-முனைவர் நா.பிரபு

சிறுகதைகள்

தமிழ் அறிவுச் சமூக மரபில்  விந்தன் எழுதத் தொடங்கிய காலம், படித்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கே எழுத்தும் இதழ்களும் சொந்தம் என்று எண்ணிய சூழல் நிலவிய காலமாகும். அத்தகைய சூழலில் எழுதிய விந்தனின் சிறுகதைகளைப் பற்றி “ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு சாதியரைப் பற்றியே வந்துகொண்டிருந்தன. எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தபடியால் அந்தச் சாதியினரைப் பற்றியே கதைகள் எழுதப்பட்டன. அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ்நடை, பிராமணக் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது. பிராமண எழுத்தாளர் கஷ்டப்பட்டு வேறு சாதியினரைப் பற்றிக் கதை எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை, உடை, பாவனைகள் அவ்வளவு சரியாக இருப்பதில்லை. இந்தச் சமயத்தில் நவயுக புதுமலர்ச்சி எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ருஷ்யக் கதைகளையும் மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள். அந்தக் கதைகளைப் போல் இந்த நாட்டு ஏழை எளியவர்களையும் உழைப்பாளி மக்களையும் பற்றிய கதைகள் எழுதத் தொடங்கினார்கள். விந்தன், உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகளின் சுக துக்கங்களை இதயம் ஒன்றி அனுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர். அந்த உணர்ச்சிகளை இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் பலவற்றின் மூலம் அவர் திறம்பட எழுதியிருக்கிறார். அவருடைய கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணி தூக்கம் இல்லாமல் தவிக்க நேரும்” (முல்லைக் கொடியாள், முன்னுரை) என்று கல்கி அவர்கள் கூறுமளவிற்கு விந்தனின் சிறுகதைகள் படிப்பவர்களின் மனத்தை உருக்குவன.

மேலும், சமுதாய விரோதி என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள தேற்றுவார் யார்? என்னும் சிறுகதையைப்பற்றி கி.சந்திரசேகரன் அவர்கள் “முகத்தைச் சுளிக்காது எதிர் கொண்டழைக்கத் தகுந்தவைகளில் விந்தன் தரும் புத்தகம் சேர்க்கப்பட வேண்டியதே. ஆழ்ந்த மனச்சூழல்களில் நம்மைச் செருகும் தன்மை பெற்றவை. இங்குள்ள கதைகளில் சில ஒரு முறைக்கு இருமுறையாக அவற்றின் கருத்து நம்மை துழாவ வைப்பதற்குக் காரணம் அதுவே. அபிப்பிராயத்தின் தொனி விஷேசம் சில சமயம் நம் உள்ளங்களைத் தொட்டுவிடுகிறது. சில வேளைகளில் உலுக்கியும் விடுகிறது. இதற்குச் சான்று தேற்றுவார் யார்? என்ற சிறுகதை” (சமுதாய விரோதி, முன்னுரை) எனக் கூறுகிறார்.

ஏழையின் குற்றம் என்னும் கதையில் வரும் செட்டியார், தன் வேலைக்காரனான சின்னசாமிக்கு தரும் இன்னல்களை விந்தன் இவ்வாறு பதிவு செய்கின்றார். “வழக்கம்போல் அன்று இரவு பத்து மணிக்குப் பிறகு நான் போயிட்டு வரேனுங்க! என்றான் சின்னசாமி.

”என்னடா இவ்வளவு சீக்கிரம்! என்று கேட்டார் செட்டியார்.

இனிமேதான் என் கூலியை எடுத்துக்கிட்டுப் போய் ஏதாச்சும் வாங்கிக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கணும். அவ வேற காத்துக்கிட்டுக் கிடப்பா. குழந்தைகள் வேற அழுதுக்கிட்டு இருக்கும்.

அதற்கு நீ வேலை பார்க்கக் கூடாது. வீட்டிலேயே அடைந்து கிடக்கணும்.

கோவிச்சுக்காதீங்க சாமி இன்னும் ஏதாச்சும் வேலையிருந்தா சொல்லுங்க செஞ்சிட்டு போறேன்.

சரிதான் இந்த அரிசி மூட்டையை எடுத்துக்கிட்டுப்போய் நம் வீட்டுலே போட்டுவிட்டுப் போடா! என்று சொல்லி அன்றைய கூலி ஆறணாவை எடுத்து அவனிடம் கொடுத்தார் செட்டியார்.

இப்படிக் கூலி கொடுக்கும்போதெல்லாம் செட்டியார் தினசரி தம் வீட்டு வேலை ஏதாவது ஒன்றைச் சின்னசாமிக்கு இடுவது வழக்கம். இந்த வேலைக்குக் கூலி கிடையாது. கூலி கொடுக்கும் வேலைக்கு இவையெல்லாம் கொசுறு வேலைகள்.

சின்னசாமிக்குச் செட்டியார் இப்படி எத்தனையோ கொடுமைகளை கொடுத்தபோதிலும் அவன் அவர்முன் வாய்திறந்து ஒரு வார்த்தை பேசியதில்லை” எனக் காட்டுகிறார். இந்நூலுக்கு மு.வ. அவர்கள் “விந்தன் எய்யும் சொல்லம்புகள் குறி தவறாமல் பாய்கின்றன. சமூகத்தை அவர் சிற்சில இடங்களில்தான் நேராகத் தாக்குகிறார். பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை. இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக்காட்டி பேசாமல் கதை சொல்கிறார். அவர் படைக்கும் பாத்திரங்கள் பெரும்பாலும் அப்பாவிகளே. அவர்களுக்குச் சமூகத்தின்மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதேயில்லை. ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது; ஆத்திரம் பொங்குகிறது.

விந்தன் நோக்கம் என்ன என்பதை அவருடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்திலிருந்தும் இலக்கிய நோக்கிலிருந்தும் நாம் கண்டுகொள்ள முடிகிறது. வாழ்வின் கசப்பான அனுபவங்களை முழுவதுமாகப் பெற்றவர் என்ற காரணத்தினால் அவர் வாழ்வு நோக்கு என்பது மிகத் தெளிவாக உருவாகியுள்ளது. அவர் சாதாரண மனிதனுக்காக இலக்கியம் படைக்கப் புகுந்தவர். அவர் அடிப்படையில் உலக இயக்கங்களை மிகப் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் காணும் மனப்போக்கு அவரிடம் உள்ளது. உழைப்பவனுக்கும் வீணில் உண்டு களித்திருப்பவனுக்குமான போராட்ட உலகைக் காண்கிறார் விந்தன்” (ஒரே உரிமை, முன்னுரை) எனத் தம் கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

விந்தன் நடுத்தர வர்க்கத்தைப்பற்றியும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சீரழிவுகள், சிக்கல்கள் பற்றியும் விவரிக்கும் கதைகள் பல எழுதியுள்ளார். விந்தன் கதைகளைப் பற்றி கல்கி இதழின் முன்னாள் துணை ஆசிரியர் எஸ்.வேங்கட சுப்பிரமணியம் “விந்தன் கதைகள் மகாகவி தாகூர் கதைகள் மாதிரி இருக்கின்றன” (விந்தன், ப.43) எனக் கூறியுள்ளார். அத்தகைய நடுத்தர வர்க்கத்தைப் பற்றிய கதைகள் சில:

“முதல்தேதி நடுத்தரவர்க்கத்தில் ஒரு நம்பிக்கையான சொல். ஒரு மாதம் முழுவதும் கடன் வாங்குபவன் கடன்காரனுக்குச் சொல்லும் ஒரே பதில் ‘முதல்தேதி தருகிறேன்’ என்பதுதான். குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாக அமைவது முதல்தேதிதான்.

பிரசவத்துக்கு வந்திருக்கும் தங்கையை ஊருக்கு அனுப்புவது முதல், பிள்ளைகள் கேட்கும் நாடகம், சினிமா முதற்கொண்டு அனைத்துக்கும் ஒரே பதில் முதல்தேதிதான்.

சிக்கனமாக குடும்பம் நடத்த வேண்டும் என்பது மனைவியின் ஆசை.பார்க்கப்போனால் நம்மைக் காட்டிலும் வாழ்க்கையில் குறைந்த அளவு தேவையுடன் திருப்தியடைபவர்கள் வேறு யாருமே இருக்க மாட்டார்கள்.

ஏன் இல்லை? எத்தனையோ பேர் இருக்கிறார்கள். முனியன், மூக்கன், தொப்பை, சப்பை என்று இல்லையா?

அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? பிறர் வாழ்வதற்காக நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பிரெஞ்சு அறிஞன் ஒருவன் ஜனங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறான். மேல் வகுப்பு, கீழ் வகுப்பு, மத்திய வகுப்பு என்று அவன் பிரித்திருக்கிறான்.

மேல் வகுப்பினர் சுதந்திரத்தை விலைக்கு வாங்குகிறார்கள். கீழ் வகுப்பினர் சுதந்திரத்தை விலைக்கு விற்கிறார்கள் என்று அவன் சொல்கிறான். இந்த இரு வகுப்பினர்களுக்கும் இடையில் இரண்டும் கெட்டானாக இருந்து கொண்டு அவதிப்படுபவர்கள்தான் நம்மைப் போன்றவர்கள். நம்முடைய சூழ்நிலை வேறு, அவர்களுடைய சூழ்நிலை வேறு. இவையனைத்தையும் கூட்டிக் குழப்பி ஒன்று சேர்க்க முயல்கிறார்கள் அரசியல்வாதிகள்” என்று தம் ஆழ்மனத்தின் எண்ணக் குமுறல்களை ‘முதல்தேதி’ என்னும் கதையின் வழி வெளிப்படுத்துகிறார்.

மேலும் நடுத்தர வர்க்கத்தினர் முதல்தேதி ஒன்றை எதிர்பார்த்திருப்பினும் அத்தேதியில் அவர்களின் தேவைகள் நிறைவேறுகின்றதா என்பதையும் இவ்வாறு பதிவு செய்கிறார். “அவன் எதிர்பார்த்த முதல்தேதியும் வந்தது. வாங்கிய சம்பளத்தைக் கடன்காரர்களுக்குக் கொடுத்துவிட்டு மிச்சம் இருந்த ஒரு ரூபாயை முழுசாகக் கொடுத்தான் இந்த மாத குடும்ப செலவுக்கு என்று மனைவியிடம்.

பின்னர் பிள்ளைகள் சர்க்கஸ், சாக்லெட், சைக்கிள் என்றார்கள். அனைவருக்கும் ஒரே பதில் முதல்தேதி, முதல்தேதி!

இந்த முதல்தேதிக்கு முடிவே கிடையாதா? அவர்கள் வாழ்வு முடியும் வரையில் அதற்கு முடிவே கிடையாது” என்பதையும் பதிவு செய்துள்ளார். கீழ்த்தட்டு மக்களின் போராட்டங்களை அறிந்துள்ளமை போலவே நடுத்தரவர்கத்தினரின் வாழ்வியலையும் அறிந்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் திறம்பட வலியுறுத்துகிறார் விந்தன்.

இசுலாமிய சமூகத்தினரைப் பற்றி அன்பும் அதிகாரமும், தங்க வளையல் ஆகிய கதைகளின் வழி பேசுகிறார். சரித்திர, புராணக் கதை மாந்தர்களைப் பற்றி கதைகள் எழுதாத விந்தன் சமகால மக்களின் வாழ்வியலையே எழுதியவர். ஆயினும் கற்பனையில் எழுதிய இசுலாமிய அரசரின் கதைதான் ‘அன்பும் அதிகாரமும்’ என்னும் சிறுகதை. அக்கதையில் வரும் அரசன் அன்பை அதிகாரத்தால் அடைய நினைக்கின்றான். அன்பை விலை பேசுகிறான். அதனை விற்பதற்கும் வாங்குவதற்கும் யாருக்கும் உரிமை இல்லை என அறிந்து ஆத்திரப்படுகிறான். அச்சமயத்தில் பாதுஷா முல்லாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசவைக் கூடுகிறது. அனைவரும் வருகின்றனர். அப்பொழுது ஒரு மான் குட்டியுடன் கவி இசா வருகின்றான்.

அந்த மான் குட்டியின் மீது ஆசைப்படுகின்றாள் இராணி ஜிஜியா. தன் விருப்பத்தை அரசனிடம் சொல்ல, அரசன் இராணியின் விருப்பத்தை கவி இசாவிடம் தெரிவிக்கின்றான். இதனை விந்தன் இவ்வாறு பதிவு செய்கின்றார். “ராணி மான் குட்டியிடம் மனத்தைப் பறிகொடுத்தாள் சரி. மான் குட்டி ராணியிடம் மனத்தைப் பறி கொடுத்ததா? பின்னர், அன்புக்கும் அதிகாரத்துக்கும் விவாதம் நீடிக்கின்றது. கடைசியில் கவி சிறையிலும் மான் குட்டி அரசு உத்தியான வனத்திலும்.” எனக் காட்டியுள்ளார்.

கவியைத் துறந்து உயிர் வாழ முடியாத மான் உணவை, உறக்கத்தை மறந்து ஒரு நாள் உயிரை விட்டது. அதை அறிந்த கவியும் தானும் பறந்து செல்வதாகக் கூறி பறந்து சென்றான். மான் இறந்து விட்டதை அறிந்த அரசன் அன்பின் மகிமையை வியந்து கவியிடம் மண்டியிட்டு மன்னிக்கும்படி வேண்டுகிறான். அல்லா உன்னை ஒரு நாளும் மன்னிக்கமாட்டார் என்கின்றான். மனம் நெகிழும்படியான இக்கதையை உணர்வுபூர்வமான உரையாடல்கள் மூலமும் இசுலாமிய சமுதாயத்தின் மொழியாலும் சிறப்பாகப் படைத்துள்ளார்.

சிறுகதை, நாவல்களில் எள்ளல் தன்மையுடன் கருத்துக்களை கூறிச்செல்லும் விந்தன் முழுமையான நகைச்சுவைக் கதைகளையும் எழுதியுள்ளார். கவிதைத் துறையில் கவிதைகள் எழுதித் தம்மை கவிஞர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு மாறாக, தாகூர் மாதிரி தாடி வளர்த்துக் கொள்வது, குர்தா அணிவது, இப்படி உடையால் தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட கவிஞர் ஒன்பாற்சுவையாரை எவரும் கவிஞர் என்று அழைக்கவில்லை. அதுவே அவருக்கு கெளரவக் குறைவாகப்பட்டது.

‘நமக்குத் தொழில் கவிதை’ என்று அவரே முழுநேரக் கவிஞராக ஆகிவிட்டார். ஆனால் காசுதான் அவரை நெருங்கவில்லை. கவிஞருக்கு கவிதை பிறந்ததோ இல்லையோ கவிதாதேவி என்னும் பெண் குழந்தை பிறந்தது. வாழ்க்கைக்குக் காசு வேண்டும் என்ற எண்ணத்தில் கவிஞர் ஒன்பாற்சுவையாரின் இல்லத்தரசி இன்பவல்லி அம்மையார் இட்லி, வடை கடைகளை நடத்தினார். இட்லி கிடைத்துச் சட்னி கிடைக்காததால் ஆத்திரத்தில் கவிஞர் பாடினார்.

வேதனை வேதனை வேதனை
வேதனை போயின்
சோதனை சோதனை சோதனை
இட்லி இட்லி இட்லி
இட்லிக்கு வேண்டும்
சட்னி சட்னி சட்னி

அச்சமயத்தில் வீட்டு வாசலில் மகிழுந்து ஒன்று நின்றது. அதிலிருந்து இறங்கியவர் ஐந்நூறு ரூபாய்க்குக் காசோலை எழுதி கவிஞர் ஒன்பாற்சுவையாரிடம் கொடுத்துவிட்டு நாளை அலுவலகத்திற்கு வரும்படி சொல்லிவிட்டுச் சென்றார். அவ்வளவுதான் ஒன்பாற்சுவையார் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.

மறுநாள் அவரின் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே உம்மைப் பாட்டு எழுத அழைக்கவில்லை. பின்னணி பாடத்தான் அழைத்தோம் என்று சொன்னதைக் கேட்டவுடன் மீண்டும் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.
“இத்தனைக்கும் நான் அப்படியொன்றும் கேட்டுவிடவில்லை.
ஆனப்பட்ட கம்பனே தன்னைத்தானே ‘கவிஞன்’ என்று அழைத்துக்கொள்ளாதபோது நீங்கள் ஏன் உங்களை நீங்களே ‘கவிஞன்’ என்று அழைத்துக் கொள்கிறீர்கள்? என்றுதான் கேட்டேன் அவ்வளவுதான். பாலர் பாடம் படித்திருக்கிறீரா? இல்லை, நீர் பாலர் பாடமாவது படித்திருக்கிறீரா, என்று அவர் என்மேல் பாய ஆரம்பித்துவிட்டார். அதில் என்ன தெரிய வேண்டும் உங்களுக்கு? தெரியாவிட்டால் கேளுங்கள் சொல்கிறேன் என்றேன். அடக்க ஒடுக்கமாக, “நன்று, நவிலும். ‘அ’ என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?

‘அணில் படம் போட்டிருக்கிறது’

‘அதற்குக் கீழே’

‘அணில் என்று எழுத்தில் போட்டிருக்கிறது’

‘நன்று ‘ஆ’ என்ற எழுத்துக்குக் கீழே என்ன போட்டிருக்கிறது?’

‘ஆட்டின் படம் போட்டிருக்கிறது’

‘அதற்குக் கீழே?’

‘ஆடு என்று எழுத்தில் போட்டிருக்கிறது’

‘அணிலையும் ஆட்டையும் அறியாதார் அவனியில் உண்டோ?’

‘இல்லை’

‘அங்ஙனம் இருந்தும் சித்திர விளக்கத்தோடு அதற்குரிய எழுத்து விளக்கமும் சேர்ந்து நிற்பது எதற்கு?

எடுத்துக்காட்டும் பொருள் பள்ளிச் சிறுவர்கள் கண்ணில் பதிவதோடு எழுத்திலும் பதியவேண்டும் என்பதற்காக இருக்கணும் என்று என் சிற்றறிவுக்குப் படுகிறது”

“அம் முறையைத்தான் யாமும் கையாண்டு வருகிறோம். எனவே பிறவிக் கவிஞரே என்று முகம்  மலர அகம் குளிர எம்மை விளிப்பாரைக் கண்டிலோம், கண்டிலோம்” இவ்வாறு நகைச்சுவை ததும்ப நயமுடன் எழுதியுள்ளார் விந்தன்.

கவிதைகள்

1956இல் விந்தன் ‘பசி கோவிந்தம்’ என்ற சிறுநூல் எழுதினார். அந்த நூலைப் பற்றி டாக்டர் ஆ.ரா. வெங்கடாசலபதி அவர்கள், புலவர் த.கோவேந்தன் எழுதிய புதுநாநூறு  என்ற நூலுக்கு எழுதியுள்ள முன்னோட்டத்தில் குறிப்பிடுகிறார்.

“இராஜாஜியின் பஜகோவிந்தத்தை நையாண்டி செய்து விந்தன் ‘பசி கோவிந்தம்’ எழுதினார். இராஜாஜி அரசியல் தலைவராகவும் இந்தியாவின் நடுவண் ஆளுநராகவும் இருந்ததால் அவருக்கு இலக்கிய பீடத்தில் இடம் கிடைத்துவிட்டது. அவருடைய பஜகோவிந்தத்தை வாங்கு வாங்கு என்று வாங்குகிறார்.  இயல்பாகவே விந்தன் ஒரு சிறுகதையோ நாவலையோ எழுதும்போதுகூட ஆசிரியர் கூற்றாகப் பகுதிக்கு ஒரு வரியேனும் எழுதி சமூக இழிவுகளையும் ஒழுக்கங்களையும் நையாண்டி செய்யாமல் விந்தனுக்கு கதையை நடத்திச் செல்லத் தெரியாது. அப்படி இருக்கையில் நையாண்டி செய்வதற்காகவே எழுதப்பட்ட ‘பகடி’ நூலில் கேட்க வேண்டுமா? தன்னுடைய நூலைப் புடைநூல் என்று குறிப்பிட்டாலும் குறிப்பிட்டார் ‘புடை புடை’ என்று புடைத்து விடுகிறார் விந்தன்.”

“வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் பெருங்கடல் வாலிபம்; பசிமிக்க பாரதத்தில் வறுமைமிக்கோர் அதைக் கடப்பது கடினம்; ஆயினும் வயலில் சிறு வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையில் சிலர் வாலிபக் கடலைத் தாண்டி விடுகின்றனர். அதற்கேற்ற வசதியும் அவர்களுக்குப் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகிறது. சுவாதீனத்தால் சோம்பேறித்தனத்தையும் சுகானுபவத்தால் சொர்க்கலோக இச்சையையும் வளர்த்து வரும் அவர்களுடைய பரம்பரை சொத்துகளையும் பாராதீனப்படுத்து பசிக்குப் பலியாகும் கோடானுகோடி மக்களைப் பாதுகாக்க ஏதாவது செய்ய வேண்டுமே என்கிற நோக்கத்தால் எழுந்ததே இந்தப் பசிகோவிந்தம் பாட்டு!

பாரதம் வாழி பாரதம் வாழி
பசிகோவிந்தம் பாட பசிதந்த
பாரதம் வாழி!”

‘தினமணிக் கதிர்’ ஏட்டில் மகாபாரதக் கதையை ‘பாட்டினில் பாரதம்’ என்ற பெயரில் காவியமாக எழுதினார். அதைப் படித்த சிலர் காவியம் எழுதும் அளவுக்கு விந்தனுக்கு தமிழில் புலமை உள்ளதா என்று வினாயெழுப்பினர். ஆனால், புலவர் த. கோவேந்தன் போன்றவர்கள், உரைநடையை எளிமையாக எழுதியது போலவே காவியத்தையும் எளிமையாக இலக்கணம் பிறழாமல் எழுதுகிறார் என்று பாராட்டினர்.

‘கதிர்’ ஏட்டில் ‘பாட்டினில் பாரதம்’ தொடர் வந்து கொண்டிருந்தபோது ஆசிரியர் ஏ.என். சிவராமன் விந்தனைப் பார்க்கும்பொழுதெல்லாம் தொடரைப் பாராட்டுவதோடு “தொடர்ந்து எழுதுங்கள்!” என்று உற்சாகமூட்டி பாராட்டுவாராம். பலரின் பாராட்டுக்குரிய ‘பாட்டினில் பாரதம்’ இன்னும் நூலாக வரவில்லை.

பெரியார் அறிவுச்சுவடி என்னும் நூலில் எழுதியுள்ள பகுத்தறிவைத் தூண்டும் கவிதைகள் அவரின் கவிதைத் திறனுக்குச் சான்றாகும்.

சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை
தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே
மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
ராவண காவியம் ரசித்துப் படி
மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை
“பீடை என்பது பிராமணியமே
முக்தியால் வளர்வது மூடத்தனமே
மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை 

கட்டுரைகள்

1947இல் தொழிலாளர் பிரச்சனையை முன் வைத்து ‘வேலை நிறுத்தம் ஏன்?’ என்னும் சிறு நூலை ஒரே இரவில் எழுதி வெளியிட்டார். அந்த நூல் இன்னும் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு ஏற்றதாகவும் போராடுவதற்குத் தூண்டுதலாகவும் இருப்பதால் அந்நூலை ஆசிரியரின் அனுமதியின்றியே அச்சிட்டுத் தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள் தொழிற்சங்கத் தலைவர்கள்.

சென்னை மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றிய காலத்தில் சுதேசமித்திரன் ஏட்டில் ‘சேரிகள் நிறைந்த சென்னை மாநகரம்’ என்கிற தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதினார். அச்சமயத்தில் விந்தன் சேரியில் வாழும் ஏழை எளியவர்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு பத்திரிகையில் எழுதினார். அதன் மூலமே சென்னையில் எத்தனை சேரிகள் உள்ளன என்பதனையும் அவர்களின் அவலநிலைமையும் அறிந்தார் விந்தன். (அந்தக் கட்டுரைகள் இன்னும் நூலாக வெளிவரவில்லை) விந்தன் அவ்வப்போது பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள், அவரின் நூலுக்கு எழுதிய முன்னுரைகள் அனைத்தையும் மு. பரமசிவம் அவர்கள் தொகுத்துத் தர “விந்தன் கட்டுரைகள்” என்ற தலைப்பில் 1998இல் கிறிஸ்துவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ளது.

இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ள பத்தொன்பது கட்டுரைகள் பலதிறப்பட்டவை. பாரதி வாழ்ந்த பாண்டி, பாரதிதாசனின் குடும்ப விளக்கு, ஒப்பற்றகவி, கவிமணியும் காலனும், உலகத்துக்கு ஒருவர், புகையிலையும் புதுமைப்பித்தனும் ஆகிய கட்டுரைகள் இலக்கிய ஆளுமைகள் குறித்தவை.

எனக்குப் பிடித்த புத்தகம் என்னும் கட்டுரை மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் குறித்த அறிமுகமாகும்.

முடிவுரை, என்னுரை, வயிறும் வாழ்வும், வாழ்த்து, சுழலும் உலகிலே, சுயம்வரத்திற்கு முன்னால் கொஞ்சம் சுய விளம்பரம், முன்னுரை, சுடச்சுட குளு குளு ஆகியவை தன் நூல்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளாகும். படித்தேன் – சொல்கிறேன் என்னும் கட்டுரை பிறரது நூலிற்கு வழங்கிய முன்னுரையாகும். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற கட்டுரையும் ‘இதோ! ஒரு சுயமரியாதைக்காரன்’ என்ற கட்டுரையும் சமூக விமர்சனங்களாக அமைந்தனவாகும்.

பாரதி, பாரதிதாசன், கவிமணி, கல்கி, புதுமைப்பித்தன் ஆகிய ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும், பார்வையற்றவர், கால் இழந்தவர், கையிழந்தவர், கால்முடப்பட்டவர், ஒரு கை விளங்காதவர் என இவர்களை ஊதுபத்தி விற்பவராய், பத்திரிகை போடுபவராய், தோசைக்கடை வைத்திருப்பவராய், செருப்புத் தைப்பவராய் வாழ்க்கையுடன் போராடி, பிச்சையெடுக்காமல் தங்கள் சுயமரியாதையைக் காத்து கொள்பவர்களாய்த் திகழ்வோரை உணர்ச்சி பொங்கச் சித்தரித்துள்ளார். இத்தகையோரை அட்டைப் படத்திலும் வெளியிட்டுச் சமுதாயத்தின் மையத்திற்குக் கொணர்ந்து பெருமைப்படுத்தியுள்ளார்.

[தொடரும்]

*****

துணைநின்ற நூல்கள்

 • அரசு.வீ., (1979) விந்தன் சிறுகதைகள் (ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வேடு) சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை 005
 • அறந்தை நாராயணன் (1997) சினிமாவுக்குப்போன இலக்கியவாதிகள், அகரம் வெளியீடு, கும்பகோணம் 001
 • பரமசிவம்.மு., (2001) விந்தன், சாகித்திய அகாதெமி வெளியீடு
 • பரமசிவம்.மு., (2003) விந்தன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், சென்னை
 • பரமசிவம்.மு., (2001) திரையுலகில் விந்தன், அருள் பதிப்பகம், சென்னை 078
 • பரமசிவம்.மு., (1982) விந்தனும் விமர்சனமும், சேகர் பதிப்பகம், சென்னை 078
 • பரமசிவம்.மு., (1983) மக்கள் எழுத்தாளர் விந்தன், பூக்கூடை பதிப்பகம், சென்னை 003
 • வாமனன் (2000) திரைக்கவிஞர்கள் 2000 வரை, கலைஞன் பதிப்பகம் சென்னை 017
 • விந்தன் (2000) விந்தன் குட்டிக்கதைகள், கலைஞன் பதிப்பகம், சென்னை 017
 • விந்தன் (1995) நடிகவேள் எம்.ஆர்.இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள், புத்தகப் பூங்கா, சென்னை
 • விந்தன் (1983) எம்.கே.டி.பாகவதர்கதை, புத்தகப் பூங்கா, சென்னை
 • விந்தன், (17.1.1972-திசம்பர்1972) பாட்டினில் பாரதம், தினமணிக்கதிர், சென்னை.
 • ஜனார்தனன்.கோ., (2014) விந்தன் எனும் ஓர் ஆளுமை, விந்தன் நினைவு அறக்கட்டளை, சென்னை 030

இதழ்கள்

 • குங்குமம், மார்ச்-1994
 • தினமணி, வெள்ளிமணி,10.1987
 • மனிதன்,08.1954

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
முதுகலை (ம) தமிழாய்வுத்துறை
சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி
திருவண்ணாமலை 606603
கைப்பேசி: 9786863839
மின்னஞ்சல்: drnprabu@gmail.com

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *