-பொன். இராம்

“என்னங்க?. . . கோவிந்தனைப் பார்த்தீங்களா? நம்ப பொண்ணு கலாவுக்கு ஒரு புடவை வாங்கணும்னு தேடிக்கிட்டிருக்கேன்”

“யாரு?. . . அந்த பழைய சைக்கிள்ல துணியால மூட்டை கட்டித் தெருத் தெருவா வித்துட்டு வருவாரே அவரா?”

“ஆமாங்க! அவரைத்தான் தேடுறேன்”

சும்மா   செல்ல கைல வைச்சுக்கிட்டு—–எப்பப் பாத்தாலும் பிரஸ் பண்ணிக்கிட்டு….

காலேஜ் பசங்க மாதிரி காதுல வேற  செருகியாச்சு……

பிடுங்கி அதை எறிந்தாள் நந்தினி.

நந்து….உனக்கு விஷயமே புரிய மாட்டேங்குதே…கரெண்ட் டேட் சயின்ஸ் விஷயமெல்லாம் தெரிஞ்சுடணும். இல்லேன்னா வேலை பாக்கற இடத்துல குப்பை கொட்ட முடியாது.

அதுக்காக கண்ணுல கண்ணாடி வேற—– வெள்ளெழுத்து ஆரம்பிச்சு வருஷக்கணக்கா ஆகுது.

இந்த  செல் கண்டுபிடிச்சவன் நம்பரெல்லாம் கொஞ்சம் பெரிசா வைக்கப்படாதா? எனக்கொரு டவுட்.

‘ பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயங் கொள்ளலாகாது பாப்பா ‘ ன்னார் பாரதியார்.

”பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே”ன்னும் அவர்தானே பாடியிருக்கார். இதுக்கு என்ன பொருள்?

ரெண்டும் ஒரே ஆளாயிருந்தாலும் அவர் எந்த நேரத்துல பாடினாரோ? கவி தன் கற்பனைச் சிறகை எப்போது சிறகடிக்குமோ? யாருக்குத் தெரியும்?

சரி! என்னவோ கேட்டியே!

பேச்சை மாத்தாதீங்க……விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்னாங்களாம்!

புடவைக் கடை கோவிந்தனைக் கேட்டேன்……

“இல்லையே! நான் அவரைப் பாத்துக் குறைஞ்சது மூணு மாசமாவது இருக்கும். அவர் வீடு எங்கன்னு தெரியுமா?”

“எனக்குத் தெரியாது. அடுத்த தெரு அம்புஜம் மாமிக்குத் தெரியும். கேட்டுச் சொல்றேன்”

“ஊரிலே எவ்வளவோ ஜவுளிக்கடையெல்லாம் இருக்கும் போது ஏன் கோவிந்தனைத் தேடிக்கிட்டிருக்கே?”

“ரங்கநாதன் தெருவில போனா ஆயிரம் கடை இருக்குறது எனக்கும் தெரியும். கோவிந்தன் ஒரு ராசியான ஆள். அவர் கையால ஒரு நூல் புடவை வாங்கினா கூட வாங்கினவங்க வீட்லயும், வாங்கினவங்களுக்கும் நல்லது நடக்கும்.இது உங்களுக்குத் தெரியாதா?

ஏன் நம்ம மூத்த  பொண்ணு லதாவுக்கு அவர்கிட்ட புடவை வாங்கினதக்கப்புறம் தானே மாப்பிள்ளையே அமைஞ்சது. அதை மறந்துட்டீங்களா?”ஆனாலும் கார்த்திகை நட்சத்திர மாப்பிள்ளை தானே கிடைச்சது..

ஏன் அதுக்கென்ன….இந்த பொம்பளைங்களே இப்படித்தான்….அமையற வரைக்கும் அப்படி…இப்படின்னு சொல்ல வேண்டியது……..அதுக்கப்புறம் ஏமாத்தி செஞ்சுட்டாங்கன்னு ஒரே குறை பாட வேண்டியது. பொண்ணப் பாத்துட்டு ஜாதகம் பாக்கறது, மாசக்கணக்குல வாழ்ந்துட்டு ஜாதகம் பாக்கறது இதெல்லாம் எனக்குப் பிடிக்காது.

ஆமா…. கார்த்திகை நட்சத்திரத்துக்காரங்ககிட்ட கல்மிஷம் இருக்கும். கண்மூடித்தனமா சொந்தங்ககிட்ட பாசம் இருக்கும். ஆனா வெளியே ஒண்ணு உள்ளே ஒண்ணா இருக்கும். அடுத்தவங்க அந்தரங்கம்னு தெரியும்.இருந்தும் மத்தவங்க கிட்ட சொல்றதுன்னா முதல் ஆளுதான். இது சரி தப்புன்னு ஒரு வயசுக்கு மேல தான் அவங்களால உணர முடியும். தன்னை வெளிப்படுத்திக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க……”அறை பறையன்ன கயவர்”னு தெரியுமா?

உன் ஜாதகம் பாக்கற புத்திய விட மாட்டியா? பொண்ணு கலியாணம் முடிஞ்சு ஒரு புள்ளையும் பெத்து அது அஞ்சு படிக்குது. இப்ப போய் விதைச்ச நெல்லை பிடுங்கிப் பாத்த மாதிரி……………திரும்பப் புது அத்தியாயமா எழுத முடியும்?பொண்ணு ஒங்கிட்ட வந்து குறை படிச்சாளா?சும்மா பிலாக்கணம் படிக்காதே.

ஜோதிடம்  ஒரு சயின்ஸ் அது எல்லாருக்கும் பாக்க அமையாது. அதுக்கு முக ராசி வேணும். ………..அப்படியென்று இழுத்தார். சொன்னா கோபிச்சுக்கக் கூடாது.பெண்கள் ஜாதகம் பார்ப்பது வீட்டுக்கு நல்லது கிடையாது. சொன்னா நீ திட்டுவ….ஆனாலும் நீ சொன்னது கரிநாக்கு போல டாண்ணு தான் நடந்துக்கிட்டு இருக்கு….இருந்தும் உன்னைப் பாராட்ட மாட்டேனே…..என்று சிரித்தார் ராம் அர்த்தத்துடன்.

முப்பது வருடமாக என்னைக்கு நீங்க என்னை பாராட்டியிருக்கீங்க………………. விட்டா பெண் படிக்கக்கூடாதுன்னு சொல்வீங்களா?

சிரித்தபடி முகத்தை மலர்த்தினாள் நந்தினி. அவர்களுக்குள் மலர்ந்த தாம்பத்தியத்தின் சுவை அவள் பேச்சில் இனித்தது. அவள் அதைப் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. கணவன் சொல்லும் வாயசைவிற்காகக் காத்திருந்தாள். .இல்லடா! பெண்கள் படிக்கணும். தன்னை,தன்னைச் சார்ந்து வாழும் சமூகம் இவற்றிற்குத் தொண்டு செய்து வாழணும். நேர்மையான முறையில. அதுக்குத்தான் உன் அறிவை விருத்தி செய்வதை நான் இவ்வளவு வருஷம் ஆகியும்  தடுக்கல. ஆனா…….  நந்து……………..நட்சத்திரம் பாத்திருக்கியா…………அதைச்சுத்தி இருக்கிற எல்லாவற்றையும் எனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா? எல்லாவற்றையும் தெரிந்தவர்கள்தாம்மா சரியா வாழ்க்கையைச் சொல்ல முடியும்.

