தமிழகத்து கவிஞர் மு.முருகேஷூக்கு குவைத் நாட்டில் இலக்கிய விருது

0

amu

சென்னை. செப்.18. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷூக்கு
குவைத் நாட்டில் செயல்படும் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள்
சங்கத்தின் சார்பாக விருது வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் கவிஞர் மு.முருகேஷ்.
கடந்த முப்பதாண்டு காலமாக தொடர்ந்து இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்.

இவரது எழுத்து முயற்சியில் இதுவரை 15 கவிதை நூல்கள், 6 கட்டுரை நூல்கள்,
6 தொகுப்பு நூல்கள், ஒரு சிறுகதை நூல், 100–க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. வந்தவாசி நூலக வாசகர் வட்டத்தின் தலைவராகவும், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் ஆலோசகராகவும் இருந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார்.

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் மகாகவி பாரதி எழுதிய சிறு கட்டுரை மூலமாக
தமிழில் 1916-ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த ஹைக்கூ கவிதைகளைத் தமிழ் வாசகர் மத்தியில் பரவலாக கொண்டு சென்றதிலும், இளைய தமிழ்க் கவிஞர்களை ஒரு இயக்கம் போல் ஒருங்கிணைத்து, தமிழகம் முழுவதிலும் ஹைக்கூ கவிதைத் திருவிழாக்களை நடத்தியதில் முன்னோடியானவர் கவிஞர் மு.முருகேஷ். ‘இனிய ஹைக்கூ’ எனும் கவிதை  இதழைத் தொடங்கி, எண்ணற்ற கவிஞர்களை அறிமுகம் செய்தவர்.

2009-ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில்
தமிழகப் பிரதிநிதியாக பங்கேற்றவர். அம்மாநாட்டில் நடைபெற்ற உலகு தழுவிய
பன்மொழிக் கவிதைப்போட்டியில் கலந்துகொண்டு பரிசினைப் பெற்றுள்ளார். இவரது ஹைக்கூ கவிதைகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ‘நிலா முத்தம்’ எனும்பெயரில் தனிநூலாகவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது.

இவரது ஹைக்கூ கவிதைகள் பல்கலைக் கழகப் பாடத்திட்டதில் இடம்பெற்றுள்ளன.
இதுவரை இவரது ஹைக்கூ கவிதைகளை 6 மாணவர்கள் இளமுனைவர் பட்ட ஆய்விற்கும், இரு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்விற்கும் எடுத்துக்கொண்டு உள்ளனர்.

குவைத் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வளைகுடா வானம்பாடி
கவிஞர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா வெற்றித் தமிழ் விழா கடந்த செப்.16 அன்று
குவைத்திலுள்ள அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ் ஹைக்கூ கவிதையில் தொடர்ந்து கால்நூற்றாண்டுகளாக
செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேஷைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில்,
‘குறுங்கவிச் செல்வன்’ எனும் விருதினை இந்திய-குவைத் தூதர் சுனில் ஜெயின் வழங்கினார்.

விழாவில், மலேசியன் – குவைத் தூதர்அகமது ரோசியன் அப்துல்கனி, குவைத் நேஷனல் நூலக பொது மேலாளர் காமல் அல்-அப்துல் ஜலீல், வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்க நிறுவனர் செம்பொன்மாரி கா.சேது, திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கவிஞர் அ.வெண்ணிலா, கிராமிய பாடகர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படக்குறிப்பு:
குவைத் நாட்டில் நடைபெற்ற வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கத்தின் வெள்ளிவிழா
வெற்றித் தமிழ் விழாவில் தமிழகத்து கவிஞர் மு.முருகேஷூக்கு ‘குறுங்கவிச் செல்வன்’ எனும்
விருதினை இந்திய-குவைத் தூதர் சுனில் ஜெயின் வழங்கியபோது எடுத்த படம்.
அருகில், மலேசியன் – குவைத் தூதர்அகமது ரோசியன் அப்துல்கனி மற்றும்
கவிஞர் அ.வெண்ணிலா உள்ளனர்.
Attachments area

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *