பிக்கோலிம் புளுகு – 2
தேமொழி
(தொடர்ச்சி)
முன் குறிப்பு:
இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.
வரலாற்றுப் பின்னணி:
வாஸ்கோட காமா (Vasco da Gama) கோவாவிற்கு வரும் கடல் வழிப் பாதையைக் கண்டறிந்த பிறகு, போர்சுக்கீசிய வர்த்தகர்கள் 1498 இல் இந்தியாவில் கோவாவை தங்களது முதல் வர்த்தக மையமாக அமைத்தார்கள். இதனால் 1542 ற்குள், கோவாவின் ‘வெலஸ் கான்கியுஸ்டாஸ்’ (Velhas Conquistas) பகுதி செழிப்படைந்தது [4]. இந்துவாகவோ, இஸ்லாமியர்களாகவோ இருக்கவே விரும்பியவர்களை விட, கிறிஸ்துவர்களாக மதம் மாறிய அப்பகுதி மக்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழக்கப் பட்டன [4]. கோவாவில் 1560 இல் ஒரு விசாரணை அமைப்பு நிறுவப்பட்டு, முதல் சில ஆண்டுகளிலேயே கிறிஸ்துவ மத அமைப்புடன் மாறுபட்ட மனப்போக்கு கொண்ட 4,000 பேர் கைது செய்யப்பட்டனர் [5]. இதனால் அருகாமையில் இருந்த இந்துப் பகுதிகளில், குறிப்பாக கோவாவின் வட பகுதியிலும், ‘நோவா கான்கியுஸ்டாஸ்’ (Nova Conquistas) பகுதியிலும் வாழ்ந்த மக்கள், புதியதாக நிறுவப்பட்ட இந்த விசாரணைக் குழுவினால் கலவரம் அடைந்தார்கள் [4].
இக்காலத்தில் கோவாவின் வளர்ச்சி மிகுதியாக இருந்தாலும், வடக்கில் இருந்த மராட்டிய அரசின் வளர்ச்சியும் பரவலும் இதனைவிட அதிகமாக இருந்தது [6]. இதனிடையில், 1603 க்கும் 1639 க்கும் இடைப்பட்ட காலத்தில், டச்சுக்கரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் இடையில் நிகழ்ந்த போரினால், டச்சு கடற்படை கோவாவின் கடல் வழியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கடல் வழித் தொடர்பைத் துண்டித்தது. இதனால் போர்ச்சுகீசியர்களால், தங்கள் போர்சுகல் நாட்டிலிருந்து எந்த உதவியையும் அடைய முடியாமல் போனது. இதனால் கோவாவில் வாழ்ந்தவர்களின் வாழ்வு வறுமையில் சீரழியத் தொடங்கியது. டச்சு அரசு பிற நாடுகளில் உள்ள போர்சுகீசியர்களின் வர்த்தக மையங்களை வென்று, தங்கள் நாட்டுடன் இணைத்துத் தங்கள் பேரரசை விரிவாக்க நினைத்த முயற்சியின் விளைவே டச்சுக்காரர்களுக்கும் போர்ச்சுகீசியர்களுக்கும் கோவாவில் நிகழ்ந்த போருக்குக் காரணம் [4]. இதே காலத்தில் மராட்டியப் பேரரசர் **சிவாஜி பான்ஸ்லே (Shivaji Bhonsle), பல தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தனது மராட்டியப் பேரரசை விரிவு படுத்திக் கொண்டிருந்தார். இதனால் 1635 ஆம் ஆண்டு வாக்கில், மராட்டியப்பேரரசு விரிவடைந்து போர்சுக்கீசிய கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் ஒரு பொதுவான எல்லை அமைந்தது [7]. மராட்டியப் பேரரசின் வளர்ச்சியும், அதே சமயம் கோவாவில் நிகழ்ந்த பஞ்ச நிலையும், கோவாவின் வட பகுதியில் வாழ்ந்த மக்களை மராட்டியப் பேரரசை ஆதரிக்கச் செய்தது. அப்பகுதில் வாழ்ந்த பிறரும், குறிப்பாக கோவாவின் எல்லைப் பகுதியில் இருந்த, செல்வாக்கு நிறைந்த கோலாப்பூர் (Kolhapur) பகுதியில் உள்ள ஊர்களின் மக்களும் மராட்டியப் பேரரசின் வருகையை மிக விரும்பி ஆதரித்தார்கள் [7].
டச்சுக்காரர்கள் ஏற்படுத்திய கடல்வழித் தடை நீங்கிய அதே காலத்தில், 1639 ஆம் ஆண்டில் மராட்டியப் பேரரசு அண்மையில் உள்ள மைசூர் அரசுடன் ஒரு உடன்படிக்கையினை ஏற்படுத்திக் கொண்டது. அந்த உடன்படிக்கையின்படி, மராட்டிய அரசும் மைசூர் அரசும், இரு அரசுகளுக்கும் பொதுவாக உள்ள நாடுகளின் எல்லையை மதிப்பதென்றும், ஒருவர் நாட்டின் எல்லைக்குள் மற்றவர் ஊடுறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டன [8]. அத்துடன் மராட்டியப் பேரரசு தக்காணத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் பாதுகாப்பாக இருக்க முடிவு செய்தது. மராட்டியப் பேரரசின் ஒரே ஒரு அமைதியும் பாதுகாப்பும் அற்றப் பகுதியாக அந்நாட்டின் தெற்கு எல்லை, அதாவது போர்சுக்கீசியர்கள் வசம் இருந்த கோவாவின் பகுதி அமைந்திருந்தது. கோவாவின் வடபகுதியும், கிழக்க்குப் பகுதியும் மராட்டியப் பேரரசை எல்லையாகக் கொண்டிருந்தது [8].
மோதலின் பாதையில்:
மராட்டியர்கள் 1640 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவாவின் போர்சுக்கீசிய தலைமை ஆளுநருடன் (Governor-General) பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டனர் [8] [9]. சமயத் தலைவர்கள் தனக்குக் கொடுத்த நெருக்கடியின் காரணமாக, தலைமை ஆளுநர் ‘மத்தியாஸ் டி ஆல்பகுர்கே’ (Matias de Albuquerque) மராட்டியர்களுடன் முரண்படும் பேச்சுவார்த்தைக்குத் தயங்கினார். மதத் தலைவர்களின் ஆதிக்கம் அக்கால கோவாவின் போர்ச்சுக்கீசிய அரசாங்கத்தின் மீது அதிகம் இருந்தது. அவர்களது விருப்பத்தை மீறி, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மராட்டிய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது அவர்கள் மதத்தின் குறிக்கோளுக்கு எதிரானதாகக் கருதப் பட்டது [4] [10].
இந்த தயக்கத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட மராட்டிய அரசு, அமைதி நிலவிய மைசூர் எல்லையில் இருந்த தனது படைகளை கோவாவின் எல்லைக்குத் திருப்பியது. மராட்டிய அரசின் இந்த நடவடிக்கையின் காரணமாக தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, மராட்டியப் பிரதிநிதியுடன் பேச்சு வார்த்தைக்கு இசைந்தார். ஆனாலும் பேச்சு வார்த்தை எந்த ஒரு தீர்வும் இன்றி முடிவுற்றது. மதசார்பின்மைக் கொள்கையைக் கொண்ட மராட்டிய அரசு, மதத்திற்கெதிரான குற்றங்கள் புரிந்ததாக கோவா அரசு அங்கு வாழும் இந்துக்களின் மேல் எடுக்கும் நடவடிக்கைகளையும், கொடுக்கப்படும் தண்டனைகளையும் சுட்டிக் காட்டிக் கண்டனம் தெரிவித்தது [4] [9]. எந்த தீர்மானத்திற்கும் வர இயலாது போன இந்தப் பேச்சு வார்த்தைதான் பிறகு ஏற்பட்ட மோதல்களுக்கு முக்கிய காரணமாக அமைந்தது [9].
1640 ஆம் ஆண்டு, கோவாவின் கோடை காலம் தொடங்கிய நிலையில் (பிப்ரவரி – மார்ச் 1640), தலைமை ஆளுநர் மத்தியாஸ் டி ஆல்பகுர்கே, போர்ச்சுக்கீசியப் படைகளை பேர்னம் ( (Pernem) மற்றும் பிக்கோலிம் பகுதிகளைச் சார்ந்த கோவாவின் கிராமங்களில் குவித்தார். சந்தேகத்திற்குரிய இந்த நடவடிக்கைகளினால், மராட்டிய அரசும் தனது சிறிய படை ஒன்றை பிக்கோலிம்மை ஒட்டியிருந்த மராட்டிய எல்லைக்கு நகர்த்தியது. நில வழி போர்சுக்கீசிய ஊடுருவலை எதிர்பார்த்திராததால் அதுவரை அப்பகுதி பாதுகாப்பினை மராட்டிய அரசு பலப்படுத்தாமல் விட்டு வைத்திருந்தது [9]. பிக்கோலிம் பகுதியானது, கோவாவில் பிறந்து வளர்ந்து, பின்னர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ‘நிக்கோலா டி மெல்லோ’ (Nicolau de Mello) என்ற போர்ச்சுக்கீசிய அரசுப் பிரநிதியின் மேற்பார்வையில் இருந்தது. நிக்கோலா டி மெல்லோ கோவா மக்களிடையே பிரபலமாகவும் அவர்களது நம்பிக்கையைப் பெற்றவராகவும் இருந்தார் [9]. கோவாவின் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்றறிஞர் ‘டேவிட் டிஸோஸா’ (David D’Souza), பிக்கோலிம் பகுதி வாழ் இந்துக்கள், நிக்கோலா டி மெல்லோ இந்துக்களுக்கு எதிரானவர் என்று கருதி மாராட்டியருக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர் என்று கூறுகிறார் [11]. வசந்தகுலன் ஸ்ரீனிவாசன் என்ற அறிஞரோ, தங்களின் மீது நிக்கோலா டி மெல்லோ கொண்ட அடக்குமுறையால் ஆத்திரமடைந்திருந்தாலும் இந்துக்கள் அவருக்கு விசுவாசத்துடன் இருந்ததாகவும், மராட்டியர்கள் எல்லைப் பகுதியில் படை குவித்ததை அறியாதவர்களாகவும் இருந்தார்கள் என்று கருதுகிறார் [9].
(தொடரும்)
படம் உதவி:
Chapel of St. Catherine, built in Old Goa during the Portuguese occupation: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/Churcholdgoa_%2864%29.JPG/450px-Churcholdgoa_%2864%29.JPG
Portuguese Goa: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/GoaConquistas.png/477px-GoaConquistas.png
______________________________________
References:
[1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
[2] Thompson op cit. p 208.
[3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
[4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
[5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
[6] Thompson op cit. p 199.
[7] Thompson op cit. p 200.
[8] Thompson op cit. p 201.
[9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
[10] Thompson op cit. p 203.
[11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
**என் குறிப்பு:
சிவாஜி பிறந்தது 1630 இல் என்பதையும், அவருக்கு அரசராக முடி சூட்டப்பட்டது அவரது 44 வயதில் (1674இல்) என்பதையும் கவனத்தில் கொள்க. இந்தக் கட்டுக்கதை குறிப்பிடும் காலத்தில் அவர் பதின்ம வயது சிறுவனாகக் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை.
தலையே கிறுகிறுவெனச் சுற்றுகிறது. அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு எல்லாம் இந்தப் பிக்கோலிம் புளுகு முன் நிற்காமல் ஓட வேண்டும் போல் இருக்கிறதே.
உண்மையை நிலைநிறுத்தும் தங்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் தேமொழி அவர்களே,
உண்மைதான் தலையைச் சுற்றும் அளவிற்கு நன்றாகவே கதை புனைந்துள்ளார்கள். இந்தக் கட்டுக்கதையைப் படித்த பின்பு எனக்கு எந்த வரலாற்றுச் செய்தியையும் இதில் எத்தனை சதவிகிதம் உண்மையோ? என்று சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை வந்துவிட்டது. உங்கள் கருத்திற்கு நன்றி சச்சிதானந்தம்.
அன்புடன்
….. தேமொழி