Advertisements
Featuredபத்திகள்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…(257)

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். போனவார மடலில் தொடங்கிய எனது பயணத் தொடர்ச்சியோடு இவ்வார மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன். ஆமாம் சென்ற வார மடலில் நாம் எமது “கப்பல் சுற்றுலாவில்” பங்கேற்பதற்காக “மயாமி” கப்பற் தளத்தை வந்தடைந்தோம் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கப்பல் பயணம் இருக்கிறதே அதுவும் ஒரு விமானப் பயணம் போன்றதே! நாம் எமது பிரயாணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பிப்பதன் முன்னரே இணையவழியாக அக்கப்பற் பயணத்துக்கான “போர்டிங் பாஸ்”இனைப் பெற்றுக்கொண்டதோடு மட்டுமில்லாமல் எமது பயணப் பொதிகளில் இடுவதற்கான பெயர் ஆகிய விபரங்களடங்கிய பட்டியலையும் பெற்றுக் கொண்டோம்.

அங்கு வண்டியில் இருந்து இறங்கிய நாமனைவரும் மிகவும் ஆரவாரமாக எமது பொதிகளை கொண்டு அருகிருந்த ஒரு பணியாளை அணுகினோம். அப்பணியாள் அனைவரது பொதிகளையும் ஒரு தள்ளு வண்டியில் ஏற்றிவிட்டு எம்மைக் கப்பலுக்குள் நுழைவதற்கான நிர்வாகங்களை கவனிக்கும்படியும், நாம் கப்பலுக்குள் நுழைந்து எமக்குக் கொடுக்கப்பட்ட எமது அறையினுள் சென்ற பின்பு அவரவர் பெட்டிகள் அவரவர் அறைகளுக்கு முன்னால் கொண்டு தரப்படும் என்றும் கூறினார். நாமனைவரும் எமது நுழைவு விதிகளைப் பூர்த்தி செய்துகொண்டு உற்சாகத்துடன் எம்மைச் சுமந்து செல்வதற்காகக் காத்து நிற்கும் அந்தப் பெரிய அடுக்குக் கப்பலினுள் ஒவ்வொருவராக நுழைந்தோம்.

அப்பாடா ! கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் கூடிய ஓர் அழகிய மாபெரும் மாளிகையினுள் நுழைவது போலிருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அனைவரும் அவசரம் அவசரமாகத் தமக்குத் தரப்பட்டுள்ள அறைகளை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். நானும் என் மனைவியும் எமது அறையைத் தேடிக் கண்டுபிடித்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்தோம். ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றின் அறையைப் போல கோலாகலமாகக் காட்சியளித்தது அவ்வறை. இனிவரும் ஏழு நாட்களும் இதுதானே எமது இல்லம் ! அடுத்தடுத்த மூன்று அறைகளும் எம்மோடு இணைந்து வந்திருந்த மற்றைய நண்பர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அவர்களும் அங்கு வந்து சேர்ந்து மகிழ்ச்சியுடன் எம்முடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்தது என்ன பசி வயிற்றைக் கிள்ளியது; அனைவரும் எமது வயிற்றைக் குளிர வைப்பதற்காகப் புறப்பட்டோம். நாமிருந்தது எட்டாவது அடுக்கு. ஒன்பதாவது அடுக்கில் உள்ள ரெஸ்டாரண்டில் உணவு எடுத்துக் கொள்ளலாம் என்று ஒலிபெருக்கி அறிவித்துக் கொண்டிருந்தது.

வித விதமான பலநாட்டு உணவுவகைகள் ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்தன. பிறகென்ன…ஒரு வெட்டு வெட்டி முடித்தாயிற்று. அன்றைய பொழுது எமது பெட்டிகளைத் திறந்து எமது அறையினை வசதி செய்து கொள்வதில் கழிந்து போயிற்று. சரியாக மாலை நாலு மணிக்கு எம்மைச் சுமந்து கொண்டு கப்பல் சுற்றுலாவை ஆரம்பித்தது. எமது அறையோடு சேர்ந்திருந்த பால்கனியில் வந்து நின்று கப்பல் பிராயாண ஆரம்பத்தைக் கண்டு களித்தோம். எமது பிரயாண அட்டவணையின் பிரகாரம் அடுத்தநாள் முழுவதும் எமது பிரயாணம் கடலில் தான். ஆனால் கப்பலினுள் பல் பகுதிகளில் பலவகையான நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. கப்பல் சுற்றுலாவுக்குப் பொறுப்பாக இருக்கும் அக்கப்பற் சிப்பந்தி ஒருவர் அனைவருக்கு கப்பலின் விதிகளையும், மற்றும் தேவையான முக்கிய விடயங்களையும் பற்றிய ஒரு விரிவான உரையையும் தந்தார்.

அடுத்தநாள் காலை கப்பல் “கொஸ்மொல்” எனும் தீவையடைந்தது. இத்தீவு மெக்சிகோ நாட்டிற்குச் சொந்தமான தீவாகும். காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு ஏற்கனவே கப்பலின் மூலமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு சிறிய சுற்றுலாவில் பங்கேற்றோம். அழகிய காட்சிகளைக் கொண்ட இத்தீவில் கடற்கரையோரமாக ஒரு சிறிய படகுப் பிரயாணத்தையும், அதைத் தொடர்ந்து சிலமணிநேரம் கடற்கரையோரமான பொழுது போக்கினையும் நடத்தினோம். மாலை மூன்று மணியளவில் திரும்பவும் கப்பலுக்குள் ஏறினோம். 6 மணியளவில் கப்பல் மீண்டும் தனது பிரயாணத்தைத் தொடங்கியது.

அதற்கு மறுநாள் காலை ” பெலீஸ் ” எனும் தீவையடைந்தோம். இத்தீவு 1981ஆம் ஆண்டு வரையும் இங்கிலாந்து நாட்டின் கீழ் இருந்த தீவாகும். அழகிய பச்சைப் பசலேன்ற காட்சிகளைக் கொண்ட இத்தீவில் எம்மை பண்டைய “மாயன்” காலக் கண்டுபிடிப்புக்களான புராதனக் கண்டுபிடிப்புகள் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு “மாயன்” கால மன்னர்களைப் பற்றியும், அவர்களது ஆட்சிகுறை பற்றியும் ஒரு சிறிய விளக்கமளித்தனர்.அன்றைய மக்களின் கலாசார விழுமியங்களின் அடையாளங்கள் பிரமிப்பூட்டின. அங்கு பலரும் பல நினைவுப் பரிசில்களை அங்கு சுற்றுலாப்பயணிகளுக்காகவே திறக்கப்பட்டிருந்த சிறிய கடைகளில் வாங்கிக் கொண்டனர். மீண்டும் கப்பலையடைந்து மற்றொரு இரவுப் பயணம் ஆரம்பமானது.

கடலின் மீது நகர்ந்து கொண்டிருக்கும் அக்கப்பலினுள் இருந்து கடலை நோக்கினால் அன்றி நாம் பிரயாணித்துக் கொண்டிருக்கிறோம் எனும் உணர்வே தோன்றாத வகையில் எதுவிதமான் ஆட்டங்களும், குலுக்கல்களும் இல்லாமல் கப்பல் பிரயாணித்துக் கொண்டிருந்தது. ஆமாம் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு தீவில் நாமனைவரும், வசிப்பது போன்றே இருந்தது. அடுத்தநாள் காலை எமது தரிப்பிடம் “மகோகனி பே” எனும் தீவாகும். இத்தீவு “கொண்டூரஸ் (Honduras)” எனும் நாட்டிற்குச் சொந்தமான தீவாகும். அழகிய விசிறி வாழைமரங்கள், தென்னை மரங்கள் என எமது பின்புல நாடுகளின் அத்தனை வகையான மரங்களையும் உள்ளடக்கியிருந்தது அத்தீவு. அழகிய பறவைகள் அங்குமிங்கும் இனிய கீதங்கள் இசைத்துக் கொண்டிருந்தன. எமது பிரயாணத்தில் அன்று மட்டும் வருணபகவான் தனது அருளைத் தாராளமாக வழங்கி எம்மைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அன்று மாலை தனது அடுத்த கட்டத்தை நோக்கி எமது கப்பல் எம்மைச் சுமந்த வண்ணம் நகர்ந்தது.

அடுத்தநாள் காலை எமது கடைசித் தரிப்பிடமான “கேமன் ஐலன்ட்” எனும் தீவை அடைந்தோம். இத்தீவு இன்றும் இங்கிலாந்து மகாராணியாரைத் தமது தலைவியாகக் கொண்டுள்ளது. பல மாபெரும் செல்வந்தர்கள் தமது நாட்டின் வரிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்நாட்டு வங்களில் தமது செல்வத்தை சேமித்து வைத்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இந்நாட்டில் வங்கிகள் அதிக அளவில் இருக்கின்றன. பல இங்கிலாந்து செல்வந்த வியாபாரிகளுக்குச் சொந்தமான விடுமுறை பங்களாக்கள் இங்குண்டு. இங்கும் நீரிலும், நிலத்திலும் பயணிக்கக்கூடிய வாகனமொன்றில் எமக்கு ஒரு சுற்றுலா வசதி செய்து தந்தார்கள். பல அழகிய காட்சிகளையும், கடலில் நீந்தி மகிழும் மீனினங்களையும் கண்டு மகிழ்ந்தோம். அன்றிரவு மீண்டும் புறப்பட்ட அக்கப்பல் அடுத்தநாள் முழுவதும் கடலில் பயணித்து எம்மை மீண்டும் நாம் ஆரம்பித்த “மியாமி” நகருக்கு இட்டுச்சென்றது.

அழகிய ஒருவாரச் சுற்றுலாவில் பல புதிய நாடுகளின் பகுதிகளைக் கண்டு ரசித்துவிட்டு அனைவரும் ஒன்றாக அவ்வவுஸ்திரேலிய நண்பரை அனுப்பிவிட்டு மீண்டும் இங்கிலாந்தை வந்தடைந்தோம். 2017க்குள் நுழைந்த நாம் பல புதிய அனுபவங்களின் சொந்தக்காரர்களாகி ஒருவாறு தேவமைந்தன் யேசுநாதரின் பிறந்தநாளாம் கிறீஸ்துமஸ் பண்டிகையை நோக்கி நெருங்கி விட்டோம்.

மாட்டுத் தொழுவமொன்றில்
மாறா மனித சமுதாயத்திற்காக
மானிட உருவில் பிறந்த
மகத்தான தேவமைந்தன் யேசு

அன்பின் பிள்ளையாய்
அருளின் பிறப்பிடமாய்
மனிதர்கள் பாபச்சுமையை
மரணித்தில் சுமந்தார் யேசு

கேட்டுப் பெறுவதும் அருளைத்
தட்டித் திறப்பதும் கடமையென
தரணியைக் காக்க வந்த தனயன்
தங்கமென மிளிர்ந்த இறைமைந்தன்

பொறுமை ஒன்றே மனிதர்க்குப்
பெருமை என்பதனை வலுவாய்
போதித்த இயேசுபிரானின்
பிறந்தநாளில் யாசிக்கின்றோம்

இன்றும் , இனியும் அனைவரும்
இன்பமும், மகிழ்வும் கண்டே
இகத்தினில் வாழ்ந்திட மனதால்
இன்புற வாழ்த்துக்கள் பொழிகின்றேன்

அனைத்து கிறீஸ்தவ நண்பர்களுக்கும் அன்பான நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.

அன்புடன்,
சக்தி சக்திதாசன்

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comment here