நேரம் எங்கே இருக்கு? – க. பாலசுப்ரமணியன் 

“நீங்க சொல்வதெல்லாம் உண்மைதாங்க.. கடந்த காலத்திலும் வருங்காலத்திலும் நினைவுகளை உலா வர விட்டு நிகழ்காலத்தைத் தொலைத்து நிற்கின்றோம். ஆனால் நிகழ்காலம் ஒரு பெரிய போராட்டம். வாழ்வதே மிகவும் கடினமாகி விட்டது.” என்று எனது நண்பர் அங்கலாய்த்தது காதில் விழுந்தது.

“:என்னங்க.. இந்தக் கேள்விக்கு உங்களுடைய பதில் என்ன?” என்று எனது மனத்திடம் கேட்டேன்.”

“அப்படியா. இந்த நிகழ்காலச் சோதனைகளுக்கெல்லாம் யார் கரணம்? அவைகள் எங்கிருந்து வந்தன? சற்றே யோசித்துப் பாருங்களேன்” என்று சொன்ன எனது மனம் தொடர்ந்தது.

” ஹலோ, ஒரு நிமிடம். என்னைக் கேட்டுவிட்டு அப்புறம் உங்கள் பதிலைச் சொல்லுங்கள். நான் நினைப்பதை உங்களுக்குத் சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும் போல இருக்கிறது.” என்றேன்.

“இதுதானே உங்கள் பிரச்சனையே. பல எண்ணங்களையும் பல கருத்துக்களையும் பல உணர்வுகளையும் தலையில் போட்டுக்கொண்டு எதை முன்னால் செய்வது எதைப் பின்னால் செய்வது என்று தெரியாமல் எல்லாமே உடனடியாக நடக்க வேண்டும் என்று விரும்புவது, ஒரு வேலை நடந்து கொண்டிருக்கும்பொழுது அதை ஒதுக்கிவிட்டு இன்னோர் வேலையைத் தேடிச் செல்லுவது, நம்முடைய வேலையை விட்டுவிட்டு அடுத்தவர் வேலையின் முக்கியத்துவத்தைப் பாராட்டுவது, குறிக்கோள் இல்லாமல் ஏதாவது வேலையைச் செய்துவிட்டு ‘எனது நேரம் வீணாகி விட்டதே’ என்று துயரப்படுவது – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் யார் காரணம்?”  என் மனத்தின் கேள்விக்கணைகள்    என்னைத் தாக்கின.

உண்மைதான். பல நேரங்களில் நாம் இதைச் செய்வதா அதைச் செய்வதா என்று தெரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு நிற்கின்றோம். கண்களின் முன்னே செய்யவேண்டிய செயல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஊர்வலம் வர மன உளைச்சலுக்கு ஆளாகி கண்கள் ஒளி இழந்து ஏதோ நோய்வாய்ப்பட்டவர் போல ஆகிவிடுகின்றோம்.”எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு வேலை? வேலையே இல்லாமல் எத்தனைபேர் பொழுது போக்கிக்கொண்டிருக்கின்ரார்கள்? பாதிபேர் தண்டத்திற்குச் சம்பளம் வாங்குபவர் போல இருக்கின்றது” என்றும் “நான் தான் இளிச்சவாயன் போலிருக்கின்றது. எல்லாவேலையும் என்தலையிலே கட்டுகின்றார்கள்” என்றெல்லாம் நம்மைப் பற்றி நாமே விமர்சனம் செய்து கொள்ளுகின்றோம். இது தேவைதானா? இந்தக்கேள்விகளுக்கெல்லலாம் எங்கே பதில் தேடுவது?

மால்கம் கிளாட்வெல் என்று ஒரு சிந்தனை மேதை மனிதர்களின் இந்த மனப்போக்கை நன்கு அலசி ஆராய்ந்து இதற்குக்  காரணம் அவர்கள் தங்களுடைய காலத்தை எவ்வாறு பயன் படுத்துகின்றார்கள் அதை எவ்வாறு நிர்ணயிக்கின்றார்கள், அவர்களின் கால நிர்ணயத்தைப் பற்றிய தவறான ஈடுபாடுகள் என்ன என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றார்.

“நீங்கள் உங்கள் முன்னால் இருக்கும் அனைத்து வேலைகளின் மீதும் ஒரு கண்ணோட்டம் விடுங்கள். அவைகளைக் கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்கு அவைகளில் ஒரு இருபத்தி ஐந்து விழுக்காடு வேலைகள் தேவையற்றவை என்றும் அவைகளில் ஈடுபாடு உங்களுக்கு நிச்சயமாகத் தேவையில்லை என்பதும் தெரியவரும். இது போன்ற வேலைகளை நம்மில் பலர் தங்கள் அதிகாரப் போக்கினாலோ, ஆணவத்தினாலோ அல்லது தங்களது முட்டாள்தனத்தினாலோ தங்களிடம் வைத்துக்கொள்ளுகின்றனர். அவைகளை உங்கள் பார்வையிலிருந்து விலக்கி விடுங்கள். (DUMP)

மீதி இருக்கின்ற எழுபத்தி ஐந்து விழுக்காடு வேலையிலே ஒரு இருபத்தி ஐந்து விழுக்காடுகள் நீங்களே செய்ய வேண்டிய அவசியமில்லை. அவைகளை வேறு யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவைகளை மற்றவர்களின் வேலைத்திறன் அறிந்து அவர்களிடம் ஒதுக்கிவிடுங்கள் . (DELEGATE)

மீதி இருக்கின்ற ஐம்பது விழுக்காடு வேலைகளில் இருபத்தி ஐந்து விழுக்காடு வேலைகள் இன்றே இப்பொழுதே செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இல்லை. அவைகளே சற்றே தாமதித்து  மற்றவைகளுக்கு முன்னுரிமை அளித்து உங்கள் வேலைகளைத் தொடரலாம். (DELAY)

கடைசியாக உங்கள்  முன்னால் இருப்பது வெறும் இருபத்தி ஐந்து விழுக்காடு வேலையே. அதில் உங்கள் முழுக்கவனத்தையும் வைத்து  சிறப்பாக செய்து முடியுங்கள் (DO)

என்னே அருமையான ஆலோசனை! “நேரம் நம்மை நிர்வகிப்பதில்லை. நாம்தான் நேரத்தை நிர்வகிக்கிறோம்”  என்பது அன்றாட வழக்குமொழி.

சற்றே சிந்தித்து நமது நிகழ்காலத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தலாமே !

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.