Tag: முனைவர் இரா. மதன் குமார்

  • அப்பர் திருத்தாண்டகத்தில் காஞ்சித் திருக்கோயில் தொன்மங்கள்

    சு. கோப்பெருந்தேவி1*, முனைவர் இரா. மதன் குமார்2*.,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

    ————————————-

    முன்னுரை
    சான்றோர்களால் சிறப்புப்பெற்றது, தொண்டைநாடு. அந்நாட்டின் காஞ்சிநகரமானது, ‘உலகுயிர்கள், பெருமானை வழிபட்டு உய்வதற்குரிய பெருஞ்சிறப்புடையது’ எனக் காஞ்சிப்புராணம் கூறுகின்றது. ‘க’ என்பது, பரம்பொருளாகிய பெருமானைக் குறிக்கும். ‘அஞ்சித்தல்’ என்பது, ‘வழிபடுதல்’ எனப் பொருள் தரும். அதன்வழி, ‘ஆருயிர்கள், பெருமானை வழிபட்டுய்வதற்கு உகந்த திருத்தலம்’ என்கின்ற குறிப்பில், ‘காஞ்சி’ என அந்நகரம் போற்றப்படுகிறது. புறத்திணையில், ‘காஞ்சி’ என்பது, நிலையாமையைக் குறிக்கும். நாம் அனைவரும், உடலின் நிலையாமையை உணர்ந்து, திருவருளாகிய அம்மையின் துணையுடன், பெருமானைப் பற்றி உய்வதற்கு வழிகாட்டுகின்ற அருள்நிலையமாக அந்நகரம் விளங்குகிறது. அந்நகருள், சைவப்பெருநெறிக்கு நிலைக்களமாகிய, திருமுறை பாடல்பெற்ற திருக்கோயில்கள் பல அமைந்துள்ளன. அவற்றுள், திருக்கச்சி ஏகம்பம், திருக்கச்சி மயானம் மற்றும் திருக்கச்சி மேற்றளி ஆகிய திருக்கோயில் தொன்மங்கள், அப்பரடிகளின் திருத்தாண்டகத்தில் சுட்டப்படுள்ளன. அத்தொன்மக் குறிப்புகளின், உள்ளுறையாக திருக்கோயில் வரலாறுகள் அமைந்து, பக்திநெறி உணர்த்தப்படுகின்ற அணுகுமுறையை, இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    திருத்தாண்டகத்தில், காஞ்சித் திருத்தலத் தொன்மங்கள்
    தேவார மூவரின், ஏழு திருமுறைகளாலும் போற்றப்பட்டுள்ள அரிய திருக்கோயில்களில் திருக்கச்சி ஏகம்பமும் ஒன்று. அப்பரடிகள், திருக்கச்சி ஏகம்பத்தை ஏழு திருப்பதிகங்களால் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், இரண்டு திருப்பதிகங்கள், திருத்தாண்டகத்தில் அமைந்துள்ளன. ஏகம்பத்தை இரண்டு திருப்பதிகங்களில் பாடியும் ஆவல் தீராதவராக, அத்திருமுறையில், பல இடங்களிலும் அவர், கச்சிஏகம்பத்தைப் போற்றியுள்ளார். அத்துடன், க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் (6:70:4) கச்சிப் பலதளியும், திருவினாத் திருத்தாண்டகத்தில் திருமேற்றளியும் (6:97:7), திருக்கச்சி மயானமும் (6:97:10) ஆகிய காஞ்சியின் பிற திருக்கோயில் தொன்மங்களும் சுட்டப்பட்டுள்ளன. அக்குறிப்புகள், திருக்கோயில் வரலாறுகளாகக் காஞ்சிப்புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

    அப்பரடிகள் உவந்த திருக்கோயில்
    ‘மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
    ஏகம்ப மேயானை யென்மனத்தே வைத்தேனே’ (4:7:9)
    எனக் கச்சிஏகம்பத்தின் மீது, அப்பரடிகள் பெருவிருப்புடையவராக இருந்தார். அதனால்,

    ‘கலந்தார்தம் மனத்தென்றும் காதலானைக் கச்சியே கம்பனை’ (6:20:4)
    என்று போற்றி, ஏகம்பனைச் சிந்தை மறவாமல் பாடுகின்றார். நடுநாட்டின் திருஅதிகையில் இருந்து வீரட்டானனைப் பாடி மகிழ்ந்த களிப்பில், அங்கிருந்தே தொண்டை நாட்டின் ஏகம்பனையும், அடிகள் பாடி மகிழ்ந்துள்ளார். ‘ஏகம்பத்தைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே’ என்ற பெருவிருப்பில், அத்திருத்தலத்திற்காகப் பாடிய திருப்பதிகங்களிலும் சுட்டிக்கூறாத ஏகம்பத் திருக்கோயில் வரலாற்றுத் தொன்மத்தை, முன்கூட்டியே அதிகைத் திருப்பதிகத்தில் பாடி மகிழ்ந்திருப்பது, ஏகம்பன், அப்பரடிகளின் சிந்தையில் நீங்காமல் நிலைத்திருந்த பக்திக்குச் சான்றாகும்.

    அதனாலேயே, திருத்தாண்டகத்தால் ஏகம்பத்தைப் பணிந்த நிலையில், ‘ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே’ என்ற தொடரைப் பதிகமகுடமாக அப்பரடிகள், இரண்டு திருப்பதிகங்களிலும் (6:64,65) பதிவுசெய்துள்ளார். தொண்டராக, உழவாரப் படைதாங்கி, சைவத்தை வளர்த்தவராதலின், அப்பெருமகனார், ஏகம்பத்திலிருந்து அறம் வளர்த்த அம்மையை, ‘காமக்கோட்டி’ எனப் போற்றியுள்ளார்.

    காஞ்சிப்புராணத்தில் திருக்காமக்கோட்டம்
    பெருமான், ஊழிக்காலத்தில் ஒடுக்கியருளிய உலகங்களை மீண்டும் படைத்தருளத் திருவுள்ளம் கொண்டான். அதற்கென, வீரம் வெளிப்படுகின்ற பெருஞ்சிரிப்புடன், புனர்உற்பவத் திருக்கூத்தினை ஆடிக் களித்தான்.
    அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
    அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்
    பசைத்தவன்காண்’ (5:64:7)
    என்றவாறு, அண்டமுற நிமிர்ந்தாடிய பெருமான், அருளுருவாகிய சிவலிங்கமாக உலகாணித் தீர்த்தம் எனப்பெறுகின்ற பஞ்சநதிக்கரையில் இடம்கொண்டான். அத்திருமேனி, கொங்கண முனிவர் முதலான பலருக்கும் அருள்பேறுகள் பலவற்றையும் அருளிச்செய்த சிறப்புடன் விளங்கியது. அம்மையும், ‘திருக்காமக்கோட்டி’ என்னும் திருப்பெயருடன் அங்கிருந்து அத்திருவுருவினைப் போற்றி வழிபட்டாள். இன்றளவும், திருக்காஞ்சி நகரத்தில், அம்மை வீற்றிருந்தருள்கின்ற திருக்கோயிலானது, ‘திருக்காமக்கோட்டம்’ என விளங்குகிறது.

    காமம்-விருப்பம்; கோடு-வளைவு; கோட்படுத்துதல்-வளைத்தல். செந்நிறத்தைப் பெற முயன்ற அவளது விருப்பத்தை, பூசையாகிய பெருநெறியை நோக்கிப் பெருமான் வளைத்ததால், அவ்விடமானது, ‘திருக்காமக்கோட்டம்’ எனப் பெயர்க் கொண்டது. மேலும், உறுதிப்பொருள்கள் நான்கனுள், வீடுபேறே இறுதியாக (கோடியாக) அமைவது. அம்மை, உலக உயிர்களுக்கு, இன்பநாட்டமாகிய காமத்தை விளைவித்து, அதன் வழியே வீடுபேற்றையும் அளித்தருள்பவள். அதனால், அவள் வீற்றுள்ள திருக்கோயிலும், ‘திருக்காமக்கோட்டம்’ எனப் பெயர்க் கொண்டதை’ என்பது காஞ்சிப் புராண, வீரட்டாகாசப் படலம் (37) விளக்குகின்றது.

    செம்பவளச் செல்வியாகிய காமக்கோட்டி
    அம்மை, ‘கருநிற மேனி உடையவளாக இருந்த நிலையில், பெருமான் அவளை, ‘காளீ’ என விளித்தான். அதைக் கேட்ட அம்மை, ‘பெருமானே!, நீர் செம்பவள மேனியுடையவராக விளங்குபவர்; அதனால், நானும் அவ்வண்ணத்தைப் பெறுவதற்கு அருள்செய்ய வேண்டும்’ எனப் பெருமானைப் பணிந்தாள். பெருமானும் அதற்கு இயைந்து, பஞ்சநதிக்கரையில் அமைந்த தனது இலிங்கத் திருவுருவினை வழிபட அருளினான். அவ்வண்ணமே, திருமாலும், திருமகளும் இத்திருக்கோயிலிலிருந்து பெருமானை வழிபட்டுச் செம்பவள வண்ணத்தைப் பெற்றதென்பது, காஞ்சிப்புராண வரலாறு.

    ஒத்த வயதும், கல்வியும், செல்வமும், குலமும் தலைமக்களின் அன்புறவுக்கு அடிப்படை என்பது அகப்பொருள் நோக்கு. அவ்வகையிலேயே, பெருமானது அன்பினை, தான் முழுமையாகப் பெற வேண்டி, திருக்காமக்கோட்டத்தில் பூசை முதலான தவம் இயற்றி, பெருமானுக்கு இணையாகச் செந்நிறத்தைப் பெற்ற அம்மையை அப்பரடிகள்,
    எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
    யிளங்கிழையோர் பாலுண்டோ’ (6:2:1)
    எனக் குறித்தருளியுள்ளார்.

    காமக்கோட்டியின் அருள்விண்ணப்பம்
    ‘ஆருயிர்கள், அப்பனாகிய பெருமானை வணங்கிப் பேரின்பமாகிய வீடுபேற்றினைப் பெறுவதற்கு ஓயாமல் முயலவேண்டும்’ என்பதை விளக்கவே, அம்மை திருக்காமக்கோட்டத்திலிருந்து, செந்நிறம் பெற விழைந்ததாகப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பெருமானின் பேரின்பத்தில், அம்மை கொண்ட விருப்பமே, மன்னுயிர்களும் பேரின்பத்தை விரும்பக் காரணமாகிறது. அவளது பெருவிருப்பே, வீடுபேறாகிய பேரின்பநாட்டத்தை உயிர்களுக்கு ஊட்டுகிறது. மண்ணுலகில் வாழ்கின்ற குடும்ப வாழ்வில், தாயே குழந்தைகளுக்கும், தந்தைக்கும் பாலமாக விளங்குகிறாள். அவள், தந்தை மீது பொழிகின்ற அன்பைக் கண்டு, குழந்தைகளும் தந்தையிடத்தில் நிறைந்த அன்பினைப் பொழிகின்றனர்; தந்தையும், குழந்தைகளுக்கு இனிய வாழ்வைத் தந்து மகிழ்கின்றார்.

    பெருமானிடத்தில், தனக்கென எதையும் வேண்டிடாதவளாகிய அம்மை, திருக்காமக்கோட்டத்தில் நிலைத்தவளாக, அன்பில் குறையாத பூசனையின் வழியாக, ஆருயிர்கள் அனைத்தின் நலனையும், தனது திருவாயினால் பெருமானிடத்தில், பெருவிண்ணப்பமாக ஓயாமல் வேண்டியவண்ணம் இருக்கின்றாள். அவளது அருள்நோக்கத்தை வெளிப்படுத்தி அருள்கின்ற திருவாயினையும் அப்பரடிகள் போற்றுபவராக,
    ‘கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி’ (6:4:10)
    எனக் குறித்துள்ளார்.

    பண்டாசுரனுக்காகக் கச்சி மயானம்
    ஆருயிர்களின் மீது பெருமான் கொண்ட அளவில்லாத கருணையின் வெளிப்பாடே, அவன் ஐந்தொழிலையும் நடத்துகின்ற நிலையாகும். பெருமானின் திருவருள் ஆணையின்வண்ணமே, அவ்வவ் உயிர்களின் வினைக்கேற்பப் பிறப்புகள் அமைகின்றன. உயிருக்கு உடல் கூட்டுவிக்கப்படுவதாகிய பிறப்பு நிலையே, படைத்தல் எனப்படும். ஐந்தொழில்களில் முதலாவதாகிய படைப்பினைச் செய்தருள்கின்ற பெருமானை, அப்பரடிகள், கச்சி ஏகம்பனாகப் போற்றுகின்றார்.

    ‘வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
    தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
    திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
    எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண்அவனென் எண்ணத் தானே’ (6:65:1)

    கச்சிமயானத்தில் நின்ற ஏகம்பன்
    படைத்தல் தொழிலைச் செய்தருள, கச்சிஏகம்பன் செய்த அருளாடலானது, திருக்கச்சி மயானத் திருக்கோயில் வரலாறாகக் காஞ்சிப்புராணத்தில் விளக்கப்படுகிறது.
    பண்டம் – உடம்பு. பண்டன் என்னும் பெயர்க்கொண்ட அசுரன், நான்முகனிடத்தில் வரம்பெற்று, உயிர்களின் உடம்பினுள் இடம்கொண்டு, உடம்பின் பெருவலிமையினையும் உறிஞ்சி, அவை செயல்படாத வகையில், பெருந்துன்பம் விளைவித்தான். அதனால், உயிர்கள் அனைத்தும் வலிமையிழந்து, தசைக்கூடமாகிய வெற்றுடம்பினையே சுமந்திருந்தன. அதனால், ஐந்தொழிலும் பிறழ்கின்றநிலை ஏற்பட்டது. ‘அனைத்து உயிர்களின் உடம்பிலும் அவன் இடம்கொண்டிருந்தவன் ஆகையால், அவனை அழிப்பதற்குப் பெருமானின் பெருந்திறமே துணையாகும்’ என்று மூவர் முதலான தேவர்களும், பெருமானைப் பணிந்தனர். அவனை, அழித்தருளப் பெருமான் அருளுள்ளம் கொண்டான். அதற்கென வேள்வித்தீயை மூட்டி அதனுள், நான்முகன், திருமால் முதலான அனைத்துயிர்களின் உடம்பையும், அவியாகத் தீயிலிட்டான். அந்தந்த உடம்புகளிலும் இடம்கொண்டிருந்த பண்டனும், தீக்கிரையாகி வீழ்ந்தான். பண்டனை அழித்தருள, வேள்வித் தீயாகப் பெருமான் விளங்கிய இடமே, தற்போது, ‘கச்சி மயானம்’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

    ஏகம்பத்தில் பெருமான், படைப்புத் தொழிலைச் செய்தருள வேண்டி, தன்னிலிருந்து, அம்மையை, ‘இலளிதை’ என்னும் பெயருடன் வெளிப்படுத்தினான்; அம்மையும், பெருமானை வணங்கித் துதித்து, படைப்புத் தொழிலை மேற்கொண்டாள். அதன்வழி, உலகுயிர்களைப் படைத்தலாகிய அருந்தொழிலையும் ஆற்றுவதற்கு அருளாணையும் பெற்றுச் சிறந்தாள். அவ்வண்ணமே, மும்மூர்த்திகளையும், பிற உயிர்களையும் அம்மை படைத்தருளினாள். அவ்விடத்தில் அம்மையப்பரைப் பணிந்தெழுத்த மும்மூர்த்திகளும், அவர்கள்பால் பெருவிண்ணப்பம் ஒன்றைப் பணித்தனர்.

    காமக்கண்ணி என்னும் திருப்பெயர்
    ‘பெருமானே! ‘க’ என்னும் திருஎழுத்து, பிரமனையும், ‘ம’ என்னும் திருஎழுத்து, திருமாலையும், ‘உ’ என்னும் திருஎழுத்து, உருத்திரனையும் குறிக்கின்றன. தங்களது அருளாணையின் வண்ணம், எங்கள் மூவரையும், அம்மை தனது திருக்கண்களில் இருந்து தோற்றுவித்தார்கள். அப்பெருந்திறத்தைக் குறிக்கின்ற வகையில், க, ம, உ என்னும் திருஎழுத்துகளின் கூட்டாகிய திருப்பெயராக, ‘காமக்கண்ணி’ என்ற திருப்பெயருடன் அம்மை இத்திருக்கோயிலில் விளங்கியருளவேண்டும்’ என வேண்டினர். பெருமானும் அவ்வண்ணமே திகழ விதித்ததால், அம்மையும், அத்திருப்பெயரினை உவந்தேற்று அருளினாள்.
    இன்றளவும், திருக்காமக்கோட்டத்தில் விளங்குகின்ற அம்மையை, ‘காமாட்சி’ என வழங்குகிறோம்.
    காமம்-விருப்பம். அட்சம்-கண். அம்மை, ‘உயிர்களுக்கு அருள்கின்ற திருக்கண்களுடன், ‘காமாட்சி’யாகக் காஞ்சித் திருத்தலத்தில் வீற்றிருகின்றாள்’ என்பதை அப்பரடிகள் திருக்கச்சி மயானத் திருக்குறிப்பாகப் பாடியுள்ளார்.
    ‘மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான்’ (மேலது பாடல்)
    என்ற குறிப்பு மொழியில், அம்மையின் அருளேற்றம் சுட்டப்பட்டுள்ளது.

    திருக்கச்சி மயானத்தின்பால் ஆற்றுப்படுத்துதல்
    உயிர்கள், வீடுபேறாகிய பேரின்பத்தைப் பெருமானிடத்தில் பெற்று உய்வதற்குப் புறப்பூசைனையால் இலிங்கத்திருமேனியினை வழிபடத்தொடங்கி, அதனை ஆன்மார்த்த பூசனையாக வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்குத் தடையாக விளங்குபவை, உலகியல் மயக்கங்களாகும். உயிரறிவிலிருந்து உலகியல் மயக்கங்கள் நீங்கிப் பெருமானைப் பற்றி உய்வதற்கு, அவன் அருளே கருவியாகும். அம்மையே, அத்திருவருளின் நிலையுடையவள். அவள், ஓயாத பெருவிருப்புடன், பெருமானை நித்தமும் பூசை செய்கிறாள். அப்பூசையின் பயனாகிய திருவருளே, அருவமாகிய பெருமானை, உயிர்களுக்குக் காட்டிஅருள்கிறது. அத்தத்துவத்தை விளக்குவதற்காகவே, ‘திருக்கச்சி மயானத்துப் பெருமானுடன் அம்மை உடன்பிரியாமல் விளங்குகிறாள்’ என அப்பரடிகள் பாடியுள்ளார்.

    மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
    ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
    ஓரூரன் அல்லன் ஓருவமன் அல்லன்
    அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே
    கண்ணாகக் காணின் அல்லால்
    இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன்
    என்றெழுதிக் காட்டொ ணாதே’ (6:97:10)
    எனக் குறித்தருளியுள்ளார். மேற்கண்ட பாடலில் சுட்டப்படுகின்ற திருத்தலமானது, திருக்கச்சி ஏகம்பத் திருக்கோயிலின் கொடிமரத்தின் மேற்கே அமைந்துள்ளது.

    எண்ணத்தில் நீங்காத ஏகாம்பரன்
    வடமொழியில், ‘ஆம்ரம்’ என்பது, மாமரமாகும். ‘ஏகாம்பரம்’ என்பது, ‘ஒற்றை மாமரம்’ என்பதாகும். உலகிலுள்ள பிற மாமரங்களைப் போலல்லாமல், இம்மாமரம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. இது, வேத மாமரமாக, அரும்பொருளாகிய பெருமான் தங்குகின்ற பேறுபெற்றுள்ளது. அதனால், அது, ‘ஏக் ஆம்ரம்’; அதாவது, ‘ஒற்றை மாமரம்’ என்கின்ற சிறப்புப்பெயர்ப் பெறுகிறது. ஒருவனாகிய பெருமானும், தான் இடம்கொண்ட மாமரத்தின் பெயரால், தனக்கும் சிறப்புப்பெயர் விளங்க அருள்செய்தான். வடமொழியில் அத்திருப்பெயர், ‘ஏகாம்ரநாத:’ என வழங்கப்படும். அதுவே, திருவைந்தெழுத்தாகின்ற சிறப்பினைப் பெருமான், பிரமன் முதலான மூவர்க்கும் உரைத்தருளியதாகக் காஞ்சிப்புராணத் திருவேகம்பப் படலம் (பாடல்:27) போற்றியுரைக்கிறது.
    மேற்கண்ட திருப்பெயர் தமிழில், ‘ஏகாம்பரநாதன்’ எனக் குறிக்கப்படும். அப்பரடிகளின் அருள்மொழியில், ‘ஏகம்பன்’ எனப் பொலிவுறும். அத்திருப்பெயரை, அப்பரடிகளும், திருவைந்தெழுத்தாகவே கருதிப் பணிந்தார் எனலாம். அதன்பொருட்டே, திருத்தாண்டகத்தில் கச்சிஏகம்பத்தைப் பாடிய முதலாவது பதிகத்தில்,
    அஞ்செழுத்து நினைவார்க் கென்றும் மருந்தவன் காண்’ (6:64:9)
    என, ஐந்தெழுத்து மந்திரத்தின் அருள்சிறப்பினை அறிவுறுத்தியுள்ளார். ‘ஏகாம்பரநாதன்’ என்பதே, மேற்குறிக்கப்பட்ட திருவைந்தெழுத்து என்பதைச் சுட்டுபவராக, கச்சிஏகம்பத்தின் இரண்டாம் பதிகத்தில்,

    பேதயேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
    மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்’
    வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
    அருந்தவத்தாள் ஆயிழையாள் உமையாள் பாகம்
    அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
    இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண்’ (6:65:5)
    எனப் பாடியுள்ளார். மேலும், அவ்வருஞ் சிறப்பினைத் திருமுறைத் திருநெறியாக நமக்கும் அறிவுறுத்த வேண்டியே, கச்சிஏகம்பப் பதிகங்கள் இரண்டுக்கும், ‘ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே’ எனப் பதிக மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார்.

    நால்வர்க்கும் தோன்றியருளிய கம்பன்
    பண்டனை அழித்தருளி, மீண்டும் உலக உயிர்களை உடம்புடன் கூட்டுவித்தலாகிய படைப்பினைத் தொடங்கக் கருதிய பெருமான், திருக்கச்சி மயானத்தின் மேற்கில் வேதங்களை, மாமரமாக நிற்கச் செய்தான். மாமரத்தின் மூலத்தில், அழல்பெருஞ் சோதியாகி எழுந்த பெருமான், சிவலிங்க மூர்த்தமாக அமைந்தான். அம்மை, தனது படைத்தல் தொழிலைச் சிறப்புறச் செய்யவேண்டிப் பெருமானை வேண்டினாள். அவளுக்கு அருளவேண்டிப் பெருமான், அச்சிவலிங்க மூர்த்தத்திலிருந்து வெளிப்பட்டருளினான். அவ்வருள்பேறு பெற்றே, இலளிதை அம்மை தனது, திருமுகத்திலிருந்து, பிரமன் முதலான மூவரையும் தோற்றுவித்தருளினாள். அம்மூவரும் தத்தமது தொழிலுக்கான நல்லறிவைப் பெறவேண்டிப் பெருமானைப் பணிந்தனர்.

    ‘பெருமானே! உமது கருணைத்திறத்தால், மூவரும் முத்தொழிலைச் செய்வதற்கான பேறுபெற்றுள்ளோம்; அவற்றை முறையாகச் செய்வதற்குரிய ஞானத்தையும் தாங்களே தந்தருள வேண்டும்!’ என்றனர். பெருமானும், ‘தான் உகந்த திருமேனியாகிய, சிவலிங்கத்திருமேனியைத் தாபித்து, வழிபட்டு அவ்வுயர்ப்பேற்றினைப் பெறுக’ என அறிவுறுத்தி அருளினான். அவ்வகையில், இலளிதையம்மையால் பூசிக்கப்படுவதாகிய மாவடி மூலத்தின் தென்பால், தேவர் மூவரும், இலிங்கத் திருமேனிகளைத் தாபித்து வழிபட்டனர்.

    பிரமன், தெளிந்த சிந்தையுடன் பெருமானைப் பூசித்ததால், ‘வெள்ளைக் கம்பர்’ எனவும் (திருஏகம்பப் படலம்: 86), உயிர்களை மயக்குகின்ற மாயவனாகிய தன்மை வேண்டிப் பூசித்ததால், திருமாலுக்கு, ‘கள்ளக் கம்பர்’ (திருஏகம்பப் படலம்: 87) எனவும், சிவோகம் பாவனையில் சிவத்தோடு ஒன்றிப் பூசைசெய்த உருத்திரருக்கு, ‘நல்ல கம்பர்’ (திருஏகம்பப் படலம்: 88) என்றும் காட்சி தந்தாக காஞ்சிபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அம்மைக்கும், தேவாதி மூவர்க்கும் அருள்செய்த ஏகம்பனை அப்பரடிகள்,

    கடிநாறு பொழிற் கச்சிக் கம்பா வென்றும்
    கற்பகமே யென்றென்று கதறா நில்லே’ (6:31:2)
    எனக் குறித்தருளியுள்ளார்.
    ‘கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
    காணக் கண்ணடி யேன்பெற்றவாறே’ (7:61:10)
    என்ற அருள்மொழி, காஞ்சித்திருத்தலத்தில், இடக்கண் பெற்றுய்ந்து சுந்தரர்பெருமான் அருளியது.

    அம்மையின் திருக்காஞ்சிப் பயணம்
    அம்மை, இமவான் மகளாகி, பெருமானை மணந்து, அளவில்லாத மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள். அச்சமயத்தில், ‘பெருமானே, உலகங்களுக்கு ஒளிப்பொருளானவன்’ என்கின்ற பரத்துவத்தை உலகுயிர்கள் உணரவும், மண்ணுலகில் அறம் நிலைக்கவும், அம்மையைக்கொண்டு, பெருமான் அருள்விளையாடல் ஒன்றை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டான். ஒருசமயம், அம்மை, பெருமானின் திருக்கண்களைக் கைகளால் மூடினாள். அதனால், கதிரவனும், தண்நிலவுமாகிய இருசுடர்களும் ஒளியிழந்தன. உலகங்கள் பேரிருளில் ஆழ்ந்தன. அறியாது அம்மை செய்த பிழைக்குக் கழுவாய் தேடும்படியான வாய்ப்பினைப் பெருமான், அவளுக்கு உரைத்தருளினான் (த.கு.படலம்: 25,26). ‘அம்மையே!, பூவுலகில் பூசைக்குப் பயனாகத் திருவடிசேர் முத்தியைத் தந்தருள்கின்ற அருள்நகரங்களுள் முதன்மையாக விளங்குவது, திருக்காஞ்சி நன்னகராகும். அந்நகரம், அறத்தேவதையை, யாம் விடையாக ஏற்றருளிய திருத்தலமாகும்; அங்கு எம்மைப் பூசித்து, ஆருயிர்களும் பூசித்து உய்யக்காட்டிருள்க!’ எனப் பெருமான் அம்மைக்கு அறிவுறுத்தினான். அதைக் கேட்ட அம்மை, ‘பெருமானே! உம்மை முறையாகப் பூசிக்கின்ற நெறிமுறைகளையும் அடியவளுக்கு அறிவுறுத்தி அருள்க!’ என்று பெருமானிடத்தில் வேண்டினாள்.

    பெருமானும் அதற்கு இசைந்து, சரியை முதலான படிநிலைகளையும், தீக்கை வகைகளையும், முத்தி நிலைகளையும், உயிர்கள் மண்ணுலகில் வினைவழியே பிறப்பெய்தி வாழ்கின்ற நிலைகளையும், பிறவாமையாகிய பெருநிலைக்குப் பூசையே கருவியாதலையும், அதற்கு ஏற்ற இடமாகக் காஞ்சி மாநகர் விளங்குவதையும் அம்மைக்கு எடுத்துரைத்தான் (த.கு.படலம்: 35-72). அம்மையும் அதை ஏற்று, வான் வழியே திருக்காஞ்சியை அடையப் புறப்பட்டாள்.

    அம்மையப்பருக்கு, புவனங்கள் அனைத்தும், இல்லமாகும். பிள்ளைகளின் நலம் சிறக்கவேண்டி, கணவனார் கூறுவதை, மனைவியார் செம்மையாகச் செய்துமுடிப்பார். ஆருயிர்களாகிய குழந்தைகளின் நலம் சிறக்கவேண்டி, அம்மையும், அப்பனின் அருஞ்சொல்லை ஏற்றுத் திருக்காஞ்சி நகரை அடைந்தாள்’ என்பதைக் காஞ்சிப் புராணம்,

    களிவரு சிறப்பின் வான்நெறிப் படர்ந்தாள் கணவனார் அருள்வழி நின்றாள்’ (தழு.குழை.பட:121)
    என விரித்துரைக்கும்.

    அறச்சாலை நிறுவிய அம்மை
    காசி முதலான பல தலங்களிலும், இலிங்கத் திருமேனியைத் தாபித்து வணங்கி, ஐப்பசி மாதத் தேய்பிறை ஏகாதசித் திதி அமைந்த பூர நன்னாளில், அம்மை திருக்காஞ்சி நகரை அடைந்தாள். கங்கண தீர்த்தத்தில் நீராடி, கங்கணேசர், கடகேசர் ஆகிய இலிங்கங்களைத் தாபித்து வணங்கினாள். அந்நகரிலிருந்து, தான் இயற்றவுள்ள பூசனைகளாகிய பெருந்தவங்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில், காப்பும், கடகமும் அணிந்துகொண்டாள். அத்திருக்கோயில்கள், இந்நாளில், ‘கங்கணேச்சரம்’; ‘கடகேச்சரம்’ என வழங்கப்படுகின்றன. அம்மை, அங்கிருந்து உலகாணித் தீர்த்தக் கரையை அடைந்து, அறச்சாலையை நிறுவினாள். ‘வேள்விகள் புரிதல்’ முதலாக, ‘சரணடைந்தாரை பெருவிருப்புடன் தாங்குதல்’ ஈறாக அமைந்த, முப்பத்து இரண்டு அறங்களையும் நிறைவுற வளர்க்கின்ற அறச்செல்வியாகத் திகழந்தாள்.

    பூங்கொடியாள், பூசைக்கு விரைந்தாள்
    மாவடியில் விளங்குகின்ற ஏகம்பனை அன்றாடம் பணிகின்ற பெருவிருப்பு வழிநடத்த, அம்மை அன்றைய நாள் பூசைக்கான பெருவிருப்புடன் விரைத்தாள். விதிகள் பிழையாமல் பூசை செய்கின்ற அவள், பூசைக்குத் தேவையானவற்றைத் திரட்டிய நிகழ்வுகளைக் காஞ்சிப்புராணம் தழுவக் குழைந்த படலத்தில், 318-ஆம் பாடல் முதலாக, 341-ஆம் பாடல் வரையிலும் விரிவாகக் காணலாம். பூசைக்கு வேண்டுவதாகிய உடல் தூய்மைக்குத் தனி தீர்த்தமும், பெருமானைத் திருமுழுக்காட்டுவிக்கத் தனித் தீர்த்தமும் உருவாக்கப்பட்டன என்பதும், தனி நந்தவனத்திலிருந்து சிறந்த மலர்கள் தொகுக்கப்பட்டன என்பதும், திருவமுது படையலுக்காகத் தூயமுறையில் பல்வகை திருவுணவுகளும் படைக்கப்பட்டன என்பதுமான செய்திகள் சிவபூசை விதிகளை அறிய முயல்வோருக்கு அருந்துணையாகும். இவ்வாறு, பூசைக்குத் தேவையானவற்றை முறையாகத் திரட்டிக்கொண்ட பின்னர், கம்பமா நதியில் நீராடி, சிவ அனுட்டானம் முதலான ஒழுக்கங்களை முறையாகக் கடைப்பிடித்து, பூங்கொடி போன்றவராகிய அம்மை, பெருமானைப் பூசிக்க எழுந்தாள்.

    பெருமானைப் பணிந்த பெருந்தவக்கொழுந்து
    திருஏகம்பத் திருவாயிலில், மூத்த பிள்ளையாரையும், இளைய பிள்ளையாரையும் முறையாகத் தொழுது, துவார பாலகரையும் பணிந்து, நந்தி திருவாயிலை அடைந்தாள். ஆராத பெருவிருப்பின் வெளிப்பாடாகக் கண்ணீர் அரும்ப, மெய்யறிவின் பயனாகிய பூசையைத் தொடங்கினாள்; ஆகம விதிப்படி அருள்பூசைக்கு முனைந்தாள். ‘பெருமானே! உமது திருக்கண்களைப் புதைத்து, படைப்பு முதலான ஐந்தொழில்களுக்கும் இடையூறு விளைவிக்க எண்ணிய தீவினைக்குக் கழுவாய் தேடுகின்ற பெருநோக்கில், யான் புரிகின்ற பூசையில் குற்றம் நேராது காத்தருள வேண்டும்!’ எனப் பணிந்தாள். அவ்வேளையில், பெருமான் தனது திருவிளையாடலாக, கம்பைநதி பெருகி வரச் செய்தார். அதைக் கண்டோரின் கண்ணீரும் துணைநதியாகப் பெருகும்படி, பெருவெள்ளம் பாய்ந்தது.

    அம்மை, தனது திருவருள் குறைவினால், பூசைக்கு இத்தகைய இடையூறு ஏற்பட்டதாக எண்ணிக் கலங்கினாள். பெருவெள்ளமானது, பெருமானின் திருமுன்னர் பெருகி வந்து அவரை நலிவிக்கும்’ எனப் பதைத்தாள். உடனே, தனது வலது முழந்தாளைச் சிவலிங்கப் பீடத்தில் ஊன்றி, மேருமலையைப் இருபுறமிருந்தும் படர்கின்ற மல்லிகைக்கொடி போலக் கைகளால் அணைத்துக் காத்தாள். அந்நொடியில், இலிங்கத்திருமேனியிலிருந்து பெருமான், அம்மையின் வளைத்தழும்பும், முலைச்சுவடும் ஏற்றருளிய திருக்காட்சியைக் காட்டியருளினான். இவ்வரலாற்றுத் தொன்மத்தை அப்பரடிகள்,

    ‘கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
    கொங்கையினை அமர்பொருது கோலங் கொண்ட
    தழும்புளவே வரைமார்பில் வெண்ணூலுண்டே
    சாந்தமொடு சந்தனதி னளறு தங்கி
    அழுந்தியசெந் திருவுரு’ (6:4:10)
    எனக் குறித்தருளியுள்ளார்.

    ஏகம்பத்தில் திருமணக்கோலம்
    பெருமானைக் கண்டு அன்புருகி நின்ற அம்மையிடத்தில், ‘நீ வேண்டுகின்ற வரங்களும் யாவை?’ என்றான். ஏகம்பமாகிய இத்திருத்தலத்தில், தீவினைகள், உயிர்களைப் பற்றாமல் இருக்கவும், நல்வினைகள், பலநூறு மடங்காகப் பெருகவும், வீடுபேற்றுக்குக் கருவியாகிய அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள்கள் நாளும் தழைக்கவும் அருளவேண்டும்’ என வேண்டினாள். பெருமானும், ‘அவ்வண்ணமே ஆகுக!’ என்று அருளினான்.

    அத்துடன், ‘பெருமானே!, எனது கரிய நிறத்தை நீக்கி, பொன்னிறத்தைத் தந்து, திருமண மங்கலப்பேற்றினையும் தந்தருளவேண்டும்’ எனப் பணிந்தாள். அவ்வண்ணமே, இத்திருக்கோயிலில், பங்குனி உத்திர நன்னாளில், திருமணம் நிகழ்ந்தேறவும், அகத்திய மாமுனி முதலான ஆருயிர்கள் அனைத்தும், அத்திருக்காட்சியினைக் கண்டு உய்யவும் அருளினான். செம்மேனிப் பெருமான், தனது இடப்பாகத்தில் அமைந்த பொன்னிறக் கொடியால், தானும் பொன்னிறம் கொண்ட திரு அழகினை,

    செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
    செஞ்சடையெம் பெருமானே தெய்வம் நாறும்
    வம்பினாள் மலர்க்கூந்த லுமையாள் காதன்
    மணவாளனே’ (6:4:9)
    என வியந்து போற்றியுள்ளார்.

    திருமேற்றளி
    ‘உருத்திரப் பல்கணத்தார்’ என்போர் சிவவேடம் தரித்து, உள்ளன்புடன் பெருமானை வழிபடுவோராவர். அச்சிவனடியார்கள், நூறு பேராவர். அவர்களும், சிறப்புடைய அடியார் பிறரும் திருக்காஞ்சி நகரத்திலிருந்து பெருமானை, இலிங்கத்திருமேனியால் வழிபட்டுய்ந்த நூற்றுப்பதினெட்டுத் திருக்கோயில்கள், ‘கச்சிப்பல தளி’ எனப் போற்றப்பெறுகின்றன. இத்திருக்கோயில்கள், பதமுத்திகளைத் தந்தருள வல்லன. சரியை முதலான நாற்படி நிலைகளும், முறையே, சாலோகம், சாமீபம், சாரூபம் மற்றும் சாயுச்சியம் ஆகிய நால்வகைப் பதமுத்திகளைத் தரவல்லன. அவற்றுள், சாலோகம் என்பது, சிவலோகமாகிய திருக்கயிலையில் உறைகின்ற பேறு என்பது, காஞ்சிப்புராண உரை விளக்கம்.
    கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
    கயிலாய நாதனையே காணலாமே’ (6:70:4)
    எனச் சாலோகப் பேறு முதலாகிய பதமுத்திகளுக்கு அப்பரடிகள் வழிநடத்துகின்றார். சாரூபம் என்பது, இறைவனின் திருவடிவத்தைப் பெறுதலாகிய பேறாகும். கச்சிப்பல தளி என்றமைந்த பல திருக்கோயில்களிலும், சாரூப முத்தி தரவல்லது ‘திரு மேற்றளி’ திருக்கோயிலாகும். திருமால், சாரூபப் பேறு வேண்டித் திருக்காஞ்சி நகரத்தில், இலிங்கத்திருமேனியைத் தாபித்துப் பெருமானைப் பலகாலம் வழிபட்டுவந்தார். கலியுகத்தில், திருஞானசம்பந்தப் பிள்ளையின் திருப்பதிகப் பாடல் கேட்டு, உள்ளம் உருகி, சாரூபப் பேற்றினைப் பெற்றுய்க!’ என்று பெருமானும் அருளினார். திருமாலும், அன்றாடப் பூசைநியமங்கள் தவறாமல், திருமேற்றளி நாதரை வழிபட்டுவந்த நாளில், பிள்ளையாரின் திருப்பாடலுக்கு உள்ளம் உருகித் தன்னை மறந்தான். ‘ஓதஉருகீசர்’ என்ற திருப்பெயருடன், பெருமானின் திருமுன்பில் இலிங்கத் திருமேனி பெற்றுய்ந்தார் (திருமேற்றளிப் படலம்: 11).

    திருமுறைநெறி விளங்குகின்ற திருமேற்றளி
    அன்றாடம், நாம் செய்கின்ற பூசைகளால், உடலும் உள்ளமும் ஒருசேரப் பண்படும். உண்மையன்புடன் ஒவ்வொரு நாளும் பூசைநெறியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், சில நாளில் பூசை நடைமுறைகள், வெறும் பயிற்சிகளாக அல்லாமல், உடலும் உள்ளமும் ஒருசேர உருகி, பெருமானை உணர்ந்து இன்புறுகின்ற பேற்றினைத் தந்தருளும். அவ்வாறு, ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலாத பேரின்பத்தை அருள்கின்ற பெருநெறியாக, ‘திருமுறைத் திருநெறி’ விளங்கவல்லது. இதனை உணர்த்த வேண்டியே பெருமான், சுந்தரருக்கு,

    ‘நமக்கு மன்பிற்
    பெருகிய சிறப்பின் மிக்க
    அற்சனை பாட்டே யாகும்
    ஆதலான் மண்மேல் நம்மைச்
    சொற்றமிழ் பாடு கென்றார்
    தூமறை பாடும் வாயார்’ (தடுத்தாட்கொண்ட புராணம்: 216)
    என அருளாணை வழங்கினார்.

    அப்பரடிகள், ஞானப்பிள்ளையாரைச் சிவிகையில் சுமந்தவர்; அவர்மீது பெருகியஅன்பில், நாளும் அவரைப் பணிந்தவர்; தூயஅன்புக்கும், பணிவுக்கும் பரிசாக, ‘அப்பரே!’ என்று அவரால் அழைக்கப்பட்டவர். மண்ணில் திருமுறைநெறி வாழச் சிவஞானக் கன்றாக வந்துதித்தவர், திருஞானசம்பந்தப் பிள்ளையார். அவர் முதலாகத் தழைக்கின்ற திருமுறைநெறியை, நமக்கு வாழ்வியல் நெறியாக உணர்த்தவேண்டியே அப்பரடிகள் திருமேற்றளியைப் போற்றிப் பாடினார்’ எனலாம்.
    அத்திருக்கோயிலை அப்பரடிகள்,
    பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
    பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
    கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்’ (6:97:7)
    எனக் குறித்தருளியுள்ளார்.

    பாரூர் பல்லவனூர் மதிற்கச்சி மாநகர்வாய்ச்
    சீரூ ரும் புறவில் திருமேற் றளி’ (7:21:10)
    என்பது, சுந்தரர் பெருமானின் அருள்குறிப்பு.

    மேற்கண்ட அருள்நோக்கத்திலேயே, காஞ்சிப்புராணமும், ‘திருமால் சாரூபப் பேறு பெறப் பிள்ளையாரின் திருமுறைகள் கருவியானது’ எனத் திருமேற்றளி வரலாற்றை விவரித்துள்ளது. இத்தகைய அருள்வரலாற்றினைப் போற்றுகின்றவகையில், ‘திருமேற்றளி’ அமைந்துள்ள திருவீதியின் கிழக்குத்திசையில், திருஞானசம்பந்தப் பிள்ளையாரின் திருக்கோயில் விளங்குகிறது. அத்துடன், ஞானப்பிள்ளையாரின் பெயரால், ‘பிள்ளையார்பாளையம்’ என்ற திருவூரும் வழங்கிவருகிறது.

    முடிவுரை

    திருமுறையாசிரியர்கள், தொன்மக்கூறுகளைத் திருப்பாடல்களில் கையாண்டுள்ளதைத் திறனாய்வாளர்கள், ‘தொன்மவியல் படைப்பாக்க உத்தி’ எனக் குறிப்பிடுவர். திருமுறைகளிலும், சாத்திரங்களிலும், பெருமானது பரத்துவமும், உயிர்களது தற்சுதந்திரமின்மையும், உலகியலின் நிலையாமையாகிய உண்மைகளும் மையப்பொருளாகின்றன. அவற்றை, எளிதில் உணர்த்தவேண்டியே ஞானாசிரியர்கள், தமது திருப்பாடல்களில் சிவபுராணத் தொன்மங்களைக் கையாண்டனர். அவை, கதைப்போக்கில், அரிய தத்துவங்களையும் எளிமையாக விளக்குகின்றன. திருமுறை ஆசிரியர்கள் கையாண்ட, திருத்தலத்தொன்மங்கள், பின்னாளில் தல புராணங்களாக விரிந்தன. அவ்வகையில், திருத்தாண்டகத்திலுள்ள, காஞ்சிநகரத் திருக்கோயில் தொன்மக் குறிப்புகள், காஞ்சிப்புராணத்தில் தனிப்படலங்களாக மேலும் விரிந்து பக்திநெறியை விளக்குகின்றன. எனவே, திருமுறைகளில் இடம்பெறுகின்ற தொன்மக்கூறுகளை, ‘பயனற்ற கதைக்கூறுகள்’ என ஒதுக்குதல், சிறந்த இலக்கியப் பயிற்சியாகாது. அத்துடன், திருமுறைத்தொன்மங்களைப் பலமுறையும் நுண்ணுணர்வுடன் பயில்வது, திருமுறைத் திருத்தலங்களை, இம்மைப் பயன்களுக்காக மட்டுமேயல்லாமல், மெய்யறிவுத்தேடலுடனும் அணுக வழிகாட்டும்.

    ——————————————

    ஆய்வுத் துணை நூல்களும், இணையமும்
    1. ஆறாம் திருமுறை,
    பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.
    பதிப்பு ஆண்டு: அக்டோபர், 2015.

    2. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை),
    பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்),
    கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

    3. சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப்புராணம், www.tamilvulibrary.org

    4. www.thevaaram.org

    —————————————————

    கட்டுரையாளர்கள்:

    சு. கோப்பெருந்தேவி1* – முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

    முனைவர் இரா. மதன் குமார்2* – இணைப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

    Share
  • தொண்டர்க்கும் தொண்டராகிய புண்ணியர்கள்

    முனைவர் இரா. மதன் குமார்
    இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

    முன்னுரை

    சைவசமயத்தில், சரியை முதலான நால்வகைநெறிகளும் பெருமானைப் பெற்றுய்வதற்கான படிநிலைகளாகின்றன. அவ்வரிசையில், சமயக்குரவர் நால்வர்தம் அணுகுமுறைகளையும் முறையே மகன்மைநெறி, தொண்டுநெறி, தோழமைநெறி மற்றும் ஞானநெறி எனப் போற்றுதல் மரபு. நால்வகைநெறிகளுள், பூவுலகின்கண் ‘தொண்டுநெறியை நிலைநிறுத்தத் திருவவதாரம் செய்தருளியவர், ‘திருநாவுக்கரசு நாயனார்’. அவரை, ஞானகுருவாக்கி, ’தொண்டுநெறிக்கோர் தூமணி’ எனச் சிறப்புற்றவர், ‘அப்பூதியடிகள்’. திலகவதியாரை முதலாக உடைய இத் திருத்தொண்டர் மரபு, எளியராகிய அடியவர்கள், அரும்பொருளாகிய இறைவனை அடைவதற்குத் ‘தொண்டுநெறியே துணையாகும்’ என விளக்கிநிற்பது; ‘பொய்யன்பிலா தொண்டர்க்கும் தொண்டராம் புண்ணியமே’ என்ற திருமுறை வாழ்வியலை என்றென்றும் விளங்கச்செய்வது; ‘தொண்டின் திலகம்’ எனத் திலகவதியம்மையாரும், அவ்வருள்திலகத்தின் திருப்பொலிவாகத் திருநாவுக்கரசுப் பெருமானும், அதன் அருள்மணமாய் அப்பூதியாரும், அவர்தம் மனைவியாரும், அவர்களது திருமகனாகிய மூத்ததிருநாவுக்கரசும் விளங்குகின்ற மேன்மையுடையது. அவ்வகையில், தொண்டர்சீர் பரவுகின்ற திருத்தொண்டர்புராணத்தில், இப்பெருமக்களது பக்திநெறியானது, ‘தொண்டுநெறியே, சைவப்பெருநெறி’ என விளங்குகின்ற பாங்கினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    பெண்குலத்திலோர் பொன்மணி

    திருமுனைப்பாடி நாட்டின் திருவாமூரின் வேளாளர் குலத்தின், குறுக்கையர் குடியில் சிவம் பெருக்கும் இணையராக விளங்கியவர்கள், புகழனாரும், மாதினியாரும். அத்திருக்குடியில் மட்டுமல்லாது, உலகனைத்திலும் சைவநெறியைக் காக்கப் பிறந்தவர், ‘திலகவதியார்’. அவ்வருள்மேன்மை கருதியே அம்மையாரை, தெய்வச்சேக்கிழார் பெருமானும், ‘திருவனைய திலகவதி’ (திருநாவு.புரா.:17) என்று போற்றியுள்ளார். அவருக்குப்பின் பிறந்தவரே ‘மருள்நீக்கியார்’. பின்னாளில் தம் தம்பியாரின் வாயிலாகத் தொண்டுநெறியாகிய சைவப்பெருநெறியைத் தழைக்கச்செய்கின்ற பெருநோக்கில் அவர்தம் வாழ்க்கையும் விளங்கியது.

    திலகவதியாருக்கு, கலிப்பகையாருடனான திருமணவாழ்க்கைக் கூடாதநிலை நேர்ந்தது.  சில காலத்தில் பெற்றோரையும் இழக்க நேரிட்டநிலையில் அத்திருமகளார் தம் உயிர்த்துறக்க முற்பட்டார். ஆயினும், ‘யாதொரு ஆதரவுமற்ற தமது தம்பியார் உளராகவேண்டும்’ என இரங்கிய அன்பின் மேன்மையினால், அவர் உயிர் தாங்கியிருந்து, ஒப்பரிய சைவ அறங்களை மனையிலிருந்தே புரிந்துவந்தார்.

    “தம்பியா ருளராக வேண்டு” மென வைத்ததயா
      வும்பருல கணையவுறு நிலைவிக்க, உயிர்தாங்கி,
      யம்பொன்மணி நூறாங்கா, தனைத்துயிர்க்கு மருடாங்கி
      யிம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதி யாரிருந்தார்.  திருநாவு.புரா.: 34) என்பது தெய்வச்சேக்கிழார் பெருமானின் திருவாக்கு.

    திலகவதியாரின் திருநோக்கம்

    சைவ அறத்தில் தலைநின்றிருந்த அவர்தம் தம்பியார், மெய்ப்பொருள்தேடலின் பொருட்டு, சமண சமயம் சார நேரிட்டது. அந்நிலையிலும் அவருக்கெனவே வாழ்ந்து, தியாகச்செல்வியாகத் திகழ்ந்த திலகவதியார், திருவதிகைத் திருத்தலத்தில், ‘திருத்தொண்டர்’ என்னும் நிலைதாங்கி, கைத்தொண்டில் சிறந்தார். அத்துடன், ‘தமது தம்பியாரை மீண்டும் சைவசமயத்திற்கு ஆட்படுத்தத் திருவருள் வாய்க்கவேண்டும்’ எனப் பெருமானைப் பணிவதையே தமது பணியாகக் கொண்டிருந்தார். ஆண்டுகள் பல கழிந்தன; தம்பியாரும், ‘தருமசேனர்’ எனப் பெரும்பெயர் பெற்று, சமணசமயத்தில் மயங்கியிருந்தார். அவர்தம் மயக்கத்தை மட்டுமன்றி, ஆருயிர்கள் அனைத்தின் அறியாமை மயக்கையும் தொண்டுநெறி வழியே நீக்கியருளத் திருவருள் கனிந்தது.

    தம்பியாரை,  தீராத சூலை நோய்ப் பற்றி நலிவித்தது. உயிர்க் கவரும் கூற்றுவனை ஒத்த சூலையிலிருந்து பிழைத்தருள வேண்டி, தமது தமக்கையாரின் துணையினை நாடச்செய்தது. அதற்கென, தமது நோய்நிலையினை அறிவித்து, தமக்கையாரை உடன் அழைத்துவர ஏவலாளரை ஏகினார். ஆயினும்,‘சைவநெறி திறம்பாத வாய்மையின் நல்லாராகிய திலகவதியார், சமண்பள்ளிக்குத் தாம் ஏகுகின்ற எண்ணமில்லை’ என்பதனைத் தம் தம்பியாருக்கு உறுதிபட உரைத்தருளினார். அத்துடன், ‘உயிர்ப்பிணியையும் ஒருங்கே நீக்கவல்ல திருவதிகைப் பெருமானின் திருத்தலத்தை நாடி வரவுள்ள தமது தம்பியாரின் வருகையினை எதிர்நோக்கியிருந்தார்.

    அவரது சித்தத்தின் படியே, அங்குவந்த தம்பியாருக்குத் தாமே ஞானகுருவாகியிருந்து,  திருவாளன் திருநீறு தந்தருளித் தீக்கையும் செய்தருளினார். அத்துடன், தாம் முன்சென்று, தம்பியாரைத் திருக்கோயிலுக்குள் வழிநடத்தினார். அருள்மொழிகளுடன் கூடிய அவர்தம் ஆற்றுப்படுத்தலால், பெருமானின் திருமுன்பை அடைந்த நாயனாரிடத்தில், பெருமானைப் பாடிப் பணிகின்ற உள்ளுணர்வு மேலிட்டது.

    உலகுயிர்களின் பிறவித்துன்பத்தை நீக்கியருள்கின்ற திருப்பதிகச் சொல்மாலைகளின் தொடக்கமாக, ‘கூற்றாயினவாறு’ எனத் தொடங்கிப் பாடினார். அதுபொழுது முதலாக, ‘தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்’ எனச் செந்தமிழ்ப்பதிகம் பாடிப் பணிகின்ற பாங்கில், ‘நாவுக்கரசு’ என்னும் ஞானத்திருப்பெயரும் இறைவனால் சூட்டியருளப் பெற்றார். இவ்வாறு, திருநாவுக்கரசராகிய நாயனாரை சைவப்பேருலகத்துக்குத் தருகின்ற பெருநோக்கத்தில் திலகவதியாரின் திருவாழ்வு அமைந்திருந்தது. அப்பெருநோக்கத்தை நிறைவேற்ற வேண்டி, சூலைநோயினைத் தந்தருளிய பெருமான், அதைத் தீர்த்தருளத் திலகவதியாரின் மெய்ம்மைத் திருவாக்கும், திருநீறும் கருவியாகும்படி அருளினான். அத்துடன், அத்திருச்செல்வியே, நாயனாருக்கு ஞானகுருவாகவும் விளங்கத் திருவருள் செய்தருளினார். அவ்வருள் சிறப்பையே நாயனார், ’பெருமான், திலகவதியாரைத் தமக்குத் தாயாகவே தந்தருளினான்’ என்று அன்புருகப் போற்றியுள்ளார்.

                ‘அம்மை யார்? எனக்கு என்று அரற்றினேற்கு
                அம்மையாரைத் தந்தார்ஆரூர் ஐயரே’ (5:7:6) என்ற திருவாக்கின்படி, நாயனாருக்கே மட்டுமன்றி, அம்மையார்,  மன்னுயிர் அனைத்தையும் தொண்டுநெறியில் வளர்த்தெடுக்கவந்த திருத்தாயாகவும் விளங்கக் காண்கிறோம்.

     உழவாரப் படையாளியைத் தந்தார்
    தாயாகவும், ஞானகுருவாகவும் வாய்த்த தமக்கையாரின் அருளாணையின்வண்ணம் தம்பியாரும், சரியையாகிய கைத்தொண்டினையே தமக்குரிய ஞானநெறியாகக் கைக்கொண்டார். கைத்தொண்டில் திறம்பாதிருந்து, ‘உழவாரப் படையாளி’ என மிளிர்ந்தார். அப்பெருநெறியில், பதிகம் ஏழெழுநூறு பகர்கின்ற பரம கவியோகியாக அவரைச் சைவஉலகுக்குத் தந்தளித்த தனிப்பெருமை, திலகவதியாரின் தொண்டுநெறிக்குக் கிடைத்த வெற்றியாகும். சுருங்கக்கூறின், திலகவதியாரின் தியாக வாழ்க்கை, ‘ஆருயிர் அனைத்தின் மேலும் கொண்ட ஒப்பரிய அருள்வாழ்க்கை’  என்பது மிகையில்லை. அவ்வருள் பாங்கினைக் குறிக்கவே தெய்வச்சேக்கிழார் பெருமான், ‘தூண்டுதவ விளக்கனையார்’ எனப் பெருமாட்டியைப் போற்றிப் பணிந்துள்ளார். ‘தூண்டு தவம்’ – உலகச் சார்பினை விடுத்துச் சிவநல்வினையாகிய சிவச்சார்பினையே அடையும்படி தூண்டும் தவம்; இங்குத் தம்மையே தூண்டிக்கொண்டதன்றித் தம்பியாரையும் அவர்மூலம் உலகத்தாரையும் தூண்டும் தவம் (திருநாவு.புரா.:46, சிவக்கவிமணியார் உரை)’ எனத் திலகவதியாரின் திருத்தொண்டு, ‘தவம்’ என்று போற்றப்பெறுகிறது.

     ‘திருநாவுக்கரசு’ என்னும் திருநின்ற செம்மையர்

    உயிர்கள், தத்தம் வினைவழியே, எழுவகைப் பிறப்புகளிலும் மாறிமாறி பிறந்திளைக்கின்றன. அவ்வப் பிறப்புகளிலும் அவை புல், பூடு, புழு, மரம், பறவை, பாம்பு, மனிதர் என இனப்பெயர் பெறுகின்றன. அவற்றுள், மனிதப்பிறப்பினருக்குப் பெற்றோரால் இடப்பெறுகின்ற பெயர்கள் உண்டு. அவை, ‘ஊனப்பெயர்’ என்றே வழங்கப்பெறும். ‘மனிதர்கள், தாம் கொள்கின்ற, அழிகின்ற உடலுக்கே அத்தகைய பெயர்கள் சூட்டப்படுகின்றன’ என்பதனை உணர்வதில்லை; காலங்கள் பல கடந்தும் அவை நிலைப்பதில்லை.  அத்தகைய ஊனப்பெயர்களையும் கடந்து, ஞானகுருவால், ‘தீட்சைத்திருப்பெயரும்’, அனைத்து உயிர்களுக்கும் அம்மையப்பனாகிய பெருமான், சூட்டியருள்கின்ற ‘ஞானத்திருப்பெயரும்’ உள்ளன. அத்திருப்பெயரை உணர்வதும், பெருமானைப் பற்றி உய்வதும் பிறப்பின் பயன்களாகின்றன. அதற்கு, ‘ஞானகுருவின் திருப்பெயரை மந்திரமாக ஓதுதலே’ கருவியாகும்.

          ‘ஊனப்பே ரொழிய வைத்தார்
          ஓதியே யுணர வைத்தார்
          ஞானப்பேர் நவில வைத்தார்’ (4:30:7)

    நாயனார், ‘மருள்நீக்கி’ என்னும் இயற்பெயர்த் தாங்கி, மண்ணுலகில் மாந்தர்தம் அகவிருளையும், சமண் முதலான பொய்யிருளையும் போக்கவந்தவர். அவர், முந்தைய பிறப்பிலேயே ஞானம் முதிரப்பெற்றவராக, ‘வாகீசர்’ எனப் பெயர் தாங்கியிருந்தவர். ஆயினும், இராவணனின் அறியாமைச் செயலுக்கு அவர் துணைநின்றநிலை உண்டு. அக்காரணத்தால், நிகழ்பிறப்பில் தாம், மண்ணுலகில் வந்தவதரித்த அருள்நோக்கத்தைப் பலகாலம் மறந்திருந்தார். சமண் மயக்கில் ஆழ்ந்திருந்து, ‘தருமசேனர்’ என்னும் திருப்பெயர்த் தாங்கியிருந்தார்.  அவ்வறியாமை நிலை, ‘பொய்வாய்மை பெருக்கிய புன்சமயப் பொறை’ (திருநாவு.புரா.: 73) எனப் புராணத்துள் சுட்டப்பெற்றுள்ளது.

    நாயனார், புறச்சமயத்தில் ஒழுகியதால் பெற்ற, ‘தருமசேனர்’ என்னும் பொய்ப்பெயர் அவரிடமிருந்து அகன்றுபோகப் பெருமான் திருவுள்ளம் கொண்டான். திலகவதியாரின் திருவிண்ணப்பத்தின் படியே, தம்பியாரைச் சைவத்துக்கு மீளவும் ஆட்கொண்டருள வேண்டி, சூலைநோயினைத் தந்தருளினான். திருவதிகையில், சூலையும் நீங்கி, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரும் சூட்டியருளினான். அத்துடன், அத்திருப்பெயரின் வாயிலாக, ‘திருநின்ற செம்மையாகிய திருத்தொண்டின் வாய்மை ஏழுலகிலும் என்றென்றும் நின்று நிலைக்கட்டும்’ என வானோசையாகத் திருவருள் ஆணையும் தந்தருளினான். அவ்வருள் நிலையானது, இனிவரும் நாளிலும், ’திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரால், செய்வதற்கரிய சைவப் பெருநலங்கள் பல விளைய இருந்ததன் குறிப்பு மொழியாகும்.

          ‘மேவுற் றவிவ்வே லையினீ டியசீர்
          வீரட் டமமர்ந் தபிரா னருளாற்
        “பாவுற் றலர்செந் தமிழின் சொல்வளப்
          பதிகத் தொடைபா டியபான் மையினால்
          நாவுக் கரசென் றுலகே ழினுநின்
          னன்னா மநயப் புறநண் ணுக” வென்
         றியாவர்க் கும்வியப் புறமஞ் சுறைவா
         னிடையே யொருவாய் மையெழுந் ததுவே’. (திருநாவு.புரா.: 74)

    தொண்டுநெறியே குருநெறியான தகைமை
    ‘பாலூட்டி, குழந்தையைப் பேணுதல், தாயின் கடனாதல் போன்று, பெருமானும் அனைத்துயிருக்கும் கருணைசெய்தலைத் தன் கடமையாகக் கொள்கின்றான். மேலும், எவ்வுயிர்க்கும் கருணைசெய்தலாகிய தனது அருங்குணத்தைத் தன் காதல் அடியவர்க்கும் அளித்தருள்கின்றான்.

     ‘காதலாம் அடியவர்க்குக் குணங்களைக் கொடுப்பார்’ (4:49:9) அவ்வாறு, அன்புநெறிக்கு ஆட்பட்டு, அதற்குக் கருவியாகவல்ல தொண்டுநெறியில் என்றும் நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியே திருநாவுக்கரசு நாயனாரும்,

                ‘தன் கடன் அடியேனையும் தாங்குதல்
                 என் கடன் பணி செய்து கிடப்பதே’           (5:19:9) என்று தொண்டுநெறிக்கு ஆட்பட்டார். அவ்வாறு, அவரைத் தொண்டுநெறியில் ஆட்படுத்தி, உலகுய்யச்செய்வதே பெருமானின் திருக்குறிப்பாகவும் அமைந்திருந்தது.  அதனாலேயே, அவரது ஞானகுருவாக வாய்த்த திலகவதியாரும், திருவதிகைத் திருத்தலத்திலிருந்து, சைவம் தழைக்கச் சரியைத் தொண்டு செய்பவராக விளங்கத் திருவருள் விளைந்திருந்தது; அதன்வழியாகவே,  திருநாவுக்கரசு நாயனாரும் தொண்டுநெறியையே தமக்குரிய குருநெறியாக ஏறிட்டுக் கொண்டார்.

    அளப்பரும் சீருடைய அடியார் திருநாமம்

    பெருமான், ‘வேதங்களும் அறிய இயலாத நுட்பமுடையவன்’. அரியவனான அவன், தனது அருங்குணங்களை அடியவர்கள் விளங்கி உய்யும் பொருட்டுப் பேராயிரமும் கொண்டருள்கின்றான்.

    ‘ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே’         (4:4:8)

    திருவைந்தெழுத்தும் அவனது திருப்பெயராகி, பிறவிக்கு வாயிலாகின்ற வினைகளைத் திண்ணமுறத் தீர்த்தருள வல்லது’ என்பதனைத் திருஞானசம்பந்தப்பெருமான்,

           ‘எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்
                 நல்லார் நாமம் நச்சி வாயவே’ (3:49;5) என்று போற்றியுரைத்தார். அவ்வருஞ் சிறப்புக்குச் சான்றாகவே, திருநாவுக்கரசுப் பெருமானும்,

                ‘கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
                 நற்றுணை யாவது நமச்சி வாயவே’ (4:11:1) எனப் பாடினார்.

    திருவைந்தெழுத்தையே தெப்பமாகப் பெற்று,  நீர்க்கடலோடு, பிறவிக்கடலிலிருந்தும் மீண்டருளினார். பேராயிரத்தையும், திருவைந்தெழுத்தையும், அடியவர்கள் உய்வதற்குத் தனது திருப்பெயர்களாகக் கொண்டருள்கின்ற பெருமான், தன்னடியவனாகிய மருள்நீக்கியாருக்குத் திருவதிகைத் திருத்தலத்தில், தானே உவந்து, ‘நாவுக்கரசு’ என்னும் திருப்பெயரைச் சூட்டியருளினான். (ஒற்றெழுத்தை நீக்கிக் கண்டால், ஐந்தெழுத்தாகும்) அத்திருப்பெயரையும், திருவைந்தெழுத்தாகவே விளங்கச்செய்தான்.

    ‘தனது அடியார்களுக்கும் தொண்டனென’ விளங்குகின்ற பெருமான், தனது திருப்பெயரின் சிறப்பினை அடியார்கள் ஓதி உய்வதைக் காட்டிலும், தனது அடியவரின் திருப்பெயர்களை அவர்கள் ஓதி உய்யவேண்டிப் பெருங்கருணை புரிகின்றான். அத்துடன், அத்திருப்பெயர், மந்திரமாக விளங்கி, உடற்பிணியையும், உயிர்ப்பிணியையும் ஒருங்கே நீக்கவல்ல சிறப்பில் பொலியச் செய்கின்றான். அவ்வாறு, அவன், ’நாவுக்கரசு’ என்னும் திருப்பெயருக்குத் தந்த அருள்வல்லமையை விளக்கியுரைக்கின்ற அரும்புகழ்ப் புராணமாக ‘அப்பூதியடிகளின் திருவரலாறு’ விளங்குகிறது.

    பெயர்நலம் விளக்க வந்தார்  

    பெருமான், நஞ்சுண்டருளிய திருவிளையாடல், அவனது பெருந்திறத்தைக் குறிப்பது. அதன்பொருட்டு அவனுக்கு, ‘திருநீலகண்டன்’ என்னும் திருப்பெயர் அமைகிறது. திருஞானசம்பந்தர், ‘அவ்வினைக்கு இவ்வினை’ என உயிர்களைத் தொடர்ந்துவருகின்ற வலிய வினைகளையும், ’திருநீலகண்டமாகிய’ பெருமானின் திருப்பெயர் நீக்கியருளும் என்பதனைத் திருக்கொடிமாடச் செங்குன்றூரில் மெய்ப்பித்துள்ளார். அங்கு, அடியாரின் குளிர்சுரத்தைப் போக்கக் கருவியான, ‘திருநீலகண்டத் திருநாமம்’, திருநீலகண்டக் குயவனாரின் பிறவிநோயையும் நீக்கியருளியது. அத்திருப்பெயரின் அரும்பெருமை, சைவப்பேருலகில் நின்றுநிலைப்பதற்கு, குயவனார் கருவியானார். அவ்வாறே, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரை உலகேழிலும் மந்திரமாக நிலைபெறச் செய்வதற்கு, அப்பூதியடிகள் கருவியானார்.  பெருமானுக்கு அமைந்த திருப்பெயர்களின் பொருளுணர்ந்து, அவற்றை இடையறாது பற்றுங்கால், அத்திருப்பெயர், சிவத்தையே பற்றுகின்ற பேரறிவை உயிருக்கு நல்குகிறது. அது ஒப்பரிய சிவஞானத்திற்குத் திறவுகோலாகிறது. அத்துடன் அரும்பேறாகிய திருவருளையும் குறைவின்றிச் சுரந்தருள்கிறது.

    அத்தகைய பேரறிவே, ‘பதிஞானம்’ என வழங்கப்பெறும். பக்குவமுடைய ஆன்மாக்கள், முற்பிறப்புகளின் தவப்பயனால் உயிரறிவு விளங்கப்பெற்று, திருமுறைநெறியில் ஞானப்பேற்றுக்குத் தலைப்படுகின்றன. அவ்வாறு, திருமுறைகளைக் கற்றும், கேட்டும்  பலபிறப்பின் துயர்நீங்குகின்ற நல்வினைப்பயன் அனைத்து உயிர்களுக்கும் வாய்ப்பதில்லை. அவ்வுயிர்கள், அறியாமையால் உலகியல் வலைப்பட்டு, தீவினையே பெருக்கி, துன்பப்பிறவிகளுக்குத் தலைப்படுகின்றன. சிற்றறிவுடைய அவ்வுயிர்களுக்கும், ‘எளிய உய்யும்நெறியை’ விளக்கியருள்கின்ற அருங்கருணையே அப்பூதியாரின் திருவவதார நோக்கமாகிறது. அவர், அந்தணராக, அனைத்துயிரின்பாலும், அந்தமிலா அருங்கருணை பூண்டிருந்தார். அதனால், அவர்தம் தீவேட்டலாகிய மறைத்தொழிலும், கலியுகத்தின் கொடுந்துன்பங்களிலிருந்து மன்னுயிர்களைக் காக்கின்ற அறச்செயலாக மிளிர்ந்தது.

                 ‘கலிமெலிய அழலோம்பும் அப்பூதி’    (4:12:10)

    என்பது நாவரசர் நான்காம் திருமுறையில், அப்பூதியடிகளைக் குறித்துப் பாடியுள்ள திருக்குறிப்பாகும்.

    மறைத்தொழிலுடன், கா வளர்த்தும், கனிதரு சோலைகள் பேணியும், குளங்கள் புதுக்கியும், தண்ணீர்ப் பந்தல்கள் நலம்பெற அமைத்தும், அறச்சாலைகள் பலவற்றை அன்புடன் சமைத்தும், தமது ஞானகுருவாகிய நாவுக்கரசரின் நற்தொண்டுநெறி சிறக்கின்ற உயர்த்தவத்தைப் பேணினார். இப்பெருஞ் சிறப்பினைச் சாற்றவே நம்பி ஆரூரர் பெருமான்,

          ‘ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்’ (திருத்தொண்டத்தொகை: 4) எனப் போற்றியுரைத்துள்ளார்.

    பதி புண்ணியச் செல்வர்
    தன்னலம் மறந்து செய்கின்ற நற்செயல்கள் புண்ணியங்களாகின்றன. ‘அவை நடந்தேறத் தாம் கருவியாக அமைந்துள்ளோம்’ என்கின்ற பக்குவநிலையால் நல்வினைத் தொடர்பாகிய புண்ணியப்பயன் உயிரைத் தொடர்ந்து, அதற்கேற்பப் பிறப்பில் படுதல் உயிர்களுக்கு நிகழ்வதில்லை. அவ்வாறன்றி, எந்த ஒரு செயலையும், ‘யான் செய்கின்றேன்’; ‘எனது அறிவாலும், வலிமையாலும் செய்கின்றேன்’ என்ற தன்முனைப்பு, செயலில் பற்றினையும், அதன்வழியான இன்ப துன்பங்களில் நாட்டத்தையும் தந்து பிறப்புகளுக்கு வாயிலமைக்கின்ற அவலம் நேர்கிறது. அத்தகைய நிலையினை, ‘பசு புண்ணியம்’ என்பர்.

    பதிபுண்ணியங்களாகிய நற்செயல்கள், சீவன்முத்தர்களால்,  பெருமானை முன்னிட்டுச் செய்யப்படுவன. அவற்றால் வினைப்பற்றும், இன்பதுன்ப நாட்டமும், அதற்கேற்ப பிறப்பின் தொடர்ச்சியும் அமைவதில்லை. அத்தகைய பக்குவநிலையே, ‘சீவன்முத்த நிலை’ எனப்படுகிறது. உலகியல் தொடர்போடு வாழ்கின்றபோதிலும், சீவன்முத்தர்கள் தாங்குகின்ற உடலானது உயிரைத் தாங்குகின்ற கருவியாக மட்டுமே அமையவல்லது. அவ்வுடலின் கருவி கரணங்கள் உலகியலின் இன்ப, துன்பநாட்டத்தைக் கடந்து, திருவருளாகிய பேரின்பதுக்கு நிலைக்களமாகின்றன. அவ்வுடலின் வழியான சிந்தையும், சொல்லும், செயலும் சிவசிந்தனைக்கு உரியவையாகப் பண்படுகின்றன. அம்மெய்யுணர்வின் வழியிலேயே, அப்பூதியடிகள் திருநாவுக்கரசரை ஞானகுருவாக ஏறிட்டுக் கொண்டார். ‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ என்ற பெருநோக்கில், அவர்தம் திருப்பெயரால் அனைத்து அறங்களையும் செய்கின்ற பாங்கில் உயர்ந்தார். ‘அனைத்தையும் ஆக்குகின்ற அருமை முதல்வர் அவரே’ எனப் பணிந்து, அறப்பணிகளுக்கு, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரிட்டுச் சிறந்தார். அத்துடன், தம் மக்களுக்கும், மனையிடை நின்ற பொருள்களுக்கும், ‘திருநாவுக்கரசு’ என்றே திருப்பெயர் வழங்கி அறம்சிறக்கச் செய்தார்.

    அன்பில் சிறந்த அப்பூதியார்

    அப்பூதியார், சாதி, குலம் என்னும் தடுமாற்றம் நீங்கித் தெளிந்த சிந்தையராய், ஆளுடைய அரசுகளின்பால் நீங்காத அடிமைத்திறம் பூண்டவர். முக்கரணங்களாலும், ‘திருநாவுக்கரசரையே’ ஞானகுருவாக ஏறிட்டுக் கொண்டு தொண்டுநெறியில் நிலைநின்றவர். அவர்,  ‘கானிடைத் தவமும், கனலிடைப் புகுதலும், உடல்வாடி நோதலும் இன்றி, உள்ளத்து அன்பின் மொழியாக, ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரினை, பேசியும், எழுதியும் சைவப்பெருஞ் சாதனைக்கு வித்திட்டார். ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ என்னும் திருமொழியை, திருவருள் ஆணையாகப் பொலியச் செய்தவர். தாம், அறுவகைத் தொழிலையும் ஆற்றுவிக்கின்ற திருஞானச் செல்வராக விளங்கியபோதிலும், தன்னறிவை ஆற்றுவிக்கத் தனி குருவின் திருவருளை நாடியவர். அவ்வடிமைத்திறம், சைவசமயத்தின் அடிப்படையாகிய குருநெறியைத் திறம்பட வலியுறுத்துகிறது. அதிலும், நாயனாரைக் கண்ணால் காணாதபோதிலும்,  அவர்பால் அடிமைத்திறம் பூண்ட நிலை, அப்பூதியடிகளின் பெரும்பக்திக்குச் சான்று. அளப்பரும் இச்சாதனையால்,

                ‘உற்றானலன் தவம், தீயில் நின்றானலன் ஊண்புனலா
                அற்றானலன் நுகர்வும், திருநாவுக் கரசெனுமோர்
    சொற்றா னெழுதியுங் கூறியுமே யென்றுந் துன்பில்பதம்
                பெற்றான் ஒருநம்பி அப்பூதியென்னும் பெருந்தகையே’  என, நால்வர் நான்மணி மாலையின் (பாடல்: 38) திருப்பாடலால் போற்றப்பெற்றுள்ளார்.

    காணாதே பக்திகொண்ட பெரும்பக்தர்

    திருப்பழனம் முதலான திருப்பதிகளை வணங்கிப் பணிந்த நாயனார், திங்களூருக்கு வந்தார். அவ்விடத்தில், தமது திருப்பெயரால், அறங்கள் பல இயற்றப்படுவதைக் கண்டார். தாழ்வெனும் தகைமை மீதூர, அடியவராகிய தம்மையும் ஒரு பொருளாகக் கருதித், தம் பெயரால் அறங்களைப் புரிகின்ற திருவன்பரின் திருவடியினை வணங்கிப் பணிய ஆவல்கொண்டார். அங்கிருந்தாரிடத்தில் அவ்வன்பர்தம் ஊரும், பேரும், மனையும் முதலாயின குறித்து வினவி அறிந்தார். அவரைக் கண்ணாரக் கண்டு பணிகின்ற பெருவிருப்பில், அவர்தம் இருப்பிடம் சேர்ந்தார். வீட்டின் வாயிலில் இருந்து அழைக்க, அப்பூதியார் மனையின் உள்ளிருந்து வந்தார்.

    நடமாடும் கோயிலாகிய அரனடியாரின் வருகையினை எண்ணி மகிழ்வுற்ற அப்பூதியார்,   ‘அடியாருக்குத் தக்கவகையில் தொண்டாற்றவேண்டும்’ என விரைந்தார். மனத்தின் விரைவு, சொல்லில் வெளிப்பட்டது. ‘இறைவரீர்! அடியேனை நாடி வந்ததன் நோக்கம் யாது?’ எனக் கேட்டுப் பணிந்தார். இம்மொழி கேட்ட நாயனார், ‘தாங்கள் இயற்றுகின்ற அறங்கள் அனைத்துக்கும், ‘திருநாவுக்கரசு’ என்னும் பெயர் வழங்கிவருவதன் காரணம் யாது?; அதனினும் செம்மையுடைய திருப்பெயர்களும் உண்டே?’ என வினவினார். இதைக் கேட்ட அப்பூதியார் அளவிலாத துன்பமுற்றார். தம் முன்னால் எழுந்தருளியிருந்தவர், சிவவேடத்தால் சிறந்திருக்கின்ற நிலையிலும் அறியாமையுடன் அவ்வாறு வினவியதாகக் கொண்டார். ஆயினும், அத்திருப்பெயரின் அருஞ்சிறப்பையும் அறிந்திராத அடியாருக்கு அதனை அறிவுறுத்தியருள எண்ணினார்;  ‘அத்திருப்பெயரினும் சிறந்ததொரு திருப்பெயரும் உளதோ?’ என அவர்பால் வினவினார்.

    ’சிவனெனும் ஓசை அல்லது அறையோ உலகில் திருநின்ற செம்மை’ எனப் பாடிச் சிவனடிமை பூண்டவர், திருநாவுக்கரசு நாயனார். அவரையே சிவமாகக் கண்டு, குறையாத அடிமைத்திறம் பூண்ட அப்பூதியார், ‘திருநாவுக்கரசு’ என்னும் திருப்பெயரைக் காட்டிலும், திருவாகிய செம்மைநிறைந்த திருப்பெயர்களும் உளதோ?’ என்று அவரை நொந்துரைத்தார்.

                   “நம்மையுடை யவர்கழற்கீழ் நயந்ததிருத் தொண்டாலே
                   யிம்மையிலும் பிழைப்பதென வென்போல்வா ருந்தெளியச்
                   செம்மைபுரி திருநாவுக் கரசர்திருப் பெயரெழுத
                   வெம்மைமொழி யான்கேட்க விளம்பினீர்” (அப்பூதி. புரா.: 14)
    இத்திருப்பாடல், ‘தொண்டில் நிலைத்த அப்பூதியாரின் தூயதிருவுள்ளத்தை விளக்கிக்காட்டுகிறது.  ‘நம்மையுடைவர்’ என்பது, சிவனாரைக் குறிக்கிறது. ‘என் போல்வார்’ என்பது, சிற்றறிவுடைய தீவினை யுர்களை’.

    நமக்காக நாயனாரின் பெயரை நயந்தார்

    நம்மையுடையவராகிய, இறைவரைப் பணிந்தால், இப்பிறப்பினையே இறுதியாக்கி, இனிப் பிறவாமை பெறலாம்; அதற்குச் சிவனாரின் திருவடியைப் பற்றுகின்ற ஞானநெறிக்குத் தலைப்படுதல் வேண்டும். ஆயினும், எம்மைப்போன்று சிற்றறிவே உடையவருக்கு அப்பெருநெறியானது, பற்றுதற்கு அரியது; அதனால், எளியவாறு அப்பெருநெறியினை அணுகுகின்றவகையில், சிவனடியாரை  நயந்தேன்’; அவர்களுக்குரிய பல தொண்டினையும் செய்யத்தலைப்பட்டேன்; திருத்தொண்டுநெறியால் உலகுய்யச் சமணத்திலிருந்து, சைவத்துக்கு மீட்டருளப்பெற்று ‘வாக்குக்கோர் மன்னவர்’ என்று திருப்பெயர் பெற்றுச் சிறந்த நாயனாரே, ‘தொண்டுநெறிக்கோர் தூமணியாகத் திகழ்கின்றார்; அவர், ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் செம்மை மனத்தினர்; வீடும் வேண்டா விருப்புடன், அன்பர் பணியாகிய திருத்தொண்டில் நிலைநின்றவர்; யானும்,  அவ்வழியே நின்றுய்ய அவரையே ஞானகுருவாக்கிக் கொண்டேன். அன்றுமுதலாக, அவர்தம் திருப்பெயராலேயே அறங்கள் பலவும் பொலிவுற்றுச் சிறக்கின்றன’ என்று விடைகூறினார்.

    இத்திருப்பாட்டில், மன்னுயிர்களின்பால் அவர்கொண்ட கருணையால், அவற்றின் அறியாமையைத் தன்பால் ஏறிட்டுக்கொண்டும், தம்மை, அறியாமை மிக்கவராகவும் அப்பூதியார் குறித்தருளியுள்ளார். இம்மறுமொழிகளைத் தெய்வச்சேக்கிழார் பெருமான், இரண்டு திருப்பாடல்களில் குறித்தருளியுள்ளார். நாடகத்தால் அவனடியார்போல் நடித்து, தம்மை முன்னிருத்திச் சுயம் நிறுவுதலையே பக்திநெறியாகக் கொண்டுள்ள மூடர்களுக்கான வழிகாட்டுதலாக, அப்பூதியடிகளின் நிலை அமையக்காண்கிறோம்.

    அவர், அந்தணருக்கு உரியதாகிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல் மற்றும் ஏற்றல் என்னும் அறுவகத்தொழிலில் ஈதலையும் திறம்படச்செய்தார். திருவருளால்,  அறச்செயல்களுக்கான பொருள்செல்வம் அனைத்தையும் பெற்றுச் சிறந்தபோதிலும், அறமாற்றி அருள்செல்வத்தையும் சேர்க்க முனைந்தார். அந்நிலையில் தன்முனைப்பு அற்ற உயர்ஞானத்தைக் கடைப்பிடித்தார். நாயனாரைக் காணாதபோதிலும், அவரது திருப்பெயரால் அறங்கள் சிறக்க நல்லெண்ணம் கொண்டார். குருவையே சிவமாகக் கருதி, தம் மக்கள் முதலான சுற்றத்தாரையும் அந்நன்நெறியில் ஒழுகி உய்யச்செய்தார்.

    பணிவில் தலைநின்ற பெரியார்

    அப்பூதியடிகளார் தம்மிடத்தில் கூறிய மறுமொழிகளைக் கேட்ட அளவில், நாயனாருக்கு, அவர்மீதான  நன்மதிப்பு மேலும் பெருகியது. ’அடியவனே, சூலைதந்து பெருமானால் ஆட்கொள்ளப்பெற்ற சிறுமையேன்’ என்றுகூறி, அவரைப் பணிந்தார். அதுகாறும், தம் முன்னால் எழுந்தருளியிருந்த அடியார், தமது ஞானகுருவாகிய திருநாவுக்கரசு நாயனாரே’ என்பதை அறியாத அப்பூதியார், நாயனாரின் மொழி கேட்டு, சிரத்தின் மேற் கரம்குவித்து, கண்ணீர் அரும்ப, சொல் தடுமாறி, மயிர்ப்புளகம் எய்தி, தரையினில் வீழ்ந்து நாயனாரின் திருவடியினைப் பணிந்தார். அவ்வாறு தமது திருவடி பணிந்து எழுந்த அப்பூதியாரைத் தாமும் எதிர் வணங்கி, நாயனார் எடுத்தருளினார்.

                ‘மற்றவரை யெதிர்வணங்கி வாகீச ரெடுத்தருள
                 அற்றவர்க ளருநிதியம் பெற்றார்போ லருமறையோர்
                 முற்றவுளங் களிகூர முன்னின்று கூத்தாடி
                 உற்றவிருப் புடன்சூழ வோடினார் பாடினார்’   (அப்பூதி. புரா.: 18)

    மேற்கண்ட பாடலில், ‘தன்னடியவராகிய அப்பூதியாரைத் திருநாவுக்கரசுப் பெருமான், வணங்கினார்’ எனக் குறிக்கப்பட்டுள்ளமையும், அவரிடத்தில் தம்மை அறிமுகம் செய்துகொள்ளுங்கால், ‘சிறுமையேன்’ என்று கூறியே பணிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கவை.

    நாயனாரின் தொண்டுநெறிக்கு, ‘ஆருயிர்கள்பால் அவர்  அளவில்லாது பெருக்கிய கருணையும், அவ்வளப்பரும் கருணையின் வெளிப்பாடாகிய பணிவும்’ இருகண்கள் எனத் திகழ்ந்தன. அப்பெருநிலையால் உடலும் உள்ளமும் பொலிவுற்ற பாங்கினாலேயே நாயனார், திருஞானசம்பந்தப் பிள்ளையாரைச் சிவிகையில் தாங்கி, ‘அப்பர்’ எனத் திருப்பெயர் ஏற்றார். அப்பெரும்பண்பில் மேலும் பெருகிய பாங்கினாலேயே, அப்பூதியடிகளிடத்திலும் தம்மை, ‘சிறியேன்’ எனவும் பணிந்தும், அவரை வணங்கியும் அன்பில் பெருகினார்.

    பெறலரும் புதல்வனின் பெருஞ்சாதனை

    அப்பூதியாரின் திருமனைக்குள் எழுந்தருளிய நாயனாருக்கு விதிப்படி, ஆசனமும், அருச்சனையும் செய்வித்து திருவமுது படையலுக்கான ஏற்பாடுகளையும் அப்பூதியடிகளார் மேற்கொண்டார். நாயனார், திருவமுது செய்தருள வேண்டி, உண்கலம் அமைக்கத் தமது மூத்ததிருமகனாகிய, மூத்ததிருநாவுக்கரசை வாழைஇலை கொண்டுவரப் பணித்தார். அத்திருமகனும், அதற்காக மிகமகிழ்ந்து, இலையினை அரிய முற்பட்ட வேளையில், நச்சரவொன்று அவன் உடலில் பல்பதித்தது.

    ‘நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்’ எனப் பாடிச் சைவப்பெருநெறி வாழ உயிர்க் காத்து அருளப்பட்டவர், நாவரசர்.  அவரைப் பணிகின்ற அடியாரும் அவ்வாறு நமனை வென்று நல்வாழ்வு பெறவல்லவர்கள்’ என்பதனை உலகுக்கு உணர்த்துகின்ற பெருவாய்ப்பாக மேற்கண்ட செயல் நிகழ்ந்தேறியது. அத்துடன், உண்மையடியார்கள், தம் இன்னுயிரைத் தந்தும், தொண்டுநெறியை வாழச்செய்வர்’ என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மூத்ததிருநாவுக்கரசின் உடலில் விடமேறிய நிலையினை, ‘ஏழாம்விட வேகம்’ எனப் புராணம் குறிக்கிறது.

      ‘எரிவிட முறையே யேறித் தலைக்கொண்ட வேழாம் வேகந்
    தெரிவுற வெயிறுங் கண்ணு மேனியுங் கருகித் தீந்து
    விரிவுரை குழறி யாவி விடக்கொண்டு மயங்கி வீழ்வான்
    பரிகலக் குருத்தைத் தாயார் பால்வைத்துப் படிமேல் வீழ்ந்தான்’  (அப்பூதி. புரா.: 27)

    ‘உடலின் செரிமான மண்டலம் முதலாக, தோல் மண்டலம் ஈறாக அமைந்த அனைத்து உறுப்பு மண்டலங்களையும் கொடியவிடம் தாக்கியதால், இனிப் பிழைத்தேற வாய்ப்பில்லை’ என்னும் வகையில், பெருந்துன்பத்தை அப்பிள்ளை அனுபவித்திருக்கக்கூடும். ஆயினும், தொண்டின் மணியாகத் திகழ்கின்ற பெற்றோரின் பெருந்தொண்டுக்கு இழுக்குநேராத வண்ணம், தான் அரிந்துவந்த வாழையிலையினைத் தாயிடத்தில் ஒப்படைத்த பிறகே அவனது ஆவி உடலிலிருந்து பிரிந்ததாகக் குறிப்புள்ளது. உயிர் பிரிகின்ற தருவாயிலும்,  பெற்றோரின் தொண்டில் துணைநின்ற, ‘மூத்ததிருநாவுக்கரசின்’ பெயரால் தொண்டுநெறி இன்றளவும் செழித்தோங்குகிறது.

    திருத்தொண்டில் துளங்காத இணையர்

    பக்திநெறியினை, உலகியல்  பயனுக்காகக் கடைப்பிடிப்போர், நன்மையால் இன்பமும், தீமையால் துன்பமும் அடைவர். நன்மைக்கும், அதன் இன்பத்துக்கும் தாமே பொறுப்பேற்பதும், தீமைக்குத் திருவருளைப் பழிப்பதும் அவர்கள் இயல்பாக அமையும். ஆனால், சீவன்முத்தர்களாகிய அப்பூதியாரும், அவர்தம் மனைவியாரும் ஆருயிர்களைக் காக்கின்ற அரனே, ‘திருநாவுக்கரசு’ எனத் திருப்பெயர்த் தாங்கித் தம்பால் எழுந்தருளி வந்ததாக எண்ணிப் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

                ‘நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
                         உன்நாமம் என்னாவில் மறந்தறியேன்’         (4:1:6)

    எனத் திருநாவுக்கரசரின் திருப்பெயரையும், அவர்த் திருப்பெயரிலான தொண்டிலும் திறம்பாது நின்றனர். அதிலும், ‘வாராது வந்த மாமணி’ எனத் தமது மனைக்கு நாயனாரே எழுந்தருளியநிலையில், பெருஞ்செல்வம் பெற்ற பெருமகிழ்வில் திளைத்திருந்தனர்; அவருக்குத் திருவமுது படைக்கத் திருவருள் கூட்டுவித்தநிலையில், அதற்கு இடையூறாக மகனுக்குத் தீராத துன்பம் நேர்ந்ததனைக் கண்டனர். பெறலரும் புதல்வனாகிய மூத்ததிருநாவுக்கரசின் திருமேனியில் விளங்கிய குறிகளைக் கண்டு, அவன் விடத்தினால் உயிரற்று வீழ்ந்ததனை உறுதிசெய்து கொண்டனர்; அவ்வாறு நிகழ்ந்ததும், திருவருளின் சித்தம் என்றே துணிந்தனர். அத்தெளிவுடன்,  மறுகணமே  அடியவராகிய நாயனாருக்கு அமுதுபடைக்கின்ற அரியவாய்ப்பு தவறாதவகையில்,  மகனது உடலைப் பாயினில் சுற்றி மறைத்துவைத்தனர்.

    திருத்தொண்டில் நிலைநின்ற அவ்விணையரின் ஒப்பரிய உளப்பாங்கினைத் தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘துளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார்’ எனக் குறித்தருளியுள்ளார். ‘துளங்காமை’, என்றது, ‘சிவனடிமைத்திறம் பற்றிய அன்பின் நிலையினின்று நிலைபெயராமை’ (அப்பூதி. புரா.: 28, சிவக்கவிமணியார் உரை:பக்.: 253).

      ‘தொடருந் தொண்டரைத் துக்கந் தொடர்ந்துவந்
         தடரும் போதர னாயருள் செய்பவர்’ (5:51:8) என்ற நிலையில், ‘திருவருளின் துணைநின்று தமது துன்பத்தை நீக்கியிருக்கவேண்டும்’; அதற்கு வாய்ப்பின்றி விளைந்த பெருந்துன்பத்தை நீக்கியருள, ‘நாயனாரைச் சரணடைவோம்’ என்றும் தன்னலத்துடன் அப்பூதிஇணையர் சிந்திக்கவில்லை. மாறாக, இருவரும், குருவிடம் கொண்ட அடிமைத்திறத்திலிருந்து பிறழாதவர்களாயினர்; உள்ளத்தால் தடுமாற்றம் ஒழித்தவர்களாயினர். உயர்த்தொண்டாக, நாயனாருக்கு அமுதுபடைக்க ஆயத்தமாயினர்.

    திருநீற்றுத் திருமரபால் அருஞ்சாதனை

    ‘விதியை மதியால் வெல்லுதல்’ என்பது, திருநாவுக்கரசு நாயனார் போன்ற அருளாளர்களால் மட்டுமே அமைவது. அவர்களது பதிஞானம், முற்றுணர்வாக விளங்கி அனைத்தையும் அறிகின்றவகையில் மேம்பட்டு நிற்பது. அவ்வாறே நாயனாரும், அம்மனையிடத்தே விரும்பத்தகாத ஒன்று, நிகழ்ந்ததனை உளக்குறிப்பாக அறிய நேர்ந்தது. இருப்பினும், அதனை வெளியிட விரும்பாத மனத்தினராய், அப்பூதி இணையரின் திருத்தொண்டினை ஏற்றருள மனம் கனிந்தார். அதற்கேற்ப, இணையர் இருவரும் உடனிருந்து, நாயனாருக்கு அனைத்துச் சிறப்புகளுடனும், திருவமுது படைக்க முனைந்தனர். அவ்வேளையில், ‘திருவாய் பொலியச் சிவாயநமவென்று திருநீறு’ அளித்தருள எண்ணி, மூத்ததிருநாவுக்கரசையும் அவ்விடத்திற்கு அழைத்துவரும்படி, நாயனார் கூறினார். அடியார்கள் திருவமுது செய்தருளுவதற்கு முன்னர், தம் உடனிருப்போர்களுக்குத் திருவருள் பொலிவாகத் திருநீற்றினை வழங்கிச் சிறப்பது மரபு. அத்திருமரபே, மூத்ததிருநாவுக்கரசை மீண்டும் உயிர்ப்பெறச் செய்கின்ற சைவ அருஞ்சாதனைக்குக் கருவியானது.

    அதுகேட்ட பெற்றோர், நாயனாரின் திருவருள் ஆணையினை நிறைவேற்றத் திருவருள் துணைபுரியாத தமது நிலையினை எண்ணிக் கலங்கினர். மகன், இறந்துபட்டதை அறிந்தபோதும்கூட பெற்றோர்கள் தடுமாற்றம் அடையவில்லை; ஆனால்,  நாயனாரிடத்தில், ‘நிகழ்ந்ததனை மறைத்துநிற்கின்றோம்’ என்ற குற்றவுணர்வால், அவர்களிடத்தில் தடுமாற்றம் நிகழ்ந்தது. மகன், விடத்தால் இறந்துபட்டதனை விளக்கிக் கூறாது, ’இப்போது இங்கு அவன் உதவான்’ (அப்பூதி. புரா.: 32) என்று தடுமாறி உரைத்தனர்.  அதனைக் குறிப்பினால் உணர்ந்த நாயனார், ‘அனைவரையும் உய்விக்கின்ற திருநீற்றினை அவன் பெறுவதற்கு இயலாதவண்ணம் நிகழ்ந்ததனை உள்ளவாறு கூறுக’ எனத் தாயன்பின் பரிதவிப்புடன் மொழிந்தார். பிள்ளைக்கு நேர்ந்ததனைக் கூறக் கேட்டு, ‘உம்மையும், உமது மக்களையும் போன்று தொண்டில் திறம்பாதவர் எவரும் இல்லை’ என்று நாயனார் வியந்து மொழிந்தார்.

    அரனருளால் உண்மைத்தொண்டர்கள், ‘விதியையும் மாற்றம் செய்வர்’ என்பதனை விளக்கிக்காட்ட, திங்களூர்த் திருத்தலத்தின் திருவாயிலின் திருமுன்பிலிருந்து, ‘ஒன்றுகொலாம்’ எனத் தொடங்கிப் பாடினார். அத்திருப்பதிகத்தின் பத்தாம் திருப்பாடலில், ‘பத்து கொலாம் அவர் பாம்பின்பல்’ (4:18:10) எனக் குறித்துப் பாடிய அளவில், மீண்டும் மகன் உயிர்ப்பெற்று எழுந்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மீண்டவனைப்போல, இயல்பாக எழுந்துவந்த பிள்ளைக்கு நாயனாரும் திருநீறளித்து மகிழ்ந்தார். ‘மாண்ட மகன் மீண்டருளிய நிலையானது, ‘அப்பூதியாரின் தொண்டின் உறுதியால் வாய்த்தது’ என்பதனைப் புராணம், ‘தொண்டின் நெறியினைப் போற்றி வாழ்ந்தார்’ எனக் குறிக்கிறது.

     ‘பிரிவுறு மாவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்
            நெறியினைப் போற்றி வாழ்ந்தார்; நின்றவப் பயந்தார் “தாங்கள்
            அறிவரும் பெருமை யன்ப ரமுதுசெய் தருளு தற்குச்
            சிறிதிடை யூறு செய்தா னிவ” னென்று சிந்தை நொந்தார்’ (அப்பூதி. புரா.: 37)

    தொண்டில் வலிமையும் எளிமையும்

    உயிர்ப்பெற்று எழுந்த மகனைக் கண்ட பெற்றோர், அவ்வேளையிலும், ‘பெறலரும் தம் மகனை மீளப்பெற்றோம்’ என மகிழ்வில்லையாம்; மாறாக, ‘நாயனார் திருவமுது செய்தருளக் காலம் தாழ்ந்ததற்கு, இம்மகனே காரணமாயினன்’ என்று உள்ளத்துள் வருந்தினராம்; அத்துடன், அனைத்தையும் அறியத்தக்கவராகிய நாயனாரிடத்தில் மகனுக்கு நிகழ்ந்ததனை மறைத்துநின்ற அவச்செயலுக்கான அச்சத்தையும் சுமந்து நின்றனராம்.  (மேலது பாடல்). இவ்வாறு, அப்பூதியார் மற்றும் அவர்தம் மனைவியாரின் மனநிலை தொண்டில் வலிமைபெற்றிருந்தது. அத்துடன், அங்கிருந்த நாயனாரிடத்திலும் செயற்கரும் சாதனையைச் செய்தளித்த பெருமிதம் மிளிரவில்லை; சிவனடியைப் பற்றுகின்ற பெருநிறைவாகிய பணிவே அவரிடத்தில் நிலைத்திருந்தது. அத்துடன், அப்பூதியார் மற்றும் அவர்தம் மனைவியாரின் வருத்தமும், அச்சமும் ஒருங்கே நீங்கும்படி, அப்பூதியாரையும், அவர்தம் மக்களையும் உடனிருத்தி, நாயனார் திருவமுதும் செய்தருளினார். (அப்பூதி. புரா.: 37) நாயனார், அடியாரையும் உடனிருக்கச் செய்து, அமுதுசெய்வித்த அன்பின்திறம், எல்லைகள் கடந்த தொண்டின் எளிமையையும், உயர்வையும் குறிப்பதாகும்.

     முடிவுரை

    ‘உடல்சுமந்து, பிறவியில் புகுகின்ற அவலம் நீங்கவேண்டில், உடலாலும், உள்ளத்தாலும் பணிவைப் புலப்படுத்துகின்ற தொண்டுநெறியே உற்ற துணையாகும்’ என்பதற்குத் திலகவதியார் திருச்சான்றாக விளங்குகின்றார். நாயனார், சூலையால் துன்புற நேர்ந்தது, வினைக்கழிவாய் நிகழ்ந்ததாகும். சீவன்முத்தர்களை, வினைப்பயன் உடலளவில் மட்டுமே துன்புறுத்தும்; அவர்களது உயிருக்கு உற்ற துணையாகப் பெருமான் விளங்கிப் பண்படுத்த வல்லவன்’ என்பதைத் திருநாவுக்கரசு நாயனார் புராணம் தெளிவுற உணர்த்துகிறது.

     நாயனாரின், திருக்கழிப்பாலைத் திருப்பதிகம், ஆருயிர்கள் ஈடேற வேண்டிப் பெருமான்,  ‘ஞானமும் நாவில் வைத்தார்’ என மொழிகிறது. ஞானத்துக்குக் கருவியாகப் பெருமானால், அருளிச்செய்யப்பட்டவையே, வேதமும், ஆகமமும், இதிகாசமும், புராணமும். அவற்றின் எளியநிலை விரிபொருளாகத் திருநாவுக்கரசு நாயனாரின் திருப்பதிகங்கள் விளங்குகின்றன.  அவை சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுங்கால், செல்நெறியாகப் பெருமானின் திருவடியைக் கூட்டுவிக்கவல்லன. அதற்கேற்ற வகையில், உயர் ஞானமற்ற அறிவிலிகளும் ஈடேற அவர்தம் திருப்பெயரே திருமந்திரமாக வல்லது’ என்பதற்கு அப்பூதியடிகள் நாயனார் புராணம் சான்றாகின்றது.

    அடிகள் புரிந்த திருத்தொண்டுநெறியை, அவர்தம் மனைவியாரின் அருளுள்ளமும் தாங்கி நிற்கிறது. இது, பண்பட்ட இல்லற வாழ்வியலுக்குச் சான்றாகிறது. மேலும், ‘நன்மக்கள்பேறு’  என வள்ளுவப்பெருந்தகை குறிப்பிட்டதும், ‘பிறருக்குத் தொண்டுசெய்கின்ற நன்மக்கள்பேற்றையே’ எனலாம். அதற்கு, மூத்ததிருநாவுக்கரசின் தொண்டுள்ளம் சிறந்த சான்றாகிறது. ’தொண்டுநெறியாகிய பக்திநெறியே’ இப்பெருமக்களது வாழ்வியலாகிறது.

    ‘தொண்டுநெறியே, திருவாகிய செம்மைவாழ்க்கை’ என வாழ்ந்த திலகவதியாருக்கும், திருநாவுக்கரசு நாயனாருக்கும், அப்பூதியடிகளுக்கும், அவர்தம் மனைவியாருக்கும், திருமகனாருக்கும் அடிமைபூண்டு, ‘தொண்டர்க்கும் தொண்டராம் புண்ணியமே’ எனப் பணிகின்ற பக்திவாழ்வியலை, திருவதிகைத் திருவீரட்டானம் மற்றும் திங்களூர் முதலான திருமுறைத் திருத்தலங்கள் விளக்குகின்றன. உலகியல் பயன்களுக்காக அவற்றை வலம்வருகின்ற அறியாமை நீங்கி, அவ்வத் திருத்தலங்களையும், அவற்றின் உயிர்நாடியாக உள்ள தொண்டுநெறியின் வழியில் பணிவது, பகுத்தறிவுடன் கூடிய பக்தி மறுமலர்ச்சிக்குத் துணையாகும்.

    ஆய்வுத்துணை நூல்கள்:

    1. பெரியபுராணம்- தொகுதி:3 , பாகம்: 1,2 – சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணியனார் (உரையாசிரியர்), பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.பதிப்பு ஆண்டு: திசம்பர், 2017.
    2. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை), பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்), கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

    இணையம்:
    thevaaram.org
    maduraitamilproject.org.

     

     

    Share
  • பெருகும் அன்பின் பேரன்பர் இருவர்  

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை

    திருஞானசம்பந்தப்பெருமான், மொழியே மலராக, பதிகமே பாமாலையாக, ஞானமே மணமாகச் சொல்மாலை சூட்டிச் சிறந்தவர்; அரனடியை அடைதற்குரிய நன்னெறிகளைத் திருக்கடைக்காப்பாக அருளிச்செய்தவர்; அவர், ‘அன்பு நிறைந்த சிந்தையராவர்’ என அடியவர்களை ஏற்றிப் போற்றியவர்; அடியார்களின் மண்ணுலக மயக்கம் நீக்கிப் பிறவிப்பிணி தீர்க்கின்ற ஞானத்துணைவராகவும் வந்தருளியவர். அவரை நேரில் கண்டறிந்திராத நிலையிலும், அவர் மீதான அடிமைத்திறத்தில் சிறந்திருந்தவர், திருமயிலைச் சிவநேசர். அவரது அன்பின்மேன்மை, பிள்ளையாரின் செயற்கரிய சாதனைக்குக் கருவியாகின்ற தனித்தகுதியாக விளக்கம்பெற்றிருந்தது. ஆளுடைய பிள்ளையார், அதனை உலகறியச் செய்வதற்குப் பூம்பாவையை உயிருடன்  மீட்டருளிய அற்புதத்தைப் பெரியபுராணம் விளக்கியுரைக்கிறது. அப்புராணத்தைப்  பயில்கையில், பிள்ளையாரின் அருள்திறமும், சிவநேசரின் அடிமைத்திறமும் சைவப்பெருநெறியாக விளங்கவல்ல திறத்தினை உணரலாம். அவ்விரு பெருமக்களும் கொண்ட கொள்கையும், நின்ற நிலையும், புரிந்த சாதனையும், பெற்ற பேறும், ‘எம்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற சைவப்பெருநெறிக்கு நிலைக்களமாகின்ற திறத்தினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    பேரன்பர் வழியே பெருஞ்சாதனை

    சிவநேசர், தாம் சிவமெனவே போற்றுகின்ற திருஞானசம்பந்தப் பிள்ளையாரை கண்ணால் கண்டதில்லையாயினும், அவரது திருப்புகழைக் கேட்டு நாளும் திருஞானசம்பந்தம் பெற்றுய்ந்த சீர்மிகு அடியவராக விளங்கியவர்.

    அடியார்த் திருக்கூட்டத்தின் வாயிலாக அவர்களது திருப்புகழைக் கேட்டு, ஞானப்பாலுண்ட பிள்ளையின்பால் சிவநேசர் மீளா அடிமைத்திறம் பூண்டார். திருமுகத்தைக் காணாமலேயே அடிமைத்திறம் பூண்ட அவரது உருகும் அன்பின் மனநிலையினை, ‘தாயாய் முலையைத் தருவானே’ (ஆனந்தமாலை: 5) என்னும் திருவாசகத்தொடரின் வழியே விளக்கலாம்.

    பிறந்த பிள்ளையானது தாயின் அன்பினைப் பெறுவதற்கு, அதன் உள்ளிருந்து எழுகின்ற பசியுணர்வே தகுதியாகிறது. முகம் அறியாத அக்குழந்தையானது திருமுலைகளையே பற்றுக்கோடாகக் கொண்டு  பாலினைப்பெற்று,  உயிர்வாழ்கிறது. அத்தகைய குழந்தையாகவே சிவநேசர் விளங்கினார்.   ‘தனது ஞானாசிரியரது திருமுகத்தைக் கண்ணுற்றதில்லை’ என்ற நிலையிலும், அவர் காட்டிய  தொண்டுநெறியினைத் தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு, ‘அன்புநெறியே, சைவநெறி’ என்பதனை உலகுக்கு உணர்த்திக்காட்டினார். அம்மேன்மைநிலையே, திருமயிலையில் திருஞானசம்பந்தர்,  மாண்டவரையும் உயிருடன் எழுப்புகின்ற பெருஞ்சாதனைக்குச் சிவநேசர் கருவியாகின்ற பேற்றினைத் தந்தருளியது.

    பெருகும் அன்பின் சிவநேசர்

    திருமயிலை நகரின்கண் கடல் வணிகத்தில் சிறந்திருந்த சிவநேசர், இருநிதிச் செல்வமுடன், அருள்நிதிச் செல்வமும் தம்பால் குறைவற நிறைகின்ற பேறுபெற்றிருந்தார். அத்துடன், ‘தம்மை உள்ளவாறு அறிந்திருந்தார்; பொய்ம்மை நீக்கி, மெய்ப்பொருள் கொள்கின்ற உள்ளத்தராயிருந்தார்; சங்கரற்கு அடியவராகவும் செம்மையே புரிகின்ற மனத்தினராகவும், பிள்ளையாரிடத்தில் நீங்காத அடிமைத்திறமும் பூண்டிருந்தார்’.

    தம்மை உள்ளவாறு அறிந்து தெளிதலாவது, ‘பகுத்தறிவின் பயன்கொண்டு, தமக்குரிய உண்மைச்சார்பினை அறிந்து தெளிதல். பசுக்களாகிய ஆன்மவர்க்கம், பதியாகிய பெருமானைச் சார்வதும், அச்சார்பினால் வீடுபேறடைவதும், அப்பெருநோக்கத்திற்காக வகுக்கப்பட்டவையே புவனபோகங்களும்’ என்று தெளிதலாகும். பொய்ம்மை நீக்கி, மெய்ப்பொருள் கொள்ளுதலாவது, ‘உலக மயக்காகிய பொய்ப்பொருள்களின் சார்பு நீங்கி, அடியார்ப்பணி முதலானவற்றின் வழியே, அரனடிக்கு அன்புபெருக்குதல்’. சங்கரற்கு அடிமை செய்தலாவது, ‘நிலைத்த பேரின்பப்பொருளாகிய பெருமானைப் பெற்றுய்வதற்குக் கருவியாகிய நிலைத்த பேரன்பிலிருந்து பிறழாமல் நிற்றல்’. இத்தகைய பெருங்குணச் செல்வராகிய சிவநேசரைத் தெய்வச் சேக்கிழார்பெருமான்,

      ‘தம்மை யுள்ளவா றறிந்தபின் சங்கரற் கடிமை
       மெய்மை யேசெயும் விருப்புடன் மிக்கதோ ரன்பாற்
       பொய்ம்மை நீக்கி மெய்ப்பொருளிது வெனக்கொளு முள்ளச்
       செம்மை யேபுரி மனத்தினர் சிவநேச ரென்பார்’ (திருஞான. புராணம்: பா.எண்: 1035) என்றுக் குறித்தருளியுள்ளார்.

    உண்மை அன்பால் உருகிப் பெருகுவார்

    சிவத்தின்பால் நிலைத்த பேரன்பின் அடையாளமாக, அடியாரிடத்தில் உருகுதலும், நெறியல்லாத நெறிகளில் மக்களை அலைக்கழிக்கின்ற பரசமயத்தாரின் அறியாமை கண்டு வெறுப்பு உடைமையும் சிவநேசரின் இயல்பாயின.

               ‘கற்றை வார்சடை முடியினா ரடியவர் கலப்பில்
                உற்ற செய்கையி லொழிவின்றி யுருகிய மனமும்
               பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றுஞ்
               செற்ற மேவிய சீலமு முடையராய்த் திகழ்வார்’ (மேலது புராணம்: பா.எண்: 1036)

    சிவநேசரது இல்லத்தில் பொருள்செல்வமும், இடையறாது பிள்ளையார்பால் உருகுகின்ற அடிமைத்திறமும் நிறைந்து பெருகின. அம்மையிடத்தில் ஞானப்பாலுண்டும், தென்பாண்டி நாட்டில், சமண் சாய்த்தும், சைவம் தழைக்கப் பாடுகின்ற பிள்ளையாரின் பெருஞ்சிறப்பினை நாளும் அடியார்த் திருக்கூட்டத்தின் வழியே கேட்டு, அவர்பால் காதலாகிக் கசிபவரானார். அவர்தம் திருமுகத் தரிசனப்பேறு பெற்று, திருவடியிலேயே தொண்டு பூண்டிருக்க வேண்டும்’ என்ற பக்குவநிலைக்கு உயர்ந்தார்.

           ‘செல்வ மல்கிய சிரபுரத் தலைவர்சே வடிக்கீழ்
            எல்லை யில்லதோர் காதலி னிடையறா உணர்வால்
            அல்லு நண்பக லும்புரிந் தவரருட் டிறமே
            சொல்ல வுஞ்செயல் கேட்கவுந் தொழிலின ரானார்’.   (மேலது புராணம்: பா.எண்: 1038) 

    பூமகள் எனவொரு பெண்கொடி உதித்தார்

    ‘பெருகும் அன்பில் மனம் விளங்கிச் சிறந்திருந்த சிவநேசர், மனை விளங்கத் தமக்கு மகவு வாய்க்கவேண்டும்’ என்று பெருமானைப் பணிந்தார். அதற்கு, நடமாடும் கோயிலென விளங்குகின்ற அடியவர்பால் ஆராத அன்பு பெருக்கிப் பெருந்தவம் புரிந்தார். என்றும் குறையாத அன்பில் அரனடியரைப் பேணிக்காத்தார். அன்பும், தொண்டும் அவர்தம் தவமாகிச் சிறந்தன. அத்தவப்பயனே, அவருக்குப் பூமகளை ஒத்த பெண்மகவு வாய்க்கும்படி அருளியது. அதற்கேற்ப, அப்பெண்பிள்ளைக்கு, ‘பூம்பாவை’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். அப்பெண்பிள்ளையும் சிவனன்பில் நாளும் தழைத்து வளர்ந்தது.

           ‘யாவ ரும்பெரு மகிழ்ச்சியா லின்புறப் பயந்த
            பாவை நல்லுறுப் பணிகிளர் பண்பெலா நோக்கி
    பூவி னாளென வருதலிற் பூம்பாவை யென்றே
          மேவு நாமமும் விளம்பினர் புவியின்மேல் விளங்க’ (மேலது புராணம்: பா.எண்: 1044) என்றமைந்த பாடல் அடிகளில், சிவநேசர், பெண்பிள்ளைக்கு, ‘பூம்பாவை’ எனப் பெயரிட்டார் என்ற குறிப்பினை தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘புவிமேல் விளங்க’ என்னும் தொடரால் நிறைவுசெய்துள்ளார்.

    ‘இனி வரும்நாளில், பிள்ளையார், சிவநேசரின் குலம் முழுமைக்கும் ஞானத்துணைவராக எழுந்தருளவுள்ளார்; அத்துடன், பூம்பாவையின் பொருட்டுச் செயற்கரும் சாதனையும் பிள்ளையாரல் நிகழவுள்ளது. அவ்வருள் சிறப்புகளினால், ‘பூம்பாவை’ என்னும் திருப்பெயரும் புவி உள்ள அளவும் நின்று நிலைக்கவுள்ளது’ என்பது அவர் உணர்த்தக் கருதிய திருக்குறிப்பாகும்.

    பெருகும் அன்பே பெருங்காப்பு

    பொருள்செல்வம் பெருகுகின்றவேளையில், உலக இன்பங்களைத் துய்த்துத் திளைப்பதே உயிரியற்கை. ஆனால், சிவநேசரிடத்தில் பெருகிய செல்வம், பிள்ளையார்பால் பேரன்பாகவும், அரனடியார்பால் அடிமைத்தொண்டாகவும் மிளிர்ந்தன. நாளும் சிவஞானச்செல்வரை முன்னிட்டு, சிவநேசரின் சிந்தையில் நிறைந்த அடிமைத்திறம், அவர் வெல்லுதற்கு இயலாத உலகமயக்கங்களையும் வென்றேறத் துணையானது; உண்பனவும், உடுப்பனவும், உற்றசெல்வங்களும், பெற்ற மகளாகிய பூம்பாவையும், தாமும் இனி, ‘பிள்ளையாருக்கே அடிமை’ எனப் பணிந்துய்கின்ற பெரும்பற்றினை அவரிடத்தில் நிலைப்பெறச்செய்தது. வீடும் வேண்டாத விருப்பினராகிய சிவநேசர், பிள்ளையாரிடத்தில் கொண்ட அடிமைத்திறமானது,

           ‘சுற்ற நீடிய கிளையெலாஞ் சூழ்ந்துடன் கேட்பக்
           “கற்ற மாந்தர்வாழ் காழிநா டுடையவர்க் கடியேன்
           பெற்றெ டுத்தபூம் பாவையும் பிறங்கிய நிதியும்
           முற்று மென்னையுங் கொடுத்தனன் யா” னென்று மொழிந்தார். (மேலது புராணம்: பா.எண்: 1053)

    சிந்தையால் மகிழ்ந்த சிவநேசர்

    மேற்குறித்த பாடலில், சிவநேசரின் அடிமைத்திறத்தினைப் பாடியருளிய தெய்வச் சேக்கிழார்பெருமான், அடுத்த பாடலிலும் அவர்தம் அன்பின்திறத்தை அறிவுறுத்தியுள்ளார். ‘தம்மையும், தமது பெருஞ்செல்வமாகிய பூம்பாவையையும், பிள்ளையாரே ஆட்கொள்ள வல்லவர் என்ற அடிமைத்திறத்தில் சிவநேசர் சிந்தை மகிழ்ந்திருந்தார்’ எனச் சுட்டியுள்ளார்.

           ‘எல்லை யில்பெருங் களிப்பினா லிப்பரி சியம்பி
            முல்லை வென்ணகை முகிழ்முலை யாருடன் முடியா
            மல்கு செல்வத்தின் வளமையு மறையவர் புகலிச்
            செல்வ ரேயுடை யாரேனுஞ் சிந்தையான் மகிழ்ந்தார்’ (மேலது புராணம்: பா.எண்: 1054)

    குமரகுருபரர், ‘செல்வம் என்பது, சிந்தையின் நிறைவே’ (சிதம்.மும்.கோவை:26) என்றார்.  அதற்குத் தமது வாழ்க்கையையே இலக்கணமாக்கித் தந்தவர், சிவநேசர். அவர், பிள்ளையாரிடத்தில் பெருகும் அன்பின் சீர்மையராகி,   ‘இடரினும் தளரினும், எனதுறு நோய் தொடரினும், உமதுகழலே மறவாது பணிந்தெழுவேன்’ என்ற நிலைநின்றார்; அன்பகலாத அடிமைத்திறமென்னும் அருள்செல்வம் கொண்டு, தனது உயிரைப் பிணித்த பிறப்பு என்னும் வறுமையினை  நீக்கிச் சிறந்தார்.  

    சிவநேசர் பொருட்டு பெருஞ்சாதனை

    நம்மைப்போன்று குறிக்கோளற்று உலகியலில் திளைப்போருக்கே இறப்பென்பது துன்பம் தருவதாகின்றது. மாறாக, சிவநேசரைப் போன்று, உலகியலை வென்ற அடியவர்களால் மரணத்தையும் வெல்லமுடிகிறது. ஆயினும், அவரைப் போன்ற கொள்கைச் சான்றோரின் இடர்களைக் களைவதையே பெருமான் தனது திருவருள் கொள்கையாகக் கொண்டவன்.
    ‘கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே’ (1:52:1) என்பது, ஞானப்பிள்ளையாரின் திருவாக்கு. அது பொய்க்காதவண்ணம், மாண்டு, எலும்பாகி மிஞ்சிய பூம்பாவையையும் பிழைக்கச் செய்கின்ற பேரருளாடலை பெருமான், பிள்ளையாரைக் கொண்டு திருமயிலையில் நிகழச்செய்தான்.

          ‘எங்கொங்கை நின்னப்ப ரல்லார்தோள் சேரற்க
            எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க (திருவெம்பாவை: 19) என்று பூம்பாவையைப் பிள்ளையாருக்கு உரியவராகக் கொடுத்துய்வதே தமது பெருங்கடமையாக வாழ்ந்தார்.

    அப்பெண்பிள்ளையும் அந்நாளில், ஏழாண்டு பருவத்தினளாக இருந்தாள். ஒருநாள், தனது வளமனையிலிருந்த மாதவிப் பந்தலிலிருந்து மலர்க் கொய்ய முயன்றாள். அவ்வேளையில், முள் எயிற்று அரவொன்று அவளது தளிர்க்கரத்தில் பல்பதித்தது. விடவேகம் அவள் உடலில் பாய்ந்ததனால், அவளும் சோர்ந்து வீழ்ந்தாள். பெற்றோரும், உற்றோரும் சூழ்ந்திருந்து விடம் நீக்கப் பல்வகைச் செயலாற்றினர்.  ‘அருமருந்தால் ஆவி மீட்டு அவளைக் காப்போருக்கு அருஞ்செல்வம் பரிசாகும்’ எனப் பறையும் அறிவித்தனர்; மூன்று நாள்கள், அவளுடலினை மாடத்தில் வைத்துக்காத்தனர்.  ஆயினும், பிள்ளையாரின் திருவாக்கினால் அன்றி, அவள் மீண்டெழுதல் இல்லை என்ற நிலையினால், சிவநேசரின் பிற முயற்சிகள் பயனற்றுப் போயின.

    பெற்றபிள்ளையினை இழந்தது சிவநேசருக்குப் பெருஞ்சோகமே. அத்துன்பத்திலும் அவர், ‘நாள்தவறாது, பிள்ளையாரின் அரும்புகழைப் பேசியும், கேட்டும், சிந்தித்தும் அன்பு பெருக்கத் தவறவில்லை; அவளுக்கு ஏற்பட்ட பெருந்துன்பத்திலிருந்து மீண்டுவரத் திருவருள் துணைநிற்காது போயிற்றே’ என்றும் கலங்கவில்லை.

    இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
    நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே’            (குழைத்தபத்து: 7) என்ற ஞானத்தெளிவுடன் விளங்கினார். பூம்பாவைக்கு,  ஞானப்பிள்ளையாரை நாயகனாக்குகின்ற  திருநோக்கத்திற்கு முட்டுப்பாடு நிகழ்ந்ததாகவே கருதிச் சிவநேசர் கவலையுற்றார்.

      ‘துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
       இன்பம் பயக்கும் வினை’   (திருக்குறள்: வினைத்திட்பம்: 9)

    என்பதற்கு இலக்கணமாக, ‘பூம்பாவையின் பொருட்டு இனித் தாம் கலங்குவதில்லை’ எனத் தெளிந்தார்; சொல்லிய வண்ணமே செய்கின்ற அடிமைத்திறத்தில் நிலைமாறாதிருந்தார்.

    ‘பிள்ளையாரே, பூம்பாவையின் எலும்பினையும் ஆள்வதற்கு உரிமை உடையவர்’  எனத் தெளிந்த சிந்தையில், எலும்பினைக் குடத்திலிட்டு, அதனைப் பூம்பாவை என்றே பேணத் துணிந்தார். ‘பூம்பாவை மாண்டபோதில், பிள்ளையாரின் திருவருள் நின்று காக்கவில்லையே’ என்றோ, ‘அவளது எலும்பையும், சாம்பலையும் பலநாளும் பாதுகாத்தற்கு வாய்ப்பில்லை; ஆதலால், தாமே பிள்ளையாரைத் தேடிச் சென்று அதனை அவர்பால் பணிப்பேன் என்றோ, சிவநேசர் தன்முனைப்புக் கொள்ளவில்லை. மாறாக, ‘பூம்பாவையின் இறப்பும் திருவருளாணை வழியே நிகழ்ந்தது’ என்பதையும், ‘அவளது சாம்பலினைப் பிள்ளையாரிடத்தில் ஒப்படைத்தற்குரிய காலமும், திருவருள் வழியே வாய்க்கும்’ என்பதும் அவர்தம் ஞானத்தெளிவாக விளங்கின. அதனால் சிவநேசரை, தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘சீரின் மன்னிய சிவநேசர்’ எனப் போற்றியுரைத்துள்ளார்.

           ‘சீரின் மன்னிய சிவநேசர் கண்டுள மயங்கிக்
            காரின் மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர்
            சாரு மவ்வள வும்முட றழலிடை யடக்கிச்
            சேர வென்பொடு சாம்பல்சே மிப்பது தெளிவார்’ (மேலது புராணம்: பா.எண்: 1065)

    சிவநேசர் தந்தையாக இருந்து கொண்டிருந்த பிள்ளைப்பாசம் என்கின்ற மயக்கத்தை, ‘கண்டு உளம் மயங்கினார்’ என்பதனை, மேற்கண்ட பாடலின் முதல் அடி குறிக்கிறது; அவரே, பிள்ளையார்பால் பெருகும் அன்பின் சீரடியவராகி, சிந்தைதெளிந்த ஞானத்தெளிவைப் பாடலின் இறுதியடியும் குறிக்கிறது.

    இன்னருள் விளைகின்ற காலம்

    சிவநேசர், தனது உடற்பிள்ளையாகிய பூம்பாவையின் முகம்காண இயலாத சோகத்தை, உயிர்ப் பிள்ளையாகிய திருஞானசம்பந்தரின் திருமுகத் திருக்காட்சியால் போக்கியருளத் திருவருள் கூட்டியது. பிள்ளையார், திருப்பாண்டி நாட்டில் சமணத்தின் வேரறுத்து, திருநீற்றுச் செல்வத்தால் சைவத்தை நிலைக்கச் செய்து, தொண்டைநாட்டின் திருப்பதிகளில் திருவொற்றியூரை வணங்கிய பின்னர், திருமயிலைக்கு எழுந்தருளத் திருவருள் கூட்டுவித்தது.  அடியவர்கள், அவர்தம் வருகையினைக் குறித்துக் கூறக்கேட்ட சிவநேசர், அளவிலா மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். அவ்வருஞ் செய்தியினை வாயாரப் புகன்ற அடியவர்களுக்குப் பொன்னும், மணியும் பரிசளித்தார்.  திருவொற்றியூர் முதலாக, திருமயிலை வரையில் அலங்கரித்தார். இருநகரங்களுக்கிடையிலும், பத்து நாழிகையளவு பயணத் தொலைவு உண்டு. ஒருநாழிகை, இருபத்துநான்கு நிமிடங்கள் கொண்டது.  அவ்வகையில், பிள்ளையார் பயணிக்கவுள்ள நான்கு மணிநேரப் பயணத்தொலைவுக்கும், பந்தலும், விதானமும் அமைத்து அவரை வரவேற்பதற்குச் சிவநேசர் ஆணையிட்டார். நீண்ட இத்தொலைவு, பிள்ளையாரை எண்ணுங்கால், சிவநேசரின் உள்ளத்தில் நீள்கின்ற அடிமைத்திறத்தின் அளவுக்குச் சான்று என்பார், உரையாசிரியர் சிவக்கவிமணி.

    திருவொற்றியூரளவும்–திருமயிலாபுரியினின்றும் திருவொற்றியூர் வரையும்; இது பத்து நாழிகையளவு கொண்ட தூரம்; இவரது அன்பு நீண்டுசெல்லும் தன்மை குறித்தது’ (பக்.: 667) என்னும் உரைவிளக்கம், அடியார்செய்கைகள், ஆடம்பரத்தின் வெளிப்பாடாக அல்லாமல், அன்பின் வெளிப்பாடாகின்ற வகையில் மேம்பட்ட பக்திகொள்ளுதலை வலியுறுத்துகிறது.

    ஆறு சூடினாரின் திருமகனால் அருஞ்சாதனை

    ஆறுசூடியின் மகனாகிய பிள்ளையார், பரசமயத் தூரறுத்து, சைவப்பெருநெறி காட்ட வந்தவர். அவர், அடியார்த் திருக்கூட்டத்துடன் திருமயிலையை நோக்கி எழுந்தருளி வருவதனை அறிந்து இன்புற்ற சிவநேசர், அவர்தம் வருகை நிகழ்கின்ற திருத்திசையில் வீழ்ந்து அடிவணங்கினார். அவ்விடத்தை நோக்கிச் சிவிகையில் பயணம் மேற்கொண்டிருந்த பிள்ளையாரின் திருவுள்ளத்திலும் சிவநேசரின் அடிமைத்திறம், பெருகும் அன்பிலான  பூரிப்பினை விளைவித்தது. சிவநேசருக்கு அருள்புரிகின்ற பெருநோக்கு, பரசமயத் தூரறுப்பினைத் தொண்டைநாட்டிலும் பிள்ளையார் நிகழ்த்திக்காட்டுவதாகிய, செயற்கரும் சாதனையாக மலர்ந்தது.

    இன்னருள் வணிகர்மேல் விளைதல்

    ’கூற்றடர்த்தவர் கோயில்’ என்றும்,  ‘பெருமயானத்து நடம் புரிவார் பெருங்கோயில்’ என்றும், திருப்பெயர்க்கொண்ட கபாலீச்சரத்தில், பிள்ளையார் காலனையும் பழிக்கின்ற அருளாடல் நிகழ்வதற்குரிய காலம் வாய்த்தது. பிள்ளையார், திருமயிலையின் கபாலீச்சரத்தை வணங்கி, அதன் மதில்புறத்தே வந்தணைந்தார். அவ்வேளையில், பிள்ளையாரின் திருநோக்கம், சிவநேசர்பால் சென்றது. அவ்வருள் நோக்கத்துடன், சிவநேசரை நோக்கி, ‘அடியாரிடத்திலான அடிமைத்திறமே, தவம் பெருக்குகின்ற சிவவாழ்வு’ என நிலைத்திருக்கின்ற நல்லுணர்வீர்!,  ‘மகளது சாம்பல் அடங்கிய குடத்தினை, உலகறிய இவ்விடத்தில் கொண்டுவந்து வைக்கவும்!’ என ஆணை வழங்கினார்.

    மண்ணில் பிறந்தார் பெறும் பயன்

    அடியவர்கள், சைவப்பெருநிதியாக விளங்க வல்லவர்கள். அவர்களின் நடுவே, என்றும் நீங்காத இடம்கொண்டு பெருமானும், அருள்நிதியாக விளங்கியருள்கின்றான். பற்று ஒழித்தல், பக்திநெறியின் அடிப்படையாயினும், சிந்தையை மடைமாற்றி அதில் நிலைத்திருக்க, அணுப்பொழுதும் இறைவனை மறவாமை என்பதே அடிப்படையாகும். அதற்கு, அடியாருடனான சூழலே களமாகும். அடியவர்களே, பெருமானின் பெரும்புகழைப் பேசிப்பேசி, ‘அன்பர்பணியே அரன்பணி’ என்று பண்படுவர்.

     ‘சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் திருவார்த்தை
    விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்        தரிப்பார்’          (கோயில் மூத்த திருப்பதிகம்: 9)

    என்று பண்பட்ட அடியாருடனான நன்நெறியினை வலியுறுத்தவேண்டி மணிவாசகப்பெருமான்,

    ’இறைசீர் கற்று ஆங்கு அவன், கழல் பேணினரொடும் கூடுமின் கலந்தே’ (உயிருண்னிப்பத்து: 5) என்றார். அத்துடன் அப்பேறு தமக்கும் வாய்த்தருள வேண்டி இறைவனிடத்தில்,

    ‘உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்’ (கோயில் மூத்த திருப்பதிகம்: 1) என்று வேண்டினார்.

     மாகேச்சுர பூசையும்,  விழாப்பொலிவும்

    மாகேச்சுரர்களாகிய அடியவர்களை நிந்தித்தல், ‘பெருநரகில் உழல்கின்ற  பெருந்துன்பத்தினைத் தரும்’ (திருமந்திரம்: 520) என்பதனைத் திருமூலர் விளக்கியுள்ளார். அத்துடன், ‘உண்மையான சிவஞானிபால் நம்மை ஒப்புக்கொடுத்த நொடிப்பொழுதிலேயே சிவபோகம் வாய்க்கும்’ (மேலது, பாடல்: 521) என்பார். ‘அடியார்’ எனப் பொய்வேடம் பூண்டு வந்தாரிடத்திலும், உண்மை அன்புகொண்டு பணிந்த மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதிநாத நாயனாரும் திருவடிப்பேறு பெற்றுய்ந்த அருஞ்சிறப்பு, அடியாரைப் பணிவதன் அருள்சிறப்பினை விளக்கும். அவ்வண்ணம், அடியார்த் திருத்தொண்டால் அளவிலாத அருள்பெற்ற அன்பர்கள் எனப் பெரியபுராணமும், பத்தொன்பது அடியவரைப் போற்றியுரைக்கிறது.

    அளவில்லாத பெருமையுடைய அடியவர்க்கு உணவிடுதலாகிய நன்னெறியும், அவர்களுடன் கூடியிருந்து, பெருமானைக் கண்ணாரக் கண்டுய்வதற்குமான விழாக்களை, ‘நல்விழா’ என்பார் தெய்வச் சேக்கிழார்பெருமான். ‘சிவபெருமானது விழா ஒன்றே எஞ்ஞான்றும் பெருநலமாகிய வீடுபேற்றுக்கு உதவுவது என்பார் நல்விழா என்றார்’ என்பது உரையாசிரியர் சிவக்கவிமணி அவர்களின் குறிப்பு (பக்.,: 687).

    திருவிழாவில் அடியாருடன் கூடி, பெருமானின் திருக்காட்சியைக் கண்ணாரக் காண்பதே, ‘மகிழ் செல்வம்’ (திருநாவு. புராணம்: 235) என்பார் தெய்வச் சேக்கிழார்பெருமான்.  இக்கருத்துடைய பிள்ளையாரும், தாம் காணுதற்குத் திருவருள் கூட்டாத, திருவாரூர் திருவாதிரைத் திருவிழாச் சிறப்பினைத் தமக்குக் கூறியருள  அப்பர்பெருமானை வேண்டினார். அப்பெருவிழாச் சிறப்புக்கு, ‘முத்துவிதான மணிப்பொற்கவரி’ (4:21) என்னும் தேவாரம் திருச்சான்றாகிறது. அவ்வாறு பெருமானின் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்க்கின்ற அடியவர்கள்,  வினையொழிந்து, சிந்தைமகிழலாம்’ என்பது பிள்ளையாரின் திருவருளாணை.

      ‘இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி
       லாளர்விழ மல்கச்
       செடிகொள்வினை யகலமன மினியவர்கள்’       (3:83:5)

    ‘அடியவர்கள், திருவிழாப் பொலிவு கண்டார்த்து,  சித்தம் அழகிய பெருமக்கள்’ என மிளிர்வர் எனப் பிள்ளையார் போற்றியுள்ளார். அடியவர்களுக்கு உணவிடுதலாகிய மாகேச்சுரப் பூசைக்கு முட்டுப்பாடு நேர்ந்தநிலையில், திருவீழிமிழலைப் பெருமானிடத்தில் படிக்காசு பெற்று அதனைச் சிறப்புறச் செய்தருளிய சிறப்பும் பிள்ளையாருக்கு உண்டு.

    மேற்சுட்டப்பெற்ற நன்னெறிகள், இந்நாளிலும் சைவம் தழைக்கப் பிள்ளையாரின் அருளாணையாக அருளப்பட்டவை. அப்பெருநெறியினை உலகவர்க்குச் சாற்றுகின்ற திருவருள் ஆணையாக, பூம்பாவைப் பாட்டு எழுந்த வரலாற்றினை தெய்வச் சேக்கிழார்பெருமான் புராணத்தில் குறித்தருளியுள்ளார்.

          ‘மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
         அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல்
         கன்ணி நாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்
      உண்மை யாமெனி லுலகர்முன் வரு” கென வுரைப்பார்’  (திருஞான. புராணம்: பா.எண்: 1087)

    காணாது, “போதியோ” பூம்பாவாய்

    கபாலீச்சரத்துத் திருக்கோயிலின் மதில்புறத்துத் திருவாயிலின் முன்னே வைக்கப்பெற்றிருந்த சாம்பற் குடத்தின் மீது பிள்ளையார் தமது திருக்கண் நோக்கம் செலுத்தினார்;  ‘மட்டிட்ட புன்னை’ எனப் பாடத் தொடங்கினார். கபாலீச்சரத்துத் திருக்கோயிலில் பொலிவுற நிகழ்வதாகிய திருவிழாக்களில், அடியார்க்குத் திருவமுது படைத்தலாகிய மாகேச்சுரபூசையானது ஏற்றம் பெற்று நிகழ்வதனைப் போற்றி முதல் திருப்பாட்டினைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, கபாலீச்சரத்துப் பெருமான், தம்மடியார் கண்டுய்வதன்பொருட்டுக் கொண்டருள்கின்ற பெருவிழாக்களை ஒவ்வொரு திருப்பாடலிலும் வரிசைப்படுத்தினார். ‘அப்பெருவிழாக்களைக் காணாது போதியோ பூம்பாவாய்?’ எனப் பூம்பாவையை வினவினார்.  ஐப்பசித் திருவோணத் திருவிழா, திருக்கார்த்திகைத் திருவிளக்கீடு, மார்கழித் திருவாதிரைத் திருவிழா, தைப்பூசப் பெருவிழா, மாசிமகக் கடலாடல், பங்குனிஉத்திரப் பெருவிழா, சித்திரை அட்டமித் திருவிழா, வைகாசி ஊஞ்சலாட்டுப் பெருவிழா மற்றும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களின் பெருஞ்சாந்திப் பெருவிழாக்கள் எனப் பெரும்பொலிவுடன் நிகழ்கின்ற திருவிழாக்களின் உயர்வும், அவற்றில் அடியார்களின் ஆரவாரச் சிறப்பும் விளங்கத் திருப்பதிகத்தை எடுத்துரைத்தார். ‘இத்திருவிழாக்களின் அருள்காட்சிகளைக் காணாமல் நீ மறைந்ததும் முறையோ?’  எனத் திருவருளை முன்னிட்டுப் பூம்பாவையிடத்தில் முறையிடுபவராகப் பாடல்கள்தொறும், ‘காணாது போதியோ பூம்பாவாய்!’ என்னும் விளியமைத்துப் பத்தாம் பாடலையும் பிள்ளையார் நிறைவு செய்தருளினார்; பிள்ளையார் பூம்பாவையை எழுப்புதலும் இயலாது’ என்று அதுகாறும் எண்ணியிருந்த சமண, பௌத்தரின் எண்ணம் பொய்த்தது. அவ்வேளையில், பத்துத் திங்கள், தாயின் கருவிலிருந்து வளர்ந்து வெளிவருகின்ற பிள்ளையைப்போல, பூம்பாவை மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்தாள். சாம்பல் குடம் உடைந்து, பன்னிரண்டாண்டு பருவத்தின் அருள்பேரழகுடையவளாக வெளிப்பட்டுவந்த அவளது எழிற்கோலப் பொலிவினைப் புராணத்தின் வழி உணரலாம்.

    மெய்த்திரு வாக்கு என்னும் அமுதம்

    சிவஞானச்செல்வராகிய பிள்ளையார், ‘அடியாரின் அடிமைத்திறம், மாண்டாரையும் மீட்டருளவல்லது’ என்னும் சைவப்பெருநெறியினைப்  பரசமயத்தார் உள்ளிட்ட உலகத்தாருக்கும் எடுத்துரைக்கப் பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்தருளினார். செயற்கரிய அச்செயலுக்கு, பெரும்பொருளல்லாத எலும்பும், சாம்பலும் கருவியாயின. அதுபோன்றே, திருவருளை முன்னிட்டுப் பிள்ளையார் பாடியருளிய திருப்பாடல்களில் எழுந்த, ‘போதியோ’ என்னும் சொல்லானது  மந்திரமாகச் செயல்பட்டுப் பூம்பாவையை உயிருடன் எழுப்பியது. அவ்வுயர்வு கருதியே, தெய்வச் சேக்கிழார்பெருமானும் ‘போதியோ’ என்னும் சொல்லை, ‘மெய்த்திரு வாக்கென்னும் அமுதம்’ எனப் போற்றியுள்ளார். அது, இரண்டு பக்கத்திலும், ‘ஓம்’ என்னும் பிரணவத்தைக் கொண்டெழுந்த ‘மூவெழுத்து மந்திரம்’ என்பார் உரையாசிரியர் சிவக்கவிமணி. ‘அதுவே வருக என்ற ஆணையாகிய சிவசிற்சத்தியை உள்ளிட்டு அருளப்பட்டமையால் என்க’ (பக்.,: 688) என்பது உரைக்குறிப்பு.

     ‘மன்னு வார்சடை யாரைமுன் றொழுது “மட் டிட்ட”
      என்னு நற்பதி கத்தினிற் “போதியோ” வென்னும்
      அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதமவ் வங்கந்
      துன்ன வந்துவந் துருவமாய்த் தொக்கதக் குடத்துள்’ (மேலது புராணம்: பா.எண்: 1088)

    முடிவுரை

    பெருகுகின்ற செல்வமும், பேரன்பின் திறமும் அடியவர்களுக்காக அமையுமாயின், அதுவே அன்பு மாறாத அடிமைத்திறமாகும். அதன்வழியே, உலகத்து இயற்கையாகிய மரணத்தையும் வென்றேறலாம். அதற்கு, சிவநேசர் பிள்ளையாரிடத்தில் கொண்ட அடிமைத்திறம் சான்றாகிறது.  பூம்பாவையை மீட்டருளத் தாம் கருவியான நிலையிலும், தன்முனைப்பற்று, திருவருளாணை வழியே பெருமானைப் பணிந்துநின்றவர், பிள்ளையார்.  ‘தம்பிரான் கருணையின் பெருமையே கருதி’யும்,  (1085); ‘மன்னு வார்சடையாரை முன்தொழுது’ம் (1088) செயற்கரிய சாதனையை நிகழ்த்தினார். அவரின் செயல்பாடு, மெய்ஞ்ஞானத்தால் நிகழ்கின்ற அருள்வன்மைக்குச்  சான்று. அவ்வாறு, சிவநேசருக்கு வாய்த்த அடிமைத்திறத்துடன், பிள்ளையார் முதலான ஞானாசாரியார்களது அருள்திறமும் ஒருங்கே பெருகுகின்ற சிவஞானப்பேற்றுக்கு, ‘பூம்பாவைப்பாட்டு’ துணையாகிறது. அத்திருப்பதிக நன்னெறி நமது வாழ்வியலானால், ‘வீடுபேறுற்று, சிவகணத்தவரோடும் கூடி நிலைத்து வாழலாம்’ என்பது பிள்ளையாரின் திருவாக்கு.

    ஆய்வுத்துணை நூல்கள்

    1. பெரியபுராணம்- தொகுதி:5 – சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணியனார் (உ.ஆசி.,),  பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21. பதிப்பு ஆண்டு: ஏப்ரல், 2018.
    1. பெரியபுராணம்- தொகுதி:3 – சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணியனார் (உ.ஆசி.,),  பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21. பதிப்பு ஆண்டு: திசம்பர், 2017.
    1. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை),பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்), கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.
    1. திருமந்திரம் – திரு ப. இராமநாத பிள்ளை (உ.ஆசி.,), கழக வெளியீடு-எட்டாம் பதிப்பு: செப்டம்பர், 1992.
    1. திருவாசகம் – சென்னை சைவசித்தாந்தப் பெருமன்ற வெளியீடு, நான்காம் பதிப்பு: 1999.
    1. திருக்குறள் – சிற்பி பாலசுப்பிரமணியனார் (உ.ஆசி.,), தாமரை பதிப்பகம், சென்னை.  இரண்டாம் பதிப்பு: அக்டோபர், 2014.
    1. ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, இரண்டாம் பதிப்பு: அக்டோபர், 2004.

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

     

     

    Share
  • தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

                                                     தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

    முனைவர் இரா. மதன் குமார்., இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,

                                              கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

     

    முன்னுரை              

                 ‘பெருமானைப் பேசாத நாளெல்லாம், பிறவாத நாளே’ என்பது, அறுபத்துமூவர் கொண்ட வாழ்வியல்நெறியாகும். ஆனால், ‘முற்பிறப்பில் செய்த அவ்வினையால், இப்பிறப்பில் இவ்வினையைச் செய்து இளைக்கின்றோம்’ என்பதே நமது அன்றாட வாழ்வியல் அவலமாக விளங்குகிறது. இவ்வவலத்தை மாற்ற, திருநீலகண்டத்தின் மீது மாறத பற்றுடன், கைவினையாகிய தொண்டுநெறியால், இறைவனைப் பணிந்துய்வதற்கு, திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டத் திருப்பதிகம் திருநெறி காட்டுகிறது. அத்திருநெறியில் நின்று, திருநீலகண்டம் என்பதனைத் தமக்குத் திருப்பெயராகப் பெற்றும், அதனைத் தம் வாழ்வின் திருமந்திர ஆணையாக ஏற்றும்,  சோதனையிலும் வாய்மை தவறாத வன்மையாளர் எனச் சிறந்தவர், ‘திருநீலகண்ட நாயனார்’. அவர்தம் வாழ்வு, ‘உலகோரின் நெஞ்சுக்கு நீதியென’ நன்னெறி காட்டவல்ல பாங்கினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    நம்மைத் தீவினை தீண்டா

    ஆளுடையபிள்ளையாரின் திருநீலகண்டத் திருப்பதிகமானது திருப்பாடல்தொறும், ‘திருநீலகண்டம்’ என்னும் திருப்பெயருடன் திருவருள்ஆணையாகத் திகழ்கிறது.            உலகமயக்காகிய கீழ்மைநிலைகளை நீக்கி, பிறந்த பிறப்பின் பெரும்பயனாகிய பெருமானின் திருவடியை அடைதற்குரிய உறுதியை ஊட்டுகிறது.

    ‘பிறந்த பிறவியிற்பேணி எஞ்செல்வன் கழலடைவான்’                         (முதல் திருமுறை: 116:11)

     பெறுதற்கு அரிய பேறாகிய திருவடிப்பேற்றுக்குத் தடையாகிய, ‘கீழான தீவினைகள், அடியாரின் சிந்தையை ஒருபோதும் தீண்டா’ என்பதும், நிகழ்செயலின் வருவினையும், திருநீலகண்டத்தின் திருவருளால், ‘தொடராது’ என்பதும் உறுதி.

     ‘சொற்றுணை வாழ்க்கை துறந்துத் திருவடி அடைந்தோம்

      செற்றெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்’                      (மேலது பதிகம்: 5)

     பெருமானை மறக்கின்ற மனத்தினையும், திருவடியில் நிலைநிறுத்தி,  பெருமானைப் பற்றி உய்யச் செய்வதாகிய அருட்சிறப்புடன் இலங்குவது, ‘திருநீலகண்டமாகிய’ பெரும்பெயராகும்.

     ‘மறக்கு மனத்தினை மாற்றியெம் ஆவியை வற்புறுத்திப்

      பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

      பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

      சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்’                          (மேலது பதிகம்: 6,7)

     உலகமயக்கில், எண்ணத்தால் எள்ளளவு நினைப்பினும், கீழ்நிலைக்குத்தள்ள வல்லதாகிய பெருமயக்காய் விளங்குவது, முறையற்ற பெண்ணின்பமாம். அதனாலேயே அருணகிரிநாதப் பெருமான்,  ‘மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் எனுற்ற மனம், உன்தனை நினைத்தமைய அருள்வாயே’ என்று கொங்கணகிரிப் பெருமானிடத்தில் விண்ணப்பித்தார். அத்தகைய உயர்விண்ணப்பத்துக்கு வழிகாட்டுபவராக, திருஞானசம்பந்தப்பெருமான், திருநீலகண்டத் திருப்பதிகத்தில், அளவுகடந்த பெண்ணின்பம் முதலாகிய உலக மயக்குகள், அடியவரை நலியாதவண்ணம், திருநீலகண்டமாகிய திருமந்திரம் முன்னின்று காத்தருளும்’ என்று உறுதிபட வலியுறுத்தியுள்ளார்.

     ‘முலைத்தட மூழ்கிய போகங்களும ற்றெவையு மெல்லாம்

      விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்

      இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்

      சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ  றாதிரு நீலகண்டம்’    (மேலது பதிகம்: 3)

     மேற்கண்ட, திருப்பதிகத் திருநெறியில் அயனும் மாலும் உணர்ந்து பற்றுதற்கு அரிய பெருமான்,  ‘உண்மைஅடியார் அழைத்தால் அவர்க்குத் தவறாது காட்சியளித்து அருள்வான்!; அது திருநீலகண்டத்தின் மீது ஆணை!’ எனத் திருஞானசம்பந்தர் குறித்தருளியுள்ளார். அவர்தம் திருவாக்கு, திருநீலகண்டத்துக் குயவனாரின் திருவாழ்க்கையாக மலர்ந்து விளங்கியதைப் பெரியபுராணம் விளக்கியுரைக்கிறது.

    திருநீலகண்டமும் திருநீலகண்டரும்

    பெருமான், பேராயிரம் உடைய பெரியோன். ‘ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாத அவனை, ஏதேனும் ஓர் உருவத்தால் பற்றுவதே சிற்றுயிர்க்கு இயல்பாகும். காணுகின்ற அருளுருவையும் சுருங்கச் சொல்லிச் சிற்றறிவுக்கு விளக்குவனவாக, அவனது திருப்பெயர்கள் விளங்குகின்றன. அவ்வவ்வுயிரும், தத்தமது அறிவுக்கும், வினைத்தகுதிக்கும் ஏற்ப, பெருமானின் திருப்பெயர்களுள்,  ஏதேனும் ஒன்றால் உய்வதே, திருவருளின் சித்தமாகிறது. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாகிய, ‘நமசிவாய’ திருமந்திரம், பாண்டி நன்நாட்டில் சைவம் தழைத்தோங்கக் கருவியானது.

    கல்லில் பூட்டிக் கடலில் பாய்ச்சியபோதிலும், நமசிவாய திருமந்திரம், அப்பர்பெருமானுக்குத் திருவருள் தெப்பமாகியது. அவர், ‘சிவாயநம’ எனத் திருவாய் பொலியக் கூறி உய்ந்ததும் திருவரலாறு. ‘நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே’ என்பது, சுந்தரர்பெருமானின் அருளனுபவத் திருவாக்கு. இவ்வாறு, பெருமானின் திருப்பெயருள் ஏதேனும் ஒன்றையேனும் பலகாலம் பயின்று, உள்ளத்தில் உருவேற்றி வாழ்வோருக்கு, அத்திருப்பெயரே, தீவினை தீண்டாது காக்கின்ற பெருமந்திரமாகின்றது.

    அவ்வகையில், திருக்கொடிமாடச் செங்குன்றூரில், அடியாரைத் தாக்கிய குளிர்ச்சுரத்தை அகற்றியருளத் திருஞானசம்பந்தப்பெருமானுக்கு, ‘திருநீலகண்டமே’ திருமந்திரமாகியது. அதுவே, ‘அடியாரின் உடலைச் சுடுகின்ற சுரத்தை மட்டுமல்லாது, உள்ளத்தைச் சுட்டு, உயிரைக் கீழ்நிலைக்குத் தள்ளுகின்ற உலகமயக்காகிய பல்வகைச் சுரங்களையும் வேரோடு களைந்தெறிய வல்லது’ என்பதைப் பெருமானார், ‘திருநீலகண்டத் திருப்பதிகமாகவே’ அருளிச்செய்துள்ளார்.  அத்திருப்பதிக நன்நெறியினைத் தமது வாழ்வியலாகக் கொண்டவர், நாயனார்.

    வழிபடு நலத்தின் மிக்கார்

                        ‘வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும்

                பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்

                            பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்

                பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப்

                பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’                                 (ஆறாம் திருமுறை: 1: 5)

    என்னும் திருத்தாண்டகத் தொடர்கள், அளவுகடந்த பெண்ணின்பத்தைத் துறந்தார்க்குப் பெரும்பற்றப்புலியூரன் பெருந்துணையாகவல்ல திறத்தை உணர்த்துகின்றன. இத்திருவாக்கின் பிழிவாக இல்லறத்தை நடத்தியவர்,  திருநீலகண்டத்துக் குயவனார். அவரின் பெருங்குணத்தை உலகுக்குக் காட்டியருள அம்பலக்கூத்தனார் புரிந்த அருள்விளையாடலின் மையமாக விளங்குவது, ‘திருநீலகண்டம்’ என்னும் திருமந்திரமாகும்.  இல்வாழ்க்கையும் விளங்கியது.

    வழிபடு நலத்தின் மிக்கார்

              அம்பலக்கூத்தனாகிய பெருமானின் திருநடனம், ஆனந்தக்கூத்தாக விளங்குவது. அதன் அருள்வீச்சினை உயிர்கள் தாங்க வொண்ணாது என்பது அவன் திருவுள்ளம். அதனாலேயே, தனது அருள்திருநோக்கத்தைத் தனது இடப்பாகத்தில் வீற்றிருக்கின்ற அம்மையிடம் செலுத்தி, மன்னுயிர்கள் பயனுறச்செய்கின்றான். ஆனந்தக்கூத்தின் அருள்விளைவுக்கு, அம்மையாகிய சக்திபாகம் கருவியாதல்போல, நாயனாரின் சிவப்பெருவாழ்வினை நாம் உணர்வதற்கு, அவர்தம் மனைவியார் கருவியாய் அமைந்த அருள்சிறப்பு போற்றத்தக்கதாகும். மனைவியாரது  திருவாயிலிருந்து வெளிப்பட்டது, ‘எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம்’ என்னும் திருவருளாணையாகும். அதுவே,  மாந்தர்தம் இல்லறம், சிவப்பெருவாழ்வாகப் பொலிவுற என்றென்றும் நின்று நெறிகாட்டுகிறது.

                நாயனார், ‘மாது சொன்ன சூளால் இளமை துறந்து, வாய்மையில் நிலைநின்று, நன்னிலைபெற்றார். அவர்தம் புறத்தொழுக்கமே மனைவியார், திருநீலகண்டத்தின் மீது சூளுரைக்கவும் காரணமானது. நாயனாரது புராணத்தின் முதல்பாடலின் ஈற்றடியானது, ‘வாழ்த்தி வழிபடு நலத்தின் மிக்கார்’ என நிறைவுறுகிறது. பொதுநிலையில் இத்தொடரானது, ‘நாயனார் புரிகின்ற வழிபாடு சிறப்புடையது’ என்னும் பொருளையும், ‘வாழ்த்தி வழிபடத்தக்க வகையில் நாயனார் சிறப்புடையவர்’ என்பதையும் ஒருசேரக் குறிக்கிறது எனலாம்.

                 ‘வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்

                  மாதொரு பாக நோக்கி மல்குசிற் றம்ப லத்தே

                  ஆதியு முடிவு மில்லா வற்புதத் தனிக்கூத் தாடு

                   நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடு நலத்தின் மிக்கார்’                      (திரு.நீல.புராணம்: 1)

     

     

    சைவ மெய்த் திருவானார்

              நாயனாரது மனைவாழ்க்கை, வையகம் போற்றுகின்ற நல்லறமாக, அடியார்க்குத் தொண்டு செய்கின்ற அறப்பணியாகத் திகழ்ந்தது. உடலாலும், உள்ளத்தாலும் பொய்ம்மை கடிந்து, மெய்ம்மையைப் போற்றுகின்ற சைவ மெய்த் திருவாக வாழ்ந்துவந்தார். ‘இறைவனைப் பற்றுவதற்குத் துறக்கவேண்டியவற்றைத் துறப்பதற்குக் காலம் வாய்க்கட்டும் என்றில்லாமல், இளமையும் செல்வமும் உள்ளபோதே துறப்பதால், எல்லை இல்லா பெரும்பயன் விளையும்’ என்பது வள்ளுவம். அந்நெறியினை உலகுக்கு உணர்த்த உண்ணிய திருவருள், நாயனாரைக் கருவியாகக் கொண்டது. அவர், புறத்தொழுக்கம் பூண்பவராய் அறிவு மயங்கினார். அதை அறிந்த மனைவியார், அவர்பால் புலந்தார். நாயனாரும் அவர்தம் ஊடல் தீர்க்க, நயந்து அவரை நெருங்கினார். ‘ஆயும் அறிவினர்’ என்னும் மெய்யுணர்வு கொண்டிருந்த அம்மையார், காமத்தீ தன்னையும் உய்வுபெற இயலாத கீழ்நிலைக்குத் தள்ளும்’ எனக் கருதித் தம்மை அதிலிருந்து காத்துக்கொள்ளச்  சித்தம்கொண்டார். ஆயினும், கணவனாரையும் நன்னிலையில் காத்தருளவேண்டிய கடப்பாடும், தமக்கே உண்டு என்பதனை உணர்ந்தவராக, இருவரும் ஒருசேர நன்னிலைபெறக் கருதினார். பெருமானின், நிலைபெற்ற திருப்பெயராம், ‘திருநீலகண்டத்தை’ முன்னிருத்தி, நாயனார்பால் ஆணை மொழிந்தார்.

                  “தீண்டுவீ ராயி னெம்மைத் திருநீல கண்ட” மென்றார்                                     (திரு.நீல.புராணம்: 6)

    சிந்தை திறம்பாத சீர்மையாளர்

                இல்லறநெறியிலும் இளமை துறந்து, சிவனடிக்கே சிந்தை பதித்த செழுமனச் செல்வியாக விளங்கியவர், ‘காரைக்காலம்மையார்’. அவர், பரமதத்தனுக்காக, பெருமானிடத்தில் மாங்கனி பெற்றளித்தார். அவ்வேளையில், ‘சிவனது திருவிளையாடலைப் பிறரிடத்தில் கூறுதற்கு வாய்ப்பில்லை’ என்ற நிலையிலும், அதனைத் தமது கணவனாரிடத்தில் மறைத்தல், ‘ இல்லற மாண்புக்கு இழுக்காகும்’ என்று வாய்மை திறம்பாதவராக, ‘சிவனருளால் பெற்ற மாங்கனி இது’ என்றே கூறி, அவர் கையில் ஒப்படைத்தார். அம்மாங்கனியும் பரமதத்தனின் கைகளிலிருந்து மறைந்து, அம்மையார் மொழிந்த வாய்மைப் பெருமொழிக்குச் சான்றாக அமைந்தது. அதன் பின்னரும்,  சிவனடியாரின் பசிப்பிணி போக்குதல் முதலான சிவத்தொண்டுக்குக் கருவியாகவே அம்மையார் தமது இல்லறத்தை நடத்திவந்தார். அதனாலேயே, கணவனாருக்குப் பயன்படாத  தசை உடம்பினைத் துறந்து, பேயுருக் கொண்டார். எந்நிலை வந்துற்றாலும், பெருமானை மறவாத அம்மையாரது பேரன்பின் திறமே,

                  ‘நின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குறவேண்டும்’     (காரை.அம்.புரா.: 49)

    என்னும் விண்ணப்பமாக விளங்குகிறது. இத் திருவிண்ணப்பத்தைச் சேக்கிழார்பெருமான்,

      ‘சிந்தை ஒன்றிய நோக்கின் மிக்க உணர்வு கொண்டு உரைசெய்கின்றார்’    (காரை.அம்.புரா.: 48)

    எனக் குறித்தருளியுள்ளார். இத்தகைய சிந்தை மாறாத சிவப்பற்று நாயனாரிடத்திலும், அவர்தம் மனைவியாரிடத்திலும் ஒருசேர அமைந்திருந்தது.

    மனத்தினாலும் தீண்டாத திருவாளர்

              காமவயப்பட்ட நிலையிலும், அறிவழியாத உறுதித்திறமுடையவரை திருவள்ளுவர், ‘ஆயும் அறிவுடையார்’ (திருக்குறள்: வரைவின் மகளிர்: 4,8)  என்று குறிக்கின்றார்.

              அம்மையார் மொழிந்ததாகிய, திருநீலகண்டத்து ஆணையைக் கேட்ட அளவில், நாயனாரும், ‘ஆயும் அறிவுடையவர்’ ஆனார். “மெய்யன்பின் முதிர்ந்த மேன்மைகளைத் துய்த்தறிந்த மேலோர், பொருளையே போற்றி மதிக்கும், பரத்தையரின் பொய்யின்பத்தை நாடார்” (திருக்குறள்: வரைவின் மகளிர்: 3- சிற்பி பாலசுப்பிரமணியனார் உரை) என்ற மெய்யுணர்வு வாய்க்கப்பெற்றார். அம்மையாரின் அருகிலிருந்த நாயனார்,  உடனே விலகினார். அம்மையாரின் ஆணையில்,  ‘எம்மை’ என்றமைந்த சொல்லமைதியில் சிந்தை செலுத்தினார். அச்சொல், மனைவியாரை மட்டுமன்றி பெண்கள் அனைவரையும் ஒருங்கே குறிப்பதாக உணர்ந்தார். அவ்வண்ணமே, திருநீலகண்டத்து ஆணைக்கு உறுதிசேர்க்க எண்ணினார். உடனே, ‘சிந்தையாலும் மாதர் எவரையும் இனித் தீண்டேன்’ என்று உறுதிபூண்டார். அத்தகைய மனவுறுதிக்கு, அந்நாள் வரையில் அவர், ‘திருநீலகண்டம்’ என்னும் திருப்பெயரின்பால் கொண்டிருந்த பற்றுறுதியே காரணமானது.

                 ‘ஆதியார் நீல கண்டத் தளவுதாங் கொண்ட வார்வம்

                  பேதியா வாணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி

                  ஏதிலார் போல நோக்கி, “எம்மைஎன் றதனான் மற்றை

                  மாதரார் தமையு மென்றன் மனத்தினும் தீண்டேன்” என்றார்’.           (திரு.நீல.புராணம்: 7)

                            நாயனாரது புறத்தொழுக்கத்தை அறிந்தவுடனேயே, மனைவியார் அதுகுறித்து அயலவர் அறியக்கூறி முறையிட்டிருக்க வாய்ப்புண்டு. அதுபோன்றே, நாயனாரும் அயலவரிடத்தில் கூறியிருப்பின், அவர்களும் அவர்தம் செய்கைக்கு நியாயம் கற்பித்து, மனைவியாரது செய்கை உலகவழக்குக்குப் பொருந்தாது எனக்கூறி, ‘இனியும் அன்புறு புணர்ச்சியால் இல்லறத்தை இனிது கழித்திருங்கள்’ என்றே உலகியலை ஒட்டி ஆற்றுப்படுத்தியிருப்பர்.

    காரைக்காலம்மையார், பரமதத்தனைப் பிரிந்திருந்த வேளையிலும், கழிகின்ற இளமைக்கும், காணாத போகங்களுக்கும் ஏங்கி இளைக்கவில்லை. மாறாக, அந்நாட்களிலும், அடியவர்க்குத் தொண்டுசெய்துவந்தார். அதுவே, ‘மறை பிறர் அறியாமை’ என்னும் மனையறமாகக் கடைப்பிடிக்கப்பட்டதனைப் பெரியபுராணம் உணர்த்துகிறது.

     அதைப்போன்றே, நாயனாரும், மனைவியாரும், இல்லறத்தைப் தொண்டர் பணிக்கான களமாகவே கொண்டிருந்தனர். தம்மிடையே அன்புறு புணர்ச்சி அகன்றநிலையிலும், அன்றாடம் அடியவர்க்குத் திருவோடு வழங்குகின்ற மேன்மைப்பணியில் பழுதேதும் ஏற்படாதவாறு அன்பின்திறத்தில் சாயாதிருந்தனர்.  ‘தாங்குதற்கு, இனிக் கோலே துணையாகும்’ என்று மூத்தநிலையிலும், பெருமானின் மீதுகொண்ட உண்மையன்பில் சிறிதும் பிறழாது உயர்ந்தனர்.

     ‘இளமையின் மிக்கு ளார்க ளிருவரு மறிய நின்ற

      அளவில்சீ ராணை போற்றி யாண்டுகள் பலவுஞ் செல்ல

      வளமலி யிளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து

      தளர்வொடு சாய்ந்து மன்பு தம்பிரான் றிறத்துச் சாயார்’                       (திரு.நீல.புராணம்: 9)

     

     நடந்து வந்தார்; நயந்து தந்தார்

              பொருள் கொண்டோர், இல்லாதவர்க்கு வழங்கி உதவுதலே, உலகியல் அறமாகும். அதனை உணர்த்தவேண்டியே பெருமான் பிரமகபாலத்தைக் கையில்கொண்டு பிச்சையேற்றருள்கின்றான்.

                 ‘பிச்சைய தேற்றான் பிரியா வறஞ் செய்ய’ (திருமந்திரம்: ஏழாம் தந்திரம்: 184) எனத் திருமந்திரம் குறிக்கின்றவாறு, அறங்காட்டியும், அவ்வறத்தைக் கடைப்பிடித்தொழுகி, நன்னிலை பெறவும், பக்குவம் கொண்டோரின் குற்றத்தையும் பெருமான் குணமாகக் கொள்வான்.  அப்பெருங்குணத்துக் காதலுடன்,  பக்திநெறிக்குத் தலைப்படுவாரை உயர்த்தியருளவேண்டி இறைவன், தன் திருக்கரத்தைத் தந்துதவுகின்றான். ஆயினும், வினைவயத்தால் உலகியல் மயக்குகள், ஆயிரம் அசுரக்கரம் கொண்டு,  அவ்வுயிர்களை வலிந்து இழுத்து, வினைச்சேறு மிக்க ஆழ்குழியில் வீழ்த்துகின்றன. இதுவே, பக்திநெறி நின்றாரின் அயராத மனக்கலக்கத்துக்கான சூழலாகிறது. அத்தகைய மனக்கலக்கமுற்ற நாயனாரின் வாட்டத்தை நீக்கி அருளவேண்டியே பெருமான், ஓடேந்திய கையராகிய கோலத்தை நயந்து ஏற்று,  நாயனாரின் மனையை நாடி நடந்தே வந்ததாகச் சேக்கிழார் பெருமான் குறித்துள்ளார்.

                 ‘நன்னெறி யிதுவா மென்று ஞாலத்தார் விரும்பி யுய்யும்

                  அந்நெறி காட்டு மாற்றா லருட்சிவ யோகி யாகி,……..                        (திரு.நீல.புராணம்: 10)

                  விடும்பலிப் பாத்திர மேந்து கையராய்

                  நடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்’                                  (திரு.நீல.புராணம்: 12)

                            நாயனாரின், குற்றம் கடிந்த கொள்கை வாழ்வின் உயர்வினை உலகுக்கு உணர்த்தவேண்டி வந்தவர், தமது திருவோடு,  கொள்கின்ற (தீவினைகள்) யாவற்றையும் தூய்மையாக்கவல்லது’ என்றார். அத்தகைய சிறப்புடைய தமது திருவோட்டினைக் கொள்வதற்கு உரிய முழுத்தகுதியினையும் உடையவர் நாயனார் என்பவராக, பெருமான் அவர்பால், திருவோட்டினை ‘வாங்கு நீ’ என நயந்து கூறி ஒப்படைத்ததாகக் குறித்துள்ளார் சேக்கிழார்பெருமான்.

    மெய்ம்மைநிலை விளக்க வந்தார்

              திருநீலகண்டத்தின் மீதான ஆணையினை, உள்ளத்தில் மறைத்துக் காக்கின்ற உறுதியுடன், சிவயோகி தந்த திருவோட்டினையும் தம் மனையகத்தே உற்றஇடத்தில் பிறரறியாதவாறு உரிய பாதுகாப்பில் வைத்திருந்தார் நாயனார். ஆனால், பெருமானே அதனை மறையும்படியும் செய்தார். அத்துடன், ஏதும் அறியாதவரைப்போல, மீளவும் தமது திருவோட்டினைப் பெறுவதற்கு நாயனாரின் மனைக்கு வந்தார். அதனை, ‘வாலிதா நிலைமை காட்ட முன்புபோல் வந்தார்’  (திரு.நீல.புராணம்: 19) எனப் புராணம் சுட்டுகிறது. ‘வாலிதாம் நிலைமை’ – தூயதாகிய மெய்ம்மை நிறைந்து விளங்கியநிலை’ என்பது உரைவிளக்கம் (பெரியபுராணம்-முதல் தொகுதி-சி.கே.சுப்ரமணியனார் உரை: பக்.: 681).

             

    தூய்மைநிலை காட்டத் தீராவழக்கு

              வந்த சிவயோகியார், நாயனாரிடத்தில் தமது திருவோட்டினைத் திரும்பத் தரும்படிக் கேட்டவேளையில், அது குறித்த இடத்தில் இல்லாமை கண்டு, நாயனார் திகைத்தார். ‘வைப்பிடத்தில் அத்திருவோட்டினைக் காணேன்’ என்றார். அவ்வளவில் அவர்தம் அறிவையும் மறைப்பாற்றல் மறைக்கின்ற நிலையுற்றார். சிவயோகியாரிடத்தில், முன்பிலும் சிறந்த ஓட்டினைத் தாம் தந்துதவுவதாகக் கூறினார். அதைப்பெற்றுத் தமது பிழையைப் பொறுத்தருளவேண்டும்’ என வேண்டினார். ஆனால், வழக்காடி நாயனாரின் வாய்மையாம் வன்மையினை உணர்த்தவந்த சிவயோகியார் அதனை ஏற்கவில்லை. அடைக்கலப்பொருளைக் கவர்ந்துகொண்டதும் அல்லாமல், அதற்கு நாணாத குற்றத்துக்காக, குடும்பதோடு உம்மை, எம்உலகிற்குக் கொண்டு செல்வதே சிறந்த தீர்வாகும்’ என்றார். ஆயினும், நாயனார் கொண்டிருந்த பழியச்சம், அம்மொழிகளது உள்பொருளை உள்ளவாறு உணர்கின்ற தெளிவினை அவருக்குத் தரவில்லை. மாறாக, தம்பாலுள்ள உண்மையினை நிறுவுவதற்கான வாய்ப்புகளைச் சிவயோகியே தந்தருள்வார் என்ற உறுதியில் அவரது ஆணைக்குக் காத்திருந்தார். அவ்விடத்தில் சிவயோகியார், ‘நீர் களவுசெய்யாமை உண்மையாயின், உலகவர் முன்னால், ஆசை மகனுடன் நீரில் மூழ்கி எழுந்துவருக!’ என்றார்.

    நஞ்சொளித்தார் தந்த பெருஞ்சோதனை               

                 ‘யான் மகன் பெற்றிலேன்’; ‘அதனால் நீர் சொன்னவாறு செய்தற்கு இடமில்லை’ என நாயனார் மறுத்து உரைசெய்தார். அப்படியாயின், ‘உமது காதல் மனைவியின் கரம் பிடித்து, நீரில் மூழ்கி எழுக’ என்றார், சிவயோகியார். அதற்கும் மறுப்புரையாக, ‘யான் மட்டுமே மூழ்கி உண்மையினை உலகவர் உணர உரைப்பேன்’ என்றார் நாயனார். அதுகேட்டு வெகுண்ட யோகியார், ‘களவாடியதும் அல்லாமல், உண்மையாளன் என்றும் வாது செய்கின்றீர்; அவ்வுண்மையினைப் பிறருக்குச் சொல்ல வாய்ப்பளித்தபோதும், அதனை உரியவாறு அணுக மனமின்றி, பலவாறு மறுத்துரைக்கின்றீர்.  ‘உம்மிடமிருந்து உரிய நீதியைப் பெற, தில்லைவாழ் அந்தணர்களின் அவையினை யாம் நாடிச் செல்வோம்’ என்றார் யோகியார். அங்கு இருதரப்பு வாதங்களையும் கேட்ட அவர்கள், யோகியாரின் எண்ணப்படியே நாயனார், மனைவியாருடன் இருந்து நீரில் மூழ்கி எழுதலே சாலச் சிறந்தது’ என்று உரைத்தனர். அந்நிலையில், அவர்களது கருத்துக்கு, எதிர்க்கருத்து கூறுகின்ற மனநிலை நாயனாருக்கு இல்லை. தாம் காக்கவேண்டிய பேருண்மை என்னும், தீராதபெருங்கடமையில் நிலைநின்றார். தமது மனைவியாரைத் தீண்டியபடி,  நீரில் மூழ்கிஎழ வாய்ப்பில்லாமையை எண்ணிக் கலங்கினார். அதனைத் தவிர்க்கவேண்டுமாயின், தனது புறத்தொழுக்கத்தைக் கடிவதற்கு, மனைவியார் சொன்ன சூளுரையினை உலகறியச் சொல்கின்ற நிலை ஏற்படுமே என்று வருந்தினார். அவ்வேளையிலும் அது,  தனது தன்மானத்துக்கு இழுக்கு’ என அவர் எண்ணவில்லை.  புறத்தொழுக்கமும், திருநீலகண்டத்தின் மீதான ஆணையும், உலகறிய வெளிப்படுமானால், அதுகாறும் தாமும் மனைவியாரும் இல்லறத்தாருக்குரிய கடமைகளாகச் செய்துவந்த திருத்தொண்டின் சிறப்புக்கு குறைநேருமோ’ என்றே கலங்கினார். அதனாலேயே, சிவயோகியாரிடமும்,  தில்லைவாழ் அந்தணரிடமும்கூட ஆணை குறித்துக் கூறவில்லை.

    நாயனார், தில்லைவாழ் அந்தணர் கூறியவாறு செய்துமுடிக்க, மற்றோர் உபாயத்தைக் கைக்கொண்டவராக, அனைவரோடும் திருப்புலீச்சுரமாகிய திருத்தலத்தினை அடைந்தார். பெருங்கூட்டத்தின் முன்பிருந்து, மனைவியோடும் குளத்தில் மூழ்க எண்ணினார். மூங்கில் தண்டின் இருமுனைகளையும் பற்றியவாறு மூழ்கிஎழ எத்தனித்தார். அதைக் கண்ட சிவயோகியார், யாம் கூறியவாறே, மனைவியைக் கை தீண்டி, மூழ்கி எழுக’ என்றார். இதைக் கேட்டு, ஆற்றாமை மேலும் மிகுந்து கலங்கிய நாயனார், தமக்கும், மனைவியாருக்கும் இடையேயான திருநீலகண்டத்து மீதான ஆணையை உலகவர் அறியக் கூறி, மூழ்கி எழுந்தார். முந்தைய சிவப்பொலிவிலும் அவர்தம் திருமேனி, மேலும் பொலிவுற்றுத் திகழக் கண்ட அனைவரும் திகைத்தனர். அதுகாறும், அவ்விடத்தில் நின்றிருந்த சிவயோகியார், வானில், விடைமேல் மாதொருபாகரெனத் திருக்காட்சியும் தந்தருளினார்.

                 ‘மனைவியார் தம்மைக் கொண்டு மறைச்சிவ யோகி யார்முன்

                  சினவிடைப் பாகர் மேவுந் திருப்புலீச் சுரத்து முன்னர்

                  நனைமலர்ச் சோலை வாவி நண்ணித்தம் முண்மை காப்பார்

                 புனைமணி வேணுத் தண்டி னிருதலை பிடித்துப் புக்கார்’           (திரு.நீல.புராணம்: 37)

    அடியார்க்கு எளிய, ‘நீலகண்டன்’     

    ‘நீலகண்டம் இருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான்’ (இரண்டாம் திருமுறை: 100:9) என்பது திருஞானசம்பந்தர் அருள்மொழி. திருநீலகண்டனாகிய பெருமான்,  மாலுக்கும், பிரமனுக்கும் அரியவன். ஆயினும், அடியாருக்கு என்றும் எளியவன்’ என்பதற்கு, நாயனார் அருள்பெற்ற திறம் சான்றாகும்.

    நாயனாரும் அவர்தம் மனைவியாரும், மேன்மேலும் சீர்பெருகு சிவத்தொண்டாற்ற அவர்களுக்குக் குறையாத இளமை அளித்தருளிய பெருமான் இன்றளவும், ‘இளமையாக்கினார்’ என்று போற்றப்பெறுகின்றார். மேலும், கணம்புல்லர், முடியால் விளக்கெரித்த இத்திருத்தலம், தில்லைத் திருத்தலத்துக்கு அருகிலேயே உள்ளது.

    முடிவுரை

                திருவைந்தெழுத்தும், திருச்சிற்றம்பலமுமாகிய பலவகைத் திருப்பெயர் மந்திரங்களும், நுண்ணறிவால் மட்டுமே அணுகப்பெறுகின்ற அருமையுடையவை. அவற்றுள்,  ‘திருநீலகண்டம்’ என்னும்  திருப்பெயர், உண்மைஅன்பின் உணர்வுநிலையால், எளிமையுறப் பற்றுகின்ற மந்திரமாகிறது. அத்திருப்பெயர், ‘மன்னுயிர்க்காக, யாரும் உண்ணஇயலாத அருநஞ்சை உண்டு காத்த பெருமானின் அருந்தியாகத்தை உணர்த்துவது. திருஞானசம்பந்தப் பெருமான்,  அதன் எளிமைத்தன்மையில் கொண்ட ஈடுபாட்டினால், ‘நீலகண்டனை நித்தல் நினைமினே’ (5:57:9) என்றார். அவ்வகையில் வாழ்ந்த நாயனார்,  ‘பொய் கடிந்து அறத்தின் வாழ்வார்’ என்றும், ‘பழுதிலார்’ என்றும் போற்றப்பெறுகின்றார். அவர்தம்இல்லறம்,  காமம் கடந்து,  தொண்டுநெறியாகச் செழித்ததற்கு, ‘திருநீலகண்டமே’ கருவியானது. அத்திருப்பெயர் அன்றாட வாழ்வின் அருமந்திரமானால், நம்மைத் தீவினைத் தீண்டப்பெறாத உயர்வில். கொடிய காமவலையினை நீத்து, திருவடியினைப் பற்றி உய்யலாம்.

    ஆய்வுத் துணைநூல்கள்

    1. பெரியபுராணம்-முதல் தொகுதி-சி.கே.சுப்ரமணியனார் உரைநூல்,

               பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,

    கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.

    பதிப்பு ஆண்டு: செப்டம்பர், 2017.

    1. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை),

    பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்),

    கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

    1. திருக்குறள், சிற்பி பாலசுப்பிரமணியனார் உரை,

    தாமரை பதிப்பகம், சென்னை.  இரண்டாம் பதிப்பு: அக்ட

    Share
  • முத்திக்கு வித்தாகும், திருவிடைக்கழித் திருப்புகழ்

    முனைவர் இரா. மதன் குமார்

    முன்னுரை

    அறுமுகச்சிவமாகிய திருமுருகப்பெருமானுக்கு, ‘மாத்ருகா புஷ்பமாலை’ என்னும் திருப்புகழ்ப் பாமாலை சூட்டிச் சிறந்தவர், ‘திருஅருணகிரிநாத சுவாமிகள்’.  ‘மாத்ருகா புஷ்பமாலை கோலப்ரவாள பாதத்தில் அணிவோனே’ என்பது அவர்தம் அருள்உவகைப் பெருவாக்கு. சுவாமிகள் பாடிப்பணிந்த, திருப்புகழ்த் திருத்தலங்கள் அனைத்திலும் முத்தித்தலமாகவும், திருவடித்தலமாகவும் விளங்குகின்ற சிறப்புடையது, திருவிடைக்கழித் திருத்தலமாகும். ‘எத்தலத்தவரும் மருவ முத்தியைத் தரு திருவிடைக்கழி’ என்று இத்திருத்தலத்தைச் சுவாமிகள் பாடியுள்ளார்.  அவ்வகையில், சுவாமிகள் திருவிடைக்கழியினை எட்டுத் திருப்பாடல்களால் போற்றியுள்ளார். அத்திருப்பாடல்களில், திருமுருகன் திருப்புகழும், சுவாமிகளின் பக்திப்பெருக்கும், மாந்தர்தம் அறியாமைக் குறைகளைத் தமது குறைகளாக ஏறிட்டுக்கொண்டுள்ள கருணையும், நமக்கென, அவர் பெருமானிடத்தில் வேண்டிய அருளியல் விண்ணப்பங்களும், தம்மையே ஞானகுருவாகத் தந்து நம்மை ஆட்கொள்கின்ற அருள்நிலையும் அமைந்துள்ள திறத்தை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    ஞானக் கடலாகிய திருவிடைக்கழி

    அறுபடைவீட்டுத் திருப்புகழில், ‘திருத்தணிகைத் திருப்புகழ்’ தனிச்சிறப்பு பெற்றுத் திகழ்கிறது.  சுவாமிகளின் மந்திரமொழிகளாகிய பல திருவருள் ஆணைகளும், அருளியல் விண்ணப்பங்களும் இத்திருத்தலத்துத் திருப்புகழில் இடம்பெற்றுள்ளன. அவ்வகையில், திருப்புகழை ஓதுவதன் அருட்பயனை விளக்குவதாக, ‘இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும்’ (திருப்புகழ்:242) எனச் சுவாமிகள் உறுதிபடச் சாற்றியுள்ளார்.  அவர் உரைத்தவகையில், திருப்புகழை உண்மையுடன் ஓதிப் பயன்பெறுவதற்கு, உற்ற குருநாதரின் அருள்துணை நாளும் இன்றியமையாததாகும். அப்பெருநோக்கத்தின் பொருட்டு, நாம் பற்றி உய்யவேண்டிய பெருமானாக, சுவாமிகள் நமக்கு, திருவிடைக்கழிப் பெருமானைக் காட்டியருளியுள்ளார்.  இத்தகைய அருள்சிறப்பினை உணர்ந்தே ஒன்பதாம் திருமுறை அருளாளர்களில் ஒருவராகிய சேந்தனாரும் மிகுந்த அருள்விருப்புடன், திருவிடைக்கழிப் பெருமானைப் போற்றிப் பணிந்துள்ளார்.  அறியாமை மிக்க ஆருயிர்கள் அனைத்துக்கும் முத்தி தரவல்ல வித்தகத் துறையோனாக, ஞானக்கடலாகத் திருவிடைக்கழிப் பெருமான் விளங்கவல்ல அருளனுபவத்தைச் சுவாமிகளும்,

    “வித்தகத் துறையோனே
    தருமருவு எத்தலத்தவரும் மருவ முத்தியைத்
    தருதிருவிடைக்கழிப்… பெருமாளே” (திருப்புகழ்: 795) எனக் குறித்தருளியுள்ளார். 

    அடியும் – நடுவும் – முடியும்:

    திருப்புகழ்த் திருத்தலங்களில், ‘அறுபடைவீடுகள்’ என்னும் அருள்தொடர்புத் தலவரிசை  போல விளங்குபவை, திருவிடைக்கழியும், சிறுவாபுரியும், திருப்போரூருமாகும். திருமுருகப்பெருமானின் திருவடி முதலாக, திருமுடி ஈறாக அமைந்தவையாக இத்திருத்தலங்கள் போற்றப்பெறுகின்றன. திருக்கடவூருக்கு அருகே அமைந்துள்ள இத் திருத்தலத்தின் கருவறையில், சிவலிங்கத் திருமேனிக்கு முன்பாக, திருமுருகன் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது, ‘தாமே அறுமுகச் சிவம்’ என்பதனை நமக்கு உணர்த்தவே எனலாம்.

    “கொந்துவார் குரவு அடியினும் அடியவர்
    சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
    கொண்ட வேதநன் முடியினும் மருவிய குருநாதா”  (திருப்புகழ்:268) இத்திருத்தொடர்களில், ‘கொந்துவார் குரவுஅடி’ என்பது, ‘தேன் சிந்துகின்ற திருக்குரா மரத்தின் அடி’ என்பதாகிய திருவிடைக்கழியைக் குறிக்கும். ‘திருவிடைக்கழிப் பெருமானுக்கு, அடியவர்களின் சிந்தையெனும் தாமரையே இருப்பிடம்’ என்பதனை உணர்த்த, ‘சிந்தை வாரிஜ நடுவினும்’ எனக் குறித்தருளியுள்ளார். பெருமான், அடியாரின் சிந்தையில் இடம்கொண்டு, மெய்ஞ்ஞானம் அருளி, ‘வேதப்பொருளாகத் தானே விளங்கவல்ல பெருந்திறத்தையும் உணர்த்தியருள்வான்’. அதனையும் அறிவுறுத்தவேண்டி, ‘வேதநன் முடியினும் மருவிய குருநாதா’ எனக் குறித்துள்ளார். இவ்வாறு,   திருவிடைக்கழிப் பெருமானின் திருவடிகளில் சரண்புகுந்தால், அவன் நமது உள்ளத்தாமரையில் நீக்கமற நிறைந்திருந்து, வேதப்பொருளாகிய ஓங்காரமாகவும் தானே விளங்குகின்ற அருந்திறத்தையும் உணர்த்தியருள்வான்’ என்பது சுவாமிகளின் அருளனுபவத் திருவாக்கு எனலாம்.

    குறை உயிர்க்கும் குருவாகின்ற சுவாமிகள்

    உயிர்களுக்கு, மெய்ஞ்ஞானப்பேற்றினை பெருமானே குறைவின்றி வழங்கியருள்கின்றான். அதற்கேற்ப ஞானகுரு வாய்ப்பதும் உயிரின் பரிபக்குவத்துக்கு ஏற்பவே நிகழ்கிறது.  ‘பிரணவப்பொருளாகிய பெருமானே ஊழிகள்தோறும் திருவிடைக்கழியில் குருவாக வீற்றிருக்கின்றான். பல்லூழிக் காலங்களிலும் தோன்றுகின்ற அரனும், அரியும், பிரமர்களும், தமது முந்தை வினைப்பயனாகிய பூசனைப்பேற்றினால்,  திருவிடைக்கழிப் பெருமானைக் குருவாகப் பெற்றுச் சிறக்கின்றனர். பெருமானும் அவர்களுக்கு உவகையுடன், பிரணவப்பொருளாகிய தனது பரத்துவத்தை உணர்த்தியருள்கின்றான். அக்கருணைகூர் அறுமுகனே, பாண்டியநாட்டில் சைவ நீதியை நிலைநாட்ட, திருஞானசம்பந்தரெனவும் எழுந்தருளினான்’ என்று சுவாமிகள் பாடியுள்ளார்.

    “அலை நெருப்புஎழ வடவரை பொடிபடச் சமணர்கள் குலம்
    அணி கழுப்பெற நடவிய … மயில்வீர
    அரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபடப் பிரியமும்வர
    அவரவர்க்கு ஒரு பொருள் புகல் … பெரியோனே” (திருப்புகழ்: 799) எனச் சுவாமிகள், மேற்கண்ட திருப்புகழில் குறித்தருளியுள்ளவாறு,  ஞானகுருநாதனாகிய திருவிடைக்கழிப்  பெருமானின் பரத்துவத்தை உணர, சுவாமிகளின் கருணையுள்ளம் வழிகாட்டுகிறது. 

    குருவாகி வந்த பெருமான்

     பெற்ற மனிதப் பிறப்புக்குரிய பேரறிவின் பயனாகப் பதிப்பொருளை உணர இயலாத நமது அறியாமையினைச் சுவாமிகள்,

    “அனல்அப்பு அரிபுக்க குணத்ரயம் வைத்த
    அடர்பொய்க் குருதிக் … குடில்பேணா
    அவலக் கவலைச் சவலைக் கலைகற்று
    அதனிற் பொருள்சற்று … அறியாதே”   (திருப்புகழ்: 792) எனக் கலங்கிப் பாடியுள்ளார்.

     பல அறிவு நூல்களைக் கணக்கில்லாமல் கற்றும், அதன் மெய்ப்பொருளை அறிய முயலாமல், குறைஅறிவால் துயரடைவதே மக்களின் ஞானத்தேடலாக முடிகிறது. இத்தகைய அறியாமையாகிய அவலக்குழியிலிருந்து மீள்வதற்கு வகை தெரியாமல், அறிவில் சிறந்தோர் எனச் சிலரை நாம் நாடுகிறோம். அவர்கள், பதிஞானத்தால் பக்குவமுற்றவர்களாக இல்லை. வீணே பழங்கொள்கைகளைப் பிதற்றுவதன்றி, எள்முனை அளவு ஞானத்தையும் பெற்றுத் தருவதில்லை. அவர்களது  வழிகாட்டுதலால், அறிவுக்கண் திறக்கும் என்ற நம்பிக்கையும் என்றும் மெய்யாவதில்லை. அவர்களது பழங்கொள்கைப் பிதற்றலால், அறிவு துருப்புபோல் இளைத்து, மேன்மேலும் துன்புறவே நேருகிறது.

    “படுகுழி புக்கு இனி தேறும் வழிதடவித் தெரியாது
    பழமை பிதற்றிடுலொக … முழுமூடர்
    உழலும் விருப்புடன் ஓது பாசவலைக் கலைதேடி
    யொரு பயனைத் தெளியாது”        (திருப்புகழ்: 796)  எனத் தெளிவில்லாமல், ஞானகுருவைத் தேடிக் கலங்குகின்ற நமக்கு, தாமே ஞானகுருவாகி இரங்கியருள்பவராகத் திருவிடைக்கழித் திருப்புகழைச் சுவாமிகள் தந்துள்ளார்.

    குருவாகி வந்தருள்கின்றார்:

    உயிரின் பரிபக்குவம், வினைவலிமையினை மாய்க்கிறது. ‘பெருமானே பரம்பொருள்’ என்று உணர்த்தவல்ல நற்குருவைக் காட்டியருளி, மெய்ஞ்ஞானப்பேற்றுக்கும் ஆட்படுத்துகிறது. வினைவலிமையால், நம் அறிவானது, நற்குருவைக் கண்டடைகின்ற பேரறிவாக விரிவடைவதில்லை. ‘தம்மானை அறியாத சாதியார் உளரே’ என்று பாடிய சுந்தரர்பெருமானின் திருவாக்கு, நமக்கு மிகவும் பொருத்தமுடையதாகும். அன்று அவர், சித்தவடமடத்தில் தம்மைத் தாமே நொந்தழுத நிலையில், திருவருளே அவருக்குக் கண்ணாக இருந்து சிவத்தைக் காட்டியருளியது. அதுபோன்றே, ஊனக்கண்கொண்டு, சிற்றறிவால் சிவத்தை உணரஇயலாத நம்மைப் போன்றவர்களுக்கும் குருவருளே கண்ணாக விளங்கிக் காட்டியருளவேண்டும். அத்தகைய அருள்நோக்கத்துடன் சுவாமிகளே நமக்கு ஞானகுருவாக இரங்கியருள்கின்ற வகையில், நமது அறியாமைக் குற்றங்களையும் தன்னுடையதாக ஏறிட்டுக்கொண்டு, பெருமானிடத்தில் பல அருளியல் விண்ணப்பங்களைப் பணித்துள்ளார்.

    நற்பதம் காட்டுகின்றார்

    நமது ஐம்புலச் சேட்டைகள் நீங்கி, சிந்தையாலும், சொல்லாலும், செயலாலும், பெருமானது திருப்புகழில் ஒன்றுகின்ற ஆன்மபலத்தினைத் திருவிடைக்கழிப் பெருமானிடத்தில் வேண்டுகின்றார்.

    “உனகமலப் பதநாடி உருகி உளத்து அமுதூற
    உனது திருப்புகழ் ஓத … அருள்வாயே”          (மேலது பாடல்)

    என்பது அவர்தம் விண்ணப்பம். பதிஞானமாகிய பேரறிவு வாய்த்தாலும், நமது ஆணவமல வாசனை, நாம் உணர்ந்த இறைபொருளை, எடுத்த மொழியாலும், ஏதுக்களாலும் சோதித்தறிய முற்படுகின்ற அறியாமைக்கே தலைப்படும். ஞானப்பொருளாகிய பெருமான், தன்னை உணர்ந்தாரின் கல்மனத்தையும் கரையச் செய்கின்ற அருளே நிலையாக விளங்குபவன். அவனை அன்புக்கண்கொண்டு பார்ப்பவர்தம் உள்ளத்தை உருக்கி, அதில் ஊற்றென எழுகின்ற அருள்வெள்ளமென விளங்குபவன். எனவே, நமது ஞானத்தேடலின் படிநிலையில், அறிவால் அல்லாமல், அன்பால் பெருமானைத் தேடுகின்ற நெறியைச் சுவாமிகள் மேற்கண்ட திருப்புகழ் பாடலில் அறிவுறுத்தியுள்ளார்.

    குற்றமில்லாத பேரறிவுக்கு வழிகாட்டல்:

    சுவாமிகளையே ஞானகுருவாகப் பெறினும், நமது முந்தை வல்வினை அவரால் உணர்த்தப்பெறுகின்ற இறைபொருளை முழுமையுற இயலாதவண்ணம், அறியாமையாகிய மறைப்பினையே மேன்மேலும் விளைவிக்கும். இதையே சான்றோர், ‘மலமறைப்பு’ என வழங்குவர். மலமறைப்பாகிய அறியாமையை நீங்கி, பெருமானின் திருவடிகளில் சரண்புகுவதாகிய ஞானத்தைச் சுவாமிகள், ‘புகரில் புத்தி’ (குற்றமில்லாத பேரறிவு) எனக் குறிக்கின்றார்.

    குற்றமில்லாத நிறைஅறிவு, பெருமானை உணர்ந்து, அவனை அணுப்பொழுது அகலாது பற்றியிருக்கச் செய்யும். அவ்வறிவு வாய்க்கச் செய்தலும், அதன்வழி அடியவரை ஆட்கொள்ளுதலும், பெருமானின் அறக்கருணை எனப்படும். அதற்கு, ‘வள்ளி சன்மார்க்கம்’ குறியீடாகும். அடாதவற்றைச் செய்தொழுகுவோரையும் பெருமான், அடியவராக ஆட்கொள்ளத் தவறுவதில்லை. அவர்களையும் பெருமான், மறக்கருணையால் ஆட்கொள்வதனைத் திருவிடைக்கழித் திருப்புகழில் சுவாமிகள் அருளிச்செய்துள்ளார். சூரர்கள், நிகரில்லாத அனைத்து வகைப் பெருவாழ்வையும் பெற்றிருந்தனர். ஆயினும், அவர்கள்தம் அறிவு, பெருமானை உணர்கின்ற பேரறிவாக விளங்கவில்லை. அத்தகைய அவலம், நம்மனோர்க்கு நிகழாத வண்ணம், குற்றமில்லாத பேரறிவை வாய்க்கச் செய்வதாகிய, ‘வள்ளி சன்மார்க்கத்தையும், சூரன் அருள்பெற்றதையும் திருவிடைக்கழித் திருப்புகழில் உரைக்கின்றார்.

    வள்ளி சன்மார்க்கம்:

    திருவிடைக்கழித் திருப்புகழில், வள்ளியம்மையைச் சுவாமிகள், ‘குறத்திரு’ எனக் குறித்தலால், ‘அவள் உள்ளமும் அழகியவள்’ என்பது பெறப்படும். பெரும்பெயர் முருகன் என்னும் அழகனும், அடியாரின் உள்ளத்தாமரையினையே தனக்கு இடமாகக் கொள்கின்றான். இதனை உணர்த்தவே சுவாமிகள், திருவிடைக்கழிப் பெருமான், ‘அடியார்தம் சிந்தை வாரிஜ நடுவிலும் குடிகொண்டவன்’ என்றருளிச் செய்தார். இதனைக் குறித்தே மணிவாசகரும், ‘சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை’ என்றருளினார். வேடுவர்தம் குடிவாழ்க்கை வாய்த்தபோதிலும், வள்ளிக்குறத்தி, தன்னை உணர்ந்தவளாக, பெருமானை மட்டுமே தனது சித்தத்துள் நிறைத்தவளாக, நிறைதவத்தினை மேற்கொண்டாள். அவளது பக்குவத்தினை நோக்கியே பெருமான், தானே இரங்கி அவளை நாடித் தினைப்புனத்திற்கு வந்தான்.

    “தினை வித்தின நற்புன மறத்தியை
    தழுவு பொற்புயத்…திருமார்பா’            (திருப்புகழ்: 792)

    என்பது, திருவிடைக்கழித் திருப்புகழ். இங்கு,  ‘புனம்’ என்பது, விளைச்சல் தருகின்ற வயல்வெளியைக் குறிக்கும். மானுடராக உரு தாங்குகின்ற அனைவர்க்கும், அவர்தம் உள்ளமே பக்திப்பயிர் வளர்க்கின்ற நல்வயலாகவும், உடம்பே அதைக் காக்கின்ற வேலியாகவும் அமைகின்றன. பெருமானைப் பெற்றுய்ய வேண்டும் என்கின்ற மெய்யுணர்வே, ஞானப்பயிருக்குரிய உரமாகவும் அமைகின்றது. வள்ளிக்குறத்தி தன் உள்ளமாகிய வயல்வெளியில், அன்பென்னும் பக்திப்பயிரினை நாளும் தழைத்து வளரச்செய்தவள். மாறாக, ‘ஆணவம்’ என்கின்ற நச்சுமரமாக நாளும் ஓங்கி வளர்ந்தவன், சூரன். ‘தாம் வளர்த்ததோர் நச்சு மரமாயினும் கொல்லார்’ என்பதுபோல, பெருமானும் சூரனுக்கு இரங்கியருளினான். சூரனைத் தனது திருவடியில் பணியச்செய்த பெருமான், வள்ளிக்குறத்தியின் உயர்ந்த அன்பின் பக்குவத்தை  நமக்கு உணர்த்தவேண்டி, அவளது திருப்பாதங்களில் தான் பணிந்ததாக நயமுறப் பாடியுள்ளார்.  “தினைவேடர் காவல் தங்கு மலைகாடெலாம் உழன்று, சிறுபேதை கால்பணிந்த குமரேசா’ என்பது திருப்புகழ் (பொதுப்பாடல் வரிசை-மனநூறு கோடி). 

    வள்ளியாகி, பேரின்பக்காதல்:

    வள்ளி சன்மார்க்கத்தைப் பேரின்பக் காதலாகக் குறிக்கவேண்டிச் சுவாமிகள், தானே வள்ளிக்குறத்தியின் நிலையினை ஏற்றுப் பாடியுள்ளார். திருவிடைக்கழிப் பெருமானும், தானும் மட்டுமே இருந்து  துய்ப்பதாகிய பேரின்பக் காதலைக் காட்டி, உலகியலில் நமது சிற்றின்பபோகத்தை மறக்கச்செய்கின்றார். வள்ளிக்குறத்தி,  திருவிடைக்கழிப் பெருமானிடத்தில் மாலை வேண்டி ஊடல் கொள்கின்றாள்.

    ‘பெருமானே!, உனது அடியவரின் துயரினை நீக்குவதற்காகவே, வீரவேல் தாங்கி, மயில் மீதிலேறி,  ஓடோடி வருபவன் நீ; உனது மென்மையான உள்ளத்தின் குறியீடாகவே, நீயும் மென்மையான கடம்ப மலர் மாலையினை மிக விரும்பிச்  சூடிக் களிக்கின்றாய். கடம்பமாலை சூடி, குராமர நிழலில் உறைகின்ற நீயே, எனக்குப் பேரின்ப மையலை ஊட்டினாய். நோய் தந்த நீயே அந்நோய்க்கு மருந்தும் ஆவாய். இதனை அறியாத என் பெற்றோரும், உற்றோரும் மற்றோரும் உன்னைப் பலவாறு நொந்துரைப்பதனை கேட்டு என்னால் பொறுக்க இயலவில்லை. அதனால், எனது பேரின்பக்காதல் நோயினைத் தீர்க்கவேண்டி, நீயே மயில்மீது உடன் வந்து அருளுவதே முறையாகும்;  ஆயினும், எனது வல்வினையால் நீ எனக்கு அருளக் காலம் தாழ்கின்றவேளையில், நீ சூடிக் களைந்த கடம்பமலர் மாலையினையாவது தந்து என்னைக் காக்கவேண்டும்’  என்று சுவாமிகள்,  தலைவி நிலையிலிருந்து பாடியுள்ளார்.

    “மருக்கு லாவிய மலரணை … கொதியாதே
    வளர்த்த தாய்தமர் வசையது… மொழியாதே
    கருக்கு லாவிய அயலவர் …  பழியாதே
    கடப்ப மாலையை இனிவர … விடவேணும்
    தருக்கு லாவிய கொடியிடை … மணவாளா
    சமர்த்தனே மணிமரகத … மயில்வீரா
    திருக்கு ராவடி நிழல்தனில் … உறைவோனே
    திருக்கைவேல் வடிவழகிய … பெருமாளே” (திருப்புகழ்: 798)

    மேற்கண்ட பாடல், வள்ளிக்குறத்தி, திருவிடைக்கழிப் பெருமானைப் பெற்று இன்புறுவதற்கு, ‘கடம்ப மாலை’ கருவியாக வேண்டுவதைக் குறிக்கின்றது.   வள்ளிக்குறத்தியின் வகையில் நின்று நாமும் திருவிடைக்கழிப் பெருமானிடத்தில்,  என்றும் அகலாத அருள்காதல் கொள்ளவேண்டியே, சுவாமிகள் மேழும் ஏழு திருப்புகழ்ப் பாடல்களை இத்திருத்தலத்துக்கு அருளியுள்ளார். அவை நமது அன்றாட வாழ்வியல் மந்திரங்களானால், உலகியலாகிய சிற்றின்பநாட்டமும்,  அண்டங்களையும் கடந்த பேரளவுடைய, சொல்லுக்கும் அடங்காத நம் சிற்றின்பச் சூரத்தனங்களும் நம் சிற்றறிவுக்கு விளங்கும். நமது சூரத்தனங்கள் அகன்று நன்னிலையினை வாய்க்கச்செய்யவே, ‘ஞானச்சூரியனாகிய பெருமான், சூரன் முதலானோரின் அறியாமைச் செயல்களை, ஞானவேல் கொண்டு அடர்த்தருளிய திறத்தையும் சுவாமிகள் குறித்துள்ளார். 

    ஞானவள்ளியும் அகந்தைச் சூரனும்

    வள்ளிக்குறத்தியும் நம்மைப் போன்றே, உடம்பெடுத்து மண்ணுலகில் வாழ்ந்தவளே. அவள், உள்ளமாகிய வயல்வெளியில், குறிஞ்சிக் கிழவனுக்கு உகப்பாகிய தினைப்பயிரை விளைவித்தவள். ஐம்புல வேலியால் அதனை உரியவாறு காப்பதும், அதனைப் பெருமானுக்குப் பணிப்பதும், அவளது பெருநோக்கமாக  இருந்தது. அவள், சித்தத்துள் குறிஞ்சிக்கிழவனையே நிறைத்திருந்ததால், அவளது செயல் அனைத்தும், பெருமானுக்கு உரியவையாகவே அமைந்தன. அவை பதி புண்ணியங்களாக விளைந்து, அவள் விரும்பியவாறே, பெருமானைப் பெறச்செய்தன. குறவரால் வளர்க்கப்பட்ட வள்ளிக்குறத்தி, தனது வாழ்வின் பெருநோக்கத்தைத் தெளிவுற அறிந்திருந்தமைக்கு, அவளது முந்தை வினைப்பயனே துணையாக விளங்கியது.

    நாமும், நமது முந்தை வினைப்பயனின் துணையினாலேயே பெறுதற்கு அரிய பிறப்பாகிய மனிதப்பிறப்பினைப் பெற இயன்றது’ என்பதனை உணர இயலவில்லை. இப்பிறப்பின் பெரும்பயன், ‘செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே’ என்ற மெய்யுணர்வுக்குத் தலைப்படுவதுமில்லை. நம்மிடமுள்ள அறியாமையின் குறியீடாகவே சூரன் வாழ்ந்திருந்தான். வெற்றிப் பெருவாழ்வு வாழ்கின்ற பேறு வாய்த்திருந்தபோதிலும், அதன் பயன், பிறப்பினை வெற்றி கொள்வதாகிய முத்திப்பேற்றினை விரைவில் பெற்றுய்வதற்கு அவனது நல்லறிவு துணைசெய்யவில்லை. அதனாலேயே, தாயினும் சாலப்பரிகின்ற பெருமான் அவனை ஆட்கொள்வதற்கு, பதினெட்டு ஆண்டுகள் போரிட்டார். அங்கு, சூரனின் ஆணவப்போர் மாய்ந்து, பெருமானின் அருள்போரே வெற்றிகண்டது.

    வள்ளிக்குறத்தியைப் போன்று, சூரனும், மனிதனாக உடல்தாங்கிய போதும், உள்ளத்தில் பெருமானைக் குடியேற்ற அவன்பால் அன்பென்னும் அறச்சிந்தனைச் சிறிதும் இல்லை. அதனாலேயே அவனால், ‘அறுமுகச்சிவமே தன்னை ஆட்கொள்ள வந்துள்ளது’ என்பதனை உணர இயலவில்லை. அவனது அறிவளவிற்கு எட்டுகின்ற வகையில், மறக்கருணையால் பெருமானும் அவனை ஆட்கொண்டருளினார். அப்பெருமானே, திருவிடைக்கழியிலும் எழுந்தருளியுள்ளதாகச் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

    “நெருக்கியே வரும் அவுணர்கள் குலமற
    உறுக்கியே மயில் முதுகினில் விசைகொடு
    நிலத்திலே சமர்பொருதவர் உயிர்பலி … கொளும்வேலா’ (திருப்புகழ்: 797)

    என்று பாடி, சூரனைப் போன்று அறியாமை மயக்கில் ஆட்படாமைக்கு, பெருமானது திருவடிகளில் நம்மைச் சுவாமிகள் சரண்புகுத்துகின்றார்.

    “முடுக்கியே உனது இருகழல் மலர்தொழ … அருள்தாராய்”     (மேலது பாடல்)

    மேற்கண்ட தொடரில், ‘முடுக்கி’ என்பது விரைவாக எனப் பொருள்படும். சூரனுக்கருள நீண்ட பதினெட்டாண்டுகள் அமைந்ததைப் போன்று, இம்மண்ணுயிர்களுக்கு அருளவும் மிக நீண்ட காலம் அமைவதே அவ்வவ் உயிர்களின் விதியாயினும், அதனை மதியால் வெல்கின்ற பேறாக, ‘உடனே உனது திருவடியைப் பணிகின்ற பேற்றினை வழங்கியருள்க’ என்று பெருமானிடத்தில் நமக்காகச் சுவாமிகள் பரிந்துரைக்கின்றார்.

    அறஉள்ளம் வேண்டும் எனல்:

    பெருமானை உணரத்தக்க அன்புக்கு, அறமே அடிப்படை. அதனால், அடியாரின் அறவாழ்க்கையையே, பக்திவாழ்வியலாகச் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். திருவிடைக்கழிப் பெருமானின் திருவடித்தாமரைகளை வேண்டுகின்ற அடியார்க்கு, பிறர் துயர் தீர்த்தலாகிய அன்புள்ளமே அடிப்படைத் தேவையாகும். ‘தமக்குப் பெருமான், பெறற்கரிய திருவருளைத் தந்தருளவேண்டும்’ என்று சிந்திப்போர், தம்மால் இயன்றதைப் பிறருக்குத் தருகின்ற அன்புள்ளம் கொண்டவராக இருத்தலைச் சுவாமிகள் பிற தலங்களின் திருப்புகழிலும் வலியுறுத்தியுள்ளார்.

    தம் பொருளைப் பிறருக்கு ஈயாத கீழோரின் அவலத்தைத் தம்பால் ஏறிட்டுக்கொண்டு, திருவிடைக்கழித் திருப்புகழில் சுவாமிகள் பாடியுள்ளார். நெறியல்லாத நெறிகளில் பொருளைத்தேடி, இன்பங்களில் தலையாயது பெண்ணின்பமே என நாடி, ஓடியோடி இளைக்கின்ற அறியாமை நீங்கி அறவாழ்வு வாழ்வதற்குத் துணையாகத் திருவருளை வேண்டுகின்றார்.

    “இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும்

    அற்ற எனக்கு”…………………………………………………
    …………………….ப்ரபுத்துவம் உற்று…………………………….
    ……சளப்பம் இடும் இப்பவக் கடலைக் கடக்க இனிக்
    குறித்து இரு பொன்கழல் புணையைத் தருவாயே”                 (திருப்புகழ்: 793)

    என்ற தொடர்களில், உயர்வில்லாத வகையில் உலகியலிலேயே உழன்று, தாமே தனித்தலைவர் என்ற செருக்குடன் வாழ்ந்து, இதுகாறும் இப்பிறப்பில்  துன்பத்தையே  சேர்த்துள்ளோம்’ என்று கழிவிரக்கம் கொள்கின்ற மனிதர்களின் அறியாமையினை, ‘ப்ரபுத்துவம் உற்று, சளப்பம் இடும் இப்பவக் கடல்’ என்று குறிக்கின்றார். ‘துன்பம் தருவதாகிய உடம்பைப் பேணி, நாளும் அதனை வளர்ப்பதற்கே தீனியிட்டு, உடல் கொண்ட நோக்கத்தை உணர்கின்ற அறிவற்று, நாயினும் கீழாக வாழ்கின்ற வாழ்க்கை’ என மனித வாழ்க்கையின் அவலத்தைச் சுட்டுகின்றார்.

    “பசிபடு நிணச்சடக் … குடில் பேணும்
    உடலது பொறுத்த அறக்கடை பெறு பிறப்பினுக்கு
    உணர்வுடைய சித்தமற்று … அடிநாயேன்
    உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து
    உனது தமர் ஒக்க வைத்து … அருள்வாயே’     (திருப்புகழ்: 795)

    பிறப்பின் பெருநோக்கத்தினை உணராத அறியாமை, பகுத்தறிவுபெற்ற மனிதப் பிறப்புக்கு அறமன்று; ஆதலால், அத்தகைய பேரறிவுக்குத் தலைப்படுவதற்குரிய சூழலாக, அடியார்களுடன் இருத்தலாகிய பெரும்பேற்றினைப் பெற்றுய்ய சுவாமிகள் வழிகாட்டுகின்றார்.

    முடிவுரை

    திருப்புகழை வாழ்வியல் நெறியாக உடையவர்தம், திருவடிகளைத் தாம் வணங்குவதாகச்சுவாமிகள் குறித்துள்ளார். ‘உனைப் பலநாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார்தம் குளிமேவி உணர்த்திய போதம் தனைப் பிரியாது, ஒண்பொலச் சரணானும் தொழுவேனோ (திருப்புகழ்: 249)’ எனப் பாடி, திருப்புகழை ஓதுகின்ற குருநாதரின் அறவுரைக்குத் தம்மை ஆற்றுப்படுத்துமாறு முருகப்பெருமானிடம் பணிகின்றார். மேற்கண்ட இத்தொடரானது, பிறப்பினைக் கடந்த சுவாமிகள் நம்மைப்போன்ற ஆருயிர்களின்பால் கொண்ட கருணையால் விளைந்ததாகும். அக்கருணையின் வெளிப்பாடே,

    “புகரில் புத்தியுற்று அரசு பெற்றுறப்
    பொலியும் அற்புதப் … பெருவாழ்வும்
    புலன் அகற்றிடப் பல விதத்தினைப்
    புகழ் பலத்தினைத் … தரவேணும்”         (திருப்புகழ்: 794)

    என்றமைந்த திருவிடைக்கழித் திருப்புகழாகும். இத்திருப்பாடல், ஐம்புலச் சேட்டைகள் மாயவும், யாவர்க்கும் தலைவராகி, கற்பகப் பெருவாழ்வு வாய்க்கவும், பதிஞானம் நிலைக்கவும் ஓதவேண்டியதாகும். இத் திருத்தலத்துக்குரிய பிற திருப்பாடல்களும் நமது வாழ்வியல் நெறியானால், சொல்லுக்கும் அடங்காத நம் சூரத்தனங்கள் மாயும். வள்ளிக்குறத்தி கொண்ட அயராஅன்பு நமக்கும் வாய்க்கும். அவ்உயர்ப்பேற்றினால், திருக்குராவடியில் உறைகின்ற பெருமானின் திருத்தாள் நிழலுற்று உய்யலாம்.

    (மேற்கோள் பாடல் எண்கள், WWW.KAUMARAM.ORG இணையத்தில் உள்ளபடி குறிக்கப்பட்டுள்ளன.)

    ஆய்வுத் துணைநூல்களும் இணையமும்: 

    1.ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மாலை,
    அடியார் திருக்கூட்ட இறைபணி மன்றம்., சென்னை.
    கிரி ட்ரேடிங் ஏஜென்ஸி, சென்னை. 15-ஆம் பதிப்பு: ஏப்ரல் – 2014.

    2. இணையம்: WWW.KAUMARAM.ORG

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,
    கோயம்புத்தூர் – 21.

     

     

    Share
  • கலியன் ஒலிமாலை விழா

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை

    இறைவன், பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம் மற்றும் அர்ச்சை ஆகிய நிலைகளில் அருள்கின்றான். இவற்றுள், அர்ச்சை என்பது, திவ்யதேசங்களில் பெருமாள், உருவத்திருமேனி கொண்டு விளங்கியருள்கின்ற அருள்நிலையாகும். பிற நிலைகளைக் காட்டிலும், அர்ச்சையில், பெருமாளின் எளிமையும், அடியார்களின் பக்தியாகிய பெருந்திறமும் மிகச்சிறப்பாக வெளிப்படும். அதனாலேயே, திருமங்கையாழ்வார், பெருமாளின் அர்ச்சைநிலையினை மிகவும் விரும்பி, திவ்யதேசங்கள்தொறும் சென்றார்; அங்கு, பெருமாளின் திருஉருவினைக் கண்ணாரக் கண்டு, வாயாரப் பாடி, மனமார, அவனது திருவருளைப்பெற்று இன்புற்றார்.

    அன்று ஆழ்வார், திவ்யதேசங்கள்தொறும் சென்று பாடிப்பெற்ற பேரின்ப அனுபத்தை, இன்றளவும் நாம் பெற்றுய்யக் கருவியாக, ‘கலியன் ஒலிமாலை விழா’ என்னும்  ‘திருநாங்கூர் கருட சேவை விழா’ அமைகிறது. திருநாங்கூர் மணிமாடக்கோயில் உள்ளிட்ட,  பதினொரு திவ்யதேசத் திருப்பாசுரங்களையும் மையமாகக்கொண்டு அமைகின்ற இப்பெருவிழாவின் அருள்நிகழ்வுகள் குறித்தும், அத்திருப்பாசுரங்கள் வழியே, திவ்யதேசங்களின் ஏற்றம் குறித்தும் இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    திருநகரியிலிருந்து புறப்பாடு

    தை அமாவாசை நாளின் முதல்நாள் இரவில், திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், குமுதவல்லியாரோடு புறப்பட்டுத் தான் பிறந்த திருத்தலமாகிய திருக்குறையலூரினை அடைகின்றார். ஐந்து நரசிம்மத் திருத்தலங்களுள், உக்கிரநரசிம்மத் தலமாகிய திருக்குறையலூரில் வீற்றிருக்கின்ற பெருமாளைச் சிங்கவேள்குன்றத்துக்குரிய பத்துத் திருப்பாடல்களாலும் ஆழ்வார் போற்றிப்பணிகின்றார்.

    அதன் பின்னர், திருக்குறையலூருக்கு அருகே அமைந்துள்ள மங்கைமடமாகிய திருத்தலத்தை அடைகின்றார். ஆழ்வார், குமுதவல்லியாரின் திருச்சொல்லுக்கு இணங்கி, அன்றாடம் அடியவரின் பசிப்பிணிபோக்கிய நிலையமாதலால் இவ்விடம் ‘மங்கைமடம்’ என்கின்ற திருப்பெயரில் விளங்குகிறது. மங்கைமடத்திலுள்ள, வீரநரசிம்மத் திருத்தலத்தினையும், சிங்கவேள்குன்றத்துக்கு உரிய திருப்பாடல்களால் ஆழ்வார் போற்றிமகிழ்கின்றார். பின்னர், மங்கைமடத்திலிருந்து புறப்படுகின்ற ஆழ்வார், திருக்காவளம்பாடியை அடைகின்றார்.

    திருக்காவளம்பாடிக் கண்ணனைப் போற்றுகின்றார்

    சத்தியபாமாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்திரனின் சோலையிலிருந்து பாரிசாத மலரினைக் கொணர்ந்தளித்த பெருமாளே, திருக்காவளம் பாடியில் உறைகின்றான் என்கின்றார் திருமங்கையாழ்வார்.

    பாரிசாத மலருக்காக, இந்திரனோடு போரிட்ட கண்ணன், தான் உறைவதற்கு இயைந்த காவளத்தை (மலர்ப்பொழிலை) நாடி மண்ணுலகுக்கு வந்தான். கண்ணன் தனக்கு உவந்த காவளம் இடம்கொண்டிருந்த இத் திருத்தலத்திலேயே தங்கிவிட்டான். ஆதலால், இத் திருத்தலமானது, ‘ திருக்காவளம்பாடி’ எனப் போற்றப்பெறுகிறது.

    “ ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று
     காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
     பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை
     காவளம் பாடிமேய கண்ணனே! களைகண் நீயே ” (பெரிய திருமொழி, 4:6:8)     எனத் திருமங்கையாழ்வார் காவளம்பாடிக் கண்ணனைப் போற்றியுள்ளார். 

    மடவரல்மங்கை உறைகின்ற திருத்தலம்
    இத் திருத்தலத்துத் தாயாரை ஆழ்வார், ‘மடவரல்மங்கை’ எனப் போற்றும்முகமாக,

    “படஅரவு உச்சி தன்மேல் பாய்ந்து நடங்கள் செய்து
     மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தி னானே ” (மேலது, 4:6:5)

    எனப் பாடியுள்ளார். அதன்பொருட்டு, இத் திருத்தலத்தில் தாயாருக்கு ‘மடவரல்மங்கை’ என்கின்ற திருப்பெயரும் வழங்கிவருகிறது. திருக்காவளம்பாடியில், ‘தா அளந்து உலகமுற்றும்’  என்று தொடங்குகின்ற திருப்பதிகச் சொல்மாலையினை இறைவனுக்குச் சூட்டி வழிபட்ட பின்னர், ஆழ்வார், இங்கிருந்து புறப்பட்டுத் திருமணிக்கூடத்தை அடைகின்றார்.

    திருமணிக்கூடத்தில் திருமங்கையாழ்வார்

    திருமணிக்கூடத்தின் வரதராசப்பெருமாளை ஆழ்வார்,

    தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத்து அருளிமன்னு
    காம்புடைக் குன்றம் ஏந்திக் கடுமழை காத்த எந்தை
    பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன்புரண்ட எங்கும்
    தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே ” (மேலது, 4:5:1)

    எனத் தொடங்குகின்ற திருப்பாசுரத்தால் போற்றுகின்றார்.

    ஆழ்வார் திருமணிக்கூட நாதனைப் போற்றத் துணிந்தவேளையில், அவர்தம் சிந்தையில் கஜேந்திரக் களிற்றுக்கு அவன் இரங்கியருளிய அருள்நிலையினைக் குறித்த உணர்வு எழுகிறது. அதனால் அவ் அருள்நிலையினை மறவாமல் திருமணிக்கூடநாதனை,

    ”தூம் புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்து ” (மேலது பாடல்)

    எனப் போற்றிப் பாடியுள்ளார். திருமணிக்கூடநாதனைத் திருமங்கையாழ்வார், கஜேந்திரனைக் காத்தருளிய பெருமானாகப் போற்றியதால், அத் திருத்தலத்துப் பெருமாளுக்கு, ‘கஜேந்திரவரதன்’ என்கின்ற திருப்பெயரும் வழங்கிவருகிறது. திருமணிக்கூடத்தைப் போற்றி வழிபட்ட பின்னர், ஆழ்வார், திருப்பார்த்தன் பள்ளியை வழிபடப் புகுகின்றார்.

    திருப்பார்த்தன் பள்ளியில் வழிபாடு

    இத் திருத்தலம், அர்ச்சுனனின் நீர்வேட்கையினைப் போக்கியருளியது என்கின்ற அருட்சிறப்போடு விளங்குகிறது. அர்ச்சுனனாகிய பார்த்தனுக்காக உருவாகிய இத் திருத்தலத்தைத் திருமங்கையாழ்வார், ‘பார்த்தன் பள்ளி’ என்றே போற்றியமைகின்றார். இங்கு உறைகின்ற இறைவனை ஆழ்வார், ‘பார்த்தன்பள்ளிச் செங்கண்மால்’ எனப் போற்றுகின்றார். இத் திருத்தலத்து இறைவனுக்கு, ‘கவள யானைக் கொம்பொசித்த’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகச் சொல்மாலையினைச் சூட்டிக்களித்த பின்னர், ஆழ்வார், மஞ்சக்குளி மண்டபத்தை அடைகின்றார்.

    மஞ்சக்குளி மண்டபத்தில் திருமஞ்சனம்

    மஞ்சக்குளி மண்டபத்தில் ஆழ்வாருக்குத் திருவரங்கநாதன் அருளிய திருமஞ்சனக் காப்பும், திருநறையூர் பெருமாள் சூடிக்களைந்த பட்டு, மலர்மாலை முதலான சிறப்புகளும் வழங்கி வழிபாடு நிகழ்த்தப்பெறுகிறது. திருஅரங்கநகரில் ஆழ்வார், ஒரு திருக்கார்த்திகை நாளன்று, திருவரங்கனின் முன்னால் இருந்து, தமது  திருநெடுந்தாண்டகம் முதலான அறுவகைப் பிரபந்தங்களையும் தேவகானத்தில் பாடி இன்புற்றார். ஆழ்வாரின் அருள்தமிழினை மெச்சி மகிழ்ந்த இறைவன், தம்மைப் பாடிப் புண்பட்ட ஆழ்வாரின் மிடறு குளிர்கின்றவகையில் தனக்குரிய தைலக்காப்பினை அவருக்குத் தந்தருளினான். இச் செய்தியானது கோயிலொழுகு என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

    “ஒரு கார்த்திகை திவ்ய மஹோத்ஸவத்திலே பெருமாளும் நாய்ச்சிமார்களும் திருமஞ்சனம் கண்டருளி, உடுத்துப் பூசி முடித்து ஒப்பித்திருக்க, திருமங்கையாழ்வாரும் ‘திருநெடுந்தாண்டகம்’ என்று ஆறு ப்ரபந்தத்தை யிட்டருளி, பெருமாள் திருச்செவி சாத்தும் படி தேவகாநத்திலே ஏறிட்டு அபிநயித்து அநுஸந்திக்க பெருமாளும் போராவுகந்தருளி, ஆழ்வாருக்கு ஸகலவரிசைகளும் சாதிக்கத் திருவுள்ளம் பற்றி, . . . இக்கலியன் தேவகானத்திலே மிகவும் பாடுகையாலே அவர்மிடறு தொந்தது. இன்று நாம் சாத்தியிருந்த தைலக்காப்பை அவர் மிடற்றிலே தடவுங்கோள் என்று பரிநங்கை நியமிக்க பரிகரமும் அப்படியே செய்ய திருமங்கைமன்னன் கருத்தார்த்தராய் தம்மிடத்து எழுந்தருளினார்.” (கோயிலொழுகு, பக்கம்:8)., என ஆழ்வார், தனது திருத்தமிழுக்காக இறைவனிடமிருந்து அருட்பேற்றினைப் பெற்றநிலையினைக் கோயிலொழுகு போற்றியுரைக்கிறது.

    இந்நிகழ்வின்போது அரங்கநகர்ப் பெருமாள், திருமங்கையாழ்வாரிடம், நீர் வேண்டுவது யாதென? வினவ, ஆழ்வாரும், ‘நம்மாழ்வாரின் திருப்பாடல்களுக்கு வேதத்தகுதியினை வழங்கி, அவற்றை மார்கழித் திங்களின் அத்யயநப் பெருவிழாவின்போது கேட்டருள வேண்டும்’ என இறைவனிடம் வேண்டிக்கொள்ள, இறைவனும் அவ்வாறே அருள்செய்தார் என்ற செய்தியும் மேற்கூறிய நிகழ்வோடு தொடர்புடையதாக அமைகின்றது. இவ்வாறு, நம்மாழ்வாரின் திருப்பாடல்களுக்கு வேதத்தகுதியைப் பெற்றுத்தந்த திருமங்கையாழ்வாரே, தமிழ்வேதங்களாகிய திவ்வியப் பிரபந்தங்களை மார்கழியில் ஓதுகின்ற அத்யயநப்பெருவிழாவிற்கு அடித்தளம் அமைத்துத்தந்தார் என்பது குருபரம்பரை வழக்கமாகப் போற்றப்பெறுகிறது.

    அதுபோன்றே,  திருநறையூர்ப் பெருமானின் மீதும் ஆராத பேரின்பக் காதல் கொண்டு சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல் ஆகிய மடல் இலக்கியங்களைத் தந்த பேரன்பிற்குப் பரிசாக, திருமங்கையாழ்வாருக்கு, திருநறையூரிலுள்ள சீனிவாசப்பெருமாளின் மாலை, திருப்பட்டு முதலான அருட்பேறுகளும் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுகிறது.

    இவ்வாறு, மஞ்சக்குளி மண்டபத்தில், தனது தமிழுக்காக அரங்கநகர்ப் பெருமாளும், திருநறையூர்ப்பெருமாளும் தந்த அருட்பேறுகளைப் பெற்றுக் கொண்ட களிப்போடு ஆழ்வார், திருநாங்கூர் மணிமாடக்கோயிலை அடைகின்றார்.

    நந்தா விளக்கினைப் போற்றுகின்றார்

    திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் உறைகின்ற நந்தாவிளக்குப் பெருமாளையும், புண்டரிக வல்லித் தாயாரையும், ‘நந்தாவிளக்கே! அளத்தற்கு அரியாய்’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி வழிபடுகின்றார் ஆழ்வார். திருநாங்கூரின் திருமணிமாடக்கோயிலில் உறைகின்ற இறைவனை, ‘நந்தா விளக்கே’ என விளித்துப்போற்றியதன் நிலையாக, அங்கு உறைகின்ற பெருமாளுக்கு ‘நந்தாவிளக்கு’ என்னும் பொருள்படுகின்ற ‘நந்தாதீபன்’ என்கின்ற திருப்பெயரும் வழங்கிவருகிறது. திருநாங்கூர் மணிமாடக் கோயிலைப் பாடிப்பரவி இன்புற்ற பின்னர் திருமங்கையாழ்வார், திருத்தெற்றி அம்பலத்தினை அடைகின்றார்.

    அம்பலத்து அரங்கனைப் போற்றுகின்றார்

    வைணவ திவ்யதேசங்களுள், ‘அம்பலம்’ என்னும் பெயருடைய திருத்தலம், இது ஒன்றேயாகும். (திருத்தெற்றி அம்பலம் – தெற்றி – திண்ணை). இத் திருத்தலத்தில் இறைவனின் பள்ளிகொண்ட திருக்காட்சியானது விளங்குகிறது. ‘செங்கண்மால் அரங்கர்’ என்பது இத் திருத்தலத்தில் உறைகின்ற இறைவனின் திருப்பெயராகும். ‘செங்கமலவல்லி’ என்பது, தாயாரின் திருப்பெயராகும். கிழக்கு நோக்கியவாறு, ஆதிசேடனாகிய பாம்பணையில் துயில்கின்ற செங்கண்மால் அரங்கனைத் திருமங்கையாழ்வார்,

    “திருத்தெற்றிஅ ம்பலத்துஎன் செங்கண் மாலே ” (பெரிய திருமொழி, 4:4:10)

    எனப் போற்றியுரைத்துள்ளார். இங்கு உறைகின்ற அரங்கனை ஆழ்வார், ‘மாற்றரசர் மணிமுடியும்’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி மகிழ்ந்த பின்னர் திருவண்புருடோத்தமத்தைச் சென்று சேர்கின்றார்.

    புருடோத்தமனைப் போற்றுகின்றார்

    அவதாரங்களின் வாயிலாகப் பல துன்பநிலைகளைத் தான் உற்றபோதிலும், இறைவன், அனைத்து உயிர்களுக்கும் நன்னிலை நல்கிக் காத்தருள்கின்றான். எடுத்துக்காட்டாக, குறளுருவாக வந்து மாவலியிடத்தில் மாயம்செய்து மண்ணளந்த பெருமாள், இராமாவதாரத்தில் தன் திருவடிகள் மண்ணில் தோயும்படிக் கானகத்தில் நடந்து திரிந்தான். இவ் அவதார நோக்கங்கள் அனைத்தும், மண்ணுலக உயிர்களுக்கு நன்னெறிகாட்டுகின்ற பொருட்டு மேற்கொள்ளப்பட்டவையாகும். இவ்வாறு, உலக உயிர்கள் அனைத்தும் நன்னிலை பெறவேண்டி நற்செயல்புரிகின்ற அவனுக்கு, ‘உயர்குணமுடைய உத்தமன்’ என்ற திருப்பெயர் பொருத்தமுடையதாகும். அப் பொருள் அமைகின்றவகையில், ‘புருஷோத்தமன்’ என்கின்ற திருப்பெயரோடு இறைவன் இத் திருத்தலத்தில் உறைகின்றான்.

    இறைவனின் உத்தம அருள்குணத்தைப் போற்றுகின்றவகையில் அமைந்த, ‘புருஷோத்தமன்’ என்கின்ற திருப்பெயரினை ஆழ்வார், ‘புருடோத்தமன்’ என்று தமிழ்ப்படுத்திக்கொண்டும், இத் திருத்தலத்தினை ‘வண்புருடோத்தமம்’ என்றும் போற்றியமைகின்றார். ‘நாங்கூர் வண்புருடோத்தமம்’ என்பது திருமங்கையாழ்வாரின் திருமொழியாகும். இத் திருவண்புருடோத்தமத்தைத் திருமங்கையாழ்வார், 

    “கம்ப மாகடல் அடைத்துஇலங் கைக்குமன் கதிர்முடி அவைபத்தும்    அம்பினால் அறுத்து அரசுஅவன் தம்பிக்கு அளித்தவன் உறைகோயில்
    செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
    வம்புலாம் கமுகு ஓங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே ”
    (பெரிய திருமொழி, 4:2:1)

    எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி மகிழ்ந்த பின்னர், திருவைகுந்த விண்ணகரைத் தொழப்புகுகின்றார்.

    பரமபதநாதனைப் போற்றுகின்றார்

    இறைவன், பரமபதத்தில் நித்யசூரிகளுக்கு அருள்செய்வதாகிய திருக்கோலத்தில் காட்சிதருவதாகிய திருவைகுந்தவிண்ணகரை ஆழ்வார்,

    “சங்குமலி தண்டு முதல் சக்கர முனேந்தும்
    தாமரைக்கண் நெடிய பிரான் றானமருங் கோயில் ” (பெரிய திருமொழி, 3:9:10)

    எனப் போற்றியுள்ளார். திருவைகுந்தவிண்ணகரை, ‘சலங்கொண்ட இரணியனது அகல்மார்வம் கீண்டு’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி மகிழ்ந்த பின்னர் ஆழ்வார், திருச்செம்பொன் செய்கோயிலை அடைகின்றார்.

    செம்பொன் அரங்கரைப் போற்றுகின்றார்

    இராவணனைக் கொன்றொழித்த பின்னர், இராமபிரான் தங்கத்தால் ஆன பசுவினை வழிபட்டு வந்தார். அந்தணர் ஒருவர் அதனைத் தானமாகப் பெற்று, இறைவனுக்கு இத் திருக்கோயிலை அமைத்ததாகக் கூறப்படுகிறது. இத் திருத்தலத்தின் செம்பொன் அரங்கரையும், அல்லிமலர் நாச்சியாரையும் திருமங்கையாழ்வார், ‘பேரணிந்து உலகத் தவர்தொழு தேத்தும் பேரருளான்’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றிய பின்னர் திருஅரிமேய விண்ணகரைப் போற்றப்புகுகின்றார்.

    திருஅரிமேய விண்ணகரில் வழிபாடு

    ‘அடியவர்க்கு அருளவேண்டி, அரியாகிய பெருமாள் விரும்பி உறைகின்ற திருத்தலம்’ எனத் திருமங்கையாழ்வார்,  இத் திருத்தலத்தினைப் போற்றியுரைக்கின்றார்.

    ”திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத்
    தீவினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
    அருள்நடந்து இவ் ஏழுலகத்தவர் பணியவானோர்
    அமர்ந்தேத்த இருந்த இடம் ” (பெரிய திருமொழி, 3:10:1) 

    எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் திருஅரிமேயவிண்ணகரைப் போற்றி வழிபட்டபின்னர், ஆழ்வார், திருநாங்கூர் மணிமாடக்கோயிலை அடைகின்றார்.

    திருநாங்கூரில் பதினொருவரும் எழுந்தருளல்

    ஆழ்வார் போற்றிப்பணிந்த ஒன்பதுத் திருத்தலங்களின் உற்சவப் பெருமாள்களும் பல்லக்கில் எழுந்தருளித் திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைகின்றனர். திருநாங்கூர் திருப்பதிகளில் அமைந்த, எஞ்சிய இரு திருத்தலங்களாகியத் திருவெள்ளக்குளம் மற்றும் திருத்தேவனார்த் தொகை ஆகிய திருத்தலங்களின் பெருமாள்களும் பல்லக்கில் எழுந்தருளித் திருநாங்கூர் மணிமாடக்கோயிலை அடைகின்றனர். அங்குப் பதினொரு பெருமாள்களுக்கும் திருமஞ்சனமும், திருஒப்பனையும் நடைபெறுகிறது. அப்பொழுது, திருமங்கையாழ்வாருக்கும், குமுதவல்லிநாச்சியாருக்கும், ஆழ்வாரின் ஆன்மார்த்த வழிபாட்டு மூர்த்தியாகிய சிந்தனைக்கு இனிய பெருமானுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    பதினொரு திருத்தலத்துப் பெருமாளையும் பாடிய திருப்பதிகங்களின் முதலாவது திருப்பாசுரம் மட்டும் அங்குப் பாடப்பெற்றுப் பதினொரு பெருமாள்களுக்கும் கற்பூர வழிபாடு நிகழ்கிறது. அதன்பின்னர், இரவு பதினொரு திருத்தலத்துப் பெருமாள்களும் பெரியதிருவடியில் எழுந்தருளித் திருக்காட்சி நல்குவதைத் திருமங்கையாழ்வார் குமுதவல்லியாரோடு அன்னவாகனத்தில் வீற்றிருந்தவாறு கண்டு இன்புறுகின்றார்.

    பதினொருவரின் திருக்காட்சி

    மணிமாடக்கோயிலின் திருவாயிலில், அன்னவாகனத்தில் திருமங்கையாழ்வார், குமுதவல்லிநாச்சியாரோடு கூப்பிய கரத்தோடு வீற்றிருப்பார். திருமங்கையாழ்வாரின் இன்பத்தமிழை மெச்சி, அவருக்குப் பதினொரு திருத்தலத்துப் பெருமாள்களும் பெரிய திருவடியாகிய கருடவாகனத்திலிருந்து காட்சியருள்வது, காண்பதற்கரிய திருக்காட்சியாகும்.

    இத் திருநாளின்போது, திருவண்புருடோத்தமத்திலிருந்து, மணவாள மாமுனிகளும் திருநாங்கூர் மணிமாடக்கோயிலுக்கு எழுந்தருளி திருமங்கையாழ்வாரின் அருட்பொலிவினைக் கண்ணாரக் கண்டு மகிழ்கின்றார்.

    வடுகநம்பி மண்டபத்தில் திருமங்கையாழ்வார்

    திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் பதினொரு கருடசேவையினையும் கண்டின்புற்ற பின்னர், திருமங்கையாழ்வார், மூன்றாம் நாள் காலையில் வடுகநம்பி மண்டபத்தை அடைகின்றார். அங்குத் தங்கித் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர், கருடசேவைக்கு முன்னதாகப் பாடாமல் எஞ்சியுள்ள இரு திருத்தலங்களில் ஒன்றாகிய திருவெள்ளக்குளத்தை அடைகின்றார்.

    அண்ணனைப் பாடுகின்றார்

    திருவெள்ளக்குளத்துப் பெருமாளை, ‘கண்ணார் கடல்போல’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றியநிலையில், அவ் இறைவனை ‘அண்ணா’ என ஆழ்வார் போற்றியுள்ளார். திருவேங்கடநாதனை ‘அண்ணா’ எனப் பாடிய திருமங்கையாழ்வார், இத் திருத்தலத்தில் உறைகின்ற பெருமாளையும், ‘அண்ணா’ என விளித்துப் போற்றியுள்ளார். ஆதலால், இத் திருத்தலமானது திருவேங்கடத்துக்கு இணையானதாகப் போற்றப்பெறுகிறது. ஆழ்வாரிடமிருந்து ‘அண்ணா’ என்ற அமுதமொழி எழுந்த இத் திருத்தலமானது ‘அண்ணங்கோயில்’ என்று போற்றப்படுகிறது.

    ஆழ்வார், திருவேங்கடமலையில் உறைகின்ற பெருமாளைத் திருவெள்ளக்குளத்தில் கண்டு வழிபட்டு இன்புற்றதாகக் கூறுவது வழக்கம்.

    கண்ணார் கடல்சூழ் இலங்கைக்கு இறைவன்தன்
    திண்ணாகம் பிளக்கச் சரம்செல உய்த்தாய்
    விண்ணோர் தொழும் வேங் கடமாமலைமேய
    அண்ணா! அடியேன் இடரைக் களையாயே ” (பெரிய திருமொழி, 1:10:1)

    எனத் திருவெள்ளக்குளத்துப் பெருமாளை ஆழ்வார், திருவேங்கடநாதனாகவே எண்ணிப் போற்றியுள்ளார். ஆழ்வார், திருவேங்கடவனை எண்ணியவாறு, இத் திருத்தலத்துப் பெருமாளை, ‘அண்ணா!’ என்று அழைத்ததன் காரணமாக, இத் தலத்துப்பெருமாளை திருவேங்கடநாதனுக்கு அண்ணன் என்று கூறுகின்ற வழக்கம் உண்டு. அவ் வழக்கத்தினால் இத் திருத்தலமானது, அண்ணங்கோயில் என்னும் பெயராலும் வழங்கப்பெறுகிறது.

    திருவெள்ளக்குளத்தைப் போற்றிவழிபட்டபின்னர் ஆழ்வார், திருத்தேவனார்த் தொகையாகிய திருத்தலத்தை அடைகின்றார்.

    திருத்தேவனார்த் தொகையில் திருமங்கையாழ்வார்

    ‘வானவர் அனைவரும் இறைவனைப் பணிவதற்கு புகுந்த இடம்’ என இத் திருத்தலமானது திருமங்கையாழ்வாரால் போற்றப்பெறுகிறது. இங்கு உறைகின்ற இறைவன், தெய்வநாயகன் எனப் போற்றப்பெறுகின்றார். தாயார், ‘மாதவநாயகி’ என்கின்ற திருப்பெயரோடு போற்றப்பெறுகின்றார். இத் திருத்தலத்தைத் திருமங்கையாழ்வார், ‘போதலர்ந்த பொழில்சோலை’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி வழிபட்டபின்னர், திருவாலி திருத்தலத்தை அடைகின்றார். திருநகரித் திருத்தலத்துக்குரிய முப்பதுத் திருப்பாடல்களையும் திருமங்கையாழ்வார் திருவாலி திருத்தலத்திலேயே பாடி அங்கு உறைகின்ற பெருமானை வழிபடுகின்றார்.

    திருவாலியில் திருக்காட்சி

    திருவாலித் திருத்தலத்தினை வழிபட்ட பின்னர், ஆழ்வார், திருநகரியை அடைகின்றார். அதுகாறும், திருநாங்கூர்த் திருப்பதிகள் அனைத்தையும் பாடிப் பரவிய திருமங்கையாழ்வாருக்கு, திருநகரியில் உறைகின்ற வயலாலி மணவாளன், பெரியதிருவடியில் எழுந்தருளி, எதிர்வந்துத் திருக்காட்சி தருகின்றார். அங்கு இறைக்காட்சியைக் கண்டவுடன், தான் பரமபதஅனுபவத்தைப் பெற்றுவிட்டதாக ஆழ்வார் பாடுகின்றவகையில் ‘கற்றார் பரவும்’ எனத் தொடங்குகின்ற திருக்கண்ணபுரத்துக்கு உரிய திருப்பாடலானது பாடப்படுகிறது.

    ”கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
     பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
     வற்றா நீர்வயல்சூழ் வயல்ஆலி அம்மானைப்
     பெற்றேன் பெற்றதுவும் பிறவாமை பெற்றேன் ” (பெரிய திருமொழி, 8:9:8)

    எனப் பாடி, தான் பிறவாத பெருநிலையைப் பெற்றுவிட்டதனை எண்ணியும், பெரிய திருவடியில் இறைவனின் திருக்காட்சியினைக் கண்ட பேற்றினை வியந்தும், ஆழ்வார் இன்புறுகின்றார். ஆழ்வாரின் இத் திருக்காட்சிப் பேற்றினை, அடியார்கள் வணங்கி மகிழ்வதுடன், கலியன் ஒலி மாலை விழாவானது இனிதே நிறைவுறுகிறது. 

    முடிவுரை

    திருமங்கையாழ்வாரால் போற்றிப் பாடப்பெற்ற திருநாங்கூர் திவ்யதேசங்கள் இன்றளவும், அவர்தம் பெரியதிருமொழியில் சுட்டப்பெற்றவாறு ஏற்றம் பெற்றுவிளங்குகின்றன. இதற்கு, அந்தந்த திவ்யதேசங்களிலும் விளங்குகின்ற பெருமாள் மற்றும் தாயாரின் திருப்பெயர்கள், ஆழ்வாரின் அருந்தமிழ்ப் பாசுரத் தொடர்களாகவே அமைந்துள்ளமை எடுத்துக்காட்டாகும். திருவரங்கத்தில் நிகழ்கின்ற பகல்பத்து மற்றும் இராப்பத்து உற்சவத்தில், ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தப்பாசுரங்கள் அரையர் சேவையெனப் போற்றப்பெறுவது வழக்கம். அதுபோன்றே, ஆழ்வாரின் அருந்தமிழைக் கொண்டாடுகின்ற தனிப்பெரும் விழாவாக இக்கருடசேவைப் பெருவிழாவானது ஆண்டுதோறும் நிகழ்த்தப்பெறுகிறது.

    இப்பகுதியானது, காவிரி பாய்கின்ற வயல்வெளிகள் நிறைந்தது. இப்பகுதியிலுள்ள பாமரமக்கள், ஆழ்வாரின் பிரபந்தப்பாசுரங்களைச் சொற்பொருள் தெளிவுடன் குற்றமறக் கற்றுத் தெளிந்த அறிவுடையவர்கள் அல்லர். ஆயினும், குறையாத அன்பினால் ஆழ்வாரைத் தம்மவராக  வரித்துக்கொண்டவர்கள். அவரையே பெருமாளாகக் காணுகின்ற பக்தித்திறம் உடையவர்கள். அறிவுக்கண் கொண்டல்லாமல், அன்புக்கரம் கொண்டு ஆழ்வாரை வணங்குபவர்கள். அதனால், ஒவ்வோர் ஆண்டும் கருடசேவைக்காகத் திருமங்கையாழ்வாரும், குமுதவல்லி நாச்சியாரும் தங்களது வயல்வெளிகளின் வழியாகக் கடந்து செல்வதையே பெரும்பேறாகக் கருதுபவர்கள்.  அதனால்,  ‘தமது வயல்வெளியில் விளைச்சல் பெருகும்’ என்று நம்புபவர்கள்.

    ‘அன்பு குறையாத, நிலையான நம்பிக்கையே பக்தி’ என்னும் தத்துவத்தைத் திருமங்கையாழ்வார், அவர்கள் வழியாக உணர்த்தியுள்ளார் என்பதற்கு, ‘கலியன் ஒலிமாலை விழா’ பெருஞ்சான்றாக உள்ளது.

    ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

    1. நாலாயிரத் திவ்ய பிரபந்தம், எம். நாராயண வேலுப்பிள்ளை (உரையாசிரியர்), முல்லை நிலையம், சென்னை முதல் பதிப்பு: 2000.
    1. கோயிலொழுகு, கிருஸ்ணஸ்வாமி அய்யங்கார் (பதிப்பாசிரியர்), ஸ்ரீரங்கநாச்சியார் அச்சுக்கூடம், திருவரங்கம், திருச்சி- 6. பதிப்பு ஆண்டு: 1976.

    *****

    கட்டுரையாசிரியர்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

     

     

    Share
  • உறவாகிய யோகமும் போகமும் உயிராளீ

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை

    உயிர்கள், சார்ந்ததன் வண்ணமாய் விளங்கவல்லவை. அவை, மும்மலங்களின் தொடர்பால், நிலையில்லாத உடம்பே, தாம் என மயங்குகின்றன; உடம்பின் வழியே  பெண்ணின்பமே பெரிதென அழிகின்றன. உயிர்கள் இவ் அறியாமை நீங்கி, கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, உற்று அறிதலாகிய பேரறிவு ஐந்தாலும்,   தலைவனாகிய இறைவனை உணர்ந்து, ‘திருவடி இன்பமே பேரின்பம்’ என்னும் ஞானநிலையினை எய்தவேண்டும். அதற்கு, ‘உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்’ என்னும் பெருநிலையில், புலன்இன்பங்களைப் பேரின்ப நெறிக்குரியதாகப் பண்படுத்திக் கொள்ளவேண்டும். அளவுகடந்த புலனின்ப நாட்டத்தை, இறைவன்பால் மடைமாற்றம் செய்கின்ற முயற்சியாகவே, சமயக்குரவர், சந்தானக் குரவர் முதலான அருளாளர்கள், தமது திருப்பதிகங்களில் அகத்துறையினையும் பாடுபொருளாகக் கொண்டு பாடியுள்ளனர்.  அவ்வகையில், ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராகிய திருமாளிகைத் தேவரது, ‘உறவாகிய யோகமும்’ என்ற திருப்பதிகம் பேரின்பப் பெருநெறி காட்டுகின்ற திறத்தை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    அருள்துறையுள் அகத்துறை

    திருமாளிகைத்தேவர்தம் அருளியல் வாழ்வானது, தில்லைத்திருத்தலத்துடன் மிகநெருங்கிய தொடர்புடையது. அவர் அருளியதாக உள்ள நான்கு திருப்பதிகங்களும், தில்லைத் திருத்தலத்திற்கு உரியவையாக விளங்குகின்றன.  அவற்றுள் மூன்றாவது திருப்பதிகம், அகத்துறைப் பொருண்மையில் அமைந்துள்ளது. இத்திருப்பதிகத்தில், ‘காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்கின்ற நோக்கில்,  இறைவனுக்கான அருள்துறையினைப் பாடுவதற்கு அகத்துறையும் பாடுபொருளாக அமைந்துள்ளது. அகத்துறை வழியே அருள்துறையைப் பாடுங்கால், சிற்றின்பநிலைப் பொருண்மைகள், திருவருள் தொடர்புடைய தத்துவநிலைகளாக, உள்ளுறைப் பொருள் தருவனவாக அமைகின்றன.

    இத்திருப்பதிகத்துள், தலைவனாக,  பரம்பொருளாகிய சிவபெருமானும், தலைவியாக,  பக்குவ ஆன்மாவும் வைத்து உணரப்பெறுகின்றனர். பதிகப் பொருண்மை அளவில், மணிவாசகப்பெருமானால் தில்லையில் அருளிச்செய்யபட்டதாகிய, ‘கீர்த்தித் திருஅகவல் மற்றும் போற்றித் திருஅகவல்’ முதலான திருப்பதிகப் பொருண்மைகள், சிவனார் பெருந்திறமாக விரித்துரைக்கப்பெற்றுள்ளன.

    நாதாந்தத்துக் குணக்குன்று

    பெருமானே, அண்டத்திலும், பிண்டத்திலும் நாதாந்தக் கூத்தாடி அனைத்தையும் இயக்குகின்றான். அத்துடன், தத்துவங்களின் முடிவாகிய நாததத்துவத்தையும் கடந்த பரத்துவம் கொண்டும் விளங்குகின்றான்.  “நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர்” (உண்மை விளக்கம்: பாடல்:39) எனப் பெருமானின் தத்துவாதீதப் பரத்துவம் போற்றப்பெறும். ஓயாத அவனது அருள்கூத்தினாலேயே, அண்டம், பிண்டம் ஆகியவை இயங்குகின்றன. ஞானாகாசப் பெருவெளியில் அணுவுக்கும் அணுவாக இருந்து ஆடி ஆட்டுவிக்கின்ற பெருமான், அனைத்துயிர்களிலும் உயிர்ப்பாக இருந்து அவற்றையும் ஆட்டுவிக்கின்றான்.

          “தில்லை மூதூர் ஆடிய திருவடி
           பல்லுயிர் எல்லாம் பயின்றனவாகி
           எண்ணில் பெருங்குணம் எழில்பெற விளங்கி…” (திருவாசகம்: கீர்த்தித் திருஅகவல்: அடிகள்: 1-3) என்பது, மணிவாசகரின் அருள்வாக்கு.   இவ்வாறு, அருமையாம் பெருந்திறமும், எளிமையாம் கருணைத்திறமும் ஒருங்கே விளங்குகின்ற பெருமானை மேலும் போற்றுபவராக மணிவாசகர்,
    “அருமையில் எளிய அழகே போற்றி”   (திருவாசகம்: போற்றித் திருஅகவல்: அடி: 126) எனக் குறித்தருளியுள்ளார்.

    குணமும் குறியும் கடந்த பெருமான், தன்னை உயிரறிவுக்கு உணர்த்தி அருளவேண்டி, குறித்த குணமும், குணப்பொருளாகவும் எழுந்தருள்கின்றான். எனவே திருமாளிகைத்தேவர், பெருமானை இத்திருப்பதிகத்தின், அனைத்துத் திருப்பாடல்களிலும் ‘குணக்குன்றே’ என விளித்து மகிழ்ந்துள்ளார். அத்துடன், பெருமானின் அருமை, எளிமை ஆகிய இருவேறு பெருங்குணங்களையும் நமக்கு உணர்த்தத் திருஉள்ளம் கொண்டுள்ளார். அத்திருக்குறிப்புடன், ‘கயிலை மலைப்பெருமானே, தில்லையில் அருள்கூத்தனாக விளங்குகின்றான்’ என்று அருளிச்செய்துள்ளார். மேலும், கயிலை மலையில், பெருமான்,  உமையம்மைக்கு, ஆகமப் பொருளை உபதேசித்தருளிய பாங்கினையும், காடுறை வேடனென உமையோடும் கானகத்தில் நடந்தருளிய அருங்கருணையையும், சங்காரகாரணனாகிய பெருமானின் பரத்துவத்தை விளக்குகின்ற திருநீற்றுப்பொலிவழகையும் இப்பதிகத்துள் எடுத்தாண்டுள்ளார்.

    உறவாகிய யோகமும் போகமுமாய் உயிராளீ

    இத்திருப்பதிகமானது, ‘உறவாகிய யோகமும்’ எனத் தொடங்குகிறது. ‘ உறவு – யோகம் – போகம் – உயிராளீ’ என்பது பதிகத்தின் முதற்தொடராகும். உறவாவது, உயிர், ஞானநெறி வழியே இறைவனுடன் கொள்கின்ற பிரிவறியாத திருவருளுறவாகும்; திருவருளுறவின் வழியே இறைவன் மீதான பற்று நீங்காது, அவனுடன் ஒன்றியிருத்தலே யோகமாகும்; போகமாவது, இன்பம் நுகர்தல். அந்நிலையானது,

                “வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால் தோறும்
                தேக்கிடச் செய்தனன்…
                அற்புதமான அமுத தாரைகள்
                ஏற்புத் துளைதொறும் ஏற்றினன்” (கீர்த்தித் திரு அகவல்: அடிகள்170-171, 175-176) என்றமைகின்ற பேரின்ப அனுபவமாகும். இவ்வாறு, உயிர்களின் உறவாகவும், யோகமாகவும், போகமாகவும் இருந்து,  உயிர்களை ஆள்கின்ற பசுபதியாக பெருமானைப் போற்றித் திருமாளிகைத்தேவர்,  இப்பதிகத்தைத் தொடங்கியுள்ளார்.

    புரம் செற்ற சிலைகொண்ட வில்லாளி
    தனது மகளது நிலைக்கு இரங்குகின்ற செவிலித்தாயின் கூற்றுகளாக அமைந்துள்ள இப்பாடல்களில், அருச்சுனருக்குப் பாசுபதப் படைக்கலம் அருளவேண்டி, வேடுவக்கோலம் ஏற்றுவந்து, பெருமான் புரிந்த திருவிளையாடல் போற்றியுரைக்கப்பெற்றுள்ளது. இவ்வரலாற்றினைக் குறிக்கின்ற முதலாவது திருப்பாடலில், பெருமான், முப்புரத்தை எரிஅம்பு செலுத்தி அழித்தொழித்த வில்லுடன், கானகத்தில் பன்றியை வீழ்த்தத் துரத்தி நடந்ததாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

                 “சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
                  சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
                 மறவா”  (உறவாகிய யோகமும்: பாடல்: 1)

    என்றமைந்த தொடர்களில்,  ‘முப்புர அழிப்புக்காக, பெருமான் கைக்கொண்ட வில்லுடன், அருச்சுனருக்கும் அருளவந்ததன் காரணத்தைத் திருமாளிகைத்தேவர் உள்ளுறைப் பொருளாக விளக்கியுள்ளார். “முப்புராதியர்கள், பெறுதற்கு அரிய பேற்றினைப்பெற்ற ஆணவத்தால் பெருமானை மறந்து, மண்ணுயிர்களுக்குத் தீமையினை மட்டுமே செய்து துன்புறுத்திவந்தனர். பெருமான் அவர்களது அறியாமையினை அகற்றி அருளவேண்டி, எரியம்பினை எய்து முப்புரங்களை அழித்தொழித்தார். அது பெருமானது மறக்கருணைக்குச் சான்றெனலாம். முப்புராதியர்கள் தாம்பெற்ற உயர்ப்பேற்றினை மறந்ததும் அன்றி, தமக்கு அவ் உயர்ப்பேற்றினைத் தந்தருளிய பெருமானையும் மறந்து மயங்கினர்.

    பேறு தந்தருளிய பெருமானை மேன்மேலும் மறவாது வழுத்துதல், நம்மைக் குறையாத திருவுடையாராக விளங்கச்செய்யும். ஆனால், மலமறைப்பாகிய அறியாமையில் ஆழ்ந்த முப்புராதியரிடத்தில், ‘தாம் பெற்ற பேற்றிலும் இனிப் பெறத்தக்க பேறு எவையும் இல்லை’ என்று மயங்குகின்ற அறியாமையே விளைந்தது. அதனால் அவர்கள், ‘சிறவாதவர்’ என்று ஆசிரியரால் இகழ்ச்சிப்பொருளில் சுட்டப்பட்டுள்ளனர்.  அத்தகைய இகழ்ச்சிச் சுட்டு, மனித உயிர்களாகிய நமக்கும் பொருந்துவதாகும். காரணம், நமக்குப் பெருமானால் அருளப்பெற்ற பிறப்பின் பெரும்பயனை நாம் உணராமல், வாழ்நாளை வீணே கழிக்கின்றோம். அத்தகைய அறியாமையினை உணர்த்தி, பெருமானைப் பற்றி உய்ய, அருச்சுனனின் பக்தித்திறத்தையும், பெருமான் அவர்க்கு இரங்கியருளிய திறத்தையும் பதிகப்பொருண்மையாக, திருமாளிகைத்தேவர் எடுத்தாண்டுள்ளார்.

    நெடும்பகல் நடந்த வேடர்

    அடியவர்’ என்பதை மறந்தவர்களுக்காக நிகழ்த்திய முப்புர எரிப்பில், பெருமானின் அளப்பரும் வீரத்தின் வெளிப்பாடாகிய மறக்கருணை வெளிப்பட்டது எனலாம். ஆனால், அருச்சுனரோ, பக்குவநிலை கொண்ட அடியவராகப் பெருமானை நோக்கித் தவமியற்றினார். அதனால், அருச்சுனருக்கு அருளவேண்டிப் பெருமான், காடுறை வேடனென வந்தருளினார். அந்நிலையில், அவர்தம் தாயின் நேர் தயாகுணமும், தாம் புண்சுமந்தேனும் அடியவர்க்கு அருள்கின்ற அருட்கருணையும் விளங்கக்காணலாம்.

    “முகாசுரன் என்னும் அசுரன் அருச்சுனரைக் கொல்லவந்த வேளையில், அவ்அசுரனிடமிருந்து அருச்சுனனைக் காப்பதற்கு பெருமானே, வேடுவக் கோலம் தாங்கினார். அவர் வேடுவக்கோலம் தாங்கி, தாம் மட்டும் தனியே நடவாமல், வேடுவச்சியாக அம்மையையும் உடன்அழைத்துவந்து, திருவடிகள் நிலந்தோயும் வண்ணம், நெடும்பகல் நடந்தார்” எனத் திருமாளிகைத்தேவர் பெருமானின் வேடுவத் திருவிளையாடலைக் குறித்தருளியுள்ளார்.

                “வண்டார் குழல்உமை நங்கை முன்னே
                  மகேந்திரச் சாரல்  வராகத் தின்பின்
                 கண்டார் கவலவில் லாடி வேடர்
                  கடிநா யுடன்கை வளைந்தாய்”   (உறவாகிய யோகமும்: பாடல்:6)

    காடாடு பல்கணம் சூழக் கேழற்
                  கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
                  வேடா”         (உறவாகிய யோகமும்: பாடல்:2)

    கானகத்தில் நெடும் பகல்பொழுது முழுவதும் கழிய நடந்தநிலையில், பெருமானின் எளிவந்த கருணை விளங்குகிறது.

    அருச்சுனருக்கு அருளவேண்டி, அன்று கானகத்தில் திருவடிதோய நடந்த பெருமான், இன்று தனக்கு அருளவேண்டிப்  பலகாலும் வருந்தி அழைத்தும் வாரமையைக் கண்டு, தலைவி ஆற்ற இயலாமல் புலம்புவதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

              “சேவேந்து வெல்கொடியானே என்னும்
                   சிவனே என் சேமத் துணையே என்னும்
              மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
                   வளர்நாய காஇங்கே வாராய் என்னும்”                 (உறவாகிய யோகமும்: பாடல்: 8)

    நாதாந்த பதம் நல்கும் தனிநாயகன்

         பெருமானது வேடுவக் கோலப்பொலிவழகு, திருமாளிகைத் தேவரின் சொல்லோவியமாக, வேடன் ஒருவனையே நமது கண்முன்னர் கொண்டுவந்து நிறுத்துகின்ற சிறப்புடையது. ‘சுடுகாட்டின் பல்பூதங்களும், வேற்றுருக் கொண்டுப் பெருமானைப் பின்தொடர்ந்தன;  வேடுவனாகிய பெருமான், விரைந்து பறை ஒலிக்கவும், அம்பினை விரைந்து செலுத்தவல்ல வலிய வில்லையும், அம்பையும்  கையில் ஏந்தியதுடன், குறுவாளும் உடன்இருக்க, கல்லைச் செலுத்தப் பயன்படுவதாகிய கவண்கருவி ஆகியவற்றுடன்,  வெற்றிக்குரிய ஆரவாரம் சிறிதும் குறையாமல், சீழ்க்கை ஒலி எழுப்பிப் பன்றியின் பின்னால் விரைந்து நடந்தார். அவர், இடுப்பில் புலித்தோலாடையினைப் புனைந்தும், திருவடியில் தோல் செருப்பினை அணிந்தும் வந்தார்’ என்று பெருமானின் வேடுவக்கோலப் பொலிவழகு, திருப்பதிகத்தின் ஏழாம் திருப்பாடலில் சிறப்புறச் சுட்டப்பெற்றுள்ளது.

    நாததத்துவத்தையும் கடந்த அரும்பொருளாகிய பெருமான், தன் அடியவருக்கும் அத்தகைய பெருநிலையினை அருளவல்லவர். வேண்டுவார் வேண்டுவதை ஈவதையே இயல்பெனக் கொண்ட பெருமானிடத்தில், நாதாந்த பெரும்பேற்றினை விழைந்தவர், திருமாளிகைத்தேவர். அன்று அருச்சுனருக்கு எளிவந்த கருணையுடன் நாடிவந்து அருளியவகையில், தமக்கும் நாதாந்த பெரும்பதத்தை அருள, பெருமான் இரங்கியருளவேண்டும் என்ற வேண்டுதலே,

               “கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
    சிலையும் கணையும் கவணும் கைக்கொண்
      டுடுப்பாய தோல் செருப் புச்சுரிகை
    வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
                              நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்
    தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
                              கொடுப்பாய் என் னும் குணக் குன்றே என்னும்
    குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே”                (உறவாகிய யோகமும்: பாடல்: 7) என்னும் திருப்பாடலாக அமைந்துள்ளது.

    குருவாக வந்தருளாயோ

    நாதாந்தப் பெரும்பேற்றினை அருளவேண்டிய திருமாளிகைத்தேவர், ‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ என்னும் பெருமொழிகளை நினைகின்றார். கயிலையில்,  மலைமகளுக்குக் குருவாகி, ஆகமப்பொருளை அன்று விரித்துரைத்த பெருமான், திருமால் முதலான தேவர்களுக்கும் குருவாக விளங்கியவர்.

                 “மகேந்திரப் பொன்மலையில் மலைமகளுக்கருளும் குரு” (உறவாகிய யோகமும்: பாடல்: 10)

                 “சுடர்நீள் முடிமால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கெல்லாம் குரவா”                                                     (உறவாகிய யோகமும்: பாடல்: 9) என்று பெருமானின் ஞானாசிரியநிலையைப் போற்றுகின்றவேளையில், அவரே  தனக்கும் குருவாக எழுந்தருளுதற்குப் பேராவல் கொள்கின்றார். ‘பசுபதியாகிய பெருமானைப் பற்றுதற்கு பசுநூல் ஓதுவிக்கும் அறியாமை மிக்க குருவால், உயிரறிவு எள்முனை அளவும்கூட விளக்கம்பெறாது’ என்பது அவர்தம் ஞானத்தெளிவு. அத்தகைய கீழோரைக் கண்ணால் காண்பதையும், அவருடன் உரையாடுவதையும் தாம் புரியேன்’ என்பதனைத் திருமாளிகைத்தேவர்,

     “கயவரைப் பசுநூல் கற்கும்
     பிச்சரைக் காணா கண்வாய்
           பேசாதப் பேய்க ளோடே”                             (இணங்கிலா ஈசன்: பாடல்: 9)

    என உறுதிபடச் சாற்றியுள்ளார்.  பற்றாகவும், பற்றப்படுகின்ற பொருளாகவும், அதனைப் பற்றுதற்குரிய வழியாகவும், வழித்துணையாகவும், பெருமானே விளங்குகின்ற நிலையினைத் திருமந்திரம், ‘காண வல்லார்க்குக் கண்ணின் மணி’ (திருமந்திரம்: 2823) என உணர்த்துகிறது. அவ்வகையில், பெருமானே தமக்குக் குருவாக இரங்கியருளவேண்டும் என்பதனைத் திருமாளிகைத்தேவர்,

               “நெறியே என்னும் நெறிநின்றவர்கள்
                           நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
                       குறியே”     (உறவாகிய யோகமும்: பாடல்: 4)                          என்றும் குறித்தருளியுள்ளார்.

    உமையம்மைக்கும், தேவர்களுக்கும், சனகாதி முனிவர்களுக்கும் அமைந்த அருள்பக்குவநிலையால், அவர்கள் பெருமானையே குருவாகப் பெற்றுய்ந்தனர்; அத்தகைய பக்குவநிலையில், பெருமானையே நினைந்துருகி, அவனது பெரும்பெயராம் திருவைந்தெழுத்தை ஓதிக் கரைந்து, குறையாத பேரன்பில் பெருகி, பிறவிப்பிணி தீர்க்கின்ற திருநீற்றுப் பொலிவுடன் திகழ்வதாகிய தம் பக்குவநிலையினைத் திருமாளிகைத்தேவர் அகத்துறைப் பதிகத்தில் உள்ளுறைப்பொருளாகக் குறித்தருளியுள்ளார்.

                    “உற்றாய் என் னும் உன்னை யன்றி மற்றொன்
                 றுணரேன் என் னும் உணர் வுள்கலக்கப்            பெற்றாய ஐந்தெழு த்தும்பிதற்றிப்
                             பிணிதீர் வெண் ணீறிடப் பெற்றேன் என்னும்
                சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
                    மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
                குற்றாய் என் னும் குணக் குன்றே என்னும்
                    குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே”                 (உறவாகிய யோகமும்: பாடல்:11)
    என்றமைந்த திருப்பாடல், பேரருள் விழைவில் தன்வயமிழந்த தலைவியின் நிலையாக, திருமாளிகைத்தேவரின் அருள்பக்குவநிலைக்குச் சான்றாகிறது.

    பேரருள் திளைப்பில் சீவன்முத்தநிலை

     ‘சிவமே பெரும்பொருள்’ என்றும், ‘திருவருளே பெரும்பொருள்’ என்றும் தெளிந்தவராகிய திருமாளிகைத்தேவர், திருவருள் நிலைப்புக்குக் காரணமாகிய அடியார் இணக்கத்தையே விழைகின்றார். அதனால், ‘பூசுவதும் திருநீறு, பேசுவதும் பெருமானின் திருப்புகழாம்’ என்று விளங்குகின்ற உயர்அடியார் உடனான இணக்கத்தையே நாடுபராக,  ‘திருநீறிடா உருத்தீண்டேன்’ என்று குறித்தமைகின்றார்.

    அடியார்களுடனான இணக்கம், தம்மைச் சிறுபொருளாகக் கருதி, தான் என்கின்ற ஆணவச் செயல்பாட்டை மறக்கச்செய்யும்; தம்மை மறந்து, பெருமானையே பெரும்பாருளாகக் கருதி அவரைப் பற்றுகின்றநிலையில் பித்தேறி, உயிர் தனது சுற்றுப்புறத்தை முற்றிலும் மறக்கும். தானும் சிவமும் ஒன்றாக, ஏகபோகமாகக் கலந்த பேரின்பநிலையாக அது விளங்கும். அப் பெருநிலையில், பெருமான் உவப்பவையே தனக்கும் உவப்பாகக்கொண்டு, காண்பன யாவற்றையும் சிவமாகக் கண்டும், பூண்பன யாவற்றையும் சிவமாம் தன்மைக்குரியதாகப் பூண்டும், தன்னைச் சிவமாகவே உணர்கின்ற பேறும் உயிர்க்கு வாய்க்கும். அத்தகைய பெருநிலை கைவரப்பெற்றவராகத் திருமாளிகைத்தேவரும் விளங்கினார். அவர்தம் அருளனுபவப் பேறு,

                “திருநீறிடா உருத் தீண்டேன்”    உறவாகிய யோகமும்: பாடல்: 10) என்ற உறுதிமொழியாக, அடியார் கூட்டத்துடனான அரும்பேற்றுக்கு வழிகாட்டுகிறது.

    மேலும், ‘உற்றாய் என்னும்’ என்ற பதினொன்றாம் திருப்பாடலில், ‘செம்மை மனத்துத் திருஅடியார்’ எனத் தலைவி விளங்குவதன் அடையாளமாக அவள், ‘திருநீற்றுக் கவசம் புனைந்துள்ளாள்’ எனச் சுட்டப்பெற்றுள்ளது. அத்துடன், திருநீறு புனையாதவரைப் பாவி எனக் கருதுகின்ற குறிப்பும் அமைந்துள்ளது. திருமாளிகைத்தேவர், ‘பெருமானின் திருமேனி, திருநீறால் பொலிந்திலங்குகின்ற பேரழகைத் தம் அகக்கண்ணால் கண்டின்புற்றவர்’  எனலாம். அவ்அருளனுபவப் பதிவே, அவர் பெருமானை, ‘நீறணி பவளக்குன்றமே’ (ஒளிவளர் விளக்கே:பாடல்: 6) என்று போற்றிப்பாடியுள்ள நிலையாகும். பெருமானிடத்தில் பொலிகின்ற திருநீறு முதலான சிவச்சின்னங்கள்  மக்கள்தம் அறியாமைநோய்க்கு மருந்தாகின்ற திறத்தை, திருஞானசம்பந்தர் முதலானோர் திறம்பட உணர்த்தியுள்ளனர். அந்நெறிவழியே திருமாளிகைத் தேவரும், ‘அரனடியார்கள், உலகின் தீமைகளை நசித்து ஒழிக்கவேண்டித் திருநீறு தரிக்கின்றார்கள்’ என ஏற்றிப் போற்றியுள்ளார்.

                      “தீய நசிக்க வெண்ணீறதாடும் நமர்கள்”                              (இணங்கிலா ஈசன், பாடல்: 5)

    அரனடியார்களது பெருநோக்கத்தை உணராத மக்கள், திருநீறு முதலான சிவச் சின்னங்களையும் தரிக்க வாய்ப்பற்று, பெருமானை உணர்கின்ற பெருநெறிக்குத் தலைப்படுவதும் அரிதாகும். அவர்கள் திருநீறு பொலிகின்ற அரனடியார்களை, அரனாகவே கண்டு வழிபடுகின்ற பக்குவநிலைக்கும் தலைப்படார். மக்கள், அடியார் கூட்டத்துடனான இருப்பினாலும்,  திருநீறு முதலான, சிவவேடப் பொலிவினாலும், பக்திநெறியில் மேம்பட்டுய்ய வேண்டும். இவ்அருநெறியினை உணர்த்தவே தலைவி, திருநீறு தரியாதவரைத் தான் ஒருபோதும் நாடேன்’ என்று உறுதிபடக் கூறுவதாகத் திருமாளிகைத் தேவரால் விளக்கப்பட்டுள்ளது.  

    முடிவுரை
    ‘உறவாகிய யோகமும்’ என்று தொடங்குகின்ற இத்திருப்பதிகமானது, ஐந்து பேரறிவும் பேரின்ப நெறியில் செல்ல வழிகாட்டுவதாகும். அனைத்து திருப்பாடல்களும் தில்லை அம்பலவனுக்காகத் தலைவி இரங்குகின்ற நிலையினைக் குறிப்பதாக அமைந்துள்ளன. பசுக்களாகிய ஆருயிர்கள், பதியாகிய பெருமானை அடைவதற்குக் கொள்கின்ற பேரின்பஆவலை இத்திருப்பாடல்கள், பேரின்பப் பொருள்கொண்டு விளக்குகின்றன.

    தில்லை அம்பலவன், ஆருயிர்க்கு நாதாந்தப் பெரும்பேறு நல்கவல்ல நாதாந்தக் கூத்தினை ஆடியருள்கின்றான். பெருமானின் பெருங்கருணைத் திறமே, அவனது கூத்தாக அமைகிறது எனத் திருமந்திரம், பெருமானது திருக்கூத்துக்கான தத்துவத்தை விளக்கியருளும். அத்தகைய தத்துவத்தை மேலும் எளிமையுற விளக்கவேண்டியே திருமாளிகைத்தேவர், அம்பலத்துக் கூத்தனாகிய பெருமான், அருச்சுனருக்கு அருளவேண்டி, வேடுவக்கோலம் தாங்கி வந்ததாக  இப்பதிகத்தில் எடுத்தாண்டுள்ளார். அத்திருப்பாடல்களின் வழியே புலனாகவல்ல பெருமானின் வேடுவக்கோலம், உள்ளக்கிழியில் அவன் உருவைப் பலகாலும் எழுதிப்பார்த்து, பெருமானே, ‘புவன போகமும், யோக வெள்ளமும்’ என உணரச்செய்யும்; அவ் அன்பின் விரிவு,  அண்டத்திலும், பிண்டத்திலும் பெருமான் இருந்தாடுகின்ற பெருங்கூத்தினை, அகக்கண் கொண்டு தொழுதுய்ய வகைசெய்யும்.

    ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

    1. ஒன்பதாம் திருமுறை, டாக்டர் இராச. வசந்தகுமார் (ப.ஆ), பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,

    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம், கோயம்புத்தூர் -21. முதல் பதிப்பு: ஏப்ரல்: 2016.

    1. திருவாசகம், சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை. நான்காம் பதிப்பு: 1999.
    2. திருமந்திரம், சிவ ஆ.பக்தவச்சலம் (ப.ஆ), “தமிழ் வேதம்” மாத இதழ், குடியாத்தம்.        வெளியீடு: 2007.

    *****

    கட்டுரையாளர்,
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம்,
    கோயம்புத்தூர் – 21.

     

    Share
  • திருப்பாவையில் அர்த்தபஞ்சக ஞானம்

    -முனைவர் இரா. மதன் குமார் 

    முன்னுரை: 

    அன்ன வயல் புதுவையாம், திருவில்லிப்புத்தூரின்கண் அவதரித்து, அரங்கநகராள்வாருக்குப் பூமாலையுடன், பாமாலையும் சூட்டிச் சிறந்தவர், ஆண்டாள் நாச்சியார். அவர்,  சீவான்மாக்களை விண்ணேற்ற, பூமிப்பிராட்டியின் அம்சமென, மண்ணில் உதித்தவர்; பாடித் தந்த சொல்மாலையால் அருள்மணம் பரப்பி, அரங்கநகரானைத் தனது பக்திவலையில் அகப்படுத்திக்கொண்டவர்; அவர் அருளிச்செய்த, ‘திருப்பாவை’ப் பாசுரத் தொகுதியானது, நம்மைப் பிறவியாகிய பெருவலையிலிருந்து மீட்டருளவல்லது; ‘அர்த்தபஞ்சக ஞானம்’ என்னும் மதிநலம் விளங்கச்செய்வது; நிறைவுற அருள்நெறி காட்டி, ஆன்ம ஈடேற்றத்துக்கு வகைசெய்வது; அவ்வகையில், இறைநிலையும், உயிர்நிலையும், அருள்வகையும், அருள்வழியும், அருள்வகைக்குரிய தடையுமாகிய ஐம்பொருள் அறிவும், திருப்பாவையில் வலியுறுத்தப்பெறுகின்ற வகையினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    அர்த்தபஞ்சக ஞானம்:

    சீவான்மாக்களாகிய நாம், பெருமாளாகிய பரமான்மாவை என்றும் மறவாது அடிமை பூண்டிருப்பதையே உண்மைஇயல்பாகக் கொள்ள வேண்டியவர்கள். பரமான்மாவும், யாதொரு நியதியும் இன்றி,  நம்மைக் காத்தருள்வதயே தமது இயல்பாகக் கொண்டவர். ஆயினும், நாம் அஞ்ஞானச் சூழலில்பட்டு, பரமான்மாவுக்கு  மட்டுமே அடிமைப்பட்டிருத்தலாகிய சேஷத்துவத்தை மறக்கின்றோம்; அவ் அறியாமையினால் வினைவழிப்பட்டு, பிறவித்துன்பத்தில் உழல்கின்றோம். இத்துன்பத்தினின்றும் ஈடேற்றவே இறைவனும் நமக்குப் பிறப்புகளைத் தந்தருள்கின்றார். அப்பிறப்புகள், இறைவனை மேன்மேலும் அறிதற்கும், அவரது திருவடியை மறவாமல் பணிதற்கும் வாய்ப்பாக அமைந்தால், பிறவிச்சுழலிலிருந்து நாம் கடைத்தேறலாம். மாறாக, இறைவனை மறந்து, தற்சுதந்திரத்தால் செருக்கித் திரிதலும், அதனால், பிறப்பின் பயன் பாழாதலும், பிறப்பின் பெருவாயில் நீள்தலுமே ஓயாது நிகழ்கின்றன.

    இவ்அவலத்தைக் குறித்த அறிவுறுநிலையே, சீவான்மாக்களுக்குத் தம்மையும், தம்மின் மேலான இறைவனையும், இறைவனிடத்தில் அடிமைபூணுதலின் இன்றியமையாமையையும், அடிமைத்திறத்துக்குரிய வழிகளையும், அவ்வழிமுறைக்குரிய தடைகளையும் அறிவுறுத்தும். திருப்பாவைப் பாசுரங்கள், இவ்ஐம்பொருள்கள் குறித்தும் விளக்குகின்ற, அர்த்தபஞ்சகப் புதையலாகத் திகழ்கின்றன.

    இறைவனின் இயல்பு: ‘நாராயணனே பறைதருவான்’:

      பாவைநோன்பினை வலியுறுத்துவதாகிய திருப்பாவையின் முதலாம் பாசுரத்தில் பாவைநோன்புக்கான பயனை, நாராயணனே தந்தருள்வான் என்று ஆண்டாள் நாச்சியார் அறுதியிட்டு உறுதியாக அறிவுறுத்துகிறார். பரமான்மாவாகிய பெருமாள், தானே எவர்க்கும் தனி முதலாக விளங்குபவர்; ‘ஏகமூர்த்தி’ என்று இப்பெருநிலையினை ஆழ்வார்கள் ஏற்றிப்போற்றுவர். பரமான்மா, இப்பெருநிலையில், ‘ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ்’ ஆகிய அறுவகைக் குணங்களும் நிறைந்த தனிமுதலாக விளங்குபவர்.

    இவர்தம் ஆணைவழியே, சங்கர்ஷணனும், பிரதியும்னனும், அநிருத்தனும், மும்மூர்த்திகளாக இயங்கவல்லவர்கள். ஆயினும், பெருமாளிடத்தில் விளங்குகின்ற அறுவகைக் குணநிறைவு, மும்மூர்த்திகளுக்கு அமைவதில்லை. அவரவரும் தமது தொழில் நிலைக்குரிய குணங்களை மட்டுமே பெற்றிருப்பர்.  மும்மூர்த்திகளும் பெற்றுள்ள திருக்குணங்கள் பெருமாளால் வழங்கப்பட்டவையும், அவர்கள் மூவரும், பெருமாளின் ஆணைவழியே செயல்புரிபவர்கள் என்பதும் தத்துவவிளக்கம். எனவேதான், ஆண்டாள்நாச்சியார் நம்மைப் பரமான்மாவாகிய  பெருமாளிடத்தில் நேரிடையாகச் சரண்புகுத்துகிறார். அந்நோக்கில், பெருமாளின் பரத்துவத்தை நமக்கு உறுதிபட அறிவுறுத்துபவராக, ‘நாராயணனே நமக்கே பறைதருவான்’ என்று பாடியருளியுள்ளார்.

    ஆன்மாவின் இயல்பு: அறியாமைத் துயில் நீக்கம் 

    திருவரங்கக் கலம்பகம், சீவான்மாக்களின் அறியாமையாகிய இயல்பினைச் சுட்டுகின்றது. ‘புலன்கள் சிற்றறிவைக் காட்ட, அதன்வழியே நாளும் சிறுசெயல்கள் செய்து வாழ்கின்ற சீவனே!’, ‘உனது உண்மைஇயல்பை நீ அறிவாயோ?’. ‘நீ ஐம்பெரும் பூதங்களும் அல்லை; சிற்றின்பச் சுவை கூட்டுகின்ற ஐம்பொறிகளும் அல்லை; அவற்றின் வழியான சிற்றறிவும் அல்லை; உனக்கெனத் தற்சுதந்திரமும் இல்லை; இதனை நீ அறிதல்வேண்டும்’; ‘திருமகளை மார்பில் தாங்கிப் பரமபதத்தில் நிலைக்கின்றவனும், வாமனனாகி வந்து மாவலிக்கு அருளியவனுமாகிய திருஅரங்கனுக்கு என்றும் அடிமையாக உள்ளவன் நீ!. இதனை உணர்தலே அனைத்துலகிலும் சிறந்த தவமாகும்’ என்பது அப்பாடலின் கருத்தாகும். இவ்வாறு பெருமாளுக்கு ஆட்பட்டு இன்புறவேண்டிய ஆன்மநிலையினை ஆண்டாள்நாச்சியார்’ ‘புள்ளும் சிலம்பின காண்’ என்ற ஆறாம் பாசுரம் முதலாக, ‘எல்லே இளங்கிளியே’ என்ற பதினைந்தாவது பாசுரம் ஈறாக அருளிச் செய்கின்றார்.

    ‘பெருமாளே எளிவந்த கருணையுடன் கண்ணபெருமானாக ஆயர்ப்பாடியில் இரங்கியருளியபடியால், அவனைப்பணிந்து இன்புறுவோம்’ என்று ஆண்டாள்நாச்சியார் , ஆயர்க்குலத்துத் தோழியர்க்கு அறிவுறுத்துகின்றார். அதற்கென்று, தோழியரைத் துயிலுணர்த்துதல் என்னும் நிலையானது, ஆன்மாவின் சிற்றறிவுச் சிறுமைகளை ஆசாரியநிலையிலிருந்து சுட்டி, அச்சிறுமைகள் நீங்க, அருள்வெள்ளத்தில் மூழ்கி எழச்செய்தல் என்னும் பக்திநிலையினைக் குறிப்பதாகும். மேலும், இப்பத்துப் பாசுரங்கள், ‘யோகத்துயில் கொண்ட தோழியை, வெளியே இருந்து தோழியர் எழுப்புதல்’ போன்று அமைந்துள்ளன. விடமுண்டவர்க்கு, அவ்விடம் உடலின் தன்மைக்கேற்ப விளைவினைத் தரும். சிலர் மயக்கமுறுவர்; சிலர், அந்நிலையினும் மாறுபட்டதாகித் துடிதுடிப்பர். அதுபோன்றே, தன்னிலை மறந்து பெருமாளை மட்டுமே அனுபவித்தலாகிய அடிமைத்திறமும் ஆயர்குலப் பெண்களிடத்தில் வேறுவேறாக அமைந்ததனை இத்திருப்பாடல்கள் சுட்டுகின்றன எனலாம்.

    சீவான்மாக்கள் அனைத்தையும் ஆள்பவராகிய பெருமாள், நம்மைக் காப்பதையே தன்னியல்பாகக் கொண்டவர். ஆதலால், பெருமாள், நாம் வேண்டுவனவற்றைத் தந்து காலம் தாழ்த்துகின்றநிலையிலும், நாம் அவரையே பணிபவர்களாக, அவரது இருப்பிடத்தைச் சென்றுசேர்ந்து, பணிந்து அருள்பெறுவோம்’ என்ற உபாயஞானமும் இப்பாசுரங்களில் வலியுறுத்தப்பெற்றுள்ளன.

    ஆன்மாவுக்குரிய பயன்கள்: 

    அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள்களே நாம் அடையத்தக்க உறுதிப்பொருள்களாகும். அறமாவது, சொல்லாலும், செயலாலும் நிலைமாறாமை. ‘பெருமாளே, நமக்கு அருளவல்லவர்!’ என்னும் நிலையிலிருந்து என்றும் மாறாமையே, பக்திநிலைக்குரிய அறமாகும். அவ்வகையில், பகவானுக்குரிய அறமாவது, பெருமாளது வாய்மொழிகளாலேயே உறுதிபட மொழியப்பட்டதாக ஆண்டாள்நாச்சியார் தெரிவிக்கின்றார். ஆயர்குலத் தோழிகளுடன் நந்தகோபரது வளமனையினை அடைந்த நாச்சியார் அங்கு, திருமாளிகையின் திருவாயிலைத் திறந்தருள வேண்டுமென வாயில்காப்போரை வேண்டுகின்றநிலையில் தமதுரையாக வெளிப்படுத்துகின்றார்.  ‘ஆயர் சிறுமிகளாகிய எமக்கு, திருவருளைக் குறைவின்றித் தந்தருள்வதாகக் கண்ணபிரான், எம்மிடத்தில் நேற்றே உறுதியளித்தார்; அவரைக் கண்டு திருவருளைப் பெறுவதற்கு வந்துள்ளோம்!; அதனால், வாயில் காப்பவரே! மாளிகையின் திருக்கதவினைத் திறந்தருள்க! என்று வேண்டுகிறார். இதன்வழியே,  ‘திருவருளே ஆன்மா அடையத்தக்க பெரும்பயனாகும்’ என்பதும், திருவருளைப் பெறுவதற்கு, ‘பெருமாளை என்றும் மறவாமல் பணிவதாகிய பக்திஅறமே கருவியாகும்’ என்பதும்,  அப் பேரறிவுநிலையே,  பொருள், இன்பம், வீடு முதலாகிய பிற உறுதிப்பொருள்களுக்கும் வழிவகுக்கும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.   

    திருவருளை அடையும் வகை: 

    சரணாகதியாகிய பணிவே சீவான்மாக்களுக்குத் திருவருளைக் குறைவின்றிச் சுரந்தருள்கிறது. நிலைமாறாத அப்பக்தித்திறத்துக்கு, ஆசாரியரே நம்மை வழிநடத்தவல்லவர். அவரே, பெருமாளிடத்திலான சரணாகதியில் சோதனைகளையும் சாதனைகளாகக் கண்டு தெளிகின்ற பக்குவத்தைத் தந்தருள்கின்றார். திருப்பாவையின்  ‘ஆழிமழைக்கண்ணா’ என்று தொடங்குகின்ற பாசுரத்தில், மழையை இறைவனது திருவருளாகவும், மழைக்கு நிலைக்களமாகிய மேகத்தை ஆசாரியராகவும், மேகம், மழைநீரைப் பொழிவதற்கு மூலமாகிய கடலை இறைவனாகவும் உருவகிக்கக் காணலாம். அவ்வகையில், திருவருள் பொழிவில் நாம் இன்புற ஆண்டாள் நாச்சியாரையே ஆசாரியராகக் கொண்டு உய்யலாம்.

    ஆசாரிய அபிமானம், நமக்குக் காட்டியருள்கின்ற சரணாகதியில் என்றும் நிலைத்திருப்பதற்கு, அடியார் இணக்கமே சிறந்த கருவியாகும். எனவே, அடியார்கட்குத் தொண்டு செய்தலாகிய பேற்றினையே ஆய்ச்சியர்கள் பெருமாளிடத்தில் வேண்டுகின்றனர்.

    ‘என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைக் கொள்வான்’ என்றமைந்த ஆயர்குலப்பெண்களின்  வேண்டுதலில்,  ‘சேவகம்’ என்பது, என்றும் மாறாமல் அடியவர்க்குத் தொண்டுசெய்கின்ற அடிமைத்திறத்தைக் குறிக்கிறது. பெருமாளின் அன்பர்களாகிய அடியவர்களிடத்தில் அன்புகாட்டுதலே சிறந்த அறமாகையால், அத்தொண்டுநெறியினை ஆண்டாள்நாச்சியார் மேலும் வலியுறுத்துபவராக, ‘திருத்தக்க செல்வமும், சேவகமும் யாம்பாடி, வருத்தமும் தீர்வோம்’ என்று பாடியருளியுள்ளார்.

    பணிவையும், தொண்டுநெறியினையும் கருவியாகக் கொண்டு செயல்படுகின்ற ஆயர்குலப் பெண்கள், ‘நந்தகோபரையும், யசோதையையும், பலதேவரையும் துயிலுணர்த்துகின்றனர். அதன்பின்பு, கண்ணபிரானது பள்ளியறை முன்பு நின்று, திருக்கதவம் தாள் திறந்தருள நப்பின்னைப் பிராட்டியிடத்தில் வேண்டுகின்றனர். ‘அகலகில்லேன் இறையுமென்று, பெருமாளின் திருமார்பினை நீங்காத தேவியார், புருஷகாரமாகச் செயல்பட்டு, உயிர்களுக்குத் திருவருளைக் குறைவின்றிச் சுரக்கச் செய்பவர். பெருமாளை அழகாலும், ஆன்மாக்களை அறிவாலும் திருத்தவல்ல அவரது அணுகுமுறையே ‘புருஷகாரம்’ என்று போற்றப்பெறும்.

    பெருமாள்,  உயிர்கட்குக் கருணை செய்தலையே தமக்குரிய இயல்பாகக் கொண்டவராயினும், அவர் நொடிப்பொழுதும் அடியாரிடத்தில் பாராமுகமாக இருத்தலைப் பிராட்டி தாங்குவதில்லை. தம்மடியார்க்கு வேண்டுவனவற்றைக் குறைவின்றி வழங்கத் தாமும் ஒரு கருவியாவதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

    பெற்ற தந்தை, பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றக் கூடியவரே. ஆயினும், தாயுள்ளமே அத்தேவைகளை உரியநேரத்தில், உரியவகையில், உரியவாறு பிள்ளைகளிடத்தில் கொண்டுசேர்க்கத் தீராத துடிப்புகொண்டு, அவற்றை நிறைவேற்றவும் செய்கிறது. அத்தகைய பிராட்டியின் தாயுள்ளத்தாலேயே, பெருமாளிடத்திலிருந்து நாம் இடையறாத திருவருளைப் பெற்றின்புறுகின்றோம். அவ்வகையில், புருஷகாரமாக விளங்கி, கண்ணபிரானின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக வேண்டும் என்றும், கண்ணபிரான் உடனே துயிலெழுவதற்கு நப்பின்னைப் பிராட்டி அருளவேண்டும் என்றும்  வேண்டுகின்றனர்.  எனவே, ‘பள்ளியறையின் திருக்கதவத்தினை விரைவில் திறந்தருள்க!’ என ஆயர்குலச் சிறுமியர்,  நப்பின்னைப் பிராட்டியிடத்தில் வேண்டுகின்றனர்.

    ஆய்ச்சியர், கண்ணபிரானிடத்தில், ‘தாங்கள் துயிலெழுந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டும்’ என இறைஞ்சுகின்றனர். ‘நாங்கள் நோன்பு நோற்பதற்கு, வெண்சங்கும், பறையும், பல்லாண்டு இசைப்போரும், மங்கலவிளக்குகளும், கொடியும், விதானமும் தந்தருள வேண்டும்’ எனக் கண்ணபிரானிடத்தில் வேண்டுகின்றனர். கண்ணபிரான் அவற்றைக் குறைவின்றி அருளினால், ‘ஐயமிடுதல், பிச்சையிடுதல் முதலானவற்றை உள்ளடக்கிய தொண்டுநெறியில் நோன்பும் இனிதே நிறைவுறும்’ என வேண்டுகின்றனர். நோன்பின் நிறைவில் அம்மகிழ்ச்சியினைக் கொண்டாடுவதற்கென, சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாத கடகம் முதலான அணிகளையும், பட்டாடையையும் பெற்று மகிழ்வோம்; அத்துடன், நெய்கலந்த பாற்சோறினைக் கூடியிருந்து உண்டு மகிழ்வோம்’ என்கின்றனர்.

    இங்குச் சுட்டப்பெறுகின்ற அணிகலன்கள், உடலழகுக்குப் பயன்படுவன அன்று; உள்ளத்தைப் பொலிவுறச்செய்கின்ற பக்தியினை அவை வளரச்செய்வன. கைகளை அலங்கரிக்கின்ற  ‘சூடகம்’ என்பது, பெருமாளைத் தவறாமல் கைகள் குவித்து வணங்குதலைக் குறிக்கும். தோள்களை அழகுபடுத்துகின்ற ‘தோள்வளைகள்’ என்பவை, ஆசாரியனால் அடியவனாக ஆட்கொள்ளப்பெறுவதன் அடையாளமாக, சங்கும் சக்கரமும் பொறிக்கப்பெறுதலைக் குறிக்கும். ‘தோடு’, ‘செவிப்பூ’ என்பன, ஆசாரியனிடமிருந்து பெறுவதாகிய திருமந்திர உபதேசங்களைக் குறிக்கும். காலணியாகிய  ‘பாடகம்’ என்பது, கால்களால் திவ்யதேசங்கள்தோறும் நடந்துசென்று, பெருமாளின் அர்ச்சைநிலைகளைக் கண்ணாரக் கண்டு தொழுகின்ற பக்தி அணுகுமுறைகளைக் குறிக்கும்.

    இறைநெறியில் ஆன்மாவுக்குத் தடையாவன: 

    இறைவனைப் பற்றுதலென்பது, நம்முயற்சியாக அன்றி, அவனருளாலே அனைத்துவகைப் பிறப்புகளுக்கும் அருளப்பெறுவது. இத் திருவருள் உறவினை ஆண்டாள் நாச்சியார், ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்கஒழியாது’ என்று திருப்பாவையில் சாற்றியுள்ளார். ஆயினும், சீவான்மாக்களாகிய நாம், அவ் உயர்வினை உணராது, உலகியலில் நாட்டம்கொண்டு, பிறந்த பிறப்பின் பயனை உணர்வதில்லை. உடலாலும், மனத்தாலும், செயலாலும் தீவினைகள் பல புரிகின்றோம். அதன்வழியே, துன்பப் பிறப்புகளுக்கு வாயில் அமைக்கின்றோம். இவ்வாறு திருவருளுறவுக்குத் தடையானவற்றை நீக்கியுய்ய ஆண்டாள்நாச்சியார் பாவைநோன்பின் வழி ஆற்றுப்படுத்துகின்றார்.

    தம் தோழியருடன் மேற்கொள்வதாகிய பாவைநோன்பில், தீக்குறளைச் சென்று ஓதாமை, செய்யாதன செய்யாமை,  ‘நான்’; ‘எனது’ என்ற தன்முனைப்பை வளர்க்கின்ற செய்கைகளைச் செய்யாமை எனக் கீழானவற்றைத் தவிர்க்க வலியுறுத்துகின்றார்.  சீர்மல்கிய ஆயர்க்குலச் சிறுமிகளுக்கு, ‘தொண்டினாலேயே இறைவனை அடையஇயலும்’ என்பதனை வலியுறுத்துகின்றார்.  ‘பெருமாள் அருளிய உலகஇன்பங்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் அவரைப் பணிவதனால், நமது சிற்றின்பஆவல், அவரையே பெற்றின்புறுவதாகிய பேரின்பத்தைத் தந்தருளும்’ என்கின்றார்.

    ‘நமது அறிவால் அவரைப் பணிகின்றோம்’ என்பதல்லாமல்,  ‘அவனருளால் அவரைப் பணிகின்றோம்’ என்னும் சரணாகதியில் உறுதிபடநிலைக்கச் செய்கின்றார். ‘கானகத்தில், பசுக்களை மேய்க்கின்ற ஆயர்குலச் சிறுமியராகிய நாங்கள் சிற்றறிவுடையவர்களே! ஆயினும், பக்திமேலீட்டினால் உமது திருப்பெயர்களை நாங்கள் அறிந்தவாறு சொல்லிப் பணிந்துள்ளோம்!’. ‘எமது குறைகளையும் குணமாகக் கொண்டருள்க!’ எனத் தமது தற்சிறுமையினை வெளியிட்டு ஆயர்குலச் சிறுமியர்கள் பெருமாளிடத்தில் சரண்புகுவதாகப் பாடியுள்ளார். மேலும், ‘மேற்கண்ட நன்னிலைகளுக்குத் தடையாகவுள்ள உலகியல் சிறுமைகளிலிருந்து, சிற்றுயிர்களாகிய நம்மை நீக்கியருளவேண்டும்’ என்றும் பணிகின்றார். அதற்கென, ‘மற்றை நம் காமங்கள் மாற்று’ எனப் பெருமாளிடத்தில் வேண்டுகின்றார். இவ்வாறு, ‘உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும் உயர்தூய்மை உடையவர்களாக, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், நமது தீவினைகள் அனைத்தும், தீயினில் பட்ட தூசாக அழியும்’ என்கின்றார். அத்தூய்மை நிலையினில் எப்பொழுதும் நிலைகொள்வதற்குக் கருவியாக,  ‘அடியார் இணக்கத்தை’ வலியுறுத்துகின்றார். ‘தம்மைமறந்து, அடியவர்க்காக மட்டுமே சிந்திக்கின்ற தொண்டுநெறியினால்,  நம்மிடையே அன்புநெறி சிறக்கும்’;  அவ் உயர்மனப்பாங்கு, நமது உள்ளத்தாமரையில் பெருமாளை நிலைப்பெறச் செய்யும்’ என்பது திருப்பாவை காட்டுகின்ற பக்திநெறியாகும்.

    முடிவுரை:  

    மார்கழி நீராடுதல்’ என்பது, ஆன்மாக்கள், திருவருள்வெள்ளத்தில் தம்மைத் தூய்மையாக்கிக் கொள்வதனைக் குறிக்கும். ஆற்றில் இறங்கிநிற்போன், தனது கைகளில் அகப்படுவதனைப் பாதுகாப்பிற்காகப் பற்றுதல் இயற்கை. அதுபோல, ஆழம் காணஇயலாத பக்திக்கடலில், நாம் பற்றி உய்கின்ற புணையாகப் பெருமாள், திருப்பாவையினை அருளியுள்ளார். தீவினைகளை நீக்கியருளவல்ல மாயனாகிய பெருமாளின் பரத்துவமும், தற்சுதந்திரமின்றி, அவனுக்கே அடிமைபூணுதலாகிய ஆன்ம இயல்பும், சிற்றுயிர்களாகிய நமக்கு,  திருவருளே  உற்ற பயனென்பதும், அடியவருடன் கூடியிருந்து அவர்க்குத் தொண்டுசெய்தலே திருவருள்நெறி என்பதும், உடல், உள்ள, செயல் சிறுமைகளே, திருவருள் நெறிக்குத் தடையாவன என்பதும் திருப்பாவை உணர்த்துகின்ற அர்த்தபஞ்சக ஞானமாகும்.

    Share