அப்பர் திருத்தாண்டகத்தில் காஞ்சித் திருக்கோயில் தொன்மங்கள்

0

சு. கோப்பெருந்தேவி1*, முனைவர் இரா. மதன் குமார்2*.,
தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

————————————-

முன்னுரை
சான்றோர்களால் சிறப்புப்பெற்றது, தொண்டைநாடு. அந்நாட்டின் காஞ்சிநகரமானது, ‘உலகுயிர்கள், பெருமானை வழிபட்டு உய்வதற்குரிய பெருஞ்சிறப்புடையது’ எனக் காஞ்சிப்புராணம் கூறுகின்றது. ‘க’ என்பது, பரம்பொருளாகிய பெருமானைக் குறிக்கும். ‘அஞ்சித்தல்’ என்பது, ‘வழிபடுதல்’ எனப் பொருள் தரும். அதன்வழி, ‘ஆருயிர்கள், பெருமானை வழிபட்டுய்வதற்கு உகந்த திருத்தலம்’ என்கின்ற குறிப்பில், ‘காஞ்சி’ என அந்நகரம் போற்றப்படுகிறது. புறத்திணையில், ‘காஞ்சி’ என்பது, நிலையாமையைக் குறிக்கும். நாம் அனைவரும், உடலின் நிலையாமையை உணர்ந்து, திருவருளாகிய அம்மையின் துணையுடன், பெருமானைப் பற்றி உய்வதற்கு வழிகாட்டுகின்ற அருள்நிலையமாக அந்நகரம் விளங்குகிறது. அந்நகருள், சைவப்பெருநெறிக்கு நிலைக்களமாகிய, திருமுறை பாடல்பெற்ற திருக்கோயில்கள் பல அமைந்துள்ளன. அவற்றுள், திருக்கச்சி ஏகம்பம், திருக்கச்சி மயானம் மற்றும் திருக்கச்சி மேற்றளி ஆகிய திருக்கோயில் தொன்மங்கள், அப்பரடிகளின் திருத்தாண்டகத்தில் சுட்டப்படுள்ளன. அத்தொன்மக் குறிப்புகளின், உள்ளுறையாக திருக்கோயில் வரலாறுகள் அமைந்து, பக்திநெறி உணர்த்தப்படுகின்ற அணுகுமுறையை, இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

திருத்தாண்டகத்தில், காஞ்சித் திருத்தலத் தொன்மங்கள்
தேவார மூவரின், ஏழு திருமுறைகளாலும் போற்றப்பட்டுள்ள அரிய திருக்கோயில்களில் திருக்கச்சி ஏகம்பமும் ஒன்று. அப்பரடிகள், திருக்கச்சி ஏகம்பத்தை ஏழு திருப்பதிகங்களால் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், இரண்டு திருப்பதிகங்கள், திருத்தாண்டகத்தில் அமைந்துள்ளன. ஏகம்பத்தை இரண்டு திருப்பதிகங்களில் பாடியும் ஆவல் தீராதவராக, அத்திருமுறையில், பல இடங்களிலும் அவர், கச்சிஏகம்பத்தைப் போற்றியுள்ளார். அத்துடன், க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் (6:70:4) கச்சிப் பலதளியும், திருவினாத் திருத்தாண்டகத்தில் திருமேற்றளியும் (6:97:7), திருக்கச்சி மயானமும் (6:97:10) ஆகிய காஞ்சியின் பிற திருக்கோயில் தொன்மங்களும் சுட்டப்பட்டுள்ளன. அக்குறிப்புகள், திருக்கோயில் வரலாறுகளாகக் காஞ்சிப்புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

அப்பரடிகள் உவந்த திருக்கோயில்
‘மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை யென்மனத்தே வைத்தேனே’ (4:7:9)
எனக் கச்சிஏகம்பத்தின் மீது, அப்பரடிகள் பெருவிருப்புடையவராக இருந்தார். அதனால்,

‘கலந்தார்தம் மனத்தென்றும் காதலானைக் கச்சியே கம்பனை’ (6:20:4)
என்று போற்றி, ஏகம்பனைச் சிந்தை மறவாமல் பாடுகின்றார். நடுநாட்டின் திருஅதிகையில் இருந்து வீரட்டானனைப் பாடி மகிழ்ந்த களிப்பில், அங்கிருந்தே தொண்டை நாட்டின் ஏகம்பனையும், அடிகள் பாடி மகிழ்ந்துள்ளார். ‘ஏகம்பத்தைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே’ என்ற பெருவிருப்பில், அத்திருத்தலத்திற்காகப் பாடிய திருப்பதிகங்களிலும் சுட்டிக்கூறாத ஏகம்பத் திருக்கோயில் வரலாற்றுத் தொன்மத்தை, முன்கூட்டியே அதிகைத் திருப்பதிகத்தில் பாடி மகிழ்ந்திருப்பது, ஏகம்பன், அப்பரடிகளின் சிந்தையில் நீங்காமல் நிலைத்திருந்த பக்திக்குச் சான்றாகும்.

அதனாலேயே, திருத்தாண்டகத்தால் ஏகம்பத்தைப் பணிந்த நிலையில், ‘ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே’ என்ற தொடரைப் பதிகமகுடமாக அப்பரடிகள், இரண்டு திருப்பதிகங்களிலும் (6:64,65) பதிவுசெய்துள்ளார். தொண்டராக, உழவாரப் படைதாங்கி, சைவத்தை வளர்த்தவராதலின், அப்பெருமகனார், ஏகம்பத்திலிருந்து அறம் வளர்த்த அம்மையை, ‘காமக்கோட்டி’ எனப் போற்றியுள்ளார்.

காஞ்சிப்புராணத்தில் திருக்காமக்கோட்டம்
பெருமான், ஊழிக்காலத்தில் ஒடுக்கியருளிய உலகங்களை மீண்டும் படைத்தருளத் திருவுள்ளம் கொண்டான். அதற்கென, வீரம் வெளிப்படுகின்ற பெருஞ்சிரிப்புடன், புனர்உற்பவத் திருக்கூத்தினை ஆடிக் களித்தான்.
அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்
பசைத்தவன்காண்’ (5:64:7)
என்றவாறு, அண்டமுற நிமிர்ந்தாடிய பெருமான், அருளுருவாகிய சிவலிங்கமாக உலகாணித் தீர்த்தம் எனப்பெறுகின்ற பஞ்சநதிக்கரையில் இடம்கொண்டான். அத்திருமேனி, கொங்கண முனிவர் முதலான பலருக்கும் அருள்பேறுகள் பலவற்றையும் அருளிச்செய்த சிறப்புடன் விளங்கியது. அம்மையும், ‘திருக்காமக்கோட்டி’ என்னும் திருப்பெயருடன் அங்கிருந்து அத்திருவுருவினைப் போற்றி வழிபட்டாள். இன்றளவும், திருக்காஞ்சி நகரத்தில், அம்மை வீற்றிருந்தருள்கின்ற திருக்கோயிலானது, ‘திருக்காமக்கோட்டம்’ என விளங்குகிறது.

காமம்-விருப்பம்; கோடு-வளைவு; கோட்படுத்துதல்-வளைத்தல். செந்நிறத்தைப் பெற முயன்ற அவளது விருப்பத்தை, பூசையாகிய பெருநெறியை நோக்கிப் பெருமான் வளைத்ததால், அவ்விடமானது, ‘திருக்காமக்கோட்டம்’ எனப் பெயர்க் கொண்டது. மேலும், உறுதிப்பொருள்கள் நான்கனுள், வீடுபேறே இறுதியாக (கோடியாக) அமைவது. அம்மை, உலக உயிர்களுக்கு, இன்பநாட்டமாகிய காமத்தை விளைவித்து, அதன் வழியே வீடுபேற்றையும் அளித்தருள்பவள். அதனால், அவள் வீற்றுள்ள திருக்கோயிலும், ‘திருக்காமக்கோட்டம்’ எனப் பெயர்க் கொண்டதை’ என்பது காஞ்சிப் புராண, வீரட்டாகாசப் படலம் (37) விளக்குகின்றது.

செம்பவளச் செல்வியாகிய காமக்கோட்டி
அம்மை, ‘கருநிற மேனி உடையவளாக இருந்த நிலையில், பெருமான் அவளை, ‘காளீ’ என விளித்தான். அதைக் கேட்ட அம்மை, ‘பெருமானே!, நீர் செம்பவள மேனியுடையவராக விளங்குபவர்; அதனால், நானும் அவ்வண்ணத்தைப் பெறுவதற்கு அருள்செய்ய வேண்டும்’ எனப் பெருமானைப் பணிந்தாள். பெருமானும் அதற்கு இயைந்து, பஞ்சநதிக்கரையில் அமைந்த தனது இலிங்கத் திருவுருவினை வழிபட அருளினான். அவ்வண்ணமே, திருமாலும், திருமகளும் இத்திருக்கோயிலிலிருந்து பெருமானை வழிபட்டுச் செம்பவள வண்ணத்தைப் பெற்றதென்பது, காஞ்சிப்புராண வரலாறு.

ஒத்த வயதும், கல்வியும், செல்வமும், குலமும் தலைமக்களின் அன்புறவுக்கு அடிப்படை என்பது அகப்பொருள் நோக்கு. அவ்வகையிலேயே, பெருமானது அன்பினை, தான் முழுமையாகப் பெற வேண்டி, திருக்காமக்கோட்டத்தில் பூசை முதலான தவம் இயற்றி, பெருமானுக்கு இணையாகச் செந்நிறத்தைப் பெற்ற அம்மையை அப்பரடிகள்,
எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
யிளங்கிழையோர் பாலுண்டோ’ (6:2:1)
எனக் குறித்தருளியுள்ளார்.

காமக்கோட்டியின் அருள்விண்ணப்பம்
‘ஆருயிர்கள், அப்பனாகிய பெருமானை வணங்கிப் பேரின்பமாகிய வீடுபேற்றினைப் பெறுவதற்கு ஓயாமல் முயலவேண்டும்’ என்பதை விளக்கவே, அம்மை திருக்காமக்கோட்டத்திலிருந்து, செந்நிறம் பெற விழைந்ததாகப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பெருமானின் பேரின்பத்தில், அம்மை கொண்ட விருப்பமே, மன்னுயிர்களும் பேரின்பத்தை விரும்பக் காரணமாகிறது. அவளது பெருவிருப்பே, வீடுபேறாகிய பேரின்பநாட்டத்தை உயிர்களுக்கு ஊட்டுகிறது. மண்ணுலகில் வாழ்கின்ற குடும்ப வாழ்வில், தாயே குழந்தைகளுக்கும், தந்தைக்கும் பாலமாக விளங்குகிறாள். அவள், தந்தை மீது பொழிகின்ற அன்பைக் கண்டு, குழந்தைகளும் தந்தையிடத்தில் நிறைந்த அன்பினைப் பொழிகின்றனர்; தந்தையும், குழந்தைகளுக்கு இனிய வாழ்வைத் தந்து மகிழ்கின்றார்.

பெருமானிடத்தில், தனக்கென எதையும் வேண்டிடாதவளாகிய அம்மை, திருக்காமக்கோட்டத்தில் நிலைத்தவளாக, அன்பில் குறையாத பூசனையின் வழியாக, ஆருயிர்கள் அனைத்தின் நலனையும், தனது திருவாயினால் பெருமானிடத்தில், பெருவிண்ணப்பமாக ஓயாமல் வேண்டியவண்ணம் இருக்கின்றாள். அவளது அருள்நோக்கத்தை வெளிப்படுத்தி அருள்கின்ற திருவாயினையும் அப்பரடிகள் போற்றுபவராக,
‘கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி’ (6:4:10)
எனக் குறித்துள்ளார்.

பண்டாசுரனுக்காகக் கச்சி மயானம்
ஆருயிர்களின் மீது பெருமான் கொண்ட அளவில்லாத கருணையின் வெளிப்பாடே, அவன் ஐந்தொழிலையும் நடத்துகின்ற நிலையாகும். பெருமானின் திருவருள் ஆணையின்வண்ணமே, அவ்வவ் உயிர்களின் வினைக்கேற்பப் பிறப்புகள் அமைகின்றன. உயிருக்கு உடல் கூட்டுவிக்கப்படுவதாகிய பிறப்பு நிலையே, படைத்தல் எனப்படும். ஐந்தொழில்களில் முதலாவதாகிய படைப்பினைச் செய்தருள்கின்ற பெருமானை, அப்பரடிகள், கச்சி ஏகம்பனாகப் போற்றுகின்றார்.

‘வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்அவனென் எண்ணத் தானே’ (6:65:1)

கச்சிமயானத்தில் நின்ற ஏகம்பன்
படைத்தல் தொழிலைச் செய்தருள, கச்சிஏகம்பன் செய்த அருளாடலானது, திருக்கச்சி மயானத் திருக்கோயில் வரலாறாகக் காஞ்சிப்புராணத்தில் விளக்கப்படுகிறது.
பண்டம் – உடம்பு. பண்டன் என்னும் பெயர்க்கொண்ட அசுரன், நான்முகனிடத்தில் வரம்பெற்று, உயிர்களின் உடம்பினுள் இடம்கொண்டு, உடம்பின் பெருவலிமையினையும் உறிஞ்சி, அவை செயல்படாத வகையில், பெருந்துன்பம் விளைவித்தான். அதனால், உயிர்கள் அனைத்தும் வலிமையிழந்து, தசைக்கூடமாகிய வெற்றுடம்பினையே சுமந்திருந்தன. அதனால், ஐந்தொழிலும் பிறழ்கின்றநிலை ஏற்பட்டது. ‘அனைத்து உயிர்களின் உடம்பிலும் அவன் இடம்கொண்டிருந்தவன் ஆகையால், அவனை அழிப்பதற்குப் பெருமானின் பெருந்திறமே துணையாகும்’ என்று மூவர் முதலான தேவர்களும், பெருமானைப் பணிந்தனர். அவனை, அழித்தருளப் பெருமான் அருளுள்ளம் கொண்டான். அதற்கென வேள்வித்தீயை மூட்டி அதனுள், நான்முகன், திருமால் முதலான அனைத்துயிர்களின் உடம்பையும், அவியாகத் தீயிலிட்டான். அந்தந்த உடம்புகளிலும் இடம்கொண்டிருந்த பண்டனும், தீக்கிரையாகி வீழ்ந்தான். பண்டனை அழித்தருள, வேள்வித் தீயாகப் பெருமான் விளங்கிய இடமே, தற்போது, ‘கச்சி மயானம்’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

ஏகம்பத்தில் பெருமான், படைப்புத் தொழிலைச் செய்தருள வேண்டி, தன்னிலிருந்து, அம்மையை, ‘இலளிதை’ என்னும் பெயருடன் வெளிப்படுத்தினான்; அம்மையும், பெருமானை வணங்கித் துதித்து, படைப்புத் தொழிலை மேற்கொண்டாள். அதன்வழி, உலகுயிர்களைப் படைத்தலாகிய அருந்தொழிலையும் ஆற்றுவதற்கு அருளாணையும் பெற்றுச் சிறந்தாள். அவ்வண்ணமே, மும்மூர்த்திகளையும், பிற உயிர்களையும் அம்மை படைத்தருளினாள். அவ்விடத்தில் அம்மையப்பரைப் பணிந்தெழுத்த மும்மூர்த்திகளும், அவர்கள்பால் பெருவிண்ணப்பம் ஒன்றைப் பணித்தனர்.

காமக்கண்ணி என்னும் திருப்பெயர்
‘பெருமானே! ‘க’ என்னும் திருஎழுத்து, பிரமனையும், ‘ம’ என்னும் திருஎழுத்து, திருமாலையும், ‘உ’ என்னும் திருஎழுத்து, உருத்திரனையும் குறிக்கின்றன. தங்களது அருளாணையின் வண்ணம், எங்கள் மூவரையும், அம்மை தனது திருக்கண்களில் இருந்து தோற்றுவித்தார்கள். அப்பெருந்திறத்தைக் குறிக்கின்ற வகையில், க, ம, உ என்னும் திருஎழுத்துகளின் கூட்டாகிய திருப்பெயராக, ‘காமக்கண்ணி’ என்ற திருப்பெயருடன் அம்மை இத்திருக்கோயிலில் விளங்கியருளவேண்டும்’ என வேண்டினர். பெருமானும் அவ்வண்ணமே திகழ விதித்ததால், அம்மையும், அத்திருப்பெயரினை உவந்தேற்று அருளினாள்.
இன்றளவும், திருக்காமக்கோட்டத்தில் விளங்குகின்ற அம்மையை, ‘காமாட்சி’ என வழங்குகிறோம்.
காமம்-விருப்பம். அட்சம்-கண். அம்மை, ‘உயிர்களுக்கு அருள்கின்ற திருக்கண்களுடன், ‘காமாட்சி’யாகக் காஞ்சித் திருத்தலத்தில் வீற்றிருகின்றாள்’ என்பதை அப்பரடிகள் திருக்கச்சி மயானத் திருக்குறிப்பாகப் பாடியுள்ளார்.
‘மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான்’ (மேலது பாடல்)
என்ற குறிப்பு மொழியில், அம்மையின் அருளேற்றம் சுட்டப்பட்டுள்ளது.

திருக்கச்சி மயானத்தின்பால் ஆற்றுப்படுத்துதல்
உயிர்கள், வீடுபேறாகிய பேரின்பத்தைப் பெருமானிடத்தில் பெற்று உய்வதற்குப் புறப்பூசைனையால் இலிங்கத்திருமேனியினை வழிபடத்தொடங்கி, அதனை ஆன்மார்த்த பூசனையாக வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்குத் தடையாக விளங்குபவை, உலகியல் மயக்கங்களாகும். உயிரறிவிலிருந்து உலகியல் மயக்கங்கள் நீங்கிப் பெருமானைப் பற்றி உய்வதற்கு, அவன் அருளே கருவியாகும். அம்மையே, அத்திருவருளின் நிலையுடையவள். அவள், ஓயாத பெருவிருப்புடன், பெருமானை நித்தமும் பூசை செய்கிறாள். அப்பூசையின் பயனாகிய திருவருளே, அருவமாகிய பெருமானை, உயிர்களுக்குக் காட்டிஅருள்கிறது. அத்தத்துவத்தை விளக்குவதற்காகவே, ‘திருக்கச்சி மயானத்துப் பெருமானுடன் அம்மை உடன்பிரியாமல் விளங்குகிறாள்’ என அப்பரடிகள் பாடியுள்ளார்.

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
ஓரூரன் அல்லன் ஓருவமன் அல்லன்
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே
கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன்
என்றெழுதிக் காட்டொ ணாதே’ (6:97:10)
எனக் குறித்தருளியுள்ளார். மேற்கண்ட பாடலில் சுட்டப்படுகின்ற திருத்தலமானது, திருக்கச்சி ஏகம்பத் திருக்கோயிலின் கொடிமரத்தின் மேற்கே அமைந்துள்ளது.

எண்ணத்தில் நீங்காத ஏகாம்பரன்
வடமொழியில், ‘ஆம்ரம்’ என்பது, மாமரமாகும். ‘ஏகாம்பரம்’ என்பது, ‘ஒற்றை மாமரம்’ என்பதாகும். உலகிலுள்ள பிற மாமரங்களைப் போலல்லாமல், இம்மாமரம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. இது, வேத மாமரமாக, அரும்பொருளாகிய பெருமான் தங்குகின்ற பேறுபெற்றுள்ளது. அதனால், அது, ‘ஏக் ஆம்ரம்’; அதாவது, ‘ஒற்றை மாமரம்’ என்கின்ற சிறப்புப்பெயர்ப் பெறுகிறது. ஒருவனாகிய பெருமானும், தான் இடம்கொண்ட மாமரத்தின் பெயரால், தனக்கும் சிறப்புப்பெயர் விளங்க அருள்செய்தான். வடமொழியில் அத்திருப்பெயர், ‘ஏகாம்ரநாத:’ என வழங்கப்படும். அதுவே, திருவைந்தெழுத்தாகின்ற சிறப்பினைப் பெருமான், பிரமன் முதலான மூவர்க்கும் உரைத்தருளியதாகக் காஞ்சிப்புராணத் திருவேகம்பப் படலம் (பாடல்:27) போற்றியுரைக்கிறது.
மேற்கண்ட திருப்பெயர் தமிழில், ‘ஏகாம்பரநாதன்’ எனக் குறிக்கப்படும். அப்பரடிகளின் அருள்மொழியில், ‘ஏகம்பன்’ எனப் பொலிவுறும். அத்திருப்பெயரை, அப்பரடிகளும், திருவைந்தெழுத்தாகவே கருதிப் பணிந்தார் எனலாம். அதன்பொருட்டே, திருத்தாண்டகத்தில் கச்சிஏகம்பத்தைப் பாடிய முதலாவது பதிகத்தில்,
அஞ்செழுத்து நினைவார்க் கென்றும் மருந்தவன் காண்’ (6:64:9)
என, ஐந்தெழுத்து மந்திரத்தின் அருள்சிறப்பினை அறிவுறுத்தியுள்ளார். ‘ஏகாம்பரநாதன்’ என்பதே, மேற்குறிக்கப்பட்ட திருவைந்தெழுத்து என்பதைச் சுட்டுபவராக, கச்சிஏகம்பத்தின் இரண்டாம் பதிகத்தில்,

பேதயேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்’
வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
அருந்தவத்தாள் ஆயிழையாள் உமையாள் பாகம்
அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண்’ (6:65:5)
எனப் பாடியுள்ளார். மேலும், அவ்வருஞ் சிறப்பினைத் திருமுறைத் திருநெறியாக நமக்கும் அறிவுறுத்த வேண்டியே, கச்சிஏகம்பப் பதிகங்கள் இரண்டுக்கும், ‘ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே’ எனப் பதிக மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார்.

நால்வர்க்கும் தோன்றியருளிய கம்பன்
பண்டனை அழித்தருளி, மீண்டும் உலக உயிர்களை உடம்புடன் கூட்டுவித்தலாகிய படைப்பினைத் தொடங்கக் கருதிய பெருமான், திருக்கச்சி மயானத்தின் மேற்கில் வேதங்களை, மாமரமாக நிற்கச் செய்தான். மாமரத்தின் மூலத்தில், அழல்பெருஞ் சோதியாகி எழுந்த பெருமான், சிவலிங்க மூர்த்தமாக அமைந்தான். அம்மை, தனது படைத்தல் தொழிலைச் சிறப்புறச் செய்யவேண்டிப் பெருமானை வேண்டினாள். அவளுக்கு அருளவேண்டிப் பெருமான், அச்சிவலிங்க மூர்த்தத்திலிருந்து வெளிப்பட்டருளினான். அவ்வருள்பேறு பெற்றே, இலளிதை அம்மை தனது, திருமுகத்திலிருந்து, பிரமன் முதலான மூவரையும் தோற்றுவித்தருளினாள். அம்மூவரும் தத்தமது தொழிலுக்கான நல்லறிவைப் பெறவேண்டிப் பெருமானைப் பணிந்தனர்.

‘பெருமானே! உமது கருணைத்திறத்தால், மூவரும் முத்தொழிலைச் செய்வதற்கான பேறுபெற்றுள்ளோம்; அவற்றை முறையாகச் செய்வதற்குரிய ஞானத்தையும் தாங்களே தந்தருள வேண்டும்!’ என்றனர். பெருமானும், ‘தான் உகந்த திருமேனியாகிய, சிவலிங்கத்திருமேனியைத் தாபித்து, வழிபட்டு அவ்வுயர்ப்பேற்றினைப் பெறுக’ என அறிவுறுத்தி அருளினான். அவ்வகையில், இலளிதையம்மையால் பூசிக்கப்படுவதாகிய மாவடி மூலத்தின் தென்பால், தேவர் மூவரும், இலிங்கத் திருமேனிகளைத் தாபித்து வழிபட்டனர்.

பிரமன், தெளிந்த சிந்தையுடன் பெருமானைப் பூசித்ததால், ‘வெள்ளைக் கம்பர்’ எனவும் (திருஏகம்பப் படலம்: 86), உயிர்களை மயக்குகின்ற மாயவனாகிய தன்மை வேண்டிப் பூசித்ததால், திருமாலுக்கு, ‘கள்ளக் கம்பர்’ (திருஏகம்பப் படலம்: 87) எனவும், சிவோகம் பாவனையில் சிவத்தோடு ஒன்றிப் பூசைசெய்த உருத்திரருக்கு, ‘நல்ல கம்பர்’ (திருஏகம்பப் படலம்: 88) என்றும் காட்சி தந்தாக காஞ்சிபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அம்மைக்கும், தேவாதி மூவர்க்கும் அருள்செய்த ஏகம்பனை அப்பரடிகள்,

கடிநாறு பொழிற் கச்சிக் கம்பா வென்றும்
கற்பகமே யென்றென்று கதறா நில்லே’ (6:31:2)
எனக் குறித்தருளியுள்ளார்.
‘கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண்ணடி யேன்பெற்றவாறே’ (7:61:10)
என்ற அருள்மொழி, காஞ்சித்திருத்தலத்தில், இடக்கண் பெற்றுய்ந்து சுந்தரர்பெருமான் அருளியது.

அம்மையின் திருக்காஞ்சிப் பயணம்
அம்மை, இமவான் மகளாகி, பெருமானை மணந்து, அளவில்லாத மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள். அச்சமயத்தில், ‘பெருமானே, உலகங்களுக்கு ஒளிப்பொருளானவன்’ என்கின்ற பரத்துவத்தை உலகுயிர்கள் உணரவும், மண்ணுலகில் அறம் நிலைக்கவும், அம்மையைக்கொண்டு, பெருமான் அருள்விளையாடல் ஒன்றை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டான். ஒருசமயம், அம்மை, பெருமானின் திருக்கண்களைக் கைகளால் மூடினாள். அதனால், கதிரவனும், தண்நிலவுமாகிய இருசுடர்களும் ஒளியிழந்தன. உலகங்கள் பேரிருளில் ஆழ்ந்தன. அறியாது அம்மை செய்த பிழைக்குக் கழுவாய் தேடும்படியான வாய்ப்பினைப் பெருமான், அவளுக்கு உரைத்தருளினான் (த.கு.படலம்: 25,26). ‘அம்மையே!, பூவுலகில் பூசைக்குப் பயனாகத் திருவடிசேர் முத்தியைத் தந்தருள்கின்ற அருள்நகரங்களுள் முதன்மையாக விளங்குவது, திருக்காஞ்சி நன்னகராகும். அந்நகரம், அறத்தேவதையை, யாம் விடையாக ஏற்றருளிய திருத்தலமாகும்; அங்கு எம்மைப் பூசித்து, ஆருயிர்களும் பூசித்து உய்யக்காட்டிருள்க!’ எனப் பெருமான் அம்மைக்கு அறிவுறுத்தினான். அதைக் கேட்ட அம்மை, ‘பெருமானே! உம்மை முறையாகப் பூசிக்கின்ற நெறிமுறைகளையும் அடியவளுக்கு அறிவுறுத்தி அருள்க!’ என்று பெருமானிடத்தில் வேண்டினாள்.

பெருமானும் அதற்கு இசைந்து, சரியை முதலான படிநிலைகளையும், தீக்கை வகைகளையும், முத்தி நிலைகளையும், உயிர்கள் மண்ணுலகில் வினைவழியே பிறப்பெய்தி வாழ்கின்ற நிலைகளையும், பிறவாமையாகிய பெருநிலைக்குப் பூசையே கருவியாதலையும், அதற்கு ஏற்ற இடமாகக் காஞ்சி மாநகர் விளங்குவதையும் அம்மைக்கு எடுத்துரைத்தான் (த.கு.படலம்: 35-72). அம்மையும் அதை ஏற்று, வான் வழியே திருக்காஞ்சியை அடையப் புறப்பட்டாள்.

அம்மையப்பருக்கு, புவனங்கள் அனைத்தும், இல்லமாகும். பிள்ளைகளின் நலம் சிறக்கவேண்டி, கணவனார் கூறுவதை, மனைவியார் செம்மையாகச் செய்துமுடிப்பார். ஆருயிர்களாகிய குழந்தைகளின் நலம் சிறக்கவேண்டி, அம்மையும், அப்பனின் அருஞ்சொல்லை ஏற்றுத் திருக்காஞ்சி நகரை அடைந்தாள்’ என்பதைக் காஞ்சிப் புராணம்,

களிவரு சிறப்பின் வான்நெறிப் படர்ந்தாள் கணவனார் அருள்வழி நின்றாள்’ (தழு.குழை.பட:121)
என விரித்துரைக்கும்.

அறச்சாலை நிறுவிய அம்மை
காசி முதலான பல தலங்களிலும், இலிங்கத் திருமேனியைத் தாபித்து வணங்கி, ஐப்பசி மாதத் தேய்பிறை ஏகாதசித் திதி அமைந்த பூர நன்னாளில், அம்மை திருக்காஞ்சி நகரை அடைந்தாள். கங்கண தீர்த்தத்தில் நீராடி, கங்கணேசர், கடகேசர் ஆகிய இலிங்கங்களைத் தாபித்து வணங்கினாள். அந்நகரிலிருந்து, தான் இயற்றவுள்ள பூசனைகளாகிய பெருந்தவங்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில், காப்பும், கடகமும் அணிந்துகொண்டாள். அத்திருக்கோயில்கள், இந்நாளில், ‘கங்கணேச்சரம்’; ‘கடகேச்சரம்’ என வழங்கப்படுகின்றன. அம்மை, அங்கிருந்து உலகாணித் தீர்த்தக் கரையை அடைந்து, அறச்சாலையை நிறுவினாள். ‘வேள்விகள் புரிதல்’ முதலாக, ‘சரணடைந்தாரை பெருவிருப்புடன் தாங்குதல்’ ஈறாக அமைந்த, முப்பத்து இரண்டு அறங்களையும் நிறைவுற வளர்க்கின்ற அறச்செல்வியாகத் திகழந்தாள்.

பூங்கொடியாள், பூசைக்கு விரைந்தாள்
மாவடியில் விளங்குகின்ற ஏகம்பனை அன்றாடம் பணிகின்ற பெருவிருப்பு வழிநடத்த, அம்மை அன்றைய நாள் பூசைக்கான பெருவிருப்புடன் விரைத்தாள். விதிகள் பிழையாமல் பூசை செய்கின்ற அவள், பூசைக்குத் தேவையானவற்றைத் திரட்டிய நிகழ்வுகளைக் காஞ்சிப்புராணம் தழுவக் குழைந்த படலத்தில், 318-ஆம் பாடல் முதலாக, 341-ஆம் பாடல் வரையிலும் விரிவாகக் காணலாம். பூசைக்கு வேண்டுவதாகிய உடல் தூய்மைக்குத் தனி தீர்த்தமும், பெருமானைத் திருமுழுக்காட்டுவிக்கத் தனித் தீர்த்தமும் உருவாக்கப்பட்டன என்பதும், தனி நந்தவனத்திலிருந்து சிறந்த மலர்கள் தொகுக்கப்பட்டன என்பதும், திருவமுது படையலுக்காகத் தூயமுறையில் பல்வகை திருவுணவுகளும் படைக்கப்பட்டன என்பதுமான செய்திகள் சிவபூசை விதிகளை அறிய முயல்வோருக்கு அருந்துணையாகும். இவ்வாறு, பூசைக்குத் தேவையானவற்றை முறையாகத் திரட்டிக்கொண்ட பின்னர், கம்பமா நதியில் நீராடி, சிவ அனுட்டானம் முதலான ஒழுக்கங்களை முறையாகக் கடைப்பிடித்து, பூங்கொடி போன்றவராகிய அம்மை, பெருமானைப் பூசிக்க எழுந்தாள்.

பெருமானைப் பணிந்த பெருந்தவக்கொழுந்து
திருஏகம்பத் திருவாயிலில், மூத்த பிள்ளையாரையும், இளைய பிள்ளையாரையும் முறையாகத் தொழுது, துவார பாலகரையும் பணிந்து, நந்தி திருவாயிலை அடைந்தாள். ஆராத பெருவிருப்பின் வெளிப்பாடாகக் கண்ணீர் அரும்ப, மெய்யறிவின் பயனாகிய பூசையைத் தொடங்கினாள்; ஆகம விதிப்படி அருள்பூசைக்கு முனைந்தாள். ‘பெருமானே! உமது திருக்கண்களைப் புதைத்து, படைப்பு முதலான ஐந்தொழில்களுக்கும் இடையூறு விளைவிக்க எண்ணிய தீவினைக்குக் கழுவாய் தேடுகின்ற பெருநோக்கில், யான் புரிகின்ற பூசையில் குற்றம் நேராது காத்தருள வேண்டும்!’ எனப் பணிந்தாள். அவ்வேளையில், பெருமான் தனது திருவிளையாடலாக, கம்பைநதி பெருகி வரச் செய்தார். அதைக் கண்டோரின் கண்ணீரும் துணைநதியாகப் பெருகும்படி, பெருவெள்ளம் பாய்ந்தது.

அம்மை, தனது திருவருள் குறைவினால், பூசைக்கு இத்தகைய இடையூறு ஏற்பட்டதாக எண்ணிக் கலங்கினாள். பெருவெள்ளமானது, பெருமானின் திருமுன்னர் பெருகி வந்து அவரை நலிவிக்கும்’ எனப் பதைத்தாள். உடனே, தனது வலது முழந்தாளைச் சிவலிங்கப் பீடத்தில் ஊன்றி, மேருமலையைப் இருபுறமிருந்தும் படர்கின்ற மல்லிகைக்கொடி போலக் கைகளால் அணைத்துக் காத்தாள். அந்நொடியில், இலிங்கத்திருமேனியிலிருந்து பெருமான், அம்மையின் வளைத்தழும்பும், முலைச்சுவடும் ஏற்றருளிய திருக்காட்சியைக் காட்டியருளினான். இவ்வரலாற்றுத் தொன்மத்தை அப்பரடிகள்,

‘கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
கொங்கையினை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூலுண்டே
சாந்தமொடு சந்தனதி னளறு தங்கி
அழுந்தியசெந் திருவுரு’ (6:4:10)
எனக் குறித்தருளியுள்ளார்.

ஏகம்பத்தில் திருமணக்கோலம்
பெருமானைக் கண்டு அன்புருகி நின்ற அம்மையிடத்தில், ‘நீ வேண்டுகின்ற வரங்களும் யாவை?’ என்றான். ஏகம்பமாகிய இத்திருத்தலத்தில், தீவினைகள், உயிர்களைப் பற்றாமல் இருக்கவும், நல்வினைகள், பலநூறு மடங்காகப் பெருகவும், வீடுபேற்றுக்குக் கருவியாகிய அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள்கள் நாளும் தழைக்கவும் அருளவேண்டும்’ என வேண்டினாள். பெருமானும், ‘அவ்வண்ணமே ஆகுக!’ என்று அருளினான்.

அத்துடன், ‘பெருமானே!, எனது கரிய நிறத்தை நீக்கி, பொன்னிறத்தைத் தந்து, திருமண மங்கலப்பேற்றினையும் தந்தருளவேண்டும்’ எனப் பணிந்தாள். அவ்வண்ணமே, இத்திருக்கோயிலில், பங்குனி உத்திர நன்னாளில், திருமணம் நிகழ்ந்தேறவும், அகத்திய மாமுனி முதலான ஆருயிர்கள் அனைத்தும், அத்திருக்காட்சியினைக் கண்டு உய்யவும் அருளினான். செம்மேனிப் பெருமான், தனது இடப்பாகத்தில் அமைந்த பொன்னிறக் கொடியால், தானும் பொன்னிறம் கொண்ட திரு அழகினை,

செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
செஞ்சடையெம் பெருமானே தெய்வம் நாறும்
வம்பினாள் மலர்க்கூந்த லுமையாள் காதன்
மணவாளனே’ (6:4:9)
என வியந்து போற்றியுள்ளார்.

திருமேற்றளி
‘உருத்திரப் பல்கணத்தார்’ என்போர் சிவவேடம் தரித்து, உள்ளன்புடன் பெருமானை வழிபடுவோராவர். அச்சிவனடியார்கள், நூறு பேராவர். அவர்களும், சிறப்புடைய அடியார் பிறரும் திருக்காஞ்சி நகரத்திலிருந்து பெருமானை, இலிங்கத்திருமேனியால் வழிபட்டுய்ந்த நூற்றுப்பதினெட்டுத் திருக்கோயில்கள், ‘கச்சிப்பல தளி’ எனப் போற்றப்பெறுகின்றன. இத்திருக்கோயில்கள், பதமுத்திகளைத் தந்தருள வல்லன. சரியை முதலான நாற்படி நிலைகளும், முறையே, சாலோகம், சாமீபம், சாரூபம் மற்றும் சாயுச்சியம் ஆகிய நால்வகைப் பதமுத்திகளைத் தரவல்லன. அவற்றுள், சாலோகம் என்பது, சிவலோகமாகிய திருக்கயிலையில் உறைகின்ற பேறு என்பது, காஞ்சிப்புராண உரை விளக்கம்.
கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
கயிலாய நாதனையே காணலாமே’ (6:70:4)
எனச் சாலோகப் பேறு முதலாகிய பதமுத்திகளுக்கு அப்பரடிகள் வழிநடத்துகின்றார். சாரூபம் என்பது, இறைவனின் திருவடிவத்தைப் பெறுதலாகிய பேறாகும். கச்சிப்பல தளி என்றமைந்த பல திருக்கோயில்களிலும், சாரூப முத்தி தரவல்லது ‘திரு மேற்றளி’ திருக்கோயிலாகும். திருமால், சாரூபப் பேறு வேண்டித் திருக்காஞ்சி நகரத்தில், இலிங்கத்திருமேனியைத் தாபித்துப் பெருமானைப் பலகாலம் வழிபட்டுவந்தார். கலியுகத்தில், திருஞானசம்பந்தப் பிள்ளையின் திருப்பதிகப் பாடல் கேட்டு, உள்ளம் உருகி, சாரூபப் பேற்றினைப் பெற்றுய்க!’ என்று பெருமானும் அருளினார். திருமாலும், அன்றாடப் பூசைநியமங்கள் தவறாமல், திருமேற்றளி நாதரை வழிபட்டுவந்த நாளில், பிள்ளையாரின் திருப்பாடலுக்கு உள்ளம் உருகித் தன்னை மறந்தான். ‘ஓதஉருகீசர்’ என்ற திருப்பெயருடன், பெருமானின் திருமுன்பில் இலிங்கத் திருமேனி பெற்றுய்ந்தார் (திருமேற்றளிப் படலம்: 11).

திருமுறைநெறி விளங்குகின்ற திருமேற்றளி
அன்றாடம், நாம் செய்கின்ற பூசைகளால், உடலும் உள்ளமும் ஒருசேரப் பண்படும். உண்மையன்புடன் ஒவ்வொரு நாளும் பூசைநெறியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், சில நாளில் பூசை நடைமுறைகள், வெறும் பயிற்சிகளாக அல்லாமல், உடலும் உள்ளமும் ஒருசேர உருகி, பெருமானை உணர்ந்து இன்புறுகின்ற பேற்றினைத் தந்தருளும். அவ்வாறு, ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலாத பேரின்பத்தை அருள்கின்ற பெருநெறியாக, ‘திருமுறைத் திருநெறி’ விளங்கவல்லது. இதனை உணர்த்த வேண்டியே பெருமான், சுந்தரருக்கு,

‘நமக்கு மன்பிற்
பெருகிய சிறப்பின் மிக்க
அற்சனை பாட்டே யாகும்
ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார்
தூமறை பாடும் வாயார்’ (தடுத்தாட்கொண்ட புராணம்: 216)
என அருளாணை வழங்கினார்.

அப்பரடிகள், ஞானப்பிள்ளையாரைச் சிவிகையில் சுமந்தவர்; அவர்மீது பெருகியஅன்பில், நாளும் அவரைப் பணிந்தவர்; தூயஅன்புக்கும், பணிவுக்கும் பரிசாக, ‘அப்பரே!’ என்று அவரால் அழைக்கப்பட்டவர். மண்ணில் திருமுறைநெறி வாழச் சிவஞானக் கன்றாக வந்துதித்தவர், திருஞானசம்பந்தப் பிள்ளையார். அவர் முதலாகத் தழைக்கின்ற திருமுறைநெறியை, நமக்கு வாழ்வியல் நெறியாக உணர்த்தவேண்டியே அப்பரடிகள் திருமேற்றளியைப் போற்றிப் பாடினார்’ எனலாம்.
அத்திருக்கோயிலை அப்பரடிகள்,
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்’ (6:97:7)
எனக் குறித்தருளியுள்ளார்.

பாரூர் பல்லவனூர் மதிற்கச்சி மாநகர்வாய்ச்
சீரூ ரும் புறவில் திருமேற் றளி’ (7:21:10)
என்பது, சுந்தரர் பெருமானின் அருள்குறிப்பு.

மேற்கண்ட அருள்நோக்கத்திலேயே, காஞ்சிப்புராணமும், ‘திருமால் சாரூபப் பேறு பெறப் பிள்ளையாரின் திருமுறைகள் கருவியானது’ எனத் திருமேற்றளி வரலாற்றை விவரித்துள்ளது. இத்தகைய அருள்வரலாற்றினைப் போற்றுகின்றவகையில், ‘திருமேற்றளி’ அமைந்துள்ள திருவீதியின் கிழக்குத்திசையில், திருஞானசம்பந்தப் பிள்ளையாரின் திருக்கோயில் விளங்குகிறது. அத்துடன், ஞானப்பிள்ளையாரின் பெயரால், ‘பிள்ளையார்பாளையம்’ என்ற திருவூரும் வழங்கிவருகிறது.

முடிவுரை

திருமுறையாசிரியர்கள், தொன்மக்கூறுகளைத் திருப்பாடல்களில் கையாண்டுள்ளதைத் திறனாய்வாளர்கள், ‘தொன்மவியல் படைப்பாக்க உத்தி’ எனக் குறிப்பிடுவர். திருமுறைகளிலும், சாத்திரங்களிலும், பெருமானது பரத்துவமும், உயிர்களது தற்சுதந்திரமின்மையும், உலகியலின் நிலையாமையாகிய உண்மைகளும் மையப்பொருளாகின்றன. அவற்றை, எளிதில் உணர்த்தவேண்டியே ஞானாசிரியர்கள், தமது திருப்பாடல்களில் சிவபுராணத் தொன்மங்களைக் கையாண்டனர். அவை, கதைப்போக்கில், அரிய தத்துவங்களையும் எளிமையாக விளக்குகின்றன. திருமுறை ஆசிரியர்கள் கையாண்ட, திருத்தலத்தொன்மங்கள், பின்னாளில் தல புராணங்களாக விரிந்தன. அவ்வகையில், திருத்தாண்டகத்திலுள்ள, காஞ்சிநகரத் திருக்கோயில் தொன்மக் குறிப்புகள், காஞ்சிப்புராணத்தில் தனிப்படலங்களாக மேலும் விரிந்து பக்திநெறியை விளக்குகின்றன. எனவே, திருமுறைகளில் இடம்பெறுகின்ற தொன்மக்கூறுகளை, ‘பயனற்ற கதைக்கூறுகள்’ என ஒதுக்குதல், சிறந்த இலக்கியப் பயிற்சியாகாது. அத்துடன், திருமுறைத்தொன்மங்களைப் பலமுறையும் நுண்ணுணர்வுடன் பயில்வது, திருமுறைத் திருத்தலங்களை, இம்மைப் பயன்களுக்காக மட்டுமேயல்லாமல், மெய்யறிவுத்தேடலுடனும் அணுக வழிகாட்டும்.

——————————————

ஆய்வுத் துணை நூல்களும், இணையமும்
1. ஆறாம் திருமுறை,
பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,
கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.
பதிப்பு ஆண்டு: அக்டோபர், 2015.

2. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை),
பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்),
கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

3. சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப்புராணம், www.tamilvulibrary.org

4. www.thevaaram.org

—————————————————

கட்டுரையாளர்கள்:

சு. கோப்பெருந்தேவி1* – முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

முனைவர் இரா. மதன் குமார்2* – இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *