அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 104
கோத்தே (Goethe) அருங்காட்சியகம், டூசல்டோர்வ், ஜெர்மனி
முனைவர் சுபாஷிணி
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
(திருக்குறள்)
உலகில் மனிதர்கள் பிறக்கின்றோம். வாழ்கின்றோம். மறைகின்றோம். மனிதன் தான் வாழும் இப்பூமிக்கு தன் வாழ்வின் பயனாக விட்டுச் செல்லும் படைப்புக்கள் தான் உலகில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு வித்தாகின்றன. உலகுக்கு நற்காரியங்களைச் செய்து நன்மைகள் படைத்துச் செல்வோரால் தான் பூமி செழிக்கின்றது. அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், கலைப்படைப்புக்களையும், இலக்கியப் படைப்புக்களையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்துச் செல்வோரே இவ்வுலகம் மேன்மையை நோக்கிச் செல்ல உதவும் கருவிகளாக இயங்குகின்றனர். அத்தகையோரில் ஒருவர் தான் கோத்தே (Johann Wolfgang von Goethe).
யோஹான் வோல்வ்காங் கோத்தே 1749ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ம் நாள் ஜெர்மனியின் ப்ராங்பர்ட் நகரில் பிறந்தவர். கவிஞர், இலக்கியவாதி. தத்துவ அறிஞர், அரசியல் பிரமுகர், அறிவியல் ஆய்வறிஞர், தாவரவியல் அறிஞர் என்ற பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். ஜெர்மனி மட்டுமல்லாது, உலக நாடுகள் பலவற்றில் பரவலாக அறியப்பட்டவர் இவர். ஆம், கோத்தே கல்விக்கழகம் (Goethe Institute) என்ற பெயரில் உலக நாடுகள் பலவற்றில் ஜெர்மானிய மொழி பாடங்களை நடத்தும் நிறுவனத்தைப் பற்றி பலர் அறிந்திருக்கலாம். மொழித்துறை என்று மட்டுமல்லாது உலகளாவிய அளவில் இலக்கியப் படைப்புக்களை அங்கீகரிக்கும் செயல்பாடுகளைச் செயல்படுத்தி வரும் ஒரு நிறுவனமாகவும் Goethe Institute செயல்பட்டு இன்று செயல்பட்டு வருகின்றது.
தனது 25வது வயதிலேயே இளம் படைப்பாளியாக அறிமுகம் பெற்று சிறப்பு பெற்றவர் கோத்தே. இவரது முதல் நாவல் The Sorrows of Young Werther இன்றளவும் இலக்கிய உலகில் மிக உயர்வாகப் பேசப்படும் ஒரு படைப்பாகத் திகழ்கின்றது.
ஆரம்பக் காலத்தில் கோத்தே லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சட்டத்துறை பட்டதாரியாக 1768ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர். சட்ட நுணுக்கங்களை அறிந்ததில் இருந்த நாட்டம் போலவே கவிதை எழுதுவதிலும் அவருக்குத் தீவிர நாட்டம் இருந்தது. லைப்ஸிக் பல்கலைக்கழகத்தில் கல்வியை முடித்து பிரான்சின் எல்ஸாஸ் பகுதியில் உள்ள ஸ்ட்ராஸ்புர்க் பல்கலைக்கழகத்தில் இவர் கல்வியைத் தொடர்ந்தார். எல்ஸாஸ் நகரம் அவருக்கு விரிவான உலகத்தைக் காட்டியது. இவரது இலக்கியப் படைப்புக்கள் இக்காலகட்டத்தில் செம்மை பெற்றன. பல கவிதைகளை எழுதினார். பல கவிஞர்களின் நட்பும் இவருக்கு ஏற்பட்டது.
வைமாருக்குச் சென்று அங்கே அந்த நகரத்தின் பிரபுவினது அமைச்சகத்தில் உயர் நிலை அதிகாரியாகப் பணியாற்றினார். உலகப்பிரசித்தி பெற்ற யேனா பல்கலைக்கழகத்தைச் சீரமைக்கும் முயற்சியில் பங்கெடுத்து கொண்டு சீரமைப்புக்குத் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தினார். வைமார் நகரின் தாவரப் பூங்கா அமைப்பில் இவரது பங்களிப்பு மிகப்பெரிது. இன்று இந்தப் பூங்கா ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருக்கும் புராதனச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றது என்பதும் இவரது சிறப்பை உலகுக்கு எடுத்துக் கூறும் சான்றாக அமைகின்றது.
