சிலம்பு காட்டும் தமிழகத்தில் வேதமதம் – ஒரு சிறு அலசல்
புவனேஷ்வர்
திருமதி. மேகலா அவர்களின் உரையில் (https://www.vallamai.com/?p=38420&cpage=1#comment-8775) அவர் சொன்ன வரி அடியேன் கவனத்தை ஈர்த்தது.
//ஒரு சாதாரணப் புலவர் அரசனையே கண்டிக்கின்றார் என்றால்….//
சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிலம்பில் இதற்கு ஒரு மிக அழகிய உவமையை இளங்கோ சொல்வார்.
ஆட்சிக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிய பின்னும் செங்குட்டுவன் மறக்கள வேள்விகள் (போர்) செய்வதை விட்டு விட்டு அறக்கள வேள்விகளைச் செய்ய வேண்டும் என மாடல மறையோன் அறிவுரை சொல்கிறான்.
அதனை
“மறையோன் மறைநா உழுது வான்பொருள்
இறையோன் செவிசெறு வாக வித்தலின்
வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன்
நான்மறை மரபின் நயம்தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி”
என்கிறார். அதாவது: “மாடல மறையோன் விதைத்த விதையாகிய பெரும்பொருள் விளைவாகிய உணவினை மிகுதியாகத் தந்தது. அதன் பயனை நுகர விரும்பினான் வீரக் கழல் அணிந்த சேர வேந்தன். நான்கு வேதங்களையும் குறைவற ஓதி, பொருள் உணர்ந்த, உச்சரிப்புப் பிழை அறவே நீங்கிய நாவினை உடைய அந்தணர்களை, மாடல மறையோன் கூறிய வண்ணம் வேள்வியினைச் செய்ய ஏவினான்” என்று பொருள்.
இதில் இருந்து சில விஷயங்கள் தெரிகின்றன.
- புலவர்கள், அந்தணர்கள், சான்றோர் வாக்குக்கு மரியாதை தந்தார்கள் அரசர்கள்.
- இன்றைக்கு தென் மாவட்டங்களில் ஒரே குடும்பத்தில் கிறிஸ்தவரும் ஹிந்துக்களும் இருப்பது போல, அந்நாளிலும் ஒரே குடும்பத்தில் சமணரும் வேத மதத்தைப் பின்பற்றுபவரும் இருந்தனர். (சேரனின் உடன்பிறந்தவர் இளங்கோ, அவர் சமணர், துறவி).
- அந்த காலத்தில் தமிழகத்தில் ஐயத்திற்கு இடமின்றி வேத பாராயணம் இருந்தது. நான்கு மறைகளை ஓதிய அந்தணர் என்கிறார். நயம் தெரி நா – வேதத்துக்கு முக்கியம் உச்சரிப்பு. அந்த நயம் அறிந்து பிழை அற்ற உச்சரிப்பை உடைய நா முக்கியம்.
சமணரான இளங்கோவே இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? சமணர்கள் சத்திய வாக்குடைய விரதம் பூண்டவர்கள். சொன்ன சொல் காப்பவர்கள். அந்த வாய்மையை தலையாயதாகக் கொண்டே, தனது மதத்துக்கு நேர் விரோதமான வேத மதத்தையும், அதன் வரவளையும் வழக்குகளையும் மூடி மறைக்காமல் உள்ளது உள்ள படி, இருந்த விதத்தை சொல்கிறார் இளங்கோ.
இங்கே மட்டுமல்ல, பல கட்டங்களில் இது வரும். மதுரைக் காண்டத்தில் “அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்” மற்றும் “நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவர் ஓதி மலிந்த ஓதையும்” எனும் வரிகள், காலையில் மதுரை மக்களை வேத கோஷம் எழுப்பியது என்று காட்டுகிறது. ஆகுதி என்றால் வேள்வியில் சொரியும் ஹவிஸ் – நெய். இது வேத வழக்கம்.
அது மட்டுமல்ல.
மகுரைக் காண்டத்தில், கட்டுரைக் காதையில் சோழதேசத்தில் வாழ்ந்த பராசரன் என்னும் வேதப் பிராம்மணன் கதையும் வருகிறது.
“பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்
தாங்கா விளையுள் நன்னா டதனுள்
வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க
நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்
பாசிலை பொதுளிய போதி மன்றத்துத்
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த்
தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி
விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக்
குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச்
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்
ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்
பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த்
தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது
உளமலி உவகையோ டொப்ப வோதத்
தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து
முத்தப் பூணூல் அத்தகு புனைகலம்
கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத்
தன்பதிப் பெயர்ந்தனன்”
அறநெறியிலே செல்லும் செங்கோலையும் வீர நெறியிலே செல்லும் வாளையும் உடையவனாக, அடைக்கலம் என வந்த புறாவின் பொருட்டு துலாக் கோலிலே புகுந்தவனான சிபியும், ஒரு பசுவுக்காகத் தனது அருந்தவப் புதல்வனையே தெரிந்து வலிய காலிலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் ஆண்ட, நீர்வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த புகார் நகரத்தை உடைய சோழ நாட்டில், அறிவில் வல்ல பராசரன் என்னும் ஒரு அந்தணன் இருந்தான்.
அவன், பாரதப் போரில் இருதிறத்துப் படைகளுக்கும் ஒருசேர மிகுதியாகச் சோறு வழங்கிய உதியன் சேரலாதனின் வள்ளன்மையை கேள்வியுற்று அவன் சபையில் நடந்த சதஸிலே கலந்து கொண்டான்.
அங்கு,
“ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பும்
அறுதொழி லந்தணர்”
என அந்தணர்களுக்கு வகுக்கப்பட்டபடி, வாதத்தில், அத்வைதத்தில் ஊறிய கொள்கையை உடைய பிற அந்தணர்களை வென்று பார்ப்பன வாகை சூடி, அரசனளித்த பரிசுகளாகிய நன்கலங் கொண்டு தனது ஊருக்குத் திரும்பினான். கஹோளர் மகன் அஷ்டாவக்கிரன் vs வந்தி (வருணகுமாரன்) சரித்திரம் மகாபாரதத்தில் காண்க.
செங்கோற் தென்னன் ஆட்சிக்குட்பட்ட திருந்து தொழில்மறையவர் வாழும் திருத்தங்கலூர்என்னும் ஊரில், ஊர்ப்பொதுவில் இருந்த அரசமரத்து மேடையில் களைப்பாறி யிருந்தான். தன்னுடைய,
“தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்,
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்து”
மூவேந்தர்களையும் வாழ்த்தி இருந்தனன். அந்தணர்களுக்கு எந்த நாடும் அவர் நாடே. இது பாரத தர்மம். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறார்கள் அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர். அக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்த பராசரன், என்னோடு சேர்ந்து உச்சரிப்பு மாறாது வேதம் ஓதினால், இப்பரிசுப் பொருள்கள் அனைத்தையும் பெரிவீர்கள்” எனஅன்புடன் அழைத்தான்.
அப்பொழுது, வார்த்திகன் எனும் அந்தணனின் புதல்வன், ‘ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்’ (ஆலமர்செல்வன் பெயர் – தக்ஷிணாமூர்த்தி) மழலை மாறாத குழந்தையாயினும் பராசரன் சொன்ன மறைகளைச் சந்தம் பிழையாது கூறினான் மறைவிளி வழாஅ) அதனால் மகிழ்ந்த பராசரன் அவனை மிகவும் பாராட்டித் தன்னிடம் இருந்த பரிசுப்பொருள்களை ஈந்து தன் வழி சென்றான்.
பராசரன் என்னும் பெயர் இன்றும் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே வழங்கி வருகின்றது. அந்தணர்களின் கோத்திரப் பெயர்களில் ஒன்றாகவும் வழங்கி வருகின்றது. மறையவர்கள் அத்வைதம் என்னும் கொள்கையராகையால், ‘ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்’ என்றார். ஆஹவனீயம், கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி எனும் முத்தீயோம்பும்அந்தணரை முத்தீ அந்தணர் எனபது வழக்கு. ஐந்து வேள்விகளை செய்பவர் ஐந்தி ஒம்புபவர்.
அரசனிடம் தானம் வாங்கியதும் பிராமணன் சத்பாத்ரங்களுக்கு அதை தானமாக கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் பரிக்ரஹ தோஷம் (ஆசைப்பட்டு தானம் வாங்கிய தோஷம்) நீங்கும். அதை பராசரன் செய்தான்.
இது வேத வழக்கம்.
அறுதொழிலோர்: வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல் ஆகிய ஆறு தொழில்களைச் செய்தது வேத அந்தணர்கள்.
ஒரு சமணத் துறவியே, வேத வழக்கம் தமிழகத்தில் வேரூன்றி இருந்ததை நடுவு நிலையோடு சொல்கிறார். அவர் பிராம்மணன் ஆனால் கூட ஏதோ இட்டுக் கட்டி சொல்கிறான் பார்ப்பான் என்று வையலாம். தனக்கு ஆகாத மதமான வேத மதத்தை இவர் ஏன் இருந்ததாகச் சொல்ல வேண்டும்? தமிழ் நாகரிகத்தில் வேதத்துக்கு இடமில்லாததாக சொல்லும் மக்கள் இதை எல்லாம் கவனிப்பார்களா?
படங்களுக்கு நன்றி:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Puhar-ILango.jpg
http://susenthilkumaran.blogspot.com/2010/11/blog-post.html