-முனைவர் க.சுபாஷிணி

தமிழர் பாரம்பரிய அருங்காட்சியகம், பினாங்கு, மலேசியா

மலேசியாவிற்கான தமிழ்மக்கள் புலம்பெயர்வு என்பது நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டது. தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு பல்வேறு காலகட்டங்களில் குடிபெயர்ந்த தமிழ்மக்கள் மலேசிய பூர்வகுடி மக்களுடன் அச்சூழலை ஏற்றுக் கொண்டு மலேசியத் தமிழர்கள் என்ற சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பன்னெடுங்கால தீபகற்ப மலேசியாவிற்கும் தமிழகத்திற்குமான தொடர்பு இன்று அகழ்வாய்வுகளில் கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில் நிரூபணமாகி இருக்கின்றன. இத்தகைய நீண்ட பண்பாட்டுத்தொடர்ச்சி என்பது ஒருபுறமிருக்க, கடந்த 300 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்கும் வகையில் ஒரு புதிய முயற்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பினாங்கு அறநிலையத்துறை அலுவலகத்தில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய அருங்காட்சியகம் காட்சியளிக்கின்றது.

°

மலேசியத் தமிழர் ஒருவரது சேகரிப்பில் இருந்த ஆவணங்களை அவர் பொதுமக்கள் நலனுக்காக வழங்கவே, அது பினாங்கு மாநில இந்து அறநிலையத்துறையின் துணையுடன் ஒரு அருங்காட்சியகமாக இன்றுஉருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆவணங்களும் சின்னங்களும் மலேசிய தமிழர் வரலாற்றில் நடந்த சில முக்கிய விஷயங்களை, அதிலும் குறிப்பாக பினாங்கு மாநிலம் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அருங்காட்சியக அறையின் சுவர்களிலும் மூலைகளிலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட வகையில் ஆவணங்கள், பொருட்கள், நூல்கள், விளம்பரங்கள் என பல்வேறு பொருட்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு ஆவணமும் தனித்துவம் வாய்ந்தவை. ஒவ்வொன்றும் மலாயாவில் தமிழர்களின் வாழ்க்கை நிலையை விளக்கும் வகையில் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

“

மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன், அன்றைய சூழலில் முடி திருத்தும் தொழிலில் அதிகமாக ஈடுபட்டவர்கள் தமிழர்களே. தமிழர்களின் முக்கிய தொழில்களிலொன்றாகிய அத்தகைய ஒரு முடிதிருத்தும் நிலையம் எவ்வாறு இருக்கும் என்பதை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகிறது இங்குள்ள ஒரு பகுதி. இதில் வாடிக்கையாளர் அமரும் பகுதி, சுவர் அலங்காரங்கள், மேசை அலங்கரிப்பு என்பன அவை எப்படி அன்னாளில் இருந்தன என்பதை அறியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இங்குள்ள மிக முக்கியமான ஆவணமாகப் பல நமக்குத் தென்பட்டாலும் மிகவும் தனித்துவத்துடன் இருப்பது இங்கு நாம் காணும் தமிழில் உருவாக்கப்பட்ட மலாயா தீபகற்பத்தின் நிலவரைபடமாகும். முழுதும் தமிழில் அமைந்த வகையில் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடம் இது. இத்தகைய ஒரு வரைபடத்தை இன்று நாம் தேடி கண்டுபிடிப்பது எளிதன்று. மலாயா தீபகற்பம் முழுமையாக, அதன் தென்மேற்கு பகுதியான இந்தோனியாவின் சுமத்ரா தீவு, மலாக்கா ஜலசந்தி, கடல் சூழல் சயாம் குடாபகுதி ஆகியவை தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரைபடத்தில் மலேசியாவின் மாநிலங்களின் பெயர்கள், நதிகளின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள், மலைகளின் பெயர்கள் என அனைத்துமே தமிழில் எழுதப்பட்ட வகையில் மிகச் சிறந்த ஒரு ஆவணமாக இது அமைந்திருக்கின்றது. இதனைக் காணும்போது இன்றைக்கு ஏறக்குறைய அரை நூற்றாண்டிற்கு முன்பு இத்தகைய வரைபடங்கள் உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைகின்ற அதேவேளை, புவியியல் தொடர்பான கல்வி அன்றைய நிலையில் தமிழில் அமைந்திருந்தது என்பதை அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக இதுஅமைகின்றது. இன்றைக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்திய மலேசியா இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தமிழ்மொழி முக்கிய மொழியாக இருக்கின்றது என்பதற்கும் இது ஒரு சான்றாகவே அமைகின்றது எனலாம்.

இவை தவிர மேலும் பல முக்கிய ஆவணங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கப்பலில் பயணம் செய்து வரும் பயணிகள் கொண்டு வரும் பயணத்திற்கான தகரப்பெட்டிகளையும் இங்குக் காணலாம். அவற்றின் உள்ளே ஒட்டப்பட்ட செய்திகள் அடங்கிய காகிதங்கள், அன்றைய தமிழக பயணிகள் கொண்டு வந்த பொருட்கள் என்பன இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மலேயா வந்த அன்றைய தமிழர்கள் பல்வேறு வகை வணிகப் பகுதிகளில் அன்று பணிபுரிந்தார்கள். முக்கியமாக உணவுக்கடைகளைக் குறிப்பிடலாம். இன்றும் கூட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் உணவு கடைகளை தமிழர்கள் நிர்மாணிப்பதைக் காணலாம். அந்த வகையில், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேநீர் தயாரிக்கும் பாத்திரம் இன்றும் கூட ஒரு சில கடைகளில் காணக் கூடியதாக உள்ளன. அத்தகைய தேநீர் தயாரிக்கும் பாத்திரங்களும் தேயிலை கொதிக்க வைக்கும் பாத்திரங்களும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இறந்தபோது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் அவருக்கு நடத்தப்பட்ட அஞ்சலிக்கூட்டம் பற்றிய ஒரு துண்டு காகிதம் இந்த ஆவணச் சேகரிப்பில் இருக்கின்றது. ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில், அதாவது இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை விவரிக்கும் பத்திரிக்கைச் செய்தி ஒன்றும் இந்த சேகரிப்பில் இடம்பெறுகின்றது. தமிழ் மக்கள் பயன்பாட்டில் வீடுகளில் புழங்கப்படும் பொருட்கள், சமையல் உபகரணப் பொருட்கள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவையும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அன்றைய மலாயாவிற்கு வந்த தமிழ் மக்கள் தொழில் புரிவதில் மாத்திரம் தங்கள் கவனத்தைச் செலுத்த வில்லை. மாறாக சமூக செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அந்த வகையில் கலைகளில் நாட்டம் உடையவர்களாக தம்மை வளர்த்துக் கொண்டு நாடகங்கள், கூத்து, இசை என பல்வேறு துறைகளில் தங்கள் திறனை அவர்கள் வெளிப்படுத்தினர். இத்தகைய செய்திகளை விளக்கும் சில ஆவணங்களும் இங்கு காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் உள்ள சிலர் இலக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில் சில சஞ்சிகைகள் பினாங்கிலிருந்து 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் வெளிவந்திருக்கின்றன. நூல்களை எழுதி வெளியிட்ட செய்திகளையும் அறிகின்றோம்.

இப்படி பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய வகையில் பினாங்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மலேசியர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய இடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து தமது சேகரிப்புக்களை வழங்கி இந்த அருங்காட்சியகம் தொடங்க தொடக்கப்புள்ளி உருவாக்கிய திரு.பிரகாஷ், திருமதி புனிதா பிரகாஷ் இருவரையும் பாராட்டுவது நமது கடமை. பினாங்கில் தமிழர் வரலாற்றைச் சொல்லும் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கும் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் மாண்புமிகு.டாக்டர்.ராமசாமி அவர்களையும் பாராட்டுவதோடு இந்தச் சிந்தனைக்கு உறுதுணையாக இருந்து அலுவலக அறையை ஒதுக்கிக் கொடுத்து இந்த அருங்காட்சியகத்தைப் பாதுகாக்கும் பினாங்கு இந்து அறநிலையத்துறையினருக்கும் உலகத் தமிழர்களின் பாராட்டுக்கள் பொருந்தும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *