Tag: மு.முருகேஷ்

  • கதைகளின் வழியாக குழந்தைகளின் மனதில்

    நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும்

    – நூல் வெளியீட்டு விழாவில் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப., பேச்சு –

    செங்கற்பட்டு.நவம்.13. லிட்டில் ஜாக்கி மெட்ரிக். மேனிலைப்பள்ளியில்
    குழந்தைகள் தினவிழாவையொட்டி நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில்,
    பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கதைகளின் வழியாக குழந்தைகளின்
    மனதில் நல்ல சிந்தனைகளை விதைக்க முடியும் என்று தமிழ்நாடு கூட்டுறவு
    சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., பேசினார்.
    இவ்விழாவிற்கு செங்கற்பட்டு லிட்டில் ஜாக்கி கல்விக் குழுமத் தலைவர்
    ஞா.ஜாஷ்வா சாம் டானி தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர் ம.லட்சுமி
    அனைவரையும் வரவேற்றார்.

    கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’
    குழந்தைகளுக்கான கதை நூலினை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்
    ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., வெளியிட, லிட்டில் ஜாக்கி கல்விக்
    குழுமத் தலைவர் ஞா.ஜாஷ்வா சாம் டானி பெற்றுக் கொண்டார்.
    நூலினை வெளியிட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்
    ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., பேசும்போது, “ இன்றைக்கு
    குழந்தைகள் பாடப்புத்தகங்களைப் படிப்பது, நல்ல மதிப்பெண் எடுப்பது
    என்கிற ஒற்றை இலக்கோடு மட்டுமே இருக்கிறார்கள். குழந்தைகளின்
    இலக்கு இப்படி சுருங்கிப் போனதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களுமே
    முதற்காரணம். நாங்கள் பள்ளியில் படிக்கிற காலங்களில் நீதி போதனை
    வகுப்புகளில் எங்களுக்கு கதைகள் சொல்வார்கள். அந்த கதைகளில்
    வரும் நீதி எங்களின் மனதில் ஆழமாகப் பதியும். பெற்றோர்களின்
    கவனிப்பு போதிய அளவு இல்லாத போதும், குழந்தைகள் அக்கறையோடும்
    ஒழுக்கத்தோடும் இருப்பார்கள்.

    இன்றைய காலச்சூழலில் குழந்தைகளின் கவனம் திசை
    திருப்பப்படுகிறது. குழந்தைகள் சுயமாகச் சிந்திக்கவும் செயல்படவும்
    புத்தக வாசிப்பு கை கொடுக்கும். கதைகளின் வழியாக குழந்தைகள்
    மனதில் சமூக அக்கறையையும் ஒழுக்கத்தையும் மிக எளிதாக விதைக்க
    முடியும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, பெரியவர்களை
    மதிக்க வேண்டும், எந்த இடத்தில் இருந்தாலும் தனக்கான அடையாளத்தை
    வெளிப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகள் மனதில் கொள்ள வேண்டும்.
    மு.முருகேஷ் எழுதிய குழந்தைக் கதைகளைப் படிப்பதன் மூலமாக நாளைய
    தலைவர்களாக மாறவிருக்கும் இன்றைய குழந்தைகள் மிகச் சிறந்தவர்களாக
    வருவார்கள் என்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார்.

    விழாவில், கவிஞர் அ.வெண்ணிலா, செங்கை தாமஸ், பொன்.வாசுதேவன்,
    பேராசிரியர் கிள்ளிவளவன், நா.வீரமணி, ஆ.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை
    வழங்கினர்.

    நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஏற்புரையாற்றினார். விழாவில்,
    கதைகளுக்கான ஓவியங்களை வரைந்த லிட்டில் ஜாக்கி பள்ளியைச் சேர்ந்த
    16 மாணவ – மாணவிகளுக்குப் பாராட்டுச் செய்யப்பட்டது.
    விழாவில், ஏராளமான ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
    நிறைவாக, பள்ளி ஆசிரியர் பி.ரேணுகாதேவி நன்றி கூறினார்.

     

    படக்குறிப்பு;

    செங்கற்பட்டு லிட்டில் ஜாக்கி மெட்ரிக். மேனிலைப்பள்ளியில் குழந்தைகள்
    தினவிழாவையொட்டி நடைபெற்ற விழாவில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘தவிட்டுக்
    குருவியும் தங்கராசு மாமாவும்’ குழந்தை கதை நூலை தமிழ்நாடு கூட்டுறவு
    சங்கங்களின் தேர்தல் ஆணையர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப., வெளியிட,
    லிட்டில் ஜாக்கி கல்விக் குழுமத் தலைவர் ஞா.ஜாஷ்வா சாம் டானி பெற்றுக்கொண்டார்.
    அருகில், (இடமிருந்து) செங்கை தாமஸ், நூலாசிரியர் மு.முருகேஷ், கவிஞர் அ.வெண்ணிலா,
    பேராசிரியர் கிள்ளிவளவன் ஆகியோர் உள்ளனர்.

    Share
  • தமிழகத்து கவிஞர் மு.முருகேஷூக்கு குவைத் நாட்டில் இலக்கிய விருது

    amu

    சென்னை. செப்.18. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷூக்கு
    குவைத் நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள்
    சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கவிஞர் மு.முருகேஷ்.
    கடந்த முப்பதாண்டு காலமாக தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்.

    இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள்,
    6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100–க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.

    ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் மகாகவி பாரதி எழுதிய சிறு கட்டுரை மூலமாக
    தமிழில் 1916-ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த ஹைக்கூ கவிதைகளைத் தமிழ் வாசகர் மத்தியில் பரவலாக கொண்டு சென்றதிலும், இளைய தமிழ்க் கவிஞர்களை ஒரு இயக்கம் போல் ஒருங்கிணைத்து, தமிழகம் முழுவதிலும் ஹைக்கூ கவிதைத் திருவிழாக்களை நடத்தியதில் முன்னோடியானவர் கவிஞர் மு.முருகேஷ். ‘இனிய ஹைக்கூ’ எனும் கவிதை  இதழைத் தொடங்கி, எண்ணற்ற கவிஞர்களை அறிமுகம் செய்தவர்.

    2009-ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில்
    தமிழகப் பிரதிநிதியாக பங்கேற்றவர். அம்மாநாட்டில் நடைபெற்ற உலகு தழுவிய
    பன்மொழிக் கவிதைப்போட்டியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுள்ளார். இவரது ஹைக்கூ கவிதைகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘நிலா முத்தம்’ எனும்பெயரில் தனிநூலாகவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது.

    இவரது ஹைக்கூ கவிதைகள் பல்கலைக் கழகப் பாடத்திட்டதில் இடம்பெற்றுள்ளன.
    இதுவரை இவரது ஹைக்கூ கவிதைகளை 6 மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்விற்கும், இரு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்விற்கும் எடுத்துக்கொண்டு உள்ளனர்.

    குவைத் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வளைகுடா வானம்பாடி
    கவிஞர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா வெற்றித் தமிழ் விழா கடந்த செப்.16 அன்று
    குவைத்திலுள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
    இவ்விழாவில் தமிழ் ஹைக்கூ கவிதையில் தொடர்ந்து கால்நூற்றாண்டுகளாக
    செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேஷைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில்,
    ‘குறுங்கவிச் செல்வன்’ எனும் விருதினை இந்திய-குவைத் தூதர் சுனில் ஜெயின் வழங்கினார்.

    விழாவில், மலேசியன் – குவைத் தூதர்அகமது ரோசியன் அப்துல்கனி, குவைத் நேஷனல் நூலக பொது மேலாளர் காமல் அல்-அப்துல் ஜலீல், வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்க நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது, திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கவிஞர் அ.வெண்ணிலா, கிராமிய பாடகர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    படக்குறிப்பு:
    குவைத் நாட்டில் நடைபெற்ற வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா
    வெற்றித் தமிழ் விழாவில் தமிழகத்து கவிஞர் மு.முருகேஷூக்கு ‘குறுங்கவிச் செல்வன்’ எனும்
    விருதினை இந்திய-குவைத் தூதர் சுனில் ஜெயின் வழங்கியபோது எடுத்த படம்.
    அருகில், மலேசியன் – குவைத் தூதர்அகமது ரோசியன் அப்துல்கனி மற்றும்
    கவிஞர் அ.வெண்ணிலா உள்ளனர்.
    Attachments area

    Share
  • மொரிசீயஸ் நாட்டில் நிறுவப்பட இருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு – வந்தவாசியில் வரவேற்பு விழா –

    வந்தவாசி. ஜூலை.24. மொரீசியஸ் நாட்டின் மோக்கா நகரிலுள்ள
    மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் நிறுவப்படவிருக்கிற திருவள்ளுவர் சிலைக்கு
    வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வந்தவாசி நகரில்
    சிறப்பான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது.
    56752fc1-7c49-432f-9064-7f1103e30c27
    இவ்விழாவிற்கு புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி
    முனைவர் வி.முத்து தலைமையேற்றார். செயலாளர் ப.சீனிவாசன்
    அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் அன் கோ உரிமையாளர்
    இரா.சிவக்குமார், அரிமா சங்க மாவட்டத் தலைவர் இரா.சரவணன்,
    நல்நூலகர் கு.இரா.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    66944f5e-2d84-4ce3-a96e-881c255b794c

    தஞ்சை தமிழ்த் தாய் அறக்கட்டளையின் சார்பில் 2000 கிலோ எடையில்,
    4 அடி உயரத்தில் கன்னியாகுமரியில் கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட
    திருவள்ளுவர் சிலை கடந்த ஜூலை 17-ஆம் தேதி கன்னியாகுமாரி
    கடற்கரையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, தமிழகத்தின் முக்கிய
    மாவட்டங்கள் வழியாக, தலைநகர் சென்னைக்கு வரவிருக்கிறது.
    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு வருகை தந்த
    திருவள்ளுவர் சிலைக்கு வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்
    சங்கத் தலைவர் அ.மு.உசேன் மலர்த்தூவி வரவேற்றார். வந்தவாசி பழைய
    பேருந்து நிலையம் காமராசர் சிலை அருகேயிருந்த திருவள்ளுவர் சிலைக்கு
    பொதுமக்கள் மற்றும் பள்ளி, மாணவர்கள் மலர்த்தூவி வரவேற்றனர்.

    தஞ்சை தமிழ்த் தாய் அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் உடையார்கோயில்
    குணா, மேனாள் காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் மா.மங்கையர்க்கரசி,
    துணைத் தலைவர் ப.கோ.நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்ச் சங்க ஆலோசகரும் கவிஞருமான மு.முருகேஷ் ‘பொய்யாப்புலவர் வள்ளுவரின் புகழாரம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:
    தமிழின் சங்க இலக்கியப் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியல் விழுமியங்களையும் கல்வெட்டாய் பொதிந்து நிற்கும் பெருமை நம் திருக்குறளுக்கு உண்டு. எந்த சாதி, மத அடையாளத்தையும் சுமந்து நிற்காமல், அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாய் பார்க்கும் சமத்துவத்தை தனக்குள் உள்ளடக்கியதாய் திருக்குறள் இருக்கிறது.
    பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் திருக்குறளை படிக்கும் பிற மொழி அறிஞர்கள், திருக்குறளின் மொழி வளத்தையும், எக்காலத்திற்கும் ஏற்ற அதன் சிறப்பான கருத்தினையும் பாராட்டுகிறார்கள். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று பல்லாண்டுகளாக தமிழ் அறிஞர்கள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கையை, மத்தியில் ஆட்சி செய்யும் எந்த அரசும் செவிமடுக்காமலேயே உள்ளது. திருக்குறள் உலக மொழிகளிலெல்லாம் மொழிபெயர்ப்பதற்கான முன்முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது மகிழ்வளிக்கிறது.
    உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய்யின் முயற்சியில் வைக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை, சிலரின் தவறான தூண்டுதலால் அகற்றப்பட்டிருப்பதை உலகத் தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் கண்டித்துள்ளனர். தமிழ் அமைப்புகள் உத்தராகண்ட் மாநில முதல்வரை நேரில் சந்தித்து, அவரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் திருவள்ளுவர் சிலை அரித்துவாரில் கங்கை நதியோரமாய் உள்ள மேளா பவனில் நிறுவப்படுமென்று முதல்வர் கரீஷ் ராவத் உறுதியளித்துள்ளார்.
    1330 குறள்களிலும் ஒரு இடத்தில்கூட தமிழ் என்கிற வார்த்தையே கிடையாது. ஆனபோதிலும், திருக்குறள் உலக்குக்கே தமிழர்களின் வாழ்வியல் தொன்மங்களை எடுத்துச் சொல்லும் சிறப்பினைப் பெற்றுள்ளது. தமிழர்களின் அடையாளமாய் இருக்கும் திருக்குறள் தமிழர்களின் வீடுகள் தோறும் இருக்க வேண்டியது அவசியம். நம் வீட்டுப் பிள்ளைகள் திருக்குறளைப் படித்திட வேண்டும். அதன்படி நடந்திட நாம் வலியுறுத்திட வேண்டும்.
    இவ்வாறு அவர் பேசினார்.
    நிறைவாக, சங்கப் பொருளாளர் எ.தேவா நன்றி கூறினார்.
    இணைப்பு; நிகழ்வின் படங்கள்:

    Share
  • தேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா .

    முருகேஷ். மு

    bb0b7454-f14b-4ccb-931f-05cf6f62548f

    வந்தவாசி.நவ.21. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எஸ்ஆர்எம் இன்போடெக் கம்ப்யூட்டர் நிறுவனம் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் இணைந்து நடத்திய 48-ஆவது தேசிய நூலக வார முப்பெரும் விழா சார்பாக பள்ளி மாணவ – மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.

    இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றர். மூன்றாம் நிலை நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் எ.மு.உசேன், எஸ்ஆர்எம் இன்போடெக் கம்யூட்டர் நிறுவன முதல்வர் எ.தேவா, ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வந்தவாசியைச் சுற்றியுள்ள 6 முதல் 12-ஆம் வகுப்புவரையுள்ள பள்ளி மாணவ – மாணவிகளுக்கு நடத்தப்பட்ட
    ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டியில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு கிளை நூலகர் கு.இரா.பழனி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில், ரூ.1000/- செலுத்தி, 170-ஆவது நூலகப் புரவலராக ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ப.ஜெயலெட்சுமி இணைந்தார்.

    மூன்றாம் நிலை நூலகர் சா.ஜோதி,யுரேகா ஒன்றிய கருத்தாளர்கள் மு.குமரன், மு.ஜீவா, முருகன்,
    பள்ளி ஆசிரியர்களும் ஏராளமாய் கலந்து கொண்டனர்.

    நிறைவாக, நூலக உதவியாளர் மு.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    படக்குறிப்பு :

    வந்தவாசியில் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய நூலக வார விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு கிளை நூலகர் கு.இரா.பழனி பரிசுகளை வழங்கும்போது எடுத்த படம். அருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ், வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் எ.மு.உசேன், எஸ்ஆர்எம் இன்போடெக் கம்யூட்டர் நிறுவன முதல்வர் எ.தேவா, ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா.சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.

    Share
  • அன்பின் பகிர்வு

    முருகேஷ். மு

    இனிய நண்பர்களே…
    அன்பின் வணக்கம்.

    இத்துடன் இணைத்துள்ள
    குழந்தைகளுக்கான போட்டியில்
    உங்கள் வீட்டுக் குழந்தைகளும்,
    உங்களின் பள்ளி மற்றும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் பங்கேற்க தகவல் பகிரலாமே..!

    ============================================

    அன்புக் குழந்தைகளே,

    உங்களுக்கெல்லாம் அப்துல் கலாம் தாத்தாவை ரொம்பவும் பிடிக்கும் இல்லையா? அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? உங்களுக்குப் பிடித்த கலாம் தாத்தாவை ஓவியமாகத் தீட்டவும், அவரைப் பற்றி எழுதவும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு.

    4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

    கலாம் தாத்தாவை உங்களுக்குப் பிடித்த விதத்தில் வரைந்து அனுப்புங்கள். கற்பனை வளம் மிகுந்த சிறந்த 3 ஓவியங்களுக்குச் சிறப்புப் பரிசு உண்டு. அதைத் தவிர தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.

    6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டி

    உங்களுக்குக் கலாம் தாத்தாவை ஏன் பிடிக்கும்? அவர் சொன்னது ஏதாவது உங்களுக்கு ரொம்பப் பிடித்திருக்கிறதா? அவர் எழுதியது உங்களுக்குப் பிடிக்குமா? அவரது சாதனை பிடிக்குமா? எது பிடிக்கும்?

    ‘என் அன்பு கலாம் தாத்தா’ என்னும் தலைப்பில் கலாம் தாத்தாவைப் பற்றி சின்னதாக ஒரு கட்டுரை எழுதுங்கள். அவரை ஏன் உங்களுக்குப் பிடிக்கும்? என்று அதில் எழுதுங்கள். 200 வார்த்தைவரையிலும் இருக்கலாம். சிறந்த 3 கட்டுரைகளுக்குச் சிறப்புப் பரிசு உண்டு. அதைத் தவிர தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகளுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.

    படங்கள், கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: அக்டோபர் – 05, 2015.

    அனுப்ப வேண்டிய முகவரி:

    மு.முருகேசன், சீனியர் சப் –எடிட்டர்,

    தி இந்து தமிழ் – நாளிதழ், 124, கஸ்தூரி மையம்,

    வாலாஜா சாலை, சென்னை – 600 002.

    என்ன தயாராயிட்டீங்களா..? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    Share
  • வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழா

    மு.முருகேஷ்

    மனிதன் சமூக ஞானத்தை பெறுவதற்கு
    புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன

    – வந்தவாசி நூலக வாசகர் வட்ட விழாவில் பேச்சு –

    11

    வந்தவாசி.ஜூன்.21. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் அறிமுக விழாவில், ஒரு மனிதன் சமூக அக்கறையையும், சமூக ஞானத்தையும் பெறுவதற்கு புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

    கிளை நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர் இரா.சிவக்குமார், தென்னாங்கூர் அரசு கலைக்கல்லூரி இணைப் பேராசிரியர் ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    112

    நிகழ்வில், தேசூர் கவிஞர் பால.வெங்கடேஷ் எழுதிய ‘சாம்பலில் உயிர்த்தெழும் பீனிக்ஸ்’ கவிதை நூலை வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் பெ.சம்பத் வெளியிட, வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் சி.பி.பாபு பெற்றுக் கொண்டார்.

    விழாவிற்கு தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் ’புத்தக வாசிப்பும் சமூக ஞானமும், எனும் தலைப்பில் பேசியதாவது: ” கல்வியறிவு மட்டுமே ஒரு மனிதனுக்கான உலக அறிவைத் தந்துவிடாது. கண்டதையும் படித்தால் பண்டிதன் ஆவான் என்பார்கள். உலகில் புதிய சிந்தனைகளை விதைத்த தலைவர்கள் பலரும், தங்களை மாற்றியவை புத்தகங்களே என்றுதான் கூறியிருக்கிறார்கள். இன்றைக்கு புத்தகங்கள் அதிகம் வெளியாகின்றன. ஆனால், புத்தகம் வாசிக்கிற பழக்கம் வெகுவாய் குறைந்து வருகிறது. வீட்டில் புத்தகம் படிக்கிற நேரத்தை காட்சி ஊடகங்கள் குறைத்துவிட்டன. ஒரு மனிதன் சமூக அக்கறையுடையவனாக வளர்வதற்கும், சமூக ஞானத்தைப் பெறுவதற்கும் புத்தக வாசிப்பே பெரிதும் துணை புரிகின்றன” என்றார்.

    1123

    விழாவில், ரூ. ஆயிரம் செலுத்தி நூலகப் புரவலராக இணைந்த செய்யாறு அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி முன்னாள் பேராசிரியர் ஜீவிதன் சேசுராஜா, கொரக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.செல்லக்குட்டி, கரூர் வைஸ்யா வங்கி ஊழியர் பி.அஸ்வின் ஆகியோருக்கு பாராட்டு செய்யப்பட்டது.

    நிறைவாக, மூன்றாம்நிலை நூலகர் பூ.சண்முகம் நன்றி கூறினார்.

    படக்குறிப்பு :

    வந்தவாசியில் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் தேசூர் கவிஞர் பால.வெங்கடேஷ் எழுதிய ‘சாம்பலில் உயிர்த்தெழும் பீனிக்ஸ்’ கவிதை நூலை வந்தவாசி அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் பெ.சம்பத் வெளியிட, வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர் சி.பி.பாபு பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். அருகில், நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ், தொழிலதிபர் இரா.சிவக்குமார், கிளைநூலகர் கு.இரா.பழனி, நூலாசிரியர் பால.வெஙக்டேஷ் ஆகியோர் உள்ளனர்.

    Share
  • குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழா

    amm
    படைப்பிலக்கியங்களால் மட்டுமே குழந்தைகளின்
    மன உலகை மாற்றிட முடியும்.
    —————————————————————————
    – குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு –

    வந்தவாசி.: அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில், இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் கணிப்பொறிமுன்னே அமர்ந்திருக்கும் குழந்தைகளின் மன உலகைப் படைப்பிலக்கியங்களால்தான் மாற்றிட முடியும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

    இவ்விழாவிற்கு இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மு.ஜீவா அனைவரையும் வரவேற்றார்.

    கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘ படித்துப் பழகு ‘ குழந்தைகள் கதை நூலை வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் வெளியிட, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் பெற்றுக் கொண்டார். நூலின் சிறப்புப் பிரதிகளை ந.சுரேஷ்முருகன்,லயா அறக்கட்டளை செயலாளர் மா.யுவராஜ், வெ.அரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    நூலை வெளியிட்ட எம்.எஸ்.தரணிவேந்தன் பேசும்போது, குழந்தைகளுக்குப் புத்திமதி சொல்வதாக நினைத்து, அவர்களிடம் பெற்றோர்கள் எதையும் நாம் திணிக்கக் கூடாது. குழந்தைகளோடு அன்பாக பேச வேண்டும். அவர்களது எண்ணத்தைப் புரிந்துகொண்டு பேசினால் மட்டுமே குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பார்கள். அப்படிக் குழந்தைகளை மென்மையாக அணுகுவதற்கு மு.முருகேஷ் எழுதியுள்ள இந்தக் கதைப் புத்தகம் நமக்குப் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது என்று பேசினார்.

    விழாவிற்கு தலைமையேற்ற இரா.சிவக்குமார் பேசும் போது, குழந்தைகள் படிக்கிற மாதிரி எளிமையாக கதை எழுதுவது மிகவும் கடினமானது. கடந்த 25 ஆண்டுகளாக குழந்தைகளுக்கான கல்விப் பணியில் செயல்பட்டுவரும் மு.முருகேஷ், குழந்தைகளின் மனவோட்டத்தை அழகாகப் புரிந்துகொண்டு, அவர்கள் விரும்பிப் படிக்கும் சுவாரசியத்தோடு குழந்தைக் கதைகளை எழுதியுள்ளார். இது நாளைய குழந்தைகளுக்கான நம்பிக்கை புதுவரவு என்று குறிப்பிட்டார்.

    நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் ஏற்புரையாற்றும்போது, குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள் என்பதை நாம் முதலில் மனதார ஏற்க வேண்டும். இன்றைய தலைமுறை குழந்தைகள் தொலைக்காட்சி பெட்டி முன்னும், கணிப்பொறி முன்னும் அமர்ந்து நிறைய நேரத்தைக் கழிப்பதற்குக் காரணம், அவர்கள் எடுத்துப் படிக்கத் தூண்டும் மாதிரியான எளிய கதைப் புத்தகங்கள் தமிழில் மிகக் குறைவே. குழந்தைகளுக்குப் பிடித்தமான மொழியில் நேரடியான புத்திமதி சொல்லாத படைப்பிலக்கியங்களால் குழந்தைகளின் மன உலகை நிச்சயம் மாற்றிட முடியும் என்று கூறினார்.

    நிறைவாக, மா.குமரன் நன்றி கூறினார்.

    படக் குறிப்பு :
    ——————–
    வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ’ படித்துப் பழகு’ குழந்தைகள் கதை நூலை வந்தவாசி ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் வெளியிட, வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச்சங்கத் தலைவர் அ.மு.உசேன் பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். நடுவில், நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ், தொழிலதிபர் இரா.சிவக்குமார், ந.சுரேஷ்முருகன் ஆகியோர் உள்ளனர்.

    Share
  • உதவித் தொகை நிகழ்ச்சி

    அன்பு நண்பர்களுக்கு,

    வணக்கம்

    05.01.2013 – அன்று வந்தவாசியில்
    யுரேகா கல்வி உதவித் தொகைத் திட்டத்தில்
    உதவி பெறும் 12ஆம் வகுப்பு மாணவிகள்
    9 பேர்களுக்கு
    சூரிய விளக்குகள் மற்றும்
    டியூசன் பீஸ் வழங்கும் நிகழ்வு
    அம்மையப்பட்டு யுரேகா கல்வி இயக்க
    அலுவலகத்தில் நடைபெற்றது.
    மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
    மு.முருகேஷ் தலைமை ஏற்றார்.

    நிகழ்வில் கலந்து கொண்ட
    குழந்தைகளோடும்,  அவர்களுடைய
    பெற்றோர்களோடும் கலந்துரையாடினார்.
    12ஆம் வகுப்பு மாணவிகள் அனைவரும்
    1150 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவதாக
    உறுதியளித்தனர்.

    நிகழ்வில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்
    சு.உமாசங்கர் , தகவல் தொகுப்பாளர் சி.கோமதி
    ஆகியோர் கலந்து கொண்டனர்.
    -மு.மு , திட்ட மேலாளர்.

    Share
  • சமூக சிந்தனைகளின் விளைநிலம் வகுப்பறைகளே.

     

    நல்லாசிரியருக்கான பாராட்டு விழாவில் பேச்சு –


      வந்தவாசி.செப்.29.சமுதாயம் முன்னேறுவதற்கான சிந்தனைகளின் விளைநிலமாக என்றைக்கும் வகுப்பறைகளே விளங்குகின்றன என்று
    நல்லாசிரியருக்கான பாராட்டுவிழாவில் யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.
         இவ்விழாவிற்கு இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மாவட்ட கருத்தாளர் சு.உமாசங்கர் அனைவரையும் வரவேற்றார்.
       தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தென்னாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் இ.முல்லையை, தென்னாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.தினகரசு வாழ்த்திப் பேசினார்.
       நிகழ்வில்,பாராட்டுரை வழங்கிய கவிஞர் மு.முருகேஷ் பேசும்போது, ஆசிரியர்களைப் பாராட்டும்போது ஒருசமுதாயம் சரியான பாதையில் வழி நடத்தப்படுகிறது என்று அர்த்தம்.ஒவ்வொரு மனிதனின் அறிவு
    வளர்ச்சிக்கும் அடித்தளமிடுபவை ஆரம்பப் பள்ளிகளே.
        ஒரு ஜனாதிபதி நினைத்தால் ஒரு மருத்துவரை உருவாக்க முடியாது. ஒரு பிரதமர் முயன்றாலும் ஒரு பொறியாளரை உருவாக்க முடியாது.ஆனால், ஒரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மருத்துவரை, ஒரு பொறியாளரை, ஏன் ஒரு
    ஜனாதிபதியைக் கூட உருவாக்கலாம்.
       தகுதியான ஆசிரியர்களைப் பாராட்டினால், இன்னும் திறமையான வெற்றியாளர்களை ஆசிரியர்கள் சமுதாயத்துக்கு உருவாக்கித் தருவார்கள்.
    எந்த ஒரு நல்ல சமுதாய முன்னேற்றத்திற்கான சிந்தனைகளும் உருவாகிற விளைநிலமாக இன்றைக்கும் வகுப்பறைகளே விளங்குகின்றனஎன்று குறிப்பிட்டார்.
        நிறைவாக, மாவட்டக் கருத்தாளர் மா.குமரன் நன்றி கூறினார்.

    படக்குறிப்பு ;
       வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் ந்டைபெற்ற தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற தென்னாங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
    தலைமையாசிரியர் இ.முல்லைக்கு, இராமலிங்கம் அன் கோ உரிமையாளர் இரா.சிவக்குமார் நினைவு பரிசு வழங்கியபோது எடுத்த படம். அருகில், (இடமிருந்து)
    மாவட்ட கருத்தாளர்கள் மா.குமரன்.சு.உமாசங்கர்,  யுரேகா கல்வி இயக்க மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ், தென்னாங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.தினகரசு ஆகியோர் உள்ளனர்.

    Share