“ஸ்ரீராம தர்ம சரிதம்” (21)
மீ.விசுவநாதன்
பகுதி: 21
பாலகாண்டம்
“மிதிலைக்குப் பயணம்”
சங்கம உதய காலை
சரியாய்த் தன்கடன் செய்ய
மங்கல மூர்த்தி கதிரோன்
மரங்கள் நதிகள் மீது
தங்கமாய் ஒளியைப் பரப்பி
தர்ம ரதத்தில் வந்தான்
தங்களின் கடமை முடித்து
தவத்தோன் மிதிலை நடந்தார் !
ஜனகரின் மிதிலை நகர்க்குச்
சரியாய்க் கொஞ்சம் முன்னால்
வனத்தினைக் கண்ட ராமன்
மனங்கொள் இந்தக் காட்டின்
வனப்பினைக் காணும் போது
வாழ்ந்த முனிகள் பேறு
நினைவிலே வருகு தென்று
தெளிந்த குருவைப் பார்த்தான் !
“கௌதம முனிவரின் ஆஸ்ரமம்”
இத்தனை அழகு கொண்ட
இந்தக் காட்டில் முன்பு
முத்தியைக் கொள்ளும் எண்ண
முனிவர் நற்கௌ தமரே
பத்தினி அகலி கையைப்
பக்கம் வைத்தி ருந்தார் !
சித்தமே குளிரும் வண்ணம்
சிறப்புடன் வாழ்ந்து வந்தார் !
“தவத்தின் வலிமையையும், பயமும்”
வந்தனைக் குரிய முனியின்
வளர்ந்திடும் தவத்தின் சக்தி
இந்திரன் மனத்தில் பயத்தை
எழுப்பி விட்ட தாலே
அந்தவோர் முனிக்குக் கோபம்
அலைபோல் பொங்கச் செய்ய
சிந்தனை செய்த வேளை
சிறுமை பொங்கி நின்றான்.
“கௌதமர் போல் வந்த இந்திரன்”
அகலிகை அழகில் மயங்கி
அவளின் கணவன் போல
முகமதை மாயம் செய்து
மோக முடனே வந்தான்
அகமதில் அழகா ணவத்தால்
அவளும் வீழ்ந்து பட்டாள் !
நகநுனி அழுக்கு அங்கே
நாவில் நஞ்சு ஆச்சு !
“முனிவர் தந்த சாபம்”
முனிவரும் வந்தார் உடனே
முகத்தில் கோபம் சீற
“இனிஉன் ஆண்மை நீங்கி
இன்னல் கொள்வாய்” என்று
தனியொரு தேவ ராஜன்
சாபம் கொள்ள வைத்தார் !
இனிதொரு மனைவி பார்த்து
இழிவாம் காம இச்சைப்
பழியிலே வீழ்ந்த நீயோ
“காற்றை மட்டும் உண்டு
வழியிலே யார்க்கும் தெரியா
வகையில் வனத்தில் வாழ்வாய் !
பழியிலா இராமன் பார்வை
பட்ட வேளை மற்றோர்
விழிகளில் தெரிவாய்” என்று
இமயம் சென்று விட்டார் !
“அகலிகை சாபம் நீங்கியது”
இப்படிப் பட்ட காட்டில்
இராமா உள்ளே வாவா !
தப்படி வைத்த பெண்ணை
தயைசெய் தருள்வாய் என்று
செப்பிய குருவை வணங்கி
சென்றான் காட்டிற் குள்ளே !
அப்பிய சாபம் நீங்கி
அகலி கைத்”தாய்” தெரிந்தாள் !
“இராமன் அம்மா என்று அழைத்தான்”
இருகையைக் கூப்பிக் கொண்டு
இராமன் “அம்மா” என்று
திருவடி தொழுது நின்றான் !
தேவர் குலமும் வாழ்த்த
குருமுனி, இராமன் யார்க்கும்
பூசை செய்து பணிந்தாள் !
கருமமே தவமாய் வாழும்
கௌத மரும்பூ சித்தார் !
“மிதிலை நகருக்குப் பயணம்”
முறைப்படி பூசை ஏற்று
முன்னம் திட்டப் படியே
கறையிலா சனக மன்னர்
கனிவாய் ஆளும் நாடாம்
நிறைமொழி பெரியோ ராலே
நிறைந்த மிதிலை நோக்கி
மறைமொழி அறிந்த குருவின்
வழியில் நடந்தான் இராமன்.
(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 48,49ம் பகுதி நிறைந்தது)