-முனைவர் இரா. மதன் குமார் 

முன்னுரை

உயிர்கள், சார்ந்ததன் வண்ணமாய் விளங்கவல்லவை. அவை, மும்மலங்களின் தொடர்பால், நிலையில்லாத உடம்பே, தாம் என மயங்குகின்றன; உடம்பின் வழியே  பெண்ணின்பமே பெரிதென அழிகின்றன. உயிர்கள் இவ் அறியாமை நீங்கி, கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, உற்று அறிதலாகிய பேரறிவு ஐந்தாலும்,   தலைவனாகிய இறைவனை உணர்ந்து, ‘திருவடி இன்பமே பேரின்பம்’ என்னும் ஞானநிலையினை எய்தவேண்டும். அதற்கு, ‘உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்’ என்னும் பெருநிலையில், புலன்இன்பங்களைப் பேரின்ப நெறிக்குரியதாகப் பண்படுத்திக் கொள்ளவேண்டும். அளவுகடந்த புலனின்ப நாட்டத்தை, இறைவன்பால் மடைமாற்றம் செய்கின்ற முயற்சியாகவே, சமயக்குரவர், சந்தானக் குரவர் முதலான அருளாளர்கள், தமது திருப்பதிகங்களில் அகத்துறையினையும் பாடுபொருளாகக் கொண்டு பாடியுள்ளனர்.  அவ்வகையில், ஒன்பதாம் திருமுறை ஆசிரியர்களுள் ஒருவராகிய திருமாளிகைத் தேவரது, ‘உறவாகிய யோகமும்’ என்ற திருப்பதிகம் பேரின்பப் பெருநெறி காட்டுகின்ற திறத்தை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

அருள்துறையுள் அகத்துறை

திருமாளிகைத்தேவர்தம் அருளியல் வாழ்வானது, தில்லைத்திருத்தலத்துடன் மிகநெருங்கிய தொடர்புடையது. அவர் அருளியதாக உள்ள நான்கு திருப்பதிகங்களும், தில்லைத் திருத்தலத்திற்கு உரியவையாக விளங்குகின்றன.  அவற்றுள் மூன்றாவது திருப்பதிகம், அகத்துறைப் பொருண்மையில் அமைந்துள்ளது. இத்திருப்பதிகத்தில், ‘காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்கின்ற நோக்கில்,  இறைவனுக்கான அருள்துறையினைப் பாடுவதற்கு அகத்துறையும் பாடுபொருளாக அமைந்துள்ளது. அகத்துறை வழியே அருள்துறையைப் பாடுங்கால், சிற்றின்பநிலைப் பொருண்மைகள், திருவருள் தொடர்புடைய தத்துவநிலைகளாக, உள்ளுறைப் பொருள் தருவனவாக அமைகின்றன.

இத்திருப்பதிகத்துள், தலைவனாக,  பரம்பொருளாகிய சிவபெருமானும், தலைவியாக,  பக்குவ ஆன்மாவும் வைத்து உணரப்பெறுகின்றனர். பதிகப் பொருண்மை அளவில், மணிவாசகப்பெருமானால் தில்லையில் அருளிச்செய்யபட்டதாகிய, ‘கீர்த்தித் திருஅகவல் மற்றும் போற்றித் திருஅகவல்’ முதலான திருப்பதிகப் பொருண்மைகள், சிவனார் பெருந்திறமாக விரித்துரைக்கப்பெற்றுள்ளன.

நாதாந்தத்துக் குணக்குன்று

பெருமானே, அண்டத்திலும், பிண்டத்திலும் நாதாந்தக் கூத்தாடி அனைத்தையும் இயக்குகின்றான். அத்துடன், தத்துவங்களின் முடிவாகிய நாததத்துவத்தையும் கடந்த பரத்துவம் கொண்டும் விளங்குகின்றான்.  “நாதாந்த நாடகத்தை நன்றாய் அருள்செய்தீர்” (உண்மை விளக்கம்: பாடல்:39) எனப் பெருமானின் தத்துவாதீதப் பரத்துவம் போற்றப்பெறும். ஓயாத அவனது அருள்கூத்தினாலேயே, அண்டம், பிண்டம் ஆகியவை இயங்குகின்றன. ஞானாகாசப் பெருவெளியில் அணுவுக்கும் அணுவாக இருந்து ஆடி ஆட்டுவிக்கின்ற பெருமான், அனைத்துயிர்களிலும் உயிர்ப்பாக இருந்து அவற்றையும் ஆட்டுவிக்கின்றான்.

      “தில்லை மூதூர் ஆடிய திருவடி
       பல்லுயிர் எல்லாம் பயின்றனவாகி
       எண்ணில் பெருங்குணம் எழில்பெற விளங்கி…” (திருவாசகம்: கீர்த்தித் திருஅகவல்: அடிகள்: 1-3) என்பது, மணிவாசகரின் அருள்வாக்கு.   இவ்வாறு, அருமையாம் பெருந்திறமும், எளிமையாம் கருணைத்திறமும் ஒருங்கே விளங்குகின்ற பெருமானை மேலும் போற்றுபவராக மணிவாசகர்,
“அருமையில் எளிய அழகே போற்றி”   (திருவாசகம்: போற்றித் திருஅகவல்: அடி: 126) எனக் குறித்தருளியுள்ளார்.

குணமும் குறியும் கடந்த பெருமான், தன்னை உயிரறிவுக்கு உணர்த்தி அருளவேண்டி, குறித்த குணமும், குணப்பொருளாகவும் எழுந்தருள்கின்றான். எனவே திருமாளிகைத்தேவர், பெருமானை இத்திருப்பதிகத்தின், அனைத்துத் திருப்பாடல்களிலும் ‘குணக்குன்றே’ என விளித்து மகிழ்ந்துள்ளார். அத்துடன், பெருமானின் அருமை, எளிமை ஆகிய இருவேறு பெருங்குணங்களையும் நமக்கு உணர்த்தத் திருஉள்ளம் கொண்டுள்ளார். அத்திருக்குறிப்புடன், ‘கயிலை மலைப்பெருமானே, தில்லையில் அருள்கூத்தனாக விளங்குகின்றான்’ என்று அருளிச்செய்துள்ளார். மேலும், கயிலை மலையில், பெருமான்,  உமையம்மைக்கு, ஆகமப் பொருளை உபதேசித்தருளிய பாங்கினையும், காடுறை வேடனென உமையோடும் கானகத்தில் நடந்தருளிய அருங்கருணையையும், சங்காரகாரணனாகிய பெருமானின் பரத்துவத்தை விளக்குகின்ற திருநீற்றுப்பொலிவழகையும் இப்பதிகத்துள் எடுத்தாண்டுள்ளார்.

உறவாகிய யோகமும் போகமுமாய் உயிராளீ

இத்திருப்பதிகமானது, ‘உறவாகிய யோகமும்’ எனத் தொடங்குகிறது. ‘ உறவு – யோகம் – போகம் – உயிராளீ’ என்பது பதிகத்தின் முதற்தொடராகும். உறவாவது, உயிர், ஞானநெறி வழியே இறைவனுடன் கொள்கின்ற பிரிவறியாத திருவருளுறவாகும்; திருவருளுறவின் வழியே இறைவன் மீதான பற்று நீங்காது, அவனுடன் ஒன்றியிருத்தலே யோகமாகும்; போகமாவது, இன்பம் நுகர்தல். அந்நிலையானது,

            “வாக்கிறந்த அமுதம் மயிர்க்கால் தோறும்
            தேக்கிடச் செய்தனன்…
            அற்புதமான அமுத தாரைகள்
            ஏற்புத் துளைதொறும் ஏற்றினன்” (கீர்த்தித் திரு அகவல்: அடிகள்170-171, 175-176) என்றமைகின்ற பேரின்ப அனுபவமாகும். இவ்வாறு, உயிர்களின் உறவாகவும், யோகமாகவும், போகமாகவும் இருந்து,  உயிர்களை ஆள்கின்ற பசுபதியாக பெருமானைப் போற்றித் திருமாளிகைத்தேவர்,  இப்பதிகத்தைத் தொடங்கியுள்ளார்.

புரம் செற்ற சிலைகொண்ட வில்லாளி
தனது மகளது நிலைக்கு இரங்குகின்ற செவிலித்தாயின் கூற்றுகளாக அமைந்துள்ள இப்பாடல்களில், அருச்சுனருக்குப் பாசுபதப் படைக்கலம் அருளவேண்டி, வேடுவக்கோலம் ஏற்றுவந்து, பெருமான் புரிந்த திருவிளையாடல் போற்றியுரைக்கப்பெற்றுள்ளது. இவ்வரலாற்றினைக் குறிக்கின்ற முதலாவது திருப்பாடலில், பெருமான், முப்புரத்தை எரிஅம்பு செலுத்தி அழித்தொழித்த வில்லுடன், கானகத்தில் பன்றியை வீழ்த்தத் துரத்தி நடந்ததாகக் குறிக்கப்பெற்றுள்ளது.

             “சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
              சிலைகொண்டு பன்றிப்பின் சென்றுநின்ற
             மறவா”  (உறவாகிய யோகமும்: பாடல்: 1)

என்றமைந்த தொடர்களில்,  ‘முப்புர அழிப்புக்காக, பெருமான் கைக்கொண்ட வில்லுடன், அருச்சுனருக்கும் அருளவந்ததன் காரணத்தைத் திருமாளிகைத்தேவர் உள்ளுறைப் பொருளாக விளக்கியுள்ளார். “முப்புராதியர்கள், பெறுதற்கு அரிய பேற்றினைப்பெற்ற ஆணவத்தால் பெருமானை மறந்து, மண்ணுயிர்களுக்குத் தீமையினை மட்டுமே செய்து துன்புறுத்திவந்தனர். பெருமான் அவர்களது அறியாமையினை அகற்றி அருளவேண்டி, எரியம்பினை எய்து முப்புரங்களை அழித்தொழித்தார். அது பெருமானது மறக்கருணைக்குச் சான்றெனலாம். முப்புராதியர்கள் தாம்பெற்ற உயர்ப்பேற்றினை மறந்ததும் அன்றி, தமக்கு அவ் உயர்ப்பேற்றினைத் தந்தருளிய பெருமானையும் மறந்து மயங்கினர்.

பேறு தந்தருளிய பெருமானை மேன்மேலும் மறவாது வழுத்துதல், நம்மைக் குறையாத திருவுடையாராக விளங்கச்செய்யும். ஆனால், மலமறைப்பாகிய அறியாமையில் ஆழ்ந்த முப்புராதியரிடத்தில், ‘தாம் பெற்ற பேற்றிலும் இனிப் பெறத்தக்க பேறு எவையும் இல்லை’ என்று மயங்குகின்ற அறியாமையே விளைந்தது. அதனால் அவர்கள், ‘சிறவாதவர்’ என்று ஆசிரியரால் இகழ்ச்சிப்பொருளில் சுட்டப்பட்டுள்ளனர்.  அத்தகைய இகழ்ச்சிச் சுட்டு, மனித உயிர்களாகிய நமக்கும் பொருந்துவதாகும். காரணம், நமக்குப் பெருமானால் அருளப்பெற்ற பிறப்பின் பெரும்பயனை நாம் உணராமல், வாழ்நாளை வீணே கழிக்கின்றோம். அத்தகைய அறியாமையினை உணர்த்தி, பெருமானைப் பற்றி உய்ய, அருச்சுனனின் பக்தித்திறத்தையும், பெருமான் அவர்க்கு இரங்கியருளிய திறத்தையும் பதிகப்பொருண்மையாக, திருமாளிகைத்தேவர் எடுத்தாண்டுள்ளார்.

நெடும்பகல் நடந்த வேடர்

அடியவர்’ என்பதை மறந்தவர்களுக்காக நிகழ்த்திய முப்புர எரிப்பில், பெருமானின் அளப்பரும் வீரத்தின் வெளிப்பாடாகிய மறக்கருணை வெளிப்பட்டது எனலாம். ஆனால், அருச்சுனரோ, பக்குவநிலை கொண்ட அடியவராகப் பெருமானை நோக்கித் தவமியற்றினார். அதனால், அருச்சுனருக்கு அருளவேண்டிப் பெருமான், காடுறை வேடனென வந்தருளினார். அந்நிலையில், அவர்தம் தாயின் நேர் தயாகுணமும், தாம் புண்சுமந்தேனும் அடியவர்க்கு அருள்கின்ற அருட்கருணையும் விளங்கக்காணலாம்.

“முகாசுரன் என்னும் அசுரன் அருச்சுனரைக் கொல்லவந்த வேளையில், அவ்அசுரனிடமிருந்து அருச்சுனனைக் காப்பதற்கு பெருமானே, வேடுவக் கோலம் தாங்கினார். அவர் வேடுவக்கோலம் தாங்கி, தாம் மட்டும் தனியே நடவாமல், வேடுவச்சியாக அம்மையையும் உடன்அழைத்துவந்து, திருவடிகள் நிலந்தோயும் வண்ணம், நெடும்பகல் நடந்தார்” எனத் திருமாளிகைத்தேவர் பெருமானின் வேடுவத் திருவிளையாடலைக் குறித்தருளியுள்ளார்.

            “வண்டார் குழல்உமை நங்கை முன்னே
              மகேந்திரச் சாரல்  வராகத் தின்பின்
             கண்டார் கவலவில் லாடி வேடர்
              கடிநா யுடன்கை வளைந்தாய்”   (உறவாகிய யோகமும்: பாடல்:6)

காடாடு பல்கணம் சூழக் கேழற்
              கடும்பின் நெடும்பகல் கான்நடந்த
              வேடா”         (உறவாகிய யோகமும்: பாடல்:2)

கானகத்தில் நெடும் பகல்பொழுது முழுவதும் கழிய நடந்தநிலையில், பெருமானின் எளிவந்த கருணை விளங்குகிறது.

அருச்சுனருக்கு அருளவேண்டி, அன்று கானகத்தில் திருவடிதோய நடந்த பெருமான், இன்று தனக்கு அருளவேண்டிப்  பலகாலும் வருந்தி அழைத்தும் வாரமையைக் கண்டு, தலைவி ஆற்ற இயலாமல் புலம்புவதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

          “சேவேந்து வெல்கொடியானே என்னும்
               சிவனே என் சேமத் துணையே என்னும்
          மாவேந்து சாரல் மகேந்திரத்தின்
               வளர்நாய காஇங்கே வாராய் என்னும்”                 (உறவாகிய யோகமும்: பாடல்: 8)

நாதாந்த பதம் நல்கும் தனிநாயகன்

     பெருமானது வேடுவக் கோலப்பொலிவழகு, திருமாளிகைத் தேவரின் சொல்லோவியமாக, வேடன் ஒருவனையே நமது கண்முன்னர் கொண்டுவந்து நிறுத்துகின்ற சிறப்புடையது. ‘சுடுகாட்டின் பல்பூதங்களும், வேற்றுருக் கொண்டுப் பெருமானைப் பின்தொடர்ந்தன;  வேடுவனாகிய பெருமான், விரைந்து பறை ஒலிக்கவும், அம்பினை விரைந்து செலுத்தவல்ல வலிய வில்லையும், அம்பையும்  கையில் ஏந்தியதுடன், குறுவாளும் உடன்இருக்க, கல்லைச் செலுத்தப் பயன்படுவதாகிய கவண்கருவி ஆகியவற்றுடன்,  வெற்றிக்குரிய ஆரவாரம் சிறிதும் குறையாமல், சீழ்க்கை ஒலி எழுப்பிப் பன்றியின் பின்னால் விரைந்து நடந்தார். அவர், இடுப்பில் புலித்தோலாடையினைப் புனைந்தும், திருவடியில் தோல் செருப்பினை அணிந்தும் வந்தார்’ என்று பெருமானின் வேடுவக்கோலப் பொலிவழகு, திருப்பதிகத்தின் ஏழாம் திருப்பாடலில் சிறப்புறச் சுட்டப்பெற்றுள்ளது.

நாததத்துவத்தையும் கடந்த அரும்பொருளாகிய பெருமான், தன் அடியவருக்கும் அத்தகைய பெருநிலையினை அருளவல்லவர். வேண்டுவார் வேண்டுவதை ஈவதையே இயல்பெனக் கொண்ட பெருமானிடத்தில், நாதாந்த பெரும்பேற்றினை விழைந்தவர், திருமாளிகைத்தேவர். அன்று அருச்சுனருக்கு எளிவந்த கருணையுடன் நாடிவந்து அருளியவகையில், தமக்கும் நாதாந்த பெரும்பதத்தை அருள, பெருமான் இரங்கியருளவேண்டும் என்ற வேண்டுதலே,

           “கடுப்பாய்ப் பறைகறங் கக்கடுவெஞ்
சிலையும் கணையும் கவணும் கைக்கொண்
  டுடுப்பாய தோல் செருப் புச்சுரிகை
வராகம்முன் ஓடு விளிஉளைப்ப
                          நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்
தரையாஎன் பார்க்குநா தாந்தபதம்
                          கொடுப்பாய் என் னும் குணக் குன்றே என்னும்
குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே”                (உறவாகிய யோகமும்: பாடல்: 7) என்னும் திருப்பாடலாக அமைந்துள்ளது.

குருவாக வந்தருளாயோ

நாதாந்தப் பெரும்பேற்றினை அருளவேண்டிய திருமாளிகைத்தேவர், ‘குருவே சிவம் எனக் கூறினன் நந்தி’ என்னும் பெருமொழிகளை நினைகின்றார். கயிலையில்,  மலைமகளுக்குக் குருவாகி, ஆகமப்பொருளை அன்று விரித்துரைத்த பெருமான், திருமால் முதலான தேவர்களுக்கும் குருவாக விளங்கியவர்.

             “மகேந்திரப் பொன்மலையில் மலைமகளுக்கருளும் குரு” (உறவாகிய யோகமும்: பாடல்: 10)

             “சுடர்நீள் முடிமால் அயன் இந்திரன் முதல் தேவர்க்கெல்லாம் குரவா”                                                     (உறவாகிய யோகமும்: பாடல்: 9) என்று பெருமானின் ஞானாசிரியநிலையைப் போற்றுகின்றவேளையில், அவரே  தனக்கும் குருவாக எழுந்தருளுதற்குப் பேராவல் கொள்கின்றார். ‘பசுபதியாகிய பெருமானைப் பற்றுதற்கு பசுநூல் ஓதுவிக்கும் அறியாமை மிக்க குருவால், உயிரறிவு எள்முனை அளவும்கூட விளக்கம்பெறாது’ என்பது அவர்தம் ஞானத்தெளிவு. அத்தகைய கீழோரைக் கண்ணால் காண்பதையும், அவருடன் உரையாடுவதையும் தாம் புரியேன்’ என்பதனைத் திருமாளிகைத்தேவர்,

 “கயவரைப் பசுநூல் கற்கும்
 பிச்சரைக் காணா கண்வாய்
       பேசாதப் பேய்க ளோடே”                             (இணங்கிலா ஈசன்: பாடல்: 9)

என உறுதிபடச் சாற்றியுள்ளார்.  பற்றாகவும், பற்றப்படுகின்ற பொருளாகவும், அதனைப் பற்றுதற்குரிய வழியாகவும், வழித்துணையாகவும், பெருமானே விளங்குகின்ற நிலையினைத் திருமந்திரம், ‘காண வல்லார்க்குக் கண்ணின் மணி’ (திருமந்திரம்: 2823) என உணர்த்துகிறது. அவ்வகையில், பெருமானே தமக்குக் குருவாக இரங்கியருளவேண்டும் என்பதனைத் திருமாளிகைத்தேவர்,

           “நெறியே என்னும் நெறிநின்றவர்கள்
                       நினைக்கின்ற நீதிவே தாந்தநிலைக்
                   குறியே”     (உறவாகிய யோகமும்: பாடல்: 4)                          என்றும் குறித்தருளியுள்ளார்.

உமையம்மைக்கும், தேவர்களுக்கும், சனகாதி முனிவர்களுக்கும் அமைந்த அருள்பக்குவநிலையால், அவர்கள் பெருமானையே குருவாகப் பெற்றுய்ந்தனர்; அத்தகைய பக்குவநிலையில், பெருமானையே நினைந்துருகி, அவனது பெரும்பெயராம் திருவைந்தெழுத்தை ஓதிக் கரைந்து, குறையாத பேரன்பில் பெருகி, பிறவிப்பிணி தீர்க்கின்ற திருநீற்றுப் பொலிவுடன் திகழ்வதாகிய தம் பக்குவநிலையினைத் திருமாளிகைத்தேவர் அகத்துறைப் பதிகத்தில் உள்ளுறைப்பொருளாகக் குறித்தருளியுள்ளார்.

                “உற்றாய் என் னும் உன்னை யன்றி மற்றொன்
             றுணரேன் என் னும் உணர் வுள்கலக்கப்            பெற்றாய ஐந்தெழு த்தும்பிதற்றிப்
                         பிணிதீர் வெண் ணீறிடப் பெற்றேன் என்னும்
            சுற்றாய சோதி மகேந்திரம் சூழ
                மனத்திருள் வாங்கிச்சூ ழாத நெஞ்சில்
            குற்றாய் என் னும் குணக் குன்றே என்னும்
                குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே”                 (உறவாகிய யோகமும்: பாடல்:11)
என்றமைந்த திருப்பாடல், பேரருள் விழைவில் தன்வயமிழந்த தலைவியின் நிலையாக, திருமாளிகைத்தேவரின் அருள்பக்குவநிலைக்குச் சான்றாகிறது.

பேரருள் திளைப்பில் சீவன்முத்தநிலை

 ‘சிவமே பெரும்பொருள்’ என்றும், ‘திருவருளே பெரும்பொருள்’ என்றும் தெளிந்தவராகிய திருமாளிகைத்தேவர், திருவருள் நிலைப்புக்குக் காரணமாகிய அடியார் இணக்கத்தையே விழைகின்றார். அதனால், ‘பூசுவதும் திருநீறு, பேசுவதும் பெருமானின் திருப்புகழாம்’ என்று விளங்குகின்ற உயர்அடியார் உடனான இணக்கத்தையே நாடுபராக,  ‘திருநீறிடா உருத்தீண்டேன்’ என்று குறித்தமைகின்றார்.

அடியார்களுடனான இணக்கம், தம்மைச் சிறுபொருளாகக் கருதி, தான் என்கின்ற ஆணவச் செயல்பாட்டை மறக்கச்செய்யும்; தம்மை மறந்து, பெருமானையே பெரும்பாருளாகக் கருதி அவரைப் பற்றுகின்றநிலையில் பித்தேறி, உயிர் தனது சுற்றுப்புறத்தை முற்றிலும் மறக்கும். தானும் சிவமும் ஒன்றாக, ஏகபோகமாகக் கலந்த பேரின்பநிலையாக அது விளங்கும். அப் பெருநிலையில், பெருமான் உவப்பவையே தனக்கும் உவப்பாகக்கொண்டு, காண்பன யாவற்றையும் சிவமாகக் கண்டும், பூண்பன யாவற்றையும் சிவமாம் தன்மைக்குரியதாகப் பூண்டும், தன்னைச் சிவமாகவே உணர்கின்ற பேறும் உயிர்க்கு வாய்க்கும். அத்தகைய பெருநிலை கைவரப்பெற்றவராகத் திருமாளிகைத்தேவரும் விளங்கினார். அவர்தம் அருளனுபவப் பேறு,

            “திருநீறிடா உருத் தீண்டேன்”    உறவாகிய யோகமும்: பாடல்: 10) என்ற உறுதிமொழியாக, அடியார் கூட்டத்துடனான அரும்பேற்றுக்கு வழிகாட்டுகிறது.

மேலும், ‘உற்றாய் என்னும்’ என்ற பதினொன்றாம் திருப்பாடலில், ‘செம்மை மனத்துத் திருஅடியார்’ எனத் தலைவி விளங்குவதன் அடையாளமாக அவள், ‘திருநீற்றுக் கவசம் புனைந்துள்ளாள்’ எனச் சுட்டப்பெற்றுள்ளது. அத்துடன், திருநீறு புனையாதவரைப் பாவி எனக் கருதுகின்ற குறிப்பும் அமைந்துள்ளது. திருமாளிகைத்தேவர், ‘பெருமானின் திருமேனி, திருநீறால் பொலிந்திலங்குகின்ற பேரழகைத் தம் அகக்கண்ணால் கண்டின்புற்றவர்’  எனலாம். அவ்அருளனுபவப் பதிவே, அவர் பெருமானை, ‘நீறணி பவளக்குன்றமே’ (ஒளிவளர் விளக்கே:பாடல்: 6) என்று போற்றிப்பாடியுள்ள நிலையாகும். பெருமானிடத்தில் பொலிகின்ற திருநீறு முதலான சிவச்சின்னங்கள்  மக்கள்தம் அறியாமைநோய்க்கு மருந்தாகின்ற திறத்தை, திருஞானசம்பந்தர் முதலானோர் திறம்பட உணர்த்தியுள்ளனர். அந்நெறிவழியே திருமாளிகைத் தேவரும், ‘அரனடியார்கள், உலகின் தீமைகளை நசித்து ஒழிக்கவேண்டித் திருநீறு தரிக்கின்றார்கள்’ என ஏற்றிப் போற்றியுள்ளார்.

                  “தீய நசிக்க வெண்ணீறதாடும் நமர்கள்”                              (இணங்கிலா ஈசன், பாடல்: 5)

அரனடியார்களது பெருநோக்கத்தை உணராத மக்கள், திருநீறு முதலான சிவச் சின்னங்களையும் தரிக்க வாய்ப்பற்று, பெருமானை உணர்கின்ற பெருநெறிக்குத் தலைப்படுவதும் அரிதாகும். அவர்கள் திருநீறு பொலிகின்ற அரனடியார்களை, அரனாகவே கண்டு வழிபடுகின்ற பக்குவநிலைக்கும் தலைப்படார். மக்கள், அடியார் கூட்டத்துடனான இருப்பினாலும்,  திருநீறு முதலான, சிவவேடப் பொலிவினாலும், பக்திநெறியில் மேம்பட்டுய்ய வேண்டும். இவ்அருநெறியினை உணர்த்தவே தலைவி, திருநீறு தரியாதவரைத் தான் ஒருபோதும் நாடேன்’ என்று உறுதிபடக் கூறுவதாகத் திருமாளிகைத் தேவரால் விளக்கப்பட்டுள்ளது.  

முடிவுரை
‘உறவாகிய யோகமும்’ என்று தொடங்குகின்ற இத்திருப்பதிகமானது, ஐந்து பேரறிவும் பேரின்ப நெறியில் செல்ல வழிகாட்டுவதாகும். அனைத்து திருப்பாடல்களும் தில்லை அம்பலவனுக்காகத் தலைவி இரங்குகின்ற நிலையினைக் குறிப்பதாக அமைந்துள்ளன. பசுக்களாகிய ஆருயிர்கள், பதியாகிய பெருமானை அடைவதற்குக் கொள்கின்ற பேரின்பஆவலை இத்திருப்பாடல்கள், பேரின்பப் பொருள்கொண்டு விளக்குகின்றன.

தில்லை அம்பலவன், ஆருயிர்க்கு நாதாந்தப் பெரும்பேறு நல்கவல்ல நாதாந்தக் கூத்தினை ஆடியருள்கின்றான். பெருமானின் பெருங்கருணைத் திறமே, அவனது கூத்தாக அமைகிறது எனத் திருமந்திரம், பெருமானது திருக்கூத்துக்கான தத்துவத்தை விளக்கியருளும். அத்தகைய தத்துவத்தை மேலும் எளிமையுற விளக்கவேண்டியே திருமாளிகைத்தேவர், அம்பலத்துக் கூத்தனாகிய பெருமான், அருச்சுனருக்கு அருளவேண்டி, வேடுவக்கோலம் தாங்கி வந்ததாக  இப்பதிகத்தில் எடுத்தாண்டுள்ளார். அத்திருப்பாடல்களின் வழியே புலனாகவல்ல பெருமானின் வேடுவக்கோலம், உள்ளக்கிழியில் அவன் உருவைப் பலகாலும் எழுதிப்பார்த்து, பெருமானே, ‘புவன போகமும், யோக வெள்ளமும்’ என உணரச்செய்யும்; அவ் அன்பின் விரிவு,  அண்டத்திலும், பிண்டத்திலும் பெருமான் இருந்தாடுகின்ற பெருங்கூத்தினை, அகக்கண் கொண்டு தொழுதுய்ய வகைசெய்யும்.

ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

  1. ஒன்பதாம் திருமுறை, டாக்டர் இராச. வசந்தகுமார் (ப.ஆ), பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,

கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம், கோயம்புத்தூர் -21. முதல் பதிப்பு: ஏப்ரல்: 2016.

  1. திருவாசகம், சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை. நான்காம் பதிப்பு: 1999.
  2. திருமந்திரம், சிவ ஆ.பக்தவச்சலம் (ப.ஆ), “தமிழ் வேதம்” மாத இதழ், குடியாத்தம்.        வெளியீடு: 2007.

*****

கட்டுரையாளர்,
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கற்பகம் உயர்கல்விக் கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 21.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *