குறளின் கதிர்களாய்…(237)

-செண்பக ஜெகதீசன்

உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

-திருக்குறள் -442(பெரியாரைத் துணைக்கோடல்)

புதுக் கவிதையில்…

வந்த துன்பத்தைப்
போகும் வழியில் போக்கி,
அத்தகு துன்பம்
அடுத்து வராதவாறு முன்னரே
அறிந்து தடுத்திடும்
ஆற்றல்மிக்க பெரியோர் துணையை,
அவர் விரும்புவன செய்தாவது
அரசன் பெறவேண்டும்…!
குறும்பாவில்…
துன்பமதைப் போக்கி மேலும்வராதவாறதன்
வழியறிந்து தடுத்திடும் ஆற்றல்மிக்கோர் துணையை
ஆதரித்துப் பெறவேண்டும் அரசன்…!

மரபுக் கவிதையில்…

துன்பம் வந்ததைப் போக்கியேபின்
தொடர்ந்தது மேலும் வராவகையை
முன்பே நன்றாய் ஆய்ந்தறிந்தே
முழுதாய்த் தடுத்திடும் ஆற்றலுள்ளோர்
என்றும் துணையாய் வேண்டுமென்றே
எதையவர் விரும்பி வேண்டிடினும்
நன்றெனக் கொடுத்தே அவர்தமையே
நற்றுணை யாக்குவர் நல்லரசே…!

லிமரைக்கூ..

வந்த துன்பத்தையவன் போக்கிடுவான்
அது வருமுன் தெரிந்து தடுத்திடுவான்,
அவனையே துணையாயரசன் ஆக்கிடுவான்…!

கிராமிய பாணியில்…

தொணவேணும் தொணவேணும்
நல்லதான தொணவேணும்,
நாலுந்தெரிஞ்ச
பெரியவுங்க தொணவேணும்..
வந்த துன்பத்த
ஒடனே போக்கி,
வரப்போற துன்பத்த
முன்னதாத் தெரிஞ்சி
தடுக்கத் தெரிஞ்சவந்தான்
தொணயா வேணும் ராசாவுக்கு,
அப்புடிப்பட்டவன
எப்புடியாவுது தொணயாக்கிடணும்..
அதால
தொணவேணும் தொணவேணும்
நல்லதான தொணவேணும்,
நாலுந்தெரிஞ்ச
பெரியவுங்க தொணவேணும்…!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க