ஒரு அன்றாடத்தின் சில நொடிகள்
ஈரோடு கதிர்
காலையில் வீட்டில் கோடை பண்பலை ஓடிக்கொண்டிருப்பது வாடிக்கை. ஓடிக்கொண்டிருப்பது சொல்லலாமா? சரி பேசிக்கொண்டிருப்பது அல்லது பாடிக்கொண்டிருப்பது. பெரும்பாலும் மனம் அதன் நிகழ்ச்சிகளில் லயிப்பதில்லைலை. அது அதுபாட்டுக்கு சப்பதமிட்டுக்கொண்டிருக்கும். வீட்டில் ஒரு கூடுதல் ஜீவன் போல பலநேரங்களில் ரேடியோவும் டிவியும். சமீப நாட்களாய் ஒரு விளம்பரம் என்னை திடீரென வசப்படுத்திவிடுகிறது. ஒரு குழந்தையின் மழலை உடைந்த குரலில் திடீரென வரும் “எல்ல்லாலாலாஆஆஆருக்கும் நன்றி”. இது ஒலிக்கையில் மட்டும் மனசு அப்படியே மலர்ச்சியில் இழுத்துச் சொருகிக்கொள்ளும். அந்தக் குரலுக்கேற்ப ஒரு குழந்தையை மனசு உடனே உருவகிக்க முயலும். ஒவ்வொரு தினமும் வேறுவேறு முகங்களும், வேறுவேறு வித முகபாவங்களும் வந்துபோகும். இதுநாள் வரையில் இல்லாமல் நேற்று அந்த ”எல்ல்ல்ல்ல்லாஆஆஆஅருக்கும் நன்றி” நான் யாரிடமோ நன்றி சொன்னதுபோலவும், யார்யாரோ என்னிடம் நன்றி சொன்னது போலவுமான ஒரு உணர்வைத்தந்தது. படியிறங்கும்போது வழக்கத்துக்கு மாறான புன்னகையோடு மனைவிடம் பேசிவிட்டுப் புறப்பட்டேன்.
கையில் காசு இல்லாதது நினைவுக்கு வந்தது, போகும் வழியில் எந்த ஏடிஎம் போகலாம் என மனசு நினைக்கையில், வண்டி தானாக பெருந்துறை சாலையை நோக்கித் திரும்பியது. டீச்சர்ஸ் காலனி கிழக்கு மூலையிலிருந்து பெருந்துறை சாலைக்கு குறுக்குவழியாக வரும் ரொம்பவும் இக்கட்டான் சந்தில் நுழைந்தபோது, எதிரில் பைக்கில் வந்தவர் சட்டென நின்று கொண்டு, பெரிதாக புன்னைத்தவாறு தொப்பியைக் கழட்டிக்கொண்டே
”அண்ணா” என்றார்.
”ஆஹா…. பிரபு” என்றவாறே நின்றேன்.
சார்ட்ஸ், பனியன், பேட் எல்லாம் ஷட்டில் முடிந்து வருவதை உணர்த்தியது. சில நண்பர்கள் இணைந்து ஒரு சிறகுப்பந்து மைதானம் அமைத்து விளையாடி வருவது நினைவிற்கு வந்தது. விடைபெற்று நகர்கையில் மனதிற்குள் ஒரு நவீன சிறகுப்பந்து மைதானம் வந்துபோனது.
ஏடிஎம் குறித்து யோசித்துக்கொண்டே மெதுவாக வண்டி ஓட்டுகையில், இந்தப் பகுதியில் மின்சாரம் இருக்குமா இருக்காதா என்றும் யோசனை தோன்றியது. மின்சாரம் இல்லையென்றால் பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் முடங்கிப்போவது வாடிக்கை. அப்படியே பெருந்துறை ரோடில் ஊர்ந்துகொண்டே ஆக்ஸில் வங்கி ஏடிஎம் முன் வண்டியை நிறுத்தினேன். மேலே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டி ”எங்கே போறீங்க” என சைகையால் கேட்டார். ஏடிஎம் பக்கம் விரல் சுட்டினேன். ஓராமா போடுங்க என்பது போல் பணிவாக பாவனை செய்தார். சிரித்துக்கொண்டே அவர் சொன்னதைவிட ஓரமாகப் போட்டேன். இந்த மாதிரி சூழல்களில் என்னத்துக்கு ஓரமாப் போடனும், அதும் காலையிலையே! உடனே எடுக்கிறதுதானே எனப் பலமுறை எதிர்நிலை உணர்வு கொண்டதும் உண்டு.
ஏடிஎம்மை நெருங்கையில் அந்த செக்யூரிட்டி புன்னகைத்தார். உள்ளே ஆள் இருப்பதாகச் சொன்னார். உள்ளேயிருந்தவர் ரொம்ப நேரம் ஏதேதோ ஆராய்ச்சிகள் செய்து பொறுமையாக வெளியேறினார். என்ன பேங்க் இது ரெண்டு மெசின் வைக்கமாட்டாங்களா எனத் தோன்றியது. ஏடிஎம் வந்த பிறகு கொஞ்சம் சோம்பேறித்தனம் கூடிப்போனதாக அவ்வப்போது உணர்வேன். அப்போதும் உணர்ந்தேன்.
இயந்திரத்தில் அட்டையைச் சொருகி இழுத்தேன். “ஓடிப்போய்டு” என அதன் பாசையில் சொன்னது. மீண்டும் எடுத்து சொருகினேன். மீண்டும் அதையே சொன்னது. என்னடா இது என்று தலைப்பை மாற்றிச்(!) சொருகினேன். அது கேணத்தனம் என்பது புரிந்தது. சட்டையில் வைத்து தேய்த்து, மீண்டும் பலமுறை முயன்றும் ஏடிஎம் மனம் இறங்குவதாகத் தெரியவில்லை. வெளியில் பார்த்தேன். ஒருவர் காத்திருந்தார். சரி அப்புறம் போராடலாம் என வெளியில்வந்து அவருக்கு வழிவிட்டேன். அவரும் போராடுவதுபோல் தெரிய, கொஞ்சம் தலை எம்பி எட்டிப்பார்த்தேன். எனக்கு வந்த அதே ”ஓடிப்போ”. இப்போது திருப்தியாக இருந்தது. அப்போ அட்டையில் சிக்கல் இல்லை, இயந்திரத்தில்தான் போல.
அவர் பாதுகாவலரிடம் எதோ சொல்ல, அவர் ரொம்பவும் சர்வசாதரணமாக “நெட் பிரச்சனையா இருக்கும் சார்” என்றார்.
கடகடவென படிகளில் இறங்கும்போது அடர்த்தியான புகையிலை வாசம் அடித்தது. அது சிகரெட் வாசம் அல்ல. காய்ந்த புகையிலையின் மூர்க்கத்தனமான வாசம். அதெப்படி அங்கே. யாராச்சும் மூக்குப் பொடி போட்டிருப்பாங்களோ?.
சட்டென குமாரவேலு நினைவுக்கு வந்தான். போனவாரம் ஊருக்குப் போயிருந்தபோது, அங்கிருக்கும் மஞ்சக்காரர் தோட்ட தென்னைமரச் சாரியில் புகையில கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. குமாரவேலுவோடது என்றார்கள். அவனும் அவன் தம்பியும் விவசாயத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இருவருமே என்னோடு அடுத்தடுத்த ஆண்டுகளில் பள்ளியில் படித்தவர்கள். கடிமான உழைப்பு. தொடர்ந்து மஞ்சளாகப் போட்டு சேர்த்து வைத்து சட்டை 15000 இருக்கும்போது விற்று மிகப்பெரிய தொகை ஈட்டியவர்கள். பள்ளிப் படிப்பைத் தாண்டவில்லை என்பதாலும், விவசாயிகள் என்பதாலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் சிரமப்படுவதையும் அறிவேன். பெருமாள் முருகனின் கங்கணம் கதை நாயகன் மாரிமுத்து நினைவுக்கு வந்துபோனார்.
