அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102
அப்ரோடையாஸிஸ் அருங்காட்சியகம், அனாத்தோலியா, துருக்கி
முனைவர் சுபாஷிணி
அப்ரோடைட் தெய்வத்தின் பெயரில் அப்ரோடையாஸிஸ் என்ற ஒரு நகரம் துருக்கியின் அனாத்தோலியா பகுதியில் உள்ளது. மிகப் பழமையானதொரு நகரம் என இது இப்பகுதியில் நிகழ்ந்த விரிவான அகழ்வாராய்ச்சிகளின் வழி கண்டறியப்பட்டது. கி.மு. 5800 வாக்கில் இங்கு ஒரு கோயில் இருந்திருக்கின்றது. அக்காலத்தில் இப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்த குடியானவ மக்கள் இங்கு இக்கோயிலுக்கு வந்து வழிபாடுகள் நடத்தியிருக்கின்றனர். அதிலும் மிக முக்கியமாகத் தாய் தெய்வம் இங்கே தலைமை தெய்வமாக வழிபடப்பட்டது என்றும் தாய்மை, மக்கள் பெருக்கம், பயிர்களின் விளைச்சல் ஆகியவற்றிற்காக இங்கே வழிபாடுகள் செய்யப்பட்டன. படிப்படியாக ஏறக்குறைய கி.மு. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தக் கோயில் கிரேக்க தெய்வமான அப்ரோடைட் தெய்வத்திற்கான ஆலயமாக படிப்படியாக உருமாற்றம் கண்டது.
அப்ரோடைட் (Aphrodite) கிரேக்கத்தின் காதல் தெய்வம். இத்தெய்வம் அழகுக்கும் காதலுக்கும் இலக்கணமானவள். இவளே அழகு . இந்தத் தெய்வத்தின் பெயரில் ஓர் ஊர். அப்படியென்றால் எத்தனை அழகு நிரம்பியதாக அந்த ஊர் இருக்க வேண்டும் என்று நம்மால் ஊகிக்க முடிகின்றதா?
பல ஆண்டுகளாக இப்பகுதியில் இருந்த அப்ரோடைட் தெய்வத்திற்கான இக்கோயில் கி.மு.74 வாக்கில் ரோமானியர்கள் துருக்கியின் இப்பகுதிக்கு வந்து தங்கள் ஆளுமையைச் செலுத்த ஆரம்பித்தப் பின்னர் மேலும் செழிப்புற்றது. அப்ரோடையாஸிஸ் நகரம் ஒரு கலாச்சார மையமாக படிப்படியாக விரிவாக்கம் கண்டது. அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பைசண்டைன் காலத்தில், இந்த அப்ரோடையாஸிஸ் நகரின் அப்ரோடைட் தெய்வம் வீழ்ச்சி கண்டது. அப்ரோடைட் கோயில் கிருத்துவ தேவாலயமாக மாற்றம் பெற்றது. அதற்கு அடுத்த காலகட்டத்தில் இதன் சிறப்பும் புகழும் மங்கிக் குறையத்தொடங்கின. துருக்கி முழுமையான இஸ்லாமிய மத நாடாக உருமாற்றம் கண்டது. இன்று அப்ரோடையாஸிஸ் ஒரு கிராமமாகவே அறியப்படுகின்றது. ஆயினும் இங்கு நிகழ்த்தப்பட்ட விரிவான அகழ்வாராய்ச்சியின் வழி அறியப்பட்ட பண்டைய நகரம் இன்று இப்பகுதியைத் துருக்கியின் முக்கியமானதொரு சுற்றுலா தளங்களில் ஒன்றாகப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.
நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியின் அண்டாலியா நகர் சென்றிருந்தபோது ஒரு நாள் பயணமாக அப்ரோடையாஸிஸ் நகருக்கும் அதன் அருகே உள்ள பமுக்காலே நீரூற்று பகுதிக்கும் சென்று வந்தேன். உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக இடம்பெறுவது பமுக்காலே. இதனைப் பார்த்து விட்டு அப்ரோடையாஸிஸ் நகர் வந்து அங்கு காணப்படும் சிதிலமடைந்த அப்ரோடைட் காதல் தெய்வத்தின் கோயிலைப் பார்த்து அங்கிருக்கும் அருங்காட்சியகம் வந்து இங்கு சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது.
அப்ரோடைட் ஆலயம் இருக்கும் அப்பெரும் வளாகம் முழுமையும் அருங்காட்சியகம் பகுதியில் அடங்குகின்றது. இன்று நாம் காணும் அப்ரோடைட் கோயிலின் சிதிலமடைந்த பகுதிகள் அனைத்துமே கி.பி.1ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்ட அப்ரோடைட் ஆலயத்தின் பகுதிகளாகும்.
அப்ரோடையாஸிஸ் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக 1979ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்ரோடையாஸிஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கிடைத்த அரும்பொருட்களே இங்கே ஆவணப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடங்கப்பட்டபோது பதியப்பட்ட ஆவணக்குறிப்பின் அடிப்படையில் ஏறக்குறைய 13,000 அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் இதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இவற்றுள் கி.மு.5000 வாக்கில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் அடங்கும் என்பது இப்பகுதி மிகப்பழமையானதொரு மக்கள் குடியிருப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாகின்றது அல்லவா?
அனாத்தோலியாவில் உள்ள இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் அகழ்வாராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் சிலர் இப்பகுதியை அடையாளங்கண்டு இதனைப்பற்றிய செய்திகளை இங்கிலாந்தில் வெளியிட்டனர். வில்லியம் ஷெரார்ட் என்பவர் அப்ரோடையாஸிஸ் ஆலயத்தின் சிதலமடைந்த பகுதிகளின் சுவர்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகளை 1705ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளியிட்டார். 1812ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து சென்ற ஒரு குழு இப்பகுதியை ஓவியமாக வரைந்து வந்தது.
அதன் பின்னர் பிரெஞ்சுக்குழு ஒன்றும் இப்பகுதிக்குச் சென்று இங்குள்ள ஆவணங்களைப் பற்றிய ஆய்வுகளை நிகழ்த்தி அறிக்கைகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டது. இங்கு முதல் அகழாய்வுப் பணி 1904ஆம் ஆண்டு ஒரு பிரஞ்சுக்குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட குளியல் தொட்டிகள், கி.மு.27ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக அறியப்படும் நாடக மேடை (Theater) ஆகியவற்றை ஆலய வளாகத்தில் வெளிப்புறத்தில் இன்றும் காணலாம். முதல் அகழாய்வுப்பணிக்குப் பின்னர் மீண்டும் பல அகழ்வாய்வுப் பணிகள் இங்கேயும் இதன் அருகாமை நகர்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, இன்றைய தேதி வரை. ஒவ்வொரு ஆய்வும் பண்டைய நாகரிகங்களை அடையாளப்படுத்தும் சான்றுகளாகத் திகழும் பலப் பல அரும்பொருட்களை நமக்கு வெளிக்காட்டுவனவாக அமைகின்றன.
இந்த அருங்காட்சியகத்தின் முகவரி
Geyre Mahallesi, 09385 Karacasu/Aydın Province, Turkey
வார நாட்களில் திங்கட்கிழமை தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கின்றது. இப்பகுதிக்குச் சென்று கோயில் வளாகம், நாடகமேடை, அருங்காட்சியகம் என அனைத்தையும் பார்த்து விட்டு வரும்போது இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற உணர்வுகளுடன் தான் திரும்பி வருவோம். சில ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட இன்றும் என் மனதில் பசுமையாகக் காட்சியளிக்கின்றது அப்ரோட்டைட் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த அப்ரோடையாஸிஸ் கிராமம்.