Tag: பொன். இராம்

  • தமிழக அன்னைக்குத் தாலாட்டு

    jj

    பொன். இராம்

    தாலாட்ட தாயிருந்தும்

    தங்கமே தாயின் அரவணைப்பு சுகம்

    வேலைப்பளுவால் அறிந்ததில்லை!

    தோள் கொடுக்க தந்தையில்லை

    தோள்மீது சாய்ந்து ஆதரிக்க

    ஆதரவில்லை!

    தரணியில் திரையுலகம் காட்டிய

    கண்ணாடி மாளிகையில்

    தங்கவிக்ரமாய் மலர்ந்தருளிய

    தங்கவிளக்கே!

    அரசியல் சாக்கடை

    அநாகரிக விலங்குகளின்

    மத்தியில் ஏன் வந்துதித்தாய்

    பெண் சிங்கமே!

    ஆயகலைகள் கற்றுணர்ந்த

    உனக்கேன் சிறுமதிக்கூட்டங்களை

    கட்டியாளும் வேலை!

    போனதென்னவோ உனதுயிர்தான்

    என்றாலும் தங்கமகள்

    இருந்திருந்தால் தமிழ்நாட்டிற்கு

    குறைவுமுளதோ!

    யாருக்காக நீ சேர்த்த

     தங்கப்புதையல்

    செல்வமகளே!

    புவிமகளை நீ முத்தமிட

    தங்கக் கருவறை அனைத்தும்

    யாருக்காக தங்கம்மா!

    கடலலை தாலாட்ட

    சிலுசிலுக்கும் குளிர்காற்று

    மட்டுமே உனக்கு

    சொந்தமாக வேண்டும் என்றே

    ஆணையிட்டிருந்தால்

    நிலக்கோட்டைகள் எல்லாம் எதற்காக

    அம்மா?

    தாய்க்கு இறுதிக் கடன் செலுத்த

    முடி துறக்க மறுக்கும்

    இவ்வுலகில் முடி துறந்த ஏழை நலம்

    காக்க உண்மையான அரசியல்

    தொண்டன் யாரென்றே

    உரைத்திட்டுச் சென்றிருந்தால்

    தரணி உன்னை வாழ்த்தியிருக்கும்!

    தாலாட்ட கடற்கரைத்தாய்

    அருகிலிருக்க ஆறடி

    சந்தன வாசனையில்

    இப்போதாவது நிம்மதியாக

    கண்ணுறங்குவாயா பெண்குலத்

    தமிழகத் தாயே!

    Share
  • கீழாநெல்லியின் மடல்

    –பொன். இராம்

    மனம் தெளிவுபட
    மருந்துக் கவிதையானாய்!
    பாழ்பட்ட திரையுலகைப்
    பண்படுத்த வேரானாய்!
    என்னை மட்டும்
    ஏன் பயன்படுத்த
    மறந்தாய் மானிடனே?

    சிற்பி வடித்த சிலைகளாய்
    மனித உள்ளங்களைச்
    சீர்திருத்திய நீ
    உடல்நலம் காக்க
    என்னை மட்டும்
    ஏன் மறந்தாய்?

    முத்தான கவிதைகளை
    முத்துக்குமரனாய்
    முருகவேள் தந்த
    தமிழை வளர்த்த
    உன் புகழைத்
    தீந்தமிழ்க்
    கவிதை நெஞ்சங்கள்
    என்றும் பாடும்!

    பணம் தர மறுத்த
    வெற்று உயிர்க் காசோலைகள்
    அல்ல நாங்கள்!
    அடுத்த பிறவி
    அருமையாய் உனக்கு
    அமைந்திட்டால்
    நல்ல உள்ளங்களுக்கு
    மட்டுமே பா வடிக்க
    வேண்டுகிறேன்!

    சும்மா வரவில்லை சுதந்திரம்
    என்பதுபோல
    சும்மா வராது
    தமிழ்க்கவிதை என்றே
    விதி வகுக்க வருவாயா!
    மூலிகைச் செடியான
    என் பெருமையும்
    அடுத்த பிறவியில்
    நீ பாட
    குறுஞ்செடியின்
    தாழ்மையான விண்ணப்பம்!

    என்னை வளர்க்கத்
    தண்ணீரும் பரிதி தயவும்
    போதுமே!
    உயிர் மருந்தாய்
    உச்சந்தொட்ட
    பாவினைக் காணக்
    கண்ணீருடன் காத்திருக்கும்
    கீழாநெல்லி மூலிகை!!

     

     

    Share
  • புத்தகத்தின் கண்ணீர் தேடல்

     

    பொன். இராம்

     

    அங்காடித் தெருவில்

    அங்குலமாய் என்னை

    அணைக்க விழிக்கதவின்

    உப்புநீர் மட்டுமே

    உன்னிடம் இருந்ததை

     நான் அறிந்தேன்!

    பாதம் நோக

    காத தூரம்

    நீ நடக்க

    கல்விச்சோலையாய்

    என் உறவுகளின்

    நூலக அணிவகுப்பு

    நூலகத்தில் கறையான்கள்

    மட்டுமே குடியிருக்க

    உரமாய் நானிருக்க

    உன்னுள் அறிவுமல்லிகையாய்

    நான் மலர்ந்தேன்!

    நெருஞ்சி முள்ளாய்

    உறவுகள் உரச

    உப்புநீரால் என்

    தேகத்திற்கு

    அன்றுதான் குளியல்!

    கண்ணிமை ஈரம்

    துடைக்க நானே

    அறிவு மருந்தானேன்!

    பல்லாண்டு கடந்தாலும்

    தொலைந்து போன

     மதலைமுகம்

     தேடி அலைகின்றேன்!

    பட்டம் பல பெற்று

    வரதட்சணை வீதியில்

     தொலைந்தாயோ?

    மாதந்தோறும்

     வரதட்சணை அமுதசுரபியாய்

    மாறினாயோ?

    காலச்சக்கரத் தேரோட்டத்தில்

    தும்பைப்பூ தேகம்

    துகளாய் மாறி

    உதிர்ந்து விடும்

    வேதனையில் நான்!

    அறிவுத் தேடலை

    அகண்டமாக்கிய

    இனிய உறவே!

    என்னை அழிவில்லாமல்

    செய்திட வருவாயோ?


    —————————————————————————————————————————————————————-

     

     

     

    Share
  • மகளின் அன்பு மடல்

     

    பொன் ராம்


    நான் உறங்க

    நீ விசிற

    நீ உறங்க

    நான் விசிற

    ஏன் மறுத்தாய்?

    உன்னால் இன்று

    உலகறிந்த அவைதனில்

    தூண்டி விட்ட

    பிரகாச விளக்காய்

    சுடர் விட்டு

    ஜொலிக்கின்றேன்!

    பெருமை கொண்டு நோக்க

    யாருமில்லை என்னருகில்!

    யாருக்காக இந்த வாழ்க்கை

    என பலமுறை

    உப்பு நீர் தலையணை

    உறவுகளிடம்

    உரைத்திங்கு

    வாழ்கின்றேன்!

    அறுசுவையும் தட்டிலிட

    அன்னையின் முகமோ அதிலாட

    சாப்பிட்டால் என்னருகில் நீ!

    கனவினில் வாழ்கின்றேன்!

    சிதறிய கண்ணாடித் துகளாய்

    சிரிக்கின்றேன்!

    மிதந்த பந்தாய்

    பெற்றவனின் பாசக்

    கணைகளுக்குள்

    கட்டுண்டு கிடக்கின்றேன்!

    கனவில் வந்துதித்த

    பயன் கருதா அட்சய பாத்திரமே!

    நிலவு முகம் காட்ட மறந்தனையோ!

    எத்தனை பிறவி வாழ்ந்தாலும்

    உனது மகளாய்ப் பிறக்க

    இறைவனிடம் வரம் கேட்க

    கவிதைச் சிறகுகளுடன்

    பறக்கத் துடிக்கும்  மகளின்

    தமிழ் விடு தூது.

     

     

    Share
  • கல்யாணப் புடவை

     

    -பொன். இராம்

    “என்னங்க?. . . கோவிந்தனைப் பார்த்தீங்களா? நம்ப பொண்ணு கலாவுக்கு ஒரு புடவை வாங்கணும்னு தேடிக்கிட்டிருக்கேன்”

    “யாரு?. . . அந்த பழைய சைக்கிள்ல துணியால மூட்டை கட்டித் தெருத் தெருவா வித்துட்டு வருவாரே அவரா?”

    “ஆமாங்க! அவரைத்தான் தேடுறேன்”

    சும்மா   செல்ல கைல வைச்சுக்கிட்டு—–எப்பப் பாத்தாலும் பிரஸ் பண்ணிக்கிட்டு….

    காலேஜ் பசங்க மாதிரி காதுல வேற  செருகியாச்சு……

    பிடுங்கி அதை எறிந்தாள் நந்தினி.

    நந்து….உனக்கு விஷயமே புரிய மாட்டேங்குதே…கரெண்ட் டேட் சயின்ஸ் விஷயமெல்லாம் தெரிஞ்சுடணும். இல்லேன்னா வேலை பாக்கற இடத்துல குப்பை கொட்ட முடியாது.

    அதுக்காக கண்ணுல கண்ணாடி வேற—– வெள்ளெழுத்து ஆரம்பிச்சு வருஷக்கணக்கா ஆகுது.

    இந்த  செல் கண்டுபிடிச்சவன் நம்பரெல்லாம் கொஞ்சம் பெரிசா வைக்கப்படாதா? எனக்கொரு டவுட்.

    ‘ பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா ‘ ன்னார் பாரதியார்.

    ”பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே”ன்னும் அவர்தானே பாடியிருக்கார். இதுக்கு என்ன பொருள்?

    ரெண்டும் ஒரே ஆளாயிருந்தாலும் அவர் எந்த நேரத்துல பாடினாரோ? கவி தன் கற்பனைச் சிறகை எப்போது சிறகடிக்குமோ? யாருக்குத் தெரியும்?

    சரி! என்னவோ கேட்டியே!

    பேச்சை மாத்தாதீங்க……விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னாங்களாம்!

    புடவைக் கடை கோவிந்தனைக் கேட்டேன்……

    “இல்லையே! நான் அவரைப் பாத்துக் குறைஞ்சது மூணு மாசமாவது இருக்கும். அவர் வீடு எங்கன்னு தெரியுமா?”

    “எனக்குத் தெரியாது. அடுத்த தெரு அம்புஜம் மாமிக்குத் தெரியும். கேட்டுச் சொல்றேன்”

    “ஊரிலே எவ்வளவோ ஜவுளிக்கடையெல்லாம் இருக்கும் போது ஏன் கோவிந்தனைத் தேடிக்கிட்டிருக்கே?”

    “ரங்கநாதன் தெருவில போனா ஆயிரம் கடை இருக்குறது எனக்கும் தெரியும். கோவிந்தன் ஒரு ராசியான ஆள். அவர் கையால ஒரு நூல் புடவை வாங்கினா கூட வாங்கினவங்க வீட்லயும், வாங்கினவங்களுக்கும் நல்லது நடக்கும்.இது உங்களுக்குத் தெரியாதா?

    ஏன் நம்ம மூத்த  பொண்ணு லதாவுக்கு அவர்கிட்ட புடவை வாங்கினதக்கப்புறம் தானே மாப்பிள்ளையே அமைஞ்சது. அதை மறந்துட்டீங்களா?”ஆனாலும் கார்த்திகை நட்சத்திர மாப்பிள்ளை தானே கிடைச்சது..

    ஏன் அதுக்கென்ன….இந்த பொம்பளைங்களே இப்படித்தான்….அமையற வரைக்கும் அப்படி…இப்படின்னு சொல்ல வேண்டியது……..அதுக்கப்புறம் ஏமாத்தி செஞ்சுட்டாங்கன்னு ஒரே குறை பாட வேண்டியது. பொண்ணப் பாத்துட்டு ஜாதகம் பாக்கறது, மாசக்கணக்குல வாழ்ந்துட்டு ஜாதகம் பாக்கறது இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

    ஆமா…. கார்த்திகை நட்சத்திரத்துக்காரங்ககிட்ட கல்மிஷம் இருக்கும். கண்மூடித்தனமா சொந்தங்ககிட்ட பாசம் இருக்கும். ஆனா வெளியே ஒண்ணு உள்ளே ஒண்ணா இருக்கும். அடுத்தவங்க அந்தரங்கம்னு தெரியும்.இருந்தும் மத்தவங்க கிட்ட சொல்றதுன்னா முதல் ஆளுதான். இது சரி தப்புன்னு ஒரு வயசுக்கு மேல தான் அவங்களால உணர முடியும். தன்னை வெளிப்படுத்திக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க……”அறை பறையன்ன கயவர்”னு தெரியுமா?

    உன் ஜாதகம் பாக்கற புத்திய விட மாட்டியா? பொண்ணு கலியாணம் முடிஞ்சு ஒரு புள்ளையும் பெத்து அது அஞ்சு படிக்குது. இப்ப போய் விதைச்ச நெல்லை பிடுங்கிப் பாத்த மாதிரி……………திரும்பப் புது அத்தியாயமா எழுத முடியும்?பொண்ணு ஒங்கிட்ட வந்து குறை படிச்சாளா?சும்மா பிலாக்கணம் படிக்காதே.

    ஜோதிடம்  ஒரு சயின்ஸ் அது எல்லாருக்கும் பாக்க அமையாது. அதுக்கு முக ராசி வேணும். ………..அப்படியென்று இழுத்தார். சொன்னா கோபிச்சுக்கக் கூடாது.பெண்கள் ஜாதகம் பார்ப்பது வீட்டுக்கு நல்லது கிடையாது. சொன்னா நீ திட்டுவ….ஆனாலும் நீ சொன்னது கரிநாக்கு போல டாண்ணு தான் நடந்துக்கிட்டு இருக்கு….இருந்தும் உன்னைப் பாராட்ட மாட்டேனே…..என்று சிரித்தார் ராம் அர்த்தத்துடன்.

    முப்பது வருடமாக என்னைக்கு நீங்க என்னை பாராட்டியிருக்கீங்க………………. விட்டா பெண் படிக்கக்கூடாதுன்னு சொல்வீங்களா?

    சிரித்தபடி முகத்தை மலர்த்தினாள் நந்தினி. அவர்களுக்குள் மலர்ந்த தாம்பத்தியத்தின் சுவை அவள் பேச்சில் இனித்தது. அவள் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கணவன் சொல்லும் வாயசைவிற்காகக் காத்திருந்தாள். .இல்லடா! பெண்கள் படிக்கணும். தன்னை,தன்னைச் சார்ந்து வாழும் சமூகம் இவற்றிற்குத் தொண்டு செய்து வாழணும். நேர்மையான முறையில. அதுக்குத்தான் உன் அறிவை விருத்தி செய்வதை நான் இவ்வளவு வருஷம் ஆகியும்  தடுக்கல. ஆனா…….  நந்து……………..நட்சத்திரம் பாத்திருக்கியா…………அதைச்சுத்தி இருக்கிற எல்லாவற்றையும் எனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா? எல்லாவற்றையும் தெரிந்தவர்கள்தாம்மா சரியா வாழ்க்கையைச் சொல்ல முடியும்.

    வெட்டித்தனமா சில பேர் கிடைச்ச சுவடிய வைச்சிக்கிட்டு வயித்தைக் கழுவ உட்கார்ந்து பொழுதைக் கழிக்குதுங்க. ஹூம்…நான் என்ன சொன்னாலும் மாறவா போற….சொல்ல வந்ததைத் தெளிவா சொல்லு…

    “ஆமா! அத நானும் மறந்துட்டேன். “இப்ப கலாவுக்கும் மாப்பிள்ளை தேடிட்டிருக்கோம். எதுவும் அமையல. அதான் கோவிந்தன் கையால ஒரு புடவை வாங்கலாம்னு. . .”நீ கூட பர்ப்பில் கலர்ல லதா கலருக்கேத்த மாதிரி எடுத்த. நான் கூட ஏன் லைட் கலர்ல எடுத்தேன்னு கேட்டேன்”அந்தக் கதை தானே…….

    அதே தாங்க………..

    அவனவன் இருக்கற தகப்பனைச் செத்ததாச் சொல்லி பிள்ளையை பத்து மணிக்கு மேல ஓட விடுறானுங்க……தவிக்க விடுறானுங்க……….இந்த காலத்துல போய் நீ ……….

    என்ன சொல்றீங்க….ஒண்ணுமே புரியலையே……..

    ஜாதகம், சுவடின்னு ….. ஒரு பழைய கதை அம்புலிமாமா கதை மாதிரி இருந்தது. எதுல படிச்சோம்னு கவனமில்லை. நீ ஏதோ சந்தேகம்னு கேட்டாயே? மறுபிறப்பு பத்தி….அதைப்பத்தி நெட்ல தேடினேன். ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொல்றாங்க….  என்ன இருமற.. ஹாஸ்பிடல் போகலையா……..

    போகணும்….ஆனா மருந்துக்கு ஆயிரத்துக்கு மேல செலவாகும்….சேல எடுத்துடலாம் அதுக்கு.. உடம்புக்கு வந்தா செத்தா போய்டுவோம் இந்த காலத்துல……

    உன் ஆசைய ஏன் கெடுக்கணும்? இந்தப் பொண்ணுக்குப் பரணி நட்சத்திர மாப்பிள்ளையைப் பாப்பமா? கோவிந்தன் அட்ரஸைக் கொடு. நான் போய்ப் பாத்து வர்றேன்” உன் நம்பிக்கையைப் போய்க் கெடுப்பானேன்! பரணி தரணி ஆளுமில்லையா?

    நந்தினி அம்புஜம் மாமியிடம் அட்ரஸைக் கேட்டு வாங்கிக் கொடுத்து விட்டாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணி வாக்கில்  டிவிஎஸ் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சாலிகிராமம் கிளம்பி விட்ட ராமை உள்மனம் ஏதோ எச்சரித்தது. அதை வெளிக்காட்டாமல் சாலிகிராமத்தை அடைந்தார் ராம்.

    “சாலிகிராமம், தசரதபுரம் 3வது தெரு, 10ம் நம்பர் வீடு இது தானே?”

    “ஆமாம்! நீங்க யாரு? எங்கேயிருந்து வர்றீங்க?” என்றபடி வந்தாள் வெள்ளைப்புடவை உடுத்திய பெண் .

    “என் பேர் ராம். திருவல்லிக்கேணியிலிருந்து வர்றேன். இங்க கோவிந்தன்னு புடவை விக்கறவர் இருந்தாரே!

    “ஆமாங்க!”

    “அவரைப் பாக்கலாம்னு தான் வந்தேன். அவர் இல்லையா?”

    பெண்ணை உற்றுப்பார்க்கும் பழக்கம் ராமிடம் இல்லையென்றாலும் அவள் கண்களில் தெரிந்த ஒளி அவரை என்னவோ செய்தது.

    நீங்க என்ன விஷயமா வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    “உங்க வீட்டுக்காரர் கிட்ட ஒரு புடவை எடுத்த ராசி என் மூத்த பொண்ணுக்கு கல்யாண யோகம் கூடி வந்த மாதிரி என் இளைய பொண்ணுக்கும் ஒரு புடவை அவர் கையால எடுத்து கட்டலாம்னு நினைச்சி வந்தேம்மா!”

    கொஞ்சம் உள்ளே வரீங்களா?

    உட்காருங்க! நீங்க வந்தது சரியான வீடுதான்.

    கொஞ்சம் இருங்க!  புடவையை எடுத்துட்டு வரேன். அவர் நாலு மூட்டை புடவை வாங்கினது கிடக்கு……

    அவள் உள்ளே சென்ற நொடியில் ராமின் மனம் யோசித்தது. இவள் கோவிந்தனுக்கு என்ன உறவு! வெள்ளைப்புடவை வேறு……..என யோசித்தபடி அருகிலிருந்த புத்தக அலமாரியை உற்று நோக்கினார் ராம். பகவத் கீதை தொடங்கி அபிராமி அந்தாதி, ராமகிருஷ்ணர்,சாரதாதேவி, அரவிந்தர் என ஒருவர் விடாமல் இடம்பெற்றிருந்த அந்த இடத்தை விட்டு கண்கள் ஏனோ அகல மறுத்தன.

    ராம் பார்ப்பதைப் புடவை மூட்டையுடன் வந்த அந்தப் பெண் வெங்கலமணிகள் இணைந்த சப்தம்போல் சிரித்தாள். இவையெல்லாம் அவர் படித்தவை.என் பெண்……. எனக்கூறியவள்….கோவில் மணி எங்கோ ஒலிப்பதைக் கூர்ந்து கவனித்தாள்.

    நீங்கள் இந்தப் புடவை மூட்டையில் உங்களுக்குப் பிடித்ததை எடுங்கள். இதோ வருகிறேன் எனக் கூறியபடி விர்ரெனப் பறந்து சென்றதைப்போல ராமிற்குத் தோன்றியது.

    வெளியே நிறைய பேர் பேச்சுக்குரல் கேட்கவே,இலேசாக எட்டிப் பார்த்தார் ராம்.

    வெளியே புழுதி பறக்க கையில் பூஜைத்தட்டுடன் ஒரு ஊரே கூடியிருந்தது.

    ஐயா யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

    நான் ராம். கோவிந்திடம்  என் பெண்ணுக்கு கல்யாணம் செ்யவதற்காகப் புடவை வாங்க வந்தேன்.

    இதைக் கேட்ட மறுநிமிடம் மஞ்சள் புடவை உடுத்தியிருந்தவள்  புடவைத் தலைப்பால் வாயை மூடி அழத் தொடங்கி விட்டார்.

    “ஏம்மா அழுவுறீங்க? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா?”

    இல்லப்பா! ஊருக்கெல்லாம் கல்யாணம் செய்யப் புடவை வித்தவரு தம்பொண்ணு ஓடிப்போனதால பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்து வச்ச புடவையில நாண்டுக்கிட்டாங்க புருசன் பொண்டாட்டி  ரெண்டு பேரும்.

    செத்து ஒரு மாதத்துக்கும் மேல ஆவுது. அவுங்க தொழிலை இங்க செய்யறதாகவும், அடிக்கடி வெங்கலமணிக்குரல் சிரிக்கறதா சொன்னாங்க எல்லாரும். அதான் பூசாரி கிட்ட சொல்லி பூஜை செஞ்சு தாயத்து வீட்டுல கட்லாம்னுட்டு வந்தோம்.

    அது என்ன உங்க கைல….. இது கோவிந்து தம் பொண்ணுக்காக எடுத்து வைச்ச புடவையாச்சே…அது உத்தரத்துல பாதியால்ல தொங்குச்சு…

    இதுதானே அவுங்க ரெண்டு பேர் உயிரையும் எடுத்தது.

    சொன்னது தான் தாமதம் டிவிஎஸ்ஸை மறந்து புடவையைத் தூக்கி வீசியபடி ஓடினான் ராம்.

    ‘எங்கோ மூடப்பழக்கத்தினை ஒழிப்போம் ‘ என மைக்கில் யாரோ பேசியது ராமின் காதில் தெளிவாக ஒலித்தது.

     

     

    Share
  • நடிகை(கள்)

     

    -பொன். இராம்


    வண்ணச்சாயப் பூவிதழ்

    உதடுகள் கூறும்

    கண்ணீர் வரிகள்!

    அடிமை விலங்கு

    அவிழ்க்கப்பட்டும்

    அரிதார பொம்மைகளாய்

    நனவுலகில் சிரிக்கின்றோம்!

    கள் மட்டுமே

    போதை!

    இங்கு நாங்கள்

    திரையுலகக்

    கண்ணாடிக் குடுவைக்குள்

    போதைப் பதுமைகளாய்

    வாழ்கின்றோம்!

    இடியாக  மாறி

    படியாத ஆணுலகை

    மாற்றிவிட எத்தனையோ முயன்றாலும்

    பணமழை தான் ஜெயிக்குதடி!

    பட்டமொன்று பெற்றாலும்

    பாவி மனம்

    புகழுக்கு ஏங்குதடி!

    விடியாத பெண்ணுலகத்

    திரையுலகக் கும்மிருட்டில்

    விரைவாய்  யார் வருவார்

    அறிவு விளக்கேற்ற?


    படத்துக்கு நன்றி: http://www.123rf.com/photo_10204675_single-bottle-of-beer-with-shiny-woman-s-silhouette-inside.html

     

    Share
  • “வடு”

    பொன். இராம்

    “ஏன் நிக்கறே? உக்காந்துக்கறது தானே”. . .

    “ ஸ்டீல்ல தட்டு மாதிரி போட்டிருக்கே. சுடுதும்மா. மேலே ரூஃபிங்கே இல்ல பாத்தியா!. . . வெயில் வேற. . . சுள்ளுன்னு அடிக்குது.“

    “ஏன் பஸ் வரலையா? வீட்லருந்து அப்பவே வந்துட்டியோ. . .“

    “நீ வேற இந்த ஸ்டாப்பிங்ல பஸ் வரலன்னு காது கேட்காத வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பஸ்ல ஏறிட்டேன். ஏறுன பிறகு தான் தெரிந்தது. ஏண்டா ஏறினோம்னு. . . ஒரு ஸ்டாப் போய்ட்டு இறங்கிட்டேன்.“

    “ஏன்? என்னாச்சு? உங்களுக்குத்தான் முதியோருக்கான ஸீட் பஸ்ல முன் பக்கம் கவர்ன்மெண்ட் கொடுத்திருக்கே . . . “
    அம்மாவின் முகம் மாறியதைப் பார்த்த மல்லிகா அம்மாவின் தோளை ஆதரவுடன் பற்றினாள்.

    “என்னம்மா. . . என்னாச்சு?“

    “ஒண்ணுமில்லம்மா! வரவர பெத்தவங்க வளர்ப்பு சரியில்லையோன்னு தோணுதும்மா!“
    “ஏம்மா?“ நல்லா படிக்குற, ஒழுக்கமான குழந்தைகள் இல்லையாம்மா?
    கனத்த மௌனம் அம்மாவிடம் இருந்து புறப்பட்டது.

    “கொஞ்ச நேரம் அந்த பார்க்ல உக்காந்துக்கலாம் வர்றியா?“

    தூரத்தில் தெரிந்த சாவு ஊர்வலத்தைப் பார்த்தாள் அம்மா. காருக்குள் இறந்தபெண்ணின் அருகில் ஒருவன் அவள் காதருகில் அழுதபடி அவன் பேசுவதை உற்றுப்பார்த்தாள். செத்தபிறகு பிணத்திற்கு எல்லாஉணர்வும் கேக்கும்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். உணர்வுபூர்வமாக இன்றுதான் பார்க்கிறேன்…………….

    அம்மாவின் மனமறிந்தாள் மல்லிகா.

    இடத்தை விட்டுப்போய்விடவேண்டும் என நினைத்தாள்.
    “சரி! வாங்க பேசிட்டே போகலாம். . .“

    நேற்று நான் காந்தி இறந்தப்ப போட்ட டிரஸ்ஸைப் பாத்தேன்.
    பல தடவை பாத்துட்டேன். இருந்தும் அதைப் பாக்கும்போது பழைய ஞாபகம் வருது. வருஷம் பல மாறினாலும் ஒண்ணு தெளிவாத் தெரியுது. அங்க இருந்தவங்கள்ள நம்ம இந்தியர்களை விட வெளிநாட்டவர்கள் தான் அதிகம். உனக்குப் புரியுதா என் வேதனை… அங்கேயே இருந்துடலாமோன்னு தோணுச்சு…….

    அம்மா நீங்க அதிகம் பேச வேண்டாம். அப்பா நாட்டுக்காக வாழ்ந்து உயிரை விட்டார். கவர்மெண்ட் தர எந்த சலுகையும் வேண்டாம்னு சொல்லிட்டீங்க….நாளைக்கு அப்பா இறந்தநாள் ஜனவரி 26. கொஞ்சநேரம் ஃபிரெண்ட்ஸைப் பாத்துட்டு வரேன்னு கிளம்பினீங்க…உங்களுக்குப் பிடிச்ச லைப்ரரிக்குப் போலாமா……

    ஒண்ணும் வேண்டாம் வீட்ல தேவைப்பட்டது கிடக்கு. நீ போய் பால் மட்டும் வாங்கி வா..

    தாய்போல மரத்தின் நிழல் சிமெண்ட்பெஞ்சைத் தடவியிருந்த இடத்தில் மஞ்சள் நிறக் கொன்றைமலர்கள் சிதறியிருந்ததை இரசித்தபடி சிவகாமி அமர்ந்தாள்.

    அம்மாவுக்கெனச் சூடாகப் பால் வாங்க அருகில் இருந்த ஆவின் பூத்திற்குச் சென்றாள் மல்லிகா.

    எதிர் பெஞ்சில் கண் தெரியாமல் அமர்ந்திருந்த சிறுவனைப் பார்த்தாள். அவனருகில் தட்டில் சாதத்துடன் நின்ற பெண்ணையும் பார்த்தாள். என்ன செய்கிறார்கள் எனப் பார்த்தபடி இருந்தாள் சிவகாமி.
    சாதத்தை எடுத்துச் சிறுவனுக்கு ஊட்டுவாள் என எதிர்பார்த்திருந்த வேளையில், அந்தப் பெண் சிறுவனின் கையைச் சாதத்தில் வைத்துத் தொட்டுக்காட்டி, கையைப் பிடித்து வாயில் வைத்ததைச் சிவகாமி கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ஒரு நிமிடம் கண்ணை இமைக்க மறந்த சிவகாமி அடுத்து என்ன நடக்கும் என்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

    சிறுவன் அம்மா கொடுத்த சாதத்தைப் பிசைந்து பொரியல் இருந்த இடத்தைத் தடவிச் சரியாகச் சாப்பிட்டு முடித்தான். கை கழுவ பக்கத்தில் வாட்டர் பாட்டிலைத் தடவினான்.

    “அம்மா!“

    “என்ன சிவா?“

    “கை கழுவ தண்ணிம்மா!“

    “உனக்கு இடது கைப்பக்கமா நாலு அடி எடுத்து வை. . . வாஷ் பேசின் இருக்கு. . . பாத்துப் போ!“ என்றாள் அந்தத்தாய்.

    “இந்தாங்கம்மா பால்!“ என்றாள் மல்லிகா.

    வாயில் விரலை வைச்சு சிவகாமி, “உஷ்!. . . “ என்றாள் அந்தச் சிறுவனைச் சுட்டிக்காட்டியபடி.
    “சிவா, இந்தாப்பா. . .“ என கூறியபடி அவன் தோளைத்தட்டி ஸ்டிக்கை அம்மா கொடுத்தாள்.

    சிவா ஸ்டிக்கை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக மண்தரையில் மாற்றி மாற்றி தட்டிப் பார்த்து நடக்க ஆரம்பித்தான்.
    திடீரென ஏதோ ஸ்டிக்கில் தட்டுப்பட. . . அப்படியே உட்கார்ந்தான்.
    பச்சைப் புல்லின் மென்மையான வாசத்துடன் காலைப்பனியின் ஈரம் கையில் ‘ஜிலீர்‘ரென உரச, இலேசாகப் புன்னகைத்தான்.

    “அம்மா. . . இதென்ன?. . .“

    “இதுவா. . . பனியின் ஈரம். . .“ என்றவள் சட்டென நாக்கைக் கடித்தாள்.

    “ஓ. . . உனக்குப் பனின்னா என்னன்னு தெரியாதே!“

    “தெரியும்மா. . . எங்க மிஸ் சொல்லிக் கொடுத்திருக்காங்க. . .“

    “சரி. . . பார்த்துப் போ. . .“

    ஸ்டிக்கால் தரையைத் தட்டியபடி நின்றான்.

    “அம்மா, இந்தக்கல்லு எல்லாருக்கும் இடைஞ்சலா. . . வழுவழுன்னு இருக்கேம்மா. . . “

    “கூழாங்கல்லு தான் அது. . .“

    “பார்க்கை டெக்கரேட் பண்ணிட்டு அப்படியே போட்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்.“

    “ஏம்மா அவங்களுக்குத் தன்னுணர்வு இல்லையா?“

    “தன்னுணர்வா அப்படின்னா?“

    “இது தெரியாதாம்மா உங்களுக்கு?“

    “அடுத்தவங்க பார்க்கறாங்கன்னு நமக்குப் பெருமை வரணுமேங்கறதுக்காக எந்த நியாயமான செயல் செய்வதுபோல நடிக்கக்கூடாது. வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது. ரோட்டில் கிடக்கிற குப்பையை எடுத்துக் குப்பைத்தொட்டியில போடணும். . . குழியா கிடக்குன்னு ரோடே போடலைன்னு மறியல் செய்யிறதவிட அந்தக்குழிய நிரப்ப பக்கத்துல கிடக்கிற மண்ணையோ, கல்லையோ போட்டுக் குழியை மூடலாம்ல. . . தெருவுல போறவங்களுக்கு நிழல் வேணும்னு மரம் நடணும்னு தோணனும். மரத்து மேலே லைட்டைப் போட்டு தன் கடைக்கு மட்டும் விளம்பரம் தேடுறது இல்லம்மா தன்னுணர்வு. சென்னைய தவிர மத்த ஊர்ல ஒரு நாள்ல அரைநாளுக்கும் மேல கரண்ட் இல்லாம மக்கள் திண்டாடுறது தெரிஞ்சும் சீரியல் செட், ஆடம்பர லைட் போட்டு மின்சாரத்தை இஷ்டத்திற்கு செலவழிக்கிறதில்லை தன்னுணர்வு. இருக்கறத சிக்கனமா எல்லாரும் பயன்படுத்தணும். அது தான் மனிதத்தன்மை. இது தாம்மா தன்னுணர்வுன்னு எங்க மிஸ் சொன்னாங்கம்மா. . .“
    வானத்திலிருந்து புஷ்பங்கள் தன் உடம்பில் கொட்டியது போல உணர்ந்தாள் சிவகாமி. “ரொம்ப கரெக்ட்“ எனக் கூறியவாறு கை தட்டிய சிவகாமியைப் பார்த்தாள் அந்தத்தாய்.

    “உங்க பையனா?“

    “ஆமா . . . லேட் மேரேஜ்ல பிறந்தான். டெலிவரி அப்ப நர்ஸோட கவனக்குறைவால ரெண்டு கண்ணும் தெரியாம போய்டுச்சு. . .“ அந்தக் குறை தெரியாம இருக்க அப்பப்ப இப்படி வருவேன். அவனுக்கு அப்பா இல்ல. . . ஆர்மில இருந்தார். திடீர்னு ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார். இருந்தும் அவன் கால்ல நிக்கணும்னு தான் இப்பிடி. . . அவனுக்கு இருக்கற மிஸ் ரொம்ப க்ரேட்டுங்க. . . எல்லாருக்கும் அப்படி வாய்க்கறதில்ல. . . என்றாள் சிவகாமி.
    “பால் குடிக்கறீங்களா?. . . எதுக்கும் இருக்கட்டும்னு ஃப்ளாஸ்க்ல ஜஸ்ட் இப்பதான் வாங்கிக்கிட்டு நேரா வரேன்.
    இரண்டு தம்ளர் பால் எக்ஸ்ட்ரா தான் வாங்கினேன்“ என்றாள் மல்லிகா.

    “வேண்டாங்க. . . வெளில எங்கயும் சாப்பிடறதில்லே.“

    “ஏன் பயமா?. . . ஏதாவது கலந்து இருப்பாங்களோன்னு. . .“

    “சேச்சே. . . அதெல்லாமில்ல. . . டயட்ல இருக்கேன். இவன் ஒரு கால்ல நிக்கற வரைக்கும் நான் இருக்கணும்ல. . . காலம் போன காலத்துல பெத்து வச்சிருக்கேனே!. . .“

    “இந்த பையனுக்கு ஒரு குறையும் வராதும்மா. . .“
    பெருமூச்செறிந்தபடி அம்மா பேச ஆரம்பித்தாள்.

    “நான் இன்னைக்கு பஸ்ல போனேன்னு சொன்னேல்ல. . . கேளு மல்லிகா. . . நெஞ்சே ஆறலை. . . அங்க வயசான ஒரு பாட்டி என்னமாதிரின்னு வச்சுக்கோயேன். முதியோருக்கான சீட்ல உக்காந்துட்டாங்கம்மா! உடனே பக்கத்திலிருந்த பெண் ஐயய்யோ, எந்திருச்சுருங்க. . . இது அந்தப் பசங்க உட்கார்ற இடம்! வந்தா திட்டுங்க. . .“ என்றாள்.

    “அப்ப பாத்து பக்கத்துல ஒரு லேடி பேக் மாட்டிட்டு நின்னுக்கிட்டு இருந்தாங்க. எங்கே போறாங்கன்னு தெரியல. . . நீங்க உக்காருங்கம்மா. . . பாத்துக்கலாம்“ னு சொன்னாங்க.

    “பதிமூணு… பதினாலு… வயசு தாம்மா ஆகும் அவுங்களுக்கு. வாய் பேச முடியாத காதும் கேளாத பசங்கம்மா அவுங்க“.

    அவங்களுக்குள்ளயே சைகைலேய பேசிட்டுக் கோபமாக கையைக் காட்டினாங்க.
    அதப்பாத்தவுடன் அந்த வயசானஅம்மா எழுந்துட்டாங்க…..

    “பேக் மாட்டின பொண்ணு உடனே, “நீங்க உட்காருங்க! போர்டுல என்ன போட்டிருக்கு? முதியோர்னு போட்டிருக்கா? அந்தக்குழந்தைகளுக்காகக் காலியா இருந்தாலும் நாங்க நிக்கறோம்.
    வயசானவங்க அப்படி இல்லை இல்லையா?

    “கடவுள் இவங்களைப் படைச்சதுக்கு வருத்தப்படறோம். ஆனா முதியோருக்கு மரியாதை தரணும்னு கூடத் தெரியலையேம்மா. . . “
    குரல் வந்த திசையை நோக்கிச் சடாரெனத் திரும்பினாள் பேக் மாட்டிய பெண்.
    வெறும் மஞ்சள்கயிற்றுக் கழுத்தோடு,நிறை மாதப் பெண்ணின் இடுப்பில் வாயில் எச்சில் ஒழுகியபடி, நடப்பது எதுவும் அறியாமல் கால் சூம்பியநிலையில் மாறுகண்ணுடன் இருந்த ஏழுவயதுக் குழந்தையைப் பார்த்தாள்.

    “அவங்க பாக்கறதைப் பாத்து அவங்க மேம் கிட்டே சொல்லப் போறாங்களாம். இந்த பஸ் அவங்களுக்காம். அதுல எல்லாரும் ஏறிட்டாங்களாம்“.

    “உங்களுக்கு இந்த லேங்வேஜ் எப்படித் தெரியும்?“

    “எங்க வீட்ல இந்த மாதிரி சொந்தம் உண்டு“ என்றாள் எங்கோ பார்த்தபடி. . .

    “பொய் சொல்கிறாள் என்பது அவள் பார்வையில் தெரிந்தது. கண் எப்படிப் பொய் பேசும்?“

    “பயமாயிருக்கும்மா. . . இதுங்க வாழ்க்கையை நெனச்சு!“ என்றாள்.

    அதுசரி..நீங்க ஒரு ஆட்டோல போகக்கூடாதா…வயித்துல ஒண்ணு கையில ஒண்ணு……. என்றாள்.

    என்னை விடும்மா…வலி வந்தா மரத்துக்கு மறைவுல புள்ளையை பெத்துட்டு அடுத்த நிமிஷமே வேலை பாக்கணும்னு நினைக்கற குடும்பத்துல பிறந்துட்டு… என்வசதியைப்பத்திப் பேசுறிங்களே.. பெண்கள் படிக்கணும்மா—நேர்மையா வாழணும்மா….தான் கற்ற அறிவு பிறருக்குப் பயன்படுற வகையில வாழணும்மா..அடக்கமாகவும் இருக்கணும்மா….இதுங்களுக்குக் கத்துக்கொடுத்த ஆசிரியரைத் தாம்மா தப்பு சொல்லணும்னுட்டு அந்தப் பெண் மடமடவென அடுத்த ஸ்டாப்பில் இறங்கி விட்டாள். அவள் வாழ்க்கையில எத்தனை பிரச்சினைகளைப் பாத்தாளோம்மா! நானும் இறங்கிட்டேம்மா. மனசு தாங்கல. . . சீட் எங்கள மாதிரி இருக்கறவங்களுக்குக் கொடுன்னு கேக்கலை. நாங்க வயசானவங்க அனுபவம் இருக்கு. ஆனா இந்தப் பசங்க என்ன செய்யப்போகுதோன்னு தான் பயமாயிருக்கு. . . யாருக்கும் விட்டுக் கொடுக்கணும்னு தோணலைன்னு நினைச்சுத் தாம்மா பஸ் ஸ்டாண்ட்ல நின்னேன். நீ வந்துட்டே. . . ஆனா கடவுள் தான் இந்தப் பார்க்குக்கு வர வச்சதுன்னு நினைக்கறேன். இல்லாட்டா சிவாவைப் பார்த்திருப்பேனா?“ என்றாள் சிவகாமி.

    “ஒரு பிள்ளைன்னாலும் அடிச்சுத் திருத்தாட்டியும் அன்பாகவாவது பெற்றோர் திருத்தற சூழல் வரணும்ல…“

    மூடிக்கிடக்கிற கருமேகத்தை சூரியன் விலக்கப் பார்த்துத் தோற்றுக் கொண்டிருந்தது. பார்க்கிலிருந்த சூரியகாந்திப் பூக்கள் அப்போது வீசிய மெல்லிய தென்றல் காற்றில் மௌனமாகத் தலை அசைத்து நின்றன.

    Share