“பத்ரமா இருங்கப்பா!”

தி.சுபாஷிணி

‘அப்பா’ என்று கூப்பிட்டவாறே அப்பாவின் வீட்டினுள் செல்கின்றேன். முன் வீட்டில் அப்பா இல்லை. காலையில் படித்த செய்தித்தாட்கள் பெஞ்சில் இருக்கின்றன. எப்பவும் யாராவது ஒரு நண்பர் அமர்ந்திருக்கும் நாற்காலி காலியாக இருக்கின்றது. அப்பாவின் நாற்காலியில் அவர் எப்பவுமே விரித்துப் போட்டிருக்கும் துண்டுதான் இருக்கின்றது. பக்கத்தில் இருக்கும் ஈஸிசேரைக் காணவில்லை. மேசையின் மேல் உள்ள திறக்கப்படாத கேரியர் என்னைப் பாவமாகப் பார்த்தது. தேவையில்லாமல் ஒரு நிசப்தம் என்னைச் சூழ்ந்து கொண்டது. அதை விரட்டித் தள்ளிக் கொண்டு உள் வீட்டில் நுழைந்தேன். அப்பா கட்டிலில் படுத்துக் கொண்டு இருக்கின்றார்-. எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. இந்தக் காலை வேளையில் படுக்கின்ற அப்பா இல்லையே என்னுடைய அப்பா என்று எண்ணம் ஓட, அதற்கு முன் என் கைகள் அவரது கையைப் பற்றிக் கொண்டன. அப்படியே அவரது அருகில் அமர்கிறேன். சிறுவயதில், இந்தக் கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த ஊரையே வலம் வரமாட்டோமா என்று ஏங்கி இருக்கின்றேன். இந்த அப்பாவின் மகன் நான் என்று பெருமையாய் எங்கள் தெருவில் நடக்க ஆசைப்பட்டிருக்கின்றேன். ம்…இதுவரை நடந்ததில்லை!

அப்படியே அவரையே என் கைக்குள் அடக்கி விட்டப் பரவசத்தில் இருக்கிறேன். அதை இன்னும் உறுதி செய்வதுபோல் அவரது உள்ளங்கை வெப்பம் என்னுள் பரவியது. மெதுவாக எனது ஒரு கையை எடுத்து அவரது நெற்றியில் வைத்துக் கொண்டே ‘அப்பா’ என்று அழைத்தேன்.

‘யாரு? சுந்தரமா!’ வாப்பா? என்ன இந்த நேரத்தில் என்று அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கினார் அப்பா.

‘ஆமாம்பா! சுந்தரம்தான்! என்னப்பா காய்ச்சல் அடிக்குதே!” என்றேன் நான்.
“இல்லைப்பா! கொஞ்சம் சளி பிடித்திருக்குதுப்பா! அதனால் உடலில் சூடு இருக்குது. மற்றபடி பயப்படும்படி ஒண்ணுமில்லைப்பா’ என்றார் அப்பா.

“அமாம்! இன்னேரத்துக்கு என்ன படுக்கையில் நீங்கள் படுத்துவிட்டீர்களே! சாப்பாட்டுக் கேரியர் கூட திறக்கவில்லை போலிருக்கு! கொஞ்சம் பயந்துதான் போய்விட்டேன் அப்பா. என்னுடன் வந்து இருங்கள் என்றால் அதற்கும் காரணங்கள் காட்டி தட்டிக்கழித்து விடுகிறீர்கள். உங்களிடம் எங்களால் பேசி ஜெயிக்க முடியாது போய்விடுகிறது” என்றேன் நான்.

சரி! அதெல்லாம் இருக்கட்டும் சுந்தரம்! எழுந்து வா! என் படிக்கும் அறைக்குப் போகலாம் என்று அப்பா என்னையும் அழைத்துக் கொண்டு முன் வீட்டிற்கு வந்தார்.

அப்பா! நான் வரும்போது இங்கு யாரும் இல்லை. அதுதான் பயந்து போய்விட்டேன்பா என்றேன் நான்.

“என்னய்யா! பேரன் பேத்தி எடுத்துவிட்டாய். இன்னுமா குழந்தைபோல் பயப்படுவார்கள். இதோ பார்! நான் சரியாகத்தான் இருக்கின்றேன். பரிட்சை நேரம் என்பதால் படிக்கிற பசங்க எல்லாம் அவரவர் வீட்டில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லா சந்தேகங்களையும் நான் அவர்களுக்கு தீர்த்து வைத்துவிட்டேன். அது ஆசிரியர் தொழில் பார்த்ததின் நீட்சி என்னலாம். நம் வீட்டின் எதிரில் நடக்கும் கலை அறிவியல் மன்றம் இன்று நடைபெறவில்லை. இதனால் அதற்கு வரும் நண்பர்களும் இங்கு வரவில்லை. இதற்குப் போய் பயந்து போவாங்களா!” – இது அப்பா. பேசிக் கொண்டே அவரது நாற்காலியில் அமர்ந்தார். அமருமுன் தன்னிச்சையாக அவரது கைகள் நாற்காலியில் தொங்கிய துண்டை சரி செய்தது. சென்றமுறை நீயும் மருமகளும் வந்தபோது வாங்கிக் கொடுத்து விட்டுப் போன துண்டு இது என தன்னிடம் சொல்வது போல் என்னிடம் கூறிக் கொண்டே அமர்ந்தார் அப்பா.

நானும் பக்கத்தில் தரையில் அமர்ந்து கொண்டேன். என் உயரத்திற்கும் அவரது மடிக்கும் உயரம் சரியாக இருந்தது. அவரது கைகளில் என் முகம் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பாதுகாப்பாக இருந்தது போல் உணர்ந்தேன். அவரும் என்னைத்தன் கைகளில் தாங்கியபடி அசையாமல் அமர்ந்திருந்தார். அந்த அறையை இருவரின் உணர்வுகள் கலந்து நிரப்பின. இந்நிலையை முடிக்க நான் விரும்பவில்லை. அதுவாகவே முடியட்டும் என வாளா இருந்தேன்.. அப்பாதான் “என்னப்பா! என்ன விஷயம்” என்று கேட்டு இதை முடித்து வைத்தார்.

“உங்க மருமகள் ராஜியின் தங்கை மகன் மணிப்பூரைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடிக்க முடிவெடுத்துள்ளான். நானும் ராஜியும்தான் அப்பா இத்திருமணத்தை முன்னின்று நடத்துகின்றோம். இது திடீரென எடுத்த முடிவு. நாளை மறுநாள் சென்னைக்குப் போய், அங்கிருந்து முக்கியமானவர்களை அழைத்துக் கொண்டு விமானத்தில் போகிறோம்ப்பா!” என்றேன் நான்.
“நல்ல விஷயம்தானே சுந்தரம்! ஏன் தயங்குகிறாய் அய்யா! என்னுடைய வாழ்த்துக்களை மணமக்களுக்குத் தெரிவித்துவிடு. நல்ல காரியம்! நாமதான் இதுபோன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும்! சிறப்பாக செய்வாய் நீ. அதும் உன் மனைவி ராஜி மிகவும் அன்பானவள். எளிதில் பழகிவிடுவாள். தெளிவாக சிந்திப்பவள். நீதானேப்பா உன் தங்கைகளுக்கு மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்து வைத்தவன். இதில் என்ன தயக்கம்! வேறு மாநிலம் என்பதாலா! நமக்கு மனிதர்கள்தாம்பா முக்கியம். மாநிலம் அல்ல! ஜமாய்த்து விடுப்பா. இருபக்க உறவுகளுக்கும் அனுசரனையாய் இருந்து விட்டுவா” என்று கடகடவென பேசி முடித்துவிட்டார் அப்பா.
அப்பா! எப்பவுமே அப்படித்தான். அவருக்கு எப்பவும் நல்ல விஷயங்கள்தான் மனதுக்குப்படும். அப்பா! ஆனந்தமாய்த் தானும் இருந்து கொண்டு தன்னை அடுத்தவரிடமும் அந்த ஆனந்தத்தை அள்ளிக் கொடுத்துவிடுவார்.

‘நீங்கள் சொல்வது சரிதான் அப்பா! நான் தயங்குவது…’ என்று இழுத்தேன்.
‘என்னப்பா! எதுவாகிலும் தயங்காமல் கூறு’ என்று எனது தயக்கத்தின் திரையை விலக்க முற்பட்டார் அப்பா!

“நாம் இருப்பதோ தென்கோடி, திருமணம் நடைபெறும் இடமோ வடகோடி. அங்கு சென்று திருமணம் முடித்து விட்டு வீடு திரும்ப 15 நாட்கள் ஆகும்பா. அதுதான் யோசிக்கிறேன்” என்று எனது மனத்தயக்கத்தை கூறினேன் அவரிடம்.

“சுந்தரம்! நீ தயங்காது பயப்படாது சென்று வா. நீங்கள் இருவரும் வாழ்வினைத் தொடங்கி வைக்கப் போகிறீர்கள். எனக்கு ஒன்றும் ஆகாது. மேலும் இது வெறும் சளித் தொந்தரவுதான். என் நண்பர்கள் அடிக்கடி வருகிறார்கள். என்னைப்பார்த்துக் கொள்வார்கள். உனக்குத்தான் தெரியுமே. நானும் என் உடல்நலத்தில் மிகவும் அக்கறைப்படுபவன் என்று இன்னும் சில வேலைகள் இருக்குப்பா.” என்றார் அப்பா.

“அப்பா! அவ்வளவு தூரம் போகிறோமே என்றிருக்கிறது” என்றேன் நான்.
“இதோ பாரு! சுந்தரம்! எந்த மனத் தடையுமில்லாது போய் வா. நீ எப்போதும் கூறிக் கொண்டிருப்பாயே அன்பு நம்மைப் பத்திரப்படுத்தும் என்று. அந்த அன்பு என்னைப் பத்திரப்படுத்தும். சலனப்படாமல் சென்று வா. ராஜியிடமும் நான் விசாரித்தேன் என்று சொல்லு. பணத் தேவையுமில்லை. என்னிடம் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றது” என்றார் அப்பா.
“நீ கிளம்புய்யா! உனக்கு ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்யும் வேலை பல இருககும். நீ வரும் போது வந்து பார். இதை விட பிரமாதமாக இருப்பேன்” என்ற அப்பாவிடம் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். உடம்புதான் கிளம்பியது. மனம் அங்கேதான் கிடந்தது. ‘பத்ரமாய் இருங்கப்பா’ என்று கூறிவிட்டுத்தான் என்னுடன் சேர்ந்து கொண்டது.

அப்பா வாழ்த்தி அனுப்பி வைத்தாற்போல் அழகாய் திருமண வேலைகள் நடந்தன. இரு பக்கத்தாருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. மாநிலம், மொழி எதுவும் இம்மகிழ்ச்சிக்குத் தடையே இல்லை. இங்கு எப்படி அக்கறையும் அன்பும் இருப்பதுபோல்தான் அவர்களிடமும் இருக்கின்றது. இந்தப் பெண்களிடம் என்ன மாயம் இருக்கிறது என்று தெரியவில்லை. என்னுடைய ராஜியாகட்டும், அவளுடைய அக்கா, அம்மா, தங்கைகள் மிகவும் சரளமாக தயக்கமின்றி பார்த்த மாத்திரத்தில் பழகி விட்டனர். ஏதோ அவர்களுடன் காலங்காலமாய் பழகினாற்போன்று அவர்கள் மொழி தெரிந்தவர்கள் போன்றும் மணிப்பூரையே கலக்கி விட்டனர். எப்படி, நம் தமிழ்நாட்டில், தான் பிறந்த ஊரில் நடக்குமோ அப்படியே ஒரு சடங்கு விடாமல் நடத்தி, அவர்கள் சடங்குகளைக் கேட்டு அதையும் செய்யச் சொல்லி விட்டனர். புது வாழ்வைத் தொடங்கப் போகிறார்கள் அல்லவா! எந்தப் பக்க மனத்தடங்கலும் வந்து விடக் கூடாதாம். இதை இடை இடையே சொல்லி, இறுதியிலும் சொல்லி திருமணத்தை வெகு சிறப்பாக இயல்பாக நடத்தி விட்டார்கள். அனைவருக்கும் பரம திருப்தி. விமானம் ஏறி சென்னை வந்ததும், ஊர் செல்லும் இரயிலில் கால் வைத்ததும் அப்பாவின் நினைவு என்னைப் பற்றிக் கொண்டு விட்டது. சொல்லி வைத்தாற்போல் ராஜியும் ‘என்னங்க! மாமாவின் நினைப்பு வந்துட்டுதுங்க. ஊர் சேர்ந்த முதல் காரியமாய் மாமாவைப் பார்க்கப் போகணும்’ என்று கூறினாள் ராஜி. அதற்கு என்னிடமிருந்து அவள் பதிலை எதிர்பார்க்கவில்லை.
இரயில் கிளம்பியது. நினைவுகளும் கிளம்பி விட்டன. இரயிலின் தாளகதியில் இணைந்து கொண்டன.

அப்பா ஆசிரியர் தொழிலைத்தான் முதலில் மேற்கொண்டார். ஆனாலும் எங்கப்பாவிற்கு நாங்கள் என்ன படிக்கின்றோம்? எப்படி படிக்கின்றோம் என்றே தெரியாது. அவ்வளவும் அம்மாவின் மேற்பார்வையில் நடந்தது. நாங்களும் எந்த இடயூறும் செய்யாது படித்துக் கொண்டிருந்தோம். வீட்டில் நூலக அளவிற்கு நூல்கள் இருக்கும். பல பத்திரிகைகள் வரும். எனவே எல்லாவற்றையும் படிக்க வாய்ப்பு இருந்தது.

அப்பா படிக்கும் போதே ‘வெள்ளையனே வெளியேறு’ என்னும் இயக்கத்தால் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தினார். கதர்த்துணி விற்பதும், சுதந்திரப் போராட்டத்திற்காகத் தகவல் பரிமாற்றம் செய்யும் பணியிலும் ஈடுப்பட்டார். மேலும் பாரதி பாடல்கள் என்றால் அப்பாவிற்கு உயிர். காந்தியத்தின் வழி நடந்தார். பின் படிப்பை முடித்துவிட்டு எங்களூர் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். ஆசிரியர் தொழிலோடு காந்திய சிந்தனைகளையும் இயக்கத்தையும் மக்களிடையே கொண்டு சென்றார். இதற்காகத் தனி மன்றம் அமைத்தார். பல பிரமுகர்களை அழைத்து வந்து பேசச்செய்தார். அவரது நேர்மை தனக்கு இடையூறு தரும் என்று நினைத்தவர்கள் உடனே அப்பாவை வேறு ஊருக்கு மாற்றி விடுவார்கள். ஆனால் நாங்கள் அம்மாவுடனே இருந்து விட்டோம். மாற்றலாகி வேறு ஊர் சென்றாலும் அப்பா சும்மா இருக்க மாட்டார். மன்றம் தொடங்குவார், பத்திரிகை நடத்துவார். இப்படிப் பல ஊர்கள் அவரைப் பார்த்து விட்டன. அவர் தொடங்கிய பல இலக்கிய சிந்தனை மன்றங்கள் இன்றளவும் அந்தந்த ஊர்களில் பல இருக்கின்றன. அந்தந்த ஊர்களுக்கு எப்போதாவது செல்ல வாய்ப்புக் கிடைத்தால் அவர்கள் “உங்கள் அப்பா தொடங்கிய மன்றம் இது தம்பி!” என்று கூறுவர். எனக்கு மிகவும் பெருமிதமாக இருக்கும்.

ஆனால் அப்பாவுடன் ஒருதரம்கூட எந்த ஊருக்கும் சென்றதில்லை. ஏதாவது திருமணம் என்று நாங்கள் கிளம்பினால்கூட அப்பா, தான் தங்கியிருந்த ஊரிலிருந்து நேராக வருவார். அங்கிருந்து நேராகத் திரும்பிச் சென்று விடுவார். அங்கு வந்த போதும் நாங்கள் வேறு சில நான்கு பேர்களோடுதான் நிற்க வேண்டியிருக்கும். சிறுவயதில் இது மிகவும் பாதித்தது. ஏன் இன்னமும் அப்பாவின் சுண்டு விரல் பிடித்து ஊர் சுற்ற வேண்டும். வேண்டுமோ வேண்டாமோ அர்த்தமிலாத கேள்விகளையும் அவரைக் கேட்டுத் துளைத்தெடுக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது. ஏன் இன்னமும் அது நிறைவு பெறாத ஆசையாக தங்கிவிட்டது. இதோ! இந்த இரயில்கள் கடக்கும் விளக்குக் கம்பங்களாய், கடந்தாலும், நினைவில் கடக்காது நின்று கொண்டுதான் இருக்கின்றது.
அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனந்தமாய் சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் தன் கருத்துகளை நேர்மையாய் இருப்பதால் நன்கு வலியுறுத்திக் கூறுவார். மற்றவர் கருத்துகளுக்கு இடம் கொடுப்பார். இதெல்லாம் நான் வளர்ந்தபின் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டவை. அவர் வாழ்வின் வேதம் கூறியவையாகும்.

தன் ஆசிரியர் வேலைப் பணி நிறைவு ஆனதும் முன்பு பிரிந்ததற்கெல்லாம் ஈடுகட்டுவது போல் அம்மாவும் அப்பாவும் விளங்கினார்கள். அப்பாவின் தெளிவான அறிவு, அம்மாவின் அன்பால் மேலும் மிளிர்ந்தது. எப்போதும் வீடு அப்பாவின் நண்பர்கள் கூட்டமாகத்தான் இருக்கும். நாங்கள் எல்லோரும் அவரவர் வாழ்வை நோக்கிப் பயணப்பட்டோம்.

அம்மாவும் அப்பாவும் இணைநலங்களாய் வாழ்ந்தனர். முதலில் அம்மா அப்பாவை முந்திக் கொண்டார். அப்பாவை எங்கள் வீட்டிற்கு வந்து விடும்படி நானும் ராஜியும் அழைத்தோம். என் உடன் பிறப்புகளும் மகிழ்ந்தனர். அப்பா அம்மாவிற்கு செய்யும் சில சடங்குகள் முடிந்தபின் எங்களுடன் வந்தார். எந்த ஒரு கருத்தும் கூறவில்லை. தனக்காக வாழ்ந்த ஒருத்தியைப் பறிகொடுத்த துயரம்தான் அவரிடம் இருந்தது.

இரயிலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க எனக்கு மிகவும் படபடப்பாக இருந்தது. இரயிலின் வேகத்தாலா அல்லது அப்பாவின் நினைவுகள் செய்த படபடப்பா என்று புரியவில்லை. ராஜியும் என்னை ஒரு மாதிரி பார்த்தாள். பின் அவள் சகோதர சகோதரிகளிடம் பேசத் திரும்பி விட்டாள்.
அந்த நாட்கள் இன்னமும் பசுமையாய், இதே கடந்து செல்கின்ற வெய்யில் தின்னும் பச்சைத்தாவரமாய் என் இதயத்தில் பதிந்து கிடக்கின்றன. அப்பாவை அழைத்து வந்ததும் அப்பாவிற்கான அறையைக் காண்பித்தேன். தினந்தோறும் அப்பாவுடன் வாக்கிங் போக வேண்டும் என்று நினைத்தேன். அந்த வயதில் நிறைவு பெறாத ஒவ்வொன்றையும் செய்யத் துடித்தேன். அப்பாவைக் கடைகள் இருக்கும் தெருவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். என் நண்பர்கள் வீட்டிற்குக் கூட்டிச் சென்று இவர்கள் என் நண்பர்கள் அப்பா என்று காட்டத் துடித்தேன். அப்பாவும் நானும் ஒரு சினிமா பார்க்க வேண்டும், இலக்கிய கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று இப்படிப் பற்பல.

எதுவும் நிறைவேறவில்லை, நடைபெறவில்லை. அவர் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு காரில் வந்ததுதான் இருவரும் ஒன்றாக வந்த பயணம். அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அப்பாவை அழைத்துச் செல்லத்தயாராக இருந்தால், அவருக்கு அவரைப்பார்க்க, துஷ்டி கேட்க, இலக்கியப்பகிர்தல் என ஆட்கள் வந்து விடுவார்கள். அவரே கிளம்பலாம் என்றால் அன்று பார்த்து என் நண்பர்கள் இல்லை உறவினர்கள் வந்துவிடுவர். அப்பாவைப் பார்க்க அதிகம் பேர், அப்பா இங்கு இருப்பது தெரிந்து வரத் தொடங்கினர். அப்பாவிற்கு இது மிகவும் கஷ்டமாகி விட்டது. தன்னால் தன் மகனின் இயல்பு வாழ்க்கை பாதிப்பதாக உணரத் தொடங்கினார். அவரால் நண்பர்கள் இல்லாது, நாட்டு நடப்பின் கவலைகளைப் பகிராது இருக்க இயலாது. இதை உணர்ந்ததும், ‘சுந்தரம்’ என அழைத்தார் அப்பா. “வா வெளியில் இப்படி ஒரு உலா போயிட்டு வரலாம்” என்று அப்பா அழைத்தார் என்னை.

எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்! ‘அப்பாவா அழைப்பது’ என்று ஆவலாய் ராஜியிடம் கூட சொல்லவில்லை, கிளம்பிவிட்டேன். ராஜி இது பற்றிக் கிண்டலடிப்பது காதில் விழுந்தது. எனக்கு அப்பாதான் முதன்மையாகத் தெரிந்தார். அவரது அழைப்புதான் உன்னதமாகத் தோன்றியது. இருவரும் காலாற நடந்தோம். தேர்முட்டித் தாண்டி கோயில் குளத்தருகே போய் அமர்ந்து கொண்டோம். அன்று எந்த விசேஷ நாள் இல்லை போலிருக்கின்றது. குளத்தின் படிக்கட்டில் எந்த மனித அரவமும் இல்லை.

அப்பாதான் முதலில் பேச்சைத் தொடங்கினார். “சுந்தரம்! உன் பொருளாதார வசதியெல்லாம் எப்படி இருக்கின்றது. ஒன்றும் கவலைப்படும்படி இல்லையே! சமாளிக்கும் அளவில்தானே இருக்கிறது” என்றார். எனக்கு திடுதிப்பென்று பொருளாதார வசதியைப் பற்றிக் கேட்டவுடன் எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது ஒரு பேச்சின் துவக்கம் என்று பின்னர் புரிந்து கொண்டேன்.
சுந்தரம்! நான் சொல்லப் போவதை என் உணர்வின் போக்கில் புரிந்து கொள்வாயா! என்று புதிர் போட்டார். “எதாக இருந்தாலும் சொல்லுங்கப்பா! உங்களப்புரிந்து கொள்ளும் அறிவை நீங்கள் எனக்கு அளித்திருக்கிறீர்கள் அப்பா! தயங்காது கூறுங்கள். உங்களுக்கு ஏதாவது பணத் தேவையாப்பா-? உடனே சொல்லுங்கள். என்னிடம் அதைத் தாங்கும். அதையும் கடந்தால் தம்பிகள் இருக்கிறார்கள்” என்றேன் நான்.

“சே! பணம் எனக்குப் போதுமான அளவு இருக்கின்றது. உங்களுக்குத் தெரியாது என்னிடம் என்னப்பா இருக்கும்! வாழத் தொடங்கின காலத்திலிருந்தே பொது வாழ்வில் ஈடுபட்டவன் நான். அதினின்று என்னை விலக்கிக் கொள்ள முடியவில்லை” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, “அதனால் என்னப்பா! நாங்களோ அம்மாவோ உங்களை ஒருபோதும் தடுத்ததில்லையே!” என்றேன் நான்.

“அதனால்தான் நான் உன்னிடம் கூறுகின்றேன். என்னை நீ நன்கு புரிந்து கொள்வாய் என்று. என் நண்பர்கள் இங்கு நேரம் கெட்ட நேரத்தில் வருகிறார்கள். அதனால் உங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கிறது. உன் மகள் அனுக்குட்டிக்கு பரீட்சை நேரம் வேறு. சதா ஆட்கள் வந்து போய்க் கொண்டிருப்பதும், சத்தம் போட்டு விவாதிப்பதும் இடைஞ்சல்தானேப்பா! பாவம்! ராஜி அவளும் எத்தனை பேரைத்தான் கவனிக்க முடியும். நான் வேலை பார்க்கும்போது நீயே, குடும்பப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாய். இனியும் உன்னை சிரமப்படுத்த விரும்பவில்லை. மேலும் அந்த வீடும் சும்மாகத்தானே இருக்கப்போகிறது. நான் இருக்கும் வரை அங்கு இருக்கிறேனே அய்யா!
என் நண்பர்களும் சுதந்திரமாக வந்து போவார்கள். நீ கவலைப்படாதே! என்னால் என்று முடியாது என்று தோன்றுகிறதோ அன்று உன்னிடம் தானே அய்யா வருவேன்” என்று என் கைபிடித்து அவர் கையில் வைத்துக் கொண்டு கேட்டது, “தயவு செய்து தடுத்து விடாதே” என்பது போல் இருந்தது எனக்கு.

அப்பாவுடன் ஆறு வயதுச் சிறுவனாய், பத்து வயதுப் பாலகனுக்கு இணையாக நடக்கும் இளைஞனாய் நடக்க நினைத்ததைத்தாண்டி, இப்போது அறுபது வயதில் தோழனாய் அன்று அவருடன் இருந்தது வித்தியாசமான அனுபவமாய் இருந்தது. என்னை அவர் அப்படி மதித்ததை நினைத்துப் பூரித்துப் போய்விட்டேன். அந்த பூரிப்பே அவரை உணர்ந்த சந்தோஷத்தைக் கொடுத்து, பெருமிதம் கொள்ளச் செய்தது.

“சுந்தரம்! உற்றார், உறவினர், நண்பர்கள் வேறுவிதமாக உன்னை நினைப்பார்களே என்று யோசிக்கிறாயா அப்பா! அவர்கள் கேட்டால் சொல், அப்பாவால் அவர் இருந்த வீட்டை விட்டு வர இயலவில்லை என்று. மேலும் அவரது சமுதாயப்பார்வை இன்னமும் முடிவடையவில்லை. அதற்கு அந்த வீடுதான் வசதி என்று கூறிவிட்டார் என்று சொல்” என்று எனக்கு சொல்லிக் கொடுத்தார்.
என் அப்பாவை நினைத்து எனக்குப் பெருமையாக இருந்தது. அம்மா இறந்ததும் ‘வா அப்பா என்னிடம்’ என்றதும் தன் பைநாகப்பையைச் சுருட்டிக் கொண்டுவரும் பெருமாள் போல் என்னுடன் மறுபேச்சுப் பேசாது வந்தார். என்னிடம் இருந்து என் ஆசையை, என் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து விட்டு, தன் உணர்வை எவ்வளவு அழகாக யாரும் நோகாது எடுத்துரைத்து விட்டார்.
இதோ! இந்த பகல் கழித்த இரவின் மென்குளிர்போல், குறைந்த ஒளி இருட்டின் அழகுபோல் அந்த அனுபவம் எனக்கு இன்றும் என்னிடம் இருக்கின்றது. அந்த அனுபவத்தின் நெகிழ்ச்சியில் இரவின் ஆடை நெகிழ, சூரியனுக்கு வழி கிடைத்தது.

விடிந்தும் விடியாத காலையில் வீடு வந்து சேர்ந்தோம். வந்ததும் வராததுமாக ராஜி ஏதோ மும்முரமாக பையில் போட்டாள். காலை உணவு தயாரித்தாள். இருவரும் உண்டோம். உடனே ராஜி என்னிடம் அந்தப் பையை கொடுத்தாள். நான் அப்பாவின் வீடு நோக்கிப் பயணப்பட்டேன்.
இளம் வெய்யில், கொஞ்சம் கண்ணைக் கூசியும் கூசாமலும் இருந்தது. இந்தக்கூச்சம் அன்றைய தினத்தை அழகாய் துவக்கி வைத்தது. அதன் சந்தோஷத்தில் அப்பாவின் வீட்டில் நுழைகின்றேன்! அப்பா முன் கட்டில் நாற்காலியில் இருக்கிறார். பெஞ்சின் கீழே டிபன் கேரியர் சாப்பிட்ட அடையாளம் பதிந்துக் கிடக்கின்றது. என்னைப் பார்த்ததும் அவரது நண்பர்கள் எழுந்து வருகின்றனர். அப்பா என்னைப் பார்த்து விட்டார்.

அப்பா! சுந்தரமா! வாப்பா! எல்லாம் நல்லபடியா நடந்ததா! வா! உள்ளேவா! நாம் அங்குபோய் பேசலாம் என்கிறார் உற்சாகமாய். தன் நண்பரிடம் ஊருக்குப் போய்விட்டு வந்திருக்கின்றான். பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன. நான் கொஞ்சம் பேசி விட்டு வருகின்றேன் என்று என்னையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

நான் ‘அப்பா’ என அவர் கைக்குள் என் முகம் புதைத்து அழுகின்றேன்.
உன் அன்பு என்னைப் பத்திரப்படுத்தும் என்று கூறினேன்! பத்திரமாகத்தான் இருக்கிறேன் என்று என்னை ஆசுவாசப்படுத்தினார் அப்பா.

திருமணக்கதைகளை விளாவாரியாகக் கூறி, ராஜி கொடுத்துவிட்டப் பையைக் கொடுத்ததும், அவளது அன்பை அதில் அவர் கண்டார். அவர் கண்களில் அருவியாய் கொட்ட, அவரது வீட்டையே அது மூழ்கடித்துக் கொண்டிருந்தது. “பத்ரமா இருங்கப்பா” என் வார்த்தைகளை அதற்கு அணையாக வைத்துவிட்டு என் வீட்டிற்கு நான் கிளம்பினேன்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க