இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(259)

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். புத்தம்புது ஆண்டில் கிடைத்த வெற்றுத்தாளில் உங்களுடன் எனது மனக்கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும் மடலை வரையும் சந்தர்ப்பம் கிட்டியது ஓர் ஆனந்த அனுபவமே! எதைப் பேசுவது? எதை கிரகித்துக் கொள்வது? எதைப் பகிர்ந்துகொள்வது என்பது இன்றைய சமூக ஊடகவியலின் முன்னேற்றமா? இன்றி ஒரு தடைக்கல்லா? என்பது நிச்சயம் தர்க்கிக்கப்பட வேண்டிய ஒரு விடயமே!

அரசியல், வியாபாரம் இவையிரண்டுமே சமூகத்தின் இருவேறு தூண்கள் எனும் நிலை பல சகாப்தங்களாக இருந்து வந்துள்ளது. அரசியலும், அரசியல்வாதிகளும் வகுக்கும் கொள்கைகள் ஒவ்வொரு நாட்டினதும் வியாபாரக் கூற்றைப் பாதிக்காமல் அதை வளர்ப்பதன் மூலம் சமூகத்தின் வாழ்வாதாரத்தைக் கூட்டும் வகையில் செயற்பட வேண்டும் என்பது ஜனநாயக மரபுகளின் கோட்பாடாக இருந்து வந்தது என்பது உண்மையே! ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் வியாபாரம் அரசியலிலும், அரசியல் வியாபாரத்திலும் மூக்கை நுழைக்கக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாகவே இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்றோ?

அரசியலே ஒரு வியாபாரமாக மாறிவிட்டதோ எனும் ஒரு நிலை எமது மனங்களில் ஓர் அச்ச உணர்வுடன் கூடிய நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளது. இதை ஏதோ எமது பின்புல நாட்டு அரசியல் களங்களின் நிலைப்பாட்டின் அடிப்படையில் கூறுகிறேனோ என்று நீங்கள் எண்ணினால் அது ஒரு தவறான கண்ணோட்டமாகும். ஏனென்கிறீர்களா? நியாயமான கேள்விதான்… இன்றைய மேலைநாட்டு அரசியல் போக்குகளை நோக்கும் போது அதைப்பற்றிய விளக்கம் ஒரு புதுப்பாதையில் அரசியல் ஓடுகிறது என்பது புரிகிறது. காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அரசியல் கோட்பாடுகளைப் புறந்தள்ளி இன்றைய சமூகப் பின்னணியோடு கலந்த ஒரு புதுவகையிலான அரசியல் பிறப்பெடுக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

அரசியல் பின்னணியில் பலகாலமாக அரசியல் களத்தினில் பயின்று ஒரு நிலையான அரசியல்வாதி என்று பெயர் பெற்றவர்களை நோக்கிய வாக்களர்களின் பார்வைகள் ஒரு புதிய திசையில் பரிணமிக்க ஆரம்பித்துள்ளது என்று கூறவேண்டும். இத்தகைய ஒரு நிலை தோன்றியதன் காரணம்தான் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய ஒரு நிலையில் நாம் இருக்கிறோம். அரசியல்வாதிகள் எனப் பெயர்பெற்றவர்கள் மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக நடந்து கொண்டார்களா என்பது கேள்விக்குறியே! தேர்தல் பிரசாரமேடைகளிலே தாரளாமாக மக்கள் மனங்களைக் கவரும் வகையில், அப்போதைய மக்களின் மனநிலைக்கு உகந்தவாறு ஏதோ பலவிதமான நிறைவேற்றமுடியாத, அன்றி நிறைவேறும் சாத்தியமே அல்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டுப் பின்பு பதவிக்கு வந்ததும் ஏதோ பல காரணங்களுக்கு அரசியல் சாயம்பூசி மக்களின் அபிலாஷைகளை முற்றிலும் நிராகரிப்பது அரசியல் நடைமுறை வழக்கமாகியதே மக்கள் அரசியல்வாதிகள் என்று வகுக்கப்பட்டவர்களின் மீது தமது நம்பிக்கையை இழந்ததற்கு முக்கிய காரணம்.

அடுத்து அதிகாரம்பெற்று ஆட்சி அமைத்தவர்கள் நாட்டின் நன்மைக்காக எடுக்கும் நடவடிக்கைகளின் உண்மையான தரத்தை ஆராயாமல் அனைத்தையும் எதிர்க்கும் மனப்பான்மையில் எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள் நடந்துகொள்வதும், மக்களுக்கு நன்மை பயக்கும் சில வியுக்திகளை எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் பிரஸ்தாபிக்கும்போது கொள்கைகளின் அடிப்படியில் நாட்டின் நன்மையைப் புறந்தள்ளிவிட்டு ஆட்சியில் உள்ளோர் அநாயசமாக நடந்து கொள்வதும் மக்களின் மனங்களில் விரக்தி ஏற்பட வழிவகுக்கிறது.

இத்தகைய நிலைமைகளின் விளைவை இன்று நாம் அமெரிக்க நாட்டின் அரசியல் களத்தில் பார்க்கிறோம். அரசியல்வாதிகளில் நம்பிக்கையிழந்த மக்கள் அரசியல் அனுபவம் ஏதுமற்ற ஒரு வியாபார முதலாளியின் கைகளில் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருப்பது அரசியல் இன்று வியாபாரத்தளமாக மாறியிருக்கிறது என்பதற்கு அத்தாட்சியாகிறது. அதற்காக நான் வியாபரத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறவில்லை. எதுவித அரசியல் அனுபவமுமின்றியவர்கள் ஒருநாட்டின் தலைவராகும்போது அரசியல் நாகரிகத்தை மீறும் வகையில் நடந்து கொள்ளும் ஒரு நிலை ஏற்படுகிறது. அது குறுகியகால வெற்றியை அவர்களுக்கு நல்கலாம், அதுவே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றுக் கொடுப்பதைப் போன்ற குறுகியகால அரசியல் லாபத்தை அவர்கள் ஈட்டலாம். ஆனால் தொலைநோக்கான தீர்க்கதரிசனம் கொண்டவர்களின் பார்வையில் இது விளைவிக்கக்கூடிய எதிர்மறையான தாக்கங்களின் வலிமை புரியும். எத்தனையோ வருடங்களாக நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வுகள் ஒரு சிறிய கால அவகாசத்தினுள் சிதறிப்போகும் நிலை ஏற்படலாம். தீவிரவாதப்போக்குக் கொண்டவர்களின் ஆதிக்கம் வலுப்பெறுவதன் மூலம் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீறப்படலாம்.

பரந்துபட்ட உலகளாவிய ஒற்றுமையும், கூட்டுறவும் சட்டென சிதைந்து போகும்நிலை உருவாகலாம். இனத்துவேஷம், மதத்துவேஷம், நிறத்துவேஷம் என்பனவற்றிக்கு அரசியல் முலாம் பூசப்பட்டு சாதாரண அரசியல் பிரசாரங்களாக மாறலாம். அத்தகைய ஒரு நிலை சிறிதுசிறிதாகப் புரிந்துணர்வு மிக்க மேலைநாடுகளின் அரசியல் அரங்கினுள் உட்புகுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தேசியவாத அரசியல் எனும் போர்வையில் தீவிரவாத அரசியல் நடத்தப்படுக்கிறது.

நல்லதோர் அரசியல் செயற்பாட்டால் வியாபாரம் செழிக்கலாம் ஆனால் அரசியலே வியாபாரமாக்கப்பட்டால் ?

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *