மகளின் அன்பு மடல்

 

பொன் ராம்


நான் உறங்க

நீ விசிற

நீ உறங்க

நான் விசிற

ஏன் மறுத்தாய்?

உன்னால் இன்று

உலகறிந்த அவைதனில்

தூண்டி விட்ட

பிரகாச விளக்காய்

சுடர் விட்டு

ஜொலிக்கின்றேன்!

பெருமை கொண்டு நோக்க

யாருமில்லை என்னருகில்!

யாருக்காக இந்த வாழ்க்கை

என பலமுறை

உப்பு நீர் தலையணை

உறவுகளிடம்

உரைத்திங்கு

வாழ்கின்றேன்!

அறுசுவையும் தட்டிலிட

அன்னையின் முகமோ அதிலாட

சாப்பிட்டால் என்னருகில் நீ!

கனவினில் வாழ்கின்றேன்!

சிதறிய கண்ணாடித் துகளாய்

சிரிக்கின்றேன்!

மிதந்த பந்தாய்

பெற்றவனின் பாசக்

கணைகளுக்குள்

கட்டுண்டு கிடக்கின்றேன்!

கனவில் வந்துதித்த

பயன் கருதா அட்சய பாத்திரமே!

நிலவு முகம் காட்ட மறந்தனையோ!

எத்தனை பிறவி வாழ்ந்தாலும்

உனது மகளாய்ப் பிறக்க

இறைவனிடம் வரம் கேட்க

கவிதைச் சிறகுகளுடன்

பறக்கத் துடிக்கும்  மகளின்

தமிழ் விடு தூது.

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க