வெட்டித்தனமா சில பேர் கிடைச்ச சுவடிய வைச்சிக்கிட்டு வயித்தைக் கழுவ உட்கார்ந்து பொழுதைக் கழிக்குதுங்க. ஹூம்…நான் என்ன சொன்னாலும் மாறவா போற….சொல்ல வந்ததைத் தெளிவா சொல்லு…

“ஆமா! அத நானும் மறந்துட்டேன். “இப்ப கலாவுக்கும் மாப்பிள்ளை தேடிட்டிருக்கோம். எதுவும் அமையல. அதான் கோவிந்தன் கையால ஒரு புடவை வாங்கலாம்னு. . .”நீ கூட பர்ப்பில் கலர்ல லதா கலருக்கேத்த மாதிரி எடுத்த. நான் கூட ஏன் லைட் கலர்ல எடுத்தேன்னு கேட்டேன்”அந்தக் கதை தானே…….

அதே தாங்க………..

அவனவன் இருக்கற தகப்பனைச் செத்ததாச் சொல்லி பிள்ளையை பத்து மணிக்கு மேல ஓட விடுறானுங்க……தவிக்க விடுறானுங்க……….இந்த காலத்துல போய் நீ ……….

என்ன சொல்றீங்க….ஒண்ணுமே புரியலையே……..

ஜாதகம், சுவடின்னு ….. ஒரு பழைய கதை அம்புலிமாமா கதை மாதிரி இருந்தது. எதுல படிச்சோம்னு கவனமில்லை. நீ ஏதோ சந்தேகம்னு கேட்டாயே? மறுபிறப்பு பத்தி….அதைப்பத்தி நெட்ல தேடினேன். ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொல்றாங்க….  என்ன இருமற.. ஹாஸ்பிடல் போகலையா……..

போகணும்….ஆனா மருந்துக்கு ஆயிரத்துக்கு மேல செலவாகும்….சேல எடுத்துடலாம் அதுக்கு.. உடம்புக்கு வந்தா செத்தா போய்டுவோம் இந்த காலத்துல……

உன் ஆசைய ஏன் கெடுக்கணும்? இந்தப் பொண்ணுக்குப் பரணி நட்சத்திர மாப்பிள்ளையைப் பாப்பமா? கோவிந்தன் அட்ரஸைக் கொடு. நான் போய்ப் பாத்து வர்றேன்” உன் நம்பிக்கையைப் போய்க் கெடுப்பானேன்! பரணி தரணி ஆளுமில்லையா?

நந்தினி அம்புஜம் மாமியிடம் அட்ரஸைக் கேட்டு வாங்கிக் கொடுத்து விட்டாள். அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. பகல் 12 மணி வாக்கில்  டிவிஎஸ் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சாலிகிராமம் கிளம்பி விட்ட ராமை உள்மனம் ஏதோ எச்சரித்தது. அதை வெளிக்காட்டாமல் சாலிகிராமத்தை அடைந்தார் ராம்.

“சாலிகிராமம், தசரதபுரம் 3வது தெரு, 10ம் நம்பர் வீடு இது தானே?”

“ஆமாம்! நீங்க யாரு? எங்கேயிருந்து வர்றீங்க?” என்றபடி வந்தாள் வெள்ளைப்புடவை உடுத்திய பெண் .

“என் பேர் ராம். திருவல்லிக்கேணியிலிருந்து வர்றேன். இங்க கோவிந்தன்னு புடவை விக்கறவர் இருந்தாரே!

“ஆமாங்க!”

“அவரைப் பாக்கலாம்னு தான் வந்தேன். அவர் இல்லையா?”

பெண்ணை உற்றுப்பார்க்கும் பழக்கம் ராமிடம் இல்லையென்றாலும் அவள் கண்களில் தெரிந்த ஒளி அவரை என்னவோ செய்தது.

நீங்க என்ன விஷயமா வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

“உங்க வீட்டுக்காரர் கிட்ட ஒரு புடவை எடுத்த ராசி என் மூத்த பொண்ணுக்கு கல்யாண யோகம் கூடி வந்த மாதிரி என் இளைய பொண்ணுக்கும் ஒரு புடவை அவர் கையால எடுத்து கட்டலாம்னு நினைச்சி வந்தேம்மா!”

கொஞ்சம் உள்ளே வரீங்களா?

உட்காருங்க! நீங்க வந்தது சரியான வீடுதான்.

கொஞ்சம் இருங்க!  புடவையை எடுத்துட்டு வரேன். அவர் நாலு மூட்டை புடவை வாங்கினது கிடக்கு……

அவள் உள்ளே சென்ற நொடியில் ராமின் மனம் யோசித்தது. இவள் கோவிந்தனுக்கு என்ன உறவு! வெள்ளைப்புடவை வேறு……..என யோசித்தபடி அருகிலிருந்த புத்தக அலமாரியை உற்று நோக்கினார் ராம். பகவத் கீதை தொடங்கி அபிராமி அந்தாதி, ராமகிருஷ்ணர்,சாரதாதேவி, அரவிந்தர் என ஒருவர் விடாமல் இடம்பெற்றிருந்த அந்த இடத்தை விட்டு கண்கள் ஏனோ அகல மறுத்தன.

ராம் பார்ப்பதைப் புடவை மூட்டையுடன் வந்த அந்தப் பெண் வெங்கலமணிகள் இணைந்த சப்தம்போல் சிரித்தாள். இவையெல்லாம் அவர் படித்தவை.என் பெண்……. எனக்கூறியவள்….கோவில் மணி எங்கோ ஒலிப்பதைக் கூர்ந்து கவனித்தாள்.

நீங்கள் இந்தப் புடவை மூட்டையில் உங்களுக்குப் பிடித்ததை எடுங்கள். இதோ வருகிறேன் எனக் கூறியபடி விர்ரெனப் பறந்து சென்றதைப்போல ராமிற்குத் தோன்றியது.

வெளியே நிறைய பேர் பேச்சுக்குரல் கேட்கவே,இலேசாக எட்டிப் பார்த்தார் ராம்.

வெளியே புழுதி பறக்க கையில் பூஜைத்தட்டுடன் ஒரு ஊரே கூடியிருந்தது.

ஐயா யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?

நான் ராம். கோவிந்திடம்  என் பெண்ணுக்கு கல்யாணம் செ்யவதற்காகப் புடவை வாங்க வந்தேன்.

இதைக் கேட்ட மறுநிமிடம் மஞ்சள் புடவை உடுத்தியிருந்தவள்  புடவைத் தலைப்பால் வாயை மூடி அழத் தொடங்கி விட்டார்.

“ஏம்மா அழுவுறீங்க? நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா?”

இல்லப்பா! ஊருக்கெல்லாம் கல்யாணம் செய்யப் புடவை வித்தவரு தம்பொண்ணு ஓடிப்போனதால பொண்ணு கல்யாணத்துக்கு எடுத்து வச்ச புடவையில நாண்டுக்கிட்டாங்க புருசன் பொண்டாட்டி  ரெண்டு பேரும்.

செத்து ஒரு மாதத்துக்கும் மேல ஆவுது. அவுங்க தொழிலை இங்க செய்யறதாகவும், அடிக்கடி வெங்கலமணிக்குரல் சிரிக்கறதா சொன்னாங்க எல்லாரும். அதான் பூசாரி கிட்ட சொல்லி பூஜை செஞ்சு தாயத்து வீட்டுல கட்லாம்னுட்டு வந்தோம்.

அது என்ன உங்க கைல….. இது கோவிந்து தம் பொண்ணுக்காக எடுத்து வைச்ச புடவையாச்சே…அது உத்தரத்துல பாதியால்ல தொங்குச்சு…

இதுதானே அவுங்க ரெண்டு பேர் உயிரையும் எடுத்தது.

சொன்னது தான் தாமதம் டிவிஎஸ்ஸை மறந்து புடவையைத் தூக்கி வீசியபடி ஓடினான் ராம்.

‘எங்கோ மூடப்பழக்கத்தினை ஒழிப்போம் ‘ என மைக்கில் யாரோ பேசியது ராமின் காதில் தெளிவாக ஒலித்தது.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.