கோத்தே அவர்களின் மிகப்பெரிய பங்களிப்பு ”தாவரங்களின் பரிணாமம்” ( Metamorphosis of Plants) என்ற தலைப்பில் அவர் எழுதி வெளியிட்ட தாவரவியல் ஆய்வு நூலாகும். இத்தாலியில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு வந்ததன் பின்னணியில் இந்த நூலை எழுதி 1788ம் ஆண்டு வெளியிட்டார். தாவரவியல் அறிவியலில் ஈடுபட்டதைப் போல நிறங்களைப் பற்றிய ஆய்விலும் உடற்கூறு ஆய்விலும் இவருக்கு நாட்டமிருந்தது. இத்துறைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அவற்றைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார். வைமார் நகரில் இவர் நாடக சபையின் இயக்குநராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் வழி அவருக்கு ஜெர்மனியின் மிகப் பிரசித்ஹ்டி பெற்ற கவிஞராகிய ஃப்ரெடெரிக் ஷில்லர் அவர்களது நட்பு கிட்டியது. இந்த நட்பு நெடுங்காலம் நீடித்தது. வைமார் அரும்பொருள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள கல்லறையில் கோத்தேயின் சவப்பெட்டிக்குப் பக்கத்தில் ஷில்லரின் சவப்பெட்டி உள்ளது என்பதைக் கவனிக்கும் போது இந்த இரு பெரும் ஆளுமைகளும் கொண்டிருந்த நல்ல நட்பை நாம் உணர முடியும்.
கோத்தே அவர்கள் தனது நெடுநாள் காதலியான கிறிஸ்டினாவை 1806ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 18 ஆண்டுகள் இணைந்தே வாழ்த்து பின்னர் திருமணம் முடித்துக் கொண்டனர். திருமணத்திற்கு முன்னரே இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் 4 குழந்தைகள் இறந்து போயினர்.
1793க்குப் பிறகுத் தனது வாழ்க்கையை முழுமையாக இலக்கியப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தார் கோத்தே. பல துறைகளில் சீரிய பணியாற்றிய இவர் 1832ம் ஆண்டு வைமார் நகரில் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.
உலக அரங்கில் ஜெர்மனிக்குச் சிறப்பு சேர்க்கும் கோத்தே அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஜெர்மனியின் டூசல்டோர்வ் நகரில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:
Jacobistrasse 2, Schloss Jägerhof, 40211 Düsseldorf . இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை
http://www.goethe-museum.com/de என்ற இணையமுகவரியில் காணலாம்.
இன்று நாம் காணும் கோத்தே அருங்காட்சியகம், பெரூசிய பேரரசுக்கு (ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் தொடங்கிப் பரவலான பகுதிகளை உள்ளடக்கிய பேரரசு இது) சொந்தமான ஒரு அரண்மனை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் புகழ்பெற்ற பதிப்பாசிரியர்களுள் ஒருவரான ஆண்டோன் கிப்பன்பெர்க் சேகரித்த கோத்தேயின் படைப்புக்கள், சேகரிப்புக்கள் அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சேகரங்கள் ஒவ்வொன்றும் கோத்தேயின் வாழ்க்கை, அவர் மேற்கொண்ட பயணங்கள், ஈடுபட்ட ஆய்வுகள், அரசில் அவர் ஆற்றிய பணி, எழுத்துலகில் அவர் எழுதி வெளியிட்ட படைப்புக்கள், அறிவியல் ஆய்வுகள், அவரது சிறந்த படைப்புக்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
இங்குள்ள அறைகள் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக அவரது ஆரம்பக்கால வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சொல்லும் நிகழ்வுகள் கொண்ட அறை, வைமார் நகரில் அவரது வாழ்க்கை நிகழ்வுகள், இத்தாலி பயணம் அளித்த அனுபவங்கள் சொல்லும் ஆவணங்கள் கொண்ட அறை என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. முன் பகுதியில் அவரது எழுத்துப்படைப்புக்கள் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கோத்தே அவர்களின் சேகரிப்புக்கள், மற்றும் அவரது ஆய்வுப்பணி, இலக்கியப்பணி தொடர்பான ஏறக்குறைய 35,000 அரும்பொருட்கள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தின் நூலகத்தில் 25,000 நூல்களும், ஏறக்குறைய 35,000 ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன.
ஜெர்மனி உலகுக்குப் பல அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், இசைக்கலைஞர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் இலக்கியவாதிகளையும் வழங்கிய நாடு. அத்தகைய அறிஞர்களுள் ஒருவராய் உலகில் ஜெர்மனியின் புகழை உயர்த்தும் ஆளுமையாகக் கோத்தே அவர்கள் திகழ்கின்றார்கள். உலக நாடுகளில் 159 இடங்களில் இன்று கோத்தே கல்விக்கூடம் செயல்பட்டு வருகின்றது. உலகின் பல நாடுகளில் ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடமாகவும், கலை, இலக்கிய பண்பாட்டு புரிதல்களுக்காகவும் இந்த அமைப்பு பங்காற்றி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது!