பாணாற்றுப்படைகளில் உணவுப்பண்பாடு

-மு.மங்கையர்க்கரசி

ஒரு சமுதாயத்தில் உள்ள மக்கள் தம் வாழ்க்கையை நடத்தும் முறையிலிருந்து பெறக்கூடிய வாழ்வியல் நெறியே பண்பாடு. நாம் உண்ணுகின்ற உணவினைப் பொறுத்துத்தான் பழக்க வழக்கம், மன உணர்வுகள் அமைகின்றன. மனித வாழ்க்கைக்கு ஏற்ப உணவு வகைகள் மாறிக் கொண்டே வருகின்றன. உணவின் சுவைகளும் இடத்திற்கேற்ப, செய்முறைக்கேற்ப மாறுபடுகின்றன. உண்ணுகின்ற உணவிலும் பண்பாட்டைக் கடைப்பிடித்தவர்கள் பழந்தமிழர்கள்.

விருந்தினரை வரவேற்றல்

கரிகாலன் வீரமும் இரக்க குணமும் ஒன்றாக அமையப் பெற்றவன். அவன் அரண்மனை வாசலில் பொருநர்கள் வந்து கூடியவுடன், வாயில் காவலனிடம் அனுமதி பெறாமல் அரண்மனைக்குள் பொருநர்கள் செல்வர். அப்பொருநர்கள் இனிய பாடல்களைப் பாடுவர். அதனைக் கேட்ட அளவில் கரிகால் வளத்தான் எழுந்து வந்து நெருங்கிய நண்பரைப்போல் கருதி இனிய முகத்துடன் வரவேற்பான். குளிர்ந்த பார்வையோடும், இனிய சொற்களோடும் பொருநர்களுடன் கரிகாலன் உரையாடுவான். இவ்வாறு கரிகாலன் விருந்தினரை வரவேற்கும் பாங்கினைப் பின்வரும் அடிகள் தெளிவுபடுத்தும்,

“…. …. ஒன்றிய
கேளிர் போல கேள்கொளல் வேண்டி,
கண்ணின்காண நண்ணுவழி இரீஇ
பருகு அன்ன அருகா நோக்கமோடு,
உருகுபவை போல், என்புகுளிர் கொளீஇ”1 

விருந்தினர்களை வரவேற்பது என்பது தமிழரின் முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது. இப்பண்பினைக் கரிகாற் பெருவளத்தான் பெற்றிருந்தான் என்பதை மேற்கூறிப் பாடல் அடிகளிலிருந்து அறிய முடிகிறது.

உணவு கொடுத்து ஓம்பிய முறை

கரிகாலன் பொருநரை வரவேற்றுப் பொருநர்கள் உண்ணுதற்குரிய நேரத்தை அறிந்து செம்மறியாட்டின் இறைச்சியையும், இரும்பு நாராசத்தில் கோத்துச் சுடப்பட்ட தசைத் துண்டத்தினையும் ‘உண்ணுங்கள் என்று பலமுறை வற்புறுத்தியதால் பொருநர்கள் அவற்றின் வெப்பத்தை ஆற்றுதற் பொருட்டு வாயின் இடப்பக்கமும் வலப்பக்கமும் மாற்றி மாற்றி ஆற்றி உண்டதோடு மட்டுமல்லாமல் பல இனிய சுவையுடைய தின்பண்டங்களை உட்கொள்ளும்படி கரிகாலன் உபசரித்தான். இச்சிறப்பினைக் கீழ்க்கண்ட அடிகளின் வழியாக அறியலாம்.

“துராஅய் துற்றிய துருவைஅம் புழுக்கின்
காழின் சுட்ட கோழ்ஊன் கொடுங்குறை
ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி,
ஆவை அவை முனிகுவம் எனினே, சுவைய
வேறு பல் உருவின் விரகுதந்து இரீஇ”2

என்ற பாடலின் வழியாகப் பொருநர் உண்ணுதற்குரிய நேரத்தை அறிந்து கரிகாலன் விருந்தோம்பினான் என்பதை அறியமுடிகிறது. கரிகாலனின் விருந்தோம்பலின் இறைச்சியை உணவாகப் பெற்ற பின் ‘முல்லை முகைபோன்று உமியற்ற இடைமுறியாத அரிசியால் விரல்போன்று நெடுகின அளவொத்த சோற்றையும் அவற்றொடு பருக்கைக்கற்கள் போன்று நன்கு பொறிக்கப்பட்ட பொறிக்கறிகளையும் பிறவற்றையும் கழுத்து நிரம்புமாறு உண்டோம் என்று பொருநன் குறிப்பிடுவதை

       “…….முகிழ்த்கை
முரவை போகிய முரியா அரிசி
விரல்என நிமிர்ந்த நிரல்அமை புழுக்கல்
பரல்வளைக் கருணை, காடியின் மிதப்ப
அயின்றகாலை, பயின்று இனிது இருந்து”3

என்ற பாடல் அடிகளிலிருந்து அறிய முடிகிறது.

‘கரிகாற் பெருவளத்தானின் செல்வச் சிறப்பு மிகுந்து உயர்ந்துள்ள மாளிகையில் ஏவல் மகளிர் பொன்னாற் செய்த வட்டில் நிறையும்படிப் பலமுறை கள்ளினை ஊற்றித்தர நாங்களும் நிறையப் பருகினோம்| என்று பொருநன் குறிப்பிடுவதைக் காணலாம்.

“மழை மருளும் மகிழ்செய் மாடத்து,
இழைஅணி வனப்பின் இன்நகை மகளிர்,
போக்குஇல் பொலங்கலம் நிறையப் பல்கால்,
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆரஉண்டு பேரஞர் போக்கி”4

என்ற பாடல் அடிகளிலிருந்து கரிகாற் பெருவளத்தானின் விருந்தோம்பலில் இடம் பெற்றுள்ளதை அறிய முடிகின்றது.

பாலைநில மக்கள் அளித்த விருந்து

வள்ளல்களையும், மன்னர்களையும் காண நெடுந்தொலைவு செல்லும் பாணருக்கும் அவர்தம் சுற்றத்துக்கும் அந்தந்த நிலத்தில் கிடைக்கும் உணவுகளை மக்கள் மிகுந்த விருப்போடு அளித்ததனைப் பல பாடல்கள் எடுத்தியம்புகின்றன. பத்துப்பாட்டினுள் அமைந்த ஆற்றுப்படை நூல்கள் இதனை மிக விரிவாக எடுத்துக்காட்டுகின்றன.

முல்லை நில மக்கள் விருந்து

முல்லை நிலத்தைச் சார்ந்த மகளிர் சமைத்த இனிய புளிங்கறி இட்ட சோற்றினை, மானினது சூட்டிறைச்சியுடன் பாணனின் பசி தணியுமாறு நிரம்பக் கொடுத்து விருந்தோம்பினர் என்பதனை,

“எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்”5

என்ற பாடல் அடிகளிலிருந்து முல்லைநில மக்களின் விருந்தோம்பலை அறிய முடிகிறது.

நெய்தல் நில மக்கள் அளித்த உணவு

கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தல் நிலத்தின் முதல் பொருளாக அமைந்துள்ளது. கடலால் ஒதுக்கப்பட்ட அகில் மர விறகைக் கொண்டு நுளைமகளால் காய்ச்சப்பட்ட தேறலை எயிற்பட்டினத்துப் பரதவர் பாணர்களுக்கு அளித்தனர். அவற்றைப் பெற்று மகிழ்ந்ததோடு நல்லியக்கோடனைப் புகழ்ந்து தம் விறலியருடன் சூடான குழல் மீனையும் பெற்று மகிழ்ந்து உண்டனர். இதனை,

“நெய்தல் நெடுவழி மணிநீர் வைப்பு மதிலொடு
 பெரிய பனிநீர்ப் படுவின் பட்டினம் படரின்
 ஓங்குநிலை ஒட்டகம் துயில் படிந்தன்ன
 வீங்குதிரை கொணர்ந்த விரைமர விறகின்
 அறற்குழல் பாணி தூங்கி யவரோடு
 வறற்குழற் சூட்டின் வயின்வயின் பெறுகுவீர்”6

என்னும் சிறுபாணாற்று பாடல் மூலம் அறியமுடிகின்றது.

நெய்தல் நிலத்திற்குரிய எயிற்பட்டினத்தில் உபசரிப்பவர்கள் பரதவர்கள் ஆவர். அப்பரதவர்கள் அகில் மர விறகால் தீயினை எரித்துக் காய்ச்சிய தேறலையும் சூடான குழல் மீனையும் கொடுத்து விருந்து உபசரித்தனர் என்பதை,

“பழம்படு தேறல் பரதவர் மடுப்ப
வறற்குழல் சூட்டின் வயின் வயின் பெறுகுவீர்
”7

எயினர் அளித்த விருந்து

பாலைநில மக்களாகிய எயினரும் பாணரை போற்றி ஒம்பியுள்ளனர். எயிற்றியர் புளிக்கறியையும் வரும்பத்தக்க சோற்றையும் மானுடைய சூட்டிறைச்சியையும் மாந்தளிர் போன்ற மேனியையுடைய வளையணிந்த பெண்கள் விருந்தினருக்கு இட்டு மகிழ்ந்தனர். இதனை,

“எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆயமொடு
ஆமான் சூட்டின் அமைவரர் பெறுகுவீர்
”8

என்னும் பெரும்பாணாற்றுப்படையில் எயினர் பானையில் சமைத்த சோற்றோடு உலர்ந்த இறைச்சிப் புழுக்கலைத் தேக்கு இலையில் வைத்து பாணரின் சுற்றத்தினருக்கு வழங்கியுள்ளனர்.

மருதநில உழவர் அளித்த விருந்தின் சிறப்பு

வயல்சார்ந்த இடமாக மருதம் அமைந்துள்ளது. மருதநிலத்தில் வாழ்வோரான உழவர்கள் வெள்ளிய சோற்றைப் கோழிப் பெடை கொண்டு சமைத்த பொரியலோடு தருவர். இதனை,

“வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவீர்”9

என்ற பாட்டின் மூலம் அறியமுடிகின்றது. இவையன்றி உழவர் மகளிர் வெள்ளிய அரிசியால் ஆகிய சோற்றோடு நண்டின் குழம்பையும் சேர்த்துப் பாணருக்கு அளித்துள்ளனர்.

குளிர்ந்த வயல்களையும், சான்றோரையும், அகழியையும் உடைய மருத நிலத்தை அடையந்தால் அங்குள்ள உழவர்கள் அமலை வெண்சோற்றினை நண்டினது கலவையொடு கொடுத்து விருந்தோம்பினர் என்பதை,

      “அந்தணர் அருள அருங்கடி வியன் நகர்
       அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின்
       அமைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
       கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுவீர்”10

என்ற பாடல் அடிகளிலிருந்து உழவரின் விருந்தோம்பலை அறிய முடிகிறது.

தண்டலை உழவர் அளித்த உணவு

உழவுத்தொழிலின் மேன்மை உணர்ந்த தண்டலை உழவர்களின் குடியிருப்பில் இனிய சுவை நிறைந்த மிகப் பெரிய பலாப்பழம், தெங்கு வாழைப்பழம்,  பனைநுங்கு முற்றிய நல்ல கிழங்கு போன்றவற்றை விருந்தினருக்குக் கொடுத்தனர் என்பதை,

“தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்
 தாழ்கோட் பலவின் சூழ்களைப் பெரும்பழம்
 திம்பல் தாரம் முனையிற் சேம்பின்
 முனைப்பலும் முதிர்கிழங்கு ஆர்குவிர்”11 என்னும் பெரும்பாணாற்றுப் பாடல் அடிகளின் மூலம் அறிய முடிகின்றது.

முடிவுரை

பண்டைத் தமிழர் தாம் வாழ்ந்த நிலப்பகுதியில் கிடைக்கப்பெற்ற நெல், வரகு, தினை, புல்லரிசி, மா, பலா, வாழை, கிழங்கு வகை, இளநீர், முதலிய தாவர உணவுகளையும் மீன், நண்டு, முயல், உடும்பு, காட்டுப்பன்றி, ஆடு, கோழி, மான் முதலிய இறைச்சி உணவுகளையும் உண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

சான்றெண்கள்:

 1. பத்துப்பாட்டு, ஞா. மாணிக்கவாசகன், பொருந பா.அ.79-83, ப.61
 2. மேலது, பொருந பா.அ.79-83, ப.61
 3. மேலது, பொருந பா.அ.103-108, பக்.63,64
 4. மேலது, பொருந பா.அ.112-116, பக்.64,65
 5. மேலது, பொருந பா.அ.84-88, ப.61
 6. மேலது, பா.அ.235-236, பக்.115,116
 7. மேலது, பா.அ.560-562, பக்.433,434
 8. மேலது உரை பா. 63
 9. மேலது, பா.அ.159-163, ப.103
 10. பெரும்பாணாற்றுப்படை பா-99,100 ப-213
 11. மேலது ப-214
 12. மேலது, பா.அ.187-195, ப.107
 13. மேலது ப-219
 14. பெரும்பாணாற்றுப்படை பா-116,118 ப-65

*****

கட்டுரையாளர் – தமிழாய்வுத்துறைத்தலைவர்,
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
விழுப்புரம்.
mangaiselva28@gmail.com

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.