படித்தேன்! சுவைத்தேன்!! பகிர்ந்தேன்!!! – 37

0
2

முனைவர் ச. சுப்பிரமணியன்

வங்கனூரார் இசைப் பாடலில் வசமிழந்த தருணம்!

முன்னுரை

“பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்” என்னும் திருக்குறளால் பாடல் என்பது இசையோடு கலந்தது என்பது பெறப்படும். பாடலும் இசையும் பொருந்தியிருக்க வேண்டும் என்பதும் கருதப்பட வேண்டிய ஒன்று. எதுகை மோனை இயைபு என்னும் தொடைகள் சிறந்து நிற்கும் இசைப்பாடல்களை நாம் சிந்துப்பா வகையில் கேட்டு மகிழ்கிறோம். பாவேந்தர் மகாகவியைச் “சிந்துக்குத்தான் தந்தை” என்று அழைக்கிறார். பாரதி நொண்டி சிந்து எழுதிய பிறகுதான் தமிழ் எழுந்து நடந்தது என்பர்.  பாரதிக்கு இணையாக சிந்து பாடியவர் பாவேந்தர். மனித மனம் இசையோடு பின்னிப் பிணைந்தது. முணுமுணுத்தல் என்பது இசைக்குப் பொருந்துகிற அளவுக்குப் பேச்சுக்குப்; பொருந்தி வராது. ஒருவன் தனியாகப் பாடலை முணுமுணுப்பதற்கும் தனக்குத்தானே பேசிக் கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. விருத்தங்களையும் வெண்பாக்களையும் ஹைக்கூகளையும் கண்டு களைத்துப்போன எனக்குக் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகைகிடைத்த குளிர்தருவாய் நிற்பவர் எண்பது வயது இளைஞர் வங்கனூர் மோகனன் அவர்கள். முகநூலை இசைவண்ணமாக்கிய பெருமை இவருக்கு உண்டு. இவர் முகநூலில் எழுதிய சில பாடல்களைப் பற்றிய என் அனுபவத்தை வெளிப்படுத்துவதையே இந்தச் சிறிய கட்டுரை நோக்கமாகக் கொள்கிறது.

தமிழும் இசையும்

“குழல் இனிது யாழினிது என்ப தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்” என்று உவம அளவையால் இசைக் கருவிகளை முன்னெடுப்பார் திருவள்ளுவர். “தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்பார் திருநாவுக்கரசர்.  “நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்” என்று சம்பந்தரைப் பாராட்டுவார் சுந்தரமூர்த்தி நாயனார். “ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் இருப்பவன் என்று இறைவனைப் பாடுகிறார் சுந்தரர். “ஓங்கு மனத்து எண் கருவி ஐந்து ஈன்று இடு நூற்று மூன்றான பண்களும் பின் கல்யாணப் பாவையரா” என்பார் தமிழ் விடுதூது ஆசிரியர். “இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” என்பார் கண்ணதாசன். “இசையாய்த் தமிழாய் இருப்பவனே” என்றும் அவர் பாடுவார். இசைப்பாடல்கள் என்பன மரபுப் பாடல்களே என்பதை அறிதல் வேண்டும். வெறும் யாப்பமைப் பாடல்களை மரபுப் பாடல்களென்றும் அவற்றை எழுதுவாரைப் மரபுப்பாவலர் என்றும் பரவிவிட்ட வெற்றுக் கூச்சலை நான் என்றும் எப்போதும் எதிர்த்து வந்திருப்பதற்குத் தமிழ்மரபின் விரிவையும் ஆழத்தையும் புரிந்ததனாலேயே. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை பரிபாடல் முதலியவற்றில் இசைபற்றிய குறிப்புக்கள் உள்ளன. சிலப்பதிகாரத்தில் ஊள்ள வரிப்பாடல்கள் ;இசைப்பாடல்களே. சீவகன் யாழைத் தன் கையில் வாங்கித் தரம் பார்த்து வாசித்த நிகழ்வைச் சீவகசிந்தாமணி விளக்கிக்காட்டுகிறது. குடுமியான் மலை உட்பட்ட பல திருக்கோயில்களில் இசைத்தூண்கள்; இன்றும் இருக்கின்றன.  பரிபாடல்களில் மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகியனவெல்லாம் இசைப்பாடல்களே. பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு பஞ்ச பாரதீயம் பதினாறு படலம், வாய்ப்பியம் என்னும் பெயருடைய இசைத் தமிழ் நூல்களைப் பற்றி அறிய முடிகிறது.  தேவாரத்தில் பண்முறை என்றும் தலமுறை என்றும் இரண்டு தொகுப்புக்கள் உண்டு.  தியாகராசர், சியாமளா சாஸ்திரியார், முத்துசாமி தீட்ஷிதர் ஆகிய மூவருக்கும் முனனாலேயே அருணாசலக் கவிராயர், முத்துத்தாண்டவர்  மாரியப்பாப் பிள்ளை ஆகிய மூவரும் 17ஆம் நூற்றாண்டுகளில் இசைத்தமிழ் வளர்த்த போராளிகளாக வரலாறு குறித்து வைத்திருக்கிறது. இவர்களுக்கும் பின்னாலே கோபாலகிருஷ்ண பாரதியார், வள்ளற் பெருமான் முதலியோரும் அவர்களைத் தொடர்ந்து மகாகவி பாரதியாரும் பாவேந்தரும் இசைத்தமிழ் வளர்த்த பெருமக்களாகக் கருதப்படுகின்றனர். “வாழையடி வாழையென வந்த இந்தத் திருக்கூட்ட மரபில் வந்தவர்தான்” வங்கனூரார்.

இன்றைய தமிழிசையின் நிலை

முத்தமிழ் என முழங்குகின்ற கவிஞர்கள் கூட ‘இசைத்தமிழ்’ என ஒன்றிருப்பது பற்றிச் சிந்திக்கிறார்களா எனத் தெரியவில்லை. வருத்தமளிக்கும் விருத்தங்களிலும் வாய் நுழையாத ஹைக்கூவிலும் தங்கள் மதிப்புமிக்க காலத்தைக் கடத்திக் கொண்டு விருது கிடைக்கவில்லையே என்னும் வேதனைக் கண்ணீருடன் திரிந்:து கொண்டிருக்கும் பலரை நான் முகநூலில் காணுகின்றேன்.  ஆம்பல் பண், காஞ்சிப் பண் காமாரம், குறிஞ்சிப் பண், செவ்வழி , நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய  பண்கள்  முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்ட நாடு இது. பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொரு  இராகங்களைச்  சிலப்பதிகாரம் கூறுகிறது. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்றெல்லாம் இசையைச் செழிக்க வைத்திருந்த இனம் தமிழினம். பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனார் பேசினால் இசையாராய்ச்சி இசை மழையாகவே பெய்யும். ஆற்றல் மிகு கவிஞர்கள் இசைத்தமிழ் பற்றிக் கவலைப்பட்டிருந்தால் திருவையாறு தியாகராசர் பஞ்சரத்தின திருவிழாவை விஞ்சக் கூடிய அளவுக்குத் தமிழிசை வளர்ந்திருக்கும். நாம் குறைசொல்லுவதிலேயே காலம் கழிக்கிறோம்.

தமிழ் மூவர் பாடிய இசைப்பாடல்கள்

வங்கனூரார் இசைப்பாடல்களைக் காண்பதற்கு முன் தமிழிசைப் பாடல்களின் முதல் மூவரான முத்துத்தாண்டவர்; மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர்தம் இசைப்பாடல்களை நினைவுக்குக் கொண்டு வருவது நினைவைச் சுகந்தமாக்கும்.

“ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கைக் காணக்
கண் ஆயிரம் வேண்டாமோ
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர்
திருச்செம்பொன் அம்பலவாணர் (ஆடிக்கொண்டார்)

என்னும் முத்துத் தாண்டவர் பாடலும்

காலைத் தூக்கி ஆடும் தெய்வமே எனைக்
கைதூக்கி ஆள் தெய்வமே!

வேலை தூக்கும் பிள்ளை தனைப்பெற்ற தெய்வமே
மின்னும் புகழ்சேர் பொன்னம்பலத்தில் ஒரு (காலை)

செங்கையில் மான்தூக்கிச் சிவந்த மழுவும் தூக்கி
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கிக்
கங்கையைத் திங்களைக் கதித்த சடைமேல் தூக்கி
இங்குமங்குமாய்  தேடி இருவர்  கண்டறியாத (காலை)

என்னும் மாரிமுத்தாப் பிள்ளை பாடலும்

“ஏன் பள்ளி கொண்டீர் ஐயா
ஶ்ரீரெங்க நாதா!
ஏன்பள்ளி கொண்டீர் ஐயா?
ஆம்பல் பூத்த சய பருவத மடுவினிலே
அவதரித்த இரண்டு ஆற்று நடுவினிலே

கௌசிகன் சொல் குறித்தற்கோ?
அரக்கிக் குலையில் அம்பு தெறித்தற்கோ?
ஈசன்வில்லை முறித்தற்கோ?
பரசுராமன் உரம் பறித்ததற்கோ?

என்னும் அருணாசலக் கவிராயரின் பாடலும் காலம் உள்ளளவும் நிலைக்கும். நின்று புகழ் பாடும். இந்த மரபு தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டு இசைமேடைகள் தமிழிசைப் பாடல்களால் நெகிழ்ந்து போயிருந்திருக்கும். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!

இசைப்பாடல்களில் பாரதி — பாவேந்தர் — சுரதா பங்களிப்பு

இயற்றமிழ் பாடல் வகைகளில் கோலோச்சி நின்ற பாரதியும் பாவேந்தரும் சுரதாவும் பெரியசாமி தூரனும் திருச்சி தியாகராசனும் தங்களால் இயன்ற அளவுக்கு இசைத் தமிழைக் கருத்திற் கொண்டிருந்திருக்கிறார்கள். இதற்குப் பல சான்றுகள் உண்டு. யாப்பின் பல பரிமாணங்களையும தன் கவிதைகளில் கொண்டு வந்த மகாகவி, இசைப்பாடல்களாகிய கீர்த்தனைகளிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் அவர் எழுதிய இசைப்பாடல்கள் பலவாயினும் புகழ் பெற்ற இசைப்பாடல்

“கண்ணன் மனநிலையைத் தங்கமே
தங்கம் அடிதங்கமே தங்கம்
கண்டு வரவேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமேதங்கம்
ஏதேனிலும் செய்வமடி தங்கமே தங்கம்”

என்னும் பல்லவியோடு தொடங்கும் அந்தப் பாடல் முழுமையும் இசைக்கண்ணிகளால் ஆனது. பினனாலே வருகிறவர்கள் தங்களுக்கு விருப்பமான ராகங்களில் பாடி பாட்டின் இனிமையைக் கெடுத்துவிடுவார்களோ என்னும் அச்சத்தின் காரணமாகவும் கெடுத்துவிடக் கூடாது என்னும் கொள்கை காரணமாகவும் பாட்டுக்கான தாளத்தையும் ராகத்தையும் அவரே பதிவிட்டுச் சென்றிருக்கிறார். “தங்கப்பாட்டு மெட்டு” என்றும் “சிங்காரம் ரௌத்ரம்” என்னும் மெய்ப்பாடுகளை வெளிப்படுத்துவது என்றும் தெளிவாக்கிச் சென்றிருக்கிறார் பாரதியார். அவரைத் தொடர்ந்து வந்த பாரதிதாசன் இசைப்பாடல்களில் தனித்த முத்திரையைப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதற்கு அவருடைய இசையமுது தொகுதி ஒன்று மற்றும் இரண்டு  ஆகிய நூல்கள் சான்றாகி நிற்கின்றன.

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

என்னும் பல்வியை முன்னிறுத்தி அதனோடு இணைத்து அனுபல்லவியைத் தொடங்குகிறார் பாவேந்தர்.

நல் அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி
அலலல் நீக்க மாட்டாயா? கண்ணே
அலலல் நீக்க மாட்டாயா?

சஞ்சய் சுப்பிரமணியன் ;இந்தப் பாட்டை மிகச் சிறப்பாகப் பாடியிருக்கிறார்

என்பது தகவலுக்காக இங்குப் பதிவு செய்யப்படுகிறது,

“தித்திக்கும் தமிழிலே முத்து முத்தாய்
எண்ணம் தந்தவர் திருவள்ளுவர் தேன் போலே

கத்தும் கடல் பிரத காலத்திலே பிறந்தும்
கன்னிப் பருவத்தோடு இன்னும் இருந்து வரும் (தித்திக்கும்)

உழைக்காதவன் வாழ்வில் முன்னேற்றம் கிடையாது!
உலகினில் புகழ் இன்றி எதுவுமே நிலைக்காது!
உயிரினும் மேலாம் மனிதர்க்கு தன்மானம்!
அதுவே பெருமை தருமென
அருமையாம் குறளிலே அமுதமெனவே…(தித்திக்கும்)

இசைப்பாடல்களின் அனுபல்லவி மற்றும் சரணம் இவற்றின் ஈற்றுச் சீர்கள் பல்லவியின் தொடக்கச் சீர்களோடு இயைந்தால்தான் பொருட் பரிமாணம் கூடும். அதனால்தான் தமிழில் அவற்றை எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்கிறார்கள்.  “கத்தும் கடல் பிறந்த காலத்திலே பிறந்தும் கன்னிப் பருவத்தோடு இன்னும் இருந்து வரும் தித்திக்கும் தமிழிலே” என்று இயைத்துப் பாடினால் பாட்டின் பயணம் தரும் இன்பம் பலவாகும். இந்த இசைப்பாடலில் “அருமையாம் குறளிலே அமுதமெனவே என்னும் சரணத்தின் முடிப்பு தித்திக்கும் தமிழிலே” என்னும பல்லவியின் தொடக்கத்தொடு இயைந்தது காண்க.

வங்கனூராரும் பாடுபொருளும்

தற்காலக் கவிஞர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் மரபினை விட்டுத் துளியும் விலகாமல் மரபைப் பின்பற்றி வருகிறார்கள். அதனால் வேண்டுமானால் அவர்கள் மரபுக்கவிஞர்கள் என்று போட்டுக் கொள்ளலாம். அது எதுவெனில் காதல் என்னும் பாடுபொருள். பாதிப்புத்தான் கவிதைக்குக் காரணம் என்பதில் முரண்படும் தற்காலக் கவிஞர்கள் அத்தனைப் பேரும் ஒற்றுமைப்படும் ஒரே புள்ளி காதல். காதல் உணர்வே சிறிதுமில்லாமல், அங்கங்களைப் பாடுவதையே காதல் என்று யார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை.  காதலைப் பாடுவார்கள். ஆனால் அந்தப் பாட்டு பல்லிளிக்கிறபோது கண்டு கொள்ளலாம் இது பாசாங்குக் காதல் என்பதை!. கேட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? தமீழிலக்கியத்தின் பெரும்பகுதி காதல்தானே! இதனை வைத்துக் கொண்டே காதலையும் காதற் கவிதைகளையும் சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  வங்கனூரார் அறுபதுக்கு நாற்பது என்ற விகிதத்தில் பிற பாடுபொருள்களையும் பாடியிருக்கிறார் என்பதுதான் சொல்ல வந்த சேதி. பாடுபொருள் கவிஞன் பாதிப்புக்கு அடுத்தபடியாகத் தேவையைக் கருதி வருகின்றன. பாரதிதாசன் இந்தியை எதிர்த்தார் என்றால் இந்தியால் அவர் என்ன பாதிக்கப்பட்டார்? ஆனால் சமுதாயத்தின் தேவை அதனை எதிர்ப்பது. அதனால்தான் குருதி கொப்பளிக்கும் பாடல்களை அவரால் எழுத முடிந்தது, கவிவன்மை இன்மையால் அல்லது பற்றாக்குறையால் இன்றைய சமுதாயத்தின் தேவைகளைப் பாடுவதில் கவிஞர்கள் பெரும் பின்னடைவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். காரணம் பொதுநோக்கின்மை அல்லது பற்றாக்குறை! வங்கனூரார் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது என் கருத்து,

“நல்ல நினைப்பிருந்தால் – வாழ்வில்
நலம்பல சேராதோ ?
அல்லல்கள் மாய்ந்துவிட – உன்றன்
அவலங்கள் தீராதோ ?

கொடுமை விளைக்கின்ற – சாதிக்
கொள்கையை வேரறுப்போம் !
அடிமைத் தளையறுத்து – நாட்டில்
அன்பு பயிர்வளர்ப்போம் !

அருள்வழி நாம்நடந்து – நெஞ்சின்
ஆணவத்தை ஓட்டிடுவோம் !
இருள்வழி மாய்ந்திடவே – ஆங்கோர்
இன்னொளி காட்டிடுவோம் !

எண்ணங்கள் நன்றானால் – வாழ்வை
எதிர்த்துநாம் வெற்றிகொள்வோம் !
மண்ணில் பலநாட்டு – மக்கள்
மனங்களை நாம்வெல்வோம் !”

எல்லாருக்கும் தெரிந்த வாழ்வியல் உண்மைகளே! தனிமனித ஒழுக்கங்களே சமுதாய ஒழுங்கினைத் தீர்மானிக்கின்றன என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பின்னனியில் இந்தப் பாட்டை நோக்க வேண்டும். “நல்ல மனமிருந்தால்” என்னும் ஒரு தொடரைப் பாடலின் ஒவ்வொரு கண்ணியிலும் பொருத்திப் பாரத்தால் பாரதியை மீண்டும் காணலாம். அன்புக் கவிஞர்களே1 உங்களில் எத்தனைப் பேர் இந்த மனநிலையில் இந்த வகை யாப்பில் சமுதாய நலம் சார்ந்த பாடலை எழுத எத்தனித்தீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள், வங்கனூரார் கவிதைகளின் ;அருமை புரியும்!

வங்கனூராரின் வருவானடி

அலங்காரச் சொற்களை இடுவதானாலேயே இசைப்பாடல் சிறந்துவிடாது என்பதைக் கவிஞர் மோகன் புரியாதவர் அல்லர். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பதைப் பின்னாலே வந்தவர்கள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று மாற்றினார்கள். அந்த மாற்றத்தால் கவிதை சிறந்ததா என்றால் இல்லை. எடுப்பு – தொடுப்பு – முடிப்பு என்பதை வங்கனூரார் மொட்டு – மலர் – மணம் என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார். பொதுவாகப் பேராற்றல் உள்ள பெருங்கவிஞர்களுக்குப் பட்டங்கள் தேவையில்லை. பகட்டுக்கள் பயனளிக்காது. வஙகனூரார் ஆற்றல் மிக்க கவி வல்லாளர். இத்தகைய  மாற்றங்களை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.. இந்த மொட்டு, மலர் மணம் என்னும் சொற்களால் கவிதை அல்லது இசைப்பாடல் சிறக்கிறதா என்று பார்க்க வேண்டும். பயனற்ற முயற்சியைத்தான் திருவள்ளுவர் ‘செய்தக்க அல்ல’ என்கிறார். பானை ஓட்டையைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கொழுக்கட்டையில் பூரணம் நிறைந்திருக்கிறதா என்று பாருங்கள். இதுதான் என் பணிவான வேண்டுகோள். பல்லவி – அனுபல்லவி – சரணம் என்று இருந்திருந்தாலும் இந்தப் பாடல் சிறந்திருக்கும்1 ஒரு அருமையான பாடல். மரபின் இழையால் பின்னப்பட்டிருக்கும் அருமையான படைப்பு.

“வருவானடி இன்பம்  தருவானடி!

அவ்வளவுதான் பல்லவி!. பழந்தமிழ் காதல் மரபு. நம்பிக்கையின் வெளிப்பாடு. பொருள் தேடச் சென்றிருக்கும் தலைவனின் வருகையை எதிர்நோக்கியிருக்கியிருக்கும் நெய்தல் தலைவியின் ஒரு நீலாம்பரி.

“வாழ்வென்னும் பயிருக்கு வளம் சேர்க்கவே – உடன்
மழைமேகம் போல்வந்து துயர் தீர்க்கவே (வருவானடி)

இது அனுபல்லவி. தலைவனுடைய வருகை நோக்கத்தைத் தலைவி வெளிப்படுத்தும் பாங்கு இது, வாடி நிற்கும் பயிர் தான் என்பதையும் தலைவன் அன்புக்குக் குறைவில்லை என்பதையும் இசைத்தமிழலால் வங்கனூரார் பதிவு செய்யும் பாங்கினை நோக்குவீர்! சங்க இலக்கியத்தின் சாயல் தென்படவில்லையா?

“சோலைக்குள் எனைக்கண்டு
தூய நெஞ்சுள் சிறைவைத்தவன் “

வாயிலிருந்து என்ன சொல்லை இவள் கேட்க வேணடுமாம்? அதனைச் சொல்கிறாள் தலைவி!

“குயில் பாடும் பாட்டில் உன்
குரல்தன்னைக் கேட்கின்றேன்” என்று
நயமாக என் காதில்
நலம் பாய்ச்சவே!

தன்னுடையது குயில் மொழி என்று தலைவன் சொல்ல வேண்டுமாம். அவன் வாயில் இவள் குரல் நலம் பெறவேண்டுமாம். அருமை!

“மதயானை நடையோடு
வந்தென்னை வளைக்கின்றவன் – ஒரு
நதிபோலப் பாய்ந்தென்றன்
மனச்சோலை நனைக்கின்றவன்!”

என்ன அருமையாகத் தலைவி தலைவனை எண்ணி மருகுகிறாள்? மதயானை நடை என்பது மரபு. இராமனின் அசைவை யானையின் அசைவாகச் சீதை பார்க்கவில்லையா? “போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள்” என்பது கம்பராமாயணம்!. “தேக்குமரம் உடலைத் தநதது! சின்ன யானை நடையைத் தந்தது” என்பார் கண்ணதாசன் அவன் நடையால் இவள் வளைந்தாளாம்! அடடா! அவனை எண்ணியே வெப்பத்தால் காய்ந்து போன தன் மனச்சோலையை நனைத்து ஈரமாக்கும் நதியாக தலைவன் வருவானாம். கழிந்ததற்கு இரங்கல்! தன்னுடைய  குரலை அவன் பாராட்ட வேண்டுமாம்! எததனைப் பேர் பாராட்டி என்ன பயன்? தலைவன் பாராட்டினால்தான் தலைவிக்குக் குளிர்ச்சி? “மழைமேகம் போல் வந்து துயர் தீர்ப்பதும், நதிபோல பாய்ந்தென்றன் மனச்சோலை நனைப்பதும்” ஒரே பாடடின் இருவேறு மனச் சூழலை வெளிப்படுத்தும் நுண்ணியம். மழை காலம் நேரம் பாராது வரும். தலைவன் வருகையும் அப்படியே! நதி எப்போதும் ஓடும். அதனால் மனம் ஈரமாகும். முன்னது எதிர்காலம். பின்னது நிகழ்காலம். வெகு நுண்ணியம். இந்தக் காலத்தில எழுதுவார்கள்

அவள் வருவாளா?
கண்ணோடு நான் கண்ட
வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
அவள் வருவாளா?

என்று அருவெறுப்பான மரபு மீறிய கொச்சையான பாடல்களைக் கேட்டுவரும் இந்த இளைஞர் சமுதாயத்தின் பார்வைக்குச் செல்ல வேண்டிய பாடல். தலைவியைத் தேடித் தலைவன் செல்லுவதுதான் மரபு. அவனைத் தேடி அவள் செல்லுவது மரபல்ல. “சுடிதாரில் மூடாத பாகங்களைப்” பாடுவதுதான் இந்தக் காலத்துக் கவிதை! மூடிய உள்ளத்துணர்ச்சிகளைப் பாடியது மரபு. மூடாத உடற்பாகங்களைப் பாடுவது புதுமை! வெட்கக் கேடு! இசைப்பாடல் என்றால் அதற்குள் ஒரு நாடகத்தன்மை இருக்க வேண்டும் எனவேதான் பழந்தமிழ் இசைப்பாடல்கள் எலலாம நாடகம் என்னும் பெயர் தாங்கி நிற்கின்றன. சீதக்காதி நொண்டி நாடகம்,  திருச்செந்தூர் நொண்டி நாடகம், சாத்தூர் அய்யன் நொண்டி நாடகம், திருவிடைமருதூர் நொண்டி நாடகம், ஞான நொண்டி நாடகம், திருக்கச்சூர் நொண்டி நாடகம், ஐயனார் நொண்டி நாடகம் கள்வன் நொண்டிச் சிந்து பெருமான் நொண்டி நாடகம திருவனந்தபுரம் நொண்டி நாடகம் யானைமேலழகர் நொண்டிச்சிந்து என்றெல்லாம் இசைப்பாடல்கள் நாடகமாகவே கருதப்பட்டன.

கண்ணை இமை வெறுக்குமா?

இசைப்பாடல்களுக்கும் மற்ற வகை இயற்றமிழ்ப் பாடல்களுக்கும் உள்ள வேறுபாடு இசைபபாடல்களில் எளிதாக வெளிக்கொணரும் முயற்சி மற்ற பாடல்களில் அவ்வளவாக வெளிப்படுவதற்கு வாயப்பில்லை. இசைப்பாடல்களில் பெரும்பாலும் படைப்பாளன் தன்னைப் பாடுகின்ற தலைவியாகவோ தலைவனாகவோ உருவகம் செய்து கொள்வதால் அங்கே பாவனை தவிர்க்க இயலாததாகிவிடுகிறது, திரைப்பாடல்களின் அளவிறந்த வெற்றிக்கு இதுதான் காரணம். “நீ வருவாய் என நான் இருந்தேன் ! ஏன் மறந்தாய் என நான் அறியேன்!”  என்று தலைவி பாடுகிறபோது கேட்கிற ஒவ்வொருவனும் தலைவனாகிவிடுகிறான். படைப்பாளன் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான பாதிப்பை ரசிகர்களிடம் அந்தப் பாடல் ஏற்படுத்திவிடுிறது,  நவரச இசைப்பாடல்களிலும் இந்த நிலை இருந்து வந்திருக்கிறது,

“கண்ணை இமை வெறுக்குமா ?
காட்சிக் கிளி பறக்குமா ?
பெண்ணே உனை மறப்பதா ?
பேதை இனி இறப்பதா ?

பொன்னிநதிக் கரையினிலே அன்று – நான்
பூவிரியும் சோலைக்குள் சென்று
தன்னைமறைந் திருந்தநிலை யுண்டு! – உன்றன்
தமிழிசையைச் செவிகுளிர உண்டு!

மனக்கதவை எனக்கெனத் திறந்தாய்! – அங்கு
மன்னனெனைக் குடிவைத்தி ருந்தாய்!
இனப்பெருமை நாம்கெடுத்தல் ஆகா -மண்ணில்
இழிவுக்குள் இன்பத்தின் பாகா?

இப்படித் தலைவன் பாடுவது மரபில்லையெனினும் மேடைக் கச்சேரிகளில் இது போன்ற பாடல்களைப் பாடுகிறபோது கேட்போர் உள்ளம் உருகிவிடுவர் என்பது உறுதி. ஓர் ஆண் பாடுவதாக அமைத்துக்காட்டும் இந்தப் பாடலில் மரபு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. பொன்னி நதித் தீரத்தில் பூஞ்சோலையில் நடந்த நிகழ்ச்சி நிரலைத் தலைவன் சிந்தித்துப் பாடுகிறபோது ஒரு நாடகப்பாங்கு அரங்கேறுவதைக் காணமுடிகிறது,

மறந்ததும் ஏனடி தோழி?

தலைவனும் தலைவியை மறப்பதில்லை. தலைவியும் தலைவனை மறப்பதில்லை. ஆனால் இருவரும் ஒருவரை யொருவர் மறந்துவிட்டதாக எண்ணி மருகுவது ஒரு புலனெறிவழக்கம். இலக்கியம் சுவைப்பது கற்பனையால். அந்தக் கற்பனைக்கு இத்தகைய சூழல் களமாகிறது, துணை செய்கிறது. அவ்வளவுதான். எலலாம் வல்ல தலைவனை எல்லாம் உளள தலைவி எண்ணி ஏங்குவதில் ஒரு தனிச்சுவை இருக்கிறது, சுகம் இருக்கிறது.. தமிழிலக்கியம் இந்த நுண்ணியத்தைப் புரிந்து கொண்டது. பாலை பற்றிய பாடல்கள் தமிழைப்போல பிறமொழிகளில் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. வங்கனூரார் இந்த அலைவரிசையில்  இசைப்பாடல் ஒன்றினை எழுதியிருக்கிறார்.

“மறந்ததும் ஏனடி தோழி?, என்னை
மறந்ததும் ஏனடி தோழி?”

தோழியிடம் வினவப்படட வினாவிற்கு விடைகிடைப்பதற்கு முன்பே தொடர்ந்து பாடுகிறாள்.

பறந்துவந்து பாழும் நெஞ்சைப்
பறித்துக் கொண்ட மன்னன் இன்று!
மறந்ததும் ஏனடி தோழி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தத் தகவலைத் தோழி கேட்கவில்லை. தலைவியின் உள்ளம் எப்படிப் பறிபோனது என்று தோழி கேட்டாளா? வந்தவனிடம் சென்று விட்டதால் வளர்த்த பாசம் தாங்காமல் தன் நெஞ்சைப் பாழும் நெஞ்சு என்று கூறிக் கொள்வது ஒரு வகை கையறுநிலை!. அடுத்த சரணத்தில் ஒரு புதுமை செய்கிறார் பிரிவு தலைவனுக்கு உரியது, பிரிவால் பாதிக்கப்படுபவள் தலைவி. இலக்கியங்கள் அவளுக்காகத்தான் செய்யப்படும். ஆனால்
என்னைப்
பாலைப்பயணம் போகவிட்டுப்
பதுங்கி மறைந்தவன்

என்று பிரிவைத் தலைவிக்காக்குகிறாள். இவளைப் பயணம் போகவிட்டு அவன் பதுங்கியிருக்கிறானாம். இப்படித் தன்னையும் அறியாமல் மரபு மாறிய தடத்தில் கவியெழுதும் வங்கனூரார் அதே மரபினை அதே பாடலில் பின்பற்றியிருப்பதையும் காணமுடிகிறது, காதலுக்கு நேர்வழி கண்கள். “கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒக்கின்” என்பார் திருவள்ளுவர் “கண்ணேறி உயிரேறி கலந்து கொண்டான் என்பார்’ பாவேந்தர். ‘கண்வழி புகுந்து கருத்தினில் கலந்த மின்னொளியே ஏன் மவுனம்?” என்று எழுதுவார் மருதகாசி “கண்ணிலே இருப்பதென்ன கன்னி இள மானே! என்பார் கண்ணதாசன். விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என்பார் வைரமுத்து.

அமுத ஊற்றைச் சுவைக்குமுன்பே
அகன்று விட்டவன் என்றன்
இமைக்கும் விழியைத்தாண்டிச் சென்று
இமயம் தொட்டவன்”

“மற்றவர்களெல்லாம் கண்வழியே நுழைந்தவர்கள் .வங்கனூரார் காதலி மட்டும் விழியைத் தாண்டியவள்  காரணம் இவள் இமைத்தாள் அல்லவா? தடை உடைத்து உள்ளே நுழைந்தானாம் என்பது குறிப்பு.

இனிக்கும் கனவு

மேற்கண்ட இசைப்பாடலில் ஒரு சரணக் கண்ணியில் அவர் பயன்படுத்தியிருக்கும் ஒரு சொல் கவனத்தை ஈர்க்கிறது. ஒரு இயல்பான கவிஞனுக்குத்தான் அமைய முடியும். இயல்பாகப் புதுக்கவிதை எழுதுவதாகச் சொல்லிக் கொள்பவர்கள் முரண்பட்ட இரண்டு சொற்களை இணைத்துப் புதியதொரு படிமத்தை உருவாக்குவார்கள். ஆனால் இங்கே மரபு சார்ந்த இசைப்பாடல் எழுதுகின்ற ஒருவர் பாடலில் இப்படியொரு சொல் பயிலப்பட்டு வந்திருக்கிறது,

“மணக்கும் மலரை குழலில் சூட்டி
மகிழந்து நின்றவன்  நாளும்
இனிக்கும் கனவை எனக்குள் நடத்தும்
என்றன் மன்னவன்”

கனவு நாக்குச் சுவைக்குரிய பொருளன்று. கனவு உண்மையில் ஒரு அருவப்போருள். கனவைச் செயப்படுபொருளாக்கித் தலைவன் நாடகம் நடத்துகின்றானாம். மிகவும் பொறுமையாகச் சிந்தித்து அனுபவிக்க வேண்டிய பகுதி. தொடர்.

காலமகளின் நாட்டியங்கள் கண்ணைப் பறிக்குதே!

சங்க இலக்கியம் இயற்கையின் கண்காட்சி மையம். அதற்குப் பின்னாலே வந்த தமிழிலக்கியங்களில் பெரும்பான்மை இயற்கையை வாய்ப்பு கிட்டியபோதெல்லாம் வளர்ப்புப் பிள்ளைகளாகக் கொண்டிருந்தன. அவற்றுக்குப்பின்னாலே நாம் இயற்கையை பாவேந்தர் படைப்பக்களில்தாம் சங்க இலக்கிய அளவுக்குக் காணமுடிகிறது. இடையில் வந்த மகாகவி குயில்பாட்டு; போன்ற ஒரு சில பதிவுகளில் தாம் இயற்கை மீது கொண்ட வற்றாக் காதலைப் பாடியிருக்கிறார். மற்றவர்களுக்கும் வங்கனூராருக்கும் ஒரு வேறுபாடு மற்றவர்கள் எல்லாம் இயற்றமிழ் பாடல்களில் பாடிய இயற்கையை வங்கனூரார் இசைத்தமிழ் பாடல்களில் பாடியுள்ளார்.

“மாலை நேர மல்லி கையின்
சிரிப்பைப் பாராடி ! – அதன்
மணத்தை வாங்க தென்றல் பாடும்
பாட்டைக் கேளடி !

கோல நிலவும் வானில் வந்து
குடும்பம் நடத்துது ! – ஒரு
கோடி விண்மீன் கூட்டத் திற்கு
விருந்து படைக்குது !

சோலைக் குள்ளே அருவி என்னும்
மங்கை நடக்கிறாள் ! – என்
தூய நெஞ்சைச் சொந்தங் கொண்டு
கவிதை வடிக்கிறாள் !

கால மகளின் நாட்டி யங்கள்
கண்ணைப் பறிக்குதே ! – அவள்
காட்டு கின்ற காட்சி மண்ணில்
அழகை விரிக்குதே !

பொதுவாக இசைப்பாடலில் முதலில் பண்ணும் அதற்கு அடுத்தபடியாக இயற்றுவார் கருத்தும் பார்வையும்; மனத்தைக் கவரும். இயற்கை வண்ணனை அவ்வளவாகக் கவனத்திற்கு ஆளாவதில்லை. ஆனால் வங்கனூரார் இயற்கையைத்  தனியொரு பாடுபோருளாகக் கொண்டு பாடியிருப்பது தனிச்சிறப்புக்குரியது, பிறரால் முடியாதது என்பதன்று முயன்று தோற்றது, தமிழின் இசைப்பாடல் எண்ணிக்கையில் வங்கனூராரின் பங்களிப்பு செம்பாகம் அன்று பெரிது,  தத்துவக் குறிப்போடு நிறைவுற்றிருக்கும் மேற்கண்ட பாடலில்

  1. மல்லிகையின் மணத்தை வாங்கத் தென்றல் படும் பாடு
  2. ஒற்றைநிலா விண்மீன் ;கூட்டத்திற்கு விருந்து படைத்தல்
  3. அருவி என்னும் மங்கை நடக்கிறாள்

என்றெல்லாம் அழகியல் சார்ந்த கற்பனைகளைத் தொடர்ந்து “காலமகளின் நாட்டியங்கள் கண்ணைப் பறிக்குதே“ என முத்தாய்ப்பு வைத்திருப்பது இப்பாடலின் வெற்றியைத் தீர்மானிக்கும் புள்ளியாகும்..

ஓவியத்தைப் ‘பேசாக் கவிதை’ என்றும் கவிதையைப் ‘பேசும் ஓவியம்’ என்றும் சொல்வது மரபு. கண்வழி ரசிக்கப்படும் ஓவியம் மனத்தைக் கிளறுமானால் அங்கே அந்த ஓவியம் கவிதையாகும்! காரணம் கவிதைக்குத்தான் கிளர்ச்சி பண்ணத் தெரியும்! செவிவழி நுகரப்படும் கவிதைச் சித்திரிப்பு மனம் காண  இயலுமாறு படைக்கப்படுமானால் அந்தக் கவிதை ஓவியமாகும். கவிதைச் சித்திரிப்பு என்பது இதுதான்! இவைதாம் புலன் மாற்றிப் போடுவது என்கிறார்கள்

பெரியவர் கவிஞர் தமிழாசிரியப் பெருமகனார் வங்கனூரார் இசைத் தமிழ்ப் பாடல்களில் நான் வசமிழந்த தருணங்கள் பல.  எண்சீர் விருத்தங்களில் ஆன இட்டளியையும் தோசையையும் மட்டுமே மாறி மாறிச் சாப்பிட்டு வந்த நான் ஏதாவது மாற்று கிடைக்காதா என ஏங்கிய பொழுது எண்ணில் அடங்காது. பொதுவாகக் காதல் பாடுபொருளை நான் விரும்புவதில்லை. காரணம் அதற்கான உணர்வுகள் பாரதிதாசனோடு முடிந்துவிட்டதாகவே நான் கருதுகிறேன். அப்துல்ரகுமானும் மீராவும் கொஞ்சம் உணர்ந்தார்கள் பாடினார்கள்! வைரமுத்து என்னதான் முயன்றிருந்தாலும் அவர் காமத்தையே காதலாகப் பாடினார்! பிற போலிக்கவிஞர்கள் அசைக்கு ஆடை அணிவித்து அழகு பார்த்தார்கள். அவர்களுக்குக் காதலியும் கிட்டவில்லை! கவிதையும் பிடிபடவில்லை!.  இவர்கள் எழுதிய காதல் பாடல்களுக்கு நான் வடித்த கண்ணீர் அரபிக்கடலில் அரைப்பங்கு இருக்கும்!

காதல் ஒரு நாடகம். இதுபற்றிய இசைத்தமிழ்ப் பாடல்களில் ஒரு நாடகத்தன்மை இருத்தல் வேண்டும் என்பது முன்பே சுட்டப் பெற்றது. தன்மைக்கும் முன்னிலைக்கும் உரியது. படர்க்கைக்கு உரியதன்று. இந்த  அடிப்படையையே பலர் உணர்ந்ததாகத் தெரியவில்லை!  வங்கனூரார் உணர்ந்து பாடுகிறார்!

“விழியோடு விழிசேர்க்கவே – நீ
விளையாடி உடனோடிவா !
மொழியற்ற மோனத்திலே – ஒளி
முத்தான கவிபாடிவா !”

ஒரு மரபுக் கவிதை எப்படி அமைய வேண்டும் என்பதைத் தம்மை அறியாமலேயே பதிவிட்டிருக்கிறார் பெரியவர்! மோனைகள் முந்துகின்றன. இயைபு இடையசைவாய் நெளிகின்றன. பாடுபொருள் காதல்! தலைவன் தலைவியை முன்னிறுத்திப் பாடுகிறான். எல்லாமே எளிமை! எனவே கவிதை தூய்மையாகிவிடுகிறது. “எளிமையுடையோர் பேறு பெற்றார்!”

“எழில்பொங்கும் மலர்ச்சோலையில் – நம்
இளநெஞ்சம் இணைந்தாடுமே !
வழிந்தோடும் பெருவெள்ளமாய் – நம்மை
மயக்கங்கள் வரவேற்குமே !

“எழில்பொங்கும் மலர்ச்சோலையில் – நம் இளநெஞ்சம் இணைந்தாடுமே !” இந்த வரியை விருதுக் கவிஞன் யாராவது எழுதியிருந்தால் நெஞ்சத்தை இணைந்தாட வைத்திருக்கமாட்டான்!. வேறொன்றை ஆட வைத்திருப்பான்! காரணம் அவனுக்கு மார்பு, இடை, கண், தோடு, தொங்கட்டான் என்னும் இந்த உறுப்புக்களின் அசைவுகள்தாம் காதல்!  “அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே” என்பதெல்லாம் பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய்ப் போனவை!

‘நெஞ்சம்’ என்னும் ஒருமை தாம் என்னும் பன்மை விகுதியாலும் கலந்தன என்னும் பன்மை வினைமுற்றாலும் பன்மையாவது காண்க. சங்க இலக்கிய நுட்பம் இது. புலவன் நெஞ்சங்கள் என்று எழுதவில்லை என்பதை அறிக. கலக்கின்ற நெஞ்சங்கள் இரண்டாயினும் உயிர் ஒன்றாதலின் நெஞ்சத்திற்குப் பன்மை கிடையாது. நம் போலிக் கவிஞர்கள் ‘கண்ணீர்கள்’ என்றும் எழுதுவார்கள். ‘நன்றிகள்’ என்றும் எழுதுவார்கள். ‘தவறாயிற்றே’ என்றால் கடந்து போய் விடுவார்கள்!

“மயக்கங்கள் வரவேற்குமே” என்பதற்கு உரையில்லை. உரை கூற முடியாது. இயலாது. பாவேந்தர் எழுதுவார் “வாழ்தலும் சாதலும் அற்ற இடம்” என்று. அப்படியோர் இடம் எங்காவது உண்டா? அது போன்றது இது! எண்ணிப் பார்த்து சுவைக்க வேண்டிய தொடர்!

“தென்காற்றின் அலைதன்னிலே – நீ
சிரிக்கின்ற மலரல்லவோ ?
பொன்னூற்றின் இசையாவுமே – உன்
வளையோசை தனைவெல்லுமோ ?”

கடலுக்கு அலையுண்டு! காற்றுக்கு அலையுண்டா? உண்டு! எங்கே? வங்கனூரார் கண்ட தலைவன் பாடலில்! காற்றில் சிரிக்கின்ற மலர் என்றால் காற்றில் தள்ளாடும் மலர். காற்றின் அலைகள் காற்றினும் மென்மையானவை. அதில் ஆடும் மலரென்றால் மலரின் மென்மை எப்படி இருந்திருக்கும்? “மலரினும் மெல்லிது காமம்” என்னும் குறட்பா அடிக்கு இது உரையாகலாம்.

“கருமேகம் உன்கூந்தலோ ? – உயர்
கலையாவும் உன்சாயலோ ?
பருவத்துச் செந்தேனெலாம் – உன்
பார்வைக்குள் குடிவந்ததோ ?”

‘அலைகூந்தல்’ ‘நறுங்கூந்தல்’ ‘இருங்கூந்தல்’ ‘வெறுங்கூந்தல்’ என்று கேட்டுப் புரையோடிப் போன காதுகளுக்குக் ‘கருமேகம் உன் கூந்தலோ’ என்னும் ஐயம் இனிமை சேர்ந்தது. உவமையைப் புறந்தள்ளி உருவகத்தை முன்னிறுத்தும் இயற்கையான கவித்துவம் இங்கே வெளிப்படுவதைக் காணலாம்.

இரட்டுற மொழிதல் என்றால் காளமேகத்தைத்தான் நாடுவார்கள் தமிழ்நாட்டுப் பாடநூற் குழுவினர். தமிழாசிரியர் பலருக்கும் இரட்டுற மொழிதல் என்றால் தெரியாது. சிலேடை என்றால்தான் சிக்கெடுப்பார்கள். “உயர் கலையாவும் உன்சாயலோ ?” உயர்கலை என வினைத்தொகையாகக் கொண்டு கவிதையை அனுபவிப்பது என்பது ஒன்று. கலையைப் பெயர்ச்சொல்லாகக் கொண்டு அனுபவிப்பது மற்றொன்று. கலை என்பது ஆகுபெயராய் மானினத்தைக் குறிக்கும்.  “மானென அவளைச்சொன்னால் மருளுதல் அவளுக்கில்லை” என்பது நாமக்கல் இராமலிங்கம் எழுதிய அடி.

“மானினமெல்லாம் இவள் சாயல் பெற்றதாம்!”

எல்லாக் கலைகளிலும் நீயிருக்கிறாய் என்பது ஒரு நோக்கு! கலைமானின் சாயல் உன்னிடம் இருக்கிறதே என்பது மற்றொரு நோக்கு! இதுதான் இரட்டுற மொழிதல். சிலேடை! கவனித்துப் பாருங்கள்! ‘வா’ என்னும் முன்னிலை வினையையும் இயைபாக்கியிருப்பார். ‘ஓ’ ;ஏ’ என்னும் இடைச்சொற்களையும் இயைபாக்கியிருப்பார்! ஒன்றினைப் பற்றிப் பாடுவது கவிதையாகாது. ஒரு அனுபவத்தின் மொழிவழிப் பகிர்வதுதான் கவிதை.

பாவேந்தரும் வங்கனூர் கவிஞரும்

வள்ளற்பெருமான் தொடங்கித் தொடர்ந்துவரும் சாதியொழிப்புச் சிந்தனைகள் ஒவ்வொரு படைபபாளருக்கும் பல உத்திககளைச் சிறக்கச் செய்கிறது.

“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சண்டைகளிலு சமயகோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து நீவிர் அழிதல் அழகலவே”

என்று புலம்பினார் வள்ளற்பெருமான். ஒரு சமயவழிப்பட்ட சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வினை ஒழிக்கும் முனைப்பு வள்ளற் பெருமான் பாடலில் எதிரொலிப்பதைக் காணலாம். பின்னாலே வந்த பாரதியார் வள்ளற் பெருமானின் அடியொட்டியே சிந்திக்க முடிந்தது, “சாதிகள் இலலையடி பாப்பா!” என்று அவரும் அதனையொழிக்கும் வழியறியாது குழந்தைகளிடம் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னாலே பாரதிதாசன்தான் சாதியினை ஒழிப்பதற்குச் சரியான வழி கலப்புத் திருமணமே என்னும் தெளிவு பெற்றிருந்தார்.  தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் அரசியல் மற்றும் சமுதாயத் தளத்தில் அதே கொள்கையில் இயங்கினாலும் இலக்கியமாகிய கவிதைத் தளத்தில் பாவேந்தர் காதலைப் பாடுகிறபொழுதெல்லாம் சாதிமறுப்பைப் பாடினார். விதவைத் திருமணத்தைப் பாடினார் “இதயமலர் நீதான் என்னும் இசைப்பாடலில் பாவேந்தரின் சாரத்தையே காணமுடிகிறது,

“இனக்கொடுமை கடலலைபோல்
எழுந்துவந்து மோதும் !
உனது மனம் தாங்கவேண்டும்
எதுநடந்த போதும் !

என்மனத்தை உன்மனத்தில்
சங்கமித்து விட்டேன் !– இனி
என்னதுன்பம் வந்தபோதும்
நான்கலங்க மாட்டேன் !

சாதியற்ற ஓர்உறவைச்
சமைப்பதற்குக் கண்ணே ! — நல்ல
பாதையொன்று அமைப்பதென
உறுதிகொள்வோம் பெண்ணே !

பெண் : மனிதயினம் காதலுக்கு
மதிப்பளிக்கும் போது ! — நம்
புனிதஎண்ணம் வெல்வதற்குத்
தடைகள் கிடையாது !

சமுதாயச் சீர்திருத்தத்தில் முதலிடம் வகிபப்து கலப்பு மணம். அந்தக் கலப்புமணத்தை இசைப்பாடலில வைத்துப் பாட முடியும என்பதை நிரூபித்திருக்கிறார் வங்கனூரார்.  விருத்தங்களிலேயே படிந்து வேதனையைத் தின்ற சில இதயங்கள் இது போன்ற இசைப்பாடலகளில் இளைப்பாறுவதும் தமிழ்த்தாயின் அருளே!

நெஞ்சையள்ளும் கற்பனை

கவிதை சிறக்கும் காரணிகளுள் கற்பனை தலையாயது. அணிகளெல்லாம் கற்பனைக்குள் அடங்கும். அடக்கம். இந்தக் கற்பனையோடு உத்தி கைகோக்கிறபோது கவிதை கொடிகட்டிப் பறக்கும்.

“தாமரையின்இதழ்களுக்கு
நீ கொடுத்தாய் சிவப்பு – வானில்
தவழும் அந்த முகில்களுக்கு
உன்கூந்தல் நினைப்பு”

வெள்ளி நிலா உன்முகத்தைப்
பார்க்க வரும் அழகு – அந்த
வேளையிலே நிலவுக்குநீ
ஒளி கொடுத்துப் பழகு!

எத்தகைய கற்பனை பார்த்தீர்களா?  ‘கார்கூந்தல்’ என்பதுதான் மரபுவழிச் சிந்தனை.  இவரே அப்படி இன்னொரு இடத்தில் பாடியிருக்கிறார். இந்தச் சிந்தனை வெளிப்பாட்டினை “அந்த முகில்களுக்கு உன் கூந்தல் நினைப்பு” என்று வெளிப்படுத்தும் கவித்துவம் சிறந்த ஒன்று. நிலவுக்கு ஒளிகொடுப்பது கதிரவன் என்பது அறிந்தது. ஆனால் வங்கனூரார் கதிரவன் செய்ய வேண்டிய பணியைக் கன்னியைச் செய்ய வைக்கிறார் தலைவன் மூலம். இதில் நுண்ணியம் என்னவென்றால் பெண்முகத்தை கதிரவனோடு ஒப்பிடுவது மரபன்று. ஆனால் வங்கனூரார் இந்த மரபை மாற்றுகிறார். “ நிலவுக்கு நீ  ஒளி கொடுத்துப் பழகு”! இவள் முகம் நோக்க நிலவு மங்கித் தோன்றுகிறதாம். இது பாரதி கண்ட மரபு. “மங்கியதோர் நிலவினிலே” என்பார் பாரதியார். காதலிக்கு முன்னால் நிலவொளி குன்றும் குறையும். அதுவரை இது மரபுதான். ஆனால் நிலவுக்கு ஒளி கொடுக்க வேண்டும் என்கிறபோதுதான் மரபு மீறப்படுகிறது கவிஞனையும் அறியாமல்! இன்னும் சொல்லலாம்! மேகம் நினைக்கிறதாம் இவள் கூந்தல் போல இல்லையே என்று! அஃறிணையை உயர்திணையாக்கிக் கவலைப்பட வைத்த கவித்துவம்!

எதனைப் பாடினாலும்இசைப்பாடலே!

இறைவனையும் காதலையும் தாண்டிப் பாடப்பட்ட இசைப்பாடல்கள் தமிழில் எண்ணிக்கையில் குறைவு. ஒட்டு மொத்த சமுதாயக் கருத்துக்களையும் உள்ளடக்கமாகக் கொண்டு வந்து அந்தக் குறையை நீககி நிவர்த்தி செய்திருக்கிறார் வங்கனூரார்.

“உனக்காக என்எழுத்து
வளையாது ! – அது
ஒருபோதும் தலைகுனிந்து
நெளியாது !
எனக்கான பாதைவிட்டு
விலகாது ! – எவர்
எதிர்வரினும் மனக்கூடு
கலையாது !”

என்று தன்னிலைக் கொள்கை முழக்கமாகட்டும்

“கொடுமை விளைக்கின்ற – சாதிக்
கொள்கையை வேரறுப்போம் !
அடிமைத் தளையறுத்து – நாட்டில்
அன்பு பயிர்வளர்ப்போம் !”

என்று சாதியொழிப்பு, அடிமைத் தளையறுப்பு முதலியவற்றைப் பாடும் போதாகட்டும்

“வயல்களில் உழவர்
தமிழிசை கேட்கும் !
மாடுகள் எல்லாம்
மணியோசை கூட்டும் !
மயக்கிடும் வண்ணம்
குளங்களில் தண்ணீர்
மாற்றுக் குறையாத
தங்கமாய் மின்னும் !”
முகிலெனும் வேலியிட்டு — அதை
மூடுவ தாரடியோ ?
அகிலம் நடுங்கிடவே — மின்னல்
அதிர்வதும் ஏனடியோ ?

என்னும் இயற்கை வண்ணனையாகட்டும்

“விண்ணில் நடம்புரியும்
மின்னல் கொடியதனைப்
பெண்உன்னில் காணுகின்றேன் !-உயர்
பண்ணின் இசைஇனிமை
பாவைஉன் பேச்சினிலே
பயில்வதைக் கேட்கின்றேன் “

என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தாகட்டும் எந்தப் பாடுபொருளானாலும் அதனை இசைவடிவமாகவே காணும் பேராற்றலை இயல்பாகப் பெற்றிருக்கிறார் வங்கனூரார். காய்முன் நேரையும் விளம் முன் நேரையும் வேதனைப் பூங்காவிற்குள் நுழைவுச் சீட்டு இல்லாமலேயே விருந்து வைக்கும் எண்சீர் விருத்தங்களும் மட்டுமே சந்தை மயக்கமாக்கப்பட்டிருக்கும் தற்காலத் தமிழ்ககவிதையுலகில் “என் வழி தனி வழி” என்னும் தனித்தடம் கண்டிருக்கிறார் வங்கனூரார். கோனார் குறிப்பேட்டோடு தமிழையும் பணிக்கால்ததையும் முடித்துக் கொள்ளும் தமிழாசிரியர் இடையே தமிழை இந்த எண்பது வயதிலும் ஊன்று கோலாகக் கொண்டு நடப்பவர் வங்கனூரார். விருத்தங்கள் என்னும் விரைவுச் சாப்பாடடையே உண்டு வந்த எனக்கு வங்கனூராரரின்  இசைபபாடல்கள் தந்த சுகம் இளநீர் சுகம்! இதமான சுகம்

இன்னும் இனித்திருக்கலாம்

வங்கனூரார் உட்பட இசைப்பாடல்களை எழுதுகிற பலரும் அதன் நுண்ணிய கூறுகளை உள்வாங்காமல் சொல்லினிமைக்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது மரபாகிப் போனது, அப்பெருமக்கள் கவனிக்கத் தவறிய நுண்ணியங்களில் ஒன்று அனுபல்லவிக்கும் பல்லவிக்குமான தொடர்பு, சரணத்திற்கும பல்லவிக்குமான தொடர்பு. இந்தக் கட்டுரையின் தொடக்கப்பத்திகளில் குறிக்கப்பட்ட இசைப்பாடலாசிரியர்கள் இதனை நன்கு கையாண்டுள்ளனர். பொன்னையா பிள்ளை எழுதிய இசைப்பாடல் ஒன்று இப்படித் தொடங்குகிறது.

“தந்தை தாயிருந்தால் உமக்கிந்த
தாழ்வெலலாம் வருமோ ஐயா

இந்தப் பல்லவி தனித்து நிற்காது, அனுபல்லவியின் இறுதிச் சொல்லோடு இணைந்து நிற்பதைக் காணலாம். அனுபல்லவி எப்படி அமைந்திருக்கிறது?

“அந்தமில் நடம் செய்யும் அம்பலவாணரே!
அருமையுடனே பெற்றுப் பெருமையுடன் வளர்த்த

என்று அமைகிறது, ‘வளர்த்த’ என்னும் அனுபல்லவியின் பெயரெச்சம், பல்லவியின் தொடக்கத்தோடு இணைக்கப்பட்டுப் பாடுகிறபோது பாட்டின் கனஅளவு கூடுகிறது என்பதை உணரக்கூடும். “வளர்த்த தந்தை தாய் இருந்தால்” என்று இருக்க வேண்டும். இனி சரணத்தின் இறுதிச் சீரும் பல்லவியின் தொடக்கமும் இணைவதைக் காணலாம். எலலாருக்கும் தெரிந்த பாட்டு. சுரதா எழுதியது.

அமுதும் தேனும் எதற்கு? நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு!

என்னும் பல்லவியின் தொடக்கச் சொல்லைப் பலரும் வெறும ‘அமுது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறாரகள் அவர்களில் பலருக்கும் சரணம் தெரியாத காரணத்தால். சரணம் இப்ப்டி அமைந்திருக்கிறது.

“நிலவின் நிழலோ உன் வதனம்
புது நிலைக்கண்ணாடியோ?
மின்னும் கன்னம்
மலையில் பிறவா மாமணியே நான்
கொய்யும் கொய்யா… கனியே
வா! ன் அமுதும் தேனும் எதற்கு?

சுரதாவின் பாடலை செரித்துக் கொண்ட இசைமணி சீர்காழி “கனியே! வா! என ஒரு நொடியில் நிறுத்தி வானமுதும் எனத் தொடங்கி முடிப்பார். இப்போதும் கேட்கலாம். எனவே பாட்டின் பல்லவி “அமுதும்” என்பதிலிருந்து “வானமுது” என்ற நிலைக்கு உயர்ந்துவிடுகிறது என்பதை அறிந்து சுவைக்கலாம். பொதுவாகப் பல்லவி, அனுபல்லவி, சரணம் இவற்றின் ஈற்றுச் சீர்கள் பல்லவியின் தொடக்கச் சீர்களோடு இணைந்து பாடப்படுகிறபோது கிட்டும் இனபம் அலாதியானது, இது போன்ற பாட்டுக் கோவை வங்கனூராரிடம் அருகியே காணப்படுகிறது என்பதும் திறனாய்வு நோக்கில் சுட்டப்படுகிறது

நிறைவுரை

வங்கனூரார் இசைப்பாடல்களை நான் படித்துப் பாட எத்தனிக்கிறபோது வானத்தில் பறப்பது போன்ற உணர்வு எனக்கு. எழுபதுகளில் வானொலி அலைவரிசைகளைத் தம் இசைப்பாடல்களால் வசப்படுத்திய வல்லாளர். இன்று என் இதய சிம்மாசனத்தில் வழிபடு பொருளாகத் திகழ்கின்றார். எவ்வளவு பெரிய வல்லாளர்! எத்தகைய படைப்பாளி! உண்மைத் தமிழும் ஊராண்ட இசையும் இன்றைக்கு வங்கனூரில் முகாமிட்டிருக்கிறது. அவர் மீது எனக்குப் பாசம் உண்டு. அவர் பாடல்களில் எனக்கு நேசம் உண்டு. இறைவனையும் காதலையும் பாடுபொருள்களாகக் கொண்டிருந்த இசைப்பாடல் களத்தில் அனைத்து வகையான பாடுபொருள்களையும் அறிமுகம் செய்து வைத்ததில் வங்கனூர் மோகனுக்கு வாழ்த்துக்களைச் சொல்லத் தமிழ் தயாராயிருக்கிறது, “படித்தேன் சுவைத்தேன் பகிர்ந்தேன்” தொடரில் இதுவரை என் தம்பிகளுக்கு வாழ்த்துச் சொன்னேன். இந்தக் கட்டுரையில் என் தமையனை வணங்கி நிற்கிறேன் வாழ்த்துக்களை வேண்டி!

“வங்கனூரார்இசைப் பாடல் சொன்னால் — சொன்ன
வாயினிக்கும்! அவர் வாழ்வினிக்கும்!
தெங்கினிக்கும்! மலை தேனினிக்கும்! — தெற்குத்
செந்தமிழின் இசை சேர்ந்தினிக்கும்!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.