Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102

வோல்வோ அருங்காட்சியகம், கோத்தபெர்க், சுவீடன்

முனைவர் சுபாஷிணி

உலகின் உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதோடு அவ்வுயரிய தொழில்நுட்பத்தைப் பொதுமக்களும் பயன்படுத்தும் ஒரு நாடு; உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் 6வது இடத்தைப் பிடிக்கும் நாடு; குறைந்த மக்கள் தொகை; தூய்மை; தரமான சுகாதாரம்; மக்கள் வாழ்வதற்கு விரும்பி ஏற்கும் ஒரு நாடு என்ற பெருமைகள் கொண்டது சுவீடன்.

unnamed (1)

ஸ்கேண்டினேவிய நாடுகள் குழுவில் ஒன்றாக இடம்பெறுகிறது சுவீடன். நார்வே டென்மார்க் பின்லாந்து ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட நாடு. ஐரோப்பிய நாடுகளில் ஆங்கில மொழி பயன்பாட்டை இரண்டாம் மொழி என்ற நிலையில் வைத்திருக்கும் நாடு என்பதும் இதன் சிறப்பு. இதற்கும் மேலாக வாகன உற்பத்தியில் தனித்துவத்துடன் இயங்கும் ஒரு நாடு என்ற பெருமையும் கொண்டது. வோல்வோ கார் என்றால் நம் நினைவுக்கு வருவது சுவீடன் தானே!. ஆம் இந்த வோல்வோ கார் பிறந்தது சுவீடனின் கோத்தபெர்க் நகரில் தான்.

2016ஆம் ஆண்டு எனது அலுவலக பணி நிமித்தமாக கோத்தபர்க் நகரில் நிகழ்ந்த ஒரு வார கால மாநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. வோல்வோ கார் நிறுவனத்தின் தாயகம் கோத்தபெர்க் நகரம் தான் என முன்னரே நான் அறிந்திருந்ததால் இந்த வாய்ப்பைத் தவற விடாமல் இங்கு அமைந்திருக்கும் வோல்வோ வாகன அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தேன். இங்குச் செல்வதற்கு எனக்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. அது என்னவெனில் நான் முதன் முதலில் கார் ஓட்டப்பழகிக் கொண்ட காலத்தில் நான் வாங்கிய இரண்டாவது கார் ஒரு பழைய வோல்வோ வாகனம். கடல் நீல வர்ணத்தில், ஏறக்குறைய 14 ஆண்டு பழமையான வாகனம் அது. ஏறக்குறைய நான்கைந்து ஆண்டுகள் இந்த வாகனம் என் பயன்பாட்டில் இருந்தது. தூரப் பயணங்கள் மேற்கொள்வதற்கு ஏற்ற வசதியானதொரு வாகனமாக அது இருந்தது. அந்த நினைவும் என் மனதில் பசுமையாக இருந்தது.

unnamed (2)

வோல்வோ அருங்காட்சியகம் உள்ள பகுதிக்குச் செல்வதற்குப் பேருந்து எடுத்துத் தான் சென்றிருந்தேன். அது கடற்கரையைச் சார்ந்த துறைமுகப் பகுதி. ஏறக்குறைய 3 மணி நேரங்கள் இருந்து இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகச் சுற்றிப்பார்த்தேன். வோல்வோ என்றால் நான் அன்றாட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே என்ற என் சிந்தனையை மாற்றியது இந்த அருங்காட்சியகத்திற்கான என் பயணம். ஏனெனில் வோல்வோ நிறுவனத்தாரின் கனரக தொழில்நுட்பம் என்பது பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் மட்டுமன்று, கனரக வண்டிகள், லாரிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள், விமானப்படை விமானங்கள், என பலதரப்பட்டவையாக இருப்பதை இந்த அருங்காட்சியகம் சென்றிருந்த போது அறிந்து கொள்ள முடிந்தது.

வோல்வோ பிறந்தது 1927ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி. ஏனெனில், அன்றுதான் வோல்வோ தொழிற்சாலையில் “ஜேக்கப்” முழுமையாக்கப்பட்டு இந்த கோத்தபெர்க் தொழிற்சாலையிலிருந்து வெளியிடப்பட்டது. வோல்வோ கார் உற்பத்தி பற்றிய எண்ணம் முதன் முதலில் Assar Gabrielsson மற்றும் Gustaf Larsson ஆகிய இருவருக்கும் எழுந்தது. இந்தக் கனவு நிஜமாகியது. 4 சிலிண்டர்கள் கொண்ட OV4, PV4 வகை வாகனங்களை இந்தத் தொழிற்சாலையில் வடிவமைத்து உருவாக்கினர். 1929ஆம் ஆண்டு 6 சிலிண்டர் கொண்ட இயந்திரத்துடன் PV651 வகை வாகனத்தை உற்பத்தி செய்தனர். இது வாகன உற்பத்தியில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு இருவருக்கும் மிகப் பெரிய இலாபத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

unnamed (3)
1932ஆம் ஆண்டில் 10,000 வாகனங்களை உற்பத்தி செய்து வாகன தொழில்நுட்பத்தில் தன் தனித் திறமையை வெளிப்படுத்தியது வோல்வோ. இவ்வகை வாகனங்களைப் பணம் படைத்தவர்கள் மட்டுமே வாங்கக்கூடியதாக இருந்தமையால் பலதரப்பட்ட மக்களிடமிருந்து எளிய மக்களும் வாங்கிப் பயன்படுத்தி மகிழும் வண்ணம் குறைந்த பட்ஜெட் வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது. இதன் பலனாக 1936ஆம் ஆண்டில் வோல்வோ தயாரித்து வெளியிட்டதுதான் PV51 மாடல் வகையிலான கார்கள்.

இரண்டாம் உலகப்போர் வாகன உற்பத்தியைப் பாதிக்கச் செய்தது. ஆயினும் 1944ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் வோல்வோ அதன் PV444 வகை வாகனங்களை உற்பத்தி செய்து வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் இவையே சிறிய இரகத்திலான வோல்வோ கார்கள். இந்த இரகக் கார்கள் ஏற்படுத்திய அலை 1960 வரை ஓயவில்லை எனலாம். அந்த அளவிற்கு இந்த இரக வோல்வோ வாகனங்கள் பொது மக்களால் விரும்பி வாங்கப்படும் வாகனமாகத் திகழ்ந்தது. இப்படிப் பலப்பல புதுமைகளை ஏற்படுத்தி மக்களின் தேவைக்கேற்பவும் தொழில்நுட்பத் தேவைக்கேற்பவும் தனது வாகனங்களை வெளியிடுவதில் வோல்வோ சலிக்கவில்லை எனலாம். 1927 ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முதல் 2017 நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை வோல்வோ கார் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 19,971,128 ஆகும்.

unnamed (4)

வோல்வோ நிறுவனமும் தொழிற்பேட்டையும் அமைந்திருக்கும் கோத்தபர்க் நகரின் துறைமுகப்பகுதியில் தான் வோல்வோ அருங்காட்சியகம் இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பக் கால உற்பத்தியிலிருந்து அதி நவீன தொழில்நுட்பம் பொருந்திய வாகனங்கள் என இங்கே நூற்றுக்கணக்கான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வோல்வோ நிறுவனம் முதலில் வெளியிட்ட Volvo ÖV4 வகை வாகனமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படியும் ஒரு அருங்காட்சியகமா என வருவோரைத் திகைக்க வைக்கும் ஒரு பிரம்மாண்டம் இந்த வாகன அருங்காட்சியகம்.

unnamed (5)

இங்கு வரிசை வரிசையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களைப் பார்த்து அவற்றின் தகவல்களை வாசித்து அறிந்து கொண்டே வரும்போது அலுப்பு ஏற்பட்டால் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளவும் ஆங்காங்கே நாற்காலிகளை வைத்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி வோல்வோ நிறுவனத்தின் ஆரம்பக்கால முயற்சிகள், வெளியீடுகளை விவரிக்கும் காட்சிப்படங்கள் ஒரு சிறிய பகுதியில் திரைப்படமாகவும் காட்டப்படும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆக அலுப்பே ஏற்படாமல் நிதானமாக பார்த்து இரசித்து வரலாம்.

வாகன உற்பத்தியில் இன்று முன்னிலை வகிக்கும் நாடுகளாகத் திகழ்பவை ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கொரியா போன்ற நாடுகளாகும். இந்த வரிசையில் சுவீடனும் இடம் பெறுகின்றது. வாகன உற்பத்தியில் மக்களின் தேவைக்கேற்பவும் கால சூழலின் தேவைக்கேற்பவும் தொழில் நுட்பத்தில் மாற்றங்களைச் செய்து புதிய வடிவங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில் வாகனங்களில் புதுமைகளைச் செய்ய வேண்டிய தேவை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இன்று இருக்கும் கட்டாயத் தேவை. இதனை நன்கு கருத்தில் கொண்டு மின்சாரத்தில் இயங்கும் வாகனம், தானியங்கி வாகனம், என காலத்திற்கேற்ற வகையில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றது வோல்வோ. கடுமையான போட்டி நிலவும் இந்த வாகன உற்பத்தித் தொழிலில் இன்றும் முக்கிய இடத்தை வகிக்கின்றன வோல்வோ கார்கள். பலரால் விரும்பி வாங்கப்படும் ஒரு வாகனமாக இது திகழ்கின்றது.

பொது மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் கார்கள் மட்டுமன்றி தனது பயணத்தைக் கடல் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளிலும் செலுத்தியுள்ளது வோல்வோ. வோல்வோவின் சிறிய வடிவிலான நீர்மூழ்கி ஆய்வுக் கப்பல்கள் சிலவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். அதோடு பனி அடர்ந்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களையும் வோல்வோ நிறுவனம் தயாரிக்கின்றது.

சுவீடன் நாட்டிற்குச் செல்பவர்கள் தவறாமல் பார்த்து வர வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த அருங்காட்சியகம் அமைகின்றது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட செலுத்த வேண்டிய கட்டணம், திறந்திருக்கும் நேரம், சிறப்புக் கண்காட்சிகள் பற்றிய செய்திகள் அதன் அதிகாரத்துவப் பக்கமான http://www.volvomuseum.com/ என்ற பக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க