நொடியில் வந்த புகையிலை வாசம், நினைவுகளில் என்னை எங்கெங்கோ இட்டுச் சென்றதை உணரும் நேரத்தில் பெட்ரோல் பங்குக்குள் என் வண்டி தன்னிச்சையாய் நுழைந்து கொண்டிருந்தது. பெட்ரோல் போடவேண்டும் என்பதை நினைவில் தானாக முளைத்திருந்திருக்க வேண்டும். பெட்ரோல் அடிக்கும்போது அலுவலக அறையில் பங்க்காரர் இருக்கிறாரா எனப்பார்த்தேன். பல ஆண்டுகளாகத் அவரைத் தெரியும். எங்கள் அரிமா சங்கத்தின் முதல் தலைவரும் கூட. இருந்தால் மரியாதை நிமித்தம் ஒரு புன்னகையும், வணக்கத்தையும் பரிமாறிக்கொள்வதுண்டு. சமீபத்தில் இரண்டு கூட்டங்களில் நான் பேசியபோது உடனிருந்ததில் என்மீது பிரியம் கூடியிருப்பதை, அதன்பின் எங்கு பார்த்தாலும் சட்டென கையைப் பிடித்துக்கொள்வதின் மூலம் அறிந்ததுண்டு. அவருடைய மெலிந்த கரமும், எப்போதும் அதிலிருக்கும் ஒரு சில்லிப்பும் ஒரு கணம் நினைவில் வந்துபோனது.
நினைவை வெட்டி அருகிலிருக்கும் ஸ்டேட்பேங்க் ஏடிஎம் பக்கம் நகர்ந்தேன். அப்போது வந்துநின்ற காரிலிருந்து இறங்கி ஏடிஎம் போய்க் கொண்டிருந்தார் ஒருவர். அட, ஆக்ஸிஸ் வங்கியில் நான் வழிவிட்ட நபர் அல்லவா இவர் எனப்புரிந்தது. கார் ஒரு கால் டாக்ஸி நிறுவனப் பெயரை முன்னும் பின்னும் பதித்திருந்தது.
திடீரென சில மாதங்களில் கால் டாக்ஸிகள் ஈரோட்டை நிரப்பத் தொடங்கிவிட்டன. எல்லா ஊர்களிலும் கால் டாக்ஸிகள் இருக்கும்போது ஏன் ஈரோட்ல மட்டும் இல்லை என்று நினைப்பதுண்டு. ஆனால் திடீரென மூன்று நான்கு நிறுவனங்கள் கால் டாக்சிகளை இயக்கத் தொடங்கிவிட்டன. சமீபத்தில் ஒரு கால் டாக்ஸியில் போகையில், சும்மா பேச்சுக்கொடுத்தபோது அவர்கள் மட்டும் 80 டாக்ஸிகளை இயக்குவதாகவும், கால்டாக்ஸிகள் குறித்தும் நிறையச் சொன்னார். ஈரோட்டில் மொத்தம் 200 வண்டிகளுக்கு மேல் இருக்குமென்றும் சொன்னார். எப்படி அளந்தாலும் 2 – 3 கி.மீ தூரம் மட்டுமே இருக்கும் நகரத்தில் அத்தனை வண்டிகளுக்கு வேலையா எனக்கேட்டபோது ஆட்டோக்களுக்கு போட்டியாக என்று சொன்னது உண்மைதான் என்றும் பட்டது.
ஈரோடு மாதிரி ஊர்களில் ஆட்டோக்களை அணுகுவது அவ்வளவு எளிதல்ல. எடுத்த எடுப்பில் நூறு ரூபாய் வரைக் கேட்கும் இடத்தில் முதல் 4 கிலோ மீட்டருக்கு 75 ரூபாய், அதற்கு மேல் கிமீக்கு 10 ரூபாய் என்றிருப்பது ரொம்பவும் வசதிதான். நம் வீட்டு வாசப்படி தேடிவந்து புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடம் வரை மட்டுமே கட்டணம் என்பதும் நன்றாகத்தான் இருக்கின்றது. நாலு பேர் வரை வசதியாகச் செல்லும் வாய்ப்பும் கூட.
அதே சமயம் காலம் காலமாய் இருக்கும் ஆட்டோக்கள் நசுங்கிப்போவதை நினைக்கவும் சங்கடமாக இருந்தது. மளிகைக்கடைகளை முடக்க வரும் வால்மார்ட் நிறுவனங்களும் இதுபோன்றதொரு திட்டம்தானே என யோசிக்கும்போதே சிந்தனை எங்கு போகிறதெனக் மனக்குரல் கேட்டது.
அலுவலகப் படியேறுகையில், அங்கே நின்று கொண்டு பின்னாள் வீட்டு ஆயா, இரண்டு வயதுப் பேரனை இக்கத்தில் இடுக்கிக்கொண்டு சோறூட்டிக் கொண்டிருந்தார். முகத்தை இறுக்காம வைத்துக்கொண்டு மென்று கொண்டிருந்தான். வழக்கமாக பார்த்தவுடன் சிரிக்கக்கூடிய குழந்தை. அவனைப் பார்த்து ”வணக்கம் சார்” என்றேன். காரணம் அவன் எப்போது என்னைப் பார்த்தாலும் பாட்டி சொல்லிக்கொடுத்தபடி கும்பிட்டவாறு வணக்கம் எனச் சொல்ல முயல்வான். என் வணக்கத்தை அவன் கண்டுகொள்ளவில்லை. “ஏன் சார் வணக்கம் சொன்னாக்கூட கண்டுக்க மாட்டேங்குறார்” என்றேன்.
”சோறு திங்கச் சொன்னதுக்கு கோவத்த பாருங்க” என்றவாறு அடுத்த வாய் சோறூட்டினார். கோவித்துக்கொள்ள 2 வயது சிறுவனுக்கும் கூட காரணம் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவாரசியம்.
தேநீர் நேரம். வெயில் அநியாயத்துக் கொளுத்தத் தொடங்கியிருந்தது. டீக்கடையில் நானும் கார்த்தியும் நின்று கொண்டிருக்கின்றோம். எதிரில் இருக்கும் சிந்தாமணி ஒயின்ஸ் பின்புற வழியில் வந்த ஒரு ஆள் கைகளில் மதுபானப்புட்டியும், தண்ணீர் பாக்கெட்டும் வைத்திருந்தார். கார்த்தியிடம் கேட்டேன்.
“அந்தாளென்ன ராவாவா அடிக்கப்போறானா?”
“இப்பப் பாருங்க என்ன நடக்கப்போவுதுனு”
”என்ன நடக்கும்”
“அப்படியே கப்னு அடிச்சுட்டு, பாக்கெட் வாட்டர வாய்க்குள்ளே சர்னு அடிச்சு கொப்பளிச்சு துப்பாம முழுங்குவான் பாருங்க. ஒரு சொட்டுக்கூட வீணாயிடக்கூடாதுல்ல”
”அப்படியே ராவாவா, இந்த வெயில்ல டீ குடிக்கவே அலறுதே. சரக்கை ராவாவா அடிக்கிறதா… யெப்பா சாமீ?”
அந்த ஆள் பாட்டிலை கவிழ்த்து ஒரே மடங்கில் குடித்துவிட்டு, பாட்டிலை ஸ்டைலாக சாக்கடையில் வீசிவிட்டு, பாக்கெட் வாட்டரை வாயில் பீய்ச்சி, கார்த்தி சொன்னதுபோல் குடிக்காமல் கீழே துப்பினார்.
கார்த்தியை பார்த்து புன்னகைத்தேன். அந்த ஆள் புறப்பட்டார்
”எப்படி கார்த்தி இப்படி?”
“அதெல்லாம் இப்படித்தான், இப்பப் பாருங்க அந்தத் தள்ளுவண்டியில ஒரு மாங்காத்துண்டு எடுத்து வாய்ல போட்டுட்டுட்டுப் போவான் பாருங்க”
அந்த ஆள் ஒரு கம்மங்கூழ் வண்டியைக் கடந்து கொண்டிருந்தார்.
மாங்காய்த் துண்டை எடுக்கவில்லை.
”ம்ம்ம்.. அவ்ளோதான் ஜனசங்கமத்தில ஆளு ஐக்கியமாயிடுச்சு” என்றார் கார்த்தி
சில நொடிகளுக்கு முன் பார்த்த குடிமகன் என்ற அடையாளம் ஏதுமற்று அங்கிருந்த கூட்டத்தில் கலந்து நகர்ந்து போய்க்கொண்டிருந்தார்.
“ஸ்பிரிட் படம் மாதிரி, ஒரு கேமரா எடுத்துட்டுச் பின்னாடியே போனோம்னா செம இண்டரஸ்டிங்கான மேட்டர் கிடைக்கும்” என்றார் கார்த்தி
மோகன்லால் நடித்த ஸ்பிரிட் படத்தை சமீபத்தில்தான் நாங்கள் இருவருமே பார்த்திருந்தோம். ஒரு பின்இரவில் வீட்டில் நான் தனியே பார்த்துக் கொண்டிருந்தேன். படம் பாதிமுடியும் தருணத்திற்குள்ளேயே என் மூளை சூடேறிவிட்டது. சரக்கு அடிப்பதிலிருந்து ஒதுங்கியிருக்கும் எனக்கு, எங்காச்சும் போயி ஒரு ரெண்டு பெக் அடிச்சிடுவோமா எனத்தோன்றியது. ஒரு சினிமா என்னசெய்துவிடும் என்று சொல்பவர்களுக்கு என் பதில் சினிமா “சிலவற்றைச் செய்துவிடும், நல்லதைச் செய்ய இயலுமா எனத் தெரியவில்லை, நல்லதல்லாதவற்றை வெகு எளிதாகச் செய்துவிடக்கூடியதுதான்”
அதே படத்தின் பின்பாதியில் அந்த பாடலாசிரியர் சமீர் மரணிக்கும் நொடியில் “அம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ” என அலறும் நொடியை அப்படியே உள்வாங்குபவன் அந்த நொடியே குடியை விட்டு ஓடிவிடவும் சாத்தியமுண்டு. சமீபத்தில் நண்பர்களிடம் ”பாருங்க, பாருங்க” எனப்பரிந்துரைத்த படங்களில் அதுவும் ஒன்று.
ஸ்பிரிட் என கார்த்தி சொன்னவுடனே, அதன்பின்னர் நானும் கார்த்தியும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அந்த 11.30 மணி நேரத்து பகல் ”ராவா” குடிமகன் எனக்கு பாஸ்கர் அண்ணனின் நினைவை மீட்டிவிட்டார். சமீபத்தில்தான் பாஸ்கர் அண்ணனின் பெண்ணைப் பார்த்தேன். என் மகள் படிக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்போ, ஒன்பதாம் வகுப்போ படிக்கின்றாள். தனது தாத்தாவோடு பள்ளியில் எதோ கலைநிகழ்ச்சி முடித்துவிட்டுப் போய்க்கொண்டிருந்தாள். பாஸ்கரின் அப்பாவைப் பார்த்த பின்தான், அந்தக் குழந்தை பாஸ்கரின் பெண்தான் எனப்புரிந்தது. அவள் பிறந்த அன்றே மருத்துவமனையில் பார்த்ததும் அப்போது நினைவுக்கு வந்தது.
எத்தனை அற்புதமான மனிதன் பாஸ்கர். 80களிலேயே பிஇ முடித்து பின்னர் எம்பிஏ படித்து வேலைக்குச் செல்லாமல் தொழிலில் சிறப்பாகயிருந்த மனிதர். பழகுவதற்கு அத்தனை இதமான மனிதன். அந்தக் காலத்தில் எங்களை வெளியூர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதெல்லாம் அவர்தான். அவருடன் RX-100ல் போவது உலகின் உற்சாகமிகு சந்தர்ப்பங்களில் ஒன்று எனக்கு.
நான் முதன்முதலில் பியர் குடித்ததுகூட அவரோடுதான். அவர், இப்போது ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் அவரின் நண்பர், நான் என மூவரும் பியர் குடித்துவிட்டு ரவி தியேட்டரில் எதோ மோகன்லாலின் படமோ சுரேஷ்கோபியின் படமோ பார்த்ததாக நினைவு.
பெரிய நட்பு வட்டம் அவருடையது. நானெல்லாம் அதில் பொடிப்பையன். அவர்களின் நட்பு வட்டம் எப்போது கூடினாலும் குடி பிரதானப்படும். அப்போதெல்லாம் குடிப்பது எத்தனை பெரிய ஆண்மை (!) நிறைந்த விசயமென்று ஆச்சரியப்பட்டதுண்டு. காலம் உருண்டோடியது. எங்களுக்குள் தொடர்புகள் குறைந்துபோனது. 10-15 ஆண்டுகளில் குடியால் மட்டுமே உடல்நிலை சீரழிந்து, மஞ்சள் காமாலை தாக்கி ஒரு கட்டத்தில் இறந்து போனார் பாஸ்கர். குடி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இப்போது பாஸ்கர் எப்படிப்பட்ட கம்பீரத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பார் என ஒரு காட்சிக்கோர்வை அவ்வப்போது மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும்.
இந்த தினத்தை எந்த நொடியில் தொடங்கினேன்? இதெல்லாம் காண்பேனென்றோ, உணர்வேனென்றோ நினைத்திருந்திருப்பேனா? ஒரு நொடிக் காட்சி, உணர்தல் ஒரு கொத்து நினைவுகளை அள்ளியள்ளிக் கொட்டிவிடுகிறது. ஒரு அன்றாடத்தின் சில உணர்தல்களிலிருந்து ஒவ்வொருவரும் எங்கெங்கோ தாவி, தவித்து, நிரம்பி, வறண்டு, மீண்டு வருவதை நினைக்கும்போது நான் என்பது சிந்தனைகளின் தொகுப்போ என்று தோன்றுகிறது.,
ஒரு எல்ல்லாலாலாஆஆஆருக்கும் நன்றி, ஒரு புகையிலை வாசம், ஒரு பெட்ரோல் பங்க் நுழைவு, கண்ணில்படும் ஒரு கால் டாக்ஸி, ஒரு ’ராவா’ குடிமகன், இதுபோல் சட்டென நினைவுகளைக் கிளர்ந்து நம்மை அதில் மூழ்கடிக்கவோ, தாலாட்டிடவோ, தவிக்கவிடவோ ஆயிரமாயிரம் நம்மைச்சுற்றி அன்றாடங்களில் எல்லா நொடிகளிலும் ஏதாவது ஒன்று இருந்து கொண்டேயிருக்கின்றன.
முழு இரவும் வேலைகள் செய்துவிட்டு காலை 6 மணிக்குப் படுத்து 9 மணிக்கு எழும் ஏதாவது ஒரு அபூர்வ நாட்களில் சிந்தனைகளற்ற ஆழ்ந்த உறக்கத்தினை உணர்வதுண்டு. அப்படியொரு தூக்கத்திற்காகக்கூட முழு இரவு விழிப்பு நிலையை ரொம்பவும் அனுபவிப்பதுமுண்டு. எதையும் உணராமலும், எதுவும் உரசாமலும். சிந்தனைகள் யாதுமற்றிருக்கும் கணம், அவ்வளவாக வாய்த்து விடுவதில்லை. அப்படியொரு நொடி கிடப்பதை ஒரு வரமாக உணர்கிறேன்.
சிந்தனைகளற்று இருப்பது குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன் என சமீபத்தில் ஒரு வரி எழுதியது இப்போது என் சிந்தனையை நிரப்பிக் கொண்டிருக்கிறது.
வேறொன்று நிரம்பும் வரை அதுதான் சுழலும். பின்னர் வேறொன்று நிரம்பும்.
நெம்ப ஜிந்திக்கிறீங்க இப்பெல்லாம்! மகசூலும் நல்லா வருது. பாராட்டுகள்!!
அட்டகாசமான எழுத்து அண்ணா… 🙂
நன்றிங்க மாப்பு!
நன்றி ராஜா!
சில நொடிகளிலா இத்தாம் பெரிய கண்ணோட்டம் காற்றில் பறக்கும் தூசி முதல் கொண்டு க்ண்ணில் காணும் அத்தனை பதிவில் சுகித்த விதம் அலாதி. எங்கும் சிந்தாமல் அலட்டாமல் நகர்கிறது எழுத்தோட்டம். தோற்ற மயக்கம் அற்ற வரிகள் அத்தனையும். வாழ்த்துக்கள் கதிர்
ஒரு நாள் டைரிக் குறிப்பு:)
//நான் என்பது சிந்தனைகளின் தொகுப்போ என்று தோன்றுகிறது.// அற்புதம்
நன்றிகள்
தமிழரசி
பாலாண்ணா!
வீரா “அண்ணா”