இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (302)

சக்தி சக்திதாசன்
அன்பானவர்களே !
மிக நீண்ட இடைவெளியின் பின்னால் மீண்டும் இங்கிலாந்தின் நாட்டு நடப்புகளின் அலசலோடு உங்களின் முன்னால் வல்லமையூடு பயணிக்கிறேன்.
வாரம் ஒரு மடல் என்று முன்பு நான் வரைந்த மடலின் இடைவெளி இப்போது மாதம் ஒன்றாக மாறும் என்பதை அன்புடன் இனிய வாசக உள்ளங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது கடைசி மடலுக்கும், இந்த மடலுக்கும் இடையே பல வருடங்கள் உருண்டோடி விட்டன.
வருடங்கள் பறந்தது மட்டுமல்ல அந்த வருடங்கள் தமக்குள் அமுக்கிக் கொண்ட நிகழ்வுகள் ஒராயிரம்.
அவற்றினில் உலகம் பூராவும் ஒட்டு மொத்தமாக அனுபவித்தது கொரோனா எனும் ஒரு கொடிய நிகழ்வு.
நான் வாழ்ந்து கொண்டிருக்கும், என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து தேசமும் தன் பங்கிற்கு கொரோனாவின் பாதிப்பிற்குள்ளாகியது.
அத்தனை வருட இடைவெளியில் நிகழ்ந்த நிகழ்வுகளை அலசுவது முடியாத காரியம் அது என் நோக்கமும் அல்ல.
இன்றைய நிலையில், இன்றைய இங்கிலாந்தின் நடப்புகளின் அடிப்படையில் அதை நோக்கிய ஒரு புலம்பெயர் தமிழனின் கோணப் பார்வையிலேயே எனது இம்மடல் மீண்டும் பிறப்பெடுக்கிறது.
இவ்வருடம் அதாவது 2025 ஜனவரி மாதம் 30 ம் தேதி நான் இங்கிலாந்தில் கால்பதித்த 50வது வருடத்தினுள் நுழைகிறேன்.
18 வயது இளைஞனாக, இயந்திரவியற் பொறியியல் துறை மாணவனாக ஈழத்திலிருந்து இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தேன்.
இன்று எனது 68 இன் நடுப்பகுதியில் , ஓய்வு பெற்ற பொறியியலாகனாக, ஒரு டாக்டரின் தந்தையாக , எட்டு வயதுப் பேத்தியின் தாத்தாவாக இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன்.
இந்த ஐம்பது வருடங்களில் நான் இங்கிலாந்தில் கண்ட மாற்றங்கள் எனது அனுபவப் புத்தகத்தின் அத்தியாயங்களாகப் பதியப் பட்டுள்ளன.
என்னுடைய இங்கிலாந்தின் நிகழ்வுகளை நோக்கிய பார்வையும் அந்தக் கோணத்திலேயே அமையப் போகிறது.
இது ஒரு மதிநுட்பம் நிறைந்த அறிவாளியின் தீர்ப்பு அல்ல.
ஒரு சாதாரணப் பாமரனின் வாழ்வை நோக்கிய பார்வை.
சரி இனி இந்த மடலின் நோக்கத்திற்குள் பிரவேசிப்போம்.
அதற்கான முன் விளக்கம் பூர்த்தியாகி விட்டது என்றே எண்ணுகிறேன்.
இங்கிலாந்து இதுவரை காலமும் இல்லாத ஒரு புது அலகிற்குள் கால் பதித்திருக்கிறது என்றே கூறவேண்டும்.
2010 இலிருந்து 2024 வரை அரசியல் அதிகாரம் தமது ஏகபோக உரிமை எனும் வகையில் அரசமைத்திருந்த கன்சர்வேடிவ் கட்சியின் அரசியல் அதிகாரம் 2024 நடந்த தேர்தலின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
தேர்தலில் அதீத பெரும்பான்மை பெற்று அமோக வெற்றியீட்டியது லேபர் – தொழிற் கட்சி.
லேபர் கட்சி தேர்தலில் வெற்றியீட்டியது என்பதை விட கன்சர்வேடிவ் கட்சி தோல்வியைத் தேடிக் கொண்டது என்பதே உண்மையாகும்.
அதை எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்கிறீர்களா ?
தொடர் வெற்றிகளைக் கண்டு வந்த கன்சர்வேடிவ் கட்சி தேர்தல் வெற்றி தமக்கேயுரியது எனும் பாங்கில் நடக்கத் தொடங்கினார்கள்.
கொரோனா கொடுத்த தாக்கமும், ப்ரெக்ஸிட் எனும் பெயரில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் ஒன்றாகத் தாக்கின.
அந்தத் தாக்கங்கள் மக்களின் வாழ்வாதாரத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியது.
கன்சர்வேடிவ் கட்சியில் பிரதமர் பொரிஸ் ஜான்சன் உட்பட பல முன்னனி உறுப்பினர்கள் தாம் சட்ட வரம்பிற்கு அப்பாற்பட்டவர்கள் எனும் பாணியில் செயற்பட்டார்கள்.
மக்களின் மனங்களில் விளைந்த விரக்தியின் விகிதத்தைக் கணக்கிடத் தவறினார்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் அமேரிக்க அரசியல் தளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் அவர்களின் அரசியல் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவைக் கணக்கிலெடுக்கத் தவறினார்கள்.
பொரிஸ் ஜான்சனின் வீழ்ச்சியை அடுத்து பதவிக்கு வந்த லிஸ் ட்ரஸ் என்பவரின் கண்மூடித்தனமான பொருளாதாரக் கொள்கையின் வீழ்ச்சி அவரை மிகக்குறைந்த காலம் பதவி வகித்த பிரதமர் எனும் முத்திரையுடன் வெளியேற வைத்தது.
தொடர்ந்து இங்கிலாந்தின் முதலாவது ஆசியப் பிரதமர் எனும் சாதனையுடன் பதவிக்கு வந்தார் பிரித்தானிய ஆசியரான ரிஷி சுனாக்.
லிஸ் ட்ரஸ் எடுத்த பொருளாதார நகர்வுகளின் எதிர்மறை விளைவுகளை சரியாகக் கணித்தவர் ரிஷி சுனாக்.
பொருளாதாரக் கொள்கைகளில் நிபுணத்துவம் கொண்டிருந்து பணவீக்கத்தைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தார்.
இருப்பினும் அடுத்த தேர்தல் காலத்துக்கு முன்னால் பொருளாதாரத்தை அவரால் சீர் செய்ய போதுமான அவகாசம் இருக்கவில்லை.
விளைவு !
2024 இல் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி படு தோல்வியடைந்தது.
கியர் ஸ்டாமர் தலைமையில் புதிய அணுகுமுறைகளுடன் தேர்தல் களத்தில் குதித்த லேபர் கட்சி அமோக வெற்றியடைந்தது.
நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல இவ்வெற்றி லேபர் கட்சியின் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட மக்களின் விரக்தியின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும்.
பதவிக்கு வந்த லேபர் கட்சியின் முன்னால் மிகப்பெரிய சவால்கள் காத்துக் கிடந்தன.
பொருளாதார ஏணியின் அடிமட்டத்தில் இருக்கும் இங்கிலாந்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவையிருந்தது.
உழைக்கும் மக்களின் உயர்வினை பிரதானக் கொள்கையாக லேபர் கட்சி கொண்டுள்ளது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் பொருளாதாரத்தைச் சீர் செய்வதற்கு தேவைப்படும் நிதியை பொறுப்பான முறையில் கண்டெடுத்து செயற்பட வேண்டிய தேவை லேபர் கட்சிக்கு இருந்தது.
அதற்காக பல அரசாங்க திணைக்களங்களுக்கான செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையிருந்தது.
அதன் பொருட்டு லேபர் கட்சியின் நிதியமைச்சர் எடுத்த பல செயற்பாடுகள் லேபர் கட்சி உழைக்கும் மக்களின் கட்சி எனும் அபிப்பிராயத்துக்கு முரணாக இருந்தது.
நாட்டின் பொருளாதார வளத்தைச் சீர் செய்வதற்கு இவை அவசியமானவை என்னையும் , எனது அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் அடுத்த தேர்தலுக்கு முன்னால் கணிப்பீடு செய்யுங்கள் எனும் வாதத்தை முன் வைக்கிறார் பிரதமர் கியர் ஸ்டாமர்.
அவரது செல்வாக்கின் கருத்துக் கணிப்பு பெருமளவில் வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது.
எனக்கு எனது மீதான மக்களின் கருத்துக் கணிப்பை விட என் நாட்டின் முன்னேற்றமே முக்கியமானது என்கிறார் பிரதமர்.
இதற்கிடையில் சர்வதேச அளவிலான பிரச்சனைகளில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டைப் பற்றிய செயற்பாடுகளும் முன் நிற்கின்றன.
உக்ரைன், ரஸ்யாவுக்கிடையிலான மூன்று வருட யுத்தம்.
இஸ்ரேல் , பாலஸ்தீன மக்களுக்கிடையிலான போர் எனும் நிகழ்வுகள் துருத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தான் அமேரிக்காவில் மீண்டும் ட்ரம்ப் ஜனாதிபதியாகியுள்ளார்.
பல அதிரடி கொள்கைகளை விளைவுகளை எண்ணாமல் அடுத்தடுத்து அள்ளி வீசுகிறார் ட்ரம்ப்.
பக நாடுகளுக்கெதிராக வர்த்தக யுத்தத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப் அவர்களின் இங்கிலாந்துப் பொருட்களின் மீதான வரிவிதிப்பை மட்டுப்படுத்த வேண்டிய தேவை கியர் ஸ்டாமருக்கு உண்டு.
அதன் நிமித்தம் அதிபர் ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் லேபர் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளோடு முரண்பட்டாலும் அமேரிக்க ஜனாதிபதியோடு மேவிப் போக வேண்டிய தேவையுள்ளது.
இந்நிலையில் தான் அதிபர் ட்ரம்ப் உக்ரைன் – ரஸ்ய யுத்தத்தை நிறுத்த எடுத்த முயற்சிதில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுடன் எழுந்த பிரச்சனையை தீர்க்கும் நடுவராக கியர் ஸ்டாமர் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டது.
அந்த பாத்திரத்தைச் செவ்வனே நிறைவேற்றினார் எமது பிரதமர் என்றே சொல்ல வேண்டும்.
அத்தோடு உக்ரைன் நாட்டின் அதிபருக்கு சார்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஐரோப்பிய நாடுகளை ஓரணியில் ஒன்று திரட்டுவதில் தலைமைப் பொறுப்பெடுத்துச் செயலாற்றினார்.
இவரது செயற்பாட்டினால் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு இவ்வணியில் இப்போது 25 நாடுகள் இணைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
இவரது இந்த தலைமைத்துவ செயற்பாடு இங்கிலாந்தில் சரிந்து போயிருந்த இவரது செல்வாக்கை மக்களிடையே உயர்த்தியுள்ளது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
அடுத்து உள்நாட்டில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்த தேசிய மருத்துவ சேவை – என்.எச்.எஸ் மறுசீரமைக்கப்படுவது லேபர் கட்சியின் தேர்தல் பிரகடனங்களில் ஒன்றாக இருந்தது.
அதனை நோக்கிய செயற்பாடாக தேசிய மருத்துவ சேவை உலுக்கப்பட்டு வேரோடு மாற்றங்களுக்குள்காக்கபடும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பும் மக்களிடையேயும், அரசியல் அவதானிகளிடமும் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது.
அடுத்து சமூக திட்டமான நலிவுற்ற மக்களுக்கான அரசாங்க உதவிகளை மறு சீரமைக்கும் திட்டங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன.
இதைப்பற்றிய உத்தியோகபூர்வமான அறிக்கைகள் வெளிவராத நிலையில் வதந்திகளின் அடிப்படையில் பல ஊகங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த வண்ணமிருக்கிறது.
இதில் பல எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
இதையெல்லாம் கடபதற்கு எதிர்நீச்சலடிக்கும் வல்லமை கியர் ஸ்டாமருக்கு இருக்கிறதா ?
இதைப்பற்றிய அடுத்தடுத்த நகர்வுகளை இனிவரும் மடல்களில் பார்க்கலாமே!