மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -16
க. பாலசுப்பிரமணியன்
திருக்கச்சியூர்
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில்
வெள்ளைத் தாமரை வெறிச்சென நின்றது
வீணையின் நரம்புகள் தளர்ந்தே துடித்தன
வேதங்கள் ஒலியில் வாட்டமும் தெரிந்தது
வாணியின சினத்தினில வானமே இருண்டது !
வேகத்தில் வந்தாள் வேள்வியைத் தடுக்க
வேதவன் நான்முகன் வேதனை கொள்ள
வேகவதி வழியை வாமனன் தடுத்து
வேதங்கள் காத்து வரதனாய் நின்றான்
நான்முகன் வேள்வியை நசுக்கிடத் துடித்த
நாமகள் தூதர்கள் நடுங்கிட வைக்க
நாரணன் வலிமையை நானிலம் கண்டது
நாதத்தின் தேவி நல்லெண்ணம் பெறவே !
வரையின்றித் தருபவனே வரதப்பா வைகுந்தா
நிறைவான மனம் வேண்டும் நீதருவாய் !
குறையாத பேரின்பம் குலம்காக்கும் நல்லெண்ணம்
மறைக்காட்டும் நல்வழியும் தருவாயே நன்மதியே !
அலர்மேல் மங்கையவள் அன்போடு துணையிருக்க
அசையாத விழியோடு அமரர்கள் பார்த்திருக்க
ஆதிசேடன் குடைபிடிக்க அமர்ந்தாயே அழகாக
அடியார்கள் குறைகேட்க அருளாளா வைகுந்தா
மல்லாண்ட தோளுடையோய் ! மலைவாழும் பேறுடையோய் !
மனையாளை இதயத்தில் ஆட்கொண்ட மாண்புடையோய் !
மதியறிந்த மலரெல்லாம் மணம்நிறையச் சேர்த்துவைத்து
மலரடியில் வைத்தாலும் மங்கிடுதே நின்னொளியில் !