-நிர்மலா ராகவன்

 

நல்லதொரு முடிவு

`இன்று என்ன சமையல் செய்யலாம்?’

`மழை வரும்போல இருக்கிறதே! துணியை வெளியில் உலர்த்தலாமா, வேண்டாமா?’

அன்றாட வாழ்க்கையில், இப்படி ஏதாவது முடிவு எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இவைகளால் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆனால், நாம் வருத்தத்திலோ, ஆத்திரத்திலோ மூழ்கி இருக்கையில் எடுக்கும் முடிவுகள் அப்படியில்லை.

`எனக்கு வந்த கோபத்திலே, என்ன செய்யறோம்னு புரியாம செஞ்சுட்டேன்!’ என்று எத்தனை குற்றவாளிகள் தம் குற்றங்களை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்!

காதல் வயப்பட்டு இருக்கும் தருணங்களிலும் முடிவு எடுக்கக்கூடாது என்கிறார், இதோ ஓர் அனுபவசாலி.

கதை

தன்னுடன் படித்த மேகலாவை மணக்க விரும்பினான் மதன். அவனுடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை.

காரணம்: வெகு காலமாக போரில் ஈடுபட்டிருக்கும் நாட்டிலிருந்து வந்த பெண் அவள்!

பிடிவாதமாக தன் காதலியையே மணந்தவர், “எதுக்கெடுத்தாலும் சண்டை போடறா. நான் குறுகிப்போகிறமாதிரி பேசறா!” என்று என்னிடம் சலித்துக்கொண்டார்.

தாய்நாட்டில் வளர்ந்தபோது, அண்டை அயலில் உள்ளவர்களில் யாராவது அடிக்கடி போருக்குப் பலியாகிக்கொண்டு இருந்ததைப் பார்த்தே வளர்ந்தவள் மேகலா. அதனாலோ, என்னவோ, இனம்புரியாத கோபம் அவளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. முதலில் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மதன்.

ஈராண்டுக்குள், “எங்கப்பா, அம்மா சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும்! கேக்காம போனது என் தப்பு!” என்று பலமுறை புலம்பினார். “எந்த விஷயத்திலும் என் மனம் நோகும்படி பேசிவிடுகிறாள்! நீங்கள் அவளுக்குப் புத்தி சொல்லுங்களேன்!” என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மதனின் பெற்றோருக்கு எப்படித் தெரியும் இத்தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்று?

“வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்கள், இல்லையா?” என்ற பதில் வந்தது. “நான்தான் அவசரப்பட்டுட்டேன்!”

சரியான முடிவுகள் அனுபவத்திலிருந்து வருகின்றன என்றால், தவறான முடிவுகளிலிருந்து அனுபவம் வருகிறது. மனைவியை அடிக்கடி மாற்ற முடியுமா? எப்படியோ பொறுத்துப்போக வேண்டியதுதான்.

மதனின் பொறுமையால், மனைவியும் மாறிப்போனாள்.

நான் அப்போது அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பவில்லை. பத்து ஆண்டுகளுக்குப்பின், மேகலா வெகுவாக மாறியிருந்தாள். “எனக்குச் சண்டையே பிடிக்காது!” என்றாள். அவளை வார்த்தையால் தாக்கியவர்களிடமிருந்து ஒதுங்கிப்போனாள். இதனால் உத்தியோகத்தில் மேலும் பல சங்கடங்கள்.

“அடுத்த தடவை, எப்படி நன்னா சண்டை போடறதுன்னு நான் சொல்லித்தரேன்!” என்று நான் தொலைபேசியில் எங்கள் உரையாடலை முடிக்கும் தருணத்தில் கூற, பெரிதாகச் சிரித்தாள்.

சரியான முடிவுகளை எடுப்பவர்கள் வெகு சிலரே. இவர்கள் அவசரப்பட மாட்டார்கள். தம் இலக்கு எது என்ற தெளிவு உண்டு. அதை அடைய வேண்டிய முயற்சிகளை எடுப்பார்கள். வழியில் எந்த இடர் வந்தாலும், துணிந்து நாற்பார்கள்.

முடிவும் மீடியாவும்

`நான் திரைத்துறையில் சாதிக்கப்போகிறேன்!’ என்று இங்கு எனக்குத் தெரிந்த ஒருவர் தான் பார்த்த நல்ல உத்தியோகத்திலிருந்து விலகினார். வெளிநாட்டிற்குச் சென்று, திரைப்படக் கல்லூரியில் பயிற்சியும் பெற்றார். ஆனால், அத்துறை அவர் நினைத்தமாதிரி இருக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏமாற்றத்தில் பிறருடன் சண்டை போட ஆரம்பித்தார். வாழ்க்கையே வெறுத்துப்போயிற்று.

கதை

செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்த அழகி கன்னிகா. பதினைந்து வயதிலேயே `என் துறை இதுதான்!’ என்று `மாடலிங்’ செய்வதைத் தேர்ந்தெடுத்திருந்தாள். பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படிப்பை அப்போதே அரைகுறையாக நிறுத்தினாள். நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அவைகளைப் பெற எப்படி நடந்துகொண்டாலும் தவறில்லை என்று முடிவெடுத்தாள்.

கடினமான, சவாலாக அமையும் ஒன்றைச் செய்வது என்று முடிவெடுத்தால் பல இடர்கள் விளையத்தான் செய்யும். மாற்றத்தால் சிலவற்றை இழக்க நேரலாம். ஆனால், மேலும் சிலவற்றை அடையலாம் என்று சமாதானம் அடைந்தாள்.

முடிவு சரியோ, தவறோ, தளர்ச்சி அடைவதால் பயன் ஏதுமில்லை. தவறாக இருந்தாலும், அதை எப்படிச் சரியாக்கலாம் என்று யோசித்து நடந்தால் மனம் தெளிவடையும்.

`பிறர் என்ன சொல்வார்களோ! எல்லாரும் செய்கிறார்களே!’ என்று ஒருவர் எடுக்கும் முடிவு அவருக்கு நன்மையோ, நிம்மதியோ பயப்பதாக இருக்கும் என்று கூற முடியாது.

கதை

மலேசியாவுக்குப் போய் வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற முடிவெடுத்து வந்தார் மகாலிங்கம். அங்கு கைநிறையப் பொருள் ஈட்டி, தன்னைவிட அதிக அந்தஸ்துள்ள பெண்ணை மணக்கலாம் என்று கனவு கண்டார்.

தான் நினைத்தபடி புதிய வாழ்க்கை சொர்க்கமில்லை என்று விரைவிலேயே உணர்ந்து, அதிர்ச்சியும் வருத்தமும் ஒருங்கே அடைந்தார். கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக இருந்ததால், எதிர்பார்த்தபடி நிறைய சேமிக்க இயலவில்லை. தன்னையொத்த பலருடன் ஒரே அறையில் படுக்க வேண்டிய சூழ்நிலை. உறவினர்களைப் பிரிந்து தனிமையில் வாடியதுடன், கலாசார வேறுபாடுகள் வேறு!

எல்லாவற்றையும் ஏற்று, `பிறர் நம்மைப் பலவந்தப்படுத்தவில்லையே! நாமேதானே வந்தோம்!’ என்று தன்னம்பிக்கையுடன் மனதைத் திடப்படுத்திக்கொண்டார்.

சில வருடங்களுக்குப்பின், அவர் நினைத்தமாதிரியே திருமணமும் அமைந்தது. அவர் எதிர்பாராதது: பிழைப்புக்காக மனைவியை விட்டுப் பிரிய நேர்ந்ததுதான். மூன்று வருடங்களுக்கு ஒருமுறையே அவளுடன் இருக்க முடிந்தது.

அவசர முடிவு

மலேசியாவில் ஆண்டுதோறும் நடக்கும் தீபாவளிச் சந்தையைப்பற்றி விசாரித்தார் காஞ்சிபுரத்தில் இருந்த தறிக்காரர்.

“பட்டுடன் எதையாவது கலந்து, `இது நல்ல பட்டு!’ என்று சாதித்து, அதிக விலையில் விற்கிறார்கள் அந்தச் சமயத்தில். `மாணிக்கக் கற்கள் பதித்தது!’ என்று பிளாஸ்டிக்கில் செய்த மணிகளைப் பதித்த வளையல்களை விற்கிறார்கள்,” என்று நான் ஏமாந்த கதைகளைக் கூற, “நாங்க அப்படியெல்லாம் ஏமாத்திப் பிழைக்க வேண்டாம்!” என்று ஆத்திரத்துடன் கூறி, நல்லதொரு முடிவெடுத்தார் அந்த அபூர்வமான யோக்கியர்.

சில கடைகளில் தரமான, எந்தக் கலப்புமில்லாத பட்டுப்புடவைகளை விற்றார்கள். அதனால் விலை அதிகமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.

இது புரியாத பாமர மக்கள் ஏமாந்து, `முதல் கடையில் மலிவாக இருக்கிறது!’ என்று வாங்கிப்போக, தரமான பொருளை விற்றவருக்கு வியாபாரம் ஆகவில்லை.

அடுத்த ஆண்டு, தரமான அந்தக் கடை வராததைக் கவனித்தேன். எதிர்பார்த்தபடி, பிறர் சிலாகித்தபடி, லாபம் கிடைக்காதிருந்திருக்கலாம்.

இன்னொரு அவசர முடிவு. முதலிலேயே சரியாக விசாரிக்காததால் வந்த வினை.

மணக்க அவசரம்

`நான் காதலித்தவளை மணந்திருந்தால், வாழ்க்கை இன்பகரமாக இருந்திருக்கும்!’ பெற்றோரின் மிரட்டலுக்கு அடிபணிந்தோ, அல்லது உயர்ந்த நிலைக்கு ஆசைப்பட்டோ, தன் தகுதிக்கு மீறி மணந்தவரின் புலம்பல் இது.

இவர் என்ன செய்திருக்க வேண்டும்? முதலிலேயே நன்றாக யோசித்திருக்க வேண்டும்: என்னைவிட அதிகம் படித்தவளை மணந்தால், என் பொருளாதார நிலைமை உயரலாம். ஆனால், மனைவி என்னை மதிப்பாளா?

அதற்குமுன், நானே அவளை மிரட்டிவிட்டால்? என்று யோசனை போகிறது.

ஆரம்பத்திலேயே இவ்வளவு குழப்பம் எழுந்தால், இல்லற வாழ்க்கை இனிக்குமா? ஓயாத போட்டியும், பொறாமையும்தான் எழும்.

எடுப்பார் கைப்பிள்ளை

`பத்து வருஷங்களுக்கு முன்னாலேயே இப்படிச் செய்திருந்தால், எத்தனையோ பணத்தை மிச்சமாக்கியிருக்கலாம்!’ மது, சிகரெட் பழக்கத்தை விடும் முயற்சியில் இறங்கியிருப்பவர்.

அதுதான் படத்திற்குப் படம் இவைகளால் ஏற்படும் அபாயங்களைப்பற்றி எச்சரிக்கிறார்களே! விளையாட்டாய், நண்பர்களின் சவாலை ஏற்று ஆழந்தெரியாமல் கால் விட்டுவிட்டு, ஆரோக்கியக்குறைவு, குடும்பத்தில் பூசல் என்று காலங்கடந்து வருந்துவானேன்!

யார் நம் நலனை விரும்பி, நல்ல யோசனைகளைக் கூறுகிறார்கள் என்று ஆராய்ந்து நடந்தால், இப்படி வருந்த நேரிடுமா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.