அ. இராஜகோபாலன்

                 ‘பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை’  (குறள் 252) என்கிற வள்ளுவரின், சொற்கோவைக்குப் பொருளெழுதுகிற பரிமேலழகர் பொருள் பயனிழத்தற்குக் காரணம் காவாமை என்கிறார்.

        வள்ளுவர் கூற்றை ஆழ்ந்து சிந்திக்கிறவர்க்கு , ‘பொருளாட்சி’ என்பதும், ‘பொருள் போற்றல்’ என்பதும், மிக்க பொருளாழம் கொண்டவை என்பது  புலப்படும். பொருளை ஆக்குகிற வழிகளும், அதனைப் போற்றிக்காக்கிற முறைகளும், பொருளைப் பயன் கொள்ளுதலும் ஆகிய எல்லாம் அவற்றுள் அடங்கும். போற்றுதல் என்பது, காத்தலை மட்டுமின்றி, அதை வளர்த்து அதிகரிக்கச் செய்தலையும் உள்ளடக்கியதே. பொருளைப் போற்றுதல் பற்றி வேறோரிடத்தில் பேசுகிற வள்ளுவர்,

                    ‘ஆற்றின் அளவறிந்து ஈக, அது பொருள்

         போற்றி வழங்கும் நெறி’

என்று ஈதலுக்குக் கூடக் கட்டுப்பாடு விதிக்கிறார்.

ஒரு ஆய்க்குலப் பெண். இன்னும் இருள் விலகாத விடியற்காலை நேரம். அப்போதே எழுந்து, நன்கு உறைந்த தயிரை வெண்ணெய் திரண்டு வருகிற வரை, மத்து கொண்டு கடைகிறாள். பின்பு, தலையில் சும்மாடு அணிந்து, தயிரும், மோரும், வெண்ணையும், நெய்யும், எடுத்துக்கொண்டு வீதிகளில் சென்று, விற்று வருகிறாள்.. அந்த வருமானத்தில் வாழ்கிற நல்லதொரு வாழ்க்கையை அமைத்துகொண்டிருக்கிறாள்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.

என்கிறார் வள்ளுவர். அப்படியல்லா த,  அவளின் ஆற்ற வருந்தும் வருத்தம் பலராலும் பாராட்டப்படக்கூடியது. அனுபவம் மிகுந்தவளாக அந்தத் தொழிலை அவள் மிகுந்த நேர்த்தியுடன் நடத்திவருவது பெரும்பாணாற்றுப்படைப் பாடல் வரிகளில் காட்சிப்படுத்தப்படுகிறது.

நள்ளிருள் விடியல் புள் எழப் போகி

புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி

ஆம்பி வால்முகை யன்ன கூம்புமுகிழ்

உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து

புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட் டிரீஇ

நாள் மோர் மாறும் நன்மா மேனிச்

சிறுகுழை துயல்வரும் காதின் பணைத்தோள்

குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்

அளைவிலை யுணவின் கிளையுடன் அருத்தி

நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

எருமை நல்லான் கருநாகு பெறூஉம்

மடிவாய்க் கோவலர் குடி…

ஏற்படுகிற  செலவினங்களையும், வருமானத்தையும், எஞ்சுகிற லாபத்தையும் கணக்கில் கொண்டு,  செய்து  வரப்படுகிற தொழில் .

அழிவதூவு மாவதூவு மாகி வழிபயக்கும்

ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

என்கிற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க முறையாகச் செய்துவருகிற தொழில். லாபம் கிடைக்கிறது. கிடைக்கிற லாபத்தைக் கொண்டு இல்லறம் நடக்கிறது. ஈதலும் துய்த்தலும் ஆக,  ‘அளைவிலை யுணவின் கிளையுடன் அருத்தி’  சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகி,  செல்வத்தின் பயன் நுகரப்படுகிறது. அதிலும் போகாறு அகலாதபடி நடத்தப்படுகிற இல்லற நிதி  நிர்வாகம்.  அளவறிந்து வாழ்கிற வாழ்க்கை.

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்

றுண்டாகச் செய்வான் வினை.

என்ற குறளில் வள்ளுவர், ‘தன் கைத்து ஒன்று’  என்று தன் கைப்பொருளாகிய (Owned Funds) மூலதனத்தை பற்றிப் பேசுகிறார். ‘தன்கைத்து எல்லாம் உண்டாகச் செய்வான் வினை’ என்னாது ‘தன்கைத்து ஒன்று உண்டாகச் செய்வான் வினை. என்றதால் மூலதனத்தில் தன் கைப்பொருள் ஒரு பகுதியாகவும்,  பிறர் கைப்பொருள் (Borrowed Funds) ஒருபகுதியாகவும் கொண்டு வினையாற்றுதல் வள்ளுவருக்கு உடன்பாடு என்றும். வள்ளுவர் இந்தக் குறளில் கடனுக்கும் மூலதனத்துக்குமான  விகிதம் (Debt – Equity Ratio) பற்றிப் பேசியிருப்பதாக. பேராசிரியர் எஸ். வேலாயுதம் அவர்கள் குறிப்பிடுகிறார்.  நெய் விற்றுக் கிடைப்பதில் உற்பத்திச் செலவு போக எஞ்சுகிற வருவாயை எதிர்காலத்தில் பயன்கொள்ளுகிற வகையில் சேமித்து வைக்கிறாளாம். வியாபாரத்தின் விரிவாக்கத்திற்குத் தேவையான முழுத்தொகையையும் தற்காலத்து  வங்கிகளில் கூடக் கடனாகப் பெறமுடியாது.  கடன் பெறுவதற்குக், கைமுதலாக (Margin money ) ஒரு தொகை செலுத்தப்பட வேண்டியதிருக்கும். ‘தன் கைப்பொருளாகிய’  பணத்தைப் பெரும்பகுதியாகக் கொண்டே தொழில் விரிவாக்கம் நிகழுமானால் நன்மை பயக்கும். சேமித்து வைத்திருக்கிற தொகை அதற்குப் பயன்பட வேண்டும் என்பதே நோக்கம்.

                பெண்கள் பொதுவாக நகைகள் வாங்கி அணிந்து கொள்வதில் மகிழ்ச்சி யடைவார்கள். ஆனால் இவள் வித்தியாசமானவள். சேர்த்துவைக்கிற பணத்தில் பொன் நகைகள் வாங்காமல், அந்தப்பணத்தைக் கறவை மாடுகள் வாங்குவதற்கு வைத்திருக்கிறாளாம். வியாபாரத்தின் விரிவாக்கத்திற்கு மேலும் பல கறவை மாடுகள் வாங்க வேண்டியிருக்குமே.  சேமித்த பணம் பொன் நகைகளில் இடப்படுகிற போது அது தோற்றப்பொலிவைத் தருமே யல்லாது தொடர்ந்து வருமானத்தை ஈட்டிதருவதாக இராது. செல்வம் பொன் நகைகளில் முடங்கிப் போய், அதனால், கூடுதலாக வருவாய் ஈட்டுவது சாத்தியமில்லாது போகுமல்லவா?

                  நிதி மேலாண்மை பற்றிப் மிகப் பழங்காலத்திலேயே ,ஆழ்ந்த அறிவுடையவர்களாக, இருந்த தமிழ் மக்களின் வாழ்வைப் புலவன் மிக அழகாகப் பாடிச்சென்றிருக்கிறான்.

அ. இராஜகோபாலன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.