Tag: முனைவர் சுபாஷிணி

  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 114

    தேயிலைத் தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகம், இலங்கை

     

    முனைவர். க.சுபாஷிணி

     

    தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம் இருப்பது ராமன்துறை தோட்டமாகும். இது நுவரலியாவிலிருந்து நியூ பீக்கோக் எஸ்டேட் செல்லும் பகுதியில் சோகம் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் மத்திய மாகாண கண்டி பகுதியில் அமைந்துள்ளது.

    அருங்காட்சியகத்தின் வாசலில் சிறிய பூந்தோட்டம் ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு பகுதியில் தமிழிலும், சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் அருங்காட்சியகத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, உள்ளே நுழையும் பொழுது முதலில் நமக்கு தென்படுவது ஒரு சிறிய குடில். இந்தக் குடில் இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையக பகுதிக்குத் தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் மக்களின் வாழ்விட கட்டுமாணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

    ஒரு குடில்; அதில் ஒரு அறை மட்டுமே. அறை என்ற பிரிவு இல்லாமல் முழு பகுதியும் வெவ்வேறு மூலைகளில் அதன் பொருட்கள் வைக்கப்பட்டு காட்சி அளிக்கின்றன. சிறிய சமையல் பகுதியில் விறகை வைத்துக் கொள்ளும் பகுதி, பானைகளை அடுக்கி வைக்கும் பகுதி, சமையல் பாத்திரங்களை, அம்மி குழவி போன்றவற்றை வைக்கும் பகுதி, என சிறு பகுதியும், படுத்து உறங்கும் பகுதியாக ஒரு பகுதியும் காட்சியளிக்கின்றன. மற்றொரு பகுதியில் துணிகளை உலர்த்தும் மூலை தென்படுகின்றது. சுவற்றில் இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் புகைப்படங்கள் உள்ளன. பண்டித ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்றோரின் புகைப்படங்கள் சுவற்றில் தென்படுகின்றன. இவை இம்மக்கள் இந்தியாவின் சமகால நிலையை இலங்கையிலும் பிரதிபலித்தமையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த குடிசைவீட்டின் உள்ளே அருங்காட்சியக நிர்வாகம் காட்சிப்படுத்தியிருக்கும் பொருள்கள் 1820-களில் தமிழ் மக்கள் பயன்படுத்திய சமையலறைப் பொருட்கள் ஆகும்.

    காப்பித் தோட்டத்தில் பணிபுரிய 1820 வாக்கில் தொடங்கி தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு வந்தவர்கள் தற்காலிகமாக தங்கி கொள்வதற்காக கூரைவேய்ந்த இத்தகைய குடிசைகளை அமைத்து அவற்றில் தங்கியிருந்தனர். ஆறு மாதங்கள் காபித் தோட்டங்களில் அவர்கள் பணிபுரிவார்கள். பின்னர் காபி செடிகள் வளரும் பருவத்தில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூலியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு அதாவது தமிழகத்திற்கு திரும்பிவிடுவார்கள். இக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து மலையகப்பகுதிக்கு வந்தவர்களில் ஆண்களே அதிகமாக இருந்தனர்.தோட்டத்தில் 1880 வாக்கில் காப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக காப்பி விளைச்சல் நிறுத்தப்படவே தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. தேயிலைத் தோட்டப்பணி வருடம் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய ஒரு தொழில் ஆகையால் 1860 தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் இருந்து தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு ஆண்களும் பெண்களுமாக குடும்பம் குடும்பமாக பயணித்து வந்து தோட்டங்களில் தொழிலாளர்களாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

    மலையகப் பகுதியில் காபி தோட்டங்களில் கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரிய வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். முறையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை இரண்டு ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றி அழைத்து வந்து ஆனால் ஒரு ரூபாய் சம்பளம் கிடைப்பது கூட சிரமமாக அமைந்த நிகழ்வுகளும் உண்டு தினக்கூலி என்பது இல்லாமல் வருடத்திற்கு மூன்று முறை மாத்திரம் சம்பளம் என்ற வகையிலும் சிலவேளைகளில் சம்பளம் கிடைக்காத சூழலும் கூட ஏற்பட்டு மலையக மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் மலையகத்தில் பணிபுரிய வந்த தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும் அதன் பின்னர் படிப்படியாக ஆங்கிலேயர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கிய பின்னர் இந்த பிரச்சினைகள் குறைந்தாலும் தமிழ் மலையக கங்காணிகள் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது பெருவாரியாகத் ஆகவே தொடர்ந்தது.

    இலங்கையின் தோட்டங்களில் பணி புரிவதற்காக கி.பி.1800களின் ஆரம்பங்களில் இருந்து தமிழக மக்கள் தூத்துக்குடியிலிருந்து கடற்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து கொழும்புவிற்கும் தமிழகத்தின் வடக்கு பகுதியின் பல்வேறு நகர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து மன்னார் தலைமன்னார் போன்ற பகுதிகளுக்கு வந்து கால்நடையாகவே ஏறக்குறைய 140 மைல் தூரம் நடந்து பயணித்து இலங்கையின் மத்திய பகுதியான மலையகப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். தோட்டங்களில் பணிபுரிய வருகின்றோம் என்று ஆவலுடன் வந்த மக்கள் இங்கு முதலில் காடுகளையே காணக் கூடிய நிலை இருந்தது. மிக அடர்ந்த காடுகள் அவை. அந்தக் காடுகளில் பயணிக்கும் போது பல்வேறு விலங்குகளாலும் பூச்சிகளினாலும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளினாலும் தாக்கப்பட்டு உயிர் இழந்தோர் மிகப் பலர். பயணிக்கும் போதே கொசுக்கடி ஏற்பட்டு தொடர்ந்து பெய்து வரும் அடை மழையில் நனைந்து மலேரியா நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களும் அதிகம். இப்படி பல துன்பங்களைக் கடந்து வந்த மக்கள் கடுமையான உழைப்பைச் செலுத்தி காடுகளை தூய்மைப்படுத்தி காப்பி தோட்டங்களையும் கொக்கோ பயிர்களையும் தேயிலை தோட்டங்களையும் உருவாக்கினார்கள்.

    மலையக மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பணி மிக முக்கியமானது. மலையக சமூக நல ஆர்வலர்கள் உழைப்பால் சில தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. மலையகத்தில் மாத்தளை, ஹட்டன், நுவரெலியா, கண்டி, பேராதனை போன்ற பகுதிகளிலும் மற்றும் ஏனைய மலையக பகுதிகளிலும் தொழிற்சங்கங்களின் சமூக நலன் நடவடிக்கைகள் தொடங்கின. அதில் குறிப்பிடத்தக்கவர்களாக பத்திரிகையாளரும் தொழிற்சங்கவாதியுமாகிய கோ.நடேசய்யர் மற்றும் அவரது துணைவியார் மீனாட்சியம்மா போன்றோரைக் குறிப்பிடலாம். ஆங்கிலேயர்கள் அறிய விரும்பாத பல பிரச்சினைகளை மக்கள் மத்தியில் நேரில் சென்று அப்பிரச்சினைகளைக் கேட்டு அவற்றிற்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை இத்தகையோர் செயல்படுத்தினர். பத்திரிகைகள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் வழியாகவும் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் பெற உதவும் வகையிலான நடவடிக்கைகளை தொழிற்சங்க தலைவர்கள் அக்காலகட்டத்தில் செயல்படுத்தினர். பிரச்சாரங்கள் மட்டுமன்றி பாடல்கள், நாடகங்கள், கூத்துகள் வழியாகவும் எளிய மலையக தமிழ் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் உணர்ந்துகொள்ள தொழிற்சங்க தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் முன்னெடுத்தனர். அத்தகைய தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படங்களும் குறிப்பிடத்தக்க ஆவணங்களும் இந்த அருங்காட்சியத்தில் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    1948ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிட்டியது. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் தொடர் முன்னெடுப்புக்களினால் இலங்கைக்குப் பணியாற்ற வந்த தமிழக மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட சட்ட வரையறைகளின்படி, மலையக பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடத்தக்க பெரிய எண்ணிக்கையில் நாடற்றவர்களாக ஆகும் நிலை உருவானது. அதன்பின்னர் தொடர்ச்சியான பல முயற்சிகள், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் என்பன இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நிகழ்ந்தாலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமிழ் மக்களுக்கு சரியான, முறையான குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டே வந்தது. 1924ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி ஏறக்குறைய ஐந்தரை லட்சம் தமிழ் மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், ஏறக்குறைய மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இலங்கை குடியுரிமை பெறுவார்கள் என்றும், ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் நாடற்றவர்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டார்கள். இப்படி வகைப்படுத்தப்பட்ட பின்னரும்கூட அனைத்து மக்களுமே பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.

    இலங்கையில் வாழ்ந்த தமிழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2003ஆம் ஆண்டு வரை தங்கள் குடியுரிமை பிரச்சினைகளில் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டனர். இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்களும் தமிழகத்திற்குத் திரும்பியபின் தாங்கள் விட்டுச் சென்ற காணிகளை இழந்து, சொத்துக்களை இழந்து, பொருளாதார பிரச்சினைகளைப் பெருவாரியாகச் சந்தித்து தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.. இவ்வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் பல்வேறு கையெழுத்து ஆவணங்கள் இந்த மலையக தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

    இலங்கைக்கு கடந்த 200 ஆண்டுகளாக மிகுந்த பொருள் வளத்தை தரும் ஒரு துறையாக இருப்பது தேயிலைத் தோட்டங்கள். இலங்கைக்கு பெரும் வளத்தை உருவாக்கித் தந்ததோடு, உலக அளவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லா உயர்தர தங்கும் விடுதிகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிக முக்கிய பானமாக கருதி பயன்பாட்டில் இருக்கின்றது இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலை. இலங்கையின் மலையகப் பகுதிக்கு இன்று நாம் செல்லும்போது நாம் காணும் காட்சி இயற்கை அழகின் எல்லை இல்லா பேரழகு. இது சுவர்க்கலோகம் என்று இங்கு வருகின்ற ஒவ்வொருவரும் எண்ணும் வகையில் மலையகத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் காட்சியளிக்கின்றன. இதனை உருவாக்கிய மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையோ இன்றளவும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் வகையிலேயே தொடர்கின்றது.

    முறையான சுகாதார நலன் இன்றி இம்மக்களின் அன்றாட வாழ்க்கைத் தொடர்கின்றது. கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களிலும் இம்மக்களுக்கு மேம்பாடு தேவைப்படுகின்றது. குடியிருக்க சொந்த வீடுகள் இன்றியும், தேயிலைத் தோட்டங்களிலேயே அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமற்ற ஒரு வாழ்க்கையாகவே முடிந்து விடும் அவலமும் தொடர்கிறது. இத்தகைய செய்திகள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சியின்வெளிப்பாடாக நியூ பீக்கோக் எஸ்டேட் அருகாமையிலிருக்கும் ராமன்துறை தோட்ட ”மலையக மக்கள் அருங்காட்சியகம்” இன்று நமக்குக் காட்சி அளிக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற அருங்காட்சியக அதிகாரி திரு.சந்தனம் சத்தியநாதன் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழ் மக்களின் சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் பதிகின்றோம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 113.

    புனித அன்னை தேவாலய அருங்காட்சியகம், ஹாலே, ஜெர்மனி

    முனைவர். க.சுபாஷிணி

    கிருத்துவ சமயத்தில் உள்ள உட்பிரிவுகளில் மிக முக்கியமானது சீர்திருத்தக் கிருத்துவம். கி.பி.1706ம் ஆண்டு தமிழகத்தின் தரங்கம்பாடி எனும் கடற்கரையோர நகரத்திற்கு ஜெர்மனியிலிருந்து வந்திறங்கிய இரண்டு லூத்தரன் பாதிரிமார்களே தமிழகத்தில் இந்தச் சமய சித்தாந்தம் காலூன்ற அடிப்படையை வகுத்தவர்கள். அவ்விருவரும் பாதிரியார் பார்த்தலோமஸ் சீகன்பால்க் மற்றும் பாதிரியார் ப்ளெட்சோ ஆவர். தமிழகத்தின் தரங்கம்பாடியில் பள்ளிக்கூடம் அமைத்தது, அச்சுக்கூடத்தை அமைத்து தமிழ், போர்த்துகீசிய, ஆங்கில மொழி நூல்களை அச்சிட்டது எனத் தொண்டாற்றியது என்பதோடு இவர்களுக்குப் பின் ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த ஏனைய பாதிரிமார்கள் கடலூர், திருநெல்வேலி, மெட்ராஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தச் சீர்திருத்த கிருத்துவ சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதோடு சமூக கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் என்பது வரலாறு. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமைவது லூத்தரேனிய ப்ரோட்டஸ்டன் கிருத்துவம் அல்லது சீர்திருத்த கிருத்துவம் என அழைக்கப்படும் ஒரு மத அமைப்பாகும். இந்த மதத்தைத் தோற்றுவித்தவர் மார்ட்டின் லூதர் ஆவார்.


    மார்ட்டின் லூதர் (Martin Luther) ஜெர்மனியின் தென் கிழக்கு மாநிலமான சாக்சனி (Saxony) மாநிலத்தில் உள்ள ஐஸ்லேபன் (Eisleben) என்னும் சிற்றூரில் 1483ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். இவரது தந்தையார் கரி ஆலையில் பணிபுரிந்தவர். மார்ட்டின் லூதர் தன்னைப் போல் ஒரு தொழிலாளியாக இல்லாமல் கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் எனக் கனவு கண்டவர் இவர். தனது மகன் கல்வியில் தேர்ச்சி பெற்ற ஒரு வழக்கறிஞராகப் பணி புரிந்து வளமாக வாழ வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது . 1490ம் ஆண்டு மான்ஸ்ஃபெல்ட் (Mansfeld) நகரப் பள்ளியில் லத்தின் மொழியில் பாடங்கள் கற்று, பின்னர் 1497ல் மெக்டபர்க்கிலும் (Magdeburg) 1498ல் ஐசெனாஹ் (Eisenach) நகரிலும் உயர்கல்வியைத் தொடர்ந்தார் மார்ட்டின். 1501ம் ஆண்டு எர்ஃபூர்ட் பல்கலைக்கழகத்தில் (Erfurt University) இளங்கலை கல்வி கற்கப் பதிவு செய்துகொண்டார். 1502ம் ஆண்டில் அவருக்குக் கலைத்துறையில் இளங்கலை பட்டம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைக் கல்வியையும் முடித்து 1505ம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார் மார்ட்டின் லூதர். அதே ஆண்டு சட்டத்துறை மாணவராகவும் தன்னைப் பதிந்து கொண்டார் மார்ட்டின் லூதர். இந்தக் காலகட்டத்தில் அவரது வாழ்வில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அவருக்கு சமயத்துறையின் பால் தீவிரமான நாட்டத்தை வளர்த்தன. சமயத்துறையில் ஆர்வம் கொண்டு தன் கல்வியை ஒரு கத்தோலிக்க மடாலயத்தில் தொடர விரும்பினார்.

    ஜூலை மாதம் 1505ம் ஆண்டில் மார்ட்டின் லூதர்,செயிண்ட் ஆஸ்டின் (St.Austin) மடாலயத்தில் துறவியாக இணைந்தார். மிகுந்த கடமை உணர்ச்சியுடனும் கட்டுப்பாடுகளுடனும் கல்வி கற்று கத்தோலிக்க சமய குருவாக 1507ம் ஆண்டில் இவர் தேர்ச்சி பெற்றார்.

    அன்றைய கத்தோலிக்க தலைமைப்பீடத்தின் தலைவராக இருந்த போப் 10ம் லியோ அவர்கள் ரோம் நகரில் இருக்கும் செயிண்ட் பீட்டர் பாசிலிக்கா (St. Peter’s Basilica) தேவாலயத்தைக் கட்டும் பணிக்காக சில செயற்பாடுகளை முன்னெடுத்தார். இந்த நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்ட பாவமன்னிப்பு தொடர்பான நடவடிக்கைகள் மார்ட்டின் லூதருக்குப் பெருத்த கோபத்தை உருவாக்கியது. தனது சிந்தனைகளைக் கட்டளைகளாக எழுதினார். இந்த 95 கட்டளைகளைத் தான் இறையியல் பேராசிரியராகப் பணிபுரிந்த அதே விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தின் உள்ளே இருக்கும் தேவாலயத்தின் வாசல் கதவில் ஆணி அடித்து அதனைத் தொங்க வைத்தார். இந்த 95 கட்டளைகளாவன பாவமன்னிப்பு என்ற கொள்கையை ஊழல் நிறைந்த வகையில் சமய நிறுவனம் பயன்படுத்துவதைச் சாடும் வகையில் இருப்பதை எதிர்க்கும் வாசகங்களாகும். அக்கால அச்சுத்தொழில் வளர்ச்சியும் மார்ட்டின் லூதரின் எதிர்மறை கருத்துக்கான பிரச்சாரத்திற்குத் துணை கொடுக்கும் வகையில் அமையவே, இரண்டே வார இடைவெளியில் மார்ட்டின் நூதரின் இந்த 95 கட்டளைகள் அடங்கிய துண்டுப் பிரச்சாரங்கள் பரவலாக ஐரோப்பா முழுமையும் விநியோகப்படுத்தப்பட்டன.

    மக்கள் நம்பிக்கையுடன் வாசித்து இறைவனை உணரப் பயன்படுத்தும் நூல் மக்கள் பேசும் மொழியிலேயே இருக்க வேண்டும் என சிந்தித்ததோடு, லத்தீன் மொழி பைபிளின் புதிய ஏற்பாட்டை, ஜெர்மானிய மக்கள் பேசும் டோய்ச் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார் மார்ட்டின் லூதர். இதன் தொடர்ச்சியாகப் படிப்படியாக லூத்தரன் கொள்கைகள் இவரால் வளர்க்கப்பட்டன. பலர் இவரது சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இவரது பெயரில் உருவாகிக் கொண்டிருந்த லூத்தரேனிய திருச்சபையை பின்பற்றுவோராகினர். 1525ம் ஆண்டில் இவர் கத்தரினா ஃபோன் போரா (Katharina von Bora ) என்ற பெண்மணியை மணந்தார். கத்தரினா முன்னாள் கன்னிகாஸ்திரியாக இருந்து கத்தோலிக்க திருச்சபையிலிருந்து வெளிவந்து விட்டன்பெர்க் லூத்தரன் திருச்சபையில் இணைந்தவர். இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தனர்.

    மார்ட்டின் லூதர் 1533 முதல் தனது மறைவு வரை, அதாவது 1546 வரை, விட்டர்ன்பெர்க் பல்கலைக்கழகத்திலேயே இறையியல் துறை தலைமைப் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். 1546ம் ஆண்டு பெப்ரவரி 18ம் தேதி விட்டன்பெர்க் நகரிலிருந்து ஐஸ்லேபன் நகர் வந்திருந்தபோது அவர் காலமானார்.

    மார்ட்டின் லூதர் 1546ம் ஆண்டு ஐஸ்லேபன் நகரில் இறந்தபோது அவரது உடல் ஹாலே நகருக்குக் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தேவாலயத்தில் (market church) மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. புகைப்படக்கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் நினைவாக அவர்களது உருவங்களை ஓவியங்களாகத் தீட்டுவது ஒரு நடைமுறை. அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மெழுகு முகமூடி தயாரித்தல் என்பது மற்றுமொரு நடைமுறை. இது பண்டைய எகிப்தில் ஃபாரோக்காளுக்கு இறக்கும் போது அளிக்கப்படும் மரியாதையை ஒத்த ஒரு கலை என்றே கருத இடமுண்டு. ஏனெனில் பண்டைய எகிப்தில் இறந்த மாமன்னர்களுக்கு பிரமிட்களை எழுப்பி அங்கு பதப்படுத்தப்பட்ட (மம்மி) அவர்களது உடலை ஒரு மரத்தாலான அல்லது தங்கப் பேழைக்குள் வைத்து முகத்தில் தங்கத்தாலான முகமூடியை அணிவித்து அவர்களுக்கு மேலுலகத்தில் தேவைப்படும் எனக் கருதி விலையுயர்ந்த ஆபரணங்களையும் மற்ற பொருட்களையும் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது.

    இதுவும் கூட பழங்குடி மக்களின் பண்பாட்டு எச்சம் என்றே காணத்தோன்றுகிறது. முகமூடிகளணிந்து சடங்குகளில் பங்கெடுக்கும் கலையை இன்றும் கூட ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே நாம் காணலாம்.

    இத்தகைய முகமூடி அமைக்கும் ஒரு கலை ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது என்பதை கடந்த ஓரிரு நூற்றாண்டு வரை நாம் காணலாம். அந்த வகையில் மார்ட்டின் லூதருக்கு முகமூடி (Death Mask) அமைக்கப்பட்டது. மார்ட்டின் லூதரின் நண்பரும் அவருடைய முன்னாள் மாணவருமான, முதல் ப்ரோட்டஸ்டன் சமய போதகரும் மார்க்கெட் தேவாலயத்தின் குருவுமான ஜூஸ்டூஸ் யோனாஸ் மார்ட்டின் லூதர் காலமான போது அவருடன் இருந்தார். அவர் மறைந்த மறுநாள் அதாவது 19ம் தேதி காலையின் லூக்காஸ் ஃபூர்ட்டெனாகல் (Luckas Furtenagel) மரணப் படுக்கையில் இருந்த மார்ட்டின் லூதரின் உருவத்தை வரைந்தார். அவரே இந்த மெழுகினால் ஆன முகமூடியையும் செய்ய அமர்த்தப்பட்டார் எனக் கருதப்படுகிறது. அதற்குப் பின்னர் மார்ட்டின் லூதரின் சவப்பெட்டி மூடப்பட்டு அவரது பூத உடல் விட்டன்பெர்க் கொண்டு செல்லப்பட்டு அங்குப் புதைக்கப்பட்டது. இதனால் மார்ட்டின் லூதரின் இறுதி நிகழ்வு நடைபெற்ற சிறப்பினைப் பெறுகின்ற தேவாலயமாக இது கருதப்படுகின்றது.

    இந்தத் தேவாலயத்தில் மார்ட்டின் லூதர் 1545லும், இரு முறை 1546லும் வந்து பிரசங்கம் செய்தார். அவர் நின்று பிரசங்கம் செய்த பல்பிட் எனப்படும் பிரசங்க மேடை இதே அறையில் உள்ளது.

    இந்தத் தேவாலயம் 1529ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் 1554ம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றன என்றும் அறிகின்றோம். இக்கட்டிடத்தைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர் பிராண்டென்புர்க் மற்றும் மக்டெபுர்க் கத்தோலிக்க அமைப்பின் தலைவராக இருந்த கார்டினல் அல்ப்ரெட். இவருக்கும் மார்ட்டின் லூதருக்கும் சமய தத்துவ அடிப்படையில் இருந்த கடும் போட்டியின் இறுதியில் மார்ட்டின் லூதரின் கருத்துக்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பதோடு கார்டினல் அல்ப்ரெட் தமது பதவியைத் துறந்து மாநிலத்திலிருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் இம்மாநிலம் முழுமையாக லூதரேனிய ப்ரோட்டஸ்டன் மதத்தை ஏற்ற ஒரு மாநிலமாக படிப்படியாக மாற்றம் கண்டது.

    மார்ட்டின் லூதரின் வாழ்க்கையில் ஐஸ்லேபனும் விட்டன்பெர்க் நகரங்களும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனவோ அதே அளவிற்கு ஹாலே நகரமும் முக்கியத்துவம் வகிக்கின்றது. மார்ட்டின் லூதரை ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் கடந்தும் நாம் நேரில் காணும் அனுபவத்தை ஹாலே நகரிலுள்ள மார்க்கெட் தேவாலய அருங்காட்சியக அறை நமக்கு வழங்குகின்றது. ஒவ்வொரு நாளும் இந்தத் தேவாலயம் திறந்திருக்கின்றது. அருங்காட்சியகத்திற்குச் செல்ல சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்தத் தேவாலயத்தின் முகவரி Marktkirche Unser Lieben Frauen, An der Marienkirche 2, 06108 Halle (Saale) என்பதாகும். ஹாலே நகரின் புகழை மட்டுமல்ல, ஜெர்மனியின் புகழையும் உயர்த்தும் ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை!

    துணைநூல்கள் –
    http://www.bargaintraveleurope.com/17/Germany_Market_Church_Martin_Luther_Halle_Saale.html
    தேவாலயத்தில் உள்ள வருகையாளர் குறிப்புக்கள்

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 112

    ஃப்ராம் அருங்காட்சியகம், ஓஸ்லோ, நோர்வே

    முனைவர். க.சுபாஷிணி

    மிக அண்மையில் நான் பயணம் மேற்கொண்ட நாடு நோர்வே. நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்ல்லோவில் 106 அருங்காட்சியகங்கள் பதிவு செய்யப்பட்ட அருங்காட்சியகங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. அதில் ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றிய செய்திகளை இந்தப் பதிவில் வழங்குகின்றேன்.

    ஃப்ராம் அருங்காட்சியகம் (Fram Museum) பொதுவான அருங்காட்சியகங்களிலிருந்து மாறுபட்டதொரு அமைப்பைக் கொண்டது. 1936ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் உலகின் வடக்கு-தெற்கு துருவங்களுக்குப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த மூவரைச் சிறப்பிப்பதற்காகவும் உலகின் வடக்கு தெற்கு துருவங்களுக்குப் பயணம் செல்லப் பயன்படுத்திய ஃப்ராம் என்ற பெயர்கொண்ட மரக்கலத்தைச் சிறப்பிப்பதற்காகவும் அமைக்கப்பட்டது.

    இந்த அருங்காட்சியகத்தின் அமைப்பை முதலில் காண்போம். அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் ஃப்ராம் மரக்கலம் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று தளங்களில் கண்காட்சி சுவர்ப்பகுதியை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஃப்ராம் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்று அதனை முழுமையாகப் பார்த்த பின்னர் படிகளில் இறங்கி கப்பலின் இரண்டாம் தளத்திற்கு வரலாம். அங்கு மாலுமிகள், ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கான அறைகள் உள்ளன. அங்கேயே சமையலறை, உணவருந்தும் பகுதி, ஓய்வெடுக்கும் பகுதி, நூலகப் பகுதி ஆகியன அமைந்திருக்கின்றன. இதற்கு அடுத்த கீழ்த்தளத்தில் கப்பலின் இயந்திரம் உள்ளது. இங்கு சமையல் பொருட்கள், பயணத்தில் தேவைப்படும் கருவிகள், போன்றவை வைக்கும் பகுதி உள்ளது.

    உலகின் வடதுருவத்திற்குப் பயணம் சென்று அறிந்து வரவேண்டும் என்ற எண்ணத்துடன் 1891ம் ஆண்டு நோர்வே அரசும் தனியாரும் சேர்ந்து இவ்வாய்வுப் பயணத்திற்கானப் பொருளாதாரத்தைச் சேகரித்துக் கொடுக்க, திரு.நான்சன் ( Fridtjof Nansen ), கோலின் ஆர்ச்சர் (Colin Archer) என்ற கப்பல் கட்டும் பொறியியலாளரை அமர்த்தி இக்கப்பலை உருவாக்கச் செய்தார். இந்தப் பிரத்தியேகக் கப்பலே உலகின் துருவங்களுக்குச் சென்ற ஆய்வுப்பயணங்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட கப்பல் என்ற பெருமையைப் பெறுகின்றது.

    உலகின் துருவங்களுக்குப் பயணித்தோர் என்று குறிப்பிடும் போது இதில் முதன்மையாகப் பட்டியலில் இடம் பெறுவோர் நோர்வே நாட்டினர் மூவர். அவர்கள் திரு. பிரிட்ஜோவ் நான்சன் ( Fridtjof Nansen ), திரு.ஓட்டோ சுவேதுருப் (Otto Sverdrup) மற்றும் திரு. ரோல்ட் அமுண்ட்சன் ( Roald Amundsen) ஆகியோர்.

    திரு. பிரிட்ஜோவ் நான்சன் (10 அக்டோபர் 1861 – 13 மே 1930) நோர்வே நாட்டைச் சேர்ந்தவர். ஒரு ஆய்வாளர், சமூக நல செயற்பாட்டாளர், அரசப்பிரதிநிதி, விஞ்ஞானி என்ற பன்முக ஆளுமையாக அறியப்படுபவர். இவரது சாதனைகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசினை 1922ம் ஆண்டு இவர் பெற்றார் என்பதை நினைவு கூர்வது தகும்.

    திரு.நான்சன் இன்று உலக வரைபடத்தில் நாம் அறியும் க்ரீன்லாந்து எனும் நாட்டின் உட்பகுதியை ஸ்கீ பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யச் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கியவர். ஆயினும் 1893லிருந்து 1896 வரையிலான ஆய்வுப்பயனத்தில் வடதுருவத்தின் 86°14′ அடைந்து செய்த சாதனை இவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. இந்தப் பயணத்திற்குப் பின்னர் பயணங்களிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு தனது ஆய்வுகளிலும் தனது சமூக நலப்பணிகளிலும் நோர்வே நாட்டின் அரசியல் அமைப்புப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.

    திரு. ஓட்டோ சுவேதுருப் (31 அக்டோபர்1854 – 26 நவம்பர் 1930) வடதுருவத்திற்கான திரு.நான்சனின் முதல் பயணத்தில் அவரோடு இணைந்து ஆய்வில் ஈடுபட்டவர்களுள் ஒருவர். அப்பயணத்தின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவராக அமர்த்தப்பட்டு பின் திரு.நான்சன் கப்பலை விட்டு ஸ்கீ செய்து வடதுருவத்திற்குச் சென்ற போது ஃப்ராம் கப்பலை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். 1898ம் ஆண்டு திரு. ஓட்டோ சுவேதுருப் வடதுருவத்திற்கான இரண்டாவது பயணத்தை நிகழ்த்தினார். ஃப்ராம் கப்பலிலேயே இந்த இரண்டாவது பயணமும் நிகழ்ந்தது. இப்பயணம் 1902ம் ஆண்டு வரை நீடித்தது. க்ரீண்லாந்து நாட்டைக் கடந்து மேலும் பல தீவுகளைக் கண்டுபிடித்து அவற்றை வரைபடத்தில் இணைக்கும் பணியைச் செய்தார். இவற்றுள் பல சிறு தீவுகள் கண்டறியப்பட்டன, பெயரிடப்பட்டன, வரைபடத்தில் இணைக்கப்பட்டன. இந்தத் தீவுத் தொகுதிகளுக்கு இவரது பெயரிலேயே சுவேதுரூப் தீவுகள் (Sverdrup Islands) என்ற பெயரும் வழங்கப்பட்டது. இவருக்கு அந்நாளைய ஜெர்மனியின் பெரூசியன் அரசின் விருது 1917ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் 2ம் உலகப்போரில் ஜெர்மானியப் படை நோர்வேயின் மீது தாக்குதல் நடத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமையை எதிர்த்து இந்த விருதை திரு. ஓட்டோ சுவேதுருப் ஜெர்மனிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். பல தனியார் அமைப்புக்களினாலும் பல்கலைக்கழகங்களினாலும் இவர் கவுரவிக்கப்பட்டார். இவரது பிறந்த ஊரான சாண்ட்விகா நகரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    திரு. ரோல்ட் அமுண்ட்சன் (16 ஜூலை1872 -18 ஜூன் 1928) வரலாற்றில் தனக்கெனத் தனியிடத்தைப் பெறுபவர். இவரே உலக வரைபடத்தில் தென்துருவத்தை முதலில் அடைந்து ஆராய்ந்து அதனைப் பதிவு செய்தவர் என்ற பெருமையைப் பெறுகின்றார். இவரது தென் துருவத்திற்கானப் பயணத்திலும் ஃப்ராம் மரக்கலமே பயன்படுத்தப்பட்டது. இவர் 1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் நாள் தென்துருவத்தை அடைந்து சாதனை நிகழ்த்தினார். கடல் மார்க்கமாகவும் நில மார்க்கமாகவும் வடதுருவத்தை இவருக்கு முன்னரே திரு.நான்சன் சென்றடைந்து சாதனைப் படைத்திருந்தார். இவர் விமானம் வழிப்பயணித்து வடதுருவத்தை 1926ம் ஆண்டு சென்றடைந்தவர் என்ற சிறப்பும் பெறுகின்றார். முதலில் ஆர்க்டிக் பகுதியில் அதாவது வடமேற்குப் பகுதிப் பயணத்தை (1903-1906) நிகழ்த்தியவர் என்ற சிறப்பும் இவருக்குச் சேர்கின்றது. இத்தகைய ஒரு பயணத்தில் 1928ம் ஆண்டு ஈடுபட்டிருக்கும் போது காணாமல் போன தமது குழுவின் சிலரை கண்டுபிடிக்கச் சென்றபோது இவர் சென்ற அவசரக்கால பாதுகாப்பு விமானம் தொலைந்து போனதில் இவரும் காணாமல் போய்விட்டதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

    வட துருவம் என்பது உலக உருண்டையின் வடக்கின் கடைக்கோடியில் உள்ள புள்ளி. அதே போல தென்துருவம் என்பது உலக உருண்டையின் தெற்கே கடைக்கோடியில் உள்ள புள்ளி. இப்பகுதிகள் பனிக்கட்டிகளாலும் பனித்துகள்களாலும் சூழப்பட்டு கடுங்குளிருடன் ஆண்டு முழுக்க இருக்கும் நிலப்பகுதிகளாக அறியப்படுபவை. இவற்றிற்குப் பயணம் மேற்கொள்வது என்பது ஒரு அசாதாரணக் காரியமே. கடலில் பயணிக்கலாம் என்றால் நீர்மட்டம் பனிக்கட்டிகளால் இறுக்கமாகச் சூழப்பட்டு கப்பல் பயணத்தைத் தடுத்துவிடும் சூழல் உண்டு. ஆக இப்பகுதிகளில் ஆய்வு செய்யச் சொல்வோர் ஓரளவிற்குக் கடலில் கப்பல் வழி பயணித்து பின்னர் பனியில் சருக்கிச் செல்லும் ஸ்கீ வகை கருவிகளைப் பயன்படுத்திச் சென்றே ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இதே போன்று பிரத்தியேக விமானங்களின் வழி பயணம் மேற்கொள்வதும் இவ்வகைப் பயணங்களைச் சாத்தியப்படுத்துகின்றன.

    வடதுருவங்களிலும் தென் துருவங்களிலும் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இன்று நமக்குக் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் வடதுருவத்தில் இன்றைக்கு ஏறக்குறைய 4500 ஆண்டுகள் வாக்கிலேயே மனித இனம் இங்கு வாழ்ந்துள்ளது என்ற தகவல்கள் ஆராய்ச்சிகளின் வழி கிடைத்துள்ளன. குளிரான தட்பவெட்ப நிலையினால் இங்கு மக்கள் குடியேற்றம் என்பது மிகக் குறைவாகவே அமைந்திருக்கின்றது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது. இக்குளிரான தட்பவெட்ப சூழலிலும் இங்குள்ள சூழலுக்கேற்ற வகையில் தாவரங்களும் விலங்குகளும் இங்கு உயிர்வாழ்கின்றன. இவற்றைப்பற்றிய தொடர் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. இவ்வகை ஆய்வுகளில் குறிப்பாக ஸ்கேண்டினேவியன் நாடுகள் என நாம் குறிப்பிடும் நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகியவற்றோடு கனடா, வட அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

    மனிதனின் தேடுதல் எல்லைகள் அற்றது. அத்தகைய ஒரு செயலே மனிதன் உலக உருண்டையின் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பயணம் மேற்கொண்டு நிகழ்த்திய சாதனை. உலகின் அறியப்படாத விடயங்கள் பல இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அறிவதில் அறிவியல் முயற்சிகள் ஒவ்வொரு நாளும் முன்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றது. அத்தகைய அறிவியல் சாதனைகளில் பங்கு எடுத்துக் கொண்ட ஃப்ராம் கப்பல் பாதுகாக்கப்படும் ஃப்ராம் அருங்காட்சியகம் உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது!

    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    Dr.K.Subashini
    http://www.subaonline.net – எனது பக்கங்கள்
    http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
    http://www.heritagewiki.org/- மரபு விக்கி

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 111

    நூபியன் அருங்காட்சியகம், அசுவான், எகிப்து

     

    முனைவர். க.சுபாஷிணி

     

    எனது எகிப்துக்கான பயணத்தில் அதன் தலைநகராகிய கைரோவில் உள்ள பிரமிட்களைப் பார்க்க சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தேன். கட்டணம் செலுத்தும் இடத்தில் இருந்த இளம் வயது எகிப்திய ஆண்கள் ஓரிருவர் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நூபியன், நூபியன் என எகிப்திய மொழியில் என்னிடம் ஏதோ பேசினர். அப்போது எனக்கு அவர்கள் என்னைப் பார்த்து என்ன சொல்லி பேசி சிரித்துக் கொள்கின்றனர் எனப் புரியவில்லை. அதே பயணத்தில் நைல் நதியில் பயணித்து எகிப்தின் தெற்கு எல்லையை அடைந்து வடக்கு சூடான் நாட்டின் எல்லைப்பகுதியில் இருக்கும் அசுவான் அணைப்பகுதிக்கு வந்த போது நூபியன் என்பதன் பொருளை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.


    நூபியன் என்னும் இனத்தோர் இன்றைய சூடான் நாட்டிலும் தெற்கு எகிப்திலும் தோன்றிய இனம். மனித இனத்தின் நாகரிகக்காலம் தொடங்கியபோதிலிருந்து அடையாளம் காட்டப்படும் சில இனக்குழுக்களில் நூபியன் இனமும் ஒன்று. எகிப்தில் பாயும் நைல் நதியினை ஒட்டியவாறு வாழ்ந்த ஒரு இனம் நூபியன் இனம். பண்டைய எகிப்தில் ஆட்சி செலுத்திய இனம் என்றும் கி.மு.7000 ஆண்டில் இன்றைய வடக்கு சூடான் நகரான வாடிஹல்வா (Wadi Halfa) நகரில் பேரரசினை நிறுவிய ஒரு இனக்குழு என்றும் அறிகின்றோம் (http://www.ancientsudan.org). கி.மு 8ம் நூற்றாண்டு வரை எகிப்திலும் அதன் பின்னர் படிப்படியாக சூடான் நாட்டில் மட்டிலுமே என்ற வகையிலும் நூபியன் இனக்குழுவின் ஆளுமை விளங்கியது. இன்று நூபியன் இனக்குழு மக்கள் எகிப்தின் தெற்குப் பகுதி நகர்களான லுக்சூர், அசுவான் ஆகிய பகுதிகளிலும் சூடானிலும் வாழ்கின்றனர்.

    சூடான்-எகிப்து எல்லைப் பகுதிக்குப் படகுப் பயணம் மேற்கொண்டு வந்த போது கைரோவில் ஏன் அந்த இளைஞர்கள் என்னைப் பார்த்து நூபியன் என்று அழைத்து கேலி பேசி சிரித்தனர் என்பது எனக்குப் புரிந்தது. இங்கு வசிக்கும் நூபியன் இன மக்களின் தோற்றம் எனது தோற்றத்தை ஒத்திருந்ததைக் காண முடிந்தது. எங்கள் பயண வழிகாட்டியும் அப்பயணத்தில் இணைந்து வந்திருந்த ஏனைய ஜெர்மானிய சுற்றுப் பயணிகளும் என்னிடம் இதையே கூறினர். ஆப்பிரிக்க கண்டத்து மக்களில் அதிலும் குறிப்பாக, சூடான், எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாட்டு மக்களின் உடல் கூறுகள் தமிழ் மக்களின் உடற்கூறுகளுடன் ஒத்திருப்பதைப் பலமுறை அவதானித்திருக்கின்றேன். நேரில் சூடான் நாட்டின் எல்லையில் இருந்த போது நானும் அந்நாட்டு மக்களின் தோற்றத்துடனேயே இருப்பதை ஆழமாக உணர்ந்தேன்.

    இந்த நூபிய இனக்குழுவின் பிரத்தியேக செய்திகளைக் காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் தான் நூபியன் அருங்காட்சியகம். இது சூடான் நாட்டின் எல்லையில் அசுவான் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரத்தியேகமானதொரு அருங்காட்சியகம். நூபிய மக்களின் வரலாற்று, பண்பாட்டுச் செய்திகளை விவரிப்பதற்காகவும், நூபிய இனக்குழுவின் நாகரிகத்தையும் தொன்மைச் சிறப்புக்களையும் பதிந்து வைப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும்.

    எகிப்து ஒரு பாலைவனம். எங்கு நோக்கினாலும் வெளிர் ஆரஞ்சு நிறத்து மணல் துகள்கள் தான் நிறைந்திருக்கும். இங்கு குன்றுகளைப் பார்ப்போம். ஆனால் அவை மணல் குன்றுகளாகத்தான் இருக்குமே தவிர மரங்களை அங்கு காண்பது அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பேரீச்சம் பழ மரங்களைக் காண்போம். ஆனால் இந்த அருங்காட்சியகத்தினைச் சுற்றி பசுமையை உருவாக்கியிருக்கின்றனர். நல்லதொரு பூந்தோட்டம் இந்த அருங்காட்சியகத்திற்கு அழகு சேர்க்கின்றது.

    வறண்டப் பாலைவனத்தில் மணலின் நிறத்திலேயே எழுப்பப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் இந்த அருங்காட்சியகம். அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான புராதனச் சின்னங்கள் இங்குக் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு ஒரு நூலகமும் இந்த அருங்காட்சியக வளாகத்தின் உள்ளே இயங்கி வருகின்றது. வரலாற்று ஆர்வலர்களுக்கும். ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கும், மாணவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் சிறந்த சூழலை ஏற்படுத்தி வழங்கியிருக்கின்றது என்பதை இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்த சில நிமிடங்களில் அறிந்து கொண்டேன். எகிப்து பழமையான பாரம்பரியத்திற்குச் சொந்தமான ஒரு நாடு. வரலாற்றுச் செழுமை எனும் போது உலக நாடுகளில் முதல் இடம் வகிக்கும் அளவிற்கு மிக நீண்ட மனித நாகரிகத்திற்கும், பேரரசுகளுக்கும், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களுக்கும், புராணக் கதைகளுக்கும், பிரமிடுகளுக்கும், மம்மிக்களுக்கும் புகழ் பெற்ற நாடு எகிப்து. இன்று அயல் நாட்டு அருங்காட்சியகங்களிலேயே ஏராளமான எகிப்திய அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களை காண்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் எகிப்திலேயே இருக்கும் அருங்காட்சியகங்களில் சொல்லவும் வேண்டுமா?

    இந்த நூபியன் அருங்காட்சியகத்தில் நான் சென்றிருந்த 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மூவாயிரத்திற்கும் குறையாத நூபியன் இனக்குழு தொடர்பான புராதன சின்னங்கள் சேகரிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தன. நூபியன் பண்பாட்டு வரலாற்றுச் சின்னங்கள் தவிர இப்பகுதியில் ஆளுமை செலுத்திய கிரேக்க, இசுலாமிய சின்னங்களும் இங்குச் சேகரிப்பில் இடம்பெறுகின்றன.

    நூபியன் அருங்காட்சியகத்தினைப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது என்பதோடு இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் பகுதியில் பயணிப்பதற்கும் இப்பகுதியின் இயற்கை அழகை ரசிப்பதற்கும் குறைந்தது ஒரு வார காலம் நிச்சயம் தேவை. நைல் நதியிலேயே பயணம் செய்து இந்த அருங்காட்சியகப் பகுதிக்கு வந்து விடலாம். நைல் நதியில் சிறு படகில் பயணம் மேற்கொள்ளும் போது நாம் பயணம் செய்யும் படகுகளை நோக்கி வியாபாரிகள் படகிலேயே வந்து தங்கள் விற்பனைப் பொருட்களை விலை பேசி விற்கின்றனர். வாசனை திரவியங்கள், துணி வகைகள், மருந்துகள், மசாலா பொடிகள் என்பன இத்தகைய படகு வியாபாரிகள் கொண்டு வருகின்ற பொருட்களில் முக்கியமானவை.

    1997ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூபியன் அருங்காட்சியகம் வார நாட்கள் அனைத்திலும் திறந்திருக்கின்றது. எகிப்தில் இருக்கின்ற முக்கிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இணைந்திருக்கும் ஒரு அருங்காட்சியகம் இது. இதன் முகவரி Assuan, Sheyakhah Oula, Qism Aswan, Aswan Governorate, Egypt. எகிப்திற்குப் பயணம் செய்பவர்கள் குழுவாக பயணம் செய்வதே சாலச் சிறந்தது. தீவிரவாத நடவடிக்கைகள் எகிப்தில் தொடர்ந்து நிகழ்வதால் குழுவாகப் பயணிப்பது சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பிற்கு மிக அவசிமானதாகும் என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த அருங்காட்சியகத்திற்கான உங்கள் பயணத்தை திட்டமிடலாம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 110

    ஸ்மித்சோனியன் நிறுவன அருங்காட்சியகம், வாஷிங்டன் டிசி, வட அமெரிக்கா

    முனைவர் சுபாஷிணி

     

    ஒரு மனிதரால் பல காரியங்களில் ஈடுபாடு காட்டமுடியுமா? பல விஷயங்களில் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய முடியுமா? தன் சுய வாழ்க்கையில் பல இறக்கங்களையும் தாக்குதல்களையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆய்வு, கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியுமா? ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு என மாறி மாறிப் பயணித்து அனுபவங்களைச் சேகரிக்கும் போதே சிறைவாசங்களையும் அனுபவித்து, பின் அவற்றிலிருந்தெல்லாம் மீறி வந்து ஆய்வுலகில் இன்பம் காண முடியுமா? இவை சாத்தியமே என்பதற்கு உதாரணம் தான் ஜேம்ஸ் ஸ்மித்சன் (James Smithson).

    இவர் பிறந்த போது இவருக்கு பிரஞ்சு பெயர் அளிக்கப்பட்டது. Jacques-Louis Macie என்பது அவரது தந்தையாரால் அவருக்கு அளிக்கப்பட்ட பெயர். பழமைவாதம் முழுமையாகக் குடிகொண்டிருந்த அன்றைய ஐரோப்பாவில், இங்கிலாந்தின் விதவைப்பென்ணான James Macieக்கும் பிரஞ்சு பிரபு Hugh Percyக்கும் மகனாக 1765ம் ஆண்டு பாரீஸ் நகரில் இவர் பிறந்தார். இவரது பிறந்த தேதியும் மாதமும் ஆவணப்படுத்தப்படாமல் ரகசியமாக மறைக்கப்பட்டது. இளம் வயதிலேயே பெற்றோரை இழக்கும் நிலை இவருக்கு ஏற்பட்டது. பெற்றோரின் குடும்பச் சொத்துக்கள் இளம்வயதிலேயே இவருக்குச் சொந்தமாகின. தனது குடும்பப்பெயரை இவரது தந்தையின் குடும்பப்பெயரான ஸ்மித்சன் என்ற பெயருக்கு மாற்றிக் கொண்டு ஜேம்ஸ் ஸ்மித்சன் என அமைத்துக் கொண்டார். பாரீசிலிருந்து இங்கிலாந்திற்குத் தனது தாயாரின் குடும்பத்தினர் பாதுகாப்பில் தம் இளம் பிராயத்திலேயே குடிபெயர்ந்தார்.


    இங்கிலாந்தில் இவரது கல்வி தொடர்ந்தது. 1782ம் ஆண்டு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் பெம்ப்ரோக் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடங்கி, 1786ம் ஆண்டு முதுகலைப்பட்டமும் பெற்று வெளிவந்தார். கல்விப்படிப்பு மட்டும் தனது சுயவளர்ச்சிக்குப் போதாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இவர் புவியியல் சார்ந்த துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தார். பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமது. நெப்போலியன் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை பயணத்தில் இருக்கும் போதே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது உறவினர்கள் நண்பர்களின் உதவியால் சிறையிலிருந்து மீண்டு வந்தார்.

    இங்கிலாந்து தாயாருக்கும் பிரஞ்சு தந்தைக்கும் பாரீஸில் பிறந்து, பின் இங்கிலாந்தில் உயர்கல்வி பெற்று, ஐரோப்பாவெங்கும் சுற்றிய ஸ்மித்சன், இத்தாலியில் 1829ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி காலமானார். பல பிரபுக்களைப் போல இவரது வாழ்க்கையும் பொருளாதார வளத்துடன் அமைந்திருந்தது. ஆனால் இவரது கவனமும் ஆர்வமும் பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் மூழ்கிப்போய் கிடந்தன. எளிய விசயமானாலும் சரி, மிக நுணுக்கமான புவியியல், வானியல் சார்ந்த ஆய்வானாலும் சரி, இவர் முழு கவனத்துடன் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார்.

    ஸ்மித்சன் தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இல்லாமையால் இவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. தனது எல்லா சொத்துக்களையும் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசி நகரில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என தனது உயிலை ஏற்பாடு செய்து வைத்தார் ஸ்மித்சன். அவரது இறப்புக்குப் பிறகு அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் அனைத்தும் அமெரிக்காவில் ஆய்வுக்குப் பயன்படும் வகையில் அருங்காட்சியகத் தொகுதியினை அமைக்கப் பயன்படுத்தப்பட்டது.

    அவர் தனது உயிலில் “I then bequeath the whole of my property, . . . to the United States of America, to found at Washington, under the name of the Smithsonian Institution, an Establishment for the increase & diffusion of knowledge among men.” என எழுதி வைத்தார். ஸ்மித்சன் இறந்தபோது அவரது உடல் இத்தாலியின் கெனோவா நகரிலேயே புதைக்கப்பட்டது. ஆனால் அலெக்சாண்டர் க்ரஹெம் பெல் அவர்கள் ஸ்மித்சன் அவர்களின் உடல் வாஷிங்டன் டிசியில் ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டும் என முயற்சி மேற்கொண்டு இத்தாலியிலிருந்து அவரது உடலைக் கொண்டு வந்து இந்த ஆய்வுக்கூடத்திலேயே அவ்வுடலைப்பதித்து வைத்து ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்பினார்.

    ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு வாஷிங்டன் டிசியில் உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் நிறுவனம் 1846ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் தேதி தொடங்கப்பட்டது. மனிதகுலத்தின் அறிவுப் பரவலை அதிகரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு அருங்காட்சியகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் உள்ளடக்கிய வகையில் ஸ்மித்சோனியன் வளாகம் அமைக்கப்பட்டது. ஜேம்ஸ் ஸ்மித்சனின் பெயரை நினைவூட்டும் வகையில் ஸ்மித்சோனியன் நிறுவனம் என்றே இது அன்று முதல் அழைக்கப்படுகின்றது.

    ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் மேற்பார்வையில் இதன் தலைமை அலுவலக வளாகத்தைச் சுற்றி பத்தொன்பது அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் மேற்பார்வையில் இயங்குகின்றன. இதைத் தவிர்த்து அரிசோனா, மேரிலாண்ட், மெசாசூசெட்ஸ், நியூயோர்க், பிட்ஸ்பெர்க், டெக்ஸாஸ், வர்ஜீனியா மாநிலங்களில் என அமெரிக்காவின் 45 மாநிலங்களில் 200 நிறுவனங்கள் ஸ்மித்சோனியன் பெயரால் இந்த ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றன. வட அமெரிக்கா மட்டுமன்றி பனாமா, போர்டோ ரிக்கோ ஆகிய நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் சேவை இயங்கி வருகின்றது.

    இந்த நிறுவனங்களில் வந்து பார்த்து பயன்படுவோரின் எண்ணிக்கை ஒரு ஆண்டிற்கு 30மில்லியனாகும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் வாஷிங்டன் டிசி சென்றிருந்த போது இந்நிறுவனத்தின் பல அருங்காட்சியகங்களை நேரில் சென்று பார்த்து குறிப்பெடுத்து வரும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஸ்மித்சனின் கைப்பட எழுதிய ஆவணங்களை நேரில் பார்த்ததும் ஸ்மித்சனின் வரலாற்றை புகைப்படங்களோடு வாசித்ததும், அவரது சேகரிப்புக்களை நேரில் கண்டதும் எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.

    கி.பி.18ம் நூற்றாண்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மாமனிதராக ஸ்மித்சன் நமக்குக் காட்சியளிக்கின்றார். ஆராய்ச்சியும் ஆய்வுத்தகவல்களும் மனித குலத்தை மேம்படுத்தும் என்பதை அவர் முழுமையாக நம்பினார். அவர் காலத்தைய எல்லா ஆய்வறிஞர்களையும் அவர் அறிந்திருந்தார். அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் அவருக்கிருந்த ஆர்வம் விரிவான நட்புச் சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மக்களின் மேம்பாட்டிற்கு ஆய்வுகள் அடிப்படை என்பதை அவர் உணர்ந்திருந்தார். தனது வாழ்க்கையை மட்டுமன்றி தனது சொத்துக்கள் அனைத்துமே மனித குல அறிவு மேம்பாட்டிற்குப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே வாழ்ந்து செயல்பட்டவர் ஸ்மித்சன். பூவுலகை விட்டு மறைந்தாலும் ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் செயல்பாடுகளால் அழியா புகழ்பெற்று வாழ்கின்றார் ஸ்மித்சன்!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 109

    அங்கோர் தேசிய அருங்காட்சியகம், சியாம் ரீப், கம்போடியா

    முனைவர் சுபாஷிணி

    உலகின் பிரமாண்டங்களில் தனக்கெனத் தனியிடம் பெறுவது கம்போடியாவின் அங்கோர்வாட். க்மேர்(Kymer) கலை பண்பாட்டு விழுமியங்கள் ஏனைய ஆசிய கலை வடிவங்களிலிருந்து வேறுபடுபவை. கி.பி.802ல் மாமன்னன் 2ம் ஜெயவர்மன் கம்போடியாவின் அரசாட்சியைக் கைப்பற்றினான். வைணவ பாரம்பரியத்தைப் பின்பற்றியது இந்த அரசு. கி.பி.12ம் நூற்றாண்டில் மன்னன் 2ம் சூரியவர்மன் அங்கோர் வாட் எனும் இந்த விஷ்ணு கோயிலை எடுப்பித்தான். விஷ்ணுவுக்காகக் கட்டப்பட்ட இக்கோயில் 2ம் சூரியவர்மனின் மறைவுக்குப் பின் சம்பா பேரரசின் தாக்குதலால் பாதிப்பைச் சந்தித்தது. அதன் பின்னர் 7ம் ஜெயவர்மன் புதிய தலைநகரை உருவாக்கி அங்கோர் தோம், பாயோன் என்ற இரு கோயிகளையும் எடுப்பித்து தனது ஆட்சியைத் தொடர்ந்தான். இக்காலத்தில் கம்போடியா பௌத்தத்தைத் தழுவி, ஒரு பௌத்த நாடாகப் பரிணாமம் பெற்றது. அடுத்த நூற்றாண்டில் பௌத்தக் கோயிலாக மாற்றம் கண்டது அங்கோர் வாட். விஷ்ணுவை மையக்கடவுளாக வைத்து அங்கோர் வாட் அமைக்கப்பட்டது. அங்கோர் பகுதியில் முதன்மை சமயமாக இருந்த வைணவம் அதன் புகழ் மங்கி, கி.பி.12ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு பௌத்தம் செழிக்கத் தொடங்கியது. இன்று கம்போடியாவின் மக்கள் தொகையில் 95% பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களே. தமிழகத்தைச் சில நூற்றாண்டுகள் ஆண்ட பல்லவ மன்னர்களின் தொடர்பு கொண்டவர்கள் பண்டைய கம்போடியாவை ஆட்சி செய்த க்மேர் பேரரசர்கள். பல்லவர்கள் எப்படி தமிழகத்தின் மாமல்லபுரம், காஞ்சி, தொண்டைமண்டலம் ஆகிய பகுதிகளில் தங்கள் நுணுக்கமானக் கட்டுமானக் கலையை வளர்த்தனரோ அதற்குச் சற்றும் குறைவில்லாது கம்போடிய க்மேர் அரசர்களும் பிரமாண்டமான கலை வடிவங்களைப் படைத்திருக்கின்றனர்.

    தமிழகத்தைப் போலவே தொடர்ச்சியாகப் பல போர்களைச் சந்தித்திருக்கின்றது கம்போடியா. கம்போடியாவின் நில அமைப்பைக் காணும் போது அது வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய மூன்று பெறும் நாடுகளை எல்லையாகக் கொண்டிருப்பதைக் காணலாம். இதுவே கம்போடியா தொடர்ச்சியாக இந்த நாடுகளை முன்னர் ஆட்சி செய்த பேரரசுகளினால் போர் தொடுக்கப்பட்டு இன்னல்களை எதிர்கொண்ட அமைதியற்ற நிலையை உருவாக்கியிருந்தது. கி.பி18ம் நூற்றாண்டில் தாய்லாந்தும் வியட்நாமும் கம்போடியாவின் மீது யார் ஆட்சி செலுத்துவது என்று பிரச்சனையை கிளப்ப, வியட்நாமிய பண்பாட்டினை கம்போடியர்கள் மீது திணிக்கும் முயற்சிகளும் எழ ஆரம்பித்தன. தாய்லாந்தும் வியட்நாமும் கம்போடியாவை இணைந்து ஆட்சி செய்யும் முடிவையும் எடுத்தன. அப்போது பிரெஞ்சுக் காலணியாக இருந்தது வியட்நாம். 1863ம் ஆண்டு தாய்லாந்தினால் கம்போடியாவில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மன்னர் நொரோடொம் ப்ரோம்போரிராக் தாய்லாந்திடம் தனது நாட்டிற்கான பாதுகாப்பிற்காக உதவி கேட்க, தாய்லாந்து மன்னருக்கும் பிரான்சுக்குமிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆயினும் பிரெஞ்சுக் காலணியாகவே கம்போடியாவின் பெரும் பகுதி இருந்தது. பின்னர் 2ம் உலகப்போரின் காலத்தில் ஜப்பானியப் படைகளின் தாக்கம், அதன் பின்னர் தொடர்ந்த வியட்நாமின் தாக்குதல் என அமைதியின்றி கம்போடிய மக்களின் வாழ்க்கை தொடர்ந்தது.

    1989ம் ஆண்டு அமைதிக்கான முன்னெடுப்புக்கள் தொடங்கின. 1991ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாரீசில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சுதந்திர கம்போடியப் பேரரசின் மன்னராக மன்னர் நோரோடோம் சிகானுக் பொறுப்பேற்றார். மாமன்னர் உள்ள நாடு என்ற போதும் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அரசியல் கட்சிகள் செயல்படும் சட்டமன்ற அமைப்புடன் கூடிய ஆட்சி இன்று தொடர்கின்றது. இப்படி தொடர்ச்சியான பலபல அரசியல் மாற்றங்களைச் சந்தித்திருக்கும் நாடுதான் கம்போடியா.

    கம்போடியாவின் முக்கிய மதமாகத் திகழ்வது பௌத்தம். இலங்கையிலிருந்து தேரவாத புத்தம் கி.பி 12ம் நூற்றாண்டில் கம்போடியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கம்போடியாவின் பல பகுதிகளில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டன. பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிலைகள் வடிக்கப்பட்டன. பிரம்மாண்டமான அங்கோர் தோம் கோயில் வளாகத்தில் வெவ்வேறு திசைகளில் அமைக்கப்பட்டுள்ள போதிசத்துவர் அவலோகதேஷ்வரரின் வடிவங்கள் உலகின் வேறெங்கும் காணக்கிடையாத அரும்பெரும் பொக்கிஷங்கள். இத்தகைய கட்டுமானக் கலை, சிற்பக்கலை ஆகியவற்றினைச் சுற்றி அமைந்த வரலாற்றினைச் சிறப்பாக பதிந்து இன்று கம்போடியா வருகின்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு வரலாற்றுத் தகவல்களை வழங்கும் ஆய்வுக்கூடமாகத் திகழ்கின்றது அங்கோர் தேசிய அருங்காட்சியகம்.

    அங்கோர் தேசிய அருங்காட்சியகம் அங்கோர் நகரைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளின் சேகரிப்புக்களை உள்ளடக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சியாப் ரீப் நகரில் உள்ள இந்த அருங்காட்சியகம் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. கீழ்த்தளம் தவிர்த்து மேலும் இரண்டு தளங்களில், எட்டு தனித்தனியான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை
    கண்காட்சி அறிமுகம்
    க்மேர் நாகரிகம்
    சமயமும் நம்பிக்கையும்
    க்மேர் பேரரசுகள்
    அங்கோர் வாட்
    அங்கோர் தோம்
    கல்லின் கதை
    அப்ஸரசுகளின் அழகு
    என்ற கருப்பொருளில் அமைக்கப்பட்டுள்ளன.

    சமயமும் நம்பிக்கையும் என்ற கருப்பொருளில் அமைந்திருக்கும் காட்சிக்கூடம் இந்த அருங்காட்சியகத்தின் தனிச்சிறப்பு எனலாம். இந்தக் கண்காட்சிப் பகுதியில் மட்டும் ஆயிரம் புத்தர் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையில் அமைந்த புத்தரின் வடிவங்கள், நின்ற நிலையில், சாய்ந்த நிலையில், அமர்ந்த நிலையில், யோக நிலையில், ஐந்தலை நாகத்தின் குடையின் கீழ் அமர்ந்த நிலையில் என பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிற்பங்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


    அங்கோர் வாட் கண்காட்சிக் கூடம் அங்கோர் வாட் கோயிலின் வரலாற்றை விளக்கும் பகுதியாக அமைந்துள்ளது. கோயிலின் ஆரம்பகால வரலாறு, பேரரசுகள், மன்னர்கள் பற்றிய தகவல்கள் என்பன போன்ற தகவல்கள் இங்குக் கிடைக்கின்றன. இதனை அடுத்து வரும் அங்கோர் தோம் கண்காட்சிப் பகுதி அங்கோர் தோம் பற்றியும் பாயோன் கோயிலைப் பற்றியும் விளக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கல்லின் கதை எனும் பகுதியில் பல்லவ கிரந்தத்திலும் சமஸ்கிருதத்திலுமான கல்வெட்டுக்கள் பல இங்குள்ளன. பண்டைய தமிழ் கல்வெட்டு ஒன்றும் இங்குள்ளது. இவை வாசிக்கப்பட வேண்டும்.

    இங்குள்ள சேகரிப்பில் புத்தர் சிலைகள் மட்டுமன்றி போதிசத்துவர், அவலோகிதேஷ்வரர், விநாயகர், விஷ்ணு, பிரம்மா, சிவலிங்க சிற்பங்களும் உள்ளன. இவற்றோடு பாயோன், பாந்தே ஸ்ரீ, அங்கோர் சிற்பக் கட்டுமானக் கலைகளை விளக்கும் உடைந்த பகுதிகளில் கண்காட்சிப் பகுதியும் உள்ளது. நுணுக்கமான க்மேர் கலை வடிவத்தின் தனித்தன்மைகளை இப்பகுதியில் கண்டு மகிழலாம்.

    வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம் அளப்பரியது. கம்போடிய மண்ணின் கலைத்திறனையும் அந்நாட்டினை ஆண்ட பேரரசுகளின் ஆளுமைத்திறனையும் படைப்புக்களையும் ஒரு சேர அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த அருங்காட்சியகம் அதற்கு நிச்சயம் உதவும். சியாம் ரீப் நகரில் தமிழ் மண்ணில் இருப்பது போன்ற உணர்வினை இங்கு செல்கின்ற ஒவ்வொருவருக்கும் தருகின்றது கம்போடியாவின் கோயிற்கலை.

    அருங்காட்சியகத்தின் முகவரி:
    No. 968, Vithei Charles de Gaulle, Khrum 6,
    Phoum Salakanseng, Khom Svaydangum,
    Siem Reap District, Siem Reap Province,
    Kingdom of Cambodia

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 108

    கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    என்ன..? கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். கசாப்புக் கடைக்கென்றே பிரத்தியேகமாக அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றியது தான் இந்தப் பதிவு.

    Humoristische Bildpostkarte der Lithographischen Kunstanstalt Junginger, erschienen aus Anlass der "Großen Deutschen Fachausstellung für Fleischerei, Kochkunst und verwandte Gewerbe", die vom 13. bis 29. Juli 1902 in der städtischen Gewerbehalle stattfand und von der Stuttgarter Fleischer-Innung organisiert wurde.
    Humoristische Bildpostkarte der Lithographischen Kunstanstalt Junginger, erschienen aus Anlass der “Großen Deutschen Fachausstellung für Fleischerei, Kochkunst und verwandte Gewerbe”, die vom 13. bis 29. Juli 1902 in der städtischen Gewerbehalle stattfand und von der Stuttgarter Fleischer-Innung organisiert wurde.

    ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இறைச்சி உணவு பற்றி விவரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. ஜெர்மனியில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் கசாப்புக் கடை பற்றிய தகவல்கள் சொல்லும் அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில், ஒரு 16ம் நூற்றாண்டு அழகிய மரவேலைப்பாட்டு கட்டிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கசாப்புக்கடை அருங்காட்சியகம்.

    unnamed (2)

    பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் இறைச்சி உணவே மக்களின் முக்கிய உணவாக அமைகின்றது. தென் அமெரிக்காவிற்கான கடல்வழிப்பயணங்கள் 14ம், 15ம் நூற்றாண்டு வாக்கில் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர்தான் ஐரோப்பாவில் உருளைக்கிழங்கும், தக்காளியும், குடை மிளகாயும், பிற ஏனைய காய்கறிகளும் அறிமுகமாகின. அதற்கு முன்னர் கோதுமை, சோளம், பயிர்கள், குறிப்பிடத்தக்க முட்டைகோஸ் வகை காய்கறிகளும், பழங்களும், ஓரிரண்டு வகை தாவரங்களும் மட்டுமே மரக்கறி உணவு வகையில் சாப்பிடப்படுவனவாக இருந்தன. இவற்றை விட ஐரோப்பிய மக்களின் மிக முக்கியமான உணவாக அமைந்தது இறைச்சி உணவு தான். அதிலும் ஜெர்மானியர்களை எடுத்துக் கொண்டால், பண்டைய ஜெர்மானிய மக்களின் உணவு கலாச்சாரத்தில் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, மான்கள், காட்டுப்பன்றி, பைசன் போன்றவை வேட்டையாடி விரும்பிச் சாப்பிடப்பட்ட உணவாக அமைந்தன.

    கோதுமை, சோளம் போன்ற தானியங்களைக் கொண்டு ரொட்டி தயாரிப்பது பண்டைய காலம் தொட்டு ஐரோப்பா முழுமைக்கும் வழக்கில் இருந்தது. பயிர்களும், காய்களும் பழங்களும் கோடைக்காலத்தில் விளைவதால் அவற்றைக் குளிர்காலத்திலும் இளவேனிர் காலத்திலும் பயன்படுத்தும் வகையில் இவற்றைப் பாடம் செய்து வைக்கும் கலையை பெருவாரியாக வளர்த்தனர். இதில் இறைச்சியைப் பாடம் செய்து பத்திரப்படுத்தும் வகை, உப்புக் கண்டம் போட்டுக் காய வைத்துப் பாதுகாக்கும் முறை, அரைத்து வெவ்வேறு பொருட்களுடன் கலந்து அவற்றைப் பதனிட்டு பாதுகாத்து ஆண்டு முழுமைக்கும் தேவைப்படும் உணவுத்தேவைக்குப் பயன்படுத்தும் முறை என இம்மக்கள் பெருவாரியாக ஆராய்ந்து இக்கலையை வளர்த்தனர்.

    unnamed (3)
    இன்றைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளுக்கான தொடர்புகள் எல்லா நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது மக்களின் கலாச்சாரத்திலும் ஊடுருவத் தொடங்கிவிட்டன. சீனர்கள், கொரியர்கள், இலங்கையர்கள், இந்தியர்கள், தாய்லாந்துக்காரர்கள், வியட்நாமியர்கள், தென் அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள், மத்திய கிழக்காசிய மக்கள் எனப்பல கலாச்சாரப் பின்னணிக் கொண்டவர்கள் ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து உள்ளூர் மக்களுடன் வாழ்கின்றனர். வந்து விட்டுச் செல்லும் விருந்தாளிகளாக இல்லாமல் ஐரோப்பாவையேத் தங்கள் வாழ்விடமாக இந்த மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்றாலும் கூட தங்கள் தாயகத்தின் உணவு முறைகளை இத்தகைய மக்கள் தொடர்ந்து இந்தப் புதிய நிலத்திலும் கடைப்பிடிப்பதால் ஐரோப்பாவின் பல மூலை முடுக்குகளிலும் ஆப்பிரிக்க உணவு, சீன உணவு, தாய்லாந்து உணவு, மெக்சிகன் உணவு, இந்திய உணவு, அரேபிய உணவு என்பவை பரவி விட்டதை இங்குக் காணப்படும் உணவகங்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம். இப்படி நிலமை மாற்றம் கண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட இறைச்சி உணவையே பிரதான உணவாக ஐரோப்பியர்கள் தொடர்கின்றனர் என்பதை இங்குள்ள பெருவாரியான உணவகங்களும் அங்காடிக் கடைகளும் கசாப்புக் கடைகளும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

    unnamed (4)

    ஜெர்மனியைப் பொருத்தவரை இறைச்சி விற்பனை என்பது நான்கு வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. பெருவாரியான சூப்பர்மார்க்கெட்டுகளில் பாக்கெட் செய்யப்பட்ட இறைச்சிகள், வாரச் சந்தையில் கசாப்புக் கடைக்காரர் விற்கும் இறைச்சி, பதப்படுத்தி சோசேஜ் வகையில் விற்கப்படும் இறைச்சி, கிராமப்பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வீட்டோடு அண்டிய வகையில் உருவாக்கியிருக்கும் கடைகளில் விற்கப்படும் இறைச்சி எனப் பிரிக்கலாம். ஜெர்மனியில் வாழும் துருக்கியரும் தங்கள் கடைகளில் மாடு, கோழி, வாத்து, போன்ற இறைச்சி வகைகளை விற்கின்றனர். இறைச்சி வகையோடு மீன்களும் கடல் உணவுகளும் இதே ரீதியில் விற்கப்படுகின்றன.

    கசாப்புக் கடைக்காரர்கள் மெட்ஸ்கர் (Metzger) என்ற ஜெர்மானியச் சொல்லால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது தொழில் பெயர். பண்டைய காலத்தில் இது குலத்தொழிலாக இருந்தது. இவ்வகை குலத்தொழில் பண்பாடு என்பது ஜெர்மனியில் கடந்த ஐந்நூறு அறுநூறு ஆண்டுக்கால கட்டத்தில் இல்லாது மறைந்து விட்டது. இன்று மெட்ஸ்கர் என்ற குடும்பப்பெயரை வைத்திருப்பவர்கள் மருத்துவராகவும், கால்பந்து விளையாட்டாளராகவும். ஆசிரியராகவும், பஸ் ஓட்டுநராகவும், பொறியியலாளராகவும் எனப் பல்வேறு தொழிலைப் புரிவோராக உள்ளனர். இதேபோன்ற நிலைதான் ஏனைய குலத்தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ளன.

    இறைச்சி உணவினைத் தயாரித்தலில் பயன்படுத்தப்படும் கருவிகள் பற்றிய தகவல்களைப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தவும், பண்டைய காலம் தொட்டு இன்று வரை கசாப்புக் கடைத் தொழிலாளர்களின் தொழில் வாழ்க்கை எப்படி அமைகின்றது என்பதை விவரிக்கும் வகையிலும் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளனர். ஏனைய அருங்காட்சியகங்களைப் போல இவை காலை முதல் மாலை வரை திறக்கப்படுவதில்லை. மாறாக நண்பகல் 12க்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு இந்த அருங்காட்சியகம் மூடப்படுகின்றது. பொது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் ஒரு விவசாயி வாழ்க்கையை விளக்கும் வகையில் காய்கறிகள், முட்டைகள், இறைச்சி போன்றவற்றை சந்தையிலிருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தியும் வைக்கின்றனர்.

    unnamed (5)

    போப்லிங்கன் நகரின் பழைய கிராமத்தின் மையப்பகுதியிலேயே பழமையான ஒரு அழகிய கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மாறுபட்ட கோணத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை இங்கு வருபவர்கள் கண்டு செல்வது இறைச்சி பதனிடும் முறைகளைப் பற்றியும் கசாப்புக் கடைக்காரர்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்குவதாகவும் நிச்சயம் அமையும்.

    இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:

    Address: Fleischer Museum Boeblingen, Marktpl. 27, 71032 Böblingen
    Phone: 07031 6691691

    அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா?

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 107

    கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம், கரூர், இந்தியா

    முனைவர் சுபாஷிணி

    கருவூர், கரூர், வஞ்சி என அழைக்கப்படும் கரூர் நகரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம் ஆகிய ஆறு வட்டங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டமாக கரூர் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த கரூர் 1995ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.

    தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சிறப்பினைக் கொண்ட நகரங்களில் கரூர் நகரமும் ஒன்று. கடந்த நூறாண்டில் கரூர் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும், அமராவதி நதிக்கரையில் கிடைத்த தொல்லியல் சான்றுகளும் தமிழகத்தின் பழம் பெரும் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் கண்டுபிடிப்புகளாக அமைந்துள்ளன. அது மட்டுமன்றி, தமிழகத்தோடு அன்றைய கிரேக்க, ரோமானியப் பேரரசு கொண்டிருந்த வணிகத் தொடர்புகளைத் துல்லியமாகச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டும் வகையிலும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி இன்றளவும் முழுமையாக தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நிலைத் தொடர்கிற அதே வேளை, இதுவரை கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகள் அளித்திருக்கும் தகவல்கள் தரும் செய்திகளான சங்ககாலம், மற்றும் அதன் தொடர்ச்சியான காலத்து வரலாற்றினை, நாம் புரிந்து கொள்ள உதவும் முக்கிய அளவு கோலாக இந்த ஆய்வு முடிவுகள் திகழ்வதை நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.

    1
    கரூர் நகரின் மையத்தில் ஒரு சாலையின் ஒரு பக்கத்தில் வரிசையாகக் கடைகள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தில் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் போது நமக்கு ஏற்படும் உணர்வு ஒரு கிராமத்துப் பலசரக்குக் கடைக்குள் நுழைவது போன்ற உணர்வினைத் தருவதாக இருக்கின்றது. அருங்காட்சியகத்தின் உள்ளே பாதுகாக்கப்படுகின்ற அரும்பொருட்களோ தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கானச் சான்றுகளாக அமைந்து நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றன. வரிசை வரிசையாகக் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும் சங்க காலத்தைய ரோமானியர்கள் தொடர்பினை வெளிப்படுத்தும் காசுகள், கரூரின் வீரர் மரபை வெளிப்படுத்தும் புலிக்குத்திக்கல் நடுகற்கள், பண்டைய தமிழர் மரபில் ஈமக்கிரியைச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி, ஓலைச்சுவடி நூல்கள் ஆகியன இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    2

    தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களுக்குக் கரூர் பகுதியின் மீது கவனம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது அமராவதி நதிக்கரையில் 1806ம் ஆண்டு வாக்கில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தில் அமைந்த பண்டைய ரோமானிய காசுகள் எனலாம். கிடைத்த குறுகிய காலத்திலேயே அவற்றில் பல காணாமல் போயின. அவற்றுள் ஒரு சில நாணயங்கள் மட்டும் அருங்காட்சியக அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டன. இப்படி சேகரித்துப் பாதுகாக்கப்பட்ட காசுகளை அறிஞர்கள் ஆராயத்தொடங்கியமைதான் இப்பகுதியில் சங்க காலத்தில் பண்டைய ரோமானிய அரசு கடல் வழி வணிகத்தை மேற்கொண்டிருந்தமையும், ரோமானியர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கியிருந்து வர்த்தக முயற்சிகளை மேற் கொண்ட செய்திகளையும் வெளிப்படுத்திய ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. தொடர்ச்சியாக கரூர் பகுதியில் பண்டைய ஆபரணங்களும் புராதனச் சின்னங்களும் மேலும் கிடைக்கவே, இப்பகுதி தொல்லியல் அறிஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் ஒரு பகுதியாக மாறியது. உலக வரைபடத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய நகரமாகவும் கரூர் நகரின் புகழ் உயர்ந்தது.

    தொடர்ச்சியாக நிகழ்ந்த ஆய்வுகள் கரூர் நகரின் பண்டைய முக்கியத்துவம் பற்றிய ஆய்வுகளை ஆராய்வதாக அமைந்தன. சேர மன்னர்களின் செயல்பாடுகள், சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடும் இலக்கியச் செய்திகள் ஆகியன கரூர் நகரம் சேரப் பேரரசின் ஆட்சி காலத்தில் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு நகரமாகத் திகழ்ந்தமையை உறுதி செய்வதாக அமைந்தது. படிப்படியாக நிகழ்ந்த இலக்கிய, தொல்லியல்,புராதனச் சின்னங்களின் ஆய்வுகள் கரூர் நகரமே பண்டைய சோழப் பேரரசின் தலைநகரமாக ‘வஞ்சி’ என்ற பெயருடன் திகழ்ந்த நகரமே இந்தக் கரூர் என்ற செய்தியையும் உலகத்திற்கு வழங்கியது. வஞ்சி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நகரம் தாம் கரூர் என்பதில் ஆய்வாளர்களிடையே இன்னமும் கருத்து வேறுபாடுகள் நிலவுவது தொடர்கின்றது. ஆயினும், கரூர் சேர பேரரசு புகழோடு இருந்த காலத்தில் அதன் தலைநகரமாக விளங்கிய ஒரு நகரமே என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.

    3
    கல்வெட்டு ஆய்வாளர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் புகழூர் கல்வெட்டினை வாசித்து ஆய்வு செய்து அதனை வெளியிட்டார். சங்க காலத்தின் மூன்று கட்டங்களிலான சேரப் பேரரசு பற்றிய விளக்கங்களில் கரூர் என ஆவணங்களில் குறிப்பிடப்படும் பகுதி புகழூரிலிருந்து ஏறக்குறைய பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதியே என்றும், சேரர்களின் தலைநகரம் கரூர் நகரமே என்றும் உறுதி படுத்துவதாக அமைந்தன அவரது ஆய்வு முடிவுகள். இது மட்டுமன்றி அன்றைய தமிழக தொல்லியல் துறையினரால் இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு, கரூரின் வரலாற்று முக்கியத்துவத்தினை உலகுக்குச் சொல்லும் பல அரும்பொருட்கள் இந்த ஆய்வுகளின் போது அகழ்ந்தெடுக்கப்பட்டன. டாக்டர். நாகசாமியின் தலைமையில் 1974ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில், சேரப் பேரரசின் சின்னமும் ‘கொல்லிரும்புறை’ என்ற எழுத்தும் பொறித்த காசு கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாணயவியல் ஆய்வாளர் தினமலர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டெடுக்கப்பட்ட பல காசுகளில் மேலும் இரண்டு காசுகளில் முறையே ”மாக்கோட்டை”, ”கூட்டுவன் கோட்டை” என்ற தமிழ்ச்சொற்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேரப் பேரரசுகள் வெளியிட்ட காசுகள் இவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

    இந்தக் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் மகுடம் வைப்பது போல அமைந்தது கரூர் நகரில் ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் கண்டுபிடிப்பான ஒரு மோதிரம். இந்த மோதிரம் 1991ம் ஆண்டு அமராவதி ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பும் அதனைத் தொடர்ந்து டாக்டர். நாகசாமியின் இந்த மோதிரம் பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் அன்று வெளியிடப்பட்டபோது தொல்லியல் அகழ்வாய்வில் மட்டுமன்றி பெருமளவில் தமிழ் ஆய்வாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட வரலாற்றுச் செய்தியாக இது அமைந்தது. 15.6 கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் அது. முகப்புப் பகுதி 5.5 மிமீட்டர் அளவுடன் அமைந்தது. அந்த மோதிரத்தின் முகப்புப் பகுதியில் கலை அழகின் உச்சம் என வர்ணிக்கத்தக்க வகையில் அமைந்த மிதுனச் சின்னம், அதாவது ஒரு ஆணும்-பெண்ணும் அன்புடன் நளினமாக நிற்கும் வகையில் அமைந்த சின்னம் ஒன்று பொறிக்கப்பட்ட வகையில் இந்த மோதிரம் அமைக்கப்பட்டிருந்தது. அச்சிறிய மோதிரத்தில் இத்தகைய ஒரு நளினம் மேலோங்கிய படைப்பினைப் படைத்த தமிழக பொற்கொல்லர்களின் நுணுக்கமான கலைத்திறனுக்கு உதாரணமாக பாராட்டுக்களுக்குரிய வகையில் இந்த மோதிரம் உருவாக்கப்பட்டிருந்தது. ஐயத்திற்கு இடமின்றி கி.பி.1 நூற்றாண்டின் சேரப் பேரரசின் அதிகாரப்பூர்வ அரச மோதிரம் இது என உறுதி செய்யப்பட்டது .

    4

    இந்த மோதிரத்தின் மேலுள்ள சங்க கால வாழ்வியலின் அடிப்படையான காதல் அன்பினைக் குறிக்கும் இந்தச் சின்னமே தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ சின்னமாக இந்த அமைப்பு உருவான 2001ம் ஆண்டு முதல் திகழ்கின்றது. அன்பினை வலியுறுத்தும் மாண்பினை வாழ்வியல் நெறியாகக் கொண்டிருந்த பண்டைய தமிழரின் மரபினையும் மாண்பினையும் பிரதிநிதிக்க இச்சின்னத்தை விட வேறெதுவும் பொருந்தாது என்பது அன்று எனக்கும் பேரா.நா.கன்ணன் அவர்களுக்கும் மனதில் எழுந்த எண்ணமாக அமைந்ததன் விளைவே இந்த முத்திரை தமிழ் மரபு அறக்கட்டளையின் சின்னமாக அமையக் காரணமாகியது.

    தமிழகத்தின் பல பகுதிகளில் வீரர்களின் வீரச்செயலைப் பிரதிபலிக்கும் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதை அவ்வப்போது ஊடகங்களின் வழி அறிகின்றோம். கரூர் நகரில் கண்டெடுக்கப்பட்ட, கரூருக்குப் புகழ்ச்சேர்க்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டு, அவை இந்தக் கருவூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. கரூரில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.பி.8ம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட இரண்டு நடுகற்களில் ஒரு நடுகல் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டும், ஒரு நடுகல் வட்டெழுத்துப் பொறித்த வகையிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுக்களே கரூர் நகரம் வஞ்சி என்றும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அழைக்கப்பட்டது என்பதை உறுதிசெய்வதாகவும் அமைகின்றன.

    கரூரில் இதுவரை அடையாளம் காணப்பட்ட வரலாற்று அரும்பொருட்கள் கூறும் தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகள் ஏராளம். இதுவரை கண்டெடுக்கப்படாமல் கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் காணப்படும் தொல்லியல் புராதனச் சின்னங்களோ ஏராளம் ஏராளம். இவற்றை எப்போது நாம் அடையாளம் காணப்போகின்றோம்? இவற்றைக் கண்டெடுத்து எப்போது நாம் அவற்றை ஆய்வுக்குட்படுத்தி தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகளையும் வாழ்வியலையும் உலகுக்கு எடுத்துரைக்கப் போகின்றோம்? இவற்றிற்கும் மேலாக, இன்று கரூர் நகரில் இருக்கும் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகத்தைப் புதுப்பித்து அதில் பாதுகாக்கப்படும் அரும்பொருட்களை மிகச் சிறப்பான முறையில் உலகுக்குக் காட்சிப்படுத்தி பெருமை கொள்ளப் போகின்றோம்?

    5

    இவையெல்லாம் இன்று நம் முன் நிற்கும் மிக முக்கியமான கேள்விகள் அல்லவா?

    ​துணை நூல்:
    “Roman Karur”, Dr.R.Nagasamy, 1995​

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 106

    உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம், ஹைடெல்பெர்க், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    மனித உடல் ஆச்சரியங்கள் பல நிறைந்த ஒரு அதிசயப் பொருள். தாயின் கருமுட்டையில் தந்தையின் விந்துக் கலப்பு நிகழ்ந்து கருத்தரிக்கும் போது ஒரு குழந்தையின் உருவாக்கம் தொடங்குகின்றது. சிறு அணுவாக உருவாகி படிப்படியாக நரம்புமண்டல வளர்ச்சி, இருதய வளர்ச்சி, உடல் உருப்புக்கள் வளர்ச்சி எனப்படிப்படியாக வளர்ந்து 10 மாதங்கள் முடிந்து முழு குழந்தையாக தாயின் கருப்பையில் இருந்து குழந்தை வெளிவருவது நிகழ்கின்றது.

    தொல்பழங்காலத்தில் பெண்ணின் வயிறு பெரிதாகி பின்னர் ஒரு மனிதக்குழந்தைப் பிறப்பதைப் பார்த்த மனிதர்கள் தம்மைப் போன்ற இன்னொரு விலங்கினை உருவாக்கும் சக்தி படைத்த பெண்ணையே தெய்வமாகச் சிலை வடித்து வழிபடும் வழக்கத்தை உருவாக்கித் தொடர்ந்தனர். உலகின் பல சமுதாயங்களில் மிகப்பழமையான தாய் தெய்வச் சிலைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் காலம் ஆராயப்பட்டு, அச்சிலைகள் உருவான பகுதிகளில் மக்கள் கொண்டிருந்த பண்பாட்டுக் கூறிகளை ஆராயும் ஆய்வுகள் பல நடந்திருக்கின்றன. இத்தகைய ஆய்வுகள் மனிதன் ஒரு குழந்தை பிறப்பை அவதானித்த தன்மைகளைக் கண்டறியும் வழிகளை ஆய்வுலகத்திற்கு வழங்கியிருக்கின்றன.

    1
    இன்று நமக்குக் கிடைக்கின்ற மிகப் பழமையான தாய் தெய்வ சிற்பங்கள் எனும் போது இன்றைய ஆஸ்திரியாவின் வில்லண்டோர்ஃப் கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கிட்டிய Venus of Willendorf என்ற தாய் தெய்வத்தைக் குறிப்பிடலாம். இதன் காலம் கி.மு. 28,000லிருந்து 25,000 எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல இன்றைய துருக்கியின் காத்தாலோயுக் (Çatalhöyük ) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட Çatalhöyük எனப்படும் தாய் தெய்வம் கி.மு. 5500லிருந்து 6000 எனக் கண்டறியப்பட்டுள்ளது, இதேபோல சிரியா, ஜெர்மனி, ஐக்கிய அரபு நாடுகள், பண்டைய பெர்சியா போன்ற நாடுகளிலும் இத்தகைய தெய்வ வடிவங்கள் பண்டைய மக்களின் வழிபாட்டில் இருந்தமையைக் காண்கின்றோம்.

    2
    மனித உடலை ஆராயும் முயற்சி பன்னெடுங்காலமாக அறிவியல் ஆய்வு நோக்கம் கொண்ட பலரால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. பல்வேறு காலகட்டங்களில் உடல்கூறு ஆய்வுகள் பல்வேறு சமூகங்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று மேற்கத்திய ஆய்வுமுறைகள் உலகாளவிய அளவில் உடற்கூறு ஆய்வில் துரித வளர்ச்சியை அறிமுகப் படுத்தி செயல்படுத்தியிருப்பதால் மருத்துவத்துறை பன்மடங்கு வேகத்தில் வளர்ந்திருக்கும் சூழலை நாம் காண்கின்றோம். தமிழகச் சூழலில் உடல்கூறு ஆய்வுகள் என்பன இன்று நமக்கு அறிமுகமான புதியதொரு ஆய்வுத்துறை அல்ல. மாறாகச் சித்த வைத்திய முறையில் எப்படி மூலிகைகளை ஆராய்ந்து நோய்களுக்குத் தீர்வைக்கண்டு பிடித்தனரோ அதே போல உடலைக் கூறு செய்து பாகங்களை ஆராய்ந்து சோதனை மேற்கொண்டிருந்தனர் நம் மூதாதையர் என்பதனை நாம் மறந்து விடலாகாது. இத்தகைய ஆய்வுகளைச் செய்தோரை நமது சமூகத்தில் சித்தர்கள் என அடையாளப்படுத்தினர். இவர்கள் ஆய்ந்தறியும் விஞ்ஞானிகள் எனக் காண்பதை விடுத்து புனிதத்துவத்தை ஏற்றி வைத்தமையால் இவர்களது ஆய்வுகளை பொது மக்கள் பெருவாரியாகக் கற்றுப் பலனடைய வாய்ப்பு கிட்டாமல் போனது ஒரு துரதிட்டமே.

    3
    4 வார வளர்ச்சியில் குழந்தை

    ஆனால் ஐரோப்பாவிலோ உடற்கூறு ஆய்வில் ஈடுபட்டோர் அவற்றை அறிவியலாகவும் அழகியலாகவும் காணும் முயற்சியைப் புகுத்தியமை உடற்கூறுகளை அறிந்து கொள்ளும் துறையில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில் வெற்றி கண்டு இதனை மருத்துவ அறிவியல் துறையாக வளர்த்துள்ளது.

    மேற்கத்திய உலகில் உடற்கூறு ஆய்வுகள் எனக் குறிப்பிடும் போது நமக்கு நன்கறிந்த லியோனார்டோ டாவின்சியின் பங்களிப்புக்கள் மிகச் சிறப்பானவை. மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு இறந்த மனிதர்களின் உடல்களைப் பெற்று, அவ்வுடல்களை கூறு செய்து, உடலின் பாகங்களைத் தனித்தனியாக எடுத்து அவற்றை ஓவியமாக வரைந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஓவியங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவருக்கு அடுத்தார் போல மேலும் பலர் தொடர்ந்தனர் என்றாலும், டாவின்சி இத்தகைய மனித உடற்கூறு பற்றிய ஓவியங்களை வழங்கி அறிவியலைக் கலைப்படப்பாக்கியதில் முன்னோடியாகத் திகழ்கின்றார் என்று குறிப்பிட வேண்டியது மிக அவசியமாகும்.

    இன்று மருத்துவ உலகம் துரித வளர்ச்சி கண்டுள்ளது. ஒவ்வொரு வினாடியும் ஏராளமான புதிய நோய்கள் உருவாகிக்கொண்டேயிருக்கின்ற அதே வேளையில் ஒவ்வொரு விநாடியும் உலகின் பல மூலைகளில் நோய்களுக்கான நிவாரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருவதும் நிகழ்கின்றது.

    4

    மென்மையான தோல் போர்த்திய மனித உடலின் மேல் அழகிய ஆடைகளும் அணிகலன்களும் போட்டு அழகு பார்க்கின்றோம். அந்த தோலுக்குக் கீழ் உள்ள பாகங்களையும் அவை செயற்படும் முறைகளையும் பொதுவாக நாம் எண்ணிப் பார்ப்பது கிடையாது. இந்த பொது நிலை இருப்பதால் நமது சிந்தனையில் மனித உடல் என்பது ஒரு புனிதப் பொருளாகவோ, அல்லது காமப் பொருளாகவோ மட்டுமே பார்க்கும் மனம் வாய்த்து விடுகின்றது. அந்தக் கோணத்திலிருந்து விடுபட்டு தோலுக்குக் கீழே மறைந்திருக்கும் தசைகள், உடல் உறுப்புகள், நரம்புகள், இரத்த நாளங்கள், எலும்புகள், எனக் காணத்தொடங்கும் போது நமக்குக் கிடைக்கும் பார்வை ஒரு மாற்றுப் பார்வையாகவே அமையும். இந்தப் பார்வையை வழங்கும் வகையில் உலகின் சில நாடுகளில் மனித உடலைக் கூறு செய்து பாடம் செய்து அவற்றை ஆய்வில் ஆர்வம் உள்ளோருக்குக் கண்காட்சியாக ஏற்படுத்தியிருக்கின்றார்கள். ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், வட அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இத்தகைய உடற்கூறு கண்காட்சிக் கூடங்கள் அமைந்திருக்கின்றன. அத்தகைய ஒரு கண்காட்சிக் கூடம் தான் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் நகரில் இருக்கும் ”உடல் உலகம் (Body Worlds) அருங்காட்சியகம்”.

    5

    ”மகிழ்ச்சியளிக்கும் உடலின் பாகங்கள்” என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு இந்த அருங்காட்சியகத்தை வடிவமைத்திருக்கின்றனர். இதனை வடிவமைத்தவர்கள் டாக்டர்.குந்தர் வோன் ஹாகென்ஸ் மற்றும் டாக்டர்.அஞெலினா வேலி ஆகிய இருவருமாகும்.

    இந்த அருங்காட்சியகத்தில் 200க்கும் குறையாத மனித உடலின் பாகங்கள் முழுமை யாகவும் பகுதிகளாகவும் எனக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்கனவாக, இங்குள்ள தாயின் கருப்பையில் வளர்ந்த 4 வாரம் தொடங்கி 8 வாரம் வரையிலான குழந்தைகளின் பாடம் செய்யப்பட்ட உடல்கள், கருகொண்ட தாயின் உடலில் குழந்தை முழுமையாக இருக்கும் வகையிலான ஒரு உடல், புகைபிடிப்பதனால் சேதப்பட்ட நுரையீரல், ரத்த நாளங்கள் பாயும் மனித முகம், தலை, மூளை, கால்கள் என்பனவற்றைக் குறிப்பிடலாம். இங்குள்ள அனைத்து மாடல்களுமே மனிதர்களது உடலுறுப்புக்களேயாகும். இறப்பதற்கு முன்னர் தங்கள் உடலை மருத்துவ சோதனைக்காக அளித்த மனிதர்களின் உடல்களே இங்குப் பாடம் செய்யப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    6

    இந்த அருங்காட்சியகத்திற்கு வருபவர்களுக்கு மனித உடலைப் பற்றி தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கின்றன. உடல் உறுப்புக்களைக் கண்டு அஞ்சுவோரும், உடலை பாவப்பொருளாகவும் புனிதப் பொருளாகவும் நினைப்போரும் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்தால் உடலைப்பற்றி கொண்டிருக்கும் சிந்தனையில், தெளிவு தரும் வகையிலான அறிவியல் பூர்வமான தெளிவினை நிச்சயம் பெற முடியும்.

    எத்தனையோ அதிசயங்களை நம் மனம் ஆசைப்பட்டுத் தேடி ஓடுகிறது. நாமே ஒரு அதிசயம் தான், நம் உடலும் ஒரு அதிசயம் தான், நம் உடலில் இயங்கும் உறுப்புக்களின் செயற்பாடுகளும் அதிசயம் தான் எனப் புரிந்து கொண்டால் பொய்யான அதிசயங்களில் நம் மனம் நாட்டம் கொள்ளாது.

    போலித்தனத்தை துடைத்தொழிப்பதற்கும், மூட நம்பிக்கைகளை மனதிலிருந்து அகற்றுவதற்கும் அறிவியல் அறிவு ஒன்று தான் ஒரே வழி. அத்தகைய அறிவியல் பார்வையை வழங்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு ஜெர்மனிக்கு வருகை தருவோர் அனைவரும் வந்து பார்த்துச் செல்ல வேண்டும். இந்த அருங்காட்சியகத்தைப் பற்றிய முழு விபரங்களையும் https://bodyworlds.com/ என்ற வலைப்பக்கத்தில் பெறலாம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 105

    மார்க்கோ போலோ அருங்காட்சியகம், வெனிஸ், இத்தாலி

    முனைவர் சுபாஷிணி

    மார்க்கோ போலோ என்ற பெயர் இன்று வணிக நிறுவனங்கள் சில தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர்களாக உள்ளன. சுற்றுலாத்துறை, உயர்தர ஆடைகள் என சில வணிக நிருவனங்கள் மார்க்கோ போலோவின் பெயரைத் தாங்கி செயல்படுவதை நாம் அறிந்திருப்போம். அந்தப் பெயருக்கு உரிய மார்க்கோபோலோ பற்றிய செய்திகளோடு இந்த அருங்காட்சியகப் பதிவு அமைகின்றது.

    1

    மார்க்கோ போலோ கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வணிகர். இவர் பிறந்து வளர்ந்தது இத்தாலியின் அழகு மிகு நகரமான வெனிஸ் நகரில். ஒரு வணிகராக உலகை வலம் வந்தவராக அறியப்பட்டவர் இவர். தன் சமகாலத்து ஏனைய கடலோடிகளை விட மார்க்கோ போலோ பல வகைகளில் சிறப்பித்துக் கூறப்படுவதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. இவரது பயணத்தில் 24 ஆண்டுகள் முழுமையாக ஆசிய கண்டத்திலேயே தன் வாழ்க்கையைச் செலவழித்திருக்கின்றார். அதுமட்டுமன்றி இவரது பயணக்குறிப்புக்கள் இன்று நம்மில் பலருக்கு ஐரோப்பா மட்டுமன்றி ஆசிய நாடுகளின் வரலாற்றின் சில பகுதிகளை அறிந்து கொள்ள உதவுவனவாக அமைந்துள்ளன எனலாம். மங்கோலிய மாவீரன் குப்ளை கான் தன் ஆளுமைக்குக் கீழ் வைத்திருந்த சீனாவிற்கு வருகை தந்து அங்கு குப்ளை கானின் விருந்தினராகவும் பல ஆண்டுகள் இருந்தார் என்பது மார்க்கோ போலோவுக்குள்ள தனிச்சிறப்பு.

    2

    மார்க்கோபோலோ பிறந்த இத்தாலியின் வெனிஸ் நகரம் ஐரோப்பாவின் வணிக மையமாகத் திகழ்ந்த காலமது. 1254ம் ஆண்டு இவர் பிறந்தார். இவரது தந்தையாரும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் கூட வணிகத்திற்காகச் செல்வது என்று மட்டுமல்லாது நாடுகளைச் சுற்றிப்பார்த்து வருவதை இயல்பாகக் கொண்டிருந்தனர். இவர்கள் குடும்பத்தினருக்கு கான்ஸ்டண்டினோப்பல் (Constantinople), அதாவது இன்றைய துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் ஒரு வர்த்தக அலுவலகம் இருந்தது. மார்க்கோபோலோவுக்கு 15 வயது இருக்கும் போது இவரது தந்தையார் நிக்கோலோவும், இவர் சிற்றப்பா மாஃபியோவும் ஒன்பது ஆண்டுகள் கிழக்கு நோக்கி அவர்கள் சென்றிருந்த பயணத்தை முடித்துக் கொண்டு வெனிஸ் திரும்பியிருந்தனர். இவ்வகை குடும்பப்பின்னணி மார்க்கோபோலோவிற்கு வணிகப் பயணங்களைப் பற்றிய இயல்பான ஒரு அறிமுகத்தை இளம் வயதிலேயே ஏற்படுத்தியிருந்தது.

    3

    ஒன்பது ஆண்டுகள் பயணத்திற்குப் பின்னர் வீடு திரும்பிய மார்க்கோபோலோவின் தந்தையும் சிற்றப்பாவும் ஆசிய கண்டத்தை நோக்கிய பயணத்தைத் திட்டமிட்டனர். இம்முறை ஆசியாவை நோக்கிய பயணமாக இது அமைந்தது. ஆசியப்பயணத்தைத் தொடங்கிய போதே இவர்களுக்குப் பயணம் நிறைவளிப்பதாக அமைந்தது. செங்கிஸ்கானின் மகன் பர்கா கானின் அரண்மனைக்குச் சென்று அங்கு இவர்கள் கொண்டு வந்திருந்த விலையுயர்ந்த ஆபரணங்களைக் காட்டி அவற்றை நல்ல லாபத்திற்கு விற்றனர். அந்தக் காலகட்டத்தில் அப்பகுதியில் போர் மூண்டது. பர்கா கானின் உதவியுடன் அங்கேயே தங்கியிருந்தனர். அந்த வேளையில் இவர்கள் தாத்தார் மொழியைக் கற்றனர். இது இன்றைய ரஷ்யாவின் ஒரு பகுதி. அக்காலகட்டத்தில் செங்கிஸ்கான் கைப்பற்றிய பல பகுதிகள் அடங்கிய பேரரசுக்குள் அடங்கிய ஒரு பகுதி எனலாம். தாத்தார் மொழியையும் பண்பாட்டையும் மார்க்கோ போலோ குடும்பத்தினர் கற்றுக் கொண்டதால் இவர்கள் பயணம் மேலும் எளிதானது. அப்போது சீனாவையும் மங்கோலியப் பேரரசு கைப்பற்றியிருந்தது அதனை குப்ளை கான் ஆட்சி செய்துகொண்டிருந்தார். போலோ சகோதரர்களுக்குத் தாத்தார் பண்பாட்டு அறிமுகம் இருந்தமையால் குப்ளை கானை சென்று காணும்படி சிலர் தூண்டவே, இவர்கள் குப்ளை கானின் அரசவைக்குச் சென்றனர்.

    குப்ளை கானுக்கு ஐரோப்பாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவல் இருந்தது. தாத்தார் மொழி தெரிந்த போலோ சகோதரர்களைச் சந்தித்தபோது மேலும் ஐரோப்பாவை அறிந்து கொள்ள இது வாய்ப்பாகும் என அவர் எண்ணினார். மார்க்கோ போலோவின் தந்தையையும் சிற்றப்பாவையும் தனது தூதுவர்களாக நியமித்து வாட்டிக்கன் நகருக்குச் சென்று அங்கு போப்பை சந்தித்து தனக்கு 100 கிறிஸ்துவ பாதிரிமார்களையும், விஞ்ஞானிகளையும் அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டார் குப்ளை கான். நிக்கோலோவும் மாஃபியோவும் குப்ளை கான் கொடுத்த தங்கத் தட்டில் தகவல் பொறித்த ஆவணத்தையும், பயணத்தில் பாதுகாப்பிற்காகக் கொடுத்த சான்றிதழையும் எடுத்துக் கொண்டு 1269ம் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.

    இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது 1271ம் ஆண்டில் இவர்கள் மீண்டும் குப்ளை கானைச் சந்திக்க வெனிஸிலிருந்து புறப்பட்டனர். அப்போது 17 வயது நிரம்பிய மார்க்கோ போலோவையும் தம்முடன் அழைத்துக் கொண்டனர். இப்பயணம் இவரது வாழ்க்கையின் முதல் பயணம் மட்டுமல்லாது முக்கியப் பயணமாகவும் அமைந்தது. குப்ளை கானின் அரசவையில் இவர்களுக்கும் இவர்கள் உடன் வந்த பாதிரிமார்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மன்னரின் அரண்மனையிலேயே இவர்கள் தங்கினர் என்றும் 25கிமீ தூர அளவிலான வனத்தில் மன்னர் தன் ஓய்வு நாட்களைக் கழித்ததைப் பற்றியும் மார்க்கோ போலோ தன் குறிப்புக்களில் எழுதியிருக்கின்றார். வெனிஸிலிருந்து குப்ளை கான் அரண்மனைக்கு வந்தவர்கள் அங்கேயே 17 ஆண்டுகள் தங்கியிருந்தனர் என்றும் இக்குறிப்புக்களால் அறிய முடிகின்றது. நில மார்க்கமாகப் பட்டுப் பாதை வழியாக முதலில் சென்று, பின்னர் கடல்மார்க்கமாக சீனாவின் ஷங்டு நகரிலிருந்து மீண்டும் தமது பயணத்தை மார்க்கோ போலோவின் குழு தொடங்கியது.

    கடல் பயணத்தின் போது இவர்கள் இந்தியாவின் தமிழகக் கடற்கரையோரப் பகுதிகளில் இறங்கி அங்கு வணிகம் செய்தனர் என்றும் பின்னர் கேரள கடற்கரை துறைமுகப் பகுதிகளிலும் மிளகு போன்றவற்றை வாங்கிக் கொண்டு வெனிஸ் நகரம் திரும்பினர் என்றும் இவரது நூல் குறிப்புக்களும் வரைபடங்களும் ஓவியக் குறிப்புக்களும் குறிப்பிடுகின்றன. ஏறக்குறைய 20,000 கிலோமீட்டர் தூரம் மார்க்கோ போலோவின் ஆசியப் பயணம் அமைந்தது. ஒரு வணிகராக, நாடோடியாக, கடலோடியாக, இவர் தன் வாழ்க்கையை, பயணத்திலேயே பல ஆண்டுகளைக் கழித்திருக்கின்றார்.

    4

    தனது 24 ஆண்டுகள் பயணத்தை முடித்து வெனிஸ் திரும்பிய மார்க்கோபோலோ, வெனிஸ் நகரில் அப்போது ஆட்சி செய்த அரசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். 1299ம் ஆண்டு விடுதலை பெற்று சிறையிலிருந்து வெளிவந்து வெனிஸ் நகரில் தன் வர்த்தகத்தொழிலை விரிவாக்கினார். அங்கேயே ஒரு பெண்ணை மணந்து அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர். 1324ம் ஆண்டு தனது 70ம் வயதில் இவர் காலமானார். வெனிஸ் நகரின் சான் லொரேன்சோ தேவாலயத்தில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மார்க்கோ போலோவின் இல்லம் இன்று ஒரு அருங்காட்சியகமாக செயல்படுகின்றது. உலகின் பல நாடுகளில் உள்ள பெரிய அருங்காட்சியகங்களில் இத்தாலிய அரசு தற்காலிக மார்க்கோ போலோ கண்காட்சியையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    5

    மார்க்கோ போலோவின் நூல் The Travels of Marco Polo அல்லது The Description of the World இவரது இளம் வயது பயணக் குறிப்புக்களுடன் தொடங்குகின்றது. இன்றும் முக்கிய வரலாற்றுத் தகவல்களை வழங்கும் முக்கிய ஆவணமாக இந்த நூல் திகழ்கின்றது. மார்க்கோ போலோ ஐரோப்பாவிலிருந்து ஆசிய பயணம் மேற்கொண்டு சீனாவை அடைந்த முதல் ஐரோப்பியர் அல்ல. ஆயினும், மிக விரிவான பயணக் குறிப்பை விட்டுச் சென்ற ஒரு பயணி என்ற சிறப்புதான் அவரது புகழுக்குக் காரணமாக இருக்கின்றது. இவரது பயணக் குறிப்புக்களையும் வரைபடங்கள் மற்றும் அவற்றின் குறிப்புக்களையும் வாசித்து, அதனால் ஈர்க்கப்பட்டு தான் கிறிஸ்டஃபர் கொலம்பஸ் போன்ற கடலோடிகள் புதிய நாடுகளைத் தேடித் தங்கள் தேடும் பயணத்தைத் தொடங்கினர் என்பதில் சந்தேகமில்லை.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 104

    கோத்தே (Goethe) அருங்காட்சியகம், டூசல்டோர்வ், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று.
    (திருக்குறள்)

    உலகில் மனிதர்கள் பிறக்கின்றோம். வாழ்கின்றோம். மறைகின்றோம். மனிதன் தான் வாழும் இப்பூமிக்கு தன் வாழ்வின் பயனாக விட்டுச் செல்லும் படைப்புக்கள் தான் உலகில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வித்தாகின்றன. உலகுக்கு நற்காரியங்களைச் செய்து நன்மைகள் படைத்துச் செல்வோரால் தான் பூமி செழிக்கின்றது. அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், கலைப்படைப்புக்களையும், இலக்கியப் படைப்புக்களையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்துச் செல்வோரே இவ்வுலகம் மேன்மையை நோக்கிச் செல்ல உதவும் கருவிகளாக இயங்குகின்றனர். அத்தகையோரில் ஒருவர் தான் கோத்தே (Johann Wolfgang von Goethe).

    as1

    யோஹான் வோல்வ்காங் கோத்தே 1749ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ம் நாள் ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரில் பிறந்தவர். கவிஞர், இலக்கியவாதி. தத்துவ அறிஞர், அரசியல் பிரமுகர், அறிவியல் ஆய்வறிஞர், தாவரவியல் அறிஞர் என்ற பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். ஜெர்மனி மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றில் பரவலாக அறியப்பட்டவர் இவர். ஆம், கோத்தே கல்விக்கழகம் (Goethe Institute) என்ற பெயரில் உலக நாடுகள் பலவற்றில் ஜெர்மானிய மொழி பாடங்களை நடத்தும் நிறுவனத்தைப் பற்றி பலர் அறிந்திருக்கலாம். மொழித்துறை என்று மட்டுமல்லாது உலகளாவிய அளவில் இலக்கியப் படைப்புக்களை அங்கீகரிக்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்தி வரும் ஒரு நிறுவனமாகவும் Goethe Institute செயல்பட்டு இன்று செயல்பட்டு வருகின்றது.

    as2

    தனது 25வது வயதிலேயே இளம் படைப்பாளியாக அறிமுகம் பெற்று சிறப்பு பெற்றவர் கோத்தே. இவரது முதல் நாவல் The Sorrows of Young Werther இன்றளவும் இலக்கிய உலகில் மிக உயர்வாகப் பேசப்படும் ஒரு படைப்பாகத் திகழ்கின்றது.

    ஆரம்பக் காலத்தில் கோத்தே லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சட்டத்துறை பட்டதாரியாக 1768ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர். சட்ட நுணுக்கங்களை அறிந்ததில் இருந்த நாட்டம் போலவே கவிதை எழுதுவதிலும் அவருக்குத் தீவிர நாட்டம் இருந்தது. லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்து பிரான்சின் எல்ஸாஸ் பகுதியில் உள்ள ஸ்ட்ராஸ்புர்க் பல்கலைக்கழகத்தில் இவர் கல்வியைத் தொடர்ந்தார். எல்ஸாஸ் நகரம் அவருக்கு விரிவான உலகத்தைக் காட்டியது. இவரது இலக்கியப் படைப்புக்கள் இக்காலகட்டத்தில் செம்மை பெற்றன. பல கவிதைகளை எழுதினார். பல கவிஞர்களின் நட்பும் இவருக்கு ஏற்பட்டது.

    வைமாருக்குச் சென்று அங்கே அந்த நகரத்தின் பிரபுவினது அமைச்சகத்தில் உயர் நிலை அதிகாரியாகப் பணியாற்றினார். உலகப்பிரசித்தி பெற்ற யேனா பல்கலைக்கழகத்தைச் சீரமைக்கும் முயற்சியில் பங்கெடுத்து கொண்டு சீரமைப்புக்குத் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தினார். வைமார் நகரின் தாவரப் பூங்கா அமைப்பில் இவரது பங்களிப்பு மிகப்பெரிது. இன்று இந்தப் பூங்கா ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருக்கும் புராதனச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றது என்பதும் இவரது சிறப்பை உலகுக்கு எடுத்துக் கூறும் சான்றாக அமைகின்றது.

    as3

    கோத்தே அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு ”தாவரங்களின் பரிணாமம்” ( Metamorphosis of Plants) என்ற தலைப்பில் அவர் எழுதி வெளியிட்ட தாவரவியல் ஆய்வு நூலாகும். இத்தாலியில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வந்ததன் பின்னணியில் இந்த நூலை எழுதி 1788ம் ஆண்டு வெளியிட்டார். தாவரவியல் அறிவியலில் ஈடுபட்டதைப் போல நிறங்களைப் பற்றிய ஆய்விலும் உடற்கூறு ஆய்விலும் இவருக்கு நாட்டமிருந்தது. இத்துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார். வைமார் நகரில் இவர் நாடக சபையின் இயக்குநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் வழி அவருக்கு ஜெர்மனியின் மிகப் பிரசித்ஹ்டி பெற்ற கவிஞராகிய ஃப்ரெடெரிக் ஷில்லர் அவர்களது நட்பு கிட்டியது. இந்த நட்பு நெடுங்காலம் நீடித்தது. வைமார் அரும்பொருள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள கல்லறையில் கோத்தேயின் சவப்பெட்டிக்குப் பக்கத்தில் ஷில்லரின் சவப்பெட்டி உள்ளது என்பதைக் கவனிக்கும் போது இந்த இரு பெரும் ஆளுமைகளும் கொண்டிருந்த நல்ல நட்பை நாம் உணர முடியும்.

    கோத்தே அவர்கள் தனது நெடுநாள் காதலியான கிறிஸ்டினாவை 1806ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 18 ஆண்டுகள் இணைந்தே வாழ்த்து பின்னர் திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணத்திற்கு முன்னரே இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் 4 குழந்தைகள் இறந்து போயினர்.

    1793க்குப் பிறகுத் தனது வாழ்க்கையை முழுமையாக இலக்கியப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார் கோத்தே. பல துறைகளில் சீரிய பணியாற்றிய இவர் 1832ம் ஆண்டு வைமார் நகரில் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.

    உலக அரங்கில் ஜெர்மனிக்குச் சிறப்பு சேர்க்கும் கோத்தே அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஜெர்மனியின் டூசல்டோர்வ் நகரில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
    Jacobistrasse 2, Schloss Jägerhof, 40211 Düsseldorf . இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை
    http://www.goethe-museum.com/de என்ற இணையமுகவரியில் காணலாம்.

    as4

    இன்று நாம் காணும் கோத்தே அருங்காட்சியகம், பெரூசிய பேரரசுக்கு (ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் தொடங்கிப் பரவலான பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு இது) சொந்தமான ஒரு அரண்மனை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் புகழ்பெற்ற பதிப்பாசிரியர்களுள் ஒருவரான ஆண்டோன் கிப்பன்பெர்க் சேகரித்த கோத்தேயின் படைப்புக்கள், சேகரிப்புக்கள் அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சேகரங்கள் ஒவ்வொன்றும் கோத்தேயின் வாழ்க்கை, அவர் மேற்கொண்ட பயணங்கள், ஈடுபட்ட ஆய்வுகள், அரசில் அவர் ஆற்றிய பணி, எழுத்துலகில் அவர் எழுதி வெளியிட்ட படைப்புக்கள், அறிவியல் ஆய்வுகள், அவரது சிறந்த படைப்புக்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

    as5

    இங்குள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக அவரது ஆரம்பக்கால வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சொல்லும் நிகழ்வுகள் கொண்ட அறை, வைமார் நகரில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள், இத்தாலி பயணம் அளித்த அனுபவங்கள் சொல்லும் ஆவணங்கள் கொண்ட அறை என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் அவரது எழுத்துப்படைப்புக்கள் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கோத்தே அவர்களின் சேகரிப்புக்கள், மற்றும் அவரது ஆய்வுப்பணி, இலக்கியப்பணி தொடர்பான ஏறக்குறைய 35,000 அரும்பொருட்கள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் நூலகத்தில் 25,000 நூல்களும், ஏறக்குறைய 35,000 ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன.

    ஜெர்மனி உலகுக்குப் பல அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், இசைக்கலைஞர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் இலக்கியவாதிகளையும் வழங்கிய நாடு. அத்தகைய அறிஞர்களுள் ஒருவராய் உலகில் ஜெர்மனியின் புகழை உயர்த்தும் ஆளுமையாகக் கோத்தே அவர்கள் திகழ்கின்றார்கள். உலக நாடுகளில் 159 இடங்களில் இன்று கோத்தே கல்விக்கூடம் செயல்பட்டு வருகின்றது. உலகின் பல நாடுகளில் ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடமாகவும், கலை, இலக்கிய பண்பாட்டு புரிதல்களுக்காகவும் இந்த அமைப்பு பங்காற்றி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102

    அப்ரோடையாஸிஸ் அருங்காட்சியகம், அனாத்தோலியா, துருக்கி

    முனைவர் சுபாஷிணி

    அப்ரோடைட் தெய்வத்தின் பெயரில் அப்ரோடையாஸிஸ் என்ற ஒரு நகரம் துருக்கியின் அனாத்தோலியா பகுதியில் உள்ளது. மிகப் பழமையானதொரு நகரம் என இது இப்பகுதியில் நிகழ்ந்த விரிவான அகழ்வாராய்ச்சிகளின் வழி கண்டறியப்பட்டது. கி.மு. 5800 வாக்கில் இங்கு ஒரு கோயில் இருந்திருக்கின்றது. அக்காலத்தில் இப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்த குடியானவ மக்கள் இங்கு இக்கோயிலுக்கு வந்து வழிபாடுகள் நடத்தியிருக்கின்றனர். அதிலும் மிக முக்கியமாகத் தாய் தெய்வம் இங்கே தலைமை தெய்வமாக வழிபடப்பட்டது என்றும் தாய்மை, மக்கள் பெருக்கம், பயிர்களின் விளைச்சல் ஆகியவற்றிற்காக இங்கே வழிபாடுகள் செய்யப்பட்டன. படிப்படியாக ஏறக்குறைய கி.மு. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தக் கோயில் கிரேக்க தெய்வமான அப்ரோடைட் தெய்வத்திற்கான ஆலயமாக படிப்படியாக உருமாற்றம் கண்டது.

    unnamed (1)

    அப்ரோடைட் (Aphrodite) கிரேக்கத்தின் காதல் தெய்வம். இத்தெய்வம் அழகுக்கும் காதலுக்கும் இலக்கணமானவள். இவளே அழகு . இந்தத் தெய்வத்தின் பெயரில் ஓர் ஊர். அப்படியென்றால் எத்தனை அழகு நிரம்பியதாக அந்த ஊர் இருக்க வேண்டும் என்று நம்மால் ஊகிக்க முடிகின்றதா?

    unnamed (2)

    பல ஆண்டுகளாக இப்பகுதியில் இருந்த அப்ரோடைட் தெய்வத்திற்கான இக்கோயில் கி.மு.74 வாக்கில் ரோமானியர்கள் துருக்கியின் இப்பகுதிக்கு வந்து தங்கள் ஆளுமையைச் செலுத்த ஆரம்பித்தப் பின்னர் மேலும் செழிப்புற்றது. அப்ரோடையாஸிஸ் நகரம் ஒரு கலாச்சார மையமாக படிப்படியாக விரிவாக்கம் கண்டது. அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பைசண்டைன் காலத்தில், இந்த அப்ரோடையாஸிஸ் நகரின் அப்ரோடைட் தெய்வம் வீழ்ச்சி கண்டது. அப்ரோடைட் கோயில் கிருத்துவ தேவாலயமாக மாற்றம் பெற்றது. அதற்கு அடுத்த காலகட்டத்தில் இதன் சிறப்பும் புகழும் மங்கிக் குறையத்தொடங்கின. துருக்கி முழுமையான இஸ்லாமிய மத நாடாக உருமாற்றம் கண்டது. இன்று அப்ரோடையாஸிஸ் ஒரு கிராமமாகவே அறியப்படுகின்றது. ஆயினும் இங்கு நிகழ்த்தப்பட்ட விரிவான அகழ்வாராய்ச்சியின் வழி அறியப்பட்ட பண்டைய நகரம் இன்று இப்பகுதியைத் துருக்கியின் முக்கியமானதொரு சுற்றுலா தளங்களில் ஒன்றாகப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.

    நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியின் அண்டாலியா நகர் சென்றிருந்தபோது ஒரு நாள் பயணமாக அப்ரோடையாஸிஸ் நகருக்கும் அதன் அருகே உள்ள பமுக்காலே நீரூற்று பகுதிக்கும் சென்று வந்தேன். உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக இடம்பெறுவது பமுக்காலே. இதனைப் பார்த்து விட்டு அப்ரோடையாஸிஸ் நகர் வந்து அங்கு காணப்படும் சிதிலமடைந்த அப்ரோடைட் காதல் தெய்வத்தின் கோயிலைப் பார்த்து அங்கிருக்கும் அருங்காட்சியகம் வந்து இங்கு சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது.

    அப்ரோடைட் ஆலயம் இருக்கும் அப்பெரும் வளாகம் முழுமையும் அருங்காட்சியகம் பகுதியில் அடங்குகின்றது. இன்று நாம் காணும் அப்ரோடைட் கோயிலின் சிதிலமடைந்த பகுதிகள் அனைத்துமே கி.பி.1ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்ட அப்ரோடைட் ஆலயத்தின் பகுதிகளாகும்.

    unnamed (3)

    அப்ரோடையாஸிஸ் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக 1979ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்ரோடையாஸிஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கிடைத்த அரும்பொருட்களே இங்கே ஆவணப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடங்கப்பட்டபோது பதியப்பட்ட ஆவணக்குறிப்பின் அடிப்படையில் ஏறக்குறைய 13,000 அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் இதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இவற்றுள் கி.மு.5000 வாக்கில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் அடங்கும் என்பது இப்பகுதி மிகப்பழமையானதொரு மக்கள் குடியிருப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாகின்றது அல்லவா?

    அனாத்தோலியாவில் உள்ள இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் அகழ்வாராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் சிலர் இப்பகுதியை அடையாளங்கண்டு இதனைப்பற்றிய செய்திகளை இங்கிலாந்தில் வெளியிட்டனர். வில்லியம் ஷெரார்ட் என்பவர் அப்ரோடையாஸிஸ் ஆலயத்தின் சிதலமடைந்த பகுதிகளின் சுவர்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகளை 1705ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளியிட்டார். 1812ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து சென்ற ஒரு குழு இப்பகுதியை ஓவியமாக வரைந்து வந்தது.

    unnamed (4)

    அதன் பின்னர் பிரெஞ்சுக்குழு ஒன்றும் இப்பகுதிக்குச் சென்று இங்குள்ள ஆவணங்களைப் பற்றிய ஆய்வுகளை நிகழ்த்தி அறிக்கைகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டது. இங்கு முதல் அகழாய்வுப் பணி 1904ஆம் ஆண்டு ஒரு பிரஞ்சுக்குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட குளியல் தொட்டிகள், கி.மு.27ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக அறியப்படும் நாடக மேடை (Theater) ஆகியவற்றை ஆலய வளாகத்தில் வெளிப்புறத்தில் இன்றும் காணலாம். முதல் அகழாய்வுப்பணிக்குப் பின்னர் மீண்டும் பல அகழ்வாய்வுப் பணிகள் இங்கேயும் இதன் அருகாமை நகர்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, இன்றைய தேதி வரை. ஒவ்வொரு ஆய்வும் பண்டைய நாகரிகங்களை அடையாளப்படுத்தும் சான்றுகளாகத் திகழும் பலப் பல அரும்பொருட்களை நமக்கு வெளிக்காட்டுவனவாக அமைகின்றன.

    இந்த அருங்காட்சியகத்தின் முகவரி
    Geyre Mahallesi, 09385 Karacasu/Aydın Province, Turkey

    unnamed (5)

    வார நாட்களில் திங்கட்கிழமை தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கின்றது. இப்பகுதிக்குச் சென்று கோயில் வளாகம், நாடகமேடை, அருங்காட்சியகம் என அனைத்தையும் பார்த்து விட்டு வரும்போது இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற உணர்வுகளுடன் தான் திரும்பி வருவோம். சில ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட இன்றும் என் மனதில் பசுமையாகக் காட்சியளிக்கின்றது அப்ரோட்டைட் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த அப்ரோடையாஸிஸ் கிராமம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102

    வோல்வோ அருங்காட்சியகம், கோத்தபெர்க், சுவீடன்

    முனைவர் சுபாஷிணி

    உலகின் உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதோடு அவ்வுயரிய தொழில்நுட்பத்தைப் பொதுமக்களும் பயன்படுத்தும் ஒரு நாடு; உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் 6வது இடத்தைப் பிடிக்கும் நாடு; குறைந்த மக்கள் தொகை; தூய்மை; தரமான சுகாதாரம்; மக்கள் வாழ்வதற்கு விரும்பி ஏற்கும் ஒரு நாடு என்ற பெருமைகள் கொண்டது சுவீடன்.

    unnamed (1)

    ஸ்கேண்டினேவிய நாடுகள் குழுவில் ஒன்றாக இடம்பெறுகிறது சுவீடன். நார்வே டென்மார்க் பின்லாந்து ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட நாடு. ஐரோப்பிய நாடுகளில் ஆங்கில மொழி பயன்பாட்டை இரண்டாம் மொழி என்ற நிலையில் வைத்திருக்கும் நாடு என்பதும் இதன் சிறப்பு. இதற்கும் மேலாக வாகன உற்பத்தியில் தனித்துவத்துடன் இயங்கும் ஒரு நாடு என்ற பெருமையும் கொண்டது. வோல்வோ கார் என்றால் நம் நினைவுக்கு வருவது சுவீடன் தானே!. ஆம் இந்த வோல்வோ கார் பிறந்தது சுவீடனின் கோத்தபெர்க் நகரில் தான்.

    2016ஆம் ஆண்டு எனது அலுவலக பணி நிமித்தமாக கோத்தபர்க் நகரில் நிகழ்ந்த ஒரு வார கால மாநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. வோல்வோ கார் நிறுவனத்தின் தாயகம் கோத்தபெர்க் நகரம் தான் என முன்னரே நான் அறிந்திருந்ததால் இந்த வாய்ப்பைத் தவற விடாமல் இங்கு அமைந்திருக்கும் வோல்வோ வாகன அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தேன். இங்குச் செல்வதற்கு எனக்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. அது என்னவெனில் நான் முதன் முதலில் கார் ஓட்டப்பழகிக் கொண்ட காலத்தில் நான் வாங்கிய இரண்டாவது கார் ஒரு பழைய வோல்வோ வாகனம். கடல் நீல வர்ணத்தில், ஏறக்குறைய 14 ஆண்டு பழமையான வாகனம் அது. ஏறக்குறைய நான்கைந்து ஆண்டுகள் இந்த வாகனம் என் பயன்பாட்டில் இருந்தது. தூரப் பயணங்கள் மேற்கொள்வதற்கு ஏற்ற வசதியானதொரு வாகனமாக அது இருந்தது. அந்த நினைவும் என் மனதில் பசுமையாக இருந்தது.

    unnamed (2)

    வோல்வோ அருங்காட்சியகம் உள்ள பகுதிக்குச் செல்வதற்குப் பேருந்து எடுத்துத் தான் சென்றிருந்தேன். அது கடற்கரையைச் சார்ந்த துறைமுகப் பகுதி. ஏறக்குறைய 3 மணி நேரங்கள் இருந்து இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகச் சுற்றிப்பார்த்தேன். வோல்வோ என்றால் நான் அன்றாட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே என்ற என் சிந்தனையை மாற்றியது இந்த அருங்காட்சியகத்திற்கான என் பயணம். ஏனெனில் வோல்வோ நிறுவனத்தாரின் கனரக தொழில்நுட்பம் என்பது பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் மட்டுமன்று, கனரக வண்டிகள், லாரிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள், விமானப்படை விமானங்கள், என பலதரப்பட்டவையாக இருப்பதை இந்த அருங்காட்சியகம் சென்றிருந்த போது அறிந்து கொள்ள முடிந்தது.

    வோல்வோ பிறந்தது 1927ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி. ஏனெனில், அன்றுதான் வோல்வோ தொழிற்சாலையில் “ஜேக்கப்” முழுமையாக்கப்பட்டு இந்த கோத்தபெர்க் தொழிற்சாலையிலிருந்து வெளியிடப்பட்டது. வோல்வோ கார் உற்பத்தி பற்றிய எண்ணம் முதன் முதலில் Assar Gabrielsson மற்றும் Gustaf Larsson ஆகிய இருவருக்கும் எழுந்தது. இந்தக் கனவு நிஜமாகியது. 4 சிலிண்டர்கள் கொண்ட OV4, PV4 வகை வாகனங்களை இந்தத் தொழிற்சாலையில் வடிவமைத்து உருவாக்கினர். 1929ஆம் ஆண்டு 6 சிலிண்டர் கொண்ட இயந்திரத்துடன் PV651 வகை வாகனத்தை உற்பத்தி செய்தனர். இது வாகன உற்பத்தியில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு இருவருக்கும் மிகப் பெரிய இலாபத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

    unnamed (3)
    1932ஆம் ஆண்டில் 10,000 வாகனங்களை உற்பத்தி செய்து வாகன தொழில்நுட்பத்தில் தன் தனித் திறமையை வெளிப்படுத்தியது வோல்வோ. இவ்வகை வாகனங்களைப் பணம் படைத்தவர்கள் மட்டுமே வாங்கக்கூடியதாக இருந்தமையால் பலதரப்பட்ட மக்களிடமிருந்து எளிய மக்களும் வாங்கிப் பயன்படுத்தி மகிழும் வண்ணம் குறைந்த பட்ஜெட் வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது. இதன் பலனாக 1936ஆம் ஆண்டில் வோல்வோ தயாரித்து வெளியிட்டதுதான் PV51 மாடல் வகையிலான கார்கள்.

    இரண்டாம் உலகப்போர் வாகன உற்பத்தியைப் பாதிக்கச் செய்தது. ஆயினும் 1944ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் வோல்வோ அதன் PV444 வகை வாகனங்களை உற்பத்தி செய்து வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் இவையே சிறிய இரகத்திலான வோல்வோ கார்கள். இந்த இரகக் கார்கள் ஏற்படுத்திய அலை 1960 வரை ஓயவில்லை எனலாம். அந்த அளவிற்கு இந்த இரக வோல்வோ வாகனங்கள் பொது மக்களால் விரும்பி வாங்கப்படும் வாகனமாகத் திகழ்ந்தது. இப்படிப் பலப்பல புதுமைகளை ஏற்படுத்தி மக்களின் தேவைக்கேற்பவும் தொழில்நுட்பத் தேவைக்கேற்பவும் தனது வாகனங்களை வெளியிடுவதில் வோல்வோ சலிக்கவில்லை எனலாம். 1927 ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முதல் 2017 நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை வோல்வோ கார் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 19,971,128 ஆகும்.

    unnamed (4)

    வோல்வோ நிறுவனமும் தொழிற்பேட்டையும் அமைந்திருக்கும் கோத்தபர்க் நகரின் துறைமுகப்பகுதியில் தான் வோல்வோ அருங்காட்சியகம் இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பக் கால உற்பத்தியிலிருந்து அதி நவீன தொழில்நுட்பம் பொருந்திய வாகனங்கள் என இங்கே நூற்றுக்கணக்கான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வோல்வோ நிறுவனம் முதலில் வெளியிட்ட Volvo ÖV4 வகை வாகனமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படியும் ஒரு அருங்காட்சியகமா என வருவோரைத் திகைக்க வைக்கும் ஒரு பிரம்மாண்டம் இந்த வாகன அருங்காட்சியகம்.

    unnamed (5)

    இங்கு வரிசை வரிசையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களைப் பார்த்து அவற்றின் தகவல்களை வாசித்து அறிந்து கொண்டே வரும்போது அலுப்பு ஏற்பட்டால் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளவும் ஆங்காங்கே நாற்காலிகளை வைத்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி வோல்வோ நிறுவனத்தின் ஆரம்பக்கால முயற்சிகள், வெளியீடுகளை விவரிக்கும் காட்சிப்படங்கள் ஒரு சிறிய பகுதியில் திரைப்படமாகவும் காட்டப்படும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆக அலுப்பே ஏற்படாமல் நிதானமாக பார்த்து இரசித்து வரலாம்.

    வாகன உற்பத்தியில் இன்று முன்னிலை வகிக்கும் நாடுகளாகத் திகழ்பவை ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கொரியா போன்ற நாடுகளாகும். இந்த வரிசையில் சுவீடனும் இடம் பெறுகின்றது. வாகன உற்பத்தியில் மக்களின் தேவைக்கேற்பவும் கால சூழலின் தேவைக்கேற்பவும் தொழில் நுட்பத்தில் மாற்றங்களைச் செய்து புதிய வடிவங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில் வாகனங்களில் புதுமைகளைச் செய்ய வேண்டிய தேவை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இன்று இருக்கும் கட்டாயத் தேவை. இதனை நன்கு கருத்தில் கொண்டு மின்சாரத்தில் இயங்கும் வாகனம், தானியங்கி வாகனம், என காலத்திற்கேற்ற வகையில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றது வோல்வோ. கடுமையான போட்டி நிலவும் இந்த வாகன உற்பத்தித் தொழிலில் இன்றும் முக்கிய இடத்தை வகிக்கின்றன வோல்வோ கார்கள். பலரால் விரும்பி வாங்கப்படும் ஒரு வாகனமாக இது திகழ்கின்றது.

    பொது மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் கார்கள் மட்டுமன்றி தனது பயணத்தைக் கடல் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளிலும் செலுத்தியுள்ளது வோல்வோ. வோல்வோவின் சிறிய வடிவிலான நீர்மூழ்கி ஆய்வுக் கப்பல்கள் சிலவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். அதோடு பனி அடர்ந்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களையும் வோல்வோ நிறுவனம் தயாரிக்கின்றது.

    சுவீடன் நாட்டிற்குச் செல்பவர்கள் தவறாமல் பார்த்து வர வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த அருங்காட்சியகம் அமைகின்றது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட செலுத்த வேண்டிய கட்டணம், திறந்திருக்கும் நேரம், சிறப்புக் கண்காட்சிகள் பற்றிய செய்திகள் அதன் அதிகாரத்துவப் பக்கமான http://www.volvomuseum.com/ என்ற பக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 101.

    பார்த்தோல்டி அருங்காட்சியகம், கோல்மார், பிரான்சு

    முனைவர் சுபாஷிணி

    அமெரிக்காவை நினைத்தால் நம் மனதில் முதலில் தோன்றுவது பிரம்மாண்டமாக நியூ யார்க் மாநிலத்தின் லிபர்ட்டி தீவில் உயர்ந்து நிற்கும் சுதந்திர அன்னையின் சிற்பம் என்றால் அதனை மறுக்க முடியாது அல்லவா? இந்தச் சுதந்திர அன்னையின் சிலை உருவாக்கத்தின் பின்னணியை அறிந்து கொள்வதும் சுவாரசியமான ஒன்று தானே.

    unnamed (1)

    முதன் முதலில் பிரஞ்சுக்காரரான எடுவர்ட் (Edouard de Laboulaye) அமெரிக்காவில் சுதந்திர சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சின்னம் ஒன்று கட்டப்பட வேண்டும் என்ற தன் கருத்தினை 1865ஆம் ஆண்டு வெளியிட்டார். இதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரஞ்சு சிற்பியான திரு.பார்த்தோல்டியிடம் (Frederic Auguste Bartholdi) இச்சிலையை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனைக் கட்டுவதற்குப் போதுமான பொருளாதார பலமின்றி இருந்த சூழலினால் பல கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும், லாட்டரி, கேளிக்கை நிகழ்வுகள் என்ற வகையிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும் இதனைக் கட்டி முடிக்கத் தேவைப்படும் பணத்தைச் சேகரிக்கும் பணி மிகத் துரிதமாகவும் விரிவாகவும் நடைபெற்றது.

    unnamed (2)

    சிற்பி பார்த்தோல்டி செம்பினால் உருவாக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவித் தேவைப்பட்டதால் ஐஃபெல் ( Alexandre Gustave Eiffel ) அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் பணியில் இணைந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டார். ஐஃபல் அவர்கள் தான் உலக அதிசயங்களில் ஒன்றாக இன்று பாரீஸ் நகரில் உயர்ந்து நிற்கும் ஐஃபெல் கட்டிடத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்தச் சிற்பம் வடிவம் பெற்று 1884ஆம் ஆண்டு முழுமை பெற்றது. ப்ரான்ஸிலிருந்து கடல் மார்க்கமாகக் கப்பலில் பயணித்து நியூ யார்க் நகரை ஜூன் மாதம் 1885ஆம் ஆண்டு வந்தடைந்தது. தனித்தனி பகுதியாக 350 பாகங்களாக 214 பெட்டிகளில் வைக்கப்பட்டு வந்த இந்தச் சிற்பம் நியூ யார்க் நகரம் வந்தடைந்த பின்னர் அக்டோபர் மாதம் 1886ஆம் ஆண்டு முழுமைப்படுத்தப்பட்டது.

    unnamed (3)

    அமெரிக்க சுதந்திர தேவி சிலையை வடிவமைத்த பிரஞ்சு சிற்பி பார்த்தோல்டி 1834ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி பிரான்சின் கோல்மார் நகரில் பிறந்தார். ”சுதந்திர சிந்தனை உலகிற்கு வெளிச்சம் தரும்” (Liberty Enlightening the World) என்ற கருத்துடன் அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை ஒரு சின்னமாக உருவாக்கியது உலகுக்கு இவர் அளித்த முக்கிய பங்களிப்பாகும்.

    பார்த்தோல்டி அடிப்படையில் இத்தாலிய, ஜெர்மானிய பின்புலத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். பிரான்சில் இளமை முதலே ஓவியம் சிற்பக்கலை என ஆர்வம் கொண்டிருந்தவர். தனது சிற்பக்கலைப் பயிற்சியைப் புகழ்மிக்க சிற்பிகளிடம் பெற்றவர். தனது சிறந்த படைப்புக்களினால் பாரிஸ் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய நகர்களிலும் சிற்பக்கலை வடிப்பதற்காக அழைக்கப்பட்டார். அதிலும் குறிப்பாக 1868ஆம் ஆண்டில் எகிப்தின் சூயஸ் கால்வாயின் கலங்கரை விளக்கத்தை வடிவமைத்துக் கட்டும் பணி இவருக்கே வழங்கப்பட்டது. “எகிப்து ஆசியாவிற்கான ஒளியை ஏந்திக்கொண்டிருக்கின்றது” (Egypt Carrying the Light to Asia) என்ற தலைப்பில் இக்கலங்கரை விளக்கத்தை அவர் வடிவமைத்தார். இது தவிர பிரான்சில், அதிலும் குறிப்பாக தான் பிறந்த கோல்மார் நகரில் புகழ்மிக்க சிற்பக்கலைப் படைப்புக்களை இவர் உருவாக்கியுள்ளார்.

    unnamed (4)

    கோல்மார் நகரில் உள்ள பார்த்தோல்டியின் பிறந்த இல்லம் இன்று அவர் பெயரில் இயங்கும் அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. ஒரு சிறிய அரண்மனை போன்ற கட்டிடம் இது. மூன்று மாடிக் கட்டிடத்தில் பார்த்தோல்டி அவர்களின் அனைத்து படைப்புக்களைப் பற்றிய தகவல்களும் சிற்பங்களும் இடம் பெறுகின்றன. அமெரிக்க சுதந்திர தேவி சிலை செய்வதற்காக அவர் செய்த முதல் மாடல் அமைப்பும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    unnamed (5)

    இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
    30 rue des Marchands, 68000 Colmar, France

    அருங்காட்சியகம் பற்றிய மேலதிகத் தகவல்களை www.musee-bartholdi.com என்ற வலைப்பக்கத்தின் வழி அறியலாம். இந்த அருங்காட்சியகம் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் மூடப்பட்டு ஏனைய நாட்களில் காலை 10 முதல் மாலை 6 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை வடித்த பெருமையைப் பிரான்சு பெறுகின்றது. பார்த்தோல்டியின் ஒளி மிகுந்த சிந்தனையின் சிற்ப வடிவமாக இந்தச் சிலை அமைந்திருக்கின்றது!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 100.

     வீல்ஸ்கா உப்புச் சுரங்கம், க்ராக்காவ், போலந்து

    முனைவர் சுபாஷிணி

    உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது நம் வழக்கில் உள்ள பழமொழி. எவ்வளவு தான் சுவையாகச் சமைத்தாலும், ஒரு துளி உப்பில்லாவிட்டால் அந்த உணவே பாழ் தான். உலக மனிதர் அனைவருமே உப்பினை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். கடற்கரையோரங்களில் தான் உப்பளங்கள் பொதுவாக இருக்கும். ஒரு நாட்டின் மையப் புள்ளியிலே நிலத்துக்குக் கீழே 327 மீட்டர் ஆழத்தில் ஒரு உப்புச் சுரங்கம் இருக்கின்றது. அதனோடு இணைந்தார் போன்ற, உப்பினாலேயே வடிக்கப்பட்ட ஒரு சிற்பக் கலைக்கூடமும் இருக்கின்றது. அதனோடு இணைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமும் இருக்கின்றது. இதனைக் காண வேண்டுமா? அப்படியென்றால் நாம் போலந்து நாட்டின் கிராக்காவ் நகரத்துக்குத் தான் செல்ல வேண்டும்.

    as1

    க்ராக்காவ் நகருக்கு அருகே இருக்கும் ஊர் வீல்ஸ்கா. இந்த நகரின் பெயரிலேயே இந்த உப்புச் சுரங்கம் செயல்படுகின்றது. இங்கு நிலத்தின் அடியில் உப்புப் பாளங்களைச் சுரண்டி எடுத்து வந்து அவற்றை விற்பனை செய்வது இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்பதைக் கேட்கும் போது இதன் பழமையை நினைத்து ஆச்சரியம் ஏற்படுகின்றது அல்லவா?

    இங்கே உள்ளே செல்வதற்குக் கட்டணம் கட்ட வேண்டும். தனியாக யாரும் செல்ல அனுமதி கிடையாது. ஆக ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து விளக்கம் சொல்லும் வழிகாட்டிகள் உதவியுடன் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். உள்ளே நுழைந்ததும் நாம் மரப்பலைகைகளால் அமைக்கப்பட்ட படிகளில் இறங்கி நடக்க வேண்டும். ஏறக்குறைய450க்கும் குறையாத படிகள் உள்ளன. கீழே இறங்கியதும் முதலில் தென்படுவது ஒரு ரகசிய அறை. அந்த அறை பொதுவாகவே பூட்டப்பட்டிருக்கும். நான் சென்ற வேளை என்னுடன் கூடுதலாக 2 அமெரிக்க பெண்களும் வந்திருந்தனர். ஆகவே கூட்டம் குறைவு என்பதால் எங்கள் வழிகாட்டி அந்த ரகசிய அறையை எங்களுக்குத் திறந்து காட்டினார். உள்ளே உப்புப்பாறைகளினாலேயே செதுக்கப்பட்ட அன்னை மேரியின் சிற்பமும் முக்கிய கத்தோலிக்க குருமார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்ட ஒரு தேவாலயமே கண் முன்னே இருந்தது. இது என்ன உலக அதிசயமா, என வியந்து நின்ற எங்களுக்குச் சிறு விளக்கம் அளித்து விட்டு, வாருங்கள் இன்னும் இருக்கின்றது .. இதை விடப் பிரமாதமாக எனச் சொல்லி அழைத்துச் சென்றார் எங்கள் வழிகாட்டி.

    as2

    கி.பி 13ம் நூற்றாண்டில் இங்கு உப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே இதனை வணிகமாக்கும் பொருட்டு உள்ளே சுரங்கப்பாதையைத் தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். தோண்டப்பட்ட சுரங்கப்பாதையில் கீழே குதிரைகளை எடுத்துச் சென்று வண்டிகளை உருவாக்கி, தண்டவாளங்களை உருவாக்கி, சாலைப்பகுதிகளை உருவாக்கி உப்பினை தோண்டத் தோண்ட அவற்றை வெளியே எடுத்து வரத் தேவையான கருவிகளை படிப்படியாக உருவாக்கியிருக்கின்றனர்.

    as3

    சுரங்கத்திற்குள் செல்லும் போது பாதையைத் தவிர்த்து உப்பு சுவர்களில் பொதிந்து காட்சியளிக்கின்றது. உள்ளே காற்று மிதமாக இருக்கின்றது. உள்ளே நடக்கும் போது நாம் சுவாசிப்பது பல தாதுப்பொருட்கள் கலந்த ஆக்ஸிஜன் காற்று என்பதால் உடலுக்கு நன்மை தரும் ஒரு பயணமாகவும் இந்த சுரங்கப்பாதை பயணம் அமைந்தது. சுரங்கப்பாதை உள்ளே வளைந்து வளைந்து செல்லும் வகையில் அமைத்திருக்கின்றனர். இதன் மொத்த நீளம் 287 கிமீட்டர் ஆகும். ஏறக்குறைய 4 மணி நேரங்களை உள்ளே அந்தச் சுரங்கப்பாதைக்குள் நாங்கள் செலவிட்டமையால் ஏறக்குறைய 5 கிமீ தூரம் நடந்திருப்பேன் என்றே கருதுகிரேன்.

    இந்த உப்புச் சுரங்கத்திற்குள்ளே நீர் தேங்கிய குளங்கள் இருக்கின்றன. இங்குப் பணியாற்றிய சுரங்கத் தொழிலாளர்கள் பல நாட்கள் வெளியே செல்ல முடியாத சூழலில் சுரங்கத்திற்குள்ளேயே இருந்து பணிபுரிந்தனர். இவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக அச்சுரங்கத்திற்குள் ஏறக்குறைய 7க்கும் மேற்பட்ட தேவாலயங்களைக் கட்டியுள்ளனர். ஒவ்வொன்றிலும் மேரி மாதாவும். சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிருத்துவும் உள்ள வகையில் உப்பு பாறைப்படிவங்களால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன.

    as4

    இந்த உப்புச் சுரங்கத்தின் மையப்பகுதி உலகப் பிரமாண்டங்களில் ஒன்று எனத் தயங்காது கூறலாம். ஒரு மிகப்பெரிய அரண்மனையில் விருந்தினர் பகுதியின் அலங்கரிப்பு போல சுவர்களில் நிறைந்துள்ள சிற்பங்களின் அழகை வர்ணிக்க சொற்கள் கிடையாது. கனவுலகத்தில் இருக்கின்றோமா என நம்மையே நாம் கேட்டுக் கொள்ளும் வகையில் இந்த மையப்பகுதியை வடிவமைத்திருக்கின்றனர். இங்கு சுவரில் புடைப்புச் சிற்பங்களாக உள்ள அனைத்துச் சிற்பங்களுமே உப்புப் பாளங்களினால் மட்டுமே தயாரிக்கப்பட்டவைதாம் என்பதே இதன் தனிச்சிறப்பு எனலாம். இந்த கலைப்படைப்புத் தொகுதியில் புதிதாக இணைந்திருக்கும் சிற்பம் மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜோன் பவுல் அவர்களின் சிற்பமாகும். இவரது சிற்பமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    உலகப் பிரமாண்டங்களில் ஒன்றாகத் திகழும் இந்த உப்புச் சுரங்கம் 1978ம் ஆண்டு யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னமாக அங்கீகாரம் பெற்றது. 2007ம் ஆண்டு வரை இங்கு உப்பு உற்பத்தி தொழில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 2007ம் ஆண்டு முதல் இங்கு உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு சுற்றுலா தளமாக மட்டுமே இது இன்று இயங்கி வருகின்றது.

    as5

    இந்த உப்புச் சுரங்கத்திற்குள் உள்ள சிற்பங்களில் கிருத்துவ மத சார்புள்ள சிற்பங்களைத் தவிர்த்து முக்கியஸ்தர்களின் சிலைகளும் இங்கே உப்புப்பாளங்களினால் வடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மன்னர் கசிமியர், நிக்கோலவுஸ் கோப்பர்நிக்கஸ், யோஹான் வோல்வ்காங் ஃபோன் கோத்த, அலெக்ஸாண்டர் ஃபோன் ஹும்போல்ட், பில் கிளிண்டன் ஆகியோரது சிற்பங்களைக் குறிப்பிடலாம். பிரபலங்கள் மட்டுமன்றி உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களும் வேலையை விவரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிற்பங்களும் இங்கே உள்ளன. குதிரையில் பூட்டிய உப்புக்கட்டிகளைத் தூக்கிச் செல்லும் மனிதன், பாறைகளைத் தீ வைத்து உடைக்கும் தொழிலாளி, குளத்தைத் தூய்மை செய்யும் தொழிலாளி என இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த சுரங்கப்பாதைப் பணிகளை விவரிக்கும் வகையில் இந்தச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.

    as6

    போலந்து ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நாடு. ஆக ஐரோப்பாவின் பல நாடுகளுக்குப் போலந்திலிருந்து வர்த்தகம் நடைபெற்ற மிகப்பிரபலமான நகரமாக க்ராக்காவ் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதன் முக்கியத்துவம் இன்றைய பொருளாதார மாற்றத்தால் சற்றே சரிந்திருந்தாலும் கூட இப்பகுதி ஐரோப்பாவின் மிக முக்கிய வணிகப்பாதையில் அமைந்திருக்கும் ஒரு பகுதி. ஆக இங்கிருந்து தோண்டப்பட்ட உப்பு பல்வேறு இடங்களுக்கு ஆற்றின் வழியாகவும் தரை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டது என்பது வரலாறு.

    அருங்காட்சியகங்களில் பல வகை உண்டு. உலக அதிசயங்களில் ஒன்று அருங்காட்சியகமாகக் காட்சி தரும் அமைப்பாகவே, வருவோரை வியப்பில் ஆழ்த்தும் வீல்ஸ்கா உப்புச் சுரங்கமும் அதன் அருங்காட்சியகமும் விளங்குகின்றன.

    Share