குறளின் கதிர்களாய்…(222)
உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்.
-திருக்குறள் -850(புல்லறிவாண்மை)
புதுக் கவிதையில்…
உயர்ந்தோர் பலரும்
உலகில் உண்டென
உணர்ந்து உரைத்ததைத்
தன் சிற்றறிவால்
இல்லையென இயம்புபவன்,
மக்களிடையே நன்மகனென
மதிக்கப்படாமல்
பேயென இகழப்படுவான்…!
குறும்பாவில்…
உண்டென உலகறிஞர் உணர்ந்துரைத்ததை
இல்லையெனச் சொல்பவன் உலகில்
பொல்லாப் பேயென இகழப்படுவான்…!
மரபுக் கவிதையில்…
உலகினில் சான்றோர் ஆய்ந்தறிந்தே
உண்டென உறுதியாய் உரைத்ததையே
இலகுவா யெண்ணியே புல்லறிவால்
இல்லை யென்று கூறுபவன்,
பலனே யில்லாப் பதராகப்
பயப்பட வைக்கும் பேயெனவே
உலகோர் ஒன்றாய்த் தூற்றிவிடும்
உதவாக் கரையாய் ஆவானே…!
லிமரைக்கூ..
உலகோராய்ந்தே அறிந்துரைத்தார் உண்டு,
அதையே இல்லையென்பானை இகழும் உலகம்
பேயவனென்றே கருத்தினில் கொண்டு…!
கிராமிய பாணியில்…
பேசாதே பேசாதே
அறிவேயில்லாமப் பேசாதே..
சொல்லாதே சொல்லாதே
இல்லயிண்ணு சொல்லாதே,
நல்லாப் படிச்சி அறிஞ்சவுங்க
எல்லாந்தெரிஞ்சி உண்டுண்ணத
இல்லயிண்ணு சொல்லாதே..
அப்புடி
அறிவில்லாம சொல்லுறவன
அடிச்சித்தின்னும் பேயிண்ணுதான்
ஒலகமெல்லாஞ் சொல்லிடுமே..
அதால
பேசாதே பேசாதே
அறிவேயில்லாமப் பேசாதே…!
செண்பக ஜெகதீசன்…