பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ, பிரான்சு

சைவம் :

காலத்தால் முந்தியது சைவ சமயமே எனக் கண்டோம். மாந்தனியல் என்னும் அறிவியல் வழியாகவும் வரலாற்றுப் படியும் உண்மை இதுவென நிறுவப்பட்டுள்ளது.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அரப்பா-மோகந்தஜாரோவில் இருந்த திராவிட இனத்தில் சிவ-சக்தி வழிபாடு இருந்தற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. நம் தமிழ் இலக்கியங்களைப் பொருத்த வரை, தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் இலக்கிய நூல்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவிய நூல்களிலும் சிவன் அல்லது சைவம் என்ற சொற்கள் நேரடியாகப் பயன் படுத்தப்படாவிட்டாலும், சிவன் தொடர்பான செய்திகள் ஆங்காங்கே உள்ளன. திருக்குறளிலும் கூட சைவ சித்தாந்தக் கருத்துக்களை ஒத்த கருத்துகள் காணப்படுகின்றன.

‘பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன்” எனச் சிவபெருமானைப் பற்றி ஒளவையார் கூறியுள்ளார்.

சங்க இலக்கியத்தில் பயின்று வரக்கூடிய ‘தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே’ (புறம்) ‘ஈர்ஞ்சடை அந்தணன்,ஆலமர் செல்வன்’ (கலித்தொகை), ‘முக்கண்ணன் ‘(கலித்தொகை), ‘கறைமிடற்று அண்ணல்’, ‘முதுமுதல்வன்’, ‘ஆலமர் கடவுள்’ (புறம்), ‘மணிமிடற்று அண்ணல்’ (பரிபாடல்), ‘நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்’ (ஐங்குறு நூறு)… போன்ற சொல்லாட்சிகள் சிவனைக் குறிப்பதால்,சிவ வழிபாடு சங்க காலம் தொட்டு இருந்துள்ளது என்பதை அறியலாம்.

தமிழ் இலக்கியங்களில் சிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில் “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்….’ எனச் சிவபெருமானைப் பிறவா யாக்கைப் பெரியோனாக இளங்கோவடிகள் கூறியுள்ளார்.

“சைவ சமயத்தின் தோற்றம் கற்பனைக்கு எட்டாததாய் அமைந்துள்ளது; வரலாற்றுக் காலத்துக்கு உட்பட்ட சைவம் ஆரியர், ஆரியர்க்கு முற்பட்டவர் என்னும் இருவேறு நெறிகளின் இணைப்பேயாகும்” என்று வரலாற்று ஆசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் குறிப்பிடுகின்றார். “மொஹெஞ்சதரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஆரியருக்கு முற்பட்டதொரு நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதை ஐயமறத் தெரிவிக்கின்றன. இவ்வகழ்வாய்வுகளில் சைவ சமயம் பற்றிய – குறிப்பாகச் சிவனுக்கு அல்லது அதற்கு முற்பட்ட வடிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. உலகின் மிகப் பழைய உயிரோட்டமுள்ள சமயம் சைவ சமயமேயாகும்” என்று சர். ஜான் மார்ஷல் என்னும் அகழ்வாராய்ச்சி அறிஞர் கூறியுள்ளார். மேலும் “மொஹெஞ்சதரோ – ஹரப்பா வெளிக்காட்டும் செய்திகள் பலவற்றால் சைவம் மிகப் பழைய கற்காலத்தும் அதற்கும் முற்பட்ட காலத்துக்குமான சமயம் என்றும் இந்த வகையில் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது” என்றும் ஜான் மார்ஷல் குறிப்பிடுகின்றார்.

சைவம், தென்னிந்தியாவின் மிகப்பழைய, வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் ஆகும்; அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருகிறது என்று G.U.போப், திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு முன்னுரையில் குறிப்பிடுகின்றார். “காளியும் சிவனும் திருமாலும் வேத காலத்துக் கடவுளர்கள் அல்லர்; எனவே அவர்கள் ஆரியர்களைச் சேர்ந்தவர்களும் அல்லர். அவர்கள் திராவிடர்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு முடிவுக்கு வருவதற்கு இல்லை” என்று ‘இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள்’ என்னும் நூலில் G. சிலேட்டர் என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.

மேற்குறிப்பிட்ட அறிஞர்களின் கருத்துகளிலிருந்து, சைவம் மிகத் தொன்மையான சமயம் என்பதும், பழந்தமிழர்கள் சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர் என்பதும் புலப்படுகின்றன. (http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/m

இவ்வாறு சிவ வணக்கத்துக்குரிய சான்றுகள் ஆரியருக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே கிடைத்து வந்தாலும், சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது. இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலரால் எழுதப்பட்டதும், சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் காணப்படுகின்றது. சைவ சித்தாந்தத்தை விளக்க, 12 -ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14 -ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் பதின்நான்கு நூல்கள் தோன்றின.

1. சிவஞான போதம்

2. சிவஞான சித்தியார்

3. இருபா இருபது

4. திருவுந்தியார்

5. திருக்களிற்றுப்படியார்

6. உண்மை விளக்கம்

7. சிவப்பிரகாசம்

8. வினா வெண்பா

9. திருவருட் பயன்

10. போற்றிப் பஃறொடை

11. நெஞ்சுவிடுதூது

12. கொடிக்கவி

13. உண்மை நெறி விளக்கம்

14. சங்கற்ப நிராகரணம்.

இவை மெய்கண்ட சாத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன.

திருஞான சம்பந்தர் முதலிய 27 ஆசிரியர்கள் அருளிய பன்னிரு திருமுறை எனும் தொகுப்பைத் தோத்திரங்கள் என அழைப்பர். இந்தச் சாத்திரங்களும் தோத்திரங்களும் சைவ சமயத்தின் இரு விழிகள்.

முதல் ஏழு திருமுறைகள் பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் , சுந்தரர் ; இவை தேவாரம் என அழைக்கப்படுகின்றன.

எட்டாம் திருமுறை திருவாசகம், திருக்கோவையார் – மாணிக்கவாசகர் பாடியவை. ஒன்பதாம் திருமுறையில் ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பா அடங்கும் ; இங்கும் ஒரு திருப்பல்லாண்டு உண்டு ; அதனைப் பாடியவர் , சேந்தனார். பத்தாம் திருமுறை இருபது நூல்களை உள்ளடக்கியது. இதில் மிகப் புகழ் பெற்ற திருமூலர் எழுதிய திருமந்திரம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை (பத்துப்பாட்டில் உள்ள அதே நூல்தான்) போன்றவை உள்ளன. பதினோராம் திருமுறையில் மொத்தம் பத்தொன்பது நூல்கள் உண்டு. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை ஆகும்.

சைவ சமயப் பெருமைகள் :

சைவத்துக்கெனப் பல பெருமைகள் உண்டு. சமயங்களில் மூத்தது என்பது முதல் பெருமை. “திறமான புலமை எனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்திடல் வேண்டும்” என்ற பாரதியின் கருத்துக்கு ஏற்ப, வெளி நாட்டு அறிஞர்கள் கூற்றுகள் சிலவற்றைக் காண்போம்

– ஜி .யு .போப் , ” இந்தியாவில் உள்ள சமயங்கள் அனைத்திலும் சைவ சித்தாந்தமே மிக மேம்பட்டது என்பதில் ஐயம் இல்லை ” என்கிறார்.

– முனைவர் கபில சுவபில் : “மனித சிந்தனைகளில் மிக முழுமையான, அறிவார்ந்த சிந்தனை சைவ சித்தாந்தமே!

– H.R Hoyzington,the founder of church of South India ( CSI) : “சைவ சித்தாந்தத்தில் காணப்படும் மெய்யியல் உண்மைகள் கிரேக்க மெய்யியலிலோ இலத்தீன் மெய்யியலிலோ காண முடியாதவை.”

நம் நாட்டு ஞானிகளும் சைவத்தைப் பெருமையாகப் பேசுகின்றனர் :

தாயுமானவர் :
“சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம் பொருளைக்
கைவந்திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தை விட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுதவேண்டாம் முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் சகத்தீரே”

”சைவம் சிவனுடன் சம்பந்தமாவது” (திருமந்திரம், 1486) என்று திருமூலர் கூறுகிறார்.

“ சைவத்தின் மேற்சம யம்வே
றிலையதிற் சார்சிவமாந்
தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனும்
நான்மறைச் செம்பொருள்வாய்
மைவைத்த சீர்த்திருத் தேவார
முந்திரு வாசகமும்
உய்வைத் தரச்செய்த நால்வர்பொற்
றாளெம்மு யிர்த்துணையே !”

– சைவ எல்லப்ப நாவலர். திருவருணைக் கலம்பகம்.

2) சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது.

“யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமேயாகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவர் “ — சிவஞான சித்தியார்

“தென்னானுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!” – என்பது மாணிக்கவாசகர் தம் மணிவாசகம்.

“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் “ என்று உலகிற்கு உணர்த்திய சமயம் சைவம் ஒன்றே .

ஓரிறைக் கோட்பாட்டையும் உருவ அருவ வணக்கத்தையும் உரைப்பதுவும் சைவமே :

“ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டோமோ !” – திருவாசகம் உரைக்கும் உண்மை!

“விரிவிலா அறிவினர்கள் வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்” என்பது அப்பர் திருவாக்கு.

“இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
அடியின்கீழ் இருக்க” என்றார் காரைக்கால் அம்மையார்.

(‘திருவிளையாடல்’ படத்தில் இக்கருத்தமைந்த பாடலை ஔவையார் பாடுவதாக ஏ.பி நாகராசன் அமைத்துவிட்ட காரணத்தால் இதனைப் பாடியவர் ஔவையாரே என்று இன்றளவும் தவறாகவே எண்ணிக்கொண்டிருக்கின்னர். இது போலவே, ‘ஒன்றே குலம் ; ஒருவனே தேவன்” எனச் சொன்னவர் அறிஞர் அண்ணாதுரை என்று ‘தம்பிகள்’ நம்பிக்கொண்டு உள்ளனர்.)

சைவ சித்தாந்தம் :

மனிதப் பிறவி எடுக்கும் உயிர்கள், (பசு எனச் சைவ சித்தாந்தத்தில் அழைப்பர்)
பதியாகிய இறைவனோடு இணைய முடியாமல் பாசம் என்ற தளை தடுக்கிறது. இந்தப் பசு, பதி, பாசம் என்ற முக்கோணச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டதே சைவ சித்தாந்தம்.

இதனை விளக்குவனவே 12 -ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் 14 -ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதின்நான்கு நூல்கள். இவற்றை மெய்கண்ட சாத்திரங்கள என்பர்.

சைவச் சமயக் குரவர்கள் திருஞானசம்பந்த சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள், மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையார், திருமூலர் அருளிய திருமந்திரம்., திருஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமாள் அடிகள், அதிராவடிகள், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி ஆகிய பன்னிரு அருளாளர்கள் அருளிய திருவருட் பாடல்கள், சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம். முதலியவற்றைப் பன்னிரு திருமுறை என்பார்கள். இவற்றைத் தோத்திரப் பாடல்கள் என்றும் கூறுவது உண்டு. இவற்றின் அடிப்படையில் அமைந்ததுதான் சைவ சமயம்.

3 ஓரிறைக் கோட்பாட்டையும் உருவ அருவ வணக்கத்தையும் உரைப்பதுவும் சைவமே.
ஓரிறைக் கோட்பாட்டை உரைக்கும் முக்கிய சமயங்கள் : யூத மதம், கிறித்துவச் சமயம், இசுலாமிய மதம். அருவ வணக்கத்தை ஆதரிப்பவை யூத, இசுலாமிய மதங்கள்
உருவ வணக்கத்தைப் பெரும்பாலான சமயங்கள் விலக்குவதில்லை : வைணவம், கிறித்துவம், புத்தம், சமண மதங்கள். ஆனால் இவை யாவற்றையும் ஏற்பது சைவ சமயத்தின் சிறப்பாகும் ( சிவலிங்கம் உருவ அருவ வணக்கத்துக்கு நல்ல எடுத்துக்காட்டு.)

இனி இச்சைவ சமயம் எப்படி அறிவியல் மையமாக விளங்குகிறது எனக் காண்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “சைவ சமயம் அறிவியல் மையம் பகுதி 3

  1. சங்க இலக்கியத்தில் அல்லது தொல்காப்பியத்தில் திராவிடர் என்ற வார்த்தைப் பிரயோகம் இருக்கிறதா? அது இருக்குமாயின் அதன் உண்மைக் குறிப்பு யாது?

    வள்ளுவன், இளங்கோ கம்பன் நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்போரும் பாரதியும் திராவிடர் என்ற இந்த வார்த்தையை  பயன் படுத்தி இருக்கிறார்களா? ஏன்? அதன் உண்மையானப் பொருளென்ன?

    ////சைவம், தென்னிந்தியாவின் மிகப்பழைய, வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் ஆகும்; அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருகிறது என்று G.U.போப், திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு முன்னுரையில் குறிப்பிடுகின்றார்.///

    ஜி.யு போப் ஐயர் கூறியது போல; தென்னிந்தியாவின் என்று குறிப்பிடுகிறாரே அப்படியானால் வட இந்தியாவின் நிலை என்னவாக இருந்திருக்கும்… அவர்கள் காடுகளிலே கல்வியறிவும் இல்லாது இருந்திருப்பார்களா? 🙂

    ///. “காளியும் சிவனும் திருமாலும் வேத காலத்துக் கடவுளர்கள் அல்லர்; எனவே அவர்கள் ஆரியர்களைச் சேர்ந்தவர்களும் அல்லர். அவர்கள் திராவிடர்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு முடிவுக்கு வருவதற்கு இல்லை” என்று ‘இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள்’ என்னும் நூலில் G. சிலேட்டர் என்னும் அறிஞர் குறிப்பிடுகின்றார்.////

    அப்படியானால் இங்கே குறிப்பிட முனைவது வேதகாலம் என்பது சரியா எது கி.மு எவ்வளவாக இருக்கும்? 

    சங்ககாலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சில ஆயிரம் என்றுக் கொண்டாலும் அந்தப் பழைய இலக்கிய காப்பியத்தில் திராவிட கூறு என்று ஏதாவது குறிக்கப் பட்டு இருக்கிறதா?

    தமிழில் ராமாயணம் கம்பனுக்கு முன்பே இருந்திருக்கிறது அது சங்க இலக்கியங்களிலே காணவும் முடிகிறது.

    சைவம் சித்தாந்தம் 12 லிருந்து 14க்குள் உருவாக்க ஈசன் அறிவுறுத்தி இருக்கிறான் அப்படியாயின் அதிலே இந்து மதத்தின் நான்கு மறைகள் கூறும் கருத்துகள் எத்தனை தூரம் ஊடுருவி இருக்கிறது… அதை நாயன்மார்கள் ஏற்றார்களே… அப்படியாயின் அவர்களின் அந்த மறைகளின் பால் இருக்கும் ஈடுபாடு எவ்வளவு!!!

    அன்றையத் தேவைக்கு ஈசனால் அவனின் விருப்பத்தால் கால அவசியத்தால் நாயன்மார்களை ஆட்கொண்டு சைவ சமயத்தை வளர்த்தான்… என்றால்.. 

    நான் மறையும் யார் படைத்தது! அது யாரின் விருப்பம் யாரின் அருள்! அதற்கும் எம் பெருமான் ஈசனுக்கும் எத்தனை தூரம் தொடர்பு இருக்கிறது…

    அல்லது அவனுக்குத் தெரியாது அது வந்ததா… அவன் அதற்கு முந்தியே சைவ மதத்தை உலகிற்கு அருளியதோடு விட்டு இருக்கலாமே… அப்படி இருக்க அந்த நான் மறையின் தோற்ற அவசியம் என்ன.. அதை ஏன்? ஈசனார் தடுக்க வில்லை.

    தென்னிந்தியர் திராவிடர் என்றால் வட இந்தியர் ஆரியர் என்று கொள்வதா? அல்லது மிகப் பழைய இனங்களின் ஒன்றான கிரேக்க, ரோமானிய, பாபிலோனிய இனத்தோடு கூடிய மிகப் பழைய இனமா? அல்லது அது திராவிட என்னும் இனத்தை உள்ளடக்கிய மகாபாரத இந்தியத் துணைக்கண்டம்  முழுவதும் (Greater India) பரவிய ஆரிய இனமா?

    திராவிடம் ஆரியத்திற்கு முந்தியது என்று கொள்வதில் எந்த சிரமமும் இல்லை… அதையேன் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. ஓன்று அதன் அவசியம் இல்லை என்றுக் கொண்டாலும் அந்த வார்த்தையையே ஏன்? உபயோகப்படுத்தவில்லை… அல்லது  கணினி என்னும்  சொல் காப்பியங்களில்  காண முடியாதது  போன்ற  ஒன்றா!

    அத்தனை ஆயிரம் செய்யுளை பாடி கம்பன் அந்த வார்த்தையை கூறி இருக்கிறானா? ஏன்  கூறாது விட்டு இருக்கிறான்?

    எல்லீஸ் க்கு முன்பு திராவிடக் கூறு என்பதின் புரிதல் என்ன அவருக்குப் பின்பு வந்த கால்டுவெல்லின் கைங்கரியத்தில் வந்த இந்த திராவிட கூறு பற்றிய கற்பனை விஸ்தரிப்பு என்ன? 

    திராவிட-ஆரிய பிரிவை உண்டாக்கியது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி… அதை மதிவாணர்கள்  தங்களுக்கு சாதகமாக்கி இன்றளவில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள்…

    ஆரிய மொழியை போற்றிய தமிழ் பெருங்கவிகளில் அந்தணர் அதிகமானவர்கள்   இருந்திருக்கிறார்கள்….  பின்னாளில் அவர்களும் அத்தனை  மறைகளும்  கோரிய  படி ஒழுகாது  போக இருந்தமையால் அவர்களை எதிர்த்த அல்லது அவர்களின் சுய நலப் போக்கை; தான் உயர்ந்தவன் என்ற அகங்கார போக்கை எதிர்த்து வேறு ஒரு அமைப்பை உண்டாக்கிய (நல்ல எண்ணத்தோடு சிலர் செய்ததே.. அது காலப் போக்கில் தார்ப்பரியம் கெட்டுப் போய் தடமாறி எங்கோ போச்சு.. வெள்ளையரின் எண்ணப்படி!) அதை பாரதியே கடுமையாகச் சாடி இருக்கிறான்… அதனால் அவனின்  சாவிற்கு கூட ஆட்கள் இல்லை.. அது வேறு.. அதை மீண்டும் குழப்பி கஷ்டப் படவேண்டாம்.. 🙂

    திருமூலர் யார்! நாயன்மார்களில் எத்தனை பேர் ஆரியர்கள்?… நாம் கூறும் அந்தணர்கள் ஆரியர்கள் என்றால்!!??… எம்பெருமான் ஏன் ? திராவிடனையேப் பார்த்து சைவ சித்தாந்தத்தை வளர்க்கவில்லை? அந்தணர்களை தேடினான், அப்படி என்றால்… திராவிடர்கள் லாயக்கு இல்லையா.. போதவில்லையா?… இல்லை அவர்கள் ஆரியர் இல்லையா? அவர்கள் வேத பிராமணர் இல்லை என்றால் அவர்களின் நான் மரையைப் பற்றிய எண்ணம் வாழ்வில் அவர்கள் அதை கைக்கொண்ட முனைப்பு யாது? 

    சைவம் தாம் முதன்மையானது!
    சிவனே முதன்மையானக் கடவுள்!
    அந்த சைவம் செந்- மலை – துளு- கரு- நாட்டுத் தமிழர்களின் தோற்றத்தோடு கூடிய ஒரு மதம் உலகில் தோன்றிய மிகப் பழைய மதங்களுக்கு சமமானது.. ஏன்? மூத்தது என்பதில் ஆட்சேபனை இல்லை… 

    கம்பனையும், பாரதியும்  போற்றும் நீங்கள் “ஈசனுடுக்கையில் பிறந்த இருமொழி” என்று பாரதியும் கூறுகிறானே அதனைப்  பற்றிய தங்களின் கருத்து என்ன?

    ஆரியத் திராவிட கருத்துகள் இலக்கிய வரலாற்று ரீதியாக ஆராயப் பட வேண்டும்.. அது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிப் படலத்திற்கு அப்பார்ப் பட்டு இருக்கணும்.

    திராவிட இனம் தென்னினிய இனம் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.. அதே நேரம் வட -தென். இன மொழி மோதல்களுக்கு பெரிதுப் படுத்தப்பட்ட சூழ்ச்சி என்பதைக் கற்றவர்கள் யாவரும் விருப்பு வெறுப்பு இன்றி உணர வேண்டும்.

    கீதையிலே மத நல்லிணக்கு இருக்கிறது… எந்த மதத்தை பின்பன்றுபவனும் என்னையே தொழுகிறான் என்பது..

    ஆதி சங்கரரின் அவதார நோக்கும் அதுவே… அவரையும் அந்த ஈசன் தான் படைத்தான்..!!!

    நம்ப கவிச்சக்ரவர்த்தி  கம்பன் இந்த மதச் சண்டையாலே மனிதம் பாதை மாறி போகும் அபாயத்தை நிறுத்தவே ராமாயணத்தை படைத்தான்…

    நாடவிட்டப் படலம் 24 ம் பாடல்! தாங்கள் அறியாதது அல்ல அதன் நோக்கம் என்ன?!! கம்பன் என்ன கூற வருகிறான்…

    கடைசியாக நம்மகாலத்து மகாகவி இப்படி கூறுகிறான்..

    ”சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;
    சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்;
    ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
    எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்;
    வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
    எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்;
    பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்
    பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும். 64

    ”பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
    புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம்,
    சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,
    சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்,
    நாமமுயர் சீனத்துத் ‘தாவு”மர்க்கம்,
    நல்ல ”கண் பூசி”மதம் முதலாப் பார்மேல்
    யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;
    யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே. 65

    ”பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
    பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்:
    சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;
    தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்;
    பூமியிலே நீகடவு ளில்லை யென்று
    புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
    சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்
    சதாகாலம் ‘சிவோஹ’மென்று சாதிப் பாயே!” 66

    ஆரியம் என்பது திராவிட சகோதர இனமே… இதில் முந்திய, பிந்திய உயர்ந்த, தாழ்ந்த என்ற நோக்கு இன்றி ஈருடல் ஒருயிராய் இருந்தால் இந்து மதம் இணையிலா நிலையிலே இன்று போல் என்றும் இருக்கும்…. பசு-பத்தி-பாசம் என்ற இந்த தத்துவம் உலகெலாம் பரவி மாடுடம் வெல்லும்!!!

    இரு பெரும் இனம் மொழி சார்ந்த படைப்புகள் ஈசனின் விருப்பம் அவன் ஒவ்வொருவருக்கும் தனிதனி கூறுகளை, வேலைகளைத் தந்து இருக்கிறான்…

    வழக்கு என்றால் வக்கீலிடம் மருத்துவர் செல்லனும்.. உடலுக்கு உபாதைஎன்றால் மருத்துவரிடம் வக்கீல் செல்லனும்… அது தான் இது…

    ஊழிக்குப் பிறகு மீண்டும் தோன்றிய பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் உருவமே சிவலிங்கம் என்பதை மாந்தினியியலின் முடிபும் காண்பிப்பது சைவத்தைப் போற்றும் நாம் யாவருக்கும் ஆனந்தம் கொள்வதே…

    தங்களின் கட்டுரை அருமை… அதற்காக பல சான்றுகளை முன் இருத்தி இருக்கிறீர்கள்.. 

    எனக்குத் தொக்கி நிற்கும் கேள்விகளும்.. அதோடு ஆதிசங்கரரும், கம்பனாடனும், மகாகவியும் காட்டிய பாதையில் இருந்து நழுவக் கூடுமோ என்ற அச்சமே…

    திராவிடர் என்ற இன்றைய கட்டுக் கதைகள் சூழ்ச்சிப் படலங்களை பற்றிய ஆய்வு வேறாக இருப்பதை அறிய முடிகிறது.. (திராவிட கதை உண்மையும்-புனைவும். திரு மலர்மன்னன் எழுதிய ஆய்வு நூலொன்றை சமீபத்தில் படித்தேன் அதை யாவரும் வாசிக்கவும் வேண்டுகிறேன்)

    தங்களின் படைப்பு பாராட்டுக்கு உரியது! சிவனையே சீவனில் கொண்டொழுகும் எனக்கு பெரும் மகிழ்வையும் தருகிறது. மீண்டும் தொடர்ச்சியை  வாசிக்கும் ஆவலோடு இருக்கிறேன்..

    மிக்க நன்றி! 

  2. அன்புள்ள நண்பருக்கு
    வணக்கம்
    நெடு மடல் கண்டேன்.
    எழுப்பிய வினாக்களுக்கு உரிய விடை தரும் களம் இஃது அன்று!
    கட்டுரையின் கட்டமைப்புக்கும் (scope) அப்பாற்பட்டது.
    மேலும் ‘திராவிடம்’ 18/19 ஆம் நூற்றாண்டுச் சொல்.

    “திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell),
    எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்
    (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages) என்னும் ஆங்கில நூல்
    1856 இல் வெளியிடப்பட்ட பின்னரே இச் சொல்,
    தற்காலப் பொருளுடன் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது.”
    (காண்க : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)

    என் கட்டுரையைத் தாங்கள் தொடர்ந்து படித்து வருவது மகிழ்ச்சி தருகிறது.
    தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!

    அன்புடன்
    பெஞ்சமின்

  3. வணக்கம் ஐயா!
     
    “மேலும் ‘திராவிடம்’ 18/19 ஆம் நூற்றாண்டுச் சொல்”

    தமிழகத்தில், பள்ளிகளில் கற்பிக்கப் பட்ட / பட்டு வருகிற.. வரலாறு திரித்து எழுதப் பட்டு மூளை சலவை செய்யப்பட்டவர்கள் அதிலும் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு ஏராளம் ஆகிப் போனது. இல்லாத கைபர் போலன் கற்பனைகளை அவிழ்த்து விட்டு கூத்தாகிப் போனது!!!

    நாத்திகக் கருத்துக்களை புகுத்தி அதற்கு இந்த ஆரிய திராவிட கூறுகளை கூறி உணர்ச்சி மிகுந்த தமிழனின் உணர்வுகளை தவறாக தசைத் திருப்பி… சரியாக எதையும் அறிய விடாமல் இரண்டு மூன்று தலைமுறைகள் தவறான புரிதலோடு பயணிக்கிறது. அது வருத்தம் தரும் போக்கு!

    ///எழுப்பிய வினாக்களுக்கு உரிய விடை தரும் களம் இஃது அன்று!
    கட்டுரையின் கட்டமைப்புக்கும் (scope) அப்பாற்பட்டது.///

    🙂 தங்களின் கட்டுரையை பெரிதும் போற்றுகின்றேன்.. 

    மிக்க நன்றிகள் ஐயா!

    அடுத்தப் பதிவை நோக்கி! 🙂

    அன்புடன்,
    கோ.ஆலாசியம். 

  4. தமிழக வரலாற்றின் ஆதி அந்தத்தை சமய மற்றும் அறிவியல் பின்னணியில் அலச முயலும் தங்களின் கட்டுரை அருமை.

    ஆரியம் திராவிடம் என்ற சொற்களை ஒதுக்கி வைத்து விட்டு, தமிழின் தொன்மையை, தொன்மை வரலாற்றை, தற்கால நவீன அறிவியலின் மூலம் ஆராய்ந்து சங்க காலத்திற்கும் முற்பட்ட தமிழினத்தின் உண்மை வரலாற்றை நிலைநாட்ட வேண்டும்.

    திரு.கிரகாம் ஹான்காக்(Graham Hancock) என்பவர் நடத்திய கடல் ஆய்வுகள் மூலம் பூம்புகார் நாகரிகம் 11,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதைக் காட்டியுள்ளன. பூம்புகாரை மாந்த இனத்தின் தொட்டில் என்றே அவர் கூறுகிறார். இது தொடர்பான மிக விரிவான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் ஆய்வின் முடிவுகள் மனித சமுதாயத்திற்கு நிச்சயம் பயனுள்ள புதிய தகவல்களை வழங்கும் என்பது திண்ணம்.

    நிற்க,

    மேலும் இறைவன் என்றால் யார்? இறைவனைத் தமிழன் எவ்வாறு படைத்தான், அவனது அகன்ற ஆழ்ந்த வானியல் ஆராய்ச்சி அறிவின் வெளிப்பாடே இறைவனைக் குறியீடாகக் காட்டும் முயற்சி. அந்த வானியல் குறியீடுகளே இந்திரன், திருமால், முருகன், சிவன் போன்ற தெய்வங்கள் என்பதை “சக்கரவாளக்கோட்டம்” என்னும் நூலில் அதன் ஆசிரியர் திரு.குணா அவர்கள் மிக அழகாக நாத்திகர்களும் ஏற்றுக் கொள்ளும் விளக்கத்தை பல ஆதாரங்களுடன் அளித்துள்ளார். இது மிக ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

    தங்களது கட்டுரையைத் தொடர்ந்து படிக்கக் காத்திருக்கிறேன். நன்றி!

  5. அன்புள்ள நண்பர் ஆலாசியம். அவர்களுக்கு
    வணக்கமம்!
    நன்றி நண்பரே!
    தங்கள் ஆர்வத்தைப் போற்றுகிறேன்.!

    அன்புடன்
    பெஞ்சமின்

  6. அன்புள்ள நண்பர் சச்சிதானந்தம் அவர்களுக்கு
    வணக்கம் !

    தங்கள் பாராட்டுக்கும் தகவல்களுக்கும் மிக்க நன்றி.
    அன்புடன்
    பெஞ்சமின்

  7. ஐயா

    நீங்கள் தொல்லியல், அகழ்வாய்வு, சரித்திர நிபுணர்கள் கூராதவற்றை உண்மை போல் சாதித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.

    ஹரப்பா-மொஹஞ்சதரோ என்ன இனத்தவரின் அல்லது இனங்களின் நாகரிகம் என யாருக்கும் தெரியாது. ஏனெனில் அதன் மொழி எது என யாருக்கும் தெரியாது. அதன் ஒரு எழுத்தும் கூட இதுவரை திட்டவட்டமாக யாராலேயும் சொல்ல முடியவில்லை .
    ஹ-மொ வில் சிவ வழிபாடு இருந்தது என சாதிப்பது சாதனைதான், ஆய்வாளர்களின் பொது இசைவோ புரிதலோ இல்லாதது. நமக்கு தெரியாதவற்றை அது இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என யூகித்துக் கொண்டு இருக்கலாம். அது உண்மை ஆகாது.

    அதே போல் தான் உங்கள் மற்றொரு ஆதாரமற்ற சாதனை காலத்தால் முந்தியது சைவ சமயமே எனக் கண்டோம் என்பது. இதற்கு ஆதாரமாக மாந்தனியல் என்னும் அறிவியல் வழியாகவும் வரலாற்றுப் படியும் உண்மை இதுவென நிறுவப்பட்டுள்ளது. உங்கள் யூகங்களையும் சாதனைகளையும் உண்மை என மற்றவர்கள் ஏற்க வேண்டும் என எதிர்ப்பாராதீர்கள். உங்கள் எழுத்து புறவயமானது அல்ல. வெறும் சாதனைகள்தான். அத திருப்பி திருப்பி வேறு வடிவங்களில் சொல்கிறீர்கள்.

    ஜான் மார்ஷல் ஹ-மொவை பெரிதளவில் தோண்டியவர், ஆனால் அவருடைய தியரிகளை எப்போதோ நிராகரித்து விடாச்சு. நீங்கள் தற்கால ஆய்வாளர்களை விட்டு, ஜான் மார்ஷல், சாஸ்த்ரி போன்ற 80 வருட கருத்தாளர்களை நம்புகிறீர்கள் என தெரியவில்லை

    தமிழ்நாட்டில் சைவத்தின் காலம் பற்றி டாக்டர் பத்மாவதி எழுதுயுள்ளர். அவற்றை மிந்தமிழ் கூகிள் குழுவில் படிக்கலாம்

    சைவத்தின் தோற்றம் – டாக்டர்.பத்மாவதி (தமிழ்நாடு தொல்லியல் துறை)

    https://groups.google.com/forum/?hl=en#!topic/mintamil/_7nP-rJQxl0

    வன்பாக்கம் விஜயராகவன்

  8. அன்புடையீர்!
    வணக்கம்!

    தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    என்றன் கருத்துகளை, எழுத்துகளை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்
    என்னும் எதிர்பார்ப்பு என்னிடம் என்றும் இல்லை.

    தள்ளுவதும் கொள்ளுவதும்; அவரவர் வெறுப்பு விருப்பே!

    அன்படன்
    பெஞ்சமின்.

  9. வணக்கம் பெஞ்சமின் ஐயா

    நான் சொன்னது என் வெறுப்பு விருப்பு இல்லை. நான் சமயம், தொல்லிய்ல், அகழ்வாய்வு, போன்றவற்றில் பல காலம் களத்தில் ஏடுபட்டுள்ள ஆய்வாலர்கள் கருத்தை கூர்ந்து கவனிப்பவன். இதில் நிபுணர்கள் காலப்போக்கில் கருத்து மாறுபடலாம். ஆனால் இதில் நிபுணர்களின் கருத்துக்கு முன்னுரிமை தர வேண்டும் என நினைக்கிறேன். ஹ-மொவை பொருத்தவரை மக்கள் இனம், சமயம், கலாசாரம் , மொழி ஆகியவை தெளிபடவில்லை. எதிர்காலத்தில் தெளிவாகலாம், அல்லது புதிராகவே இருக்கலாம்.

    உங்கள் பதிலுக்கு நன்றி.

    வகொவி

  10. //- H.R Hoyzington,the founder of church of South India ( CSI) : “சைவ சித்தாந்தத்தில் காணப்படும் மெய்யியல் உண்மைகள் கிரேக்க மெய்யியலிலோ இலத்தீன் மெய்யியலிலோ காண முடியாதவை.” //

    In 1919.H.R Hoyzington, the founder of church of South India, who has already mastered six languages, came to India from America. After learning Sanskrit and Tamil,he made the first English translation of Sivagnana Botham after studying Saiva Siddhantam. His conclusion was, the doctrine and philosophical truth in Saiva Siddhantam can never be found in any Greek or Latin philosophy and made it compulsory for every Christian priest around the world to master this great work of Meykandar.

  11. Dear Mr Siva Arivolian
    Thanks for your quote.
    What you have quoted is 100% true.
    Regards
    Yours
    Benjamin LE BEAU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.