அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 111

நூபியன் அருங்காட்சியகம், அசுவான், எகிப்து

 

முனைவர். க.சுபாஷிணி

 

எனது எகிப்துக்கான பயணத்தில் அதன் தலைநகராகிய கைரோவில் உள்ள பிரமிட்களைப் பார்க்க சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தேன். கட்டணம் செலுத்தும் இடத்தில் இருந்த இளம் வயது எகிப்திய ஆண்கள் ஓரிருவர் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நூபியன், நூபியன் என எகிப்திய மொழியில் என்னிடம் ஏதோ பேசினர். அப்போது எனக்கு அவர்கள் என்னைப் பார்த்து என்ன சொல்லி பேசி சிரித்துக் கொள்கின்றனர் எனப் புரியவில்லை. அதே பயணத்தில் நைல் நதியில் பயணித்து எகிப்தின் தெற்கு எல்லையை அடைந்து வடக்கு சூடான் நாட்டின் எல்லைப்பகுதியில் இருக்கும் அசுவான் அணைப்பகுதிக்கு வந்த போது நூபியன் என்பதன் பொருளை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.


நூபியன் என்னும் இனத்தோர் இன்றைய சூடான் நாட்டிலும் தெற்கு எகிப்திலும் தோன்றிய இனம். மனித இனத்தின் நாகரிகக்காலம் தொடங்கியபோதிலிருந்து அடையாளம் காட்டப்படும் சில இனக்குழுக்களில் நூபியன் இனமும் ஒன்று. எகிப்தில் பாயும் நைல் நதியினை ஒட்டியவாறு வாழ்ந்த ஒரு இனம் நூபியன் இனம். பண்டைய எகிப்தில் ஆட்சி செலுத்திய இனம் என்றும் கி.மு.7000 ஆண்டில் இன்றைய வடக்கு சூடான் நகரான வாடிஹல்வா (Wadi Halfa) நகரில் பேரரசினை நிறுவிய ஒரு இனக்குழு என்றும் அறிகின்றோம் (http://www.ancientsudan.org). கி.மு 8ம் நூற்றாண்டு வரை எகிப்திலும் அதன் பின்னர் படிப்படியாக சூடான் நாட்டில் மட்டிலுமே என்ற வகையிலும் நூபியன் இனக்குழுவின் ஆளுமை விளங்கியது. இன்று நூபியன் இனக்குழு மக்கள் எகிப்தின் தெற்குப் பகுதி நகர்களான லுக்சூர், அசுவான் ஆகிய பகுதிகளிலும் சூடானிலும் வாழ்கின்றனர்.

சூடான்-எகிப்து எல்லைப் பகுதிக்குப் படகுப் பயணம் மேற்கொண்டு வந்த போது கைரோவில் ஏன் அந்த இளைஞர்கள் என்னைப் பார்த்து நூபியன் என்று அழைத்து கேலி பேசி சிரித்தனர் என்பது எனக்குப் புரிந்தது. இங்கு வசிக்கும் நூபியன் இன மக்களின் தோற்றம் எனது தோற்றத்தை ஒத்திருந்ததைக் காண முடிந்தது. எங்கள் பயண வழிகாட்டியும் அப்பயணத்தில் இணைந்து வந்திருந்த ஏனைய ஜெர்மானிய சுற்றுப் பயணிகளும் என்னிடம் இதையே கூறினர். ஆப்பிரிக்க கண்டத்து மக்களில் அதிலும் குறிப்பாக, சூடான், எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாட்டு மக்களின் உடல் கூறுகள் தமிழ் மக்களின் உடற்கூறுகளுடன் ஒத்திருப்பதைப் பலமுறை அவதானித்திருக்கின்றேன். நேரில் சூடான் நாட்டின் எல்லையில் இருந்த போது நானும் அந்நாட்டு மக்களின் தோற்றத்துடனேயே இருப்பதை ஆழமாக உணர்ந்தேன்.

இந்த நூபிய இனக்குழுவின் பிரத்தியேக செய்திகளைக் காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் தான் நூபியன் அருங்காட்சியகம். இது சூடான் நாட்டின் எல்லையில் அசுவான் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரத்தியேகமானதொரு அருங்காட்சியகம். நூபிய மக்களின் வரலாற்று, பண்பாட்டுச் செய்திகளை விவரிப்பதற்காகவும், நூபிய இனக்குழுவின் நாகரிகத்தையும் தொன்மைச் சிறப்புக்களையும் பதிந்து வைப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும்.

எகிப்து ஒரு பாலைவனம். எங்கு நோக்கினாலும் வெளிர் ஆரஞ்சு நிறத்து மணல் துகள்கள் தான் நிறைந்திருக்கும். இங்கு குன்றுகளைப் பார்ப்போம். ஆனால் அவை மணல் குன்றுகளாகத்தான் இருக்குமே தவிர மரங்களை அங்கு காண்பது அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பேரீச்சம் பழ மரங்களைக் காண்போம். ஆனால் இந்த அருங்காட்சியகத்தினைச் சுற்றி பசுமையை உருவாக்கியிருக்கின்றனர். நல்லதொரு பூந்தோட்டம் இந்த அருங்காட்சியகத்திற்கு அழகு சேர்க்கின்றது.

வறண்டப் பாலைவனத்தில் மணலின் நிறத்திலேயே எழுப்பப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் இந்த அருங்காட்சியகம். அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான புராதனச் சின்னங்கள் இங்குக் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு ஒரு நூலகமும் இந்த அருங்காட்சியக வளாகத்தின் உள்ளே இயங்கி வருகின்றது. வரலாற்று ஆர்வலர்களுக்கும். ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கும், மாணவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் சிறந்த சூழலை ஏற்படுத்தி வழங்கியிருக்கின்றது என்பதை இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்த சில நிமிடங்களில் அறிந்து கொண்டேன். எகிப்து பழமையான பாரம்பரியத்திற்குச் சொந்தமான ஒரு நாடு. வரலாற்றுச் செழுமை எனும் போது உலக நாடுகளில் முதல் இடம் வகிக்கும் அளவிற்கு மிக நீண்ட மனித நாகரிகத்திற்கும், பேரரசுகளுக்கும், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களுக்கும், புராணக் கதைகளுக்கும், பிரமிடுகளுக்கும், மம்மிக்களுக்கும் புகழ் பெற்ற நாடு எகிப்து. இன்று அயல் நாட்டு அருங்காட்சியகங்களிலேயே ஏராளமான எகிப்திய அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களை காண்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் எகிப்திலேயே இருக்கும் அருங்காட்சியகங்களில் சொல்லவும் வேண்டுமா?

இந்த நூபியன் அருங்காட்சியகத்தில் நான் சென்றிருந்த 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மூவாயிரத்திற்கும் குறையாத நூபியன் இனக்குழு தொடர்பான புராதன சின்னங்கள் சேகரிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தன. நூபியன் பண்பாட்டு வரலாற்றுச் சின்னங்கள் தவிர இப்பகுதியில் ஆளுமை செலுத்திய கிரேக்க, இசுலாமிய சின்னங்களும் இங்குச் சேகரிப்பில் இடம்பெறுகின்றன.

நூபியன் அருங்காட்சியகத்தினைப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது என்பதோடு இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் பகுதியில் பயணிப்பதற்கும் இப்பகுதியின் இயற்கை அழகை ரசிப்பதற்கும் குறைந்தது ஒரு வார காலம் நிச்சயம் தேவை. நைல் நதியிலேயே பயணம் செய்து இந்த அருங்காட்சியகப் பகுதிக்கு வந்து விடலாம். நைல் நதியில் சிறு படகில் பயணம் மேற்கொள்ளும் போது நாம் பயணம் செய்யும் படகுகளை நோக்கி வியாபாரிகள் படகிலேயே வந்து தங்கள் விற்பனைப் பொருட்களை விலை பேசி விற்கின்றனர். வாசனை திரவியங்கள், துணி வகைகள், மருந்துகள், மசாலா பொடிகள் என்பன இத்தகைய படகு வியாபாரிகள் கொண்டு வருகின்ற பொருட்களில் முக்கியமானவை.

1997ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூபியன் அருங்காட்சியகம் வார நாட்கள் அனைத்திலும் திறந்திருக்கின்றது. எகிப்தில் இருக்கின்ற முக்கிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இணைந்திருக்கும் ஒரு அருங்காட்சியகம் இது. இதன் முகவரி Assuan, Sheyakhah Oula, Qism Aswan, Aswan Governorate, Egypt. எகிப்திற்குப் பயணம் செய்பவர்கள் குழுவாக பயணம் செய்வதே சாலச் சிறந்தது. தீவிரவாத நடவடிக்கைகள் எகிப்தில் தொடர்ந்து நிகழ்வதால் குழுவாகப் பயணிப்பது சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பிற்கு மிக அவசிமானதாகும் என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த அருங்காட்சியகத்திற்கான உங்கள் பயணத்தை திட்டமிடலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.