அறுபதில் கல்யாணமா! (சிறுகதை)
நிர்மலா ராகவன்
வேதாவும் தினகரனும் ஒரே இடத்தில் வேலைபார்த்தவர்கள். குடும்ப பாரத்தைச் சுமப்பதால், அவளுக்குக் `கல்யாணம்’ என்ற எண்ணமே எழவில்லை என்றவரை அவருக்குத் தெரியும்.
அரசியல், சினிமா என்று பொது விஷயங்களைப்பற்றிப் பேசி நண்பர்கள் ஆனபோது, `நம் மனைவிக்கு இவளைப்போல் புத்திசாலித்தனமாகப் பேசத் தெரியவில்லையே!’ என்ற சிறு ஏக்கம் எழும். உடனே அடக்கிவிடுவார்.
“நான் எங்கம்மாவோட போயிடப்போறேன்,” என்றுவிட்டு, வேலைமாற்றம் வாங்கிக்கொண்டு வேதா போனபோது, `இவளுக்கு நம்மிடம் பிடித்தம் கிடையாதா!’ என்ற ஏமாற்றம் எழுந்தது.
ஒரு வாரம் சென்றபின், வேதா தொலைபேசியில் அழைத்தாள். “பொழுதே போகலே,” என்றாள்.
அப்படியே அவர்கள் தொடர்பு சில வருடங்கள் நீடித்தது. நோய்வாய்ப்பட்ட மனைவி கோகிலாவைப் பார்த்துக்கொள்வதைப்பற்றி தினகரன் விவரிக்க, ஆறுதலாக ஏதாவது கூறுவாள் வேதா.
மனைவி இறந்தபின்னும் இப்படியே பேசியபோதுதான் தினகரனுக்கு அந்த எண்ணம் எழுந்தது.
அவளை நேரில் சந்தித்தபோது, “நாம்ப ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா, வேதா மேடம்?” என்று கேட்டேவிட்டார்.
அவள் வெட்கப்படுவாள், குனிந்த தலை நிமிராது என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தவருக்கு ஏமாற்றம்.
“யோசிச்சுச் சொல்லட்டா?” என்று பதில் கேள்விதான் வந்தது.
`வருகிற வெள்ளிக்கிழமை நான் வேதாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போகிறேன்,’ என்று ஈ-மெயிலில் தெரிவித்ததோடு சரி. அதற்குப்பின் அப்பாவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அழைப்பெல்லாம் கிடையாது.
“இந்த வயசிலே அப்பாவுக்கு இப்படிப் புத்தி போக வேண்டாம்!” பொறுமினான் எம்.லிங்கம்.
“அறுபதாம் வயசில ரெண்டாவது கல்யாணம் நடக்காத அதிசயமா என்ன!” என்று அப்பாவுக்குப் பரிந்து பேசினான் அவனுடைய தம்பி எம்.தேவன். அண்ணன், தம்பி இருவருமே தம் பெயரின் முதல் எழுத்தான `மகா’வைச் சுருக்கி விட்டிருந்தார்கள்.
“அப்படி ஒரு கல்யாணம் மொதல் சம்சாரத்தோட நடக்கிற சமாசாரமில்ல? இந்த மனுசரோ, எப்ப நம்ப அம்மா சாகப்போறாங்கன்னு காத்துக்கிட்டு, இப்படி ஒரு காரியத்தில எறங்கிட்டாரு! அம்மா இருந்த எடத்திலே இன்னொருத்தி!“
புற்றுநோயால் அம்மா அவதிப்பட்டபோது அப்பாதானே கவனித்துக்கொண்டார்!
`இந்த வீட்டிலே நிம்மதியே இல்லே!’ என்றுவிட்டு, மனைவி, இரு குழந்தைகளுடன் வேற்றூருக்கு வேலை மாற்றம் வாங்கிக்கொண்டு, தனிக்குடித்தனம் போனவனுக்கு இந்தக் கரிசனம் எப்படி வந்தது?
“ஏண்டா, தேவா? அம்பது வயசுக்குமேல ஆனவளுக்கு குழந்தை பிறக்காது. இல்லே?” அண்ணன் சந்தேகத்தை வெளிப்படுத்தியபோது, தேவனுக்குச் சிரிப்பு வந்தது. அப்பாவின் சொந்த வீடு, வங்கியில் ரொக்கம்—இதற்கெல்லாம் பங்கு கேட்க இன்னொரு வாரிசு வந்துவிடப்போகிறதே என்ற பயம் இவனுக்கு!
“வயசான காலத்திலே அப்பாவுக்கு பேச்சுத்துணைக்கு ஒருத்தர் வேண்டியிருக்குபோல!”
“பேச ஆள் வேணுமானா, ஏதாவது கிளப்புக்குப் போறது!”
அயல்நாட்டில் குடியுரிமையுடன் வேலை பார்த்துவந்த இளையவனுக்கு அலுப்புத்தட்டியது. “என்ன இருந்தாலும், வீட்டிலே ஒருத்தர் கூடவே இருக்கிறமாதிரி ஆகுமா? யாருமில்லாத வீடு `ஹோ’ன்னு இருக்கும். உள்ளே நூழையவே அலுப்பா இருக்கும். அதோட, தலைவலி, காய்ச்சலுன்னு வந்தா, `இப்போ தேவலியா?’ன்னு அனுசரணையா கேக்க..”. தன் சொந்த அனுபவத்தை வார்த்தைகளாக வடித்தான்.
“அப்பாவை விட்டுக்குடுக்க மாட்டியே! எப்பவுமே நீதான் அவரோட செல்லப்பிள்ளை! ஒன்கூடப் பேச வந்தேன் பாரு!” வெறுப்புடன், தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான் லிங்கம்.
கடந்த இரண்டு நாட்களாக குழம்பியிருந்த மனதிற்குச் சற்று ஆறுதல் அளிப்பான் என்று தம்பியை அழைத்தது தண்டம்.
`யாரோ, எப்படியோ தொலையட்டும்!’ என்று, தொலைக்காட்சியை முடுக்கி, அதில் ஆழ்ந்துபோனான்.
`மணப்பெண் மாதிரியா வந்திருக்கிறாள்!’ முகம் சுளித்தது. பண்டிகை நாட்களில் பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு, அவர் காலில் விழுந்து நமஸ்கரித்த கோகிலா மனதில் வந்துபோனாள்.
“ரெடி?” என்ற வேதாவின் முகத்தில் ஆர்வமோ, துடிப்போ இல்லை. ஏதோ காரியத்தை முடிக்கும் அவசரம்தான் தெரிந்தது.
கசங்கிய காட்டன் புடவை. எப்போதும்போல், கழுத்தில் ஒரு சிறு சங்கிலி. கையில் கடிகாரம். வளை இல்லை. என்ன நாகரீகமோ!
அதற்குமேல் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. “அழகா, கல்யாணப்பொண்ணா லட்சணமா பட்டுப்புடவை, தங்க வளையலுன்னு நீ வரக்கூடாதா, வேதா?”
`நீங்க மட்டும் ஜரிகைக்கரை போட்ட பட்டு வேஷ்டியிலேயா வந்திருக்கீங்க? பேண்ட்-சட்டைதானே! ஒங்க லட்சணத்துக்கு இது போதும்!’ வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள் வேதா.
தான் எது சொன்னாலும், செய்தாலும் புன்னகையுடன் ஆமோதித்த நீண்டகால நண்பன் இல்லை இவர். `மனைவி என்றால் தனது ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டவள்’ என்று நம்பி நடக்கும் ஒரு சராசரி கணவர்.
`ஏமாந்துவிட்டேன்!’ என்றெழுந்த எண்ணத்தை ஒரு பெருமூச்சுடன் வெளியேற்றிவிட்டு, அவருக்குப்பின் நடந்தாள் புதுமனைவி.