-கி. ரேவதி

உலகின் உன்னத மொழிகளுள் முதன்மையானது தமிழ்மொழி. தமிழில் பல இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் ‘சங்க இலக்கியங்கள்’ தனிச்சிறப்புடையன. இவ்விலக்கியங்கள் காதலையும், போரையும் பெரும்பான்மையாக மொழிவன. சங்க இலக்கியங்களில் கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மக்களின் பண்பாடு பற்றிய பல சான்றுகள் உள்ளன. அவற்றில் குறுந்தொகையில் உள்ள பண்பாட்டுக் கூறுகளைத் தேடித் தொகுப்பதில் தனியின்பம் இருக்கிறது.

பண்பாடு – விளக்கம்

பண்படுவது பண்பாடு, மனித இனத்தைப் பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி தமக்குரிய செம்மையையும், உயர்வையும் எடுத்தியம்பும் சிந்தனை வெளிப்பாடாக இலங்குகிறது.

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” (கலி.)

கலாசாரம் என்ற சொல்லையும் பண்பாட்டோடு தொடர்புபடுத்த முடிகிறது. பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும், மனிதன் சமுதாயத்தில் ஓர் உறுப்பினராக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்க வழக்கங்களும் அடங்கிய முழுமைத் தொகுதியாகும் என்று பக்தவத்சல பாரதி கூறுகிறார்.

மறுபிறவியில் நம்பிக்கை

இப்பிறவி மட்டுமல்லாமல் மறு பிறப்பும் உண்டு என்ற நம்பிக்கை பழங்காலத் தமிழர்களிடம் இருந்தது. இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் தான் மணந்த தலைவனே தனக்கு கணவனாக அமைதல் வேண்டும். ஆவன் நெஞ்சு நேர்பவளாகத் தான் மட்டும் அமைதல் வேண்டும் என்பதை,

“இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை
யான் ஆகியர் நின்நெஞ்சு நேர்பவளே” (குறு -49) என்ற அடிகளால் அறியமுடிகிறது.

தொழில்கள்

சங்க காலத்தில் பல தொழில்கள் சமுதாய மேம்பாட்டிற்குக் காரணமாக இருந்தன. அக்காலத்தில் கழைக் கூத்தாடிகளின் தொழில் முறையை,

“ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால்பொரக் கலங்கி”    (குறு-7)

மூங்கிலின் மேலே கயிறு கட்டி ஏறி ஆடும் போது ஒலிக்கின்ற பறை என்ற வரிகளில் அறியமுடிகிறது.

“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”     
(குறள்-1031)

என்ற குறளுக்கேற்ப சங்க காலத்தில் உழவுத் தொழில் சிறப்புற்று இருந்தது என்பதை,

தரிசாகக் கிடந்த நிலத்தை உழுததனாலாகிய நிறைந்த மகிழ்ச்சியையுடைய உழவர் காலையில் விதைப்பதற்காகச் சிறிய கூடைகளில் விதைகளை எடுத்துச் சென்றனர் என்ற செய்தியும், “உழவர் வாங்கிய” (குறு-10) என்ற வரிகளில் உழவர்கள் பற்றியும், சங்கினை அறுத்து வளையல் செய்கின்ற பொற்கொல்லர் தொழில் முறையும் கூறப்படுகிறது. மேலும்,

“உலைக்கல் அன்ன பாறை ஏறி” (குறு-12)

என்ற செய்தியில் இரும்புக் கொல்லன் தொழில் முறையும் காட்டப்படுகிறது.

“உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின்” (குறு-124)

இப்பாடலில் அக்காலத்தில் உமணர்கள் உப்பு வணிகத்தில் ஈடுபட்டதை அறியமுடிகிறது.

தெய்வ நம்பிக்கை

சங்க காலம் முதற்கொண்டே தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கை குடி கொண்டிருந்தது. உலகம் கடவுளால் காக்கப்படுகிறது என்ற உண்மையை,

“சேவல் அம் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே”
(குறு-1)

என்று குறுந்தொகையின் முதல் பாடலே கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது. தலைவன் களவுக் காலத்தில் சூளுரை செய்தல்(குறு-25), தலைவிக்கு வரும் காதல் நோய்க்கு கடவுள் காரணம் என்று நம்புதல், தெய்வங்களின் உறைவிடம் மலை (குறு-105), போன்ற செய்திகளின் மூலம் அக்கால மக்களின் தெய்வ நம்பிக்கையை அறியலாம். மேலும்,

“மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்” (குறு-87)

என்ற பாடலில் தெய்வமானது கொடியவரை வருத்தும் என்ற செய்தியும் சொல்லப்படுகிறது.

பழக்க வழக்கங்கள்

சூழ்நிலையின் தேவைக்கேற்ப தனிமனிதனிடம் வேர்விடுகின்ற செயல்பாடுகளே பழக்கம் எனப்படும். பல தனி மனிதர்களின் பழக்கங்கள் ஒரு குழுவின் இனத்தின் சமுதாயத்தின் தொடர் பழக்கங்களாக வளர்ந்து வழக்கம் என்ற நிலைக்கு உயர்கிறது.

அக்காலப் பெண்கள் கூந்தலில் இட்டு, நீராடுவதற்காக எருமண்ணை பயன்படுத்தியுள்ளனர் என்பதை,

“கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும்
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே”
(குறு-113)

என்ற பாடல் தெரிவிக்கிறது. மேலும் தினையில் கிளிகளை விரட்ட தலைவி செல்கிறாள். சுனையில் மலர்ந்த பூக்களைப் பறித்து அவற்றை மாலையாகக் கட்டி செல்கிறாள். சுனையில் மலர்ந்த பூக்களைப் பறித்து அவற்றை மாலையாகக் கட்டி தினைப்புனத்தில் கதிரை உண்ணவரும் கிளிகளை ஓட்டுகின்ற பழக்கம் உண்டு என்ற செய்தி,

புனக்கிளி கடியும்’ (குறு-142), ‘படுகிளி கடிகம்’ (குறு-198) ‘தினைகிளி கடிதலின்’ (குறு-217) என்ற பாடல்கள் முன் வைக்கின்றன.

தலைவி காதலுற்றபோது அதனைச் செவிலி உடல் நோய் எனக் கருதி வெறியாட்டு நிகழ்த்தும் பழக்கமும் அக்கால மக்களிடம் காணப்பட்டது.

“மென்தோள் நெகிழ்ந்த செல்லல், வேலன்
வென்றி நெடுவெள்”
(குறு-110)

அக்கால மகளிர் முல்லை, குவளை, காவி, வேங்கை போன்ற மலர்களைச் சூடுவதையும், அணிகலன் அணிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை பல பாடல்கள் பறைசாற்றுகின்றன. தயிர் உறை ஊற்றும் வழக்கம் (குறு-167) கட்டுவிச்சியிடம் குறி கேட்டல் (குறு-26), பெண்கேட்டல் (குறு-146) போன்ற பழக்கங்கள் காணப்பட்டன. ஆய மகளிர் தலைவியுடன் கடல் நீராடி மலர்பறித்து மாலை தொடுத்து, வண்டல் அயர்ந்து விளையாடும் பழக்கமும் இருந்தது எனலாம்.

பழந்தமிழ் மக்களின் வாழ்நிலைப் பண்பட்டு மேன்மை நிலையில் இருந்ததைப் பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மெய்ப்பிக்கின்றன.

“பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல்
மண்புக்கு மாய்வது மண்”
(குறள்-996)

என்ற குறளுக்கேற்ப பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் மதிப்பினை அளந்தறிய உதவும் கருவியாகத் திகழ்கிறது. அத்தகைய பண்பாட்டு நிலையில் தனிச்சிறப்புடையவர்களாகவும், தன்னிகரற்றவர்களாகவும் திகழ்ந்தவர்கள் நம் தமிழர்களே என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

பார்வை நூல்கள்

  1. க.கோ. வேங்கடராமன், தமிழ் இலக்கிய வரலாறு, கலையக வெளியீடு, 275டீ5, பாலாஜி நகர், பரமத்திவேலூர், நமக்கல், நான்காம் பதிப்பு, சூன், 2006.
  2. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், 4-ம் பதிப்பு, 2009.
  3. முனைவர் அ.மா. பரிமணம், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், (பதி) கலித்தொகை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-வி, சிட்போ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, மூன்றாம் அச்சு.2007.
  4. பதிப்பக ஆசிரியர் குழு, திருக்குறள், சூப்பர் ஸ்டார் பதிப்பம், சென்னை.

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, (தன்னாட்சி),
விழுப்புரம்.
revathikrish201990@gmail.com

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *