“சூர்யகாந்தன் சிறுகதைகளில் விளிம்புநிலை மாந்தர்கள்”      

-முனைவர் அரங்க. மணிமாறன்

முன்னுரை:

தமிழ் இலக்கியம் பரந்துபட்ட  இலக்கிய வடிவங்களைக் கொண்டது. சங்க இலக்கியங்கள், அற இலக்கியங்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், புராணங்கள், கதை இலக்கியங்கள் என காலத்திற்கேற்ற, தேவைக்கேற்ற வடிவப் பரிணாமங்களைப் பெற்று வளர்ச்சியடைந்துள்ளது. மொழிக்கு இலக்கணம் வகுத்ததோடு மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தவர்கள் தமிழர்கள் மட்டுமே! அம்மக்களின் பொருளாதார அடிப்படையிலான வகையில் விளிம்புநிலை மாந்தர் படைப்பு எழுத்தாளர் சூர்யகாந்தன் கதைகளின் வழி இக்கட்டுரை ஆய்கிறது.

சூர்யகாந்தன்:

கொங்குமண்டலமான செம்மண்பூமியாம் கோவைக்கருகிலுள்ள இராமசெட்டிப்பாளையத்தில் மாரப்பன்-சின்னம்மாள் எனும் விவசாயத் தம்பதியருக்கு 1953 சூலை-17 இல் பிறந்தவர். இயற்பெயர் மருதாசலம் என்பதாகும். கோவை அரசுக் கல்லூரியில் பயின்ற காலம்முதல் தமிழின்பால் ஆறாக்காதல் கொண்டவர். தீபம், தாமரை, வானம்பாடி முதலிய இதழ்களை வாசித்துக் கவிதை ஆர்வத்தை உருவாக்கிக்கொண்டார்.

கனல் மணக்கும் பூக்கள்’என்ற இவரது முதல் கவிதை 1973இல் ‘மனிதன்’இதழில் அன்றைய விவசாயப் போராட்டத்தை கருவாகக் கொண்டதாய் வெளியானது. வாழ்க்கை அனுபவம், சகமனிதர் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், துயரங்கள் ஆகியவற்றைக் கதைகளாக்கினார். இவரது முதல் சிறுகதை ‘தண்டிக்கப்படாத குற்றவாளிகள்’1974 இல் ‘தாமரை’ இதழில் வெளியானது. அதுமுதல் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் அமுதசுரபி, சுபமங்களா, புதிய பார்வை உள்ளிட்ட பல இதழ்களில்  படைப்புப் பல படைத்து வருகிறார். செம்மண் இலக்கிய வகைமையை ஏற்படுத்தியவர். மானாவாரி மனிதர்கள், விதைச்சோளம் முதலிய நாவல்கள் சிவப்பு நிலா, இவர்கள் காத்திருக்கிறார்கள் எனும் கவிதைகள் கோவை மாவட்டத்துக் கோயில்கள் எனும் கட்டுரை மண்ணின் மடியில், விடுதலைக் கிளிகள் முதலிய சிறுகதை நூல்களைப் படைத்த இவர் இலக்கியச் சிந்தனை, இலக்கிய வீதி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் விருது, அகிலன் விருது உள்ளிட்டவற்றை பெற்ற பான்மையர். ‘மண்ணையும் மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர் படைப்பாளியாகக் கிடைத்தது மண்ணுக்கு கொடை, மொழிக்குப் பரிசு, இலக்கியத்துக்குக் கிடைத்த பேறு’என்று இவரைப் பாராட்டுகிறார் கவிஞர் புவியரசு1. தற்போது கோவையில் கல்லூரியொன்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

கதைமாந்தர் படைப்பு:

பெரும்பான்மையான இலக்கியங்களில் ஒப்பற்ற வீரமும்  கொடைப்பண்பும் கொண்ட மாந்தர்கள் படைக்கப்படுகின்றனர். சங்க நூல்களில் தலைவன் தலைவி எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் மன்னர்களின் வாழ்வியலே பெரும்பான்மை பேசப்பட்டிருக்கிறது. காப்பியக் காலத்திலும் ஒப்பற்ற வீரனே கதைத்தலைவனாகப் படைக்கப்பட்டுள்ளான். இதிலிலிருந்து சற்று மாறுபட்டு சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி எனும் வாணிகக் குடும்பத்து மாந்தர்கள் கதைமாந்தர்களாய் படைக்கப்பட்டுள்ளனர். இதனால் இக்காப்பியம் ‘குடிமக்கள் காப்பியம்’எனப் புகழப்படுகிறது. எனினும் கோவலனும் மாதவிக்குச் சோழ மன்னனால் அளிக்கப்பட்ட விலையுயர்ந்த முத்துமாலையை மிக அதிக விலைகொடுத்து வாங்குமளவு பணக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

புராணம், சிற்றிலக்கியங்களிலும் உயர்வர்க்கத்தினரே மாந்தர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். குறவஞ்சியில் குறவர் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டுள்ளது. பள்ளு இலக்கியங்களில் உழவர் வாழ்க்கை சித்திரிக்கப்பட்டுள்ளது.

கதை இலக்கியங்களிலும் பெரும் பணக்காரர்களின் வாழ்வியல் சரித்திரமாக விளக்கப்பட்டுள்ளது.

புதுமைப்பித்தன்,ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி போன்ற படைப்பாளிகள் ஏழை எளிய மக்களின் வாழ்வியல் துன்பங்களைத் தங்களது கதைகளில் வெளிப்படுத்தினர்.

பலர் இதனை இருண்மைச் சிந்தனை என விமர்சித்தனர். எனினும் புதுமைப்பித்தன் போன்றோர் ‘ஏழை விபசாரியின் ஜிவனோபாயத்தை வர்ணிப்பதால் சமுதாயத்தின் தெம்பு இற்றுவிடப்போவதில்லை 2 என்று துணிச்சலாக எழுதிவந்தனர்.

விளிம்பு நிலை மாந்தர்கள்:

இறைவனின் படைப்பில் அனைத்து மனிதர்களும் சமம். ஆனால் கல்வியினாலும் தத்தமது உழைப்பினாலும் பெற்ற ஊதியத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவதாலும் மனிதர் தம் தேவைகளைப் பெற்று வாழமுடியும்.சிலர் அப்பன் பாட்டன் காலத்து வசதிகளைப் பயன்படுத்தி வசதியாக வாழ்கின்றனர். சிலர் ஏழைகளைச் சுரண்டி ஏமாற்றி ஆதிக்கத்தால் அடிமைப்படுத்தி பணக்கார வாழ்வு வாழ்கின்றனர். சிலர் நடுத்தர வர்க்கத்தினராய்த் திரிசங்கு வாழ்க்கை வாழ்கின்றனர்.

தமக்கான உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகியவையே ஒவ்வொரு மனிதரின் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. இவ்வடிப்படை வசதிகளே இல்லாமல் வாழும் மக்கள் ஏழைகளாகின்றனர்.

அடுத்த வேளை உணவு நிச்சயமில்லாமல், வாழ்வதற்குச் சொந்தமாக இருப்பிடம் இல்லாமல், உடுக்கச் சரியான ஆடையில்லாமல் மனிதருக்குரிய அடிப்படை வசதிகளின்றி வாழும் மக்களை விளிம்புநிலை மக்கள் என விளிக்கலாம்.

இவ்விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைச் சூர்யகாந்தன் கதைகளின் வழி ஆய்வோம்.

விதவையும் மாற்றுத்திறனாளியும்:

ரங்கசாமிக்குப் பிறவியிலேயே இரண்டு கால்களும் முழங்கால் மூட்டுக்கு கீழே மெலிந்து குச்சிபோல் சூம்பிபோய் மாற்றுத்திறனாளியானவன். வேறு எந்தத் தொழிலும் செய்யமுடியாமல் பிச்சைக்காரனாய்ச் சக்கரவண்டியில் உக்கார்ந்து காண்போரையெல்லாம் கையெடுத்துக்கும்பிட்டு யாசித்து வயிற்றைக் கழுவி வருகிறான். ஆனால் தான் ஈயென இரந்து வாழ்வதை இழிந்தது என வெறுக்கிறான்.

‘…ச்சீ ஒவ்வொருத்தருங்கிட்டயும் கெஞ்சி அழுது கூக்குரல் போட்டு இந்த ஒரு சாண் வவுத்தக்காக ஈனப்பொழப்ப பொழச்சிட்டிருந்தமே எத்தென அசிங்கம்’3 (வாழப்பிறந்தவர்கள் ப.10) என்று கூசி வாழ்கிறான்.

விபத்தில் இறந்துவிட்ட கணவனை இழந்து விதவையாகக் கைக்குழந்தையுடன்  செருப்புத் தைக்கும் தொழில்செய்து வாழ்கிறாள் சரசா. இரண்டு ஏழைகளும்  சந்தித்து ஒருவருக்கொருவர் பச்சாதாபத்தினால் நட்பாகின்றனர். இருவரின் ஏழ்மையும் பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது. ஒரு சூழலில் இருவரும் சேர்ந்து வாழத் தலைப்படுகின்றனர். அவளின் குழந்தையைத் தன் குழந்தையாக நினைக்கிறான்.

பிச்சையெடுப்பதை விட்டு செருப்புத் தைப்பதைச் சரசாவிடம் கற்றுக்கொண்டு உழைத்து வாழத் தலைப்படுகிறான். ஆனால் விதி அவளின் மச்சினன் வடிவில் வந்து சதிசெய்கிறது.

சரசா கணவணை இழந்து கைக்குழந்தையுடன் வாழ வழியற்று நிற்கும்போது உதவிக்கு வராதவன் ரங்கசாமியோடு வாழத்தொடங்கும்போது புரளிக்காரர்களின் பேச்சைக்கேட்டு எதிர்த்துத் தாக்க இயலாத ரங்கசாமியை அவள் இல்லாத நேரத்தில் குடித்துவிட்டு வந்து அடித்து விரட்டிவிடுகிறான்.

 திரும்பி வந்த சரசா ரங்கசாமி இல்லாததையும் மச்சினன் அடித்து விரட்டிவிட்டதையும் எண்ணித் தவித்துப் போகிறாள்.

எங்கெ போயி எப்பிடித் தடுமாறுதோ…எனச் சஞ்சலத்தோடு பரக்கப்பரக்கத் திரிந்தாள்.4 (ப.16)

அண்ணன் செத்தபின் அவனுடைய உடமைகளைத் திருடிக்கொண்டு இவளை அநாதையாகத் திரியவிட்ட அவனைச் சபிக்கிறாள். ரங்கசாமியைத் தேடித்திரிந்து இறுதியில் கோவை காந்திபுர பஸ் ஸ்டாண்டக்கு அருகில் ஒரு சின்ன துணிமூட்டையைப் போல ரங்கசாமியைக் கண்டு தன்னோட வர அழைக்கிறாள். அவன் மறுக்கிறான்.

‘உன்னெ விட்டுட்டு நாங் கஞ்சி குடிச்சேன்னா அது என்ர தொண்டைக்குள்ளதா எறங்குமா?’5 (ப.17)

என்று ஆறுதல் சொல்லி அழைத்துப்போகிறாள். இருவரும் ஒரு புதிய வாழ்வைத்தேடிப் பயணமாகின்றனர். கால் சூம்பிப் போன ஒருவனும், கணவனை இழந்து தவிக்கும் ஒருத்தியும் அன்பினால் இரக்கத்தினால் ஒருவரையொருவர் சார்ந்து வாழத்தலைப்படுதலை விவரிக்கும் சூர்யகாந்தன், விதியின் சதியையும் ஏழ்மையையும் தம் உழைப்பாலும் நம்பிக்கையாலும் அன்பாலும் வென்று வாழும் விளிம்புநிலை மாந்தரைப் படைத்துக்காட்டியுள்ளார்.

தன்னாசியின் வறுமை:

தன்னாசி கிணறு வெட்டும் கூலித்தொழில் செய்யும் ஏழைத்தொழிலாளி. அதன்மூலம் கிடைக்கும்  எட்டு ரூபாய்க்கூலி ஒரு நாளைக் கடத்துவதற்கே மூச்சுமுட்ட வைக்கிறது. மனைவி ராமாயியின் மருத்துவச் செலவு வேறு. குழந்தை குட்டிகள் வேறு. வீடு பாதி சுவர் விழுந்த ஓட்டைக்கூரை வீடு. குழந்தைகளின் பசியை ஆற்ற முடியாத வறுமை வாழ்வு அவனுடையது.

ஊர்ப்பொதுவிடத்தில் கூடிய கூட்டம் பெருமாள்கோயில் குடமுழுக்கு திருவிழாவுக்காக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் இரண்டு மாதத்திற்குள் நூறு ரூபாய் வரியாகக் கொடுத்துவிடவேண்டும் என்று முடிவெடுக்கிறது.

தான் ஏழையாக இருந்தாலும் ஊரில் மானத்தோடு வாழவேண்டுமென்றால் காலக்கெடுவுக்குள் பணத்தைக் கட்டிவிடவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு ஆளாகிறான். கொடை வசூலிப்புத் தொடங்கி நடந்து வருகிறது. தன்னால் தரமுடியவில்லை. கிணற்று வேலையும் நின்றுவிடுகிறது. வயல் வேலைகளிலும் நான்கு ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை.  கோவில் கட்டும் பணியில் கூடுதல் நேரங்களில் உழைத்தாலும் அது அவர்களுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. கொடைப்பணம் தராததையே குத்திக்காட்டிப் பேசுகின்றனர்.

காலக்கெடு முடிந்ததும் ஊர்ப்பெரியவர்கள் அவமானப்படுத்துகின்றனர். கும்பாபிஷேக நாளும் வருகிறது. பணம் கட்டவில்லையென்றால் ஊரைவிட்டே தள்ளிவைத்துவிடுவர். வீட்டு நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளமாட்டர்கள். ஊர்ச்சம்பிரயதாயத்திற்குக் கட்டுப்படாதவன் என்று முத்திரைக்குத்திவிடுவர் என அஞ்சுகிறான்.

‘அனாதை போன்ற இந்த தண்டணையை நினைத்துப் பார்க்கையில்  தன்னாசி அன்று மௌனமாய் வருவதைத் தவிர வேறு எதைச் செய்திருக்கமுடியும்’6.( தன்மானம் ப.23 )

திருவிழாவைப் பார்க்கச்சென்ற குழந்தைகளை ‘உங்க அப்பனாத்த சுண்டி குடுத்த காசுலெ ஆனதுன்னு இங்கே வெளையாட வந்தீங்களா? மருவாதியா இங்கேயிருந்து ஓடிப்போயிடுங்கடா கருமாந்திரம் புடுச்ச பூடைகளா…? 7 ப.25 ‘என்று திட்டி அவமானமாகப் பேசி அனுப்பிவிடுகின்றனர்.

நள்ளிரவில் தன்னாசி ஓர் இறுக்கமான முடிவை எடுக்கிறான். இரவோடு இரவாகத் தன் குடும்பத்தோடு ஊரைவிட்டே வெளியேறிப் போய்விடுகிறான். ஓர் ஏழை ஊரின் கட்டுப்பாட்டுக்காகப் பயந்து தன் பாட்டன் பூட்டன் காலத்திருந்து ஊரோடு ஒட்டிக்கொண்டு வாழ்ந்த பிணைப்பை விட்டுப் பிரிவதை தன்னாசி எனும் விளிம்பு நிலை மாந்தர் வழி படைக்கிறார்.

கல்வி கற்க முடியாத சரஸ்வதி:

சரஸ்வதி ஓர் ஏழைக்குடும்பத்து சிறுமி. அப்பா வேலப்பன் சரியான குடிகாரர். அம்மா குப்பம்மா நோயாளி. சரஸ்வதிக்கு படிப்பின்மீது அதிக தாகம். ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பின்மூலம்  தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவு நிரம்ப அவளுக்குண்டு. பள்ளிக்குப் புதிதாக வந்துள்ள டீச்சர் எதிலும் கண்டிப்பானவர். ‘பொஸ்தகங்களெ வாங்காமெ கடனுக்கு இங்கெ வந்து உக்காந்துட்டு இறக்கிறாபிடித்தா அர்த்தம் …’8 (கொழுந்துகளை நறுக்கும் வேர்கள் ப.27) என்று கண்டிக்கிறார்.

அவள் சில புத்தகங்களைப் பத்து நாட்களுக்குள் வாங்கிவிட வேண்டும். அப்பா படிப்புக்கு உதவாதவர். சரஸ்வதி மே மாத விடுமுறை நாட்களிலும் வார இறுதி விடுமுறை நாட்களிலும் ஊரை அடுத்த காடுகளில் வேப்ப மரங்களிலிருந்து வேப்பங்கொட்டை சேகரித்து வைக்கிறாள். ஒரு படி ஐம்பது பைசாவிலிருந்து எழுபத்தைந்து பைசா வரையில் கோயம்பத்தூர் வியாபாரிகள் வாங்கிச் செல்வர். அவள் முடிவெடுத்துவிட்டாள். எப்படியாவது பத்து பன்னிரண்டு ரூபாய்க்கு சேகரித்து வெள்ளிக்கிழமைக்குள் டீச்சரிடம் கொடுத்தால்தான் திங்கட்கிழமை புத்தகம் வாங்கி வந்துதருவார் படிப்பும்கெடாது.

பள்ளியை விட்ட மாலைநேரம் மதிய நேரம் எனக் கஷ்டப்பட்டு இருப்பத்தைந்து படி சேர்த்துவிட்டாள். வியாபாரியை நோக்கி காத்திருந்தாள். இந்த நேரம்பார்த்து யாரும் வரவில்லை. வெள்ளிக்கிழமை மதியம் வரை காத்திருக்கிறாள். தன்தோழி சரோஜாவிடம் சொல்லி வைத்திருக்கிறாள். அவள் வியாபாரி வடக்கு வீதியில் வருவதாகக் கூறியவுடன் அவனிடம் ஓடிச் செல்கிறாள்.

ஐயா..ஐயா வாங்க! எங்க வூட்லே வேப்பங்கொட்டைக கொண்டாந்து நெறைய வெச்சிருக்கேன்!9 (ப.32) என்று அழைக்கிறாள்.வியாபாரி தனக்கு அவசரம் இன்னொரு நாள் வந்து வாங்கிக்கொள்வதாகக் கூறியும் விடாமல் அழைத்துச் செல்கிறாள். வீட்டுக்குக்குள் சென்று கோணிப்பையை தேடுகிறாள். அது நான்காக  மடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதைக் கண்ட சரஸ்வதிக்கு கால்கள் ஒரு நிலையில் நிற்கவில்லை. ஆத்திரமும் ஏமாற்றமும் வருத்தமும் அவளைப் பந்தாடுகின்றன.

அப்பா வேலப்பன் ஏற்கெனவே அவற்றை விற்றுவிட்டுப் பத்து ரூபாய்க்கு நன்றாக குடித்துவிட்டார். மூணு ரூபாய்க்கு சாக்கணா தின்றுவிட்டு ரெண்டு ரூபாயை அவளிடம் தருகிறார். வியாபாரி அவசரத்தில் இருக்கும் தன்னை அவள் ஏமாற்றிவிட்டதாகத் திட்டிவிட்டுச் செல்கிறான். ‘அங்கிருந்து விலகிச்சென்று குமுறிக்குமுறி அழத்தொடங்கினாள் சரஸ்வதி! கொளுத்தும் வெயிலின் உக்கிரம் அந்த கண்ணீரில் இருந்தது.’10 (ப.34)

குடிகாரத் தந்தை: நோயாளி அம்மா என்ற குடும்பச்சூழலிலும் வன்பாடுபட்டாவது படித்து முன்னேற நினைத்த அவளுக்கு அப்பாவின் குடிப்பழக்கம் தடையாகிறது. அவள் பெயர் சரஸ்வதி கல்விக்கு அதிபதியின் பெயர். ஆனால் இவளால் படிக்கவே முடியவில்லை என முரண்பாட்டு நிலையில் வாழும் சரஸ்வதி எனும் விளிம்புநிலை மாந்தரை படைத்துள்ளார் சூர்யகாந்தன்.

முடிவுரை:

சூர்யகாந்தன் தன் சிறுகதைகளில் வறுமை ஊர்க்கட்டுப்பாடுகள் பணக்காரர்களின் ஆதிக்கம் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்பு என பல்வேறு காரணங்களினால் விளிம்பு நிலையில் வாழும் மனிதர்களைப் படைத்து மனிதர்களாகப் பிறந்த அவர்களும் சக மனிதர்களைப்போல எல்லா உரிமைகளும் பெற்று வாழவேண்டும் என்ற தவிப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளமை தெளிவாகிறது.

அடிக்குறிப்புகள்:

  1. எழுத்தாளர் சூர்யகாந்தன் – கட்டுரை. கட்டுரையாளர்: அரவிந்த்-தென்றல் இணைய இதழ்-சனவரி-2018.
  2. தமிழ் இலக்கிய வரலாறு – எம்.ஆர்.அடைக்கலசாமி கழக வெளியீடு-1976 ப.121.
  3. சூர்யகாந்தன் சிறுகதைகள்- (வாழப் பிறந்தவர்கள் சிறுகதை ப.10)- தனலட்சுமி பதிப்பகம்- எஸ்-2 அரவிந்த் நரேன் என்கிளேவ் -8 மாசிலாமணித் தெரு தி.நகர்- சென்னை-17. முதற்பதிப்பு- டிசம்பர் 2004.
  4. மேலது ப.16
  5. மேலது ப.17.
  6. மேலது நூல்-தன்மானம் சிறுகதை ப.23.
  7. மேலது ப.17
  8. மேலது நூல்- கொழுந்துகளை நறுக்கும் வேர்கள் சிறுகதை ப.27
  9. மேலது ப.32
  10. மேலது ப.34.

*****

கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்
அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
செங்கம்-606701.
பேசி:99430-67963.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.