முத்திக்கு வித்தாகும், திருவிடைக்கழித் திருப்புகழ்

0

முனைவர் இரா. மதன் குமார்

முன்னுரை

அறுமுகச்சிவமாகிய திருமுருகப்பெருமானுக்கு, ‘மாத்ருகா புஷ்பமாலை’ என்னும் திருப்புகழ்ப் பாமாலை சூட்டிச் சிறந்தவர், ‘திருஅருணகிரிநாத சுவாமிகள்’.  ‘மாத்ருகா புஷ்பமாலை கோலப்ரவாள பாதத்தில் அணிவோனே’ என்பது அவர்தம் அருள்உவகைப் பெருவாக்கு. சுவாமிகள் பாடிப்பணிந்த, திருப்புகழ்த் திருத்தலங்கள் அனைத்திலும் முத்தித்தலமாகவும், திருவடித்தலமாகவும் விளங்குகின்ற சிறப்புடையது, திருவிடைக்கழித் திருத்தலமாகும். ‘எத்தலத்தவரும் மருவ முத்தியைத் தரு திருவிடைக்கழி’ என்று இத்திருத்தலத்தைச் சுவாமிகள் பாடியுள்ளார்.  அவ்வகையில், சுவாமிகள் திருவிடைக்கழியினை எட்டுத் திருப்பாடல்களால் போற்றியுள்ளார். அத்திருப்பாடல்களில், திருமுருகன் திருப்புகழும், சுவாமிகளின் பக்திப்பெருக்கும், மாந்தர்தம் அறியாமைக் குறைகளைத் தமது குறைகளாக ஏறிட்டுக்கொண்டுள்ள கருணையும், நமக்கென, அவர் பெருமானிடத்தில் வேண்டிய அருளியல் விண்ணப்பங்களும், தம்மையே ஞானகுருவாகத் தந்து நம்மை ஆட்கொள்கின்ற அருள்நிலையும் அமைந்துள்ள திறத்தை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

ஞானக் கடலாகிய திருவிடைக்கழி

அறுபடைவீட்டுத் திருப்புகழில், ‘திருத்தணிகைத் திருப்புகழ்’ தனிச்சிறப்பு பெற்றுத் திகழ்கிறது.  சுவாமிகளின் மந்திரமொழிகளாகிய பல திருவருள் ஆணைகளும், அருளியல் விண்ணப்பங்களும் இத்திருத்தலத்துத் திருப்புகழில் இடம்பெற்றுள்ளன. அவ்வகையில், திருப்புகழை ஓதுவதன் அருட்பயனை விளக்குவதாக, ‘இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும்’ (திருப்புகழ்:242) எனச் சுவாமிகள் உறுதிபடச் சாற்றியுள்ளார்.  அவர் உரைத்தவகையில், திருப்புகழை உண்மையுடன் ஓதிப் பயன்பெறுவதற்கு, உற்ற குருநாதரின் அருள்துணை நாளும் இன்றியமையாததாகும். அப்பெருநோக்கத்தின் பொருட்டு, நாம் பற்றி உய்யவேண்டிய பெருமானாக, சுவாமிகள் நமக்கு, திருவிடைக்கழிப் பெருமானைக் காட்டியருளியுள்ளார்.  இத்தகைய அருள்சிறப்பினை உணர்ந்தே ஒன்பதாம் திருமுறை அருளாளர்களில் ஒருவராகிய சேந்தனாரும் மிகுந்த அருள்விருப்புடன், திருவிடைக்கழிப் பெருமானைப் போற்றிப் பணிந்துள்ளார்.  அறியாமை மிக்க ஆருயிர்கள் அனைத்துக்கும் முத்தி தரவல்ல வித்தகத் துறையோனாக, ஞானக்கடலாகத் திருவிடைக்கழிப் பெருமான் விளங்கவல்ல அருளனுபவத்தைச் சுவாமிகளும்,

“வித்தகத் துறையோனே
தருமருவு எத்தலத்தவரும் மருவ முத்தியைத்
தருதிருவிடைக்கழிப்… பெருமாளே” (திருப்புகழ்: 795) எனக் குறித்தருளியுள்ளார். 

அடியும் – நடுவும் – முடியும்:

திருப்புகழ்த் திருத்தலங்களில், ‘அறுபடைவீடுகள்’ என்னும் அருள்தொடர்புத் தலவரிசை  போல விளங்குபவை, திருவிடைக்கழியும், சிறுவாபுரியும், திருப்போரூருமாகும். திருமுருகப்பெருமானின் திருவடி முதலாக, திருமுடி ஈறாக அமைந்தவையாக இத்திருத்தலங்கள் போற்றப்பெறுகின்றன. திருக்கடவூருக்கு அருகே அமைந்துள்ள இத் திருத்தலத்தின் கருவறையில், சிவலிங்கத் திருமேனிக்கு முன்பாக, திருமுருகன் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது, ‘தாமே அறுமுகச் சிவம்’ என்பதனை நமக்கு உணர்த்தவே எனலாம்.

“கொந்துவார் குரவு அடியினும் அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
கொண்ட வேதநன் முடியினும் மருவிய குருநாதா”  (திருப்புகழ்:268) இத்திருத்தொடர்களில், ‘கொந்துவார் குரவுஅடி’ என்பது, ‘தேன் சிந்துகின்ற திருக்குரா மரத்தின் அடி’ என்பதாகிய திருவிடைக்கழியைக் குறிக்கும். ‘திருவிடைக்கழிப் பெருமானுக்கு, அடியவர்களின் சிந்தையெனும் தாமரையே இருப்பிடம்’ என்பதனை உணர்த்த, ‘சிந்தை வாரிஜ நடுவினும்’ எனக் குறித்தருளியுள்ளார். பெருமான், அடியாரின் சிந்தையில் இடம்கொண்டு, மெய்ஞ்ஞானம் அருளி, ‘வேதப்பொருளாகத் தானே விளங்கவல்ல பெருந்திறத்தையும் உணர்த்தியருள்வான்’. அதனையும் அறிவுறுத்தவேண்டி, ‘வேதநன் முடியினும் மருவிய குருநாதா’ எனக் குறித்துள்ளார். இவ்வாறு,   திருவிடைக்கழிப் பெருமானின் திருவடிகளில் சரண்புகுந்தால், அவன் நமது உள்ளத்தாமரையில் நீக்கமற நிறைந்திருந்து, வேதப்பொருளாகிய ஓங்காரமாகவும் தானே விளங்குகின்ற அருந்திறத்தையும் உணர்த்தியருள்வான்’ என்பது சுவாமிகளின் அருளனுபவத் திருவாக்கு எனலாம்.

குறை உயிர்க்கும் குருவாகின்ற சுவாமிகள்

உயிர்களுக்கு, மெய்ஞ்ஞானப்பேற்றினை பெருமானே குறைவின்றி வழங்கியருள்கின்றான். அதற்கேற்ப ஞானகுரு வாய்ப்பதும் உயிரின் பரிபக்குவத்துக்கு ஏற்பவே நிகழ்கிறது.  ‘பிரணவப்பொருளாகிய பெருமானே ஊழிகள்தோறும் திருவிடைக்கழியில் குருவாக வீற்றிருக்கின்றான். பல்லூழிக் காலங்களிலும் தோன்றுகின்ற அரனும், அரியும், பிரமர்களும், தமது முந்தை வினைப்பயனாகிய பூசனைப்பேற்றினால்,  திருவிடைக்கழிப் பெருமானைக் குருவாகப் பெற்றுச் சிறக்கின்றனர். பெருமானும் அவர்களுக்கு உவகையுடன், பிரணவப்பொருளாகிய தனது பரத்துவத்தை உணர்த்தியருள்கின்றான். அக்கருணைகூர் அறுமுகனே, பாண்டியநாட்டில் சைவ நீதியை நிலைநாட்ட, திருஞானசம்பந்தரெனவும் எழுந்தருளினான்’ என்று சுவாமிகள் பாடியுள்ளார்.

“அலை நெருப்புஎழ வடவரை பொடிபடச் சமணர்கள் குலம்
அணி கழுப்பெற நடவிய … மயில்வீர
அரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபடப் பிரியமும்வர
அவரவர்க்கு ஒரு பொருள் புகல் … பெரியோனே” (திருப்புகழ்: 799) எனச் சுவாமிகள், மேற்கண்ட திருப்புகழில் குறித்தருளியுள்ளவாறு,  ஞானகுருநாதனாகிய திருவிடைக்கழிப்  பெருமானின் பரத்துவத்தை உணர, சுவாமிகளின் கருணையுள்ளம் வழிகாட்டுகிறது. 

குருவாகி வந்த பெருமான்

 பெற்ற மனிதப் பிறப்புக்குரிய பேரறிவின் பயனாகப் பதிப்பொருளை உணர இயலாத நமது அறியாமையினைச் சுவாமிகள்,

“அனல்அப்பு அரிபுக்க குணத்ரயம் வைத்த
அடர்பொய்க் குருதிக் … குடில்பேணா
அவலக் கவலைச் சவலைக் கலைகற்று
அதனிற் பொருள்சற்று … அறியாதே”   (திருப்புகழ்: 792) எனக் கலங்கிப் பாடியுள்ளார்.

 பல அறிவு நூல்களைக் கணக்கில்லாமல் கற்றும், அதன் மெய்ப்பொருளை அறிய முயலாமல், குறைஅறிவால் துயரடைவதே மக்களின் ஞானத்தேடலாக முடிகிறது. இத்தகைய அறியாமையாகிய அவலக்குழியிலிருந்து மீள்வதற்கு வகை தெரியாமல், அறிவில் சிறந்தோர் எனச் சிலரை நாம் நாடுகிறோம். அவர்கள், பதிஞானத்தால் பக்குவமுற்றவர்களாக இல்லை. வீணே பழங்கொள்கைகளைப் பிதற்றுவதன்றி, எள்முனை அளவு ஞானத்தையும் பெற்றுத் தருவதில்லை. அவர்களது  வழிகாட்டுதலால், அறிவுக்கண் திறக்கும் என்ற நம்பிக்கையும் என்றும் மெய்யாவதில்லை. அவர்களது பழங்கொள்கைப் பிதற்றலால், அறிவு துருப்புபோல் இளைத்து, மேன்மேலும் துன்புறவே நேருகிறது.

“படுகுழி புக்கு இனி தேறும் வழிதடவித் தெரியாது
பழமை பிதற்றிடுலொக … முழுமூடர்
உழலும் விருப்புடன் ஓது பாசவலைக் கலைதேடி
யொரு பயனைத் தெளியாது”        (திருப்புகழ்: 796)  எனத் தெளிவில்லாமல், ஞானகுருவைத் தேடிக் கலங்குகின்ற நமக்கு, தாமே ஞானகுருவாகி இரங்கியருள்பவராகத் திருவிடைக்கழித் திருப்புகழைச் சுவாமிகள் தந்துள்ளார்.

குருவாகி வந்தருள்கின்றார்:

உயிரின் பரிபக்குவம், வினைவலிமையினை மாய்க்கிறது. ‘பெருமானே பரம்பொருள்’ என்று உணர்த்தவல்ல நற்குருவைக் காட்டியருளி, மெய்ஞ்ஞானப்பேற்றுக்கும் ஆட்படுத்துகிறது. வினைவலிமையால், நம் அறிவானது, நற்குருவைக் கண்டடைகின்ற பேரறிவாக விரிவடைவதில்லை. ‘தம்மானை அறியாத சாதியார் உளரே’ என்று பாடிய சுந்தரர்பெருமானின் திருவாக்கு, நமக்கு மிகவும் பொருத்தமுடையதாகும். அன்று அவர், சித்தவடமடத்தில் தம்மைத் தாமே நொந்தழுத நிலையில், திருவருளே அவருக்குக் கண்ணாக இருந்து சிவத்தைக் காட்டியருளியது. அதுபோன்றே, ஊனக்கண்கொண்டு, சிற்றறிவால் சிவத்தை உணரஇயலாத நம்மைப் போன்றவர்களுக்கும் குருவருளே கண்ணாக விளங்கிக் காட்டியருளவேண்டும். அத்தகைய அருள்நோக்கத்துடன் சுவாமிகளே நமக்கு ஞானகுருவாக இரங்கியருள்கின்ற வகையில், நமது அறியாமைக் குற்றங்களையும் தன்னுடையதாக ஏறிட்டுக்கொண்டு, பெருமானிடத்தில் பல அருளியல் விண்ணப்பங்களைப் பணித்துள்ளார்.

நற்பதம் காட்டுகின்றார்

நமது ஐம்புலச் சேட்டைகள் நீங்கி, சிந்தையாலும், சொல்லாலும், செயலாலும், பெருமானது திருப்புகழில் ஒன்றுகின்ற ஆன்மபலத்தினைத் திருவிடைக்கழிப் பெருமானிடத்தில் வேண்டுகின்றார்.

“உனகமலப் பதநாடி உருகி உளத்து அமுதூற
உனது திருப்புகழ் ஓத … அருள்வாயே”          (மேலது பாடல்)

என்பது அவர்தம் விண்ணப்பம். பதிஞானமாகிய பேரறிவு வாய்த்தாலும், நமது ஆணவமல வாசனை, நாம் உணர்ந்த இறைபொருளை, எடுத்த மொழியாலும், ஏதுக்களாலும் சோதித்தறிய முற்படுகின்ற அறியாமைக்கே தலைப்படும். ஞானப்பொருளாகிய பெருமான், தன்னை உணர்ந்தாரின் கல்மனத்தையும் கரையச் செய்கின்ற அருளே நிலையாக விளங்குபவன். அவனை அன்புக்கண்கொண்டு பார்ப்பவர்தம் உள்ளத்தை உருக்கி, அதில் ஊற்றென எழுகின்ற அருள்வெள்ளமென விளங்குபவன். எனவே, நமது ஞானத்தேடலின் படிநிலையில், அறிவால் அல்லாமல், அன்பால் பெருமானைத் தேடுகின்ற நெறியைச் சுவாமிகள் மேற்கண்ட திருப்புகழ் பாடலில் அறிவுறுத்தியுள்ளார்.

குற்றமில்லாத பேரறிவுக்கு வழிகாட்டல்:

சுவாமிகளையே ஞானகுருவாகப் பெறினும், நமது முந்தை வல்வினை அவரால் உணர்த்தப்பெறுகின்ற இறைபொருளை முழுமையுற இயலாதவண்ணம், அறியாமையாகிய மறைப்பினையே மேன்மேலும் விளைவிக்கும். இதையே சான்றோர், ‘மலமறைப்பு’ என வழங்குவர். மலமறைப்பாகிய அறியாமையை நீங்கி, பெருமானின் திருவடிகளில் சரண்புகுவதாகிய ஞானத்தைச் சுவாமிகள், ‘புகரில் புத்தி’ (குற்றமில்லாத பேரறிவு) எனக் குறிக்கின்றார்.

குற்றமில்லாத நிறைஅறிவு, பெருமானை உணர்ந்து, அவனை அணுப்பொழுது அகலாது பற்றியிருக்கச் செய்யும். அவ்வறிவு வாய்க்கச் செய்தலும், அதன்வழி அடியவரை ஆட்கொள்ளுதலும், பெருமானின் அறக்கருணை எனப்படும். அதற்கு, ‘வள்ளி சன்மார்க்கம்’ குறியீடாகும். அடாதவற்றைச் செய்தொழுகுவோரையும் பெருமான், அடியவராக ஆட்கொள்ளத் தவறுவதில்லை. அவர்களையும் பெருமான், மறக்கருணையால் ஆட்கொள்வதனைத் திருவிடைக்கழித் திருப்புகழில் சுவாமிகள் அருளிச்செய்துள்ளார். சூரர்கள், நிகரில்லாத அனைத்து வகைப் பெருவாழ்வையும் பெற்றிருந்தனர். ஆயினும், அவர்கள்தம் அறிவு, பெருமானை உணர்கின்ற பேரறிவாக விளங்கவில்லை. அத்தகைய அவலம், நம்மனோர்க்கு நிகழாத வண்ணம், குற்றமில்லாத பேரறிவை வாய்க்கச் செய்வதாகிய, ‘வள்ளி சன்மார்க்கத்தையும், சூரன் அருள்பெற்றதையும் திருவிடைக்கழித் திருப்புகழில் உரைக்கின்றார்.

வள்ளி சன்மார்க்கம்:

திருவிடைக்கழித் திருப்புகழில், வள்ளியம்மையைச் சுவாமிகள், ‘குறத்திரு’ எனக் குறித்தலால், ‘அவள் உள்ளமும் அழகியவள்’ என்பது பெறப்படும். பெரும்பெயர் முருகன் என்னும் அழகனும், அடியாரின் உள்ளத்தாமரையினையே தனக்கு இடமாகக் கொள்கின்றான். இதனை உணர்த்தவே சுவாமிகள், திருவிடைக்கழிப் பெருமான், ‘அடியார்தம் சிந்தை வாரிஜ நடுவிலும் குடிகொண்டவன்’ என்றருளிச் செய்தார். இதனைக் குறித்தே மணிவாசகரும், ‘சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை’ என்றருளினார். வேடுவர்தம் குடிவாழ்க்கை வாய்த்தபோதிலும், வள்ளிக்குறத்தி, தன்னை உணர்ந்தவளாக, பெருமானை மட்டுமே தனது சித்தத்துள் நிறைத்தவளாக, நிறைதவத்தினை மேற்கொண்டாள். அவளது பக்குவத்தினை நோக்கியே பெருமான், தானே இரங்கி அவளை நாடித் தினைப்புனத்திற்கு வந்தான்.

“தினை வித்தின நற்புன மறத்தியை
தழுவு பொற்புயத்…திருமார்பா’            (திருப்புகழ்: 792)

என்பது, திருவிடைக்கழித் திருப்புகழ். இங்கு,  ‘புனம்’ என்பது, விளைச்சல் தருகின்ற வயல்வெளியைக் குறிக்கும். மானுடராக உரு தாங்குகின்ற அனைவர்க்கும், அவர்தம் உள்ளமே பக்திப்பயிர் வளர்க்கின்ற நல்வயலாகவும், உடம்பே அதைக் காக்கின்ற வேலியாகவும் அமைகின்றன. பெருமானைப் பெற்றுய்ய வேண்டும் என்கின்ற மெய்யுணர்வே, ஞானப்பயிருக்குரிய உரமாகவும் அமைகின்றது. வள்ளிக்குறத்தி தன் உள்ளமாகிய வயல்வெளியில், அன்பென்னும் பக்திப்பயிரினை நாளும் தழைத்து வளரச்செய்தவள். மாறாக, ‘ஆணவம்’ என்கின்ற நச்சுமரமாக நாளும் ஓங்கி வளர்ந்தவன், சூரன். ‘தாம் வளர்த்ததோர் நச்சு மரமாயினும் கொல்லார்’ என்பதுபோல, பெருமானும் சூரனுக்கு இரங்கியருளினான். சூரனைத் தனது திருவடியில் பணியச்செய்த பெருமான், வள்ளிக்குறத்தியின் உயர்ந்த அன்பின் பக்குவத்தை  நமக்கு உணர்த்தவேண்டி, அவளது திருப்பாதங்களில் தான் பணிந்ததாக நயமுறப் பாடியுள்ளார்.  “தினைவேடர் காவல் தங்கு மலைகாடெலாம் உழன்று, சிறுபேதை கால்பணிந்த குமரேசா’ என்பது திருப்புகழ் (பொதுப்பாடல் வரிசை-மனநூறு கோடி). 

வள்ளியாகி, பேரின்பக்காதல்:

வள்ளி சன்மார்க்கத்தைப் பேரின்பக் காதலாகக் குறிக்கவேண்டிச் சுவாமிகள், தானே வள்ளிக்குறத்தியின் நிலையினை ஏற்றுப் பாடியுள்ளார். திருவிடைக்கழிப் பெருமானும், தானும் மட்டுமே இருந்து  துய்ப்பதாகிய பேரின்பக் காதலைக் காட்டி, உலகியலில் நமது சிற்றின்பபோகத்தை மறக்கச்செய்கின்றார். வள்ளிக்குறத்தி,  திருவிடைக்கழிப் பெருமானிடத்தில் மாலை வேண்டி ஊடல் கொள்கின்றாள்.

‘பெருமானே!, உனது அடியவரின் துயரினை நீக்குவதற்காகவே, வீரவேல் தாங்கி, மயில் மீதிலேறி,  ஓடோடி வருபவன் நீ; உனது மென்மையான உள்ளத்தின் குறியீடாகவே, நீயும் மென்மையான கடம்ப மலர் மாலையினை மிக விரும்பிச்  சூடிக் களிக்கின்றாய். கடம்பமாலை சூடி, குராமர நிழலில் உறைகின்ற நீயே, எனக்குப் பேரின்ப மையலை ஊட்டினாய். நோய் தந்த நீயே அந்நோய்க்கு மருந்தும் ஆவாய். இதனை அறியாத என் பெற்றோரும், உற்றோரும் மற்றோரும் உன்னைப் பலவாறு நொந்துரைப்பதனை கேட்டு என்னால் பொறுக்க இயலவில்லை. அதனால், எனது பேரின்பக்காதல் நோயினைத் தீர்க்கவேண்டி, நீயே மயில்மீது உடன் வந்து அருளுவதே முறையாகும்;  ஆயினும், எனது வல்வினையால் நீ எனக்கு அருளக் காலம் தாழ்கின்றவேளையில், நீ சூடிக் களைந்த கடம்பமலர் மாலையினையாவது தந்து என்னைக் காக்கவேண்டும்’  என்று சுவாமிகள்,  தலைவி நிலையிலிருந்து பாடியுள்ளார்.

“மருக்கு லாவிய மலரணை … கொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது… மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் …  பழியாதே
கடப்ப மாலையை இனிவர … விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடை … மணவாளா
சமர்த்தனே மணிமரகத … மயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனில் … உறைவோனே
திருக்கைவேல் வடிவழகிய … பெருமாளே” (திருப்புகழ்: 798)

மேற்கண்ட பாடல், வள்ளிக்குறத்தி, திருவிடைக்கழிப் பெருமானைப் பெற்று இன்புறுவதற்கு, ‘கடம்ப மாலை’ கருவியாக வேண்டுவதைக் குறிக்கின்றது.   வள்ளிக்குறத்தியின் வகையில் நின்று நாமும் திருவிடைக்கழிப் பெருமானிடத்தில்,  என்றும் அகலாத அருள்காதல் கொள்ளவேண்டியே, சுவாமிகள் மேழும் ஏழு திருப்புகழ்ப் பாடல்களை இத்திருத்தலத்துக்கு அருளியுள்ளார். அவை நமது அன்றாட வாழ்வியல் மந்திரங்களானால், உலகியலாகிய சிற்றின்பநாட்டமும்,  அண்டங்களையும் கடந்த பேரளவுடைய, சொல்லுக்கும் அடங்காத நம் சிற்றின்பச் சூரத்தனங்களும் நம் சிற்றறிவுக்கு விளங்கும். நமது சூரத்தனங்கள் அகன்று நன்னிலையினை வாய்க்கச்செய்யவே, ‘ஞானச்சூரியனாகிய பெருமான், சூரன் முதலானோரின் அறியாமைச் செயல்களை, ஞானவேல் கொண்டு அடர்த்தருளிய திறத்தையும் சுவாமிகள் குறித்துள்ளார். 

ஞானவள்ளியும் அகந்தைச் சூரனும்

வள்ளிக்குறத்தியும் நம்மைப் போன்றே, உடம்பெடுத்து மண்ணுலகில் வாழ்ந்தவளே. அவள், உள்ளமாகிய வயல்வெளியில், குறிஞ்சிக் கிழவனுக்கு உகப்பாகிய தினைப்பயிரை விளைவித்தவள். ஐம்புல வேலியால் அதனை உரியவாறு காப்பதும், அதனைப் பெருமானுக்குப் பணிப்பதும், அவளது பெருநோக்கமாக  இருந்தது. அவள், சித்தத்துள் குறிஞ்சிக்கிழவனையே நிறைத்திருந்ததால், அவளது செயல் அனைத்தும், பெருமானுக்கு உரியவையாகவே அமைந்தன. அவை பதி புண்ணியங்களாக விளைந்து, அவள் விரும்பியவாறே, பெருமானைப் பெறச்செய்தன. குறவரால் வளர்க்கப்பட்ட வள்ளிக்குறத்தி, தனது வாழ்வின் பெருநோக்கத்தைத் தெளிவுற அறிந்திருந்தமைக்கு, அவளது முந்தை வினைப்பயனே துணையாக விளங்கியது.

நாமும், நமது முந்தை வினைப்பயனின் துணையினாலேயே பெறுதற்கு அரிய பிறப்பாகிய மனிதப்பிறப்பினைப் பெற இயன்றது’ என்பதனை உணர இயலவில்லை. இப்பிறப்பின் பெரும்பயன், ‘செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே’ என்ற மெய்யுணர்வுக்குத் தலைப்படுவதுமில்லை. நம்மிடமுள்ள அறியாமையின் குறியீடாகவே சூரன் வாழ்ந்திருந்தான். வெற்றிப் பெருவாழ்வு வாழ்கின்ற பேறு வாய்த்திருந்தபோதிலும், அதன் பயன், பிறப்பினை வெற்றி கொள்வதாகிய முத்திப்பேற்றினை விரைவில் பெற்றுய்வதற்கு அவனது நல்லறிவு துணைசெய்யவில்லை. அதனாலேயே, தாயினும் சாலப்பரிகின்ற பெருமான் அவனை ஆட்கொள்வதற்கு, பதினெட்டு ஆண்டுகள் போரிட்டார். அங்கு, சூரனின் ஆணவப்போர் மாய்ந்து, பெருமானின் அருள்போரே வெற்றிகண்டது.

வள்ளிக்குறத்தியைப் போன்று, சூரனும், மனிதனாக உடல்தாங்கிய போதும், உள்ளத்தில் பெருமானைக் குடியேற்ற அவன்பால் அன்பென்னும் அறச்சிந்தனைச் சிறிதும் இல்லை. அதனாலேயே அவனால், ‘அறுமுகச்சிவமே தன்னை ஆட்கொள்ள வந்துள்ளது’ என்பதனை உணர இயலவில்லை. அவனது அறிவளவிற்கு எட்டுகின்ற வகையில், மறக்கருணையால் பெருமானும் அவனை ஆட்கொண்டருளினார். அப்பெருமானே, திருவிடைக்கழியிலும் எழுந்தருளியுள்ளதாகச் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

“நெருக்கியே வரும் அவுணர்கள் குலமற
உறுக்கியே மயில் முதுகினில் விசைகொடு
நிலத்திலே சமர்பொருதவர் உயிர்பலி … கொளும்வேலா’ (திருப்புகழ்: 797)

என்று பாடி, சூரனைப் போன்று அறியாமை மயக்கில் ஆட்படாமைக்கு, பெருமானது திருவடிகளில் நம்மைச் சுவாமிகள் சரண்புகுத்துகின்றார்.

“முடுக்கியே உனது இருகழல் மலர்தொழ … அருள்தாராய்”     (மேலது பாடல்)

மேற்கண்ட தொடரில், ‘முடுக்கி’ என்பது விரைவாக எனப் பொருள்படும். சூரனுக்கருள நீண்ட பதினெட்டாண்டுகள் அமைந்ததைப் போன்று, இம்மண்ணுயிர்களுக்கு அருளவும் மிக நீண்ட காலம் அமைவதே அவ்வவ் உயிர்களின் விதியாயினும், அதனை மதியால் வெல்கின்ற பேறாக, ‘உடனே உனது திருவடியைப் பணிகின்ற பேற்றினை வழங்கியருள்க’ என்று பெருமானிடத்தில் நமக்காகச் சுவாமிகள் பரிந்துரைக்கின்றார்.

அறஉள்ளம் வேண்டும் எனல்:

பெருமானை உணரத்தக்க அன்புக்கு, அறமே அடிப்படை. அதனால், அடியாரின் அறவாழ்க்கையையே, பக்திவாழ்வியலாகச் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். திருவிடைக்கழிப் பெருமானின் திருவடித்தாமரைகளை வேண்டுகின்ற அடியார்க்கு, பிறர் துயர் தீர்த்தலாகிய அன்புள்ளமே அடிப்படைத் தேவையாகும். ‘தமக்குப் பெருமான், பெறற்கரிய திருவருளைத் தந்தருளவேண்டும்’ என்று சிந்திப்போர், தம்மால் இயன்றதைப் பிறருக்குத் தருகின்ற அன்புள்ளம் கொண்டவராக இருத்தலைச் சுவாமிகள் பிற தலங்களின் திருப்புகழிலும் வலியுறுத்தியுள்ளார்.

தம் பொருளைப் பிறருக்கு ஈயாத கீழோரின் அவலத்தைத் தம்பால் ஏறிட்டுக்கொண்டு, திருவிடைக்கழித் திருப்புகழில் சுவாமிகள் பாடியுள்ளார். நெறியல்லாத நெறிகளில் பொருளைத்தேடி, இன்பங்களில் தலையாயது பெண்ணின்பமே என நாடி, ஓடியோடி இளைக்கின்ற அறியாமை நீங்கி அறவாழ்வு வாழ்வதற்குத் துணையாகத் திருவருளை வேண்டுகின்றார்.

“இரக்கும் அவர்க்கு இரக்கம் மிகுத்து அளிப்பன சொப்பனத்திலும்

அற்ற எனக்கு”…………………………………………………
…………………….ப்ரபுத்துவம் உற்று…………………………….
……சளப்பம் இடும் இப்பவக் கடலைக் கடக்க இனிக்
குறித்து இரு பொன்கழல் புணையைத் தருவாயே”                 (திருப்புகழ்: 793)

என்ற தொடர்களில், உயர்வில்லாத வகையில் உலகியலிலேயே உழன்று, தாமே தனித்தலைவர் என்ற செருக்குடன் வாழ்ந்து, இதுகாறும் இப்பிறப்பில்  துன்பத்தையே  சேர்த்துள்ளோம்’ என்று கழிவிரக்கம் கொள்கின்ற மனிதர்களின் அறியாமையினை, ‘ப்ரபுத்துவம் உற்று, சளப்பம் இடும் இப்பவக் கடல்’ என்று குறிக்கின்றார். ‘துன்பம் தருவதாகிய உடம்பைப் பேணி, நாளும் அதனை வளர்ப்பதற்கே தீனியிட்டு, உடல் கொண்ட நோக்கத்தை உணர்கின்ற அறிவற்று, நாயினும் கீழாக வாழ்கின்ற வாழ்க்கை’ என மனித வாழ்க்கையின் அவலத்தைச் சுட்டுகின்றார்.

“பசிபடு நிணச்சடக் … குடில் பேணும்
உடலது பொறுத்த அறக்கடை பெறு பிறப்பினுக்கு
உணர்வுடைய சித்தமற்று … அடிநாயேன்
உழலும் அது கற்பு அல கழல் இணை எனக்கு அளித்து
உனது தமர் ஒக்க வைத்து … அருள்வாயே’     (திருப்புகழ்: 795)

பிறப்பின் பெருநோக்கத்தினை உணராத அறியாமை, பகுத்தறிவுபெற்ற மனிதப் பிறப்புக்கு அறமன்று; ஆதலால், அத்தகைய பேரறிவுக்குத் தலைப்படுவதற்குரிய சூழலாக, அடியார்களுடன் இருத்தலாகிய பெரும்பேற்றினைப் பெற்றுய்ய சுவாமிகள் வழிகாட்டுகின்றார்.

முடிவுரை

திருப்புகழை வாழ்வியல் நெறியாக உடையவர்தம், திருவடிகளைத் தாம் வணங்குவதாகச்சுவாமிகள் குறித்துள்ளார். ‘உனைப் பலநாளும் திருப்புகழாலும் உரைத்திடுவார்தம் குளிமேவி உணர்த்திய போதம் தனைப் பிரியாது, ஒண்பொலச் சரணானும் தொழுவேனோ (திருப்புகழ்: 249)’ எனப் பாடி, திருப்புகழை ஓதுகின்ற குருநாதரின் அறவுரைக்குத் தம்மை ஆற்றுப்படுத்துமாறு முருகப்பெருமானிடம் பணிகின்றார். மேற்கண்ட இத்தொடரானது, பிறப்பினைக் கடந்த சுவாமிகள் நம்மைப்போன்ற ஆருயிர்களின்பால் கொண்ட கருணையால் விளைந்ததாகும். அக்கருணையின் வெளிப்பாடே,

“புகரில் புத்தியுற்று அரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் … பெருவாழ்வும்
புலன் அகற்றிடப் பல விதத்தினைப்
புகழ் பலத்தினைத் … தரவேணும்”         (திருப்புகழ்: 794)

என்றமைந்த திருவிடைக்கழித் திருப்புகழாகும். இத்திருப்பாடல், ஐம்புலச் சேட்டைகள் மாயவும், யாவர்க்கும் தலைவராகி, கற்பகப் பெருவாழ்வு வாய்க்கவும், பதிஞானம் நிலைக்கவும் ஓதவேண்டியதாகும். இத் திருத்தலத்துக்குரிய பிற திருப்பாடல்களும் நமது வாழ்வியல் நெறியானால், சொல்லுக்கும் அடங்காத நம் சூரத்தனங்கள் மாயும். வள்ளிக்குறத்தி கொண்ட அயராஅன்பு நமக்கும் வாய்க்கும். அவ்உயர்ப்பேற்றினால், திருக்குராவடியில் உறைகின்ற பெருமானின் திருத்தாள் நிழலுற்று உய்யலாம்.

(மேற்கோள் பாடல் எண்கள், WWW.KAUMARAM.ORG இணையத்தில் உள்ளபடி குறிக்கப்பட்டுள்ளன.)

ஆய்வுத் துணைநூல்களும் இணையமும்: 

1.ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மாலை,
அடியார் திருக்கூட்ட இறைபணி மன்றம்., சென்னை.
கிரி ட்ரேடிங் ஏஜென்ஸி, சென்னை. 15-ஆம் பதிப்பு: ஏப்ரல் – 2014.

2. இணையம்: WWW.KAUMARAM.ORG

*****

கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 21.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *