கீழாநெல்லியின் மடல்
–பொன். இராம்
மனம் தெளிவுபட
மருந்துக் கவிதையானாய்!
பாழ்பட்ட திரையுலகைப்
பண்படுத்த வேரானாய்!
என்னை மட்டும்
ஏன் பயன்படுத்த
மறந்தாய் மானிடனே?
சிற்பி வடித்த சிலைகளாய்
மனித உள்ளங்களைச்
சீர்திருத்திய நீ
உடல்நலம் காக்க
என்னை மட்டும்
ஏன் மறந்தாய்?
முத்தான கவிதைகளை
முத்துக்குமரனாய்
முருகவேள் தந்த
தமிழை வளர்த்த
உன் புகழைத்
தீந்தமிழ்க்
கவிதை நெஞ்சங்கள்
என்றும் பாடும்!
பணம் தர மறுத்த
வெற்று உயிர்க் காசோலைகள்
அல்ல நாங்கள்!
அடுத்த பிறவி
அருமையாய் உனக்கு
அமைந்திட்டால்
நல்ல உள்ளங்களுக்கு
மட்டுமே பா வடிக்க
வேண்டுகிறேன்!
சும்மா வரவில்லை சுதந்திரம்
என்பதுபோல
சும்மா வராது
தமிழ்க்கவிதை என்றே
விதி வகுக்க வருவாயா!
மூலிகைச் செடியான
என் பெருமையும்
அடுத்த பிறவியில்
நீ பாட
குறுஞ்செடியின்
தாழ்மையான விண்ணப்பம்!
என்னை வளர்க்கத்
தண்ணீரும் பரிதி தயவும்
போதுமே!
உயிர் மருந்தாய்
உச்சந்தொட்ட
பாவினைக் காணக்
கண்ணீருடன் காத்திருக்கும்
கீழாநெல்லி மூலிகை!!