Featuredஆய்வுக் கட்டுரைகள்இலக்கியம்

திருப்பாவையில் அர்த்தபஞ்சக ஞானம்

-முனைவர் இரா. மதன் குமார் 

முன்னுரை: 

அன்ன வயல் புதுவையாம், திருவில்லிப்புத்தூரின்கண் அவதரித்து, அரங்கநகராள்வாருக்குப் பூமாலையுடன், பாமாலையும் சூட்டிச் சிறந்தவர், ஆண்டாள் நாச்சியார். அவர்,  சீவான்மாக்களை விண்ணேற்ற, பூமிப்பிராட்டியின் அம்சமென, மண்ணில் உதித்தவர்; பாடித் தந்த சொல்மாலையால் அருள்மணம் பரப்பி, அரங்கநகரானைத் தனது பக்திவலையில் அகப்படுத்திக்கொண்டவர்; அவர் அருளிச்செய்த, ‘திருப்பாவை’ப் பாசுரத் தொகுதியானது, நம்மைப் பிறவியாகிய பெருவலையிலிருந்து மீட்டருளவல்லது; ‘அர்த்தபஞ்சக ஞானம்’ என்னும் மதிநலம் விளங்கச்செய்வது; நிறைவுற அருள்நெறி காட்டி, ஆன்ம ஈடேற்றத்துக்கு வகைசெய்வது; அவ்வகையில், இறைநிலையும், உயிர்நிலையும், அருள்வகையும், அருள்வழியும், அருள்வகைக்குரிய தடையுமாகிய ஐம்பொருள் அறிவும், திருப்பாவையில் வலியுறுத்தப்பெறுகின்ற வகையினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

அர்த்தபஞ்சக ஞானம்:

சீவான்மாக்களாகிய நாம், பெருமாளாகிய பரமான்மாவை என்றும் மறவாது அடிமை பூண்டிருப்பதையே உண்மைஇயல்பாகக் கொள்ள வேண்டியவர்கள். பரமான்மாவும், யாதொரு நியதியும் இன்றி,  நம்மைக் காத்தருள்வதயே தமது இயல்பாகக் கொண்டவர். ஆயினும், நாம் அஞ்ஞானச் சூழலில்பட்டு, பரமான்மாவுக்கு  மட்டுமே அடிமைப்பட்டிருத்தலாகிய சேஷத்துவத்தை மறக்கின்றோம்; அவ் அறியாமையினால் வினைவழிப்பட்டு, பிறவித்துன்பத்தில் உழல்கின்றோம். இத்துன்பத்தினின்றும் ஈடேற்றவே இறைவனும் நமக்குப் பிறப்புகளைத் தந்தருள்கின்றார். அப்பிறப்புகள், இறைவனை மேன்மேலும் அறிதற்கும், அவரது திருவடியை மறவாமல் பணிதற்கும் வாய்ப்பாக அமைந்தால், பிறவிச்சுழலிலிருந்து நாம் கடைத்தேறலாம். மாறாக, இறைவனை மறந்து, தற்சுதந்திரத்தால் செருக்கித் திரிதலும், அதனால், பிறப்பின் பயன் பாழாதலும், பிறப்பின் பெருவாயில் நீள்தலுமே ஓயாது நிகழ்கின்றன.

இவ்அவலத்தைக் குறித்த அறிவுறுநிலையே, சீவான்மாக்களுக்குத் தம்மையும், தம்மின் மேலான இறைவனையும், இறைவனிடத்தில் அடிமைபூணுதலின் இன்றியமையாமையையும், அடிமைத்திறத்துக்குரிய வழிகளையும், அவ்வழிமுறைக்குரிய தடைகளையும் அறிவுறுத்தும். திருப்பாவைப் பாசுரங்கள், இவ்ஐம்பொருள்கள் குறித்தும் விளக்குகின்ற, அர்த்தபஞ்சகப் புதையலாகத் திகழ்கின்றன.

இறைவனின் இயல்பு: ‘நாராயணனே பறைதருவான்’:

  பாவைநோன்பினை வலியுறுத்துவதாகிய திருப்பாவையின் முதலாம் பாசுரத்தில் பாவைநோன்புக்கான பயனை, நாராயணனே தந்தருள்வான் என்று ஆண்டாள் நாச்சியார் அறுதியிட்டு உறுதியாக அறிவுறுத்துகிறார். பரமான்மாவாகிய பெருமாள், தானே எவர்க்கும் தனி முதலாக விளங்குபவர்; ‘ஏகமூர்த்தி’ என்று இப்பெருநிலையினை ஆழ்வார்கள் ஏற்றிப்போற்றுவர். பரமான்மா, இப்பெருநிலையில், ‘ஞானம், சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேஜஸ்’ ஆகிய அறுவகைக் குணங்களும் நிறைந்த தனிமுதலாக விளங்குபவர்.

இவர்தம் ஆணைவழியே, சங்கர்ஷணனும், பிரதியும்னனும், அநிருத்தனும், மும்மூர்த்திகளாக இயங்கவல்லவர்கள். ஆயினும், பெருமாளிடத்தில் விளங்குகின்ற அறுவகைக் குணநிறைவு, மும்மூர்த்திகளுக்கு அமைவதில்லை. அவரவரும் தமது தொழில் நிலைக்குரிய குணங்களை மட்டுமே பெற்றிருப்பர்.  மும்மூர்த்திகளும் பெற்றுள்ள திருக்குணங்கள் பெருமாளால் வழங்கப்பட்டவையும், அவர்கள் மூவரும், பெருமாளின் ஆணைவழியே செயல்புரிபவர்கள் என்பதும் தத்துவவிளக்கம். எனவேதான், ஆண்டாள்நாச்சியார் நம்மைப் பரமான்மாவாகிய  பெருமாளிடத்தில் நேரிடையாகச் சரண்புகுத்துகிறார். அந்நோக்கில், பெருமாளின் பரத்துவத்தை நமக்கு உறுதிபட அறிவுறுத்துபவராக, ‘நாராயணனே நமக்கே பறைதருவான்’ என்று பாடியருளியுள்ளார்.

ஆன்மாவின் இயல்பு: அறியாமைத் துயில் நீக்கம் 

திருவரங்கக் கலம்பகம், சீவான்மாக்களின் அறியாமையாகிய இயல்பினைச் சுட்டுகின்றது. ‘புலன்கள் சிற்றறிவைக் காட்ட, அதன்வழியே நாளும் சிறுசெயல்கள் செய்து வாழ்கின்ற சீவனே!’, ‘உனது உண்மைஇயல்பை நீ அறிவாயோ?’. ‘நீ ஐம்பெரும் பூதங்களும் அல்லை; சிற்றின்பச் சுவை கூட்டுகின்ற ஐம்பொறிகளும் அல்லை; அவற்றின் வழியான சிற்றறிவும் அல்லை; உனக்கெனத் தற்சுதந்திரமும் இல்லை; இதனை நீ அறிதல்வேண்டும்’; ‘திருமகளை மார்பில் தாங்கிப் பரமபதத்தில் நிலைக்கின்றவனும், வாமனனாகி வந்து மாவலிக்கு அருளியவனுமாகிய திருஅரங்கனுக்கு என்றும் அடிமையாக உள்ளவன் நீ!. இதனை உணர்தலே அனைத்துலகிலும் சிறந்த தவமாகும்’ என்பது அப்பாடலின் கருத்தாகும். இவ்வாறு பெருமாளுக்கு ஆட்பட்டு இன்புறவேண்டிய ஆன்மநிலையினை ஆண்டாள்நாச்சியார்’ ‘புள்ளும் சிலம்பின காண்’ என்ற ஆறாம் பாசுரம் முதலாக, ‘எல்லே இளங்கிளியே’ என்ற பதினைந்தாவது பாசுரம் ஈறாக அருளிச் செய்கின்றார்.

‘பெருமாளே எளிவந்த கருணையுடன் கண்ணபெருமானாக ஆயர்ப்பாடியில் இரங்கியருளியபடியால், அவனைப்பணிந்து இன்புறுவோம்’ என்று ஆண்டாள்நாச்சியார் , ஆயர்க்குலத்துத் தோழியர்க்கு அறிவுறுத்துகின்றார். அதற்கென்று, தோழியரைத் துயிலுணர்த்துதல் என்னும் நிலையானது, ஆன்மாவின் சிற்றறிவுச் சிறுமைகளை ஆசாரியநிலையிலிருந்து சுட்டி, அச்சிறுமைகள் நீங்க, அருள்வெள்ளத்தில் மூழ்கி எழச்செய்தல் என்னும் பக்திநிலையினைக் குறிப்பதாகும். மேலும், இப்பத்துப் பாசுரங்கள், ‘யோகத்துயில் கொண்ட தோழியை, வெளியே இருந்து தோழியர் எழுப்புதல்’ போன்று அமைந்துள்ளன. விடமுண்டவர்க்கு, அவ்விடம் உடலின் தன்மைக்கேற்ப விளைவினைத் தரும். சிலர் மயக்கமுறுவர்; சிலர், அந்நிலையினும் மாறுபட்டதாகித் துடிதுடிப்பர். அதுபோன்றே, தன்னிலை மறந்து பெருமாளை மட்டுமே அனுபவித்தலாகிய அடிமைத்திறமும் ஆயர்குலப் பெண்களிடத்தில் வேறுவேறாக அமைந்ததனை இத்திருப்பாடல்கள் சுட்டுகின்றன எனலாம்.

சீவான்மாக்கள் அனைத்தையும் ஆள்பவராகிய பெருமாள், நம்மைக் காப்பதையே தன்னியல்பாகக் கொண்டவர். ஆதலால், பெருமாள், நாம் வேண்டுவனவற்றைத் தந்து காலம் தாழ்த்துகின்றநிலையிலும், நாம் அவரையே பணிபவர்களாக, அவரது இருப்பிடத்தைச் சென்றுசேர்ந்து, பணிந்து அருள்பெறுவோம்’ என்ற உபாயஞானமும் இப்பாசுரங்களில் வலியுறுத்தப்பெற்றுள்ளன.

ஆன்மாவுக்குரிய பயன்கள்: 

அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நாற்பொருள்களே நாம் அடையத்தக்க உறுதிப்பொருள்களாகும். அறமாவது, சொல்லாலும், செயலாலும் நிலைமாறாமை. ‘பெருமாளே, நமக்கு அருளவல்லவர்!’ என்னும் நிலையிலிருந்து என்றும் மாறாமையே, பக்திநிலைக்குரிய அறமாகும். அவ்வகையில், பகவானுக்குரிய அறமாவது, பெருமாளது வாய்மொழிகளாலேயே உறுதிபட மொழியப்பட்டதாக ஆண்டாள்நாச்சியார் தெரிவிக்கின்றார். ஆயர்குலத் தோழிகளுடன் நந்தகோபரது வளமனையினை அடைந்த நாச்சியார் அங்கு, திருமாளிகையின் திருவாயிலைத் திறந்தருள வேண்டுமென வாயில்காப்போரை வேண்டுகின்றநிலையில் தமதுரையாக வெளிப்படுத்துகின்றார்.  ‘ஆயர் சிறுமிகளாகிய எமக்கு, திருவருளைக் குறைவின்றித் தந்தருள்வதாகக் கண்ணபிரான், எம்மிடத்தில் நேற்றே உறுதியளித்தார்; அவரைக் கண்டு திருவருளைப் பெறுவதற்கு வந்துள்ளோம்!; அதனால், வாயில் காப்பவரே! மாளிகையின் திருக்கதவினைத் திறந்தருள்க! என்று வேண்டுகிறார். இதன்வழியே,  ‘திருவருளே ஆன்மா அடையத்தக்க பெரும்பயனாகும்’ என்பதும், திருவருளைப் பெறுவதற்கு, ‘பெருமாளை என்றும் மறவாமல் பணிவதாகிய பக்திஅறமே கருவியாகும்’ என்பதும்,  அப் பேரறிவுநிலையே,  பொருள், இன்பம், வீடு முதலாகிய பிற உறுதிப்பொருள்களுக்கும் வழிவகுக்கும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.   

திருவருளை அடையும் வகை: 

சரணாகதியாகிய பணிவே சீவான்மாக்களுக்குத் திருவருளைக் குறைவின்றிச் சுரந்தருள்கிறது. நிலைமாறாத அப்பக்தித்திறத்துக்கு, ஆசாரியரே நம்மை வழிநடத்தவல்லவர். அவரே, பெருமாளிடத்திலான சரணாகதியில் சோதனைகளையும் சாதனைகளாகக் கண்டு தெளிகின்ற பக்குவத்தைத் தந்தருள்கின்றார். திருப்பாவையின்  ‘ஆழிமழைக்கண்ணா’ என்று தொடங்குகின்ற பாசுரத்தில், மழையை இறைவனது திருவருளாகவும், மழைக்கு நிலைக்களமாகிய மேகத்தை ஆசாரியராகவும், மேகம், மழைநீரைப் பொழிவதற்கு மூலமாகிய கடலை இறைவனாகவும் உருவகிக்கக் காணலாம். அவ்வகையில், திருவருள் பொழிவில் நாம் இன்புற ஆண்டாள் நாச்சியாரையே ஆசாரியராகக் கொண்டு உய்யலாம்.

ஆசாரிய அபிமானம், நமக்குக் காட்டியருள்கின்ற சரணாகதியில் என்றும் நிலைத்திருப்பதற்கு, அடியார் இணக்கமே சிறந்த கருவியாகும். எனவே, அடியார்கட்குத் தொண்டு செய்தலாகிய பேற்றினையே ஆய்ச்சியர்கள் பெருமாளிடத்தில் வேண்டுகின்றனர்.

‘என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைக் கொள்வான்’ என்றமைந்த ஆயர்குலப்பெண்களின்  வேண்டுதலில்,  ‘சேவகம்’ என்பது, என்றும் மாறாமல் அடியவர்க்குத் தொண்டுசெய்கின்ற அடிமைத்திறத்தைக் குறிக்கிறது. பெருமாளின் அன்பர்களாகிய அடியவர்களிடத்தில் அன்புகாட்டுதலே சிறந்த அறமாகையால், அத்தொண்டுநெறியினை ஆண்டாள்நாச்சியார் மேலும் வலியுறுத்துபவராக, ‘திருத்தக்க செல்வமும், சேவகமும் யாம்பாடி, வருத்தமும் தீர்வோம்’ என்று பாடியருளியுள்ளார்.

பணிவையும், தொண்டுநெறியினையும் கருவியாகக் கொண்டு செயல்படுகின்ற ஆயர்குலப் பெண்கள், ‘நந்தகோபரையும், யசோதையையும், பலதேவரையும் துயிலுணர்த்துகின்றனர். அதன்பின்பு, கண்ணபிரானது பள்ளியறை முன்பு நின்று, திருக்கதவம் தாள் திறந்தருள நப்பின்னைப் பிராட்டியிடத்தில் வேண்டுகின்றனர். ‘அகலகில்லேன் இறையுமென்று, பெருமாளின் திருமார்பினை நீங்காத தேவியார், புருஷகாரமாகச் செயல்பட்டு, உயிர்களுக்குத் திருவருளைக் குறைவின்றிச் சுரக்கச் செய்பவர். பெருமாளை அழகாலும், ஆன்மாக்களை அறிவாலும் திருத்தவல்ல அவரது அணுகுமுறையே ‘புருஷகாரம்’ என்று போற்றப்பெறும்.

பெருமாள்,  உயிர்கட்குக் கருணை செய்தலையே தமக்குரிய இயல்பாகக் கொண்டவராயினும், அவர் நொடிப்பொழுதும் அடியாரிடத்தில் பாராமுகமாக இருத்தலைப் பிராட்டி தாங்குவதில்லை. தம்மடியார்க்கு வேண்டுவனவற்றைக் குறைவின்றி வழங்கத் தாமும் ஒரு கருவியாவதில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

பெற்ற தந்தை, பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றக் கூடியவரே. ஆயினும், தாயுள்ளமே அத்தேவைகளை உரியநேரத்தில், உரியவகையில், உரியவாறு பிள்ளைகளிடத்தில் கொண்டுசேர்க்கத் தீராத துடிப்புகொண்டு, அவற்றை நிறைவேற்றவும் செய்கிறது. அத்தகைய பிராட்டியின் தாயுள்ளத்தாலேயே, பெருமாளிடத்திலிருந்து நாம் இடையறாத திருவருளைப் பெற்றின்புறுகின்றோம். அவ்வகையில், புருஷகாரமாக விளங்கி, கண்ணபிரானின் திருவருளைப் பெறுவதற்கு உறுதுணையாக வேண்டும் என்றும், கண்ணபிரான் உடனே துயிலெழுவதற்கு நப்பின்னைப் பிராட்டி அருளவேண்டும் என்றும்  வேண்டுகின்றனர்.  எனவே, ‘பள்ளியறையின் திருக்கதவத்தினை விரைவில் திறந்தருள்க!’ என ஆயர்குலச் சிறுமியர்,  நப்பின்னைப் பிராட்டியிடத்தில் வேண்டுகின்றனர்.

ஆய்ச்சியர், கண்ணபிரானிடத்தில், ‘தாங்கள் துயிலெழுந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்க வேண்டும்’ என இறைஞ்சுகின்றனர். ‘நாங்கள் நோன்பு நோற்பதற்கு, வெண்சங்கும், பறையும், பல்லாண்டு இசைப்போரும், மங்கலவிளக்குகளும், கொடியும், விதானமும் தந்தருள வேண்டும்’ எனக் கண்ணபிரானிடத்தில் வேண்டுகின்றனர். கண்ணபிரான் அவற்றைக் குறைவின்றி அருளினால், ‘ஐயமிடுதல், பிச்சையிடுதல் முதலானவற்றை உள்ளடக்கிய தொண்டுநெறியில் நோன்பும் இனிதே நிறைவுறும்’ என வேண்டுகின்றனர். நோன்பின் நிறைவில் அம்மகிழ்ச்சியினைக் கொண்டாடுவதற்கென, சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாத கடகம் முதலான அணிகளையும், பட்டாடையையும் பெற்று மகிழ்வோம்; அத்துடன், நெய்கலந்த பாற்சோறினைக் கூடியிருந்து உண்டு மகிழ்வோம்’ என்கின்றனர்.

இங்குச் சுட்டப்பெறுகின்ற அணிகலன்கள், உடலழகுக்குப் பயன்படுவன அன்று; உள்ளத்தைப் பொலிவுறச்செய்கின்ற பக்தியினை அவை வளரச்செய்வன. கைகளை அலங்கரிக்கின்ற  ‘சூடகம்’ என்பது, பெருமாளைத் தவறாமல் கைகள் குவித்து வணங்குதலைக் குறிக்கும். தோள்களை அழகுபடுத்துகின்ற ‘தோள்வளைகள்’ என்பவை, ஆசாரியனால் அடியவனாக ஆட்கொள்ளப்பெறுவதன் அடையாளமாக, சங்கும் சக்கரமும் பொறிக்கப்பெறுதலைக் குறிக்கும். ‘தோடு’, ‘செவிப்பூ’ என்பன, ஆசாரியனிடமிருந்து பெறுவதாகிய திருமந்திர உபதேசங்களைக் குறிக்கும். காலணியாகிய  ‘பாடகம்’ என்பது, கால்களால் திவ்யதேசங்கள்தோறும் நடந்துசென்று, பெருமாளின் அர்ச்சைநிலைகளைக் கண்ணாரக் கண்டு தொழுகின்ற பக்தி அணுகுமுறைகளைக் குறிக்கும்.

இறைநெறியில் ஆன்மாவுக்குத் தடையாவன: 

இறைவனைப் பற்றுதலென்பது, நம்முயற்சியாக அன்றி, அவனருளாலே அனைத்துவகைப் பிறப்புகளுக்கும் அருளப்பெறுவது. இத் திருவருள் உறவினை ஆண்டாள் நாச்சியார், ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்கஒழியாது’ என்று திருப்பாவையில் சாற்றியுள்ளார். ஆயினும், சீவான்மாக்களாகிய நாம், அவ் உயர்வினை உணராது, உலகியலில் நாட்டம்கொண்டு, பிறந்த பிறப்பின் பயனை உணர்வதில்லை. உடலாலும், மனத்தாலும், செயலாலும் தீவினைகள் பல புரிகின்றோம். அதன்வழியே, துன்பப் பிறப்புகளுக்கு வாயில் அமைக்கின்றோம். இவ்வாறு திருவருளுறவுக்குத் தடையானவற்றை நீக்கியுய்ய ஆண்டாள்நாச்சியார் பாவைநோன்பின் வழி ஆற்றுப்படுத்துகின்றார்.

தம் தோழியருடன் மேற்கொள்வதாகிய பாவைநோன்பில், தீக்குறளைச் சென்று ஓதாமை, செய்யாதன செய்யாமை,  ‘நான்’; ‘எனது’ என்ற தன்முனைப்பை வளர்க்கின்ற செய்கைகளைச் செய்யாமை எனக் கீழானவற்றைத் தவிர்க்க வலியுறுத்துகின்றார்.  சீர்மல்கிய ஆயர்க்குலச் சிறுமிகளுக்கு, ‘தொண்டினாலேயே இறைவனை அடையஇயலும்’ என்பதனை வலியுறுத்துகின்றார்.  ‘பெருமாள் அருளிய உலகஇன்பங்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் அவரைப் பணிவதனால், நமது சிற்றின்பஆவல், அவரையே பெற்றின்புறுவதாகிய பேரின்பத்தைத் தந்தருளும்’ என்கின்றார்.

‘நமது அறிவால் அவரைப் பணிகின்றோம்’ என்பதல்லாமல்,  ‘அவனருளால் அவரைப் பணிகின்றோம்’ என்னும் சரணாகதியில் உறுதிபடநிலைக்கச் செய்கின்றார். ‘கானகத்தில், பசுக்களை மேய்க்கின்ற ஆயர்குலச் சிறுமியராகிய நாங்கள் சிற்றறிவுடையவர்களே! ஆயினும், பக்திமேலீட்டினால் உமது திருப்பெயர்களை நாங்கள் அறிந்தவாறு சொல்லிப் பணிந்துள்ளோம்!’. ‘எமது குறைகளையும் குணமாகக் கொண்டருள்க!’ எனத் தமது தற்சிறுமையினை வெளியிட்டு ஆயர்குலச் சிறுமியர்கள் பெருமாளிடத்தில் சரண்புகுவதாகப் பாடியுள்ளார். மேலும், ‘மேற்கண்ட நன்னிலைகளுக்குத் தடையாகவுள்ள உலகியல் சிறுமைகளிலிருந்து, சிற்றுயிர்களாகிய நம்மை நீக்கியருளவேண்டும்’ என்றும் பணிகின்றார். அதற்கென, ‘மற்றை நம் காமங்கள் மாற்று’ எனப் பெருமாளிடத்தில் வேண்டுகின்றார். இவ்வாறு, ‘உடலாலும், உள்ளத்தாலும், அறிவாலும் உயர்தூய்மை உடையவர்களாக, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், நமது தீவினைகள் அனைத்தும், தீயினில் பட்ட தூசாக அழியும்’ என்கின்றார். அத்தூய்மை நிலையினில் எப்பொழுதும் நிலைகொள்வதற்குக் கருவியாக,  ‘அடியார் இணக்கத்தை’ வலியுறுத்துகின்றார். ‘தம்மைமறந்து, அடியவர்க்காக மட்டுமே சிந்திக்கின்ற தொண்டுநெறியினால்,  நம்மிடையே அன்புநெறி சிறக்கும்’;  அவ் உயர்மனப்பாங்கு, நமது உள்ளத்தாமரையில் பெருமாளை நிலைப்பெறச் செய்யும்’ என்பது திருப்பாவை காட்டுகின்ற பக்திநெறியாகும்.

முடிவுரை:  

மார்கழி நீராடுதல்’ என்பது, ஆன்மாக்கள், திருவருள்வெள்ளத்தில் தம்மைத் தூய்மையாக்கிக் கொள்வதனைக் குறிக்கும். ஆற்றில் இறங்கிநிற்போன், தனது கைகளில் அகப்படுவதனைப் பாதுகாப்பிற்காகப் பற்றுதல் இயற்கை. அதுபோல, ஆழம் காணஇயலாத பக்திக்கடலில், நாம் பற்றி உய்கின்ற புணையாகப் பெருமாள், திருப்பாவையினை அருளியுள்ளார். தீவினைகளை நீக்கியருளவல்ல மாயனாகிய பெருமாளின் பரத்துவமும், தற்சுதந்திரமின்றி, அவனுக்கே அடிமைபூணுதலாகிய ஆன்ம இயல்பும், சிற்றுயிர்களாகிய நமக்கு,  திருவருளே  உற்ற பயனென்பதும், அடியவருடன் கூடியிருந்து அவர்க்குத் தொண்டுசெய்தலே திருவருள்நெறி என்பதும், உடல், உள்ள, செயல் சிறுமைகளே, திருவருள் நெறிக்குத் தடையாவன என்பதும் திருப்பாவை உணர்த்துகின்ற அர்த்தபஞ்சக ஞானமாகும்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க