பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

14054805_1073254236062108_614667592_n

27182698@N05_rராமலஷ்மி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (27.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014-ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி .. (77)

  1. காத்திருக்கும் அன்னை மடி
    ஒளி விழியால்
    ஓராயிரம் கதை பேசும்
    கனியமுதே!
    நெஞ்சில் உலா வரும்
    பௌர்ணமியே!
    அந்திமேவும் ஆதவனின் செந்நிறமே!
    தந்தி மீட்டிடும் யாழிசையே!
    தத்தித் தாவும் தாரகையே!
    தாய்மடி தேடும் ஓவியமே!
    முன்னிரவில் துயின்றாலும்
    பின்னிரவில் விழித்தாலும்
    அன்னையவள் அரவணைப்பில்
    ஆனந்த துயில்கொள்வாய்
    கார்பிரேட் கம்பெனிகளும்
    கரன்ஸி நோட்டுகளும்
    செல்லப்பிள்ளை வளர்ப்பில்
    செய்து வைத்த சூனியத்தால்
    தாலாட்டு பாட நேரமில்ல – நீ
    தாய்மடி தூங்க யோகமில்ல
    அலுவலக வேலைக்காக
    விடிகாலை சென்றவளுக்கு
    வடிகாலாய் உன் சிரிப்பு
    வேலைப் பளுவிலே
    மனதை பலூனாய் மாற்றும்
    வித்தையடி உன்நினைவு
    கொசுவஞ் சேல கட்டினாலும்
    ஜீன்ஸில் உடை மாறினாலும்
    தாய்மை மாறாது
    தாயன்பும் மாறாது
    காலம் மாறினாலும்
    கோலம் மாறினாலும்
    காத்திருக்கும் அன்னை மடி
    கண்மணியே உனக்காக
    ஆராரோ பாட்டுடனே………..

  2. என்ன தவம் செய்தேனோ

    தாயாகி விட்டேன்
    நீ என்னுள் பிரவேசித்த அன்றே
    பிரசவம் வரை காத்திருக்க வில்லை……
    வள்ளுவன் வாக்கினை ஒப்ப‌
    சான்றோன் என கேட்கும் வரை
    காத்திருக்க வில்லை

    ஐயிரு திங்கள் வரை
    தவமிருந்து பெற்று
    கையில் உனை ஏந்த‌
    பூரணமானது எனது
    பெண்மை

    தாய்மையை உணர‌
    இறைவனும் இந்நாட்டில் தாயுமானான்
    வாரி அணைத்து உச்சி முகர‌
    எட்டினேன் இமயத்தின் உச்சிதனை
    நான் மட்டும் உணரவில்லை-இதனை
    பாரதியும் பாவலர்களும் பாடியுள்ளனர்

    குழந்தை மட்டுமல்ல நீயெனக்கு
    குல குருவும்தான்
    கற்றுத்தருகிறாய்
    கல்லூரியில் கற்காத பல கல்வியை
    பிரிந்தும் பிரியாமல் உன் உதடுகள்
    உதிர்க்கும் மோகனப் புன்னகை
    இறைவன் உனக்களித்த வரம்

    மொழி தேவையில்லை
    உன்னுடன் பேச‌
    சாதி சமயம் நிறம் மொழி எல்லை கடந்தது
    உன் மொழி எல்லோருக்கும் புரியும் மொழி
    உலகம் உய்ய ஒற்றுமையை வளர்க்க‌
    உன்னால்தான் முடியும்

    கருணையை கற்க‌
    தாய்மையை கொடுத்தானோ இறைவன்
    தாய்மையெனும் கண்மை தடவி
    கடல்சூழ் வையகத்தைக் காண
    எல்லோரும் என் மக்கள் என்ற‌
    உண்மையை உணர்த்தி விட்டாய்

    நான் உனக்கு மட்டும் தாயல்ல‌
    காணும் எல்லா உயிருக்கும் தாய்தான்
    மாரில் பால் மட்டும் வழியவில்லை
    கருணையும்தான் இன்று வழிகிறது
    காணும் எல்லா உயிரும் என் குழந்தைகளே

    பெண்மையில் புதைந்த தாய்மை
    பெற்ற பரிசு கருணையே என்றதனை
    புரிய வைத்தாய் நீயெனக்கு
    உனனைப் பெறுவதற்கு
    தவம் என்ன செய்தேனோ நான் அறியேன்

    அனுப்புனர்
    திருமதி ராதா

  3. அன்னை என்பவள்…

    அன்னை அறிவாள் பிள்ளைமொழி
    அழுகை சிரிப்பு அனைத்திலுமே,
    சின்ன வயதில் செய்யும்பல
    சேட்டை யெல்லாம் அறிவதுடன்
    பின்னை வாழ்வின் தேவையெல்லாம்
    பெற்ற தாய்க்குத் தெரிந்திடுமே,
    அன்னை யென்பவள் அதனால்தான்
    அறியும் முதலாம் தெய்வமாமே…!

    -செண்பக ஜெகதீசன்…

  4. பார்த்தாயா உன் அன்னையின்
    பரிதாபத்தை
    பகலெல்லாம் கணினிதான்
    அலுவலக வேலையால்
    என் மடியில்
    இரவுதான் நீ நிலவைப்போல்
    என் மடியில்தவழமுடிகிறது
    வேலையையும் விட முடியவில்லை
    வேதனையும் தீர்வதில்லை
    பொருளாதார சிக்கலினால்
    சோதனையை சகிக்கிறேன்
    உன் புன்னகை ஒன்று போதும்
    என் இன்னல்கள் மறைந்தே போகும்
    பொழுது முழுவதும் உன்னுடன் இருக்க விருப்பம்தான் ஆனால்
    விழுதாய் நீ வேரூன்ற
    உழைக்க வேண்டியது என் கடமை
    உன்னையும் என்னையும்
    பிரிப்பது வேலை வேலையை
    பிரியமுடியாதது ஒன்றேஎன் கவலை
    மழலைக்கு ஈடான சொர்க்கம் இல்லை
    மகனே நீ வந்தாய் சொர்க்கத்தை காட்ட
    சரஸ்வதிராசேந்திரன்

  5.   மகனும் தாயும்

    பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு  வந்தேன்
    உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன் !

    எனக்காக  கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்
    உன் குருதியை என்னக்கு பாலகப் பொழிந்தாய் !

    தோளையே  தூளியாக்கி  என்னை சுமந்து சென்றாய்
    கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய் !

    உனக்கோ ஆயிரம்  பிரச்சனை  இருக்கும்
    என்னை கட்டியணைப்பதில்தான் ஆனந்தம் இருக்கும் !

    உனது மடியும், இருகால்களுமே எனக்குத்  தொட்டில்
    உனது மூச்சே எனக்கு அடைக்கலம் !
     
    தவறு செய்தாலும் என்னை அன்புடன் நேசிக்கும் 
    தாயே,   நீயே  என் கண்கண்ட தெய்வம் !
     
    ரா.பார்த்தசாரதி
    ha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.