இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(245)

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். கடந்தவாரம் மடல் வரைய முடியாத ஒரு சூழ்நிலை. நண்பர்களின் ஒன்றுகூடல் நிகழ்வுக்காக கனடா வரைசென்றிருந்த நான் அங்கிருந்து திரும்பாத நிலையில் மடல் வரையும் சந்தர்ப்பத்தை இழந்திருந்தேன். இப்போது நான் வரையும் இந்த மடல் கனடாவிலிருந்து திரும்பி இங்கிலாந்திலிருந்து வரையும் மடலாகும்.

வாழ்க்கையில் சில சில சந்தர்ப்பங்கள்
ஒரேயொருமுறைதான் பலருக்குக் கிட்டுகிறது. சில சமயங்களில் பற்பல காரணங்களினால் இச்சந்தர்ப்பத்தைத் தவறவிடும் நிலையேற்படுகிறது. தவறவிட்ட பின்னால் அந்நிகழ்வின் மகத்துவத்தை, அதன் தாத்பரியத்தை உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இழந்து விடுகிறோம். கடந்து போன சாதாரண நாள்களைப் போல் இந்நிகழ்வையும் கடந்து போய்விட்ட ஒரு சாதாரண நிகழ்வென்றே எடுத்துக் கொள்கிறோம்.

கடந்த ஐந்து வருடங்களின் முன்னால் இதே போன்ற நான் படித்த யாழ் மத்திய கல்லூரியின் எழுபதுகளின் மாணவர்களின் ஒன்றுகூடல் ஒன்று இதே கனடாவின் ரொராண்டோ மாநகரில் நிகழ்ந்தது. அதற்கும் எனது நண்பர்களின் மூலம் அழைப்பு கிடைக்கப்பெற்ற நான் பல காரணங்களினால் அந்நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது போய்விட்டது. காலங்கள் கரைய அதுவும் காற்றோடு காற்றாகக் கலந்து போய்விட்டிருந்தது. அந்நிகழ்வினால் தாமடைந்த அளப்பரிய அனுபவங்களை எனது நண்பர்கள் மூலம் அறிந்தாலும் நான் எத்தகைய ஒரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டேன் என்பதின் முழுத்தாக்கத்தையும் நான் அறிந்து கொள்ளவில்லை என்பதுவே உண்மை. வெறும் இரண்டு வருடங்கள் மட்டுமே கல்விபயின்ற பாடசாலையின் மீது இவ்வளவு ஈர்ப்பா என்று எண்ணும் என் சில நண்பர்களும் உண்டு. ஆனால் அவ்விரண்டு வருடங்களும் எனக்கு வாழ்வின் இனிய இருபது வருடங்களின் அனுபவத்தினைக் கொடுத்தது என்பதுவே உண்மை. அது எனது பள்ளிப்பருவத்தின் ஒரு பொற்காலம் என்றே கூற வேண்டும். அப்பொற்காலத்தில் நான் பழியறிந்து, பார்த்துப் பேசிய தோழர்களின் ஞாபகங்கள் இன்றும் என்னுள்ளத்தில் ஈரப்பசையோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றது.

என் வாழ்வினில் நான் என் சகோதரனைப் போல, சகோதரனைவிட நேசத்தோடு பழகிய எனது உற்ற நண்பன் வாழ்வது கனடா நகரிலே என்பது எனது இந்த விஜயத்தின் மற்றொரு மகிழ்ச்சியாகும். அதுதவிர கனடாவில் வாழும் எனது மூத்த சகோதரன் ஓர் பேரனைப் பெற்று பாட்டனாகிய நல்ல நிகழ்வும் நான் கனடா செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது. லண்டனில் வாழும் என் குடும்ப அங்கத்தினர் சார்பில் பேரனைப் பார்த்த முதல் அங்கத்தினன் எனும் பெருமையையும் எனக்கு ஈட்டிக் கொடுத்தது என்பதும் இவ்விஜயத்தின் குரிப்பிடக்கூடிய அம்சங்களில் ஒன்றாகும். நிகழ்வுகள் ஆரம்பமாவது ஜூலை மாதம் 29ஆம் திகதி என்ற போதும் பத்து நாள்களுக்கு முன்னதாகவே நான் கனடா சென்றிறங்கி விட்டேன். நிகழ்வுகள் ஆரம்பத்தின் முன்னால் எனக்குக் கிடைத்த இந்தப் பத்து நாள்கள் அவகாசம் நான் பார்க்க வேண்டிய எனது முக்கிய உறவினர்களைச் சந்திப்பதற்கான கால இடைவெளியைக் கொடுத்தது. எனது தாய்வழிச் சொந்தங்களே கன்டாவில் அதிகமாக உள்ளனர். அவர்களை, அதுவும் மூத்தோர்களைச் சந்திப்பதையே முக்கியமான கடமையாகக் கொண்ட எனக்கு எனது உற்ற நண்பனின் உதவியோடு என்றோ எப்போதோ லண்டனில் ஏதோ என்னாலான சிறிய உதவியைச் செய்த நண்பரொருவர் ஓடோடி வந்து உதவியது வாழ்வின் உண்மையான உறவுகளின் உன்னதமான யதார்த்த நிலைகளைப் படம் போட்டுக்காட்டியது.

sakthi

இந்த ஒன்றுகூடலின் உண்மையான் நோக்கம் எழுபதுகளில் யாழ் மத்தியக் கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்கள் இன்று அகிலம் முழுவதும் பரவிக் கிடப்போரை ஒன்றிணைத்து அக்கால பசுமையான நினைவுகளை மீண்டும் உள்ளத்தில் மலரச் செய்து தொலைந்து போன கணங்களை சிலநாள்களுக்கு மீண்டும் உயிர்ப்பிக்கச் செய்வதே. இவ்வற்புத நிகழ்வுகளுக்கான மேடைகளை அமைத்து, இத்தகைய ஓர் அரிய சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் நான்கே நான்கு பேர் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ? இவர்களின் பின்னால் நின்று பலர் தார்மீக ஆதரவை நல்கியிருந்தாலும் இவர்களின் இந்த மகத்தான சேவையும் இச்சேவையைப் புரிவதற்கு இவர்கள் பின்னால்நின்று இவர்களை இயக்கிய இவர்களின் வாழ்க்கைதுணைகளும், அவர்தம் குடும்ப அங்கத்தினர்களும் ஆற்றிய அளப்பரிய சேவைகளை வெறும் வார்த்தை அலங்காரங்களினால் விவரித்து விட முடியாது. ஆமாம், சிவா, மதி, ரமீஸ், பேரி எனும் இந்த நான்கு அன்பு உள்ளங்களும் இவர்களுக்குப் பக்கதுணையாக நின்று பணியாற்றிய இவர்களின் வாழ்க்கைத்துணைகளும் எம் அனைவருடைய அன்பான நன்றிகளுக்கு உரித்தானவர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மையாகிறது.

சரி, இனி இந்த விழாவிற்கு வருவோம். இவ்வொன்றுகூடலில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் இவ்விழாவினை ஒழுங்கு செய்தோரின் இல்லங்களில் அறிமுக ஒன்றுகூடலுக்கான விருந்துகளில் கலந்து கொண்ட நிகழ்வோடு 29ஆம் திகதி ஆரம்பமாகியது விழா. ஆகா ! சுமார் 43 வருடங்களின் பின்னால் நான் சந்தித்த பழைய நண்பர்களின் தற்போதைய தோற்றம் மாறியிருந்தாலும் மத்தியக் கல்லூரியின் வாசம் அவர்களது மனத்தை விட்டு அகலவில்லை என்பதைப் புரிந்துகொள்ள அதிக நேரம் ஆகவில்லை.. தொடர்ந்து 30ஆம் திகதி இளையோருக்கான சிறப்பு நிகழ்வு, மற்றும் விடுதி இரவு, கிரிக்கெட் போட்டி என ஒவ்வொரு நாளும் களைகட்டிய நிகழ்வுகளும் அதனோடு நண்பர்களின் ஒன்றுகூடலின் சிறப்புகளும் வெறும் வார்த்தைகளினால் விளக்கக்கூடிய ஒன்றல்ல. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாகக் கச்சேரி இரவு ஆண்கள் பெரும்பான்மையோர் தமிழ்க்கலாசார உடையான வேஷ்டி, சட்டையுடனும், பெண்கள் சேலையுடனும் கலந்துகொண்டு மேடைப்பாடல் நிகழ்ச்சிகளில் பாடிக்களித்த நிகழ்வும்,இதற்காகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிழக்கு, மேற்கு கலந்த நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் உள்ளத்தைக் குதூகலத்தில் ஆழ்த்தியது. அத்தோடு இந்நிகழ்வுகளை பசுமையான காலநினைவுகளைக்கூட்டும் நண்பர்களும் அமர்ந்து ரசிப்பதென்றால் கேட்கவும் வேண்டுமா?

அடுத்த முக்கியமான நிகழ்வாக 1000 தீவுகளுக்கான சொகுசுக் கப்பல் சுற்றுப்பயணம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு அனைவரும் ஓரிடத்தில் கூடி இரண்டு சொகுசு பஸ் வண்டிகளில் அக்கப்பற்தளத்தை நோக்கிப் பிரயாணித்தோம். பிரயாணித்தோம் என்றால் சும்மாவா? பஸ்ஸுக்குள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மீண்டும் அப்பதின்ம வயது மாணவர்களாகவே மாறிவிட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! மிகவும் வசதியான ஒரு சீன உணவு விடுதியில் அனைவருக்கும் ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மதிய விருந்து, மீண்டும் பஸ்ஸிலே பிரயாணித்து அக்கப்பற்தளத்தை அடைந்தோம். அங்குக் கப்பலில் ஏறுவதற்கு முன்னால் இருமணிநேர இடைவெளி அனைவரும் காலாற நடந்தும், அப்பிரதேசத்தின் அழகினை ரசித்தும் இருக்கும்போது , அடடா ஆச்சரியம் தேநீர் தயாரிக்கும் உபகரணங்களையும் அப்பிரயாணத்தில் கொண்டு வந்திருந்த அமைப்பாளர்கள் அனைவருக்கும் யாழ் முறையில் தேநீரும்,பிஸ்கட்டும் கொடுத்து கலக்கி விட்டார்கள் போங்கள்!

சொகுசுக் கப்பலில் ஏறி உட்கார்ந்தோம். அப்பப்பா !அருமையான பிரயாணம், அற்புதமான ஆங்கிலப் பாடகரின் தொடர்ந்த இசைமழையுடன் கூடிய இராப்போசனம். இப்பிரயாணத்தின் முக்கிய அம்சமே ஆதவன் மேற்கினுள் வீழ்வதைக் காணும் அற்புதக் காட்சி.  இது ஒருபுறமிருக்க நண்பர்கள் அனைவரும் சிறு சிறு குழுக்களாக ஆங்காங்கே கப்பலின் மேற்தளத்தில் நின்று தமக்குள்ளே இசைமழை பொழிந்து மகிழ்ச்சிக் கடலில் நீந்திக் கொண்டிருந்தார்கள். ஆக மொத்தம் வாழ்வினில் ஒரேயொருமுறை கிடைக்கக்கூடிய அற்புதமான அனுபவம் என்றே கூறவேண்டும். அடுத்த நாள் பிரசித்தி பெற்ற பூங்காவில் ஒரு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு. அங்கேயே உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைவரும் மிகவும் ஆறுதலாக, அமைதியாக அந்நாளைக் கழித்தார்கள்.

இவ்விழாக்களின் இறுதி நிகழ்வாக அனைத்துக்கும் மகுடம் சூட்டும் வகையில் நடனத்துடன் கூடிய இராப்போசன வைபவம் பிரசித்தி பெற்ற ஒரு மண்டபத்திலே நிகழ்த்தப்பட்டது.

யாழ் மத்திய கல்லூரியின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது யாழ் மணிக்கூட்டுக் கோபுரமே! யாழ் மத்தியக் கல்லூரியின் சில பிரபல்யமான கிரிக்கெட்வீரர்கள் இக்கோபுரத்தை நோக்கி சிக்சர்களாக விளாசித்தள்ளிய வீரசாகசக் கதைகளும் உண்டு. இவ்விழா அமைப்பாளர்கள் இக்கோபுரத்தைச் கட்டமைப்பாகச் செய்வித்து அதனை இவ்விழா மண்டபத்தின் வரவேற்பு மண்டபத்தில் முக்கிய அடையாளமாக நிறுத்தி வைத்திருந்தமை அனைத்துக்கும் சிகரமாக அமைந்தது. அனைவரும் பழைய ஞாபகங்களின் வழிநின்று இம்மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் நின்று புகைப்படம் பிடித்துக் கொண்டார்கள். அதுமட்டுமின்று! அக்கால மாணவர்களின் மனத்தில் என்றும் அழியாமல் பதிந்திருப்பது பள்ளியோடு ஒட்டியிருந்த “மணியம் கடை.” அதேபோல ஒரு பெட்டிக்கடையை உருவகித்து அதிலே வாழைப்பழக் குலைகளைத் தொங்கவிட்டது மட்டுமின்றி காலத்தோடு ஓட்டிய சினிமாப் போஸ்டர்களை ஒட்டியிருந்தமை அபாரமான, அற்புதமான திட்டமாகும். இதற்காக இவ்விழாவினை ஒழுங்குசெய்த நால்வரும் எத்தனைதூரம் கடினமாக உழைத்திருப்பார்கள் என்பதைச் சொல்லித்தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை. மிகவும் ஆடம்பரமாக , அழகாக, அமைதியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இவ்விழாவினிலே மத்தியக் கல்லூரி பழைய மாணவர்கள் பங்கேற்று நடித்த சில பாடல் காட்சிகளோடு பிரபல்யமான ஆங்கில நடனக்குழுவினரும் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் எம்மனைவருக்கும் அக்காலகட்டத்தில் மிகவும் முக்கியமாகப்பட்டது எமது அருகிருந்த சகோதர பெண்கள் கல்லூரியான “வேம்படி மகளிர் கல்லூரி” ஆகும். இவர்களது யூனிபார்மாக அவர்களது டை மஞ்சள் கறுப்பு வரிகளைக் கொண்டது. இவ்வமைப்பாளர்கள் இவ்விருந்து வைபவத்தில் பரிமாறும் ஆங்கிலப் பெண்கள் வெள்ளை சார்ட்டுடன் இவ்வேம்படி மகளிர் கல்லூரி டைகளை அணிவிக்கச் செய்திருந்தது அனைத்துக்கும் மகுடம் சூட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

என் வாழ்வின் என்றுமே மறக்க முடியாத இனிமையான ஒரு நிகழ்வினை அனுபவிக்கச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித்தந்த அந்நால்வருக்கும், வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த அந்நாளைய நட்பினை மீண்டும் எனக்கு நினைவூட்டக் காரணமாயிருந்த அனைத்து நேச உள்ளங்களுக்கும், கனடா நாட்டில் வசிக்கும் பழைய மாணவர்கள் அளித்த நல்வரவேற்புக்கும் இவைகள் அனைவரினது வாழ்க்கைத்துணைகளுக்கும், குடும்ப அங்கத்தினருக்கும் எனது உளம் நிறைந்த, தாழ்மையான, அன்பான நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொள்கிறேன்.

நாலுபேருக்கு நன்றி – அந்த
நாலுபேருக்கு நன்றி
நானிலமெங்கும் சிதறி வாழ்ந்த
நம்மை ஒன்றுகூட்டி
நெஞ்சில் நிழலாய்ப் பதிந்த
அந்தநாள் ஞாபகங்களைப்
பசுமைபூசி மீண்டும் மலர்வித்த
புதுமைகள் பூட்டி நிகழ்வினைப்
பெருமைகொள் ஒன்றாய்
நிகழ்த்திக் காட்டிய அந்த
நாலுபேருக்கு நன்றி!

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.