-முனைவர் இரா. மதன் குமார் 

முன்னுரை

திருஞானசம்பந்தப்பெருமான், மொழியே மலராக, பதிகமே பாமாலையாக, ஞானமே மணமாகச் சொல்மாலை சூட்டிச் சிறந்தவர்; அரனடியை அடைதற்குரிய நன்னெறிகளைத் திருக்கடைக்காப்பாக அருளிச்செய்தவர்; அவர், ‘அன்பு நிறைந்த சிந்தையராவர்’ என அடியவர்களை ஏற்றிப் போற்றியவர்; அடியார்களின் மண்ணுலக மயக்கம் நீக்கிப் பிறவிப்பிணி தீர்க்கின்ற ஞானத்துணைவராகவும் வந்தருளியவர். அவரை நேரில் கண்டறிந்திராத நிலையிலும், அவர் மீதான அடிமைத்திறத்தில் சிறந்திருந்தவர், திருமயிலைச் சிவநேசர். அவரது அன்பின்மேன்மை, பிள்ளையாரின் செயற்கரிய சாதனைக்குக் கருவியாகின்ற தனித்தகுதியாக விளக்கம்பெற்றிருந்தது. ஆளுடைய பிள்ளையார், அதனை உலகறியச் செய்வதற்குப் பூம்பாவையை உயிருடன்  மீட்டருளிய அற்புதத்தைப் பெரியபுராணம் விளக்கியுரைக்கிறது. அப்புராணத்தைப்  பயில்கையில், பிள்ளையாரின் அருள்திறமும், சிவநேசரின் அடிமைத்திறமும் சைவப்பெருநெறியாக விளங்கவல்ல திறத்தினை உணரலாம். அவ்விரு பெருமக்களும் கொண்ட கொள்கையும், நின்ற நிலையும், புரிந்த சாதனையும், பெற்ற பேறும், ‘எம்கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற சைவப்பெருநெறிக்கு நிலைக்களமாகின்ற திறத்தினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

பேரன்பர் வழியே பெருஞ்சாதனை

சிவநேசர், தாம் சிவமெனவே போற்றுகின்ற திருஞானசம்பந்தப் பிள்ளையாரை கண்ணால் கண்டதில்லையாயினும், அவரது திருப்புகழைக் கேட்டு நாளும் திருஞானசம்பந்தம் பெற்றுய்ந்த சீர்மிகு அடியவராக விளங்கியவர்.

அடியார்த் திருக்கூட்டத்தின் வாயிலாக அவர்களது திருப்புகழைக் கேட்டு, ஞானப்பாலுண்ட பிள்ளையின்பால் சிவநேசர் மீளா அடிமைத்திறம் பூண்டார். திருமுகத்தைக் காணாமலேயே அடிமைத்திறம் பூண்ட அவரது உருகும் அன்பின் மனநிலையினை, ‘தாயாய் முலையைத் தருவானே’ (ஆனந்தமாலை: 5) என்னும் திருவாசகத்தொடரின் வழியே விளக்கலாம்.

பிறந்த பிள்ளையானது தாயின் அன்பினைப் பெறுவதற்கு, அதன் உள்ளிருந்து எழுகின்ற பசியுணர்வே தகுதியாகிறது. முகம் அறியாத அக்குழந்தையானது திருமுலைகளையே பற்றுக்கோடாகக் கொண்டு  பாலினைப்பெற்று,  உயிர்வாழ்கிறது. அத்தகைய குழந்தையாகவே சிவநேசர் விளங்கினார்.   ‘தனது ஞானாசிரியரது திருமுகத்தைக் கண்ணுற்றதில்லை’ என்ற நிலையிலும், அவர் காட்டிய  தொண்டுநெறியினைத் தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்டு, ‘அன்புநெறியே, சைவநெறி’ என்பதனை உலகுக்கு உணர்த்திக்காட்டினார். அம்மேன்மைநிலையே, திருமயிலையில் திருஞானசம்பந்தர்,  மாண்டவரையும் உயிருடன் எழுப்புகின்ற பெருஞ்சாதனைக்குச் சிவநேசர் கருவியாகின்ற பேற்றினைத் தந்தருளியது.

பெருகும் அன்பின் சிவநேசர்

திருமயிலை நகரின்கண் கடல் வணிகத்தில் சிறந்திருந்த சிவநேசர், இருநிதிச் செல்வமுடன், அருள்நிதிச் செல்வமும் தம்பால் குறைவற நிறைகின்ற பேறுபெற்றிருந்தார். அத்துடன், ‘தம்மை உள்ளவாறு அறிந்திருந்தார்; பொய்ம்மை நீக்கி, மெய்ப்பொருள் கொள்கின்ற உள்ளத்தராயிருந்தார்; சங்கரற்கு அடியவராகவும் செம்மையே புரிகின்ற மனத்தினராகவும், பிள்ளையாரிடத்தில் நீங்காத அடிமைத்திறமும் பூண்டிருந்தார்’.

தம்மை உள்ளவாறு அறிந்து தெளிதலாவது, ‘பகுத்தறிவின் பயன்கொண்டு, தமக்குரிய உண்மைச்சார்பினை அறிந்து தெளிதல். பசுக்களாகிய ஆன்மவர்க்கம், பதியாகிய பெருமானைச் சார்வதும், அச்சார்பினால் வீடுபேறடைவதும், அப்பெருநோக்கத்திற்காக வகுக்கப்பட்டவையே புவனபோகங்களும்’ என்று தெளிதலாகும். பொய்ம்மை நீக்கி, மெய்ப்பொருள் கொள்ளுதலாவது, ‘உலக மயக்காகிய பொய்ப்பொருள்களின் சார்பு நீங்கி, அடியார்ப்பணி முதலானவற்றின் வழியே, அரனடிக்கு அன்புபெருக்குதல்’. சங்கரற்கு அடிமை செய்தலாவது, ‘நிலைத்த பேரின்பப்பொருளாகிய பெருமானைப் பெற்றுய்வதற்குக் கருவியாகிய நிலைத்த பேரன்பிலிருந்து பிறழாமல் நிற்றல்’. இத்தகைய பெருங்குணச் செல்வராகிய சிவநேசரைத் தெய்வச் சேக்கிழார்பெருமான்,

  ‘தம்மை யுள்ளவா றறிந்தபின் சங்கரற் கடிமை
   மெய்மை யேசெயும் விருப்புடன் மிக்கதோ ரன்பாற்
   பொய்ம்மை நீக்கி மெய்ப்பொருளிது வெனக்கொளு முள்ளச்
   செம்மை யேபுரி மனத்தினர் சிவநேச ரென்பார்’ (திருஞான. புராணம்: பா.எண்: 1035) என்றுக் குறித்தருளியுள்ளார்.

உண்மை அன்பால் உருகிப் பெருகுவார்

சிவத்தின்பால் நிலைத்த பேரன்பின் அடையாளமாக, அடியாரிடத்தில் உருகுதலும், நெறியல்லாத நெறிகளில் மக்களை அலைக்கழிக்கின்ற பரசமயத்தாரின் அறியாமை கண்டு வெறுப்பு உடைமையும் சிவநேசரின் இயல்பாயின.

           ‘கற்றை வார்சடை முடியினா ரடியவர் கலப்பில்
            உற்ற செய்கையி லொழிவின்றி யுருகிய மனமும்
           பற்றி லாநெறிப் பரசம யங்களைப் பாற்றுஞ்
           செற்ற மேவிய சீலமு முடையராய்த் திகழ்வார்’ (மேலது புராணம்: பா.எண்: 1036)

சிவநேசரது இல்லத்தில் பொருள்செல்வமும், இடையறாது பிள்ளையார்பால் உருகுகின்ற அடிமைத்திறமும் நிறைந்து பெருகின. அம்மையிடத்தில் ஞானப்பாலுண்டும், தென்பாண்டி நாட்டில், சமண் சாய்த்தும், சைவம் தழைக்கப் பாடுகின்ற பிள்ளையாரின் பெருஞ்சிறப்பினை நாளும் அடியார்த் திருக்கூட்டத்தின் வழியே கேட்டு, அவர்பால் காதலாகிக் கசிபவரானார். அவர்தம் திருமுகத் தரிசனப்பேறு பெற்று, திருவடியிலேயே தொண்டு பூண்டிருக்க வேண்டும்’ என்ற பக்குவநிலைக்கு உயர்ந்தார்.

       ‘செல்வ மல்கிய சிரபுரத் தலைவர்சே வடிக்கீழ்
        எல்லை யில்லதோர் காதலி னிடையறா உணர்வால்
        அல்லு நண்பக லும்புரிந் தவரருட் டிறமே
        சொல்ல வுஞ்செயல் கேட்கவுந் தொழிலின ரானார்’.   (மேலது புராணம்: பா.எண்: 1038) 

பூமகள் எனவொரு பெண்கொடி உதித்தார்

‘பெருகும் அன்பில் மனம் விளங்கிச் சிறந்திருந்த சிவநேசர், மனை விளங்கத் தமக்கு மகவு வாய்க்கவேண்டும்’ என்று பெருமானைப் பணிந்தார். அதற்கு, நடமாடும் கோயிலென விளங்குகின்ற அடியவர்பால் ஆராத அன்பு பெருக்கிப் பெருந்தவம் புரிந்தார். என்றும் குறையாத அன்பில் அரனடியரைப் பேணிக்காத்தார். அன்பும், தொண்டும் அவர்தம் தவமாகிச் சிறந்தன. அத்தவப்பயனே, அவருக்குப் பூமகளை ஒத்த பெண்மகவு வாய்க்கும்படி அருளியது. அதற்கேற்ப, அப்பெண்பிள்ளைக்கு, ‘பூம்பாவை’ எனப் பெயரிட்டு மகிழ்ந்தார். அப்பெண்பிள்ளையும் சிவனன்பில் நாளும் தழைத்து வளர்ந்தது.

       ‘யாவ ரும்பெரு மகிழ்ச்சியா லின்புறப் பயந்த
        பாவை நல்லுறுப் பணிகிளர் பண்பெலா நோக்கி
பூவி னாளென வருதலிற் பூம்பாவை யென்றே
      மேவு நாமமும் விளம்பினர் புவியின்மேல் விளங்க’ (மேலது புராணம்: பா.எண்: 1044) என்றமைந்த பாடல் அடிகளில், சிவநேசர், பெண்பிள்ளைக்கு, ‘பூம்பாவை’ எனப் பெயரிட்டார் என்ற குறிப்பினை தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘புவிமேல் விளங்க’ என்னும் தொடரால் நிறைவுசெய்துள்ளார்.

‘இனி வரும்நாளில், பிள்ளையார், சிவநேசரின் குலம் முழுமைக்கும் ஞானத்துணைவராக எழுந்தருளவுள்ளார்; அத்துடன், பூம்பாவையின் பொருட்டுச் செயற்கரும் சாதனையும் பிள்ளையாரல் நிகழவுள்ளது. அவ்வருள் சிறப்புகளினால், ‘பூம்பாவை’ என்னும் திருப்பெயரும் புவி உள்ள அளவும் நின்று நிலைக்கவுள்ளது’ என்பது அவர் உணர்த்தக் கருதிய திருக்குறிப்பாகும்.

பெருகும் அன்பே பெருங்காப்பு

பொருள்செல்வம் பெருகுகின்றவேளையில், உலக இன்பங்களைத் துய்த்துத் திளைப்பதே உயிரியற்கை. ஆனால், சிவநேசரிடத்தில் பெருகிய செல்வம், பிள்ளையார்பால் பேரன்பாகவும், அரனடியார்பால் அடிமைத்தொண்டாகவும் மிளிர்ந்தன. நாளும் சிவஞானச்செல்வரை முன்னிட்டு, சிவநேசரின் சிந்தையில் நிறைந்த அடிமைத்திறம், அவர் வெல்லுதற்கு இயலாத உலகமயக்கங்களையும் வென்றேறத் துணையானது; உண்பனவும், உடுப்பனவும், உற்றசெல்வங்களும், பெற்ற மகளாகிய பூம்பாவையும், தாமும் இனி, ‘பிள்ளையாருக்கே அடிமை’ எனப் பணிந்துய்கின்ற பெரும்பற்றினை அவரிடத்தில் நிலைப்பெறச்செய்தது. வீடும் வேண்டாத விருப்பினராகிய சிவநேசர், பிள்ளையாரிடத்தில் கொண்ட அடிமைத்திறமானது,

       ‘சுற்ற நீடிய கிளையெலாஞ் சூழ்ந்துடன் கேட்பக்
       “கற்ற மாந்தர்வாழ் காழிநா டுடையவர்க் கடியேன்
       பெற்றெ டுத்தபூம் பாவையும் பிறங்கிய நிதியும்
       முற்று மென்னையுங் கொடுத்தனன் யா” னென்று மொழிந்தார். (மேலது புராணம்: பா.எண்: 1053)

சிந்தையால் மகிழ்ந்த சிவநேசர்

மேற்குறித்த பாடலில், சிவநேசரின் அடிமைத்திறத்தினைப் பாடியருளிய தெய்வச் சேக்கிழார்பெருமான், அடுத்த பாடலிலும் அவர்தம் அன்பின்திறத்தை அறிவுறுத்தியுள்ளார். ‘தம்மையும், தமது பெருஞ்செல்வமாகிய பூம்பாவையையும், பிள்ளையாரே ஆட்கொள்ள வல்லவர் என்ற அடிமைத்திறத்தில் சிவநேசர் சிந்தை மகிழ்ந்திருந்தார்’ எனச் சுட்டியுள்ளார்.

       ‘எல்லை யில்பெருங் களிப்பினா லிப்பரி சியம்பி
        முல்லை வென்ணகை முகிழ்முலை யாருடன் முடியா
        மல்கு செல்வத்தின் வளமையு மறையவர் புகலிச்
        செல்வ ரேயுடை யாரேனுஞ் சிந்தையான் மகிழ்ந்தார்’ (மேலது புராணம்: பா.எண்: 1054)

குமரகுருபரர், ‘செல்வம் என்பது, சிந்தையின் நிறைவே’ (சிதம்.மும்.கோவை:26) என்றார்.  அதற்குத் தமது வாழ்க்கையையே இலக்கணமாக்கித் தந்தவர், சிவநேசர். அவர், பிள்ளையாரிடத்தில் பெருகும் அன்பின் சீர்மையராகி,   ‘இடரினும் தளரினும், எனதுறு நோய் தொடரினும், உமதுகழலே மறவாது பணிந்தெழுவேன்’ என்ற நிலைநின்றார்; அன்பகலாத அடிமைத்திறமென்னும் அருள்செல்வம் கொண்டு, தனது உயிரைப் பிணித்த பிறப்பு என்னும் வறுமையினை  நீக்கிச் சிறந்தார்.  

சிவநேசர் பொருட்டு பெருஞ்சாதனை

நம்மைப்போன்று குறிக்கோளற்று உலகியலில் திளைப்போருக்கே இறப்பென்பது துன்பம் தருவதாகின்றது. மாறாக, சிவநேசரைப் போன்று, உலகியலை வென்ற அடியவர்களால் மரணத்தையும் வெல்லமுடிகிறது. ஆயினும், அவரைப் போன்ற கொள்கைச் சான்றோரின் இடர்களைக் களைவதையே பெருமான் தனது திருவருள் கொள்கையாகக் கொண்டவன்.
‘கொள்கையினால் உயர்ந்த நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே’ (1:52:1) என்பது, ஞானப்பிள்ளையாரின் திருவாக்கு. அது பொய்க்காதவண்ணம், மாண்டு, எலும்பாகி மிஞ்சிய பூம்பாவையையும் பிழைக்கச் செய்கின்ற பேரருளாடலை பெருமான், பிள்ளையாரைக் கொண்டு திருமயிலையில் நிகழச்செய்தான்.

      ‘எங்கொங்கை நின்னப்ப ரல்லார்தோள் சேரற்க
        எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க (திருவெம்பாவை: 19) என்று பூம்பாவையைப் பிள்ளையாருக்கு உரியவராகக் கொடுத்துய்வதே தமது பெருங்கடமையாக வாழ்ந்தார்.

அப்பெண்பிள்ளையும் அந்நாளில், ஏழாண்டு பருவத்தினளாக இருந்தாள். ஒருநாள், தனது வளமனையிலிருந்த மாதவிப் பந்தலிலிருந்து மலர்க் கொய்ய முயன்றாள். அவ்வேளையில், முள் எயிற்று அரவொன்று அவளது தளிர்க்கரத்தில் பல்பதித்தது. விடவேகம் அவள் உடலில் பாய்ந்ததனால், அவளும் சோர்ந்து வீழ்ந்தாள். பெற்றோரும், உற்றோரும் சூழ்ந்திருந்து விடம் நீக்கப் பல்வகைச் செயலாற்றினர்.  ‘அருமருந்தால் ஆவி மீட்டு அவளைக் காப்போருக்கு அருஞ்செல்வம் பரிசாகும்’ எனப் பறையும் அறிவித்தனர்; மூன்று நாள்கள், அவளுடலினை மாடத்தில் வைத்துக்காத்தனர்.  ஆயினும், பிள்ளையாரின் திருவாக்கினால் அன்றி, அவள் மீண்டெழுதல் இல்லை என்ற நிலையினால், சிவநேசரின் பிற முயற்சிகள் பயனற்றுப் போயின.

பெற்றபிள்ளையினை இழந்தது சிவநேசருக்குப் பெருஞ்சோகமே. அத்துன்பத்திலும் அவர், ‘நாள்தவறாது, பிள்ளையாரின் அரும்புகழைப் பேசியும், கேட்டும், சிந்தித்தும் அன்பு பெருக்கத் தவறவில்லை; அவளுக்கு ஏற்பட்ட பெருந்துன்பத்திலிருந்து மீண்டுவரத் திருவருள் துணைநிற்காது போயிற்றே’ என்றும் கலங்கவில்லை.

இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே’            (குழைத்தபத்து: 7) என்ற ஞானத்தெளிவுடன் விளங்கினார். பூம்பாவைக்கு,  ஞானப்பிள்ளையாரை நாயகனாக்குகின்ற  திருநோக்கத்திற்கு முட்டுப்பாடு நிகழ்ந்ததாகவே கருதிச் சிவநேசர் கவலையுற்றார்.

  ‘துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
   இன்பம் பயக்கும் வினை’   (திருக்குறள்: வினைத்திட்பம்: 9)

என்பதற்கு இலக்கணமாக, ‘பூம்பாவையின் பொருட்டு இனித் தாம் கலங்குவதில்லை’ எனத் தெளிந்தார்; சொல்லிய வண்ணமே செய்கின்ற அடிமைத்திறத்தில் நிலைமாறாதிருந்தார்.

‘பிள்ளையாரே, பூம்பாவையின் எலும்பினையும் ஆள்வதற்கு உரிமை உடையவர்’  எனத் தெளிந்த சிந்தையில், எலும்பினைக் குடத்திலிட்டு, அதனைப் பூம்பாவை என்றே பேணத் துணிந்தார். ‘பூம்பாவை மாண்டபோதில், பிள்ளையாரின் திருவருள் நின்று காக்கவில்லையே’ என்றோ, ‘அவளது எலும்பையும், சாம்பலையும் பலநாளும் பாதுகாத்தற்கு வாய்ப்பில்லை; ஆதலால், தாமே பிள்ளையாரைத் தேடிச் சென்று அதனை அவர்பால் பணிப்பேன் என்றோ, சிவநேசர் தன்முனைப்புக் கொள்ளவில்லை. மாறாக, ‘பூம்பாவையின் இறப்பும் திருவருளாணை வழியே நிகழ்ந்தது’ என்பதையும், ‘அவளது சாம்பலினைப் பிள்ளையாரிடத்தில் ஒப்படைத்தற்குரிய காலமும், திருவருள் வழியே வாய்க்கும்’ என்பதும் அவர்தம் ஞானத்தெளிவாக விளங்கின. அதனால் சிவநேசரை, தெய்வச் சேக்கிழார்பெருமான், ‘சீரின் மன்னிய சிவநேசர்’ எனப் போற்றியுரைத்துள்ளார்.

       ‘சீரின் மன்னிய சிவநேசர் கண்டுள மயங்கிக்
        காரின் மல்கிய சோலைசூழ் கழுமலத் தலைவர்
        சாரு மவ்வள வும்முட றழலிடை யடக்கிச்
        சேர வென்பொடு சாம்பல்சே மிப்பது தெளிவார்’ (மேலது புராணம்: பா.எண்: 1065)

சிவநேசர் தந்தையாக இருந்து கொண்டிருந்த பிள்ளைப்பாசம் என்கின்ற மயக்கத்தை, ‘கண்டு உளம் மயங்கினார்’ என்பதனை, மேற்கண்ட பாடலின் முதல் அடி குறிக்கிறது; அவரே, பிள்ளையார்பால் பெருகும் அன்பின் சீரடியவராகி, சிந்தைதெளிந்த ஞானத்தெளிவைப் பாடலின் இறுதியடியும் குறிக்கிறது.

இன்னருள் விளைகின்ற காலம்

சிவநேசர், தனது உடற்பிள்ளையாகிய பூம்பாவையின் முகம்காண இயலாத சோகத்தை, உயிர்ப் பிள்ளையாகிய திருஞானசம்பந்தரின் திருமுகத் திருக்காட்சியால் போக்கியருளத் திருவருள் கூட்டியது. பிள்ளையார், திருப்பாண்டி நாட்டில் சமணத்தின் வேரறுத்து, திருநீற்றுச் செல்வத்தால் சைவத்தை நிலைக்கச் செய்து, தொண்டைநாட்டின் திருப்பதிகளில் திருவொற்றியூரை வணங்கிய பின்னர், திருமயிலைக்கு எழுந்தருளத் திருவருள் கூட்டுவித்தது.  அடியவர்கள், அவர்தம் வருகையினைக் குறித்துக் கூறக்கேட்ட சிவநேசர், அளவிலா மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். அவ்வருஞ் செய்தியினை வாயாரப் புகன்ற அடியவர்களுக்குப் பொன்னும், மணியும் பரிசளித்தார்.  திருவொற்றியூர் முதலாக, திருமயிலை வரையில் அலங்கரித்தார். இருநகரங்களுக்கிடையிலும், பத்து நாழிகையளவு பயணத் தொலைவு உண்டு. ஒருநாழிகை, இருபத்துநான்கு நிமிடங்கள் கொண்டது.  அவ்வகையில், பிள்ளையார் பயணிக்கவுள்ள நான்கு மணிநேரப் பயணத்தொலைவுக்கும், பந்தலும், விதானமும் அமைத்து அவரை வரவேற்பதற்குச் சிவநேசர் ஆணையிட்டார். நீண்ட இத்தொலைவு, பிள்ளையாரை எண்ணுங்கால், சிவநேசரின் உள்ளத்தில் நீள்கின்ற அடிமைத்திறத்தின் அளவுக்குச் சான்று என்பார், உரையாசிரியர் சிவக்கவிமணி.

திருவொற்றியூரளவும்–திருமயிலாபுரியினின்றும் திருவொற்றியூர் வரையும்; இது பத்து நாழிகையளவு கொண்ட தூரம்; இவரது அன்பு நீண்டுசெல்லும் தன்மை குறித்தது’ (பக்.: 667) என்னும் உரைவிளக்கம், அடியார்செய்கைகள், ஆடம்பரத்தின் வெளிப்பாடாக அல்லாமல், அன்பின் வெளிப்பாடாகின்ற வகையில் மேம்பட்ட பக்திகொள்ளுதலை வலியுறுத்துகிறது.

ஆறு சூடினாரின் திருமகனால் அருஞ்சாதனை

ஆறுசூடியின் மகனாகிய பிள்ளையார், பரசமயத் தூரறுத்து, சைவப்பெருநெறி காட்ட வந்தவர். அவர், அடியார்த் திருக்கூட்டத்துடன் திருமயிலையை நோக்கி எழுந்தருளி வருவதனை அறிந்து இன்புற்ற சிவநேசர், அவர்தம் வருகை நிகழ்கின்ற திருத்திசையில் வீழ்ந்து அடிவணங்கினார். அவ்விடத்தை நோக்கிச் சிவிகையில் பயணம் மேற்கொண்டிருந்த பிள்ளையாரின் திருவுள்ளத்திலும் சிவநேசரின் அடிமைத்திறம், பெருகும் அன்பிலான  பூரிப்பினை விளைவித்தது. சிவநேசருக்கு அருள்புரிகின்ற பெருநோக்கு, பரசமயத் தூரறுப்பினைத் தொண்டைநாட்டிலும் பிள்ளையார் நிகழ்த்திக்காட்டுவதாகிய, செயற்கரும் சாதனையாக மலர்ந்தது.

இன்னருள் வணிகர்மேல் விளைதல்

’கூற்றடர்த்தவர் கோயில்’ என்றும்,  ‘பெருமயானத்து நடம் புரிவார் பெருங்கோயில்’ என்றும், திருப்பெயர்க்கொண்ட கபாலீச்சரத்தில், பிள்ளையார் காலனையும் பழிக்கின்ற அருளாடல் நிகழ்வதற்குரிய காலம் வாய்த்தது. பிள்ளையார், திருமயிலையின் கபாலீச்சரத்தை வணங்கி, அதன் மதில்புறத்தே வந்தணைந்தார். அவ்வேளையில், பிள்ளையாரின் திருநோக்கம், சிவநேசர்பால் சென்றது. அவ்வருள் நோக்கத்துடன், சிவநேசரை நோக்கி, ‘அடியாரிடத்திலான அடிமைத்திறமே, தவம் பெருக்குகின்ற சிவவாழ்வு’ என நிலைத்திருக்கின்ற நல்லுணர்வீர்!,  ‘மகளது சாம்பல் அடங்கிய குடத்தினை, உலகறிய இவ்விடத்தில் கொண்டுவந்து வைக்கவும்!’ என ஆணை வழங்கினார்.

மண்ணில் பிறந்தார் பெறும் பயன்

அடியவர்கள், சைவப்பெருநிதியாக விளங்க வல்லவர்கள். அவர்களின் நடுவே, என்றும் நீங்காத இடம்கொண்டு பெருமானும், அருள்நிதியாக விளங்கியருள்கின்றான். பற்று ஒழித்தல், பக்திநெறியின் அடிப்படையாயினும், சிந்தையை மடைமாற்றி அதில் நிலைத்திருக்க, அணுப்பொழுதும் இறைவனை மறவாமை என்பதே அடிப்படையாகும். அதற்கு, அடியாருடனான சூழலே களமாகும். அடியவர்களே, பெருமானின் பெரும்புகழைப் பேசிப்பேசி, ‘அன்பர்பணியே அரன்பணி’ என்று பண்படுவர்.

 ‘சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே றிருந்துன் திருநாமம்        தரிப்பார்’          (கோயில் மூத்த திருப்பதிகம்: 9)

என்று பண்பட்ட அடியாருடனான நன்நெறியினை வலியுறுத்தவேண்டி மணிவாசகப்பெருமான்,

’இறைசீர் கற்று ஆங்கு அவன், கழல் பேணினரொடும் கூடுமின் கலந்தே’ (உயிருண்னிப்பத்து: 5) என்றார். அத்துடன் அப்பேறு தமக்கும் வாய்த்தருள வேண்டி இறைவனிடத்தில்,

‘உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்’ (கோயில் மூத்த திருப்பதிகம்: 1) என்று வேண்டினார்.

 மாகேச்சுர பூசையும்,  விழாப்பொலிவும்

மாகேச்சுரர்களாகிய அடியவர்களை நிந்தித்தல், ‘பெருநரகில் உழல்கின்ற  பெருந்துன்பத்தினைத் தரும்’ (திருமந்திரம்: 520) என்பதனைத் திருமூலர் விளக்கியுள்ளார். அத்துடன், ‘உண்மையான சிவஞானிபால் நம்மை ஒப்புக்கொடுத்த நொடிப்பொழுதிலேயே சிவபோகம் வாய்க்கும்’ (மேலது, பாடல்: 521) என்பார். ‘அடியார்’ எனப் பொய்வேடம் பூண்டு வந்தாரிடத்திலும், உண்மை அன்புகொண்டு பணிந்த மெய்ப்பொருள் நாயனாரும், ஏனாதிநாத நாயனாரும் திருவடிப்பேறு பெற்றுய்ந்த அருஞ்சிறப்பு, அடியாரைப் பணிவதன் அருள்சிறப்பினை விளக்கும். அவ்வண்ணம், அடியார்த் திருத்தொண்டால் அளவிலாத அருள்பெற்ற அன்பர்கள் எனப் பெரியபுராணமும், பத்தொன்பது அடியவரைப் போற்றியுரைக்கிறது.

அளவில்லாத பெருமையுடைய அடியவர்க்கு உணவிடுதலாகிய நன்னெறியும், அவர்களுடன் கூடியிருந்து, பெருமானைக் கண்ணாரக் கண்டுய்வதற்குமான விழாக்களை, ‘நல்விழா’ என்பார் தெய்வச் சேக்கிழார்பெருமான். ‘சிவபெருமானது விழா ஒன்றே எஞ்ஞான்றும் பெருநலமாகிய வீடுபேற்றுக்கு உதவுவது என்பார் நல்விழா என்றார்’ என்பது உரையாசிரியர் சிவக்கவிமணி அவர்களின் குறிப்பு (பக்.,: 687).

திருவிழாவில் அடியாருடன் கூடி, பெருமானின் திருக்காட்சியைக் கண்ணாரக் காண்பதே, ‘மகிழ் செல்வம்’ (திருநாவு. புராணம்: 235) என்பார் தெய்வச் சேக்கிழார்பெருமான்.  இக்கருத்துடைய பிள்ளையாரும், தாம் காணுதற்குத் திருவருள் கூட்டாத, திருவாரூர் திருவாதிரைத் திருவிழாச் சிறப்பினைத் தமக்குக் கூறியருள  அப்பர்பெருமானை வேண்டினார். அப்பெருவிழாச் சிறப்புக்கு, ‘முத்துவிதான மணிப்பொற்கவரி’ (4:21) என்னும் தேவாரம் திருச்சான்றாகிறது. அவ்வாறு பெருமானின் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்க்கின்ற அடியவர்கள்,  வினையொழிந்து, சிந்தைமகிழலாம்’ என்பது பிள்ளையாரின் திருவருளாணை.

  ‘இடிகொண்முழ வோசையெழி லார்செய்தொழி
   லாளர்விழ மல்கச்
   செடிகொள்வினை யகலமன மினியவர்கள்’       (3:83:5)

‘அடியவர்கள், திருவிழாப் பொலிவு கண்டார்த்து,  சித்தம் அழகிய பெருமக்கள்’ என மிளிர்வர் எனப் பிள்ளையார் போற்றியுள்ளார். அடியவர்களுக்கு உணவிடுதலாகிய மாகேச்சுரப் பூசைக்கு முட்டுப்பாடு நேர்ந்தநிலையில், திருவீழிமிழலைப் பெருமானிடத்தில் படிக்காசு பெற்று அதனைச் சிறப்புறச் செய்தருளிய சிறப்பும் பிள்ளையாருக்கு உண்டு.

மேற்சுட்டப்பெற்ற நன்னெறிகள், இந்நாளிலும் சைவம் தழைக்கப் பிள்ளையாரின் அருளாணையாக அருளப்பட்டவை. அப்பெருநெறியினை உலகவர்க்குச் சாற்றுகின்ற திருவருள் ஆணையாக, பூம்பாவைப் பாட்டு எழுந்த வரலாற்றினை தெய்வச் சேக்கிழார்பெருமான் புராணத்தில் குறித்தருளியுள்ளார்.

      ‘மண்ணி னிற்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
     அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல்
     கன்ணி நாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்
  உண்மை யாமெனி லுலகர்முன் வரு” கென வுரைப்பார்’  (திருஞான. புராணம்: பா.எண்: 1087)

காணாது, “போதியோ” பூம்பாவாய்

கபாலீச்சரத்துத் திருக்கோயிலின் மதில்புறத்துத் திருவாயிலின் முன்னே வைக்கப்பெற்றிருந்த சாம்பற் குடத்தின் மீது பிள்ளையார் தமது திருக்கண் நோக்கம் செலுத்தினார்;  ‘மட்டிட்ட புன்னை’ எனப் பாடத் தொடங்கினார். கபாலீச்சரத்துத் திருக்கோயிலில் பொலிவுற நிகழ்வதாகிய திருவிழாக்களில், அடியார்க்குத் திருவமுது படைத்தலாகிய மாகேச்சுரபூசையானது ஏற்றம் பெற்று நிகழ்வதனைப் போற்றி முதல் திருப்பாட்டினைத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து, கபாலீச்சரத்துப் பெருமான், தம்மடியார் கண்டுய்வதன்பொருட்டுக் கொண்டருள்கின்ற பெருவிழாக்களை ஒவ்வொரு திருப்பாடலிலும் வரிசைப்படுத்தினார். ‘அப்பெருவிழாக்களைக் காணாது போதியோ பூம்பாவாய்?’ எனப் பூம்பாவையை வினவினார்.  ஐப்பசித் திருவோணத் திருவிழா, திருக்கார்த்திகைத் திருவிளக்கீடு, மார்கழித் திருவாதிரைத் திருவிழா, தைப்பூசப் பெருவிழா, மாசிமகக் கடலாடல், பங்குனிஉத்திரப் பெருவிழா, சித்திரை அட்டமித் திருவிழா, வைகாசி ஊஞ்சலாட்டுப் பெருவிழா மற்றும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களின் பெருஞ்சாந்திப் பெருவிழாக்கள் எனப் பெரும்பொலிவுடன் நிகழ்கின்ற திருவிழாக்களின் உயர்வும், அவற்றில் அடியார்களின் ஆரவாரச் சிறப்பும் விளங்கத் திருப்பதிகத்தை எடுத்துரைத்தார். ‘இத்திருவிழாக்களின் அருள்காட்சிகளைக் காணாமல் நீ மறைந்ததும் முறையோ?’  எனத் திருவருளை முன்னிட்டுப் பூம்பாவையிடத்தில் முறையிடுபவராகப் பாடல்கள்தொறும், ‘காணாது போதியோ பூம்பாவாய்!’ என்னும் விளியமைத்துப் பத்தாம் பாடலையும் பிள்ளையார் நிறைவு செய்தருளினார்; பிள்ளையார் பூம்பாவையை எழுப்புதலும் இயலாது’ என்று அதுகாறும் எண்ணியிருந்த சமண, பௌத்தரின் எண்ணம் பொய்த்தது. அவ்வேளையில், பத்துத் திங்கள், தாயின் கருவிலிருந்து வளர்ந்து வெளிவருகின்ற பிள்ளையைப்போல, பூம்பாவை மீண்டும் உயிர்ப்பெற்று எழுந்தாள். சாம்பல் குடம் உடைந்து, பன்னிரண்டாண்டு பருவத்தின் அருள்பேரழகுடையவளாக வெளிப்பட்டுவந்த அவளது எழிற்கோலப் பொலிவினைப் புராணத்தின் வழி உணரலாம்.

மெய்த்திரு வாக்கு என்னும் அமுதம்

சிவஞானச்செல்வராகிய பிள்ளையார், ‘அடியாரின் அடிமைத்திறம், மாண்டாரையும் மீட்டருளவல்லது’ என்னும் சைவப்பெருநெறியினைப்  பரசமயத்தார் உள்ளிட்ட உலகத்தாருக்கும் எடுத்துரைக்கப் பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்தருளினார். செயற்கரிய அச்செயலுக்கு, பெரும்பொருளல்லாத எலும்பும், சாம்பலும் கருவியாயின. அதுபோன்றே, திருவருளை முன்னிட்டுப் பிள்ளையார் பாடியருளிய திருப்பாடல்களில் எழுந்த, ‘போதியோ’ என்னும் சொல்லானது  மந்திரமாகச் செயல்பட்டுப் பூம்பாவையை உயிருடன் எழுப்பியது. அவ்வுயர்வு கருதியே, தெய்வச் சேக்கிழார்பெருமானும் ‘போதியோ’ என்னும் சொல்லை, ‘மெய்த்திரு வாக்கென்னும் அமுதம்’ எனப் போற்றியுள்ளார். அது, இரண்டு பக்கத்திலும், ‘ஓம்’ என்னும் பிரணவத்தைக் கொண்டெழுந்த ‘மூவெழுத்து மந்திரம்’ என்பார் உரையாசிரியர் சிவக்கவிமணி. ‘அதுவே வருக என்ற ஆணையாகிய சிவசிற்சத்தியை உள்ளிட்டு அருளப்பட்டமையால் என்க’ (பக்.,: 688) என்பது உரைக்குறிப்பு.

 ‘மன்னு வார்சடை யாரைமுன் றொழுது “மட் டிட்ட”
  என்னு நற்பதி கத்தினிற் “போதியோ” வென்னும்
  அன்ன மெய்த்திரு வாக்கெனு மமுதமவ் வங்கந்
  துன்ன வந்துவந் துருவமாய்த் தொக்கதக் குடத்துள்’ (மேலது புராணம்: பா.எண்: 1088)

முடிவுரை

பெருகுகின்ற செல்வமும், பேரன்பின் திறமும் அடியவர்களுக்காக அமையுமாயின், அதுவே அன்பு மாறாத அடிமைத்திறமாகும். அதன்வழியே, உலகத்து இயற்கையாகிய மரணத்தையும் வென்றேறலாம். அதற்கு, சிவநேசர் பிள்ளையாரிடத்தில் கொண்ட அடிமைத்திறம் சான்றாகிறது.  பூம்பாவையை மீட்டருளத் தாம் கருவியான நிலையிலும், தன்முனைப்பற்று, திருவருளாணை வழியே பெருமானைப் பணிந்துநின்றவர், பிள்ளையார்.  ‘தம்பிரான் கருணையின் பெருமையே கருதி’யும்,  (1085); ‘மன்னு வார்சடையாரை முன்தொழுது’ம் (1088) செயற்கரிய சாதனையை நிகழ்த்தினார். அவரின் செயல்பாடு, மெய்ஞ்ஞானத்தால் நிகழ்கின்ற அருள்வன்மைக்குச்  சான்று. அவ்வாறு, சிவநேசருக்கு வாய்த்த அடிமைத்திறத்துடன், பிள்ளையார் முதலான ஞானாசாரியார்களது அருள்திறமும் ஒருங்கே பெருகுகின்ற சிவஞானப்பேற்றுக்கு, ‘பூம்பாவைப்பாட்டு’ துணையாகிறது. அத்திருப்பதிக நன்னெறி நமது வாழ்வியலானால், ‘வீடுபேறுற்று, சிவகணத்தவரோடும் கூடி நிலைத்து வாழலாம்’ என்பது பிள்ளையாரின் திருவாக்கு.

ஆய்வுத்துணை நூல்கள்

  1. பெரியபுராணம்- தொகுதி:5 – சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணியனார் (உ.ஆசி.,),  பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21. பதிப்பு ஆண்டு: ஏப்ரல், 2018.
  1. பெரியபுராணம்- தொகுதி:3 – சிவக்கவிமணி சி.கே.சுப்ரமணியனார் (உ.ஆசி.,),  பன்னிரு திருமுறை ஆய்வுமையம், கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21. பதிப்பு ஆண்டு: திசம்பர், 2017.
  1. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை),பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்), கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.
  1. திருமந்திரம் – திரு ப. இராமநாத பிள்ளை (உ.ஆசி.,), கழக வெளியீடு-எட்டாம் பதிப்பு: செப்டம்பர், 1992.
  1. திருவாசகம் – சென்னை சைவசித்தாந்தப் பெருமன்ற வெளியீடு, நான்காம் பதிப்பு: 1999.
  1. திருக்குறள் – சிற்பி பாலசுப்பிரமணியனார் (உ.ஆசி.,), தாமரை பதிப்பகம், சென்னை.  இரண்டாம் பதிப்பு: அக்டோபர், 2014.
  1. ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, இரண்டாம் பதிப்பு: அக்டோபர், 2004.

*****

கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.