மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -15
க. பாலசுப்பிரமணியன்
திருக்காவலம்பாடி
அருள்மிகு கோபாலகிருஷ்ணப் பெருமாள் திருக்கோவில்
கவளச் சோறைக் களிப்புடன் ஏற்கும்
கரியின் துயரைக் கண்ணனே துடைக்கக்
கலியினை நீக்கும் காவலன் புகழைக்
கற்களில் வடித்த காவலம் பாடி !
நெருப்பினில் பிறந்தவள் நெருப்பாய் எரிந்திட
நினைப்பாய் நின்றவள் நினைவாய் மறைந்திட
உமையாள் நினைவில் உருத்திரன் ஆடினான்
இமைகள் அசையா அமரர்கள் நடுங்கிட !
சினத்தில் சிவந்தது சிவனின் சிந்தை
சிதறிய கனலாய் சிகையும் வீழ்ந்திடச்
சீறிய நெருப்பில் பதினோரு சிவனே
சீற்றத்தை தணித்திட சேர்ந்தனர் அமரரே !
அமரர்கள் வேண்டிட அரங்கனும் வந்தான்
அமைதியைக் காக்க அரனிடம் வேண்டினான்
அச்சுதன் கண்டே அமைதியைப் பெற்றான்
ஆடியபாதன் வேண்டினான் அரங்கனின் அருளே !
பதினோரு வடிவில் கண்ணனின் கருணை
பாலகன் கோவிந்தன் பசுவுடை கோபாலன்
பரவசம் கொடுக்கும் பதினோரு வடிவங்கள்
பார்த்ததும் சிவனே பதுமையாய் நின்றான்.!
மனத்துள்ளே நீயிருந்தால் மங்கலமே பொங்கிவிடும்
மலரடிகள் நீதந்தால் மாயையெல்லாம் விலகிவிடும்
மாதவனே ! யாதவனே ! மனமிரங்கி அருள்தருவாய்
மார்கழியில் பேரருளை உனையன்றி யார்தருவார் ?