அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 113.

புனித அன்னை தேவாலய அருங்காட்சியகம், ஹாலே, ஜெர்மனி

முனைவர். க.சுபாஷிணி

கிருத்துவ சமயத்தில் உள்ள உட்பிரிவுகளில் மிக முக்கியமானது சீர்திருத்தக் கிருத்துவம். கி.பி.1706ம் ஆண்டு தமிழகத்தின் தரங்கம்பாடி எனும் கடற்கரையோர நகரத்திற்கு ஜெர்மனியிலிருந்து வந்திறங்கிய இரண்டு லூத்தரன் பாதிரிமார்களே தமிழகத்தில் இந்தச் சமய சித்தாந்தம் காலூன்ற அடிப்படையை வகுத்தவர்கள். அவ்விருவரும் பாதிரியார் பார்த்தலோமஸ் சீகன்பால்க் மற்றும் பாதிரியார் ப்ளெட்சோ ஆவர். தமிழகத்தின் தரங்கம்பாடியில் பள்ளிக்கூடம் அமைத்தது, அச்சுக்கூடத்தை அமைத்து தமிழ், போர்த்துகீசிய, ஆங்கில மொழி நூல்களை அச்சிட்டது எனத் தொண்டாற்றியது என்பதோடு இவர்களுக்குப் பின் ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த ஏனைய பாதிரிமார்கள் கடலூர், திருநெல்வேலி, மெட்ராஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தச் சீர்திருத்த கிருத்துவ சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதோடு சமூக கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் என்பது வரலாறு. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமைவது லூத்தரேனிய ப்ரோட்டஸ்டன் கிருத்துவம் அல்லது சீர்திருத்த கிருத்துவம் என அழைக்கப்படும் ஒரு மத அமைப்பாகும். இந்த மதத்தைத் தோற்றுவித்தவர் மார்ட்டின் லூதர் ஆவார்.


மார்ட்டின் லூதர் (Martin Luther) ஜெர்மனியின் தென் கிழக்கு மாநிலமான சாக்சனி (Saxony) மாநிலத்தில் உள்ள ஐஸ்லேபன் (Eisleben) என்னும் சிற்றூரில் 1483ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். இவரது தந்தையார் கரி ஆலையில் பணிபுரிந்தவர். மார்ட்டின் லூதர் தன்னைப் போல் ஒரு தொழிலாளியாக இல்லாமல் கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் எனக் கனவு கண்டவர் இவர். தனது மகன் கல்வியில் தேர்ச்சி பெற்ற ஒரு வழக்கறிஞராகப் பணி புரிந்து வளமாக வாழ வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது . 1490ம் ஆண்டு மான்ஸ்ஃபெல்ட் (Mansfeld) நகரப் பள்ளியில் லத்தின் மொழியில் பாடங்கள் கற்று, பின்னர் 1497ல் மெக்டபர்க்கிலும் (Magdeburg) 1498ல் ஐசெனாஹ் (Eisenach) நகரிலும் உயர்கல்வியைத் தொடர்ந்தார் மார்ட்டின். 1501ம் ஆண்டு எர்ஃபூர்ட் பல்கலைக்கழகத்தில் (Erfurt University) இளங்கலை கல்வி கற்கப் பதிவு செய்துகொண்டார். 1502ம் ஆண்டில் அவருக்குக் கலைத்துறையில் இளங்கலை பட்டம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைக் கல்வியையும் முடித்து 1505ம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார் மார்ட்டின் லூதர். அதே ஆண்டு சட்டத்துறை மாணவராகவும் தன்னைப் பதிந்து கொண்டார் மார்ட்டின் லூதர். இந்தக் காலகட்டத்தில் அவரது வாழ்வில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அவருக்கு சமயத்துறையின் பால் தீவிரமான நாட்டத்தை வளர்த்தன. சமயத்துறையில் ஆர்வம் கொண்டு தன் கல்வியை ஒரு கத்தோலிக்க மடாலயத்தில் தொடர விரும்பினார்.

ஜூலை மாதம் 1505ம் ஆண்டில் மார்ட்டின் லூதர்,செயிண்ட் ஆஸ்டின் (St.Austin) மடாலயத்தில் துறவியாக இணைந்தார். மிகுந்த கடமை உணர்ச்சியுடனும் கட்டுப்பாடுகளுடனும் கல்வி கற்று கத்தோலிக்க சமய குருவாக 1507ம் ஆண்டில் இவர் தேர்ச்சி பெற்றார்.

அன்றைய கத்தோலிக்க தலைமைப்பீடத்தின் தலைவராக இருந்த போப் 10ம் லியோ அவர்கள் ரோம் நகரில் இருக்கும் செயிண்ட் பீட்டர் பாசிலிக்கா (St. Peter’s Basilica) தேவாலயத்தைக் கட்டும் பணிக்காக சில செயற்பாடுகளை முன்னெடுத்தார். இந்த நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்ட பாவமன்னிப்பு தொடர்பான நடவடிக்கைகள் மார்ட்டின் லூதருக்குப் பெருத்த கோபத்தை உருவாக்கியது. தனது சிந்தனைகளைக் கட்டளைகளாக எழுதினார். இந்த 95 கட்டளைகளைத் தான் இறையியல் பேராசிரியராகப் பணிபுரிந்த அதே விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தின் உள்ளே இருக்கும் தேவாலயத்தின் வாசல் கதவில் ஆணி அடித்து அதனைத் தொங்க வைத்தார். இந்த 95 கட்டளைகளாவன பாவமன்னிப்பு என்ற கொள்கையை ஊழல் நிறைந்த வகையில் சமய நிறுவனம் பயன்படுத்துவதைச் சாடும் வகையில் இருப்பதை எதிர்க்கும் வாசகங்களாகும். அக்கால அச்சுத்தொழில் வளர்ச்சியும் மார்ட்டின் லூதரின் எதிர்மறை கருத்துக்கான பிரச்சாரத்திற்குத் துணை கொடுக்கும் வகையில் அமையவே, இரண்டே வார இடைவெளியில் மார்ட்டின் நூதரின் இந்த 95 கட்டளைகள் அடங்கிய துண்டுப் பிரச்சாரங்கள் பரவலாக ஐரோப்பா முழுமையும் விநியோகப்படுத்தப்பட்டன.

மக்கள் நம்பிக்கையுடன் வாசித்து இறைவனை உணரப் பயன்படுத்தும் நூல் மக்கள் பேசும் மொழியிலேயே இருக்க வேண்டும் என சிந்தித்ததோடு, லத்தீன் மொழி பைபிளின் புதிய ஏற்பாட்டை, ஜெர்மானிய மக்கள் பேசும் டோய்ச் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார் மார்ட்டின் லூதர். இதன் தொடர்ச்சியாகப் படிப்படியாக லூத்தரன் கொள்கைகள் இவரால் வளர்க்கப்பட்டன. பலர் இவரது சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இவரது பெயரில் உருவாகிக் கொண்டிருந்த லூத்தரேனிய திருச்சபையை பின்பற்றுவோராகினர். 1525ம் ஆண்டில் இவர் கத்தரினா ஃபோன் போரா (Katharina von Bora ) என்ற பெண்மணியை மணந்தார். கத்தரினா முன்னாள் கன்னிகாஸ்திரியாக இருந்து கத்தோலிக்க திருச்சபையிலிருந்து வெளிவந்து விட்டன்பெர்க் லூத்தரன் திருச்சபையில் இணைந்தவர். இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தனர்.

மார்ட்டின் லூதர் 1533 முதல் தனது மறைவு வரை, அதாவது 1546 வரை, விட்டர்ன்பெர்க் பல்கலைக்கழகத்திலேயே இறையியல் துறை தலைமைப் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். 1546ம் ஆண்டு பெப்ரவரி 18ம் தேதி விட்டன்பெர்க் நகரிலிருந்து ஐஸ்லேபன் நகர் வந்திருந்தபோது அவர் காலமானார்.

மார்ட்டின் லூதர் 1546ம் ஆண்டு ஐஸ்லேபன் நகரில் இறந்தபோது அவரது உடல் ஹாலே நகருக்குக் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தேவாலயத்தில் (market church) மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. புகைப்படக்கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் நினைவாக அவர்களது உருவங்களை ஓவியங்களாகத் தீட்டுவது ஒரு நடைமுறை. அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மெழுகு முகமூடி தயாரித்தல் என்பது மற்றுமொரு நடைமுறை. இது பண்டைய எகிப்தில் ஃபாரோக்காளுக்கு இறக்கும் போது அளிக்கப்படும் மரியாதையை ஒத்த ஒரு கலை என்றே கருத இடமுண்டு. ஏனெனில் பண்டைய எகிப்தில் இறந்த மாமன்னர்களுக்கு பிரமிட்களை எழுப்பி அங்கு பதப்படுத்தப்பட்ட (மம்மி) அவர்களது உடலை ஒரு மரத்தாலான அல்லது தங்கப் பேழைக்குள் வைத்து முகத்தில் தங்கத்தாலான முகமூடியை அணிவித்து அவர்களுக்கு மேலுலகத்தில் தேவைப்படும் எனக் கருதி விலையுயர்ந்த ஆபரணங்களையும் மற்ற பொருட்களையும் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது.

இதுவும் கூட பழங்குடி மக்களின் பண்பாட்டு எச்சம் என்றே காணத்தோன்றுகிறது. முகமூடிகளணிந்து சடங்குகளில் பங்கெடுக்கும் கலையை இன்றும் கூட ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே நாம் காணலாம்.

இத்தகைய முகமூடி அமைக்கும் ஒரு கலை ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது என்பதை கடந்த ஓரிரு நூற்றாண்டு வரை நாம் காணலாம். அந்த வகையில் மார்ட்டின் லூதருக்கு முகமூடி (Death Mask) அமைக்கப்பட்டது. மார்ட்டின் லூதரின் நண்பரும் அவருடைய முன்னாள் மாணவருமான, முதல் ப்ரோட்டஸ்டன் சமய போதகரும் மார்க்கெட் தேவாலயத்தின் குருவுமான ஜூஸ்டூஸ் யோனாஸ் மார்ட்டின் லூதர் காலமான போது அவருடன் இருந்தார். அவர் மறைந்த மறுநாள் அதாவது 19ம் தேதி காலையின் லூக்காஸ் ஃபூர்ட்டெனாகல் (Luckas Furtenagel) மரணப் படுக்கையில் இருந்த மார்ட்டின் லூதரின் உருவத்தை வரைந்தார். அவரே இந்த மெழுகினால் ஆன முகமூடியையும் செய்ய அமர்த்தப்பட்டார் எனக் கருதப்படுகிறது. அதற்குப் பின்னர் மார்ட்டின் லூதரின் சவப்பெட்டி மூடப்பட்டு அவரது பூத உடல் விட்டன்பெர்க் கொண்டு செல்லப்பட்டு அங்குப் புதைக்கப்பட்டது. இதனால் மார்ட்டின் லூதரின் இறுதி நிகழ்வு நடைபெற்ற சிறப்பினைப் பெறுகின்ற தேவாலயமாக இது கருதப்படுகின்றது.

இந்தத் தேவாலயத்தில் மார்ட்டின் லூதர் 1545லும், இரு முறை 1546லும் வந்து பிரசங்கம் செய்தார். அவர் நின்று பிரசங்கம் செய்த பல்பிட் எனப்படும் பிரசங்க மேடை இதே அறையில் உள்ளது.

இந்தத் தேவாலயம் 1529ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் 1554ம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றன என்றும் அறிகின்றோம். இக்கட்டிடத்தைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர் பிராண்டென்புர்க் மற்றும் மக்டெபுர்க் கத்தோலிக்க அமைப்பின் தலைவராக இருந்த கார்டினல் அல்ப்ரெட். இவருக்கும் மார்ட்டின் லூதருக்கும் சமய தத்துவ அடிப்படையில் இருந்த கடும் போட்டியின் இறுதியில் மார்ட்டின் லூதரின் கருத்துக்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பதோடு கார்டினல் அல்ப்ரெட் தமது பதவியைத் துறந்து மாநிலத்திலிருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் இம்மாநிலம் முழுமையாக லூதரேனிய ப்ரோட்டஸ்டன் மதத்தை ஏற்ற ஒரு மாநிலமாக படிப்படியாக மாற்றம் கண்டது.

மார்ட்டின் லூதரின் வாழ்க்கையில் ஐஸ்லேபனும் விட்டன்பெர்க் நகரங்களும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனவோ அதே அளவிற்கு ஹாலே நகரமும் முக்கியத்துவம் வகிக்கின்றது. மார்ட்டின் லூதரை ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் கடந்தும் நாம் நேரில் காணும் அனுபவத்தை ஹாலே நகரிலுள்ள மார்க்கெட் தேவாலய அருங்காட்சியக அறை நமக்கு வழங்குகின்றது. ஒவ்வொரு நாளும் இந்தத் தேவாலயம் திறந்திருக்கின்றது. அருங்காட்சியகத்திற்குச் செல்ல சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்தத் தேவாலயத்தின் முகவரி Marktkirche Unser Lieben Frauen, An der Marienkirche 2, 06108 Halle (Saale) என்பதாகும். ஹாலே நகரின் புகழை மட்டுமல்ல, ஜெர்மனியின் புகழையும் உயர்த்தும் ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை!

துணைநூல்கள் –
http://www.bargaintraveleurope.com/17/Germany_Market_Church_Martin_Luther_Halle_Saale.html
தேவாலயத்தில் உள்ள வருகையாளர் குறிப்புக்கள்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க