிக்கையில் அவன் எழுந்தான். கண் விழித்துப் பார்த்தான். அவமானத்துக்கு பழி வாங்கும் ஆத்திரத்துடன் வாளை உருவி, பூரிசிரவசின் வாழ்நாளை முடிக்க தீர்மானித்துப் பாய்ந்தான். ஐம்புலன்களையும் அடக்கி, துதிக்கை வெட்டப் பெற்ற யானை போல, அருச்சுனனால் பாதி கொல்லப்பட்டு, யோகத்தில் அமர்ந்த அரசனை கொல்ல விரைந்த சாத்யகியை கண்டு அனைவரும் அதிர்ந்தனர். “ஐயோ இந்த அதர்மம் வேண்டாம்! வேண்டாம்” என பாண்டவர் படையே கூக்குரலிட்டது. அருச்சுனனும் கிருஷ்ணனும், பீமனும், யுதாமன்யுவும், உத்தமௌஜனும் பெருங்குரலில் அவனை “இது தருமமில்லை” என்று தடுத்தனர். கௌரவர் சேனையும் “ஐயோ” என அலறியது.

அஸ்வத்தாமனும், கிருபரும், கர்ணனும், அவன் மகன் வருஷசேனனும், ஜயத்ரதனும் “வேண்டாம்” என தடுத்தனர். இதையெல்லாம் கேட்டும் லட்சியமே பண்ணாமல், யோக நிஷ்டையில் பிரம்மத்தை த்யானித்து அமர்ந்திருந்த பூரிசிரவசின் சிரஸை தனது கத்தியால் சாத்யகி செத்த பாம்பை அடிப்பது போல வெட்டித் தள்ளினான்.

சேனா வழக்கப்படி பாண்டவ வீரர்கள் சாத்யகியை பாராட்டவில்லை. சித்தர்களும் சாரணர்களும் இருபக்க சேனாவீரர்களும் பூரிசிரவசையும், அவன் வாழ்நாளில் புரிந்த எண்ணிறந்த தானங்களையும் யாகங்களையும் அறச்செயல்களையும் போற்றி கொண்டாடினர்.

கௌரவர்கள் தங்களுக்குள் கசமுசா எனப் பேசத் துவங்கினர். “இது வருஷ்ணி குல சாத்யகியின் தவறல்ல. முன்பே விதிக்கப்பட்டது நடந்து விட்டது. அதனால் நாம் கோபப் படக் கூடாது. கோபமே துக்கத்துக்கு காரணம். சாத்யகி தான் பூரிசிரவசை வதைக்க வேண்டும் என்று அவன் விதி இருந்தால் நாம் என்ன செய்ய இயலும்? பிரம்மா எழுதிய எழுத்தின் படி பூரிசிரவசின் யமன் சாத்யகி என்று இருக்கையில் இது சரியா தவறா என்று நாம் விவாதிப்பதில் பயனில்லை………”

இதைக் கேட்ட சாத்யகி கடுங்கோபத்துடன் “பாபிகளே! பசுத்தோல் போர்த்திய புலி போல தருமம் பேசும் மூடர்களே! இப்போது தருமவான்களைப் போல தருமம் பேசுகிறீர்கள். நல்லது. ஆனால், சௌபத்ரன் (அபிமன்யு) கொல்லப்பட்ட போது நேற்று ஆனந்தக் கூத்தாடியது நீங்கள் தானே? அப்போது எங்கே போயிற்று உங்கள் தர்மம்? என்னை எவன் காலால் உதைக்கிறானோ அவன் சந்நியாசி ஆனாலும் அவனை வதைப்பேன் எனபது எனது சபதம். யுத்தத்தில் நான் உயிரோடு இருக்கும் போதே நான் செத்து விட்டதாக நினைத்தது உங்கள் குற்றம். பூரிசிரவசை நான் கொன்றது தருமமே. இன்னும் சொல்லப்போனால் இந்த பார்த்தன், என் மேல் உள்ள அன்பாலும், தன் சபதத்தை காக்கும் பொருட்டும், இவன் கையை வெட்டி, எனக்குக் கிடைக்க வேண்டிய பெருமையில் பாதியை கிடைக்க விடாமல் செய்து விட்டான்! விதிக்கப்பட்டது நடக்கும். வலியது விதி. நான் என்ன பாப்பம் செய்தேன்? முன்பே ராமாயணத்தில் வால்மீகி பாடினாரே, “வானரமே, பெண்களைக் கொல்லக் கூடாது என்று நீ சொல்கிறாய், ஆனால் எதிரிகளுக்கு துன்பம் தரும் செயலை வீரர்கள் எந்தக் காலத்திலும் உறுதிகொண்டு செய்ய வேண்டும்”. (பின் குறிப்பு காண்க).

சாத்யகியின் இந்த வார்த்தைகளைக் கெட்டு அங்கே இருந்த யாரும் – பாண்டவரும் கௌரவர்களும் – எதுவும் பேசவில்லை. ஆனால் மனதுக்குள் பூரிசிரவசை மெச்சினார்கள். சாத்யகியை மனதுக்குள் இகழ்ந்தார்கள். அங்கிருந்த ஒரு வீரன் கூட, ரிஷியைப் போன்ற பூரிசிரவசின் வதத்தை பாராட்டவில்லை. வெட்டப்பட்ட பூரிசிரவசின் கருத்த மயிரும் சிவந்த கண்களும் கொண்ட தலை, அஸ்வமேத யாகத்தில் காணப்படும் குதிரையின் தலை போல, அழகில் சற்றும் குறையாமல் ஜொலித்தது. யுத்தத்தில் வீரமரணம் அடைந்த மாவீரனும் தர்மாத்மாவுமான வள்ளல் பூரிசிரவஸ், அழியும் தேகத்தை போர்க்களத்தில் உகுத்து, அழியாப் புகழுடம்பை உலகில் நாட்டி, புண்ணியச் செயல்களால் தான் சம்பாதித்த தனது ஜோதிமயமான வடிவத்தோடு காண்போர் கண்கள் கூசும் வண்ணம், ரிஷிகளாலும் சித்தர்களாலும் தேவர்களாலும் போற்றிக் கொண்டாடப்பெற்று பிரம்மலோகம் ஏகினான்.

பின் குறிப்பு:

சாத்யகி சொன்ன வால்மீகி பாடிய சுலோகம் இடம்பெறும் இடம்: வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டம் – சர்க்கம் 81 – ஸ்லோகம் 28 (6-81-28)

न हन्तव्याः स्त्रियश्चेति यद्ब्रवीषि प्लवङ्गम ||
पीडा करममित्राणां यत्स्यात्कर्तव्यमेत तत् |

ந ஹந்தவ்யா ஸ்த்ரியஸ்சேதி யத்ப்ரவீஷி ப்ளவங்கம|

பீடா கரமமித்ரானாம் யத்ஸ்யாத் கர்தவ்யமேத தத்||

“ஏ தாவும் வானரமே (ப்ளவங்கம), பெண் கொலை கூடாது என்று நீ சொல்லுவது உண்மைதான். ஆனாலும் மித்திரர் அல்லாதோரை – எதிரிகளைப் பீடிக்கும் காரியங்களை கட்டாயம் முயன்று செய்ய வேண்டும்”

இதில் இருந்து வால்மீகி ராமாயணம் கட்டுக் கதை அல்ல என்று புலன் ஆகிறது. மகாபாரதத்தில் வால்மீகிக்கு மேற்கோள்/reference வருகிறது என்றால் ராம சரித்திரம் அநாதி காலமாக வழக்கில் இருந்து வந்திருக்கின்றது என்று தானே அர்த்தம்? மகாபாரதத்தில் ராமாயணமே முழுதாக வரும். மார்க்கண்டேயர் தருமனுக்கு, அவனை விட கஷ்டப்பட்ட ராஜாக்கள் உண்டு என்று ஒரு சமயம் தேற்றுவார். அப்போது ராமாயணம் சொல்லுவார். இருந்தாலும், வால்மீகி ராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்லோகத்துக்கு மேற்கோள் வருவது இந்த இடத்தில் தான். சாத்யகி எந்த அளவுக்கு கல்வி அறிவு பெற்றவன் என்பதும் இங்கு விளங்கும். சாத்யகியே இவ்வளவு படித்திருந்தால் பாண்டவர்களும் கண்ணனும் துரோணரும் பீஷ்மரும் கிருபரும் எவ்வளவு அறிவு உடையவர்களாக இருந்திருப்பார்கள் எனபது விளங்கும். அவ்வளவு அறிவு இருந்தும், அதர்மத்துக்குத் துணை போனதால் அவர்கள் எவ்வாறு தோற்றார்கள் என்பதும் விளங்கும்.

பூரிசிரவஸ் வதம் முற்றிற்று.

அடுத்த வாரம் அடுத்த பதிவில் மகாபாரதத்தில் வேறு ஒரு சுவாரஸ்யமான கட்டத்தை பார்ப்போம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “மகாபாரத முத்துக்கள் – பகுதி 4

 1. ////அதனால் நாம் கோபப் படக் கூடாது. கோபமே துக்கத்துக்கு காரணம். ////

   ///உலகால் போற்றப்படும் செயற்கரிய செயலை சான்றோர்கள் விளையாட்டுப்போல எளிதில் செய்து முடிப்பர். ஆனால் அப்பேர்ப்பட்ட சான்றோரும் பழிக்கு அஞ்சுவர். உலகம் இகழும் இழி செயல்களை செய்தல் அவர்க்கு இயலாத காரியம். ஒரு மனிதன் யாருடன் ஒட்டி உறவாடுகிரானோ, அவன் குணங்களை தானும் அடைகிறான். இதை நான் உன்னில் காண்கிறேன்,///

  ///தருமத்தை சரியாகப் புரிந்துணராதோர் பிறரை விமர்சிப்பது தகாது.///

  முத்துக்களை சேகரித்து என் சிந்தையில் 
  கோர்த்துக் கொண் டேன்.

  பகிர்விற்கு நன்றிகள் சகோதரரே! 

 2. //அதர்மத்துக்குத் துணை போனதால் அவர்கள் எவ்வாறு தோற்றார்கள் என்பதும் விளங்கும்.//

  மொத்த மகாபாரதமும் இந்த வாக்கியத்தில் அடங்கி விட்டது.

  வாழ்த்துக்கள்.

 3. கடுமையான சந்தர்ப்பங்களில் ஒருவர் எங்ஙனம் பொறுமை காக்க வேண்டும் என்பது.

  /////நாம் கோபப் படக் கூடாது. கோபமே துக்கத்துக்கு காரணம்/// என்ற வரிகளின் மூலம்  விளங்குகிறது. விதிப்படியே அனைத்தும் நடக்கிறதென்ற நிதானம் வந்து விட்டாலே மனம் அமைதி கண்டுவிடும். இதிகாசத்திலிருக்கும் தத்துவ முத்துக்களை பகிர்ந்து கொண்டு வரும் சகோதரருக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன். 

 4. மகாபாரதமும் ராமாயணமும், கதைகளினூடே இவ்வாறு அறக்கருத்துக்களை நேரிடையாகவோ இலைமறை காயாகவோ தந்துகொண்டே இருக்கும். உள்ளே வரும் உவமைகள் கூட தருமத்தை உபதேசிப்பதாகவே அமையும்.

  தேவையானவற்றை அன்னப்பறவை போல எடுத்து சேமித்துக்கொண்ட பெருந்தகைகள் ஸ்ரீ ஆலாசியம் அண்ணா, திரு. சச்சிதானந்தம், மற்றும் சகோதரி ஸ்ரீமதி பார்வதி இராமச்சந்திரன் அவர்களுக்கு அடியேனது நன்றிகளும் பணிவான வணக்கங்களும்.

  தங்களைப்போன்ற பெரியோர்கள் தரும் ஊக்கத்தாலேயே அடியேன் மேலும் மேலும் எழுத விழைகிறேன்.

  பணிவன்புடன்,
  புவனேஷ்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *