தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிரிவாக்கமும் சுற்றுச்சூழல் சீர்கேடும்
–ரா. மூர்த்தி
தமிழர்கள் நிலங்களை ‘நிலம், ‘திணை’ சார்ந்து அடையாளப்படுத்துவதற்கு இயற்கையும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலுமே காரணமாக அமைந்தது. இதனைத் தொல்காப்பியம் ’ஐவகை சார்ந்த திணைக்கோட்பாடு’ என்கிறது. தொல்தமிழர்கள் இனக்குழுவாழ்க்கை, கூட்டுவாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, சமூக வாழ்க்கை வாழ்ந்ததற்கான பண்பாட்டு இறுமையாக அடையாளமாகவும் இனங்கானுகிறது. தமிழ்ச்சமுதாயம் நிலப்பின்னணியில் குறிஞ்சி – மலை, முல்லை – காடு, மருதம் – வயல், நெய்தல் – கடல் என வகுப்பட்ட நிலையில், அந்தந்த நிலத்திற்கு முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் இவைகளையும் சுற்றுச்சூழல் தகவமைப்பிற்கு ஏற்பவே இனங்காணப்பட்டுள்ளது.
முதற்பொருள் முழுக்க முழுக்க இயற்கைச் சூழலினை உள்வாங்கிக்கொண்டு நிலம் – பொழுது என வரையறைப்படுத்தி அதற்குள் நிலங்களை நானிலமாக பிரித்தாள்வதைப் பேசுகிறது. இதில் சில மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்திருந்தன. அதிலே இணைக்கப்பட்டதுதான் பாலை என்றொரு வறண்ட நிலம். இவற்றிற்கென்று தனிநிலம் இல்லையாயினும் காலம் கருத்தில் கொள்ளப்பட்டது.
இந்நிலங்களில் வாழ்ந்த வாழ்வு நிலைத்திருக்கவில்லை. இடமாற்றம் அடிக்கடி ஏற்பட்டது. அதே நேரத்தில் இயற்கைப்பேரிடர்கள் ஏற்படவும் செய்தன. நிலத்திற்கு ஏற்ப மலை, காடு, வயல், கடல், வறட்சி (பாலை) என இயற்கையினையும் சுற்றுச்சூழலையும் கொண்டு உருவாக்கியதோடு மக்களும் (கருப்பொருள்) அவர்களுக்கான துணைவினைப்பொருட்கள் தேவைப்படுதை அறிந்து அந்தந்த நிலங்களில் கிடைக்கும் துணைவினைகளைக் கருப்பொருளாக உருவாக்கி, பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி வாழத்தொங்கினர்.
திணைச்சமூக வாழ்வில் இயற்கையே நமக்கு முன்னோடியாகத் திகழ்வதை அறிந்துகொள்ளலாம். ஏனென்றால் மனித வாழ்க்கையானது இயற்கையான மலை, காடு இவைகளிலிருந்தே நாடோடியாகத் தொடக்கத்தில் தொடங்குகிறது. அதனால்தான் குறிஞ்சியும் முல்லையும் பூக்களின் பெயரைக்கொண்டு – இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தொல்காப்பியர் நிலங்களை பிரித்தாண்டுள்ளனர். இதிலிருந்து வளர்ச்சி பெறும்போது மற்றவைகள் விரிவு பெறுகின்றன.
பழந்தமிழகத்தில் நிலத்தின் விரிவாக்கத்திற்கு நீரின் பயன்பாடு முதன்மையாயிற்று. நிலத்தின் மீதான உரிமையே நீரின் மீதான உரிமையினையும் இயல்பாகவே நிலவுடைமையாளர்களுக்கு பெற்றுத்தந்துள்ளது. தொடக்க காலங்களில் நீர் உரிமையும், நீரினைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரமும் ஊராரிடமுமே இருந்துள்ளன. நீர் மேலாண்மையில் பாசான விவசாயமே முதன்மைப்படுத்தப் பட்டது. அதில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் விதந்து பேசப்பட்டுள்ளன. அவற்றுள் நெல் ஆட்சியாளர்களை நீர்ப்பாசன வேளாண்மைக்கு ஈர்த்திருக்கும். நெல்லிற்கு இணையாக உப்பும் மதிக்கப்பட்டுள்ளது. நெய்தல் நிலத்தில் கடல் நீரினைப் பாத்திகட்டி உப்பு விளைவிக்கப்பட்டுள்ளது. மாறாக மருதநிலத்தில் மிருதுவான நன்னீர் கொண்டு பாத்திகட்டி நெல் பயிரிடப்பட்டது. மருதம் நெய்தல் இவ்விரு நிலங்களின் அமைப்பானது வெகுதொலைவில் இருந்ததில்லை. அருகருகே இருக்கவும் செய்துள்ளது; இன்றும் இருந்து வருகிறது.
ஒரு களத்தில் உழவர்கள் நெல்தூற்றியபோது பறந்துசென்ற துரும்புகள் அருகேயுள்ள உப்பளத்தில் பாத்திகளில் படர்ந்ததால் உப்பளப் பாத்திகளிலுள்ள வெண்மையான உப்பு கெட்டது. இதனால், ஆத்திரமுற்ற பரதவர்கள் உழவர்களோடு சண்டையிட்டு இரு தரப்பாரும் சேறுகளை வாரியடித்துக் கொண்டனர். இத்தகைய நிகழ்வு மருதநில நரைமுது பெரியோர்கள் முன்னிலையில் சரிசெய்யப்பட்டு மருத நிலத்தில் கிடைக்கும் கள் பரதவர்களுக்கும் உழவர்களுக்கும் கொடுக்கப்பட்டு வழக்கு முடித்து வைத்து அணுப்பட்டுள்ளதை
“தாழ்சினை மருதம் தகைபெறக் கவினிய
நீர்சூழ் வியன்களம் பொலியப் போர்புஅழித்து
கள்ஆர் களமர் பகடுதலை மாற்றி
கடுங்காற்று எறியப் போகிய துரும்புடன்
காயல் சிறுதடிக் கண்கெடப் பாய்தலின்
இருநீர்ப் பரப்பின் பனிந்துறைப் பரதவர்
தீம்பொழி வெள்ளுப்பு சிதைதலின் சினைஇ
கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி
இருஞ்சோற்று அள்ளல் எறிசெருக் கண்டு
நரைமூதாளர் கைபிணி விடுத்து
நனைமுதிர் தேறல் நுழையர்க்கு ஈயும்” (அகம்.366)
என்ற பாடல் வரிமூலம் அறியமுடிகிறது. இங்கு நிலத்தின் விரிவாக்கம் பரந்து கிடப்பினும் பரதவர், உழவர் மத்தியில் நிலத்தைத் தன்வயப்படுத்தி தொழில்செய்யும் ஆக்கிரமிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிலத்திற்கான உரிமை தனிமனித வயத்தில் தற்காத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் நிலத்தின் பரப்பளவு ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளே இனங்காணப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலை ஆதாரமாகக்கொண்டு வாழ்ந்த தமிழர்களுக்கு நிலத்தின் ஈர்ப்பு தொழிலாக செயல்பட்டு வந்தாலும் உணவு, பொருளீட்டல் பெருக்குதல் நிலையிலே முதன்மையாயின.
உணவு, பொருளீட்டல் நிலைக்கு மாறிய மனிதனுக்கு இருப்பிடத்தின் நிரந்தரத் தேவையை அமைக்கும் தன்முனைப்பிலும் இரங்க வேண்டிய நிலைக்கும் மாற்றமுற்றான். இதனால் தாவரங்கள், விலங்குள் ஆகியவைகளை தனிமைப்படுத்தியும் அழித்தாண்டும் அழிவுகுள்ளாக்கியும் வாழச் செய்தான். விலங்குகள், தாவரங்கள் தன்வயப்படுத்தல் குறிஞ்சி, முல்லை, பாலை ஆகிய நிலங்களிலும் கடல்வாழ் உயிரினங்கள் பயன்படுத்துதல் நெய்தல் நிலங்களில் நிகழ்ந்துள்ளன.
நிலஅழிவும் விரிவாக்கமும்
நிலஅழிவு தொடக்க காலத்தில் மலைகளிலே தொடக்கம் கொள்கிறது. இதில் மனிதன் மூன்று நிலைகளில் முன்னோடியாகத் திகழ்க்கிறான்.
- மனிதன் – விலங்குகளை அழித்தல்
- மனிதன் – தாவரங்களை அழித்தல்
- மனிதன் – நிலங்களை அழித்தல்.
- மனிதன் – மனிதனை அழித்தல்.
இம்மூன்று நிலைகளிலும் மனிதன் முன்னோடியாக இருந்தான். அதற்குமுன் நாடோடியாக விலங்குகளை மட்டும் அழிவுகுள்ளாக்கும் செயலினைத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தான். உணவின் தேவை அதிகரிப்பு, இனக்குழு பெருக்கம், வாரிசுஏய்ப்பு போன்ற காரணங்களினால் மற்றவைகளின் மீதும் அவனுடைய நாட்டம் இறங்கத்தொடங்கிற்று.
இருப்பினும் சங்க காலத்தில் நிலஅழிவு, தொழில் அடிப்படையில் தினைக்காடுகளிலே கானக்குறவர், குன்றக்குறவர், புனக்குறவர், ஏனல் காவலர், கானவன், நாடன், மலைக்குறவர், குடிக்குறவர், புனவன், சிறுகுடிக் குறவன் இவர்களின் முனைப்பிலே தொடக்கம் கொள்கிறது. இவர்கள் செய்த வேளாண்மை முறையை உலகளாவிய நிலையில் இனவரைவியலார்கள் பலவாறு பெயர்கள் கூறி அழைக்கின்றனர். ‘காட்டெரிப்பு வேளாண்மை (Slash-and – burn cultivation), இடம்பெயரும் வேளாண்மை’ (fallow peirod, shifting cultivation), ‘சுவிடன் வேளாண்மை’ (Swidden cultivation), ‘மில்பா வேளாண்மை’ (Milpa agriculture), ‘ரோசா வேளாண்மை’ (roza farming) எனப் பலவாறு கூறப்படும் .(”ப. 118 தமிழ்பழங்குடிகள்). இந்தியாவில் பழங்காலம் முதல் பழங்குடிகள் தொடர்ந்து காட்டெரிப்பு வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்க இலக்கியத்தில் வேட்டையாடி உணவு சேகரிக்கும்முறை (விலங்குகள் அழித்தல்), குறித்தும், காட்டெரிப்பு வேளாண்மை முறை (தாவரங்கள் அழித்தல்) குறித்தும் பல்வேறு பதிவுகள் காணக்கிடைக்கின்றன. அதில் குறிஞ்சி நிலமே முன்னின்று செயல்பட்டது. குறிஞ்சிநில மலைகளிலுள்ள காடுகளை அழித்து அவ்விடத்தில் புனங்களை உருவாக்கியதை,
“யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந்தாட் செந்தினை
மடப்பிடித் தடக்கை அன்ன பால்வார்ப்பு” (குறுந்.குறி.198:1-3)
“இருங் கல் அடுக்கத்து என்னையர் உழுத
கருங் காற் செந் தினை கடியுமுண்டன”
(நற்.குறி.122:1-2)
“மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
துளி பதம் பெற்ற கான்உழு குறவர்
சில வித்து அகல இட்டென பல விளைந்து” (நற்.குறி.209:1-3)
கூறுகிறது. இங்கு மலைகளிலுள்ள யாமரங்களை வெட்டியளித்து அவ்விடத்தில் மழைநீர் தங்கி இருக்கும் பொருட்டு நிலத்தை அகலமாக அமைத்து உழுது கரும்பு போன்ற அடிப்பகுதிகளையுடைய தினையினை விதைத்து வளர்த்துள்ளனர். குறவர்கள் மரங்களை வெட்டி அழித்ததுடன் அப்புனத்தை களைக்கொட்டினால் நன்றாகக் கிளறி கருந்தினைகளை விதைத்துள்ளனர். இதனை,
“மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும் புறம்” (குறுந்.குறி.214:1-2)
இங்கு கானவர்கள் தினைப்புனங்களை அழித்துத் தினைக்காடுகளை உருவாக்குவதற்கு ‘துளா’; எனும் இரும்பாலான கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். பாரியின் மலைநாட்டிலும் வேங்கை மரங்களுக்கிடையே இருந்த மேடுகளை மழைபெய்யும் காலத்தில் நன்றாக கலப்பையில் பொருத்தப்பட்ட பூழி மழுங்குமளவிற்கு நன்றாக உழுதுத் தினை விவசாயம் மேற்கொண்டுள்ளனர்.
“வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ்சுவல்
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து
பூழி மயங்கப் பல உழுது” (புறம்.120:1-3)
முல்லை நிலத்தில் கார்காலத்தில் பெய்த மழையால் செம்மண் நிலம் ஈரம் மிகுந்து காணப்பட்டது. அதில் வினைஞர் (கொல்லை உழவர்) ஏரின் உதவியால் செம்மண் நிலத்தை உழுது அதில் வரகினை விதைத்தனர்.
“பேர்உறை தலைஇய பெரும்புலர் வைகறை
ஏர்இடம் படுத்த இருமறுப் பூழிப்
புறம்மாறு பெற்ற பூவல் ஈரத்து
ஊன்கிழித் தன்ன செஞ்சுவல் நெடுஞ்சால்
வித்திய மருங்கின் விதைபல நாறி” (அகம்.முல்.194:1-5)
இவ்வாறு செய்த விவசாயத்திலிருந்து படிப்படியாக மாறி மருத நிலத்தில் நிலமும் சமதளப்பரப்புடன் திகழ்ந்ததால் உழவர்கள் தொடர் விவசாயம் மேற்கொண்டனர். நெல்லறுத்து நீக்கப்பெற்ற வயலில் மீண்டும் ஏர்கொண்டு உழுது அதில் விதைகளை விதைத்து விவசாயம் மேற்கொண்டனர்.
“அரிகால் மாறிய அம்கண் அகல் வயல்
மறு கால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல” (நற்.மரு.210:1-3)
மருத நிலத்தில் நிலத்தை அழிவுக்குள்ளாக்கும் முனைப்பில் உழவர்கள் செயல்படவில்லை. மாறாக நிலத்தில் தொடர் விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணப்போக்கினையே கொண்டிருந்தது தெரிய வருகிறது. ஒரு வகையில் மனிதர்கள் நிலங்களைத் தன்வயப்படுத்தி உழுது செய்த விவசாயம் போன்று உழாமலேயும் விவசாயம் செய்துள்ளனர்.
மலைகளில் கார்காலத்தில் பெய்யும் மழையால் காந்தள் செடிகள் கிழங்கு உருப்பெறுமளவிற்கு வளர்ந்து நிற்கும். அதனை பன்றிகள் தன்னினத்துடன் சேர்ந்து சென்று தன்னுடைய கூர்மையான மூக்கினால் நன்றாக கிளறி அதன் கிழங்குகளை உண்டு செல்லும். அவ்விடத்தில் குறவர்கள் உழாமலே சிறுதினைகளை விதைத்து விவசாயம் மேற்கொண்டனர்.
“கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொழுங் கிழங்கு மிளரக் கிண்டி கிளையொடு
கடுங் கண் கேழல் உழுத பூழி
நல் நாள் வரு பதம் நோக்கி குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரற் சிறு தினை” (புறம்.168:2;-5)
குறவர்கள் செய்த தினை விவசாயம்போன்று பெருங்கடலில் சென்று தனது வாழ்க்கையை நிகழ்த்தக்கூடிய பரதவர்களும் பெரிய உப்பங்கழிகளின் வயலில் உப்பை விளைவிக்காமல் வெண்ணிறக் கல் உப்பினை உழாமலே விளைவிக்கவும் செய்துள்ளனர்.
“பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி” (அகம்.நெய்.140:1-3).
இங்கு நிலத்தின் தன்மை மலையாக இல்லாமல் கடல்புறமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குறவர்கள் செய்த உழாத சிறுதினை விவசாயத்தைக் கருத்தில் கொண்டே பரதவர்கள் கடல் நீரினைப் பாத்திகட்டி உப்பு விளைவிக்கும் தொழிலை மேற்கொண்டிருக்க வேண்டும். இங்கு இரு பண்பாட்டிற்கான தொழில், தொழில் பொருட்கள் (குறிஞ்சி – தினை, சிறுதினை – நெய்தல் – உப்பு) வௌவ்வேறாக இருப்பினும் மக்களுக்குள் ஓர் ஒத்திசைவு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
குடிபெயர்வு
ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் பூர்வக் குடிகளைத் தவிர மற்ற மக்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ளவில்லை. மாற்று இடங்களை நோக்கிக் குடிபெயரவும் செய்துள்ளனர். இக்குடிபெயர்வு தொழிலுக்காக நிகழ்ந்துள்ளது. உணவுக்காக இருந்துள்ளது. பூர்வக்குடிகளின் தாட்டிமை தொடர்நிகழ்வாக இருக்கும்போது இடம்பெயர்வுகான தன்மையாகவும் இருந்துள்ளது. பாலைநிலம் இயல்பாகவே வறண்டு காணப்படும். அங்கு வாழக்கூடிய மறவர்களின் தொழில் வழிப்பறி, ஆட்கொலை, உடைமைப்பொருட்களை கவர்தல் போன்றவே. அத்தகைய நிலையில் வழிச்செல்வோர் மறவர்களின் வழிப்பறிக்குப் பயந்தும் நிலத்தின் கொடும் வேனிலுக்குப் பயந்தும் மாற்று இடங்களைத் தேடி குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.
“ஆறுகொல் வம்பலர் தொலைய மாறுநின்று
கொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்”
(குறுந்.பாலை.331:2-3)
“கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன்
இடுமுடை மருங்கில்
போரிய முது பாறு
இறகு புடைத்து இற்ற பறைப் புள் தூவி
சேங்கனைச் செறிந்த வன்கண் ஆடவர்” (நற்.பாலை.229:2-6, 352:1-2)
அதே போன்று பாண்குடிகளின் வாழ்வும் நாடோடி வாழ்வாக தொடர்ந்திருந்தது. இவ்வாழ்வு உணவிற்காகவும், அரசர்கள் வழிப்படுத்துவதற்காகவுமே இருந்தன. பாண் குடிகளின் வாழ்வு வாழ்க்கையின் காலகட்டத்தைப் பார்க்கும்போது அரசு உருவாக்கம் நிலவிய காலமாக மாறியுள்ளது. இனக்குழு வாழ்வு அழிந்து அரசுடைமையாக்கத்திற்கு மாறிய வாழ்வாக தென்படுகிறது. இங்கு நிலத்தின் ஆளுமை அனைத்தும் பெருமன்னர்கள், குறுநில மன்னர்கள் ஆளுகைக்கு உட்பட்டு இருந்து வந்தது. இங்கு நிலம் ஒரே மன்னரின் கீழ் நிரந்தரப்பட்டிருக்கவில்லை. தொடர்மாற்றமாக இருந்துள்ளது. இதனால் மன்னர்கள் மக்களை வழிப்படுத்துவதுடன் அவர்களைத் தன்னுடைய கட்டுபாட்டிற்குள் அடக்கும் நிலைக்கும் மாறிவிடுகின்றனர். அத்தோடு உயிர்க் காரணிகளை அழிக்கும் தன்மைக்கு மாறியவர்களாக மாறவும் செய்துள்ளனர்.
உயிர்க்காரணிகளை அழிப்பவைகளை கிப்போ ஐந்து வகையாக வகைப்படுத்துகிறார்.
- வாழிடம் அழித்தல் (H – Habitat destruction)
- அறிமுகப்படுத்தும் சிற்றினங்கள் (I – Invasive Species)
- மாசுபாடு (P – Pollution)
- மனித மக்கள்தொகை அதிகரிப்பு (P – Human over Population)
- அதிகமான அறுவடை (O – Over harvesting)
என்று கூறுகிறார். மேற்கண்ட ஐந்து கருத்தாக்கங்களும் மருத நிலத்திற்குப் பொருந்தியுள்ளது. அகவாழ்விலிருந்து புறவாழ்க்கைக்கு (தொல்காப்பிய நிலையில் புறத்திணைக்கு) மாறிய வாழ்வில் இவை ஐந்தும் வெளிப்பட்டு நிற்கிறது.
அகத்திணைகளைத் திணை வாழ்க்கையாக உருவகித்துக்கொண்டுள்ள நாம் அதற்கு மாறாகப் புறத்திணை வாழ்க்கையை வீரநிலை வாழ்க்கையாக மாற்றமுறச் செய்து கொண்டுள்ளோம். இதில் நிலப்பறிப்பு, ஆக்கிரமிப்பு, கவர்தல், மீட்டல், படையெடுத்தல், கைக்கொள்ளுதல் என நகரும் சூழலில் அரசுருவாக்கத்தில் உருவாகிய கோட்டைக் கொத்தளங்கள், காவல் மரங்கள், அடக்குமுறை, வெற்றிசூடல் ஆகியன தொடர்ந்து நிகழ்ந்தன. இதில் காவல் மரங்கள், தெய்வம் குடிகொள் இடங்கள், அரண்மனைகள் அழிவுக்குள்ளாகின. அடக்குதல், கவர்தல், அழிவுறுதல் என்ற சூழலில் நகர்ந்து வந்துள்ளது.
அகம் புறம் உட்பிரிவுகள் கொண்டு பார்க்கும்போது வெளிப்படுவனவாக உள்ளவைகள்:
கைக்கிளை – பாடாண் – கடவுள் பரவல்: தெய்வக்காதல், வருணனை, தெய்வ மனிதக் காதல், இளம் பருவக்காதல், பாசம், குடும்ப வருணனை, தலைவன் துதி, ஆற்றுப்படை, வேள்விப்பாடல்கள், கடவுள்அருள் கூறி வாழ்த்தல், அரசனிடம் மயங்கிய மகளிர் பாடல், பள்ளியெழுச்சிப்பாடல், அரசரின் நீராடல், பரிசு ஏற்றல், சகுன – நிமித்தங்கள்.
முல்லை – வஞ்சி – ஆக்கிரமிப்பிற்கு எதிரான போர்: படையின் ஆரவாரம், தீயிடல், வீரப் பெருமை, ஈகை, பகை, அழிப்பு, பரிசுபெறல், தனியொருவன் படைபொருதல், பெருஞ்சோற்று விழா, வென்றோன் புகழ், தோற்றோன் அழிவு, வெற்றிப் பாடல், காயம்பட்டோருக்கு உதவி.
குறிஞ்சி – வெட்சி – ஆநிரை கவர்தல்: வீரக் குடும்பப் பெருமை கூறல், கொற்றவை வணக்கம், வெறியாடல், அடையாளப் பூ வேம்பு, பனை, ஆத்தி சூடல், வள்ளிக்கூத்து, நிமித்தம் காணல், பகைவரை ஓட்டல், ஆமீட்டல், சூளுரை, படையை எதிர்த்தல், வாள்போரில் மரணம், வீரசொர்க்கம், நடுகல்
பாலை – வாகை -திறன்/ஆற்றல் புகழ்தல்: நடுகல் வரவேற்பு, நடுகல் நீராடல், கல்நடல், கல் வழிபாடு, வீரனைக் கல்லில் ஏற்றல் – போர்ப்படை பாசறை, களவழிப் பாட்டு, குரவைக் கூத்து, வேலின் புகழ், வீரத்தியாகம், உடன்படிக்கை, புகழ்பாடல், அரியணை ஏற்றம், அவையோர் பாராட்டு, ஈகைக் குணம், மன்னிப்பளித்தல், ஒழுக்க மரபு படியாக வாழ்தல், செல்வ வளம் மிக்க வாழ்வு, காமம் கைவிடல், பிராமண அரச வணிக ஒழுக்கங்கள், பணிகள், அறிவுத்தேட்டம், தவமியற்றல், வீரமியற்றல்.
மருதம் – உழிஞை – மதில்முற்றுகை/ கைப்பற்றுதல்: ஆக்கிரமிப்பைத் தீர்மானித்தல், படைவகுப்பு, மதில் முற்றுகை, தனியொருவனாகிப் பகையுடன் மோதல், நல்ல புறப்பாடு, மதிலில் ஏணி வைத்து ஏறுதல், மதில் கைப்பற்றுதல், மதிலின் அகத்து இருந்த மன்னன் வீழ்ச்சி, வெளியே இருந்தவனின் தோல்வி, கிடங்குப்போர், தெருப்போர், வெற்றி நீராடல், தோற்றோர் குல அழிவு.
நெய்தல் – தும்பை – பகை அழிப்பு தலையில்லா உடலின் துள்ளல்: படைமோதல், யானைப்போர், குதிரைப்போர், பகைவர் அழிப்பு, இருவரும் இறத்தல், படை ஓட்டம்/ புறமுதுகிடல், மற்போர், வெற்றி நடனம், வீரமரணம், பாய்ந்துசென்று பகைவனைத் தாக்குதல்.
பெருந்திணை – காஞ்சி – உலக நிலையாமை கூறல்: காலனின் தண்டனை, நல்வழிபடுத்தல், காயவைத்துப் பிளந்து பெருக்கி இறத்தல், காயம்பட்ட வீரனைப் பேய்கள் சூழ்ந்து காத்தல், வீரனைப் புகழ்ந்து வருந்திப்பாடல், உறுதிமொழி, பிணம் காத்தல், கணவனுடன் மனைவியும் இறத்தல்.
முடிவுகள்
அகம் மற்றும் புறவாழ்க்கை நிலையை ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இயங்கி வந்த தமிழ்ச் சமூகம் இன்றைய நிலையில் ஐவகை நிலங்களைக் கடந்து நகரம் நகரம் சார்ந்த வாழ்வாக மாற்றம் பெற்றுவருகிறது. இதனால் பூகோளத்திலுள்ள இயற்கை வாழிடங்கள் அனைத்தும் அழிவுக்குள்ளாவதுடன், நீர்நிலைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு, புதிய இருப்பிடங்கள் உருப்பெறுகின்றன. மேலும், விவசாய நிலங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு மொத்தமாகவும், தவணை முறையில் நில மனைகள் உருவாகி வருகின்றன. அத்தோடு விலங்குகள் உலாவி வந்த மலை, காடு சார்ந்த இடங்கள் அனைத்தும் வழித்தடங்களாக மாறுவதுடன், அவை மனித இருப்பிடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதனால் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உயிர்ப் பாதுகாப்பு இல்லாநிலை ஏற்படுகிறது. இதில் அதிகம் விலங்குகளே அழிவுக்குள்ளாகிறது. இயற்கையின் தட்பவெப்ப மாற்றமும் தொடர்ந்து மாறிப் பருவமழை, காலமாற்றம் எனத் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது.
பார்வை நூல்கள்:
- பக்தவத்சல பாரதி – தமிழகப் பழங்குடிகள்
- ரா. மூர்த்தி – பயன்பாட்டுப் பார்வையில் தமிழகம் (கட்டுரை)
- ஐயப்பப் பணிக்கர் – இந்தியக் கோட்பாடுகள் சூழல் பொருத்தம்
****
–ரா. மூர்த்தி
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் -641046
ramvini2009@gmail.com