ஜெயஸ்ரீ ஷங்கர் 

 

என்னாச்சுடி மலரு……? ஷீலா, தானிருந்த இடத்திலிருந்தே குரல் கொடுத்தாள்.

முள்ளு குத்திருச்சு, லேசா வலிச்சுச்சு.. அவ்வளவு தான்…வேற ஒண்ணுமில்ல…மலர் சொல்லும்போது ஷீலாவின் ஆளு….பாண்டியன் ஜன்னல் பக்கமாக வந்து நின்று இவளைப் பார்த்து சிரித்துவிட்டு, இவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவுடன் …. “ஷ்…ஷ்…மலர்விழி,  அந்தப் பிள்ளை .ஷீலாவை கூப்பிடு.” என்கிறான்.

இவள் திரும்பி வேறு யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்தவள், ஏய்…ஷீலா உன் ஆளு..இங்கன வந்து நின்னு உன்னிய கூப்பிடுது..என்னான்னு கேளு.

ஷீலா வாயெல்லாம் பல்லாக அவனைப் பார்த்து சிரித்தபடியே ஜன்னலருகில் போகிறாள்.சிறிது நேரம் பேசிவிட்டு, மலர் இருக்கும் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல் நேராக தன் இடம் நோக்கி செல்கிறாள்.

ஏமாற்றமடைந்த மலர்விழி, ம்ம்…..எதுனா நல்ல விஷயமாயிருக்கும். அதான் சிலுப்பிகிட்டு போறா. அவன், சொல்லாதேன்னு சொல்லியிருப்பான். இப்ப அவளுக்கு காதலன் தான் கண் கண்ட தெய்வம்….நான் யாரு? என்று மனத்துக்குள் நினைத்தவள். நானும் மெல்ல அந்த மேனேஜர் சொன்னாரே வேற இடம் ..பாக்கிங் செய்யிற இடத்துக்கு மாத்தி விட்டுர்றேன்ண்டு அங்கனக்குள்ள கேட்டுக்கிட்டு போயிறலாம். இங்கன இந்த சாவுக் கிராக்கி வந்து வந்து நின்னு தொல்லை பண்ணிக்கிட்டே கெடக்கும் போல.. வீணா எனக்கு எதுக்கு இவுங்க  வம்பு? சடக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டவளாக காரியத்தில் கவனமாயிருந்தாள் மலர்.

நேரம் செல்லச் செல்ல வேலைகள் முடிந்ததற்கான அறிகுறிகள் ஆரம்பமாயின. ஒவ்வொருவராக கிளம்பி கணக்குப் பிள்ளை டேபிளின் முன்பு கூடி நின்றனர்.  மெல்ல மெல்ல குசு குசு வென்ற பேச்சுக்கள் நேரமாக நேரமாக மீன் மார்க்கெட் லெவலுக்கு சத்தம்  எகிறுவதைப் கேட்டதும், மேனஜர் அங்கு வந்து நின்று கொண்டார். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு….அம்புட்டு பேரும் ஒண்ணாக் குமியாதீங்கன்னு சொன்னாக் கேட்க மாட்டீங்களா? காதை  வாடகைக்கு விட்டிருக்கீங்களா?…இல்லாட்டி களட்டி வெச்சிட்டீங்களா….? க்யூல வாங்க…..க்யூல வாங்க…என்றபடி கையை ஆட்டியபடியே அதட்டிக் கொண்டிருந்தான்.

அவனது கண்கள் தப்பாமல் மலரை ‘மொய்த்த பார்வையில்’ அவளுக்குப் ‘பலானது’ புரிந்தது.

சீ…..நாயே….உன்  மோப்பத்துக்கு வெக்கிறேண்டி ஆப்பு…! என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள். முதல் வாரச் சம்பளம் வாங்கற சந்தொஷத்தையே கெடுக்கிறான்..தூத்தேரி..!

இன்னிக்கு சம்பள நாளில்லியா ..அதான் அதுக்கு மூக்குல வேர்த்துப் போச்சு என் ஆளுக்கு..அதாண்டி மலரு..பாண்டியனுக்கு. பார்த்தியா….ஓடியாந்திருச்சி …இப்படித்தான் ஓடியாந்துரும்…வாங்குற துட்டில் கொஞ்சமாச்சும் வெட்டனும் அதுக்கும்..இல்லாங்காட்டி எகிறி எகிறி ஏசும்.

உனக்கு இது தேவையாடி..? அவிங்கிட்ட மாட்டிக்கிட்டு தவிக்கிறே.

தவிக்கலைடி …செலசமயம் அதும் மருவாதி தான். எனக்குண்டு ஒரு ஆள் இருக்குற நெனப்பு…அது ஒரு கிக்குதான்டி. அதெல்லாம் உனக்கு இப்பத் தெரியாது…உனக்கும்……ஷீலா குசு குசு வென்று மலரின் காதில் கிசு கிசுத்தாள்.

செருப்படி…! என்று பல்லைக் கடித்துக் கொண்டே தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு ஷீலாவைப் பார்த்து முறைத்து விட்டு க்யூவில் சேர்ந்து நின்று கொண்டாள். என்கிட்டே இது மாதிரி ஒரு ஆள் மாட்டினா…அம்புட்டுத்தான்…..சும்மாப் போட்டுத் தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்….! பொட்டச்சி சம்பாத்தியத்துல வக்கணையா என்ன வாழ்வு வேண்டிக்கெடக்கு கசமாலத்துக்கு. நான் மட்டும் டீச்சர் ஆனால், அம்புட்டுப் பசங்களுக்கும் எப்பிடி வாழனும்னு சொல்லித் தரோணம்..அம்புட்டுப் பிள்ளைகளையும் நல்லாப் பெரிய பெரிய படிப்பு படிங்கடாண்டு சொல்லிக் கொடுப்பேன்.  வளரும் போதே நல்லதைச் சொல்லிக் கொடுத்துப்புட்டா இந்த மாதிரி புல்லுருவிங்க வளராது. எதை எதையோ நினைத்தபடியே கியூவுக்கு அருகில் வந்தவள்…மனக் கணக்கு போட ஆரம்பித்தாள் .”ஒரு நாளைக்கு முந்நூறு ரூபாய் வீதம் ஒரு வாரத்துக்கு எவ்வளவு?” முந்நூற ஏழாலப் பெருக்கினா எம்புட்டு வரும்….விரல்களை ஒவ்வொன்றாக எண்ணி விட்டவள், இருபத்தி ஒண்ணு …அப்டின்னா இரண்டாயிரத்தி நூறு ரூபாய்….ஹம்மாடியோ..அம்புட்டு ரூபாயா இப்ப நான் சம்பாதிச்சது. கையில் வரப்போகும் பணத்தை எண்ணி வாய் பிளந்தவளாக உள்ளமெல்லாம் தள்ளாட கணக்குப் பிள்ளை டேபிளின் எதிரே நின்றாள் .

என்ன பேரும்மா…..? நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கேட்கும் அவரிடம்.. பணிவாக மலர்விழி….புதுசா இந்த வாரம் தான் சேர்ந்தேன் ஐயா…தயக்கத்துடன் சொல்கிறாள்.

ம்ம்…ம்ம்….இங்கன ஒரு கைநாட்டு வைய்யி..என்று லேட்ஜரைத் திருப்புகிறார்.

ஐயா …நான் கையெழுத்துப் போடுவேனுங்க..என்றவள் “பேனா…” என்று இழுக்கிறாள்.

நிமிர்ந்து பார்த்தவர், இந்தா…இங்க போடு என்று பேனாவை அவள் பக்கம் நகர்த்துகிறார்.

நாலாயிரம் ரூபாய்க்கான வவுச்சர் அது. அதில் கையெழுத்தை போட்டவள்…அவர் தந்த பணத்தை எண்ணிப் பார்த்தபடியே..ஐயா எனக்கொரு டவுட்டு..என்கிறாள்.

அதெல்லாம் முதலாளிட்ட கேளு..இப்ப எடத்தக் காலி பண்ணு…ம்ம்…நேரமாயிட்டுப் போகுது..அடுத்தது யாரும்மா வா வா..கொடுக்குற துட்ட வாங்கிட்டு காட்டுற இடத்துல கைநாட்டப் போட்டுட்டு போயிட்டே இருக்கணும்…டவுட்டாம்…டவுட்டு……!

மலர்விழி ஒரு அடி கூட நகராமல் அங்கேயே நின்றிருந்தாள் .

இந்தாம்மா….நகுரு…கொஞ்சம் குரலில் கறாருடன் சொன்னார் கணக்குப்பிள்ளை.

எனக்கு நீங்க இரண்டாயிரம் மட்டும் தான் கூலி தந்தீங்கய்யா. கெயெழுத்து மட்டும் நாலாயிரத்துக்கு வாங்கிக் கிட்டீங்க…அது ஏன்..? அப்டீண்டா இன்னும் அந்த ரெண்டாயிரத்தையும் தந்துடுங்க அதானே நியாயம்.

உனக்கு முன்னாலயே ஏதும் சொல்லலியா. இங்க இப்படித்தான். நீ வேணா உன் வீட்டாண்ட ஆயிரம் தான் இந்த வாரம் சம்பளம் கொடுத்தாங்கன்னு சொல்லிக்க. பிடிச்சா வேலையில இரு..இதுக்கு மேல ஒரு கேள்வி கேட்ட நாளைக்கு வேலை இருக்காது. ஆமா சொல்லிப்புட்டேன். இந்தாம்மா நீ வா..என்று மலருக்குப் பின்னால் நின்றிருதவளைப் பார்த்து அழைக்கிறார் அவர்.

திருட்டுப் பசங்க…கொள்ளையடிக்கிறாங்க. கால் கடுக்க கை வலிக்க வேலை பார்க்கிறது நாங்க…நோகாம நொங்கெடுக்க இதுங்களா…? காதுல கெண்டைய மாட்டுதுங்க. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நானும் உங்க அத்தனை பேர் காதுலயும் ஜெயிலு மணியை மாட்டித் தொங்க விடலை…என் பேரு மலரு இல்லை. மனம் வீரத்துடன் சபதம் போட  மெளனமாக நகர்ந்தாள் அவள்.

இதுங்கள எல்லாம் யாருடா பிடிச்சாந்தது…..பத்து குறத்திய வெச்சு செஞ்சு முடிக்க வேணடிய வேலைய இதுகளுக்கு என்னாத்துக்கு கொடுக்கணம்….இப்படி கேள்வி கேட்கவா..?  அந்த மேனஜர் எங்க? இந்தப் பிள்ளைய கணக்கு முடிஞ்சிருச்சின்னு சொல்லி வெளிய அனுப்பச் சொல்லு.நான் சொன்னேன்னு சொல்லு…இப்ப வரிக்கும் என்னியப் பார்த்து ஏதாச்சும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசியிருக்குமா ? டவுட்டு கேக்குற மூஞ்சியப் பாரு..! கோபத்தில் கணக்குப் பிள்ளை கத்திக் கொண்டிருந்தார்.

பணப் பட்டுவாடா முடிந்து அனைவரும் கலைந்த நிலையில், மனேஜர் அருகில் வந்து…”ஏம்மா மலரு…இத்த அந்த ஷீலா உன் கையில சொல்லலியா?  சரி விடு…இங்கன இப்படித் தான்..ஆனால் அந்த பாக்கிங் ஆபீசில் இப்படி கெடையாது..உன்னிய நாளைக்கு அங்கன போட்டுர்றேன். சரியா.நீ பொழக்கத் தெரியாத பிள்ளையா இருக்கியே. இதே உன்னோட கூட்டாளி என்ன சொன்னாத் தெரியுமா? அந்த அமீர் பெட் ஆஞ்சநேயலு ஊறுகாய் கம்பெனில விளம்பரப் படத்துல நடிக்க ஒத்துக்கிச்சி..ஒரு படத்துக்கு ஐயாயிரம் ரூபாய் சம்பளம். சும்மால்ல …அவரு உன்னியத் தான் இதுக்கு கூப்பிட்டாரு..ஷீலாட்ட நான் தான் உன்கிட்ட சொல்லச் சொன்னேன்…

பட பட வென்று அடித்துக் கொள்ளும் இதயத்தோடு ஷீலா என்ன சொல்லியிருப்பா என்று கேட்கும் ஆவலுடன் அவரது முகத்தைப் பார்க்கிறாள் மலர்.

அது என்ன சொல்லிச்சி தெரியுமா…? நான் தான் சீனியர்…இந்த விளம்பரத்துல நானே நடிக்கிறேன்…மலர் கிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிருச்சி.

ஷீலாவா அப்படிச் சொன்னாள்…? ஆச்சரியத்தில் விரிந்தது மலரின் விழிகள்.

பின்ன..நான் என்ன பொய்யா சொல்றேன்…நீ வேணாக் கேட்டுப் பாரு..ஆனா…நல்ல வேளை , உனக்கு வேற ஒரு வேலை வந்திருக்கு..அதாவது, ஒரு டிவி சீரியல்ல நடிக்கிற சான்ஸ்…வேலையே இல்லை..சும்மா ஒரு வீட்டில் இருக்கோணம்..அங்கிட்டு ஒரு இருபது பொண்ணுங்க கூட இருப்பாங்க.அம்புட்டுப் பேருமே நடிக்க உன்னிய மாதிரி வந்தவங்க தான். சாப்பாடு, தங்குற எடம் எல்லாம் அங்கனயே கம்பெனி பார்த்துக்கும். தெனம் வந்து ஷூட்டிங் பண்ணிட்டுப் போவாங்க…ஒரு வாரம் ஐயாயிரம் சுளையா அள்ளித் தந்துடுவாங்க…டிவி இருக்கும், ஏஸி எல்லாம் இருக்கும். உனக்கு இஷ்டம்னா இப்பமே சொல்லிடு..இல்லாட்டிப் போனா இந்த சான்ஸும் போயிறும். ஆசை காட்டினான் அவன்.

நான் எதுக்கும் ஷீலாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உங்க கிட்ட பதில் சொல்லிர்றேன்..ஆனா அந்த வீட்டில் இருக்குற இருபது பொண்ணுங்களுக்கும் என்ன வேலை இருக்கும்? என்னத்த படம் பிடிப்பாங்க? மெல்ல எழுந்த சந்தேகத்தை அவளையும் அறியாமல் கேட்டு வைக்கிறாள்.

அப்டிகேளு….இந்த டிவில வார “டாடி எனக்கொரு டவுட்டு..” ன்னு கொமட்டுல குத்துறாப்பல இருக்குது உன் கேள்வி. எதோ ஒரு டிவி சீரியல் வருதாம்….அதுல ஒரு ஊறுகாய் கம்பெனில வேலை பார்க்கிறா அந்த நடிகை. இப்படி கதை போகுது. அந்த ஊறுகாய் கம்பெனி தான் அந்த வீடு….அங்க ஊறுகாய் பாக்கிங் பண்ணுற பொண்ணுங்க நிறைய பேரு வேலைக்கு இருக்குறாப்பல அதுங்களோட அந்த நடிகையும் பாக்கிங் பண்ணுறாப்பல படம் பிடிப்பாங்க. இந்த ஷூட்டிங் வெறும் ஒரு வாரம் மட்டும் தான்.அதுக்குத் தான் அம்புட்டு துட்டும், சொகுசும்…என்ன இருந்தாலும் சீரியல் படம் இல்லையா..? இப்பச் சொல்லு நீ வாரியா…வரலியா? அவளைக் கேள்வி கேட்டு மடக்குகிறான் அந்த மேனேஜர். ஷீலா மட்டும் உன்னைய கேட்டுகிட்டா என்கிட்டே வாரேன்னு சொல்லிச்சு. பெறவு நீ மட்டும் ஏன் அந்தப் பிள்ளையைக் கேட்கோணம்.

அப்டீங்களா…..அவள் மனத்துக்குள் அவள் ஷீலாவிடம் தங்கியிருக்கும் அறையில் இருந்து தப்பித்தால் போதும் என்று இருந்தது. மேலும் இந்த மீனில் முள்ளு எடுத்து அலம்பும் வேலையை விட வேறு வேலை கிடைத்தால் நல்லது தானே….என்றும்  யோசித்தவள்,  சரீங்கய்யா…நானும் வரேன்…என்கிறாள் மலர்விழி.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தொலைத்ததும்.. கிடைத்ததும்..2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.