திருச்சி புலவர் இராமமூர்த்தி.

————————————————–

 

திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருந்தகையின் பேரறிவுத் திறனை  வெளிப்படுத்தும்  பேரிலக்கியமாகும். இந்நூலின்  பல பாடல்கள்  சேக்கிழாரின் கற்பனைத் திறனை நமக்கு அறிவிக்கின்றன. பெரிய புராண வரலாறு , கைலை மலையில் தொடங்கி கைலை மலையில் நிறைவுறும் காப்பியம் ஆகும். அக்கைலை மலையின் சிறப்பைத்  தொடக்கத்தில் பலவாறு உரைக்கிறார் புலவர். கைலை மலையைச் சென்று சேர்ந்த கரியநிறக்  காக்கையும் பொன்னிறம் பெற்றுப் பொலியும்  என்று யாப்பருங்கலக் காரிகை கூறும்.

‘’ கனகமலை யருகே  போயின காக்கையுமன்றே படைத்தது பொன்னிறமே!’’ என்பது  பொன்வண்ணத்தந்தாதி. அவ்வகையில் கைலைமலையைச் சென்று  சேர்ந்த எல்லாப்பொருள்களும் பனிநிறமாகிய வெண்ணிறமும் . கதிரவன் ஒளி பெற்ற பனிமலை அடையும்,  பொன்னிறமும் பெற்று விடுகின்றன!

இங்கே பேரிமயத்திற்குச் சென்ற திருமால் , சிவபிரானைக்  கண்டு வணங்குவ தற்குரிய செவ்வி பார்த்துக் காத்திருக்கிறான். அங்கே ஒளி பொருந்திய வெண்பனிமலையின் அடிவாரத்தில் உள்ள குகைக்குள் , விநாயகப் பெருமானின்  ஊர்தியாகிய  பெருச்சாளி நிற்கிறது. அதன் பெரிய வடிவம் காண்போருக்கு, வெண்பனி மலையின் ஒளியில் அது வெண்ணிறப் பன்றி போல்தெரிகிறது. அந்தப் பகுதியில் திருமாலைத் தேடி அவர் வாகனமாகிய கருடன் பறந்து வருகிறது.

முன்னொரு காலத்தில் நெருப்புத் தூணாக வானளாவி நின்ற சிவபெருமானின்  திருவடியைத் திருமாலும் , திருமுடியை பிரமனும் தேடித் தேடி இளைத்தார்கள். அப்போது திருமால் கருநிறப் பன்றி உருவெடுத்து பூமியைத் தோண்டிக் கீழே சென்றார். அப்போது அவர் வராக அவதாரம் எனப்பட்டார். வெள்ளிநிறத்தூண்  போல நிற்கும் மலையடிவாரத்தில் நிற்கும் பெருச்சாளி , வெண்ணிறம் பெற்று வெண்பன்றி போல  நிற்பதை,  கருடன் கண்டு திகைக்கிறார்! ‘’ஓ! நம் தலைவர்தான் மீண்டும் சிவபிரானின் திருவடியைத் தேடிப்  பன்றி உருவெடுத்து நிற்கிறாரோ?’’ என்று திகைக்கிறாராம். அதாவது வெண்ணிறப் பெருந்தூண் அருகே வெண்ணிறம் பெற்றுத் திருமாலே வெண்பன்றி வடிவில் நிற்கிறார் என்று கருடன் பிறழ வுணர்ந்ததாம். அங்கே தன்  தலைவர்  நினைப்பதாக எண்ணி அவரை  நாடிப்போய் கருடன் நின்றது  என்று சேக்கிழார்  கற்பனை செய்கிறார்.

சிவபிரான் திருமால் பிரமன் ஆகியோரால் அளந்தறிந்து கொள்ள இயலாத பெரியவர் என்பதும், அவரை தரிசனம் செய்து   அருள் பெற, கைலை மலையருகே சென்று திருமால் காத்திருப்பார் என்பதும், அங்கே  வெண்பனி மலையடியில்  நிற்கும் பன்றி, வெண்பனியால் மூடப் பெற்று  வெண்ணிறம் பெற்று , ‘ஸ்வேத வராகமாய்’க்  கட்சி தருகிறது என்பதும், கருடன் அதனைத் திருமால் என்று நினைப்பதும்  மிக பொருத்தமான கற்பனை! கைலை மலையை அடைந்த பொருள்கள், புது நிறம் பெற்று விளங்குவது அம்மலையை அடைந்த அனைத்தும் பெறுகின்ற சிறப்பைப் புலப்படுத்துகின்றது. அங்கே பிள்ளையாரின் ஊர்தி , பெரும் வெண்பன்றி உருவெடுத்து, வராகமாய்  நிற்பதாக கருடன் எண்ணுவது கருடன்,தலைவர் மேல் கொண்ட மரியா தையைப் புலப்படுத்துகிறது. இதோ அந்தப் பாடல்!

’காதில் வெண் குழையோன்  கழல் தொழ  நெடியோன்

                காலம்பார்த்  திருத்தலை  அறியான்

சோதிவெண்   கயிலைத்  தாழ்வரை  முழையில்

                 துதிக்கையோன்   ஊர்தியைக்   கண்டு

மீதெழு   பண்டைச்  செஞ்சுடர்   இன்று

                வெண்சுடர்   ஆனதென்   றதன்கீழ்

 ஆதிஏ னம்அதாய்  இடக்கலுற்  றானென்

                றதனைவந்   தணைதரு  கலுழன்!’’ 

இவ்வகைக் கற்பனை சேக்கிழார் சுவாமிகளின் சிவபக்தித்  திறத்தினைப்

புலப்படுத்தி, சிவபரம்பொருளின் பெருமையையும் உணர்த்துகின்றது